கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 19, 2015
பார்வையிட்டோர்: 6,553 
 
 

“அருமை நாயகம் சாரா…பேசறது?….” அவர் முன் பின் கேட்டறியாத குரல்! மிகவும் பதட்டமாக இருந்தது!

“ஆமாம்!….நான் அருமை நாயகம் தான் பேசறேன்!….நீங்க யார் பேசறது?….”அவருக்கும் அந்தப் பதட்டம் தொற்றிக்கொண்டது!

“சார்!…..நா துடியலூரிலிருந்து பேசறேன்!……இங்கு நாற்சந்தியில் பத்து நிமிடத்திற்கு முன்பு, ஒரு ‘ஹீரோ ஹோண்டா’ பைக் மீது ஒரு லாரி மோதி விட்டது! பைக்கில் வந்தவர் ஆபத்தான நிலையில் மயக்கமாக கிடக்கிறார். அவர் செல்போன் பக்கத்தில் கிடந்தது…அதில் உங்கள் நெம்பர் முதலில் பதிவு செய்திருக்கார்… உங்களுக்கு வேண்டியவராக இருக்கலாம் என்றுதான், உங்களுக்குப் போன் செய்தோம்! ..நீங்க உடனே வந்தால் காப்பாற்றி விடலாம்!…”

போன் செயல் இழந்தது! அருமை நாயகத்திற்கு கை,கால் எல்லாம் நடுங்கியது! அவருடைய ஒரே மகன் வைத்திருக்கும் பைக்கும் ஹீரோ ஹோண்டா பைக் தான்! அவர் தம்பி வைத்திருக்கும் பைக்கும் ஹீரோ ஹோண்டா தான்! பையன் படிக்கும் காலேஜ் இருக்கும் இடம் துடியலூர் பக்கம்….இன்னும் அவன் வீடு வந்து சேரவில்லை! தம்பியும் கம்பெனி வசூலுக்காக அடிக்கடி துடியலூர் போவான்..

அவர் கார் துடியலூருக்குப் பறந்தது!. விபத்து நடந்த இடத்தில் ரத்தம் சிதறிக் கிடந்தது அங்கு யாரும் இல்லை. பக்கத்தில் நின்று கொண்டிருந்தவரிடம் விசாரித்தார்.

“அடிபட்டவரை கோகுலம் ஆஸ்பத்திரிக்கு எடுத்திட்டு போய் இருக்காங்க…..”.என்று ஒருவர் சொன்னார்.

மருத்துவ மனைக்குப் பறந்தார். கட்டுப் போட்டு மயக்கமாக கிடந்தவர் கட்டிலுக்கு அருகில் ஓடிப் போய் ‘தம்பியா,மகனா’ என்று நடுங்கிக் கொண்டே பார்த்தார்.

அடி பட்டுக் கிடந்தவர் மகனும் இல்லை.தம்பியும் இல்லை! அவருக்கு முன் பின் தெரியாத நபர். அதற்குள் அடி பட்டவரின் நண்பர்கள் வந்து கட்டிலை சூழ்ந்து கொண்டார்கள்..

“தம்பி!…அடிபட்டவர் யாரப்பா?….” என்று அருகிலிருந்த ஒரு இளைஞனைக் கேட்டார் அருமை நாயகம்.

“எங்க நண்பர் தான் சார்! எலக்ட்ரீஷன் வேலை பார்க்கிறார் சார்!…”

“என்னுடைய செல்போன் நெம்பரை அவர் எதற்கு ‘சேவ்’ பண்ணி வச்சிருக்கார்?…”

“அவர் ஒயரிங் செய்யும் வீட்டு ஓனருடைய செல் போன் நெம்பர் அவசரத்திற்குத் தேவைப் படும் என்று பதிவு செய்து வைப்பது அவர் பழக்கம்!.”..

மீண்டும் கட்டிலில் படுத்திருந்தவரைப் பார்த்தார். இரண்டு வருடத்திற்கு முன்பு கட்டிய தன் வீட்டிற்கு இந்த தம்பி தான் எலக்ட்ரிக்கல்ஸ் வேலை செய்ததாக ஞாபகம்!

வேலை முடிந்த பிறகு தேவையற்ற எண்களை செல் போனிலிருந்து நீக்கத் தான், ‘டெலிட்’ என்ற வசதி அதில் இருக்கு! செல்போனில் குப்பை கூடை போல் எல்லா நெம்பர்களையும் சேமித்து வைப்பது கூட நல்லதல்ல என்று நம் மக்கள் என்று புரிந்து கொள்வார்களோ!

– பொதிகைச் சாரல் செப்டம்பர் 2015 இதழ்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *