நூறு ரூபாய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 24, 2019
பார்வையிட்டோர்: 8,986 
 
 

வணக்கம் சார் ! என்னடா இவன் யாருன்னே தெரியலை வணக்கம் போடறான் அப்படீன்னு பாக்காதீங்க, உங்களை மாதிரி ஆளுங்களுக்கு ஒரு வணக்கம் போடறதுனால எனக்கு ஒண்ணும் குறைஞ்சுடாது, அதுக்கப்புறம் நீங்க என்னை ஒரு மாதிரி “அதாவது, நமக்கெல்லாம் வணக்கம் போடறானே”, அதுவும் இந்த பஜாருக்குள்ள, அப்படீன்னு நினைப்புல என்னை பார்ப்பீங்க,அப்ப மெதுவா ஆரம்பிப்பேன், சார் ஒரு “ஹ்ன்ரட் ருப்பீஸ்” இருக்குமா சார்?

உடனே சுதாரிச்சுக்குவீங்க, எங்கிட்ட அதெல்லாம் இல்லை என்று அவசர அவசரமா என்னைய விட்டு கிளம்ப பார்ப்பீங்க, சும்மா நில்லுங்க சார் ஜஸ்ட் ஒரு நூறு ரூபாய் கொடுத்தீங்கன்னா,நல்லாயிருக்கும், சொல்ல சொல்ல, ஆளை விட்டால் போதுமுன்னு பறக்க ஆரம்பிப்பீங்க. அப்படி நிறைய பேரு போனாலும், கொஞ்சம் பேரு ஏமாந்து மாட்டிகிட்டு கொடுத்துட்டு போயிடுவாங்க. இப்படித்தான் சார் என் வாழ்க்கை போயிட்டிருக்கு.

சரி அப்படியே நூறு ரூபாய் கொடுத்தா என்ன பண்ணியிருப்ப? அப்படீன்னு கேட்கறீங்களா? நீங்க வந்த பாதையில அவ்வளவு கூட்டம் நின்னுதே, அப்பவாவது உங்களுக்கு சந்தேம் வந்திருக்க வேணாமா? பாருங்க எங்க ஆளுங்க எப்படி முண்டியடிச்சுட்டு அந்த கவுன்டருக்குள்ள கையை விட்டு வாங்கறாங்கன்னு !, இப்பவெல்லாம் சினிமா தியேட்டருல கூட கூட்டம் இப்படி வரதில்லையாமா சார், இங்க மட்டும்தான் எப்பவுமே கூட்டமிருக்கும்.

இப்ப சொல்லட்டுமா சார், நீங்க கொடுத்த நூறு ரூபாய் இப்ப எப்படி அந்த கவுண்டருக்குள்ள போயிருக்குன்னு பாத்தீங்கல்ல, சும்மா நூறு பேரு இருந்தாலும் ஐயா உள்ளே நுழைஞ்சு கைய அந்த கவுண்டருக்குள்ள விட்டு வாங்கிட்டு வந்திட்டேன் பாத்தீங்கல்ல? என்ன காலையில வெள்ளை வெளேருன்னு போட்டுட்டு வந்த வேட்டி சட்டை தான் கசங்கி போச்சு.

போகட்டும் சார், நூறு ரூபாய் கொடுத்த நீங்களே கவலைப்படலை, நூறு ரூபாய் போச்சேன்னு, நான் இந்த வெள்ளை வேட்டி கசங்குனதுக்கெல்லாம் கவலைப்படலாமா?

காலையிலயிருந்து இராத்திரி வரைக்கும் கடையில உருளறனவுக்கு எதுக்கு வெள்ளை வேட்டி சட்டை, அப்படீன்னு கேக்கறீங்களா? சார் நான் எல்லம் விசயத்துலயும் “ப்ர்பெக்ட்” சார். காலையில ஐயா வெள்ளை வெளேர்னு கிளம்புன்ன்னா சுத்தி இருக்கறவெனெல்லாம் அசந்துடுவானுங்க, ஐயா ஏதோ பெரிய முதலாளி போலேயிருக்கு, இல்லாட்டி டவுனுக்குள்ள

கடை ஏதாவது வெச்சிருப்பாருன்னு.அப்பத்தான சார் உங்களை மாதிரி ஆளுங்களுக்கு ஒரு வணக்கம் போட்டா மரியாதை இருக்கும். நீங்களும் பதிலுக்கு ஏதாவது ஏமாந்து கொடுப்பீங்க.

நூறு ருபாய்தான் உனக்கு வேணுமா? அப்படீன்னு கேட்டீங்கன்னா, நம்ம கிட்டே ஒரே பதிலு தான் சார், நான் எப்பவும் ஹை கிளாஸ்தான் சார்.”ஒரு பழமொழி கேட்டிருக்கீங்கலா சார் “புலி பசித்தாலும் புல்லை தின்னாது” எப்படி கரெக்டா சொல்லிட்டனா !

ஐயாவும் அப்படித்தான் சார், நான் புலி மாதிரி சார்.இன்னொரு “டவுட்டு”வருமே சார் உங்களுக்கு நூறு ரூபாய் கிடைக்கவேயில்லை, அப்ப நல்லபடியா வீட்டுக்கு போயிடுவியா?

இந்த கேள்விய கேக்கறீயே சார்? உனக்கு மனசாட்சி இருந்தா இப்படி கேப்பியா?

என்னைய மாதிரி சும்மா பத்து இருபது பேரு இந்த மாதிர் வேலையில இருக்கோம்.

நண்பனுக்கு நண்பன் உதவி பண்ணலியின்னா அப்புறம் என்ன சார் நட்பு, நாங்க கிடைச்சதை பங்கு போட்டுக்குவோம் சார். அடுத்து இன்னா கேள்வி கேப்ப சார்?

ஓ இப்படி குடிச்சுட்டு வாழ்க்கையை ஓட்டிட்டு இருக்கறீயே உனக்கு குடும்பம் அப்படீன்னு ஏதாவது இருக்கா அப்படீன்னுதானே. இருக்கு சார், நான் நல்ல இருந்தப்ப என்னைய நம்பி ஒருத்தி வந்தா சார், இரண்டு குழந்தைக, பொறந்து இப்ப கார்ப்பரேசன் ஸ்கூல்ல படிக்குது. அதுகளுக்கு எல்லாம் இப்ப விவரம் வந்துடுச்சு சார், என்னைய கண்டுக்கறதுல்ல, அப்பன்னா, இப்படித்தான் இருப்பான்னு நினைச்சுடுச்சுங்க சார்.

என் வீட்டுக்காரி மட்டும் பாவம் சார், அவளும் ஏதோ ஆபிசுல கூட்டி பெருக்குற வேலைக்கு போய் இதுகளுக்கும் கஞ்சிய ஊத்தி, எனக்கும் ஊத்துறா, எனக்கும் மனசாட்சி இருக்குதுல்ல சார், அதுனால அவகிட்ட காசு கேக்கறதில்லைங்க சார், ஏதோ உங்களை மாதிரி நாலு ஏமாளி ஆளுங்க கிடைச்சா போதும் சார், அன்னாடம் என் பிழப்பு ஓடிடும் சார்.

என்னா சார் யோசிக்கற?அடுத்து என்ன கேள்வி கேக்கலாமுன்னு யோசிக்கறியா?

இப்படி குடிச்சு குடிச்சு உன் உடம்பை கெடுத்துக்கறெயே? இதுதான சார் கேக்கப்போற?

எப்படி கரெக்ட்டா பாயிண்ட புடிச்சுட்டன் பார்த்தியா? நானும் கவர்மெண்ட் டாகடரை போய் பார்த்தன் சார், அவர் உன் குடல் எல்லாம் வெந்து கிடக்கு, முதல்ல இந்த பழக்கத்தை நிறுத்து அப்படீன்னுட்டாரு. இது நம்மனால முடியாது சார், போகப்போற உடம்புதான சார், எப்பவேனா போகட்டுமுன்னு முடிவு பண்ணிட்டேன் சார்.

ஐயோ என்ன சார் ஒரு அம்மா இந்த பக்கமா நெஞ்சுல அடிச்சுட்டு ஓடி வருதே, கொஞ்சம் நில்லு சார் வர்றேன்.

என்னம்மா என்னாச்சு, ஐயா ஒரு குழந்தைய காருக்காரன் ஒருத்தன் இடிச்சுட்டு போயிட்டானே, ரோட்டுல கிடக்குறானே, ஒருத்தர் கூட உதவிக்கு வரமாட்டேங்கறாங்களே !

இரும்மா இரும்மா, எங்க கிடக்கறான், சொல்லு, வாங்கயா, வாங்கயா, ஐயோ ! இவன் என் பையனாச்சே, அம்மா கொஞ்சம் கைய புடிச்சு என் தோள் மேல ஏத்தி விடும்மா, நல்ல வேளை வந்து சொன்னம்மா, உனக்கு புண்ணியமா போகும். வண்டிக்காரன் எவனும் உதவிக்கு வரமாட்டான்.நானே தூக்கிட்டு ஆசுபத்திரி போயிடறம்மா.

ஐயா ஐயா கொஞ்சம் நில்லுங்கய்யா! வணக்கம்யா என் புள்ளை அஞ்சு நாளா ஆசுபத்திரியில கிடக்கறான்யா, மருந்து வாங்க காசு இல்லையா, “ஒரு “ஹன்ரட் ருப்பீஸ்”கொடுங்கய்யா.

“சாராய கடையில” நிக்கறப்ப கூட கொஞ்சம் பேரு நம்பி நூறு ரூபாய் கொடுத்துட்டு போனாங்க. இப்ப ஏண்டா என்னைய ஏமாத்தறியா? அப்படீன்னு திட்டறாங்க

சார். ஒரு வேளை நான் வெள்ளையும் சொள்ளயுமில்லாம இல்லாம,அழுக்கா இருந்து, உண்மைய சொல்லி கேக்கறதுனாலயும் இருக்குமா சார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *