நிர்வாக நிர்மலா 

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 5, 2024
பார்வையிட்டோர்: 199 
 
 

(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அப்போது மணி ஆறு! சாவி கொடுக்கப்பட்ட கடியாரம் சினப்பாளோ என்று நினைக்காமல், சேவலைப் போல் குரல் கொடுத்துத் தன் கடமையைச் செய்துவிட்டு அமைதியாக ‘டிக் டிக்’ என்ற ஒலியுடன் ஓடிக்கொண் டிருந்தது. அதற்குள் விடிந்துவிட்டதா என்று தனக்குத் தானே கேட்டுக்கொண்டு. “இன்று நான் எந்தச் சூழ்நிலை யிலும் கோபப்பட மாட்டேன்; எவரையும் புண்படுத்த மாட்டேன்; எக்காரணம் கொண்டும் யாரிடமும் சீறி விழ மாட்டேன்” என்ற பிரார்த்தனையோடு எழுந்தாள். ஆம்! நிர்வாகத்தில் பெரும் பொறுப்பு வகிக்கும் அவளைப் போன்றவர்கள் எடுத்துக் கொள்ளவேண்டிய உறுதிமொழி தான் அது. 

‘உண்மை கெமிக்கல் கம்பெனி”யின் நிர்வாக மேலாளராகப் பொறுப்பேற்ற நிர்மலா ஒரு ‘கெமிஸ்ட்ரி’ பட்டதாரி. ஆராய்ச்சியாளரும்கூட; இளம் வயதிலேயே டி.எஸ்சி. பட்டம் பெற்றவள். அவளுடைய அழகையும் அறிவையும் ஆற்றலையும் எண்ணித்தான் உரிமையாளர் உலகநாதன் அப்பதவியினை அவளுக்கு அளித்தார். ஐ.ஏ.எஸ்.ஐ பி எஸ்.. போன்ற தேர்வுகளில் வெற்றி பெற்றவர் என்பதை அறிந்து உரிமையாளரே தேடிச் சென்று நிர்மலாவைக் கண்டு அப்பதவியைத் தந்தார். இந்த முடிவினால் வரும் உட்பகையை, நிர்மலாவே எதிர்த்துப் போராடி வெல்லவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் அவர். நிர்மலா ஒரு புன்முறுவல் மட்டும் பூத்தாள், 

வீட்டில் நிர்மலா இருக்கும் தனியறையில் விசுவாமித்திர முனிவர் கைக்குழந்தையுடன் இருக்கும் மேனகையைப் பார்க்க மறுக்கும் காட்சி விளக்கப் படம் ஒன்றும் சாகுந்தல நாடகக் காட்சிப் படம் ஒன்றும் பாரதியார் படமும் மாட்டப்பட்டிருந்தன. இம் மூன்று படங்களும் அவள் வாழ்க்கையோடு தொடர்பு கொண்டவையே! 

பணிவோடு, பணிப்பெண் கொண்டுவந்த ‘காபி’யைப் பருகிக்கொண்டே பத்திரிகைகளைப் புரட்டிப் பார்த்தாள். தன்னைப்பற்றி அவதூறாக வந்திருந்த செய்திகளையெல்லாம் பார்த்துச் சிரித்துவிட்டுக் “கயமை யின் கற்பனை”யென்று தனக்குள் கூறிக் கொண்டபோது டெலிபோன் மணியடித்தது. ரிசீவரை எடுத்து அமைதி யாக “am Coir!” என்று கனிவாகப் பேசி, மேலும் “வேண்டாம் இன்ஸ்பெக்டர்! என் பெண்மையை எப்படி நான் கட்டிக் காக்கின்றேனோ, அதேபோல் பதவியையும் கம்பெனியின் மானத்தையும் காப்பேன்!” என்று சொல்லிப் போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் என்று பளிச்சென்று சொல்லிவிட்டாள். வெளியே சற்று நேரத்திற்கெல்லாம் “நிர்வாக நிர்மலா ஒழிக! ஆரவல்லி தர்பார் நடத்தும் ஆணவம் பிடித்த நிர்மலா ஒழிக! மோதாதே! மோதாதே! மோதினால் நீ தூளாவாய்!” போன்ற கோஷங்கள் எழுப்பிக் கொண்டு கம்பெனியின் பணியாட்கள் வீட்டு வாசலில் நின்றனர். ‘எலிப்பகை நாகம் உயிர்ப்பக்கெடும்’ என்னும் திருவள்ளுவர் வாக்கு அவளுக்கு அத்துப்படி. படித்தபோது பல்கலைக்கழகப் பேச்சாளர்’ ஆயிற்றே! தன் வீட்டுச் சுவருக்கு மேல் நின்றுகொண்டு பேசத் தொடங்கினாள். அழுகிய முட்டையொன்று மேலே விழுந்தது. சில கற்கள் வேறு எறியப்பட்டன. தான் சிலம்பாட்டத்தில் பெற்ற பயிற்சியால் அதனையெல்லாம் தடுத்தாள். எல்லோரையும் அமைதிப்படுத்திவிட்டுப் பேசினாள். “தோழர்களே! தோழியர்களே! நிர்வாக மேலாளர் அறை ஏர்கண்டிஷன் செய்யப்படவில்லை; பல லட்சக்கணக்கான மதிப்புள்ள எந்திரங்களின் பாதுகாப்புக்காகச் செய்யப்பட்ட அறையில் நான் இருக்கிறேன். ஐந்தாறு டெலிபோனின் நோக்கம் வியாபாரமும் பொதுத் தொடர்பும் தான்; நிர்மலா வேறு! நிர்வாக மேலாளர் வேறு! இதைப் புரிந்துகொள்ளுங்கள். இங்குக் குரலெழுப்பிய எல்லோருடைய பெயரும் பதிவேட்டில் இருக்கிறது. எல்லோருக்கும் பணிப் பாதுகாப்பு உத்தரவு போட்டாயிற்று; ஓவர்டைம் போனஸ் எல்லாம் தயார்! நான் வந்தவுடன் மேற்கொண்ட முதல் பணியாயிற்றே அது! உங்களில் ஒருத்தி நான்! என்று அர்த்தத்துடன் பேசினாள். கண்களில் நீர் துளித்தன. உடனே “எங்கம்மா நிர்மலா என்றென்றும் வாழம்மா!” என்று கூறிக் கொண்டே தொழிலாளிகள் கலைந்தனர். “ஒரு பெரிய கலவரத்தைச் சாமர்த்திய மாசுத் தவிர்த்து விட்டீர்கள்” என்று சொல்லிக் கொண்டே புறப்பட்டுப் போய்விட்டார் இன்ஸ்பெக்டர் இன்பவல்லி! 

வீட்டிற்குள் நுழைந்ததும் தன் அறையில் உள்ள பாரதியாரின் படத்தின் கீழே நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வணங்கினாள். “குழந்தாய் எழுந்திரு! என் கனவு நனவாயிற்று! நீ ஆற்ற வேண்டிய கடமை பல இருக்கிறது!” என்று பாரதி கூறியதுபோல் தோன்றிற்று. கண்ணீர் முத்துக்களைக் காந்தள் விரல்களால் துடைத்துக் கொண்டு காலை டிபன் சாப்பிட்டுவிட்டு காலை 9-15 மணிக்கு அலுவலகம் சென்றாள். உலக நடப்புக் காட்சி யினை அகக்கண்,புறக்கண் இரண்டையும் திறந்துகொண்டு பலவகை உணர்வுகளுக்கும் தன்னைப் பாத்திரமாக்கிக் கொண்டு எவ்வித ஆரவாரமுமில்லாமல் தன் இருப்பிடத் திற்குச் சென்றமர்ந்தாள். மணி காலை 10-15 ஆயிற்று. ஆபோகிராகக் கீர்த்தனையை முணுமுணுத்துக் கொண்டு உதவி மேலாளர் மேகநாதன் தன் சீட்’டிற்குப் போய்க் கொண்டிருந்தார். அந்தக் கம்பெனி முதலாளியின் மாப்பிள்ளை என்ற மிடுக்கும் இருந்தது. “மிஸ்டர் மேகநாதன்!” என்றாள் நிர்மலா. “யெஸ்! இதோ கையெழுத்துப் போட்டு வருகிறேன்!” என்றார் மேகநாதன். “அது விஷயமாகத்தான்!” என்று அழைத்து ‘அரை நாள் கேஷுவல் லீவு கொடுத்து விடுங்கள்! மற்றவர்களைக் கண்காணிக்கும் நீங்களே தாமதமாக வந்தால் எப்படி?” என்று கன்னத்தில் அறைந்தாற்போல் சொல்லிவிட்டாள். “இது என் கம்பெனி! நான் எப்படி வேண்டுமானாலும் இருப்பேன். இங்கு என் ஒவ்வொரு வார்த்தையும் சட்டம். வீணாகத் தலைக்குக் கொள்ளி விலைக்கு வாங்காதே” என்று சீறினார் மேகநாதன். “அது உங்கள் வீட்டில்! நீங்கள் நிர்வாக மேலாளரின் கோவார்டினேட்! அவரை மீறிப் பேசிய தற் காக உங்களைத் தற்காலிக வேலை நீக்கம் செய்துள்ளேன். ஐ யாம் கர்ட்டியஸ்; பட் அட் தி சேம் டைம் ஃபேர்ம் (I am courteous but at the same time firm) என்று சொல்லி விட்டுத் தன் வேலைகளைப் பார்க்கத் தொடங்கினாள். 

‘எக்ஸ்ப்ளோசிவ்ஸ் எலக்ட்ரிக் கெமிஸ்ட்! ஒருவர் ஒரு அப்ளிகேஷன் எழுதிக்கொண்டு அதை ஃபார்வட்” (forward) செய்யும்படியாக மிடுக்குடன் கேட்டார். தன்னை விட்டால் அந்த ‘செக்ஷன்’ பார்க்க ஆள் இல்லை என்ற இறுமாப்பு, அவரிடம் இருந்தது. “அப்ளிகேஷன் ஃபார்வர்டு செய்யப்பட்டது. ஆனால் ‘எக்ஸ்ப்ளோசிவ் செக்ஷனில்’ பணிபுரியும் இவருக்குச் சிந்தனை வேறிடத் தில் செல்லுமாதலால் அவர் உடன் பணிநீக்கம் செய்யப் படுகிறார். அவருக்கு அவ்வேலை வேறு கம்பெனி யில் கிடைக்கும் ஓராண்டுவரை முழுச் சம்பளமும் அளிக்கப்படுகிறது” என்று எழுதிவிட்டு எந்த ஒரு தனிப்பட்ட நபரும் நிர்வாகத்தில் இன்றியமையாதவர் இல்லை!” என்று பொறி தட்டியதைப் போல் கூறி அனுபவம் மிக்க ‘அசிஸ்டெண்ட்’ அறிவுடை நம்பியை வேலைக்கமர்த்தினாள். 

தாங்கள் அதிகாரம் செய்வதற்கும் ஆணையிடுவதற்குமே உரியவர்கள் என்றும், தங்கள் வேலைகளையே மற்றவர்களை விட்டுச் செய்யச் சொல்லும் ஒட்டுண்ணி அலுவலர்கள் தவறு செய்தால் தண்டனை கொடுக்கத் தயங்கியதில்லை; நிர்வாகத்தின் தலைவி எல்லோருக்கும் நல்லவளாக இருக்க முடியாது; இருக்கக்கூடாது என்பதை நடைமுறையில் கடைப்பிடித்தாள் நிர்மலா. 

கூடியவரையில் தன் அறையில் தானே தனித்திருப்பாள்  அவள். ஒருசில வார்த்தைகள் தான் பேசுவாள். ‘டிஸ்கஷன். டிஸ்கஷன்’ என்று சொல்லிப் பல அலுவலர்களை அழைத்து அரட்டையடிக்க மாட்டாள். நின்று கொண்டே பேசுபவர்கள். சும்மா பார்க்கவந்தேன் என்பவர்கள், அடிக்கடி அலுத்துக் கொள்பவர்களையெல்லாம் விரட்டியடித்து விடுவாள். 

இருபதாம் நூற்றாண்டின் விசுவாமித்திரன் ஒருவனின் உடற்பசிக்கு இரையான நாட்டியப் பெண்மணியின் மகளான நிர்மலா ஆணினத்தைப் பழி வாங்க மட்டும் நினைக்கவில்லை. சோடியமும் குளோரி னும் சேரும்போது உண்டாகும் சோடியம் குளோரைடுக்கு சோடியத்தின் குணமும் கிடையாது; குளோரினின் குணமும் கிடையாது. அதுபோல இரண்டு உயிர்களின் சங்கமத்தில் மூன்றாவது உயிர் தோன்றும்போது அதற்கு முன்னைய உயிர்களின் குணம் வாய்க்காது என்பதற் காகவே அவருக்கு டி. எஸ்சி, (D.Sc.,) பட்டம் வழங்கப் பட்டது. நீண்ட நாட்களுக்குப் பின் அந்த விஸ்வா மித்திரன் தன் கம்பெனியின் முதலாளி என்பதை மட்டும் அறிகிறாள். ஏனென்றால் உண்மையென்ற ஊற்றுநீர் ஊசிக் கண் போன்ற இடைவெளிகளின் வழியாகவும் கசியத்தானே செய்யும்! ஆனால் அவள் சொல்லவில்லை. 

ஆராய்ச்சியின்போது காதலன் என்ற போர்வையில் ஒரு காமுகன் வந்தான். தன்னிடமிருந்து செய்திகளைச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டினானேயன்றி தூய்மையான காதல் அவனிடம் இல்லை. அதனையும் ஒப்புக் கொண்டான் தான் நடந்துகொண்ட முறைக்காக வருந்தினான். வாழ்க்கையின் குறுக்குச் சாலைகளை உணர்ந்தவன் பல படிகள் ஏறி உயர்ந்துவிட்டான். நிர்மலாவிற்குமுன் அவன் ஓர் ஊர்க்குருவியே! எனவே தான் தற்கால துஷ்யந்தனைப் போல மறந்தவன் போல் நடித்து எங்கோ வாழ்கிறான். அவனுக்கே தன்னை யளித்து விட்ட நிர்மலாவால் வேறு ஒருவரை நினைக்கக் கூட முடியவில்லை. வெறுப்பு ஏற்பட்டு என்றோ தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் அவள். பாரதியின் பாடல்களைப் படித்து மனவலிமை பெற்றுப் புதுமைப் பெண்ணாய்ப் பொலிவோடு காட்சியளிக் கின்றாள். சமுதாயத்திற்கு அவள் ஒரு பச்சை விளக்கு. சிறுமை கண்டு பொங்கும் அந்த நிர்வாக நிர்மலா ஒரு நிஜம். பல நிழல்கள் அவளிடம் நெருங்க முடிய வில்லை. ஏனெனில் அவள் ஒரு மஞ்சள்பாஸ்பரம். கடவுள் நிர்வாகத்தின் கருத்துள்ள அறிவு ஜீவி நிர்மலா என்பதை மறுக்கமுடியாது. அவளுக்கு என்றுமே ஏறாற்றம் இல்லை; எதிர்பார்ப்புகள் இல்லாததால்! 

– அலை தந்த ஆறுதல், முதற் பதிப்பு: டிசம்பர் 1991, பாரி நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *