மதிவதனி கல்லூரிக்குச் செல்ல நேரமானதால் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள். சமையலை முடித்துவிட்டுக் குளித்துக் கிளம்பவேண்டும். காலேஜ் பஸ் வந்துவிடும். சமையலை முடித்தவுடன் கல்லூரிக்குக் கட்டுவதற்கு ஏற்ற ஒரு காட்டன் புடவையைத் தேர்வு செய்து வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றாள். வீட்டை விட்டுக் கிளம்பும்போது மணி சரியாக ஒன்பது முப்பதைத் தாண்டியது. பஸ் ஸ்டாப்பிற்குப் போக பத்துநிமிடம் நடக்கவேண்டும். வேக வேகமாக நடந்த மதிவதனிக்கு வயது முப்பதைத் தாண்டிவிட்டது. ஆனால் பார்க்க இருபத்தைந்து மதிப்பிடலாம். பெரிய கண்களும், கூர்மையான மூக்கும் சிவந்த நிறமும் அவளை எடுப்பாகக் காட்டுவதோடு ரோட்டில் கடந்து செல்பவர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கும். அவள் காட்டன் புடவைகளைக் கட்டுவதில் நேர்த்தியும் கண்ணியமும் இருக்கும்.
காலேஸ் பஸ் வந்து ஏறி அமர்ந்தவுடன் அவளது ஞாபகங்கள் பழைய நினைவுகளில் மூழ்கிப் போயின. கல்லூரியில் முதல் ஆண்டு வகுப்புகள் தொடங்கிய காலத்தில் புதிதாக வந்திருந்த மாணவர்களைப் பார்க்க மதிவதனிக்கும் ஆர்வமிருந்தது. வந்த மாணவர்களில் பிபிஏ வகுப்பில் தங்களை அறிமுகம் செய்து பேசச்சொன்னாள். அவர்களில் மாணவன் மணிமாறனும் ஒருவன். டீச்சர் என ஆரம்பித்தவுடனே மாணவர்களின் கேலி தொடங்கியது.
“இனிமேல் டீச்சர் என்று என்னைக் கூப்பிடக்கூடாது. அம்மா அல்லது மேடம் என்று கூப்பிடு” என்று சொன்னாள். மணிமாறனின் கிராமத்துப் பேச்சும் கள்ளமில்லாத குணமும் அவளைக் கொள்ளை கொண்டன. அவள் வகுப்பெடுக்கும் திறனைப் பார்த்து
“அம்மா சீனிப்பட்டாசு வெடிக்கிற மாதிரி வெடிக்கிறீங்க” என்பான். ஒரு நாள் வகுப்பில் கிளாஸ் எடுத்துக் கொண்டு இருக்கும்போது மணிமாறன் தூங்கிக் கொண்டு இருந்ததைப் பார்த்தவுடன் சட்டென்று கோபம் வந்து புத்தகத்தை அவன் தலையில் போட்டாள். திடுக்கிட்டு விழித்தவன்,
“சாரிம்மா இரவு வேலைக்குப் போனதால் என்னையும் அறியாமல் அசந்துவிட்டேன்” என்றான்.
“ஏன் இரவு வேலைக்கெல்லாம் போகிறாய். எப்படிப் படிக்கமுடியும் உன்னால்…” என்றேன்.
“வேறு வழியில்லை. நான்தான் வேலைக்குப் போய் படிக்க வேண்டியிருக்கிறது.” என்றான். என்னையும் அறியாமல் அவன்மேல் கரிசனம் உண்டாயிற்று. அடிக்கடி கல்லூரிக்கு மணிமாறன் லீவு போட்டதை அடுத்து பெஞ்சில் அவன் பக்கத்திலிருக்கும் மாணவனிடம் விசாரித்தேன். “அவங்கப்பா இறந்து போனதால் அவன்தான் வேலைக்குப் போய் குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு, படிக்கிறான் மேம்” என்றான். இந்தச் சின்ன வயதிலேயே இவ்வளவு சுமைகள் சுமப்பதைக் கண்டு மதிவதனியின் கண்கள் குளமாயின.
மணிமாறன் படித்துக் கொண்டே வேலைக்கும் போய் வந்தான். சுமாராகப் படித்துத் தேர்விலும் வெற்றிபெற்றான். முதல் செமஸ்டர் முடிந்து இரண்டாவது செமஸ்டரின் முடிவில் ஒரு நாள் அந்தச் சம்பவம் நடந்தது.
அன்று அதிகாலையில் தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழித்த மதிவதனிக்கு கெட்ட கனவின் எதிரொலியால் மனது ஒரு மாதிரியாக இருந்தது. வெகு சீக்கிரமாகவே கிளம்பி கல்லூரி வந்தவளுக்கு ஸ்டாப் ரூமிற்குள் இருந்த நிசப்தம் மனதை நெருடியது. உள்ளே நுழைந்தவுடன் மேத்ஸ் மேடம்
“மேம் உங்களுக்கு விசயம் தெரியுமா?” என்றார்கள்.
“என்னாச்சு?” என்ற மதியைப் பார்த்து “நேற்று சென்னையிலிருந்து மதுரை வந்த ரயிலில் மணிமாறன் இரவில் படிக்கட்டில் அமர்ந்து வந்திருக்கிறான். தூங்கி இடையிலேயே விழுந்து இறந்துவிட்டான். மேம்” கேட்டவுடன் என் கண்களில் என்னையும் அறியாமல் கண்ணீர் துளிர்த்தது.
“ஐயோ நல்ல பையனாச்சே.வேலையும் பார்த்துக்கிட்டுப் படிச்சவனாச்சே. வீட்ல எவ்வளவு கஷ்டப்படறாங்களோ.”
என்று புலம்பிய மதிக்கு அன்று வேலையே ஓடவில்லை. மேத்ஸ் மேடம் வேறு
“மேடம் அவன் அடிபட்டுக் குற்றுயிரும் குலையுயிருமாக் கிடந்திருக்கிறான். எவ்வளவு நேரம் இப்படித் துடித்தானோ தெரியலையே. அவன் கூடப் போன நண்பர்களுக்கும் தெரியலை போல. காலைலதான் ஆளக் காணோமேன்னு தேடியிருக்காங்க”
என்றதைக் கேட்டவுடன் இன்னும் துக்கம் தொண்டையைக் கட்டியது.
ஒரு மாதங்கள் அவனது நினைவுகள் ஞாபகத்தில் வந்து வந்து போயின. அவன் இறந்து ஓராண்டுகள் கடந்த நிலையில் அவனைப் போலவே டீச்சர் என விளிக்கும் மாணவனைப் பார்க்கும்போதும் வகுப்பில் தூங்கிவிழும் மாணவனைப் பார்க்கும்போதும் எனக்குக் கோபமே வருவதில்லை. அவனைப் போலவே கற்கும் வயதில் சுமைகளுடன் வரும் மாணவர்களைப் பார்க்கும் போது மனதில் எழும் பின்னோக்கிய நினைவுகளில் நீறு பூத்த நெருப்புப் போல மணிமாறனின் முகம் வந்து வந்து சிரிக்கிறது.
– காற்றுவெளி