கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 30, 2024
பார்வையிட்டோர்: 214 
 
 

(1932-42-ஆம் வருஷம் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1 

அன்று நவராத்திரி ஆரம்பம். ராஜராஜேசுவர தீட்சிதர் விடியற்காலையில் இரண்டு மணிக்கே எழுந்து விட்டார். மூதல் நாள் இரவு முழுவதும் தூக்கம் இல்லை. அவருடைய மனத்தில் உண்டான துக்கம் அவர் முகத்தின் சோபையை உறிஞ்சி விட்டது. “தரித்திரம், தரித்திரம்!’» என்று எதையோ திட்டிக் கொண்டு பெரு மூச்சு விட்டார். வாஸ்தவத்தில் அவர் சாட்சாத் தரித்திரத்தையே திட்டினார். வறுமைப் பிணியை திட்டுவதற்கு அவருக்கு வேறு சிறந்த பதம் கிடைக்கவில்லை. ‘இப்படியா இந்த வீடு நாசமாய்ப் போக வேண்டும்? நம்முடைய பரம்பரைக்கே ஜீவகளை தருவது நவராத்திரிப் பூஜை அல்லவா? அட தரித்திரமே!” மறுபடியும் பெருமூச்சு. 

விடிந்து விட்டது! இரவுதான் விடிந்தது ராஜ ராஜேசுவரருடைய தரித்திரம் அல்ல. காலங்கண்ட தாமிரச் செம்பும், பஞ்சபாத்திரமும், வால் ஒடிந்த உத்தரணியும் தீட்சிதருக்கு முன்னே இருந்தன. பெயருக்கு மான் தோல் என்ற ஒன்று அவருடைய ஆசனமாக இருந்தது. அதன் மேல் இருந்த ரோமமெல்லாம் போய் விட்டன. வற்றின ஆற்று மணலிலே அங்கும் இங்கும் இரண்டு சதுர அங்குலத் திற்கு முளைத்திருக்கும் புல்லைப்போலச் சில சில இடங்களில் மான்தோலுக்கு அடையாளமாகச் சில ரோமங்கள் இருந்தன. மாங்காய் வற்றலைப்போல ஓரங்களெல்லாம் பிய்ந்து கொஞ்சநஞ்சம் ஒட்டிக் கொண்டு இருந்தன. 

ஜபம் பண்ணுகிறார் தீட்சிதரென்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். கண்ணை மூடியபடியே அவர் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். என்ன தியானம்? அவருடைய உள்ளமாகிய ஓடம் தரித்திர சாகரத்தின் கரையைக் காண முடியாமல் தத்தளித்தது. 

மணி ஒன்பது. ராஜராஜேசுவரி பூஜை ஆரம்பிக்கப் பட்டது. ஆடம்பரம் ஒன்றும் இல்லாமல் அரை மணியில் முடிந்தது. அந்தக் காலத்தில் நவராத்திரி என்றால் அவர்கள் வீடு பெரிய கோவிலாக இருக்குமாம். ஊர் முழுதும் பூஜையைத் தரிசிக்க வருவார்களாம். ராஜ ராஜேசுவரருடைய பிதாமகருக்குத் தகப்பனாராகிய அம்பிகாபதி தீட்சிதர் பெரிய மகானாம். ராஜாக்களெல்லாம் நவராத்திரிப் பூஜைக்கு வேண்டிய திரவியங்களை அனுப்பு வார்களாம். ஒவ்வொரு நாளும் பிராம்மண சந்தர்ப்பணை நடக்குமாம். ஹும் ! இந்தப் புராணமெல்லாம் இப்பொழுது எதற்கு ? இந்த நவராத்திரி மாமுண்டியா பிள்ளை வாக்கு அளித்த ஒரு சீப்புப் பழத்திலும் இரண்டணாக் கற்பூரத்திலும் நடக்க வேண்டியிருந்தது. ஐந்து சம்புடங்கள் நிறைய உள்ள சாளக்ராமாதிகளுக்கும், பத்துப் பன்னிரண்டு செப்பு விக்கிரகங்களுக்கும், இருபது செப்புத் ‘தகடுகளுக்கும் அவைகளை அந்தக் காலத்தில் யந்திரங்களென்று சொல்லி வந்தார்கள் – ஸ்ரீராஜராஜேசுவரிக்கும் இவை எம்மாத்திரம்? தீட்சிதருக்குத்தான் திருப்தியுண்டாகப் போகிறதா? 

ஸ்ரீ ராஜராஜேசுவரி ஒரு பழைய சுண்ணந் தீற்றிய விக்கிரகம். அந்தக் காலத்தில் அந்தத் தேவிக்குத்தான் மகிமை அதிகம். தேவியினுடைய திருமேனி வண்ணங்கள் எல்லாம் இப்பொழுது மங்கி விட்டாலும், திருவிழிகளிலுள்ள ஒளி மங்கவில்லை. அந்த விழிகளில் விலைவரம்பற்ற நீல மணிகள் புதைக்கப்பட்டிருந்தன. ராத்திரி வேளையில் ஒரு சிறிய விளக்கு வெளிச்சத்தில் கூட அவ்விழிகளில் உண் டாகும் ஜோதி அந்த வீட்டிற்கே விளக்கத்தை அளித்தது. 

2 

தீபாவளி நெருங்கி விட்டது. கையில் பைசாவுக்கு வழியில்லை. கால்கஞ்சிக்குக் கொடுத்துக் கொண்டிருந்த ஆமி, வெள்ளத்தால் மேடிட்டு விட்டது. பழைய பூமியைக் காண்பதானால் ஐந்தடி மணலை வெட்டிப் பார்க்க வேண்டும். வெட்டினால் புதையலைப் போல பூமியைக் காணலாம். மிச்சம் இருக்கிற புன்செய்யில் என்ன வரப் போகிறது? ராஜராஜேசுவர தீட்சிதர் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு சிந்தையில் ஆழ்ந்திருந்தார். 

அந்த வழியே ரத்தின வியாபாரி சோடாதாஸ் சென்றார். எங்கேயோ அவசரமாகப் போகிறவர் தீட்சி தரைப் பார்த்து விட்டு நின்றார் ; “என்ன, தீட்சிதர்? யோசனை பண்ணினீரோ?” என்று கேட்டுக் கொண்டே அருகில் வந்தார். 

தீட்சிதர், “அதுவா?” என்று சொல்லிக் கொண்டே மேலே பேச முயன்றார். அவருக்கு வார்த்தை வரவில்லை. அவர் உள்ளத்துள் ஒரு போராட்டம் நிகழ்ந்தது. சிறிது நேரம் சென்றது. “அந்த விக்கிரகத்தையே நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் சொல்லுகிறபடி ஏன் செய்ய வேண்டும்?” என்றார் தீட்சிதர். 

“ஓய்! நீர் பரம்பரையைக் காப்பாற்ற வேண்டாமா? விக்கிரகம் எனக்கு எதற்கு? பேசரமல் நான் சொன்னபடி செய்யும். இரண்டாயிரமென்றால் லேசான காரியமா?” 

“அது சரிதான். என் மனசு என்னவோ அப்படிச் செய்யத் துணியவில்லை. தவிர, யாராவது பார்த்தாலும்”

“யார் ஐயா உ ம்மைத் தடுப்பவர்? உம்முடைய சொத்துக்கு நீரே உரியவர் அல்லவா? அந்த இரண்டுக்கும் பதிலாக வேறு வைத்து விடலாம். இன்னும் பிரகாசமான மணிகள் தருகிறேன்.” 

“பார்க்கிறேன்.” 

சோடாதாஸ் திருப்தியோடு சென்றார். 

இரவு சரியாகப் பன்னிரண்டு மணி. தீட்சிதர் தூங்க வில்லை. முணுக்கு முணுக்கென்று சிறிதாக எரிந்து கொண்டிருக்கும் கைவிளக்கின் ஒளியில் ராஜராஜேசுவரியின் விழிமணிகளின் ஜோதி அலையோடிக் கொண்டிருந்தது. தீட்சிதருடைய மனத்திலும் எண்ண அலைகள் மேலும் கீழும் புரண்டு ஒன்றை ஒன்று அமிழ்த்தியும் எழுந்து ம் குமுறிக் கொண்டிருந்தன. வியனுலகு முழுவதும் சாந்தி மயம். தீட்சிதர் மனத்தில் மட்டும் அந்த வஸ்துவைக் காணவில்லை. 

”தேவி! நீயே கதி. பரதேவதே! மன்னிக்க வேண்டும்” என்றது ஓர் அலை. 

“சீ தரித்திரமே! ஓடு. நீ தேவியின் திருவருளுக்கு முன் எம்மாத்திரம்?” என்றது அதை அழுத்திய அலை.

“மணலின் கீழே புதையுண்ட நிலத்தில் மணல் தான் கிடைக்கும். மணலைச் சமைக்கலாம்?” – இது அடுத்த அலை. 

“சரி ; துணியத்தான் வேண்டும். தாயே! ரக்ஷி, ரக்ஷி; க்ஷமி, க்ஷமி, க்ஷமி : காப்பாற்று, காப்பாற்று. காப்பாற்று. இந்த ஐபம் தீட்சிதரைக் கிளப்பி விட்டது. அப்புறம் அவருடைய செய்கை மனோவேகத்தில் நிகழ்ந்தது. ஓர் ஆவேசத்தில் அவர் தாம் எண்ணிய காரியத்தை முடித்தார். தம் கந்தைத் துணியில் முடிந்து கொண்ட மணிகளோடு வெளியே வந்து ஓடினார். பாதி ராத்திரி என்று கூடப் பார்க்கவில்லை. 

சோடாதாஸ் வீட்டிற்குச் சென்று தடதடவென்று கதவைத் தட்டினார். உள்ளே படுத்திருந்தவர்கள் பயந்து போனார்கள். அவர்களுக்குச் சமாதானம் சொல்வதற்குள் முதலாளியே வந்து விட்டார். அவருக்கு விஷயம் விளங்கி விட்டது. தீட்சிதரைக் காட்டிலும் அவருக்கு ஆயிரம் மடங்கு அதிகமான வேகம் உண்டாயிற்று. 

“மேலே போகலாம்'” என்றார் சோடாதாஸ். ஒரே தாவல்தான். ”இதோ, உங்கள் விருப்பப்படியே செய்து விட்டேன்.நான் ஏழை: எங்கள் பரம்பரைச் சொத்து இது. துணிந்து செய்து விட்டேன். கொஞ்சம் தயவு வைக்க வேண்டும்” என்று சொல்லிக்கொண்டே தம் துணியில் முடிந்திருந்த வஸ்துவைத் தீட்சிதர் கொடுத்தார் 

ரத்தின வியாபாரி அந்த இரண்டு மணிகளையும் எழுந்து நின்று வாங்கிக் கண்ணில் ஒற்றிக் கொண்டார். 

“தீட்சிதர்வாள்! சந்தோஷம் ! நான் இரண்டாயிரம் என்று சொன்னாலும், மூவாயிரம் தருவதாகவே எண்ணி வைத்திருக்கிறேன். இதோ தருகிறேன்” என்று சொல்லிப் பெட்டியைத் திறந்து மூன்று கட்டு நோட்டுக்களை எடுத்துப் போட்டார் : முப்பது நூறு ரூபாய் நோட்டுக்கள்! 

கூட இரண்டு துணையாட்களோடு தீட்சிதர் வீட்டிற்கு விரைந்து வந்தார். அவருடைய இருதயம் என்றும் இல்லாத வேகத்தில் அடித்தது. வந்து கைப்பெட்டியில் பணத்தை வைத்துப் பூட்டினார் வேகம் அடங்கவில்லை. மங்கி எரிந்த வெளிச்சத்தைத் தூண்டினார். ராஜராஜேசுவரி விக்கிரத்தைப் பார்த்தார். அங்கே என்ன இருக்கிறது? ஜோதி போய் விட்டது ; ஜீவன் மறைந்தது! 

“ஹா!” என்று ஒரு முறை வீரிட்டுக் கத்தினார் தீட்சிதர். எல்லோரும் திடுக்கிட்டு எழுந்தார்கள். தீட்சிதர் மூர்ச்சை போட்டுக் கிடக்கிறார். விசிறிக் குளிர்ந்த நீரைத் தெளித்துப் பரிகாரங்களைச் செய்து தெளிவிக்கையில் சரியாகச் சூரியோதய காலம். 

கண்ணைத் திறந்தார் தீட்சிதர். வாசலுக்கு நேரே உதய சூரியனுடைய பொன்னிறமான ஜோதியைப் பார்த்தார். திடீரென்று துள்ளி எழுந்தார்; அதோ அதோ! நீலம் ரத்தினமாக மாறிவிட்டது! என்று ஓடினார். பாவம்! அவருக்குப் பைத்தியம் பிடித்து விட்டது!

– 1932-42, கலைமகள்.

– கதை சொல்லுகிறார் கி.வா.ஜ., முதற் பதிப்பு: டிசம்பர் 1992, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *