நெஞ்சோடணைத்து…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 8, 2014
பார்வையிட்டோர்: 12,494 
 
 

துப்பாக்கியை நெஞ்சோடணைத்து ஒருமரத்தின் மேலே அமர்ந்து கிளைமேல் காலைநீட்டியவாறு உறக்கத்தில் இருந்தார் தலைவர்;

“தலைவர் மூன்று நாட்களுக்குப் பிறகு இப்போதுதான் கண்ணயர்ந்தார் இப்போது எழுப்பவேண்டாம்” என்றார் தலைவரின் மெய்க்காப்பாளர்;

“முக்கியமான செய்தி” என்றேன்;

“நாலாபுறமும் எதிரிகள் சூழ்ந்து கடைசி நிமிடங்களை எண்ணிக்கொண்டிருக்கும் இந்தவேளையில் எதுதான் முக்கியமல்லாத செய்தி” என்று பதிலளித்தார்;
பத்துநிமிடங்கள் மௌனமாக இருந்தோம்;

பிறகு தலைவர் அருகில் சென்று அழைத்தேன் “தலைவரே” என்று. அவர் விழித்துக்கொண்டார்; சிவந்த கண்களுடன் என்னை நோக்கினார்; மெய்க்காப்பாளரோ “சீக்கிரம் சொல்” என்று அவசரப்படுத்தினார்; “தலைவரே கிழக்குமுனையில் நமது படைகள் என்னவானது என்று தெரியவில்லை, எதிரிகள் முன்னேறி வெகுஅருகில் வந்துவிட்டார்கள்” என்று பதட்டத்துடன் கூறினேன்; தலைவர் நான் நினைத்த அளவு அதிர்ச்சியடையவில்லை

“உறுதியான செய்தியா?” என்று கேட்டார்; “ஆம்,தலைவர்” என்று கூறினேன்; போராளிகள் களமுனைக்கே செல்லாமல் வெளியேறியிருந்தாலொழிய இப்படி நடக்க வாய்ப்பில்லை; தலைவர் நேரடியாக பிறப்பித்த கட்டளையை மீறி போராளிகள் பயந்து ஓடியது நம்பமுடியவில்லை; அங்கே என்ன நடந்தது என்றும் யாருக்கும் தெரியவில்லை; கிழக்குமுனைத் தாக்குதலை வைத்து தலைவர் பெரிய பெரிய திட்டங்கள் வைத்திருந்தார்; கிழக்குமுனைக்குச் சென்ற படையை மலைபோல் நம்பியிருந்தார்; நாங்கள் தலைவர் என்ன சொல்வாரோ என்று அவர் உதடுகளையே பார்த்துக்கொண்டிருந்தோம்;

“தேநீர் எடுத்து வாருங்கள்” என்று நிதானமாக உதவியாளிடம் கூறினார்;

இருப்பதைக் கொடுத்து விருந்தோம்பும் தலைவரின் பண்பு இப்போதும் மறையாதிருப்பதை எண்ணி வியந்தோம்; தலைவர் மரத்தில் சாய்ந்து நின்றார்; தலையைக் குனிந்தவாறு எதையோ நினைத்து சிரித்தார்; அது எனக்குத் தெரியும்; எமது தலைவர் யாரையெல்லாம் நம்பியிருந்தாரோ அத்தனைபேரும் கைவிட்டுவிட்டனர்; எந்த மக்களுக்காக தமது வாழ்க்கையில் அத்தனையும் ஈகம் செய்து போராடினாரோ அந்த மக்களே கடைசிநேரத்தில் தோல்வி நெருங்கிவிட்டதாக எண்ணி தலைவரைக் கைவிட்டுவிட்டனர், தலைவரோடு உயிருக்குயிராய் பழகிய போராளிகள் சிலர் எதிர்ப்பக்கம் விலைபோய்விட்டனர், இப்போது களமுனைக்கு அனுப்பப்பட்ட போராளிகள் காணாமல் போய்விட்டனர், இத்தனை வருடம் தலைவர் கட்டியெழுப்பிய அத்தனையுமே சிதைக்கப்பட்டுவிட்டது, இதை நினைத்துதான் தலைவர் வேதனைப் புன்னகை செய்கிறார்;

எம் தலைவர், எத்தனையோ பெரிய தடங்கல்களை உடைத்தெறிந்தவர், எமது மக்களுக்காகப் போராடி உலகையே திரும்பிப்பார்க்கும் அளவுக்கு சாதனைகள் புரிந்தவர், எதிரிகளே வியந்து பாராட்டும் மாவீரருக்கெல்லாம் மாவீரர் இப்போது முடிவெடுக்கத் தடுமாறுவது எங்களுக்கு மிகுந்த வேதனையாயிருந்தது; அவர் ஏறெடுத்து சுற்றி நின்ற எங்களைப் பார்த்தார்; முகத்தில் ஒரு நம்பிக்கை ஒளியுடன் ஆழமாக மூச்சிழுத்த படி நிமிர்ந்து நின்றார்; தேநீர் வந்தது; அதைக் கையில் எடுத்துக் கொண்டோமே தவிர குடிக்க மனம் வரவில்லை; தலைவர் சிறிது நேரம் அப்படியே நின்றார்; “வடக்குமுனைக்கு செல்லும் போராளிகளை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதியை கிழக்குமுனைக்கு அனுப்புங்கள்” என்றார்.

வடக்குமுனைத் தளபதி”அதில் மொத்தமே நாற்பதுபேர்தான் தலைவர்” என்றார்.”இருபது பேரை கிழக்கே அனுப்புங்கள்” என்றார்.

“சரி தலைவர்” என்று கூறிவிட்டு புறப்படப்போன அவரை “கொஞ்சம் நில்” என்று நிறுத்தினார்; எங்கள் அனைவரையும் ஒருமுறை பார்த்தார்;

“நாம் அடிக்கும் கடைசி அடி இது, போராட்டத்துக்காக உயிரைவிடுபவனின் கடைசி அடி எப்படி இருக்கும் என்று இந்த உலகம் நம்மை எடுத்துக்காட்டாகக் கூறவேண்டும், நம்மால் வெல்லமுடியவில்லை ஆனால் நமக்குப் பிறகு ஒருவன் வருவான்

அவனுக்கு தன்னால் வெல்லமுடியும் என்ற நம்பிக்கை ஏற்படவேண்டும் அதற்கு நாம் காரணமாக இருக்கவேண்டும், இதை மனதில் வைத்துக்கொண்டு போராடுங்கள்,சரி கிளம்புங்கள், அடுத்தப் பிறவியில் சந்திப்போம்” என்று கூறினார்; அனைவரும் தத்தமது களத்திற்கு உற்சாகமாகப் பாய்ந்தோடினர்; நானும் தலைவரும் மட்டும் இருந்தோம்; தலைவர் கடைசிச் சொட்டு தேநீரை அருந்திவிட்டு ” இனிப்பு போடாத இந்த தேநீர்கூட எவ்வளவு தித்திப்பாக இருக்கிறது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *