நீங்க என்ன ஆளுங்க

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 4, 2023
பார்வையிட்டோர்: 1,955 
 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“உங்க பொண்ணுக்கு எப்போ கல்யாணம்” என தகப்பனாரிடமும், “எனி குட் நியுஸ் ” என புதிதாக திருமணமானவர்களிடமும் கேட்கப்படும் கேள்விகளை விட அசூயையானது, “நீங்க என்ன ஆளுங்க” என்ற கேள்வி.

பொதுவாக இது நம்ம ஆளாக இருந்தால் நல்ல இருக்குமே, காரியம் சாதித்துக் கொள்ள எளிதாக இருக்குமே என நினைப்பவர்கள் தான் இப்படி கேட்பார்கள். அதாவது நம்மை விட திறமை சாலியாக, இருப்பவன் நம்ம சாதியாக இருக்கக் கூடாதா என்ற ஏக்கமாகவும் இருக்கலாம். “நீங்க என்ன ஆக்கள்” என்பதை சுத்தி வளைக்காமல் சர்வ சாதரணமாக என்னுடைய ஈழத்து நண்பர், ஒஸ்லோ நகரில் ஒரு நாள் என்னிடம் கேட்டார். ஓர் ஈழத்து ஆள் கேட்டது வியப்பாகத் தான் இருந்தது. “அவை என்ன ஆக்கள்” என்ற கேள்வி ஈழத்து மக்களிடம் சாதாரணம் என்றாலும் நேரடிக் கேள்வி அதிர்ச்சியாகத் தான் இருந்தது. ஒரு வேளை பொன்னர் சங்கர் புதினம் எனது மேசையில் இருந்ததனால் அப்படி கேட்கத் தோன்றி இருக்குமோ…

இந்த கேள்விக்கு பொய் சொல்லலாம் . உண்மையும் சொல்லலாம். மூன்றாவது விதமான பதிலும் உண்டு. “இந்த சாதி கருமாந்திரம் எல்லாம் நமக்கு எதுக்குங்க ?”. இவ்வகையான பதில் சொல்லுபவர்கள் தாழ்த்தப் பட்ட சாதியை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என என் கல்லூரி நண்பன் ராகவன் சொல்லி இருக்கின்றான்.

அவர்கள் தான் தங்களை வெளியெ சொல்ல கூச்சப் பட்டுக் கொண்டு அப்படி முற்போக்காய் சொல்லுவார்கள் எனவும் சொல்லுவான் ராகவன். ராகவனோட நட்பு, புலிவாலை பிடித்ததைப் போன்றது. விலாங்கு மீனாய் அவன் சொல்லுவதற்கெல்லாம் மைய்யமாய் தலையாட்டி வைப்பேன்.

“மச்சி, நீ மாட்டுக்கறி எல்லாம் சாப்பிடுறதுனால, அவிங்கன்னு தப்பா நினைச்சுட்டேண்டா … சாரிடா என தங்களுக்குள் புதுக் கூட்டணி அமைத்த தோழமைகளையும் பார்த்து இருக்கின்றேன். கூட்டணி அமைக்கும் முன்னர் கேட்கப்படும் மன்னிப்பு நெருடும் . மெட்றாஸில் வேலை பார்த்த பொழுது சில நண்பர்கள் பெரியாரியம் பேசுவார்கள், அம்பேத்கார் எல்லாம் படிப்பார்கள். ஆனால் கவனமாக, நுட்பமாக, முற்போக்கு சிந்தனையுடன் தலித்தியம் பேசும் பொழுது தாங்கள் தலித் இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொண்டே இருப்பார்கள். ஸ்வீடனில் இந்த வகையான மனப் போக்கை ஸ்விடிஷ் நண்பர்களிடமும் பார்த்து இருக்கின்றேன். LGBT விசயங்களை ஆதரித்து பேசுவார்கள், ஆனால் ஒவ்வொரு முறையும் தான் LGBT கிடையாது என்பதை ஆணித்தரமாக சொல்லிக் கொள்வார்கள்.

இதில் அறிந்தோ அறியாமலோ சம்பந்தப் பட்ட விஷயத்தை அவரவர் ஆழ் மனதில் குறைவாக எடை போட்டு வைத்திருப்பதால் தான், தாங்கள் அவர்களில்லை என அவர்கள் அடிக்கடி உறுதிப் படுத்திக் கொள்கின்றனர் என நான் நினைப்பதுண்டு. இந்த அவதானிப்பை யாரிடமாவது பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு நான் சிந்தனைவாதி இல்லை என்பதால், தோன்றியதை தோன்றியபடியே விட்டு விடுவேன்.

சரி இவருக்கு பதில் சொல்லியாக வேண்டுமே, “நான் தமிழன் சாதி”

என பெருமையாக சொல்லலாம். ஆனால் அப்படி ஒன்று இருந்து இருந்தால், இந்த கேள்வி வந்திருக்காதே. ஆகையால் நான் அவருக்கு தெளிவாக சொன்ன பதில்,

“நான், கண்டிப்பாக உங்க சாதி இல்லை சார்”.

– வினையூக்கி சிறுகதைகள், முதற் பதிப்பு: 2014, மின்னூல் வெளியீடு:http://FreeTamilEbooks.com, வினையூக்கி செல்வகுமார், சுவீடன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *