கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 29, 2023
பார்வையிட்டோர்: 4,996 
 

(1985 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

டைரக்டரும், அன்று கால்ஷீட் கொடுத்திருந்த நடிக, நடிகையரும் ஒளிப்பதிவாளரும் மற்றும் இதர தொழில் நுட்பக்காரர் களும் ‘அம்மா’ ஒருவருக்காகக் காத்திருந்தார்கள். டைரக்டர் ஒன்றன் பின் ஒன்றாகச் சிகரெட்டைப் புகைத்து, அதை அழுத்தி அணைத் துத் தேய்த்துக் கொண்டிருந்தார். யாரோ ஒருவர் அவரை அணுகி ‘புரொடியூசர் லைன்லே இருக்கார்…’ என்றார்.

‘ச்சூ’ என்று எரிச்சலில், எழுந்து ஃபோனுக்குப் போனார். புரொடியூசர் மூன்றாவது தடவையாகப் ஃபோன் பண்ணுகிறார்.

‘சார்….

‘சாந்தா வந்துட்டாளா…’

‘அம்மா இன்னும் வரல்லே சார்… செட்ல எல்லாம் ரெடி. அம்மா வந்தவுடனே ஷூட் பண்ண ஆரம்பிச்சுடலாம்….’

‘நான் அப்பவே சொன்னேன். அந்தக் கழுதையைப் போட வேண்டாம்னு… கேட்டிங்களா. இப்ப மணி பதினொன்று… எப்ப அவ வர்றது…. எப்ப மேக்கப் போட்டு முடிக்கறது…. எப்ப ஷூட் பண்றது. சாயங்காலம் ஆறு அடிச்சா செட்டுக்கும் டெக்னீஷியன் களுக்கும் நான் மடியை அவிழ்த்தாகனும்… மார்வாடி என் பொண்டாட்டி ஒருத்தியைத்தான் எழுதிவாங்கிக்கலே….’

ஃபோன் வைக்கப்பட்ட சப்தத்தை உறுதிப்படுத்திக் கொண்டு, டைரக்டர் இடத்தை விட்டு நகர்ந்தார்.

ஒரு வழியாக மணி பனிரெண்டை நெருங்கும் போது, அந்நிய நாட்டு இறக்குமதியான வெகு நீளக் காரில் சாந்தா தேவி வந்து இறங்கினாள்.

காரிலிருந்து அவள் டச்சப் கேர்ள், அவள் அம்மா, ஹேர் டிரஸ்ஸர், ‘ஷூட்டிங் பார்க்கனும்டி என்று வந்த தோழிகள் இருவர் ஆகியோர் இறங்கி வந்தார்கள். டைரக்டரைப் பார்த்து,

‘சாரி சார்… கொஞ்சம் லேட்..’ என்றாள் சாந்தா.

‘”‘இட்ஸ் ஆல் ரைட்’ என்று பிரகாசமான முகத்தோடு சொன்ன டைரக்டர், சாந்தா தேவி மேக்கப் ரூமுக்குள் நுழைந்ததும் தன் வாட்சில் மணி பார்த்துக் கொண்டார். அடுத்த இரண்டாவது நிமிடத்தில் சாந்தாவின் டச்சப் கேர்ள். டைரக்டரின் பக்கத்தில் ஒட்டி நின்றிருந்த புரொடக்ஷன் மேனேஜரைப் பார்த்து, ‘அம்மாவுக்கு ஜூஸ் வேணுமா…’ என்றாள்.

‘ரெடியா இருக்கு… அம்மாவுக்கு எப்போ எது தேவைன்னு எனக்குத் தெரியாதா?’ என்று சொல்லிவிட்டு ‘மணி’ என்று உரக்கக் கூப்பிட்டார். மணி என்கிற அந்தப் பையன் ஒரு தட்டில் வைத்த ஜூஸ் கிளாசோடு எங்கிருந்தோ வெளிப்பட்டு மேக்கப் ரூமை நோக்கி நடந்தான்.

கன்னடத்துக் கட்டழகி, கைபடாத ரோஜா, ஆடல் அழகி, அபிநய தேவதை என்றெல்லாம் பத்திரிகைகளால் குறிப்பிடப் பட்டவள் சாந்தாதேவி. அன்பு ரசிகப் பெருமக்களால் ‘அண்ணி’ என்றும் அழைக்கப்பட்டாள். தமிழ், கன்னடம், தெலுங்கு என்று மும்மொழிகளிலும் பிரசித்தமான ஹீரோக்களோடு மட்டும் நடித்துக் கொண்டிருந்தவள் அவள். படம் எடுத்தால் சாந்தாவை வைத்துத் தான் எடுப்பது, அவள் கால்ஷீட் கிடைக்காத வரைக்கும் படம் எடுப்பதில்லை என்று இருந்தார்கள் தயாரிப்பாளர்கள். காலையில் சென்னை , மதியம் பெங்களூர், இரவு ஹைதராபாத் என்று பறந்து கொண்டிருந்தாள் சாந்தா. ‘கேரளம் நீங்கலாக தென்னிந்தியாவின் இருபத்தைந்து வயதுக்குட்பட்ட இளைஞர்கள் அத்தனை பேரும் இரவில்தாம் காணும் கனவுகளில் சாந்தாதேவியைத்தான் காணுகிறார்கள். அப்படிப்பட்ட கலையரசி சாந்தாதேவிக்கு ஏன் ‘கனவுக் கன்னி’ என்ற பட்டத்தை ரசிகர்கள் சார்பாக அளிக்கக் கூடாது’ என்று ஒரு சினிமாப் பத்திரிகையின் வாசகர் பகுதியில் ரவிச்சந்திரன் எம்.ஏ., பி.எல்., என்பவர் எழுதியிருந்தார். கடிதத்தைப் பிரசுரம் செய்ததோடு அதன் ஆசிரியர் திரைக்குருவி, ‘பேஷாகத் தரலாமே… நம் பத்திரிகையில் கனவுக் கன்னி சாந்தாதேவி என்றே வெளியிடப் போகிறோம்…’ என்று வேறு எழுதிவிட்டதால், அவளுக்கான பட்டங்களோடு கனவுக் கன்னியும் சேர்ந்துகொண்டது.

சாந்தாதேவி கட்டிலில் நீட்டிப் படுத்திருந்தாள். சற்றே உடல்நலக் குறைச்சல். குடும்ப டாக்டர் ஒரு தோல் பையோடும், கோட்டோடும் வந்து பரிசோதனை செய்து மருந்து எழுதிக் கொடுப்பதாகக் காட்சி, சூழ்நிலையைச் சொல்லிக் கொடுத்த டைரக்டர், ‘ஒத்திகை’ பார்க்கலாமா என்றார்.

டாக்டர் வேஷம் போட்டவன் கோபாலகிஷ்ணன். எம்.ஏ.வரை படித்தவன். நடிப்புக் கலையின் மேல் உள்ள ஆர்வம் காரணமாக லண்டனில் நடிப்புப் பயிற்சி பெற்றவன். உலகத்துச் சிறந்த நடிகர்களைப் பற்றிய விஷய ஞானம் உள்ளவன். தமிழ்ப்பட உலகம் அவ்வப்போது டாக்டர், ஒரு காட்சியில் வருகிற வக்கீல், காலேஜ் பிரின்சிபல், வீரசாகஸம் செய்த கதாநாயகப் போலீஸ் இன்ஸ்பெக்டருக்குப் பாராட்டுத் தெரிவித்துக் கைகுலுக்கும் போலீஸ் கமிஷனர் போன்ற வேஷங்களைக் கொடுத்து போஷித்து வந்தது. கோபால கிருஷ்ணன் காலை எட்டு மணிக்கெல்லாம் வந்து மேக்கப் போட்டுக் கொண்டிருந்தான். சாந்தாதேவி மேக்கப் ரூமிலிருந்து வெளிவந்த பின் அவசர அவசரமாக மீண்டும் டச்சப் செய்து கொண்டு செட்டிற்கு வந்தவன், படுத்திருந்த சாந்தா தேவியின் கட்டிலுக்கு அருகில் இருந்த மேசையின் மேல் தன் தோல் பையை வைத்தான். குடும்ப டாக்டர் என்பதால் ஏற்கனவே படுத்திருப்பவருக்கும் தனக்கும் தொடர்பு இருக்கிறது என்பதைச் சூசகமாக உணர்த்த ‘ஹலோ’ சொன்னான். கையை எடுத்து நாடி. பார்த்தான். கண் ஓரங்களைப் பிதுக்கிப் பார்த்தான். பிறகு தன் கழுத்திலிருந்த ஸ்டெதஸ்கோப்பைச் சாந்தாதேவியின் மார்பில் வைத்தான்.

படுத்திருந்த சாந்தா, கோபாலகிருஷ்ணனின் கையைத் தட்டி விட்டாள். டைரக்டரைப் பார்த்து, ‘என்ன டைரக்டர்…. இந்த ஆள் என் மேல தொடறான்…’ என்றாள்.

‘டாக்டர் தொடாமல் கண்ணாலேயே உடம்பைப் பரிசோதித்து மருந்து தருவது இயற்கையாக இருக்காதே’ என்பதாக டைரக்டர் சொன்னார்.

‘ஊஹூம்…. என்னை ஹீரோ மட்டும் தான் தொடலாம்…மத்தவங்க தொடக் கூடாது…’ என்றாள் சாந்தாதேவி, குழறிக் குழறித் தன் வடுகுத் தமிழில். சாந்தாதேவிக்குத் தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். ஆனாலும் அவள் பேச்சைத் தமிழர்கள் அங்கீகாரம் செய்துவிட்டார்களே.

கோபாலகிருஷ்ணன் அடிபட்டவனாகச் சிறுத்துப் போய் நின்றான்.

‘கொஞ்சம் பெரிய மனசு பண்ணனும்’ என்று கெஞ்சிக் கேட்டார் டைரக்டர்.

‘ஊகூம்…’ என்றாள் சாந்தாதேவி.

டைரக்டர் கோபாலகிருஷ்ணனிடம் சென்று என்னமோ சொன்னார். அவனும் தலையை ஆட்டினான். பிறகு சாந்தாவின் பக்கம் திரும்பி ‘ஓகே… மேடம்…. அப்படியே பண்ணிடுவோம்…’ என்றார்.

‘லைட்ஸ் ரெடி சார்’ என்றார். ‘ரெடி சார்’ என்றர் ஒளிப்பதிவாளர். ‘ஆர்ட்டிஸ்ட் ரெடியா’ ‘ரெடி சார்…’ என்றான் கோபாலகிருஷ்ணன்.

விளக்குகள் நெருப்பைக் கக்கிக்கொண்டு எரிய, ‘ஸ்டார்ட் கேமரா’ என்றார் டைரக்டர். கேமரா சின்னக் குரலில் உறுமியது. ‘ஆக்ஷன்’ என்றார்.

கோபாலகிருஷ்ணன் ஒரு டாக்டரின் தோரணையோடு டக்டக் கென ஷூக்கள் சப்திக்க நடந்து வந்தான். பையை வைத்தான். ‘ஹலோ’ என்றான். கையைப் பிடித்தான். நாடி பார்த்தான். பிறகு கண்ணைப் பிதுக்கினான். ஸ்டெதஸ்கோப்பை மார்பில் வைத்துக் கூர்ந்து கேட்டான். மணி பார்த்தான். பிறகு கோட் பாக்கெட்டி லிருந்து சின்ன நோட்புக்கை வெளியே எடுத்துக் கிறுக்கினான்.

‘ஒகே… கட்’ என்றார் டைரக்டர். கேமரா நின்றது. விளக்குக் கண்ணை மூடியது.

ஆவேசத்தோடு எழுந்தாள் சாந்தாதேவி…

சாந்தாதேவி உட்கார்ந்து கோலோச்சிய ஆசனத்தில் அவளை அறியாமலேயே சத்தமில்லாமல் ஒருநாள் மணிஸ்ரீ வந்து உட்கார்ந்து கொண்டாள். மணிஸ்ரீ நடித்த ஒரு படம் நூற்று ஐம்பது நாட்கள் தொடர்ந்து ஓடவே, அவள் மிகப் பிரபலமடைந்து விட்டாள்.

தெலுங்கு, கன்னடம் முதலான பல மொழிகளில் அவள் நடிப்பதாகத் தகவல் வந்தது. துரதிருஷ்டவசமாக சாந்தாதேவி கல்யாணம் பண்ணிக் கொண்டாள். இந்த நேரத்தில். அமெரிக்காவில் டாக்டராகப் பணிபுரியும் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டாள். ‘என்னால் முடிந்தவரை கலைத்தாய்க்குச் சேவை செய்வேன். இனி நல்ல குடும்பப் பெண்ணாகத் திகழ்வேன்…’ என்று அறிக்கைவிட்டிருந்தாள் சாந்தாதேவி.

இப்போதெல்லாம் இளைஞர்கள், மணிஸ்ரீ வருவதாக இருந்தால் தான் கனவே காண்கிறார்கள். தங்கள் முதல் குழந்தை பெண்ணாய்ப் பிறக்க வேண்டுமே, பிறந்தால் மணிஸ்ரீ என்று பெயர் வைக்கலாமே என்று இளம் பெண்கள், கல்யாணம் ஆன இளம் மாமிகள் எல்லோரும் கவலைப்பட்டார்கள். தமிழ்ப் பத்திரிகைகளின் அட்டை களை மணிஸ்ரீயே அலங்கரித்தாள். கலையரசி மணிஸ்ரீ நற்பணி மன்றங்கள் இல்லாத பேட்டைகளை, பேட்டைவாசிகளே வெறுத் தார்கள். மணிஸ்ரீ இரவும் பகலும் கலைத்தாய்க்குச் சேவை செய்து மூன்றே ஆண்டுகளில் ஐம்பது படங்களில் நடித்து முடித்தாள்.

இதற்கு இடையில், சாந்தாதேவி திடுமெனப் பத்திரிகை நிருபர்களை அழைத்து, ‘கலைத்தாய்க்குச் சேவை செய்யாமல் என்னால் சும்மா இருக்க முடியவில்லை. அத்தோடு அன்பு ரசிகப் பெருமக்களைப் பிரிந்து என்னால் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் வாழ முடியவில்லை. அதோடு தயாரிப்பாளர்கள் வேறு நீங்கள் நடிக்க வரவேண்டும் என்று அன்புத் தொல்லை கொடுக்கிறார்கள். ஆகவே மீண்டும் நடிப்பது என்று முடிவு செய்துவிட்டேன்-‘ என்று பேட்டி கொடுத்தாள். ஆனால் உண்மைச் செய்திகளைத் தோண்டி எடுத்துச் சமூகத்துக்குத் தருவதையே தன் உண்மை நோக்கமாகக் கொண்ட பத்திரிகை ஒன்று, சாந்தாதேவிக்கும் அவள் கணவருக்கும் ஏதோ ‘லடாய்’ என்றும், அவர்கள் ‘உறவு முறிந்தது’ என்றும் செய்தி வெளியிட்டிருந்தது.

அக்காவா அம்மாவா’ படத்தில் கதாநாயகியாக மணிஸ்ரீயும், மணிஸ்ரீக்கு அக்காவாகச் சாந்தாதேவியும் நடித்தார்கள். சாந்தாதேவி இரண்டே. காட்சிகளில் வந்து எலும்புருக்கி நோயால், லொக் லொக் என்று இறுமி செத்துப் போகிறாள்.

சாந்தாதேவி கட்டிலில் படுத்துக் கொண்டு பயங்கரமாக இருமி இரத்தவாந்தி எடுத்தாள். தனக்கு இறுதிக் கட்டம் வந்து விட்டதை உணர்ந்து, தன் தங்கையை அதாவது மணிஸ்ரீயை அருகில் அழைத்து அவள் கையை எடுத்து கோபாலகிருஷ்ணன் கையில் இணைத்தாள். அவள் உயிர் பிரிகிறது. அதே சமயம் டக்கென்று அகல் விளக்கு அணைகிறது.

ஒளிப்பதிவாளர் கேமராவை வேறு ஆங்கிளுக்கு மாற்றும் அந்த இடைவேளை நேரத்தில் கோபாலகிருஷ்ணனும் மணிஸ்ரீயும் எதிர் எதிரில், ஃபேனுக்குக் கீழே அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். இப்போதெல்லாம் கோபாலகிருஷ்ணன் டாக்டர், வக்கீல், பிரின்ஸ்பால், ஐ.ஜி.யோடு இரண்டாவது, மூன்றாவது கதாநாயகனாகவும் வந்து கொண்டிருந்தான்.

மூலையில் சாந்தாதேவி ஒரு ஸ்டீல் நாற்காலியில் தனியாக உட்கார்ந்து கொண்டிருந்தாள். தனியாகவே, ஓர் அம்பாசிடரில் வந்திருந்தாள். குறித்த நேரத்தில் சரியாக எட்டு மணிக்கே செட்டுக்கு வந்து விட்டிருந்தாள்.

ஒரு பையன் டிரேயில் இரண்டு கப்களில் பழச்சாறு கொண்டு வந்து கோபாலகிருஷ்ணனுக்கும், மணிஸ்ரீக்கும் கொடுத்தான். சற்று தூரத்தில் ஒதுங்கித் தனித்து உட்கார்ந்து கொண்டிருந்த சாந்தா தேவியைப் பார்த்தான் கோபாலகிருஷ்ணன். பையனைக் கூப்பிட்டான். ‘சாந்தாவுக்குக் குடிக்க ஏதாவது குடுப்பா-‘ என்றான். ‘கொண்டு வரேன் சார்….’ என்று போனான் பையன்.

அன்று மாலை ஆறு வரை ஷூட்டிங் இருந்தது. நாலு மணிக்கு நேர்ந்த ஓர் இடைவேளையின்போது, சாந்தாதேவி, அந்தப் பையன் தன் அருகே வந்தபோது, ‘தம்பி’ குடிக்கக் கொஞ்சம் தண்ணி தரியா…’ என்று கேட்டாள்.

‘வரேன்… வரேன்…’ என்று விட்டுப் போனவன் தான். வரவே இல்லை .

– 1985, பிரபஞ்சன் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *