கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 1, 2024
பார்வையிட்டோர்: 1,926 
 
 

பரமன் மேல் பரமேஷுக்கு பயங்கர ஆத்திரம், கோபம். ‘சுண்டக்காய் பையன். நம்மகிட்ட இப்படி வாலாட்டறானே ? அவனுக்கு நல்ல பாடம் கற்பிக்கணம்’. பரமன் ஒரு RTI ஆர்வலர் (ஆக்டிவிஸ்ட்). பரமேஷ்-ன் தகிடுதிட்டங்களை, வண்டவாளங்களைக் கப்பலேற்றுவான். அரசுப் பள்ளிக்கு முட்டை சப்ளை செய்ததில் ஊழல். அதை அம்பலப்படுத்தியவன் பரமன்.

‘நீயெல்லாம் எனக்கு கொசு. ‘பச்சக்குன்னு அடிச்சா இரத்தக்களரி தான். உன்னை என்னப் பண்ணுகிறேன் பார்.’ என்று தன் கூட்டாளி மூலம் எச்சரிக்கை எல்லாம் செய்தான் பரமேஷ். அதெல்லாம் பரமன் கண்டுக் கொள்ளவில்லை.

ஒரு நாள் அடையாளம் தெரியாத லாரி ஒன்று இடித்து பரமன் இறந்ததாக பேப்பரில் படித்தப் போது பரமேஷ் தனக்குள் புன்னகைத்துக் கொண்டான். அடுத்த வாரத்தில் பரமேஷுக்கு திடிரென்று பயங்கர தலைவலி, காய்ச்சல், உடல் பலவீனம் வர வழக்கமான டாக்டரிடம் பறந்தோடினார். ஆராய்ந்த டாக்டர் சொன்னார்.

‘பார்த்தா டெங்கு சிம்ப்டம்ஸ் (அறிகுறி) தெரியுது. இப்போதைக்கு மாத்திரைத் தரேன். மூணு நாள் விட்டு டெங்கு டெஸ்ட் ரிசல்ட் பார்த்திட்டு வாங்க’.

மூன்றவாது நாள் டெஸ்ட்டில் டெங்கு உறுதியானது. தட்டணுக்கள் (பிளேட்-லெட்) ரொம்ப குறைவாகயிருக்கவே ஆஸ்பத்திரி அட்மிட் ஆக வேண்டியதாகியது. இன்னொரு வாரத்தில் டெங்கு ரொம்ப தீவிரமாகி தட்டணுக்கள் பத்தாயிரம் கீழ் சென்று உடல் பாகங்கள் ஒன்றொன்றாக செயலிழந்து பரமேஷ் இறந்தும் போனார். ‘பிரபல அரசியல்வாதியின் இளம் வயது மகன் பரமேஷ்

டெங்குவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகைச்சையும் பலனளிக்காமல் காலமானார்’ என்று இரங்கல் செய்தி தினசரியில் வெளியானது. அவர் சார்ந்த கட் சி தொண்டர்கள் அந்த ஆஸ்பத்திரி வாசலில் ஆர்ப்பாட்டம் செய்து கண்ணாடி ஜன்னல்கள் உடைக்கப்பட்டன.

இறப்பதற்கு முன் பரமேஷ் கண் முன் ஒரு கொசு வந்து ஆட்டம் போட்டது.

‘என்னைத் தெரியுதா? என்னை நீயெல்லாம் ஒரு கொசு ! நசுக்கிடுவேன்னு சபதம் போட்டியே?. அனுபவி ராஜா அனுபவி இப்போ’.

தகவல் அறிவோம்: கொசுக்களால் ஏற்படும் வைரஸ் நோயான டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் மே 16ஆம் தேதி தேசிய டெங்கு தினம் அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *