கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 3, 2023
பார்வையிட்டோர்: 1,951 
 
 

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

செத்துக் கிடக்குமாப் போல் இருந்த, ஊருக்குத்தான் இப்போது இவ்வளவு கொண்டாட்டம். ஒரு காகம் கூடக் களைப்புக்கு அமராத குளத்தடி மடம், கூட கேலியும் சிரிப்புமாக இளசுகளால் நிறைந்திருக்கிறது என்றால் பாருங்களேன் ஊர்ப்பாடு வலுத்த குஷி.

முளைக்கும் தலைமுறைக்கு மண்மீது பற்றுதல் குறைந்து தான் வருகிறது. கிழடும் கட்டைகளுமாக ஊரை விட்டுவிட்டு ஊர் கடந்ததும் நாடு கடந்ததுமாகி விட்டார்கள். தோட்டம் துரவுகளில் கூட நாளுக்கொரு வீடு எழும்புகின்றது. மிச்சம் மீதிகள் கிழக் கரங்கள் ஒப்பேற்றுகின்றன. வீடு தூங்கும் பெண் புரசுகளும், தெருப்புழுதி அளையும் சின்னஞ் சிறுசுகளும்…. இப்படியாக ஒடுங்கியிருந்த ஊர் தான்….

இப்போது…..

ஒருத்தியோ இருத்தியோ மெல்ல அலைபரப்பும் குளம் கூட இளைஞர் கூட்டத்தால் அல்லோல கல்லோலப் பட்டபடி…..

இந்தத் துடிப்பாட்டம் எல்லாம் ஒரு பத்து நாட்களுக்குத் தான். வயிரவர் கோயில் திருவிழா முடிந்த கையோடு எல்லாமே ஓய்ந்துவிடும். பிறகு ஊர்ப் பழைய படி உறங்கும் நிலையில் ஆழ்ந்து விடும்.

இன்றைக்கு மூன்றாம் திருவிழா.

வருகை தரப் பிந்தி இந்த வருசம் திருவிழாவுக்கு வரமாட்டார்களோ என்று ஊர் நினைத்துப் பெருமூச்சு விட்ட மிச்சப் பிரகிருதிகளும் வந்துவிட்டார்கள். கொழும்பு, கண்டி தொடக்கம் வாயில் பேர் நுழையாத சிங்கள ஊர்கள் வரையில் தொடர்ந்து அஞ்ஞாத வாசம் செய்து பிழைக்கும் ஊரவர்களுக்கு இந்த வயிரவர் கோயில் திருவிழா நல்ல சாட்டு. ‘எங்கினக்குள்ள இருந்தாலும், பொழுது பட்டதும் மரத்துக்கு வந்து சேரும் காகங்கள் போல…..

நானும் தான் பிந்திவிட்டாலும் மூன்றாவதுக் கென்றாலும் வந்து சேர்ந்தது மனதுக்குத் திருப்தி.

இரவு பகலாக கோயிலடியில் லவுட்ஸ்பீக்கர் தமிழ்ச் சினிமாப் பாடல்களை ஒப்புவித்துக் கொண்டிருந்தது. ஊரிலுள்ள நான்கு மண் வீதிகளிலும் கோயிலுக்குப் போவோரும் வருவோருமாக…… ஊரவர்கள் மட்டுமல்லாமல் வெளியூர்ச் சம்பந்தி பகுதிகளும் இதுதான் தருணம் என்று வந்து குவிந்தபடி….

முதல் திருவிழாவே சூடு பிடித்து விட்டதாம்.

இது மூன்றாவது….. கடும் சூடு.

ஊரவர் திருக் கூட்டத்தால் வைரவர் கோயில் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.ஏறுபடிமேளம். தம்பாட்டி, ஒலி, ஒளி அமைப்பின் கச்சிதம், வயது வந்தவர்களின் கடவுளை நோக்கிய பார்வை, கை குவிப்பு.

இளசுகளின் கடைக்கண் பார்வை கையசைப்பு.

‘அரோகரா…. அரோகரா…..

வைரவ சுவாமி புறப்பட்டு விட்டார். வீதியுலா வருவதற்கு.

‘கரகம், கரகம், எங்க அவங்களை வரச் சொல்லுங்க’ உபயகாரர் தான் தான் உபயகாரர் என்று தம்பட்டம் அடிப்பது போல் குரல் கொடுக்கிறார்

2

தெருப் பிச்சைக்காரனின் கோலத்தில் ஒருவன் முகமூடியணிந்து சனங்களைப் பிய்த்து முன்வருகின்றான். சில நிமிடங்கள் ஊர் வாய்பிளக்கிறது. ‘அமெரிக்கன் மா’ பூசிய முகத்துடன் ஒரு பழைய வேசம் வெளிவருகிறது. தலையிலே செம்பு. நளினம் போல் நினைப்பில் ஒரு வெருளி நடை.

மேளச் செற் வெளுத்து வாங்க வைரவர் சுவாமி வடக்கு வீதிக்கு வந்துவிட்டார். கப்புக் கால் போட்டுச் சுவாமியை நிறுத்திக் களை ஆறுகிறார்கள் ஊர் மாப்பிள்ளைகள்.

சல்லடை தட்டும் பெடியனிடம் மேளம் ஒன்றைக் கொடுத்து விட்டு வித்துவான்கள் விலகுகிறார்கள். நாதஸ்வரமும் ஒத்தூதுபவனைத் தனித்து விட்டு ஒதுங்குகிறது.

இந்தக் கரகத்துக்கு இது போதும். என்பது போல் ஒரு மேளமும் குழலும் ‘நலந்தானா நலந்தானா’ என்று ஒப்பாரி வைக்க கரகக்காரனும் பபூனும் ஆடுகிறார்கள்.

செம்பு இறங்கியது. ஆலையில்லா ஊர் இது. இலுப்பைப் பூக் கரகம் கண்டு வாய் பிளக்கிறது.

கரகக்காரன் தீப்பந்தங்களை எடுக்கிறான். ‘ராஜா பொண்ணு வாடியம்மா’ என்று நாதஸ்வரத்திடம் கூறி விட்டுத் தீப்பந்தங்களைச் சுழற்றத் தொடங்குகிறான். அந்த நெருப்புக் கோளங்கள் சுழன்று சுழன்று…

3

நேற்று யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தபோது யாழ்ப்பாணம் யாழ்ப்பாணமாகவா இருந்தது. ஒரு வாரத்துக்கு முன் சுடுகாடு போலான சுவடுகள் மறையாமல் எதிர்ப்படும் முகங்கள் எல்லாம் ஏக்கம் கப்பியனவாக……

கரக ஆட்டக்காரன் தீப் பந்தங்களோடு சுற்றிச் சுழன்று ஆடிக் கொண்டிருக்கிறான். சனங்கள் கரகோஷம் செய்து மகிழ்ச்சியில் குதூகலிக்கின்றனர்.

எனக்குள் வெறுப்பு முளைகொண்டு செழித்து மனதை நிறைக்கின்றது. எப்படித்தான் இவர்களால் மகிழ்ச்சியடைய முடிகிறது.

வெறுப்புச் சுழியிட கரகத்தில் மனம் படியாது தரவைக்கு வருகிறேன். நாடகக் கொட்டகை கம்பீரமாக நிற்கிறது. தூரத் தூர சின்னச் சின்ன விளக்குகள் ‘பக் பக்’ கென்று உயிருக்குத் துடித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றுக்கருகே குறண்டிக் கொண்டு சில கிழவிகள் கடலைப் பெட்டியும் தாமுமாக இருக்கின்றனர்.

இரண்டு தேனீர்க்கடைப் பந்தல்கள் அவற்றுக்கு முன்னாலுள்ள வாங்குகளில் சில விண்ணாணங்கள்….. ஆகப் பாவமாக இருந்த கிழவி ஒருத்தியிடம் கச்சான் வாங்கித் தின்றபடி ஒரு உலாத்து. கால் களைத்து விட வேறு வழியின்றி கரகத்துக்கே திரும்பி வரும்போது நாதஸ்வரம் களைத்து வழிகிறது. ‘ஆயிரங்கண் போதாது வண்ணக் கிளியே’ என்று.

‘சொல்லிப் போட்டன் பொம்பிளையள் பக்கத்திலை ஒரு ஆம்பிளையளும் நிற்கப்படாது…. தம்பிமார் முன்னுக்கு நிக்கிறவை இருக்கவேணும்.’

தமக்குத் தாமே தலைவர்கள் நினைப்பில் நாலைந்து ஊர் வித்து வான்கள் அதட்டுவதும் அலறு வதுமாக…. இத்தனைக்கும் பெண்கள் பக்கத்துள் ஒரு ஆண்களும் இல்லை.

இந்த அலங்கோலங்களையெல்லாம் கூர்ந்து பார்க்கப் பார்க்க எனக்கு எரிச்சல் மேலிடுகிறது.

மீண்டும் மனதுள் குத்துண்டு மோதும் நினைப்புகள்.

4

ரயிலில் வந்து கொண்டிருந்த போது…..

எல்லோருக்கும் தோன்றுகிற இயல்பினால் அவர் வாய் திறக்க வில்லை. மிகுந்த மனப்பாரத்திலும் பொறுப்புணர்ச்சியுடன் தான் பேசினார்.

‘கடமுடா கடமுடா’ என்று அடித்துப் பிடித்துக் கொண்டு ரயில் போக வில்லங்கப் பட்டு தொண்டை திறந்து இந்த மனித ஜன்மங்களுக்கு ஏன்தான் இந்த ஆசையோ? ரயில் நண்பர் அப்படியான வெறும் பொழுது போக்குக்குப் பேசவில்லை.

‘தம்பி நீங்கள்….. எழுதுகிற நீங்கள். அநியாயங்களைக் கண்டும் காணாதது மாதிரி இருக்கப் படாது, எழுதவேணும்’

‘ம்……’ யோசனையுடன் தலையாட்டி வைக்கிறேன்.

‘தம்பி, நீங்கள் சாதி ஒடுக்கு முறை பற்றித்தான் நிறைய எழுதியிருக்கிறியள். நான் பார்த்திருக்கிறன். இப்ப நம்மட இனம் இருக்கிற நிலைமையில இது ரெண்டாம் பட்சமான விடயமாப் போச்சுது. நீங்க வலிந்து திணிச்சு எழுதிறியள். இப்ப உள்ள நிலைமையிலை அது, தானா மறைஞ்சு போய்விடும்.’

‘…ம்…மறையத்தான் வேணும்’

‘தம்பி, நீங்கள் நம்மட இனத்தின்ர நிலைமையை விசாலமாய் சிந்திச்சு எழுதவேணும். இனியும் சாதி, சீதனம் என்று மட்டும் கிளறிக் கொண்டிருக்கப் படாது’

வயதும், அன்பு உரிமையும் கட்டளையிட வைத்தது.

அவர் கூறியதை ஏற்றுக் கொண்டேனோ இல்லையோ உள்வாங்கிக் கொண்டு யாழப்பாண ஸ்டேசனில் பிரிந்தோம்.

5

கரக ஆட்டம் முடிந்து விட்டது.

மாப்பிள்ளைத் தோள்கள் பாரம் சுமக்க வைரவ சுவாமி பவனி. மேளச் சமா தொடங்கி விட்டது. ‘டாடி டாடி பாடலை வெகு சிரமப் பட்டு வாசித்து அப்ளோஸ் வாங்க முயன்று கொண்டிருந்தார் நாதஸ்வர மன்னன். இன்னும் சில நிமிடங்களில் சுவாமி புறப்பட்ட இடத்துக்கு மீண்டு விடுவார் என்ற நிலையில் எனது பழக்க தோசம், நாடக மேடையடிக்கு இழுத்து வந்தது.

காற்சட்டை போட அடம் பிடித்த காலம் தொடக்கம் எனக்கு நினைவு இருக்கிறது. இப்படித்தான் வருடத்தில் பத்து நாள் வைரவர் கோயில் திமிலோகப்படும். இதே நேரம் தான் கச்சானும் கையுமாக மேடைக்கு முன்னால் அமர்ந்து விடுவேன். அந்தக் காலத்து அல்லி அர்ச்சுனா, ஸ்ரீவள்ளி தான் மாற்றமே இல்லை.

225

மேடைக்குப் பின்னால் வந்து தலை நுழைக்கிறேன். வைரமுத்து அர்ச்சுனனாகி இருந்தார். இன்னும் சில நிமிடங்களில் மேடையில் கலை பொலியும்.

கண்ணில் பஞ்சடைகிறது. நேரம் பன்னிரண்டு மணி. தேனீர் குடித்துவிட்டு வந்தால். தேனீர்க் கடைக்குப் போக காலெடுத்து வைக்கிறேன்.

‘அது என்ன?’

தேனீர்க் கடைக்கு முன்னால் சனக்கூட்டம் மொய்த்தபடி..

‘ஐயோ…ஐயோ…’

6

தேனீர்க் கடைக்காரன் தலையில் கை வைத்தபடி அலறிக் கொண்டிருந்தான். சேர்ட் கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது, பரிதாபமாக.

ஏதும் தவறு செய்து விட்டானோ? செய்தாலும் இப்படியா?

‘நடப்புக் காட்டுகிறானே என்னடா?’ இது செல்லையரின் உறுமல்.

‘நானென்னய்யா செய்தனான்’.

‘பொத்தடா வாயை’ செல்லையர் கூறியதைச் செய்ய அவரது பக்கத்தில் பல கைகள் நீண்டன.

‘அவனாக மூடமாட்டான். மூடவைக்க வேணும்.

மீண்டும் சில அடிகள் அவன் மீது படபடக்கின்றன. அவன் ஒருத்தனாக நிற்க, இவர்கள் வெறி பிடித்தவர்களாகி….

தூரத்தில் ஒரு மூலையில் மினுங்கும் வெளிச்சத்தில் கடலை விற்றுக் கொண்டிருந்த அவனது மனைவி ஓடி வருகிறாள்.

‘ஐயோ கொல்லிறார்களே’

‘போடி அங்காலை. வந்திட்டாளாம்’ ஒரு வெறிக் கரம் இழுத்து எறிகிறது.

தேனீர்க் கடைக் கப்புக் காலுடன் மோதி விழுகிறாள் அவள்.

‘கடையை மூடிப்போட்டு இப்பவே போயிடவேணும், சொல்லிப் போட்டன்’ என்று தீர்மானித்து விட்டு நடக்கிறார் மணியகாரன்.

தேனீர்க் கடைக்காரன் தலையில் கைவைத்தபடி விம்மி விம்மி அழுதவாறு அமர்ந்திருந்தான்.

‘அவனாக மூடமாட்டான் மூடப் பண்ண வேணும்’ செல்லையர் துள்ளிக் குதித்து தேனீர்ப் பானையைத் தட்டி விடுகிறார். சுடுநீர் சிந்திச் சிதறுகிறது. சுடுநீர் பட்டுவிட்டதால் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த குழந்தை ‘வீல்’ என்று வீரிட்டு அழுகிறது. தாய் ஓடிச் சென்று மடியுள் புதைக்கிறாள்.

இவ்வளவோடு மூட்டை கட்டிவிடுவான் என்ற நம்பிக்கையுடன் முன்னால் வெறி கொண்டு நின்றவர்கள் கலைகிறார்கள்.

‘இவங்களட்ட நமக்குப் பிழைப்பு வேணாம்… நடவுங்க’ ஆற்றாமல் கூறுகிறாள் அவனது மனைவி.

‘நானென்ன பிழை செய்தனான் போறதுக்கு. எங்க பார்ப்பம்’ இவனிடம் இப்போது விறைப்பு!

‘என்ர ராசா, பட்டினி கிடந்து சாவம். இந்த நரகாலியளோட மூச்சே படவேணாம்.’

“அவங்க மட்டுமா வாறாங்கள். நம்மட ஆட்களும் தான் கூத்துக்கு வாறது. எனக்கும் கடவைச்சு விக்கிறதுக்கு உரிமையிருக்கு’ இவன் அசைவதாக இல்லை.

இப்படித்தான் உறுதி வேண்டும்.

தூக்கம் கண்ணைச் சுழற்றியதால் தேனீர் குடித்து விட்டு வருவோம் என்று பக்கத்து தேனீர்க் கடைக்குப் போகிறேன். அது செல்லையரின் கடை.

7

கடையின் முன்னால் செல்லையர் நிற்கிறார். பிடரி சிலிர்த்த சிங்கமாக.

227

‘இந்த அடியோட கடையை மூடுவான்’

‘பொறி கலங்கிப் போனான்’ என்கிறார்கள், சுற்றிவர நிற்பவர்கள்.

‘ஐம்பது ரூபா மாத்தடா எண்டன். இல்லை எண்டான். விடுவனா தருணத்தை. பட்டறையை இழுத்தன். கையைப் பிடிச்சான். விட்டன் அடி.’ செல்லையர் அபிநயிக்கிறார்.

மேடையில் பாட்டுக்காரர்கள் தமது வேலையைத் தொடங்கி விட்டார்கள். ஆர்மோனியம் கதறுகிறது.

‘ஒரு தேத்தண்ணி தாங்கோ’

‘கொஞ்சம் பொறும்….. அடிச்ச உடனே பதறிப் போனான். எங்கட ஆக்கள் ஒண்டு கூடின உடன’

‘அவங்கட நடப்பை, எங்களட்ட காட்ட எலுமே’ செல்லையருக்கு சூடு ஏற்றுகின்றனர் சுற்றிவர நிற்பவர்கள்.

‘பற பள்ளுகள் தேத்தண்ணி விக்கிறது…..ம்’

‘அது மட்மில்லை, நம்மட பிழைப்பில அவனும் பங்கெடுக்க விடுவனா? சரி சரி தம்பி என்ன வேணும்’ செல்லையர் என் பக்கம் திரும்புகிறார்.

‘ஒண்டுமில்லை’ என்று விட்டு நடக்கிறேன்.

மேடையில் கலை மணக்கின்றது. மனம் லயிக்கவில்லை.

இந்தச் சன சந்தடியை விட்டுச் சிறிது நேரம் விலகிப் போய் வந்தால் நல்லது என்று மனம் அழைக்கிறது. சந்தியை நோக்கி நடக்கிறேன்.

8

சந்தி கழிந்ததும் மனம் ஒரு நிலைப்படாமல் நடக்கிறேன். வேதாகம மடத்துப் பெயர்ப்பலகையில் ஒளிவிளக்குகள் கண் சிமிட்டுகின்றன.

‘யேசு வருகிறார். நீ தயாராகி விட்டாய்?’

திரும்பத் திரும்ப அந்த வாசகங்கள் என்னுள் முணுமுணுக்கின்றன.

‘தயாராகி விட்டாயா?”

நினைவுகள் ‘கடமுடா கடமுடா’ என்ற ரயில் சத்தம் போல் இழுத்துச் செல்கிறது. அந்தச் சத்தத்தை வென்ற அவர் கூறியவை…..

‘நம்மட இனம் விடுதலைக்குத் தயாராகி விட்டுது இந்த நிலையில் சாதி வெறியெல்லாம் அழிஞ்சு போச்ச, அதையெல்லாம் உங்கட கதைகளிலை மட்டும் தான்…..’

கதைகளில் மட்டும் தானா? நிதர்சனத்தில்….

‘ஐயா….. ஐயா…..’ என்று அவன் தலையில் கைவைத்தபடி இருக்க அவனைச் சுற்றிவர வெறிபிடித்த வேங்கையாகி இம்சித்தவர்கள்..

கண்முன்னே உறைத்து நிற்கும் அந்தக் காட்சி.

ஓ…. அந்த வேங்கைகளே என்றும் வென்றுவிடுமோ?

அவன் கடையை மூடிவிடுவானோ?

திரும்பவும் விரைந்து கோயிலடிக்கு வருகிறேன்.

9

மேடையில் அல்லி அர்ச்சுனா. நாடகத்தின் ரசிப்பில் மக்கள் கூட்டம் களை கட்டியிருக்கிறது.

செல்லையருக்கு இன்னும் கொதி ஆறவில்லை. தேனீர்க் கடை மூடுவிழா தாமதமாவதைச் சகிக்க முடியாதவராக……

‘திருவிழாவைக் குழப்புறத்துக்காக எண்டே இன்னும் ஒப்பாரி வைச்சுக் கொண்டிருக்கின்றான்’ என்றபடி முன்னேறுகிறார் செல்லையர்.

‘மூட்டா கடையை’ இவர் பக்கத்தில் சிலர் மீண்டும் வெறி கொண்டு எழ…

‘இஞ்சை விடு ஒருக்காத் தான் சாகிறது’ என்றபடி விறுக்கிட்டு எழுகிறான் கடைக்காரன். இப்போது அவன் ஒருவனாக இல்லை. கூத்துக்கு வந்த உறவினர்களும் சுற்றிவளைக்க.

‘நெடுகலும் எங்களை அடக்கி ஆளலாம் எண்ட நினைவு போல’

கற்கள் பறந்தன. கம்புகள் எழுந்தன. தீப்பந்தங்கள் கோரமாகச் சுழன்றன.

‘திறவாய்…. திறவாய்…. கதவைத் திறவாய்’ மேடையிலே பாடல் மனக் கதவைத் திறக்க இரங்குவது போல் ஒலிக்கிறது.

சில நிமிட யுத்த களேபரம்!

அடக்கத் துடிக்கும் சாதி, வெறியர்களுக்கும், அடங்க மறுக்கும் உழைக்கும் கரங்களுக்கும் இடையே வந்த யுத்தம்.

செல்லையர் கடை எரிகிறது.

பல நிமிடங்கள் பதட்டத்தில் கழிய….

ஊரின் வடபுறம் இருக்கும் தாழ்த்தப் பட்டவர்களின் கிராமத்தை தீ தின்றது.

– இதழ் 154 – 1981, மல்லிகைச் சிறுகதைகள், முதற் பதிப்பு: ஜூன் 2002, மல்லிகை பந்தல் வெளியீடு, கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *