நியாயங்கள் மறைந்து போகிறது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 19, 2024
பார்வையிட்டோர்: 934 
 
 

நீங்க அவங்களுக்கு என்னவாகனும்?

கேள்வி கேட்ட அந்த பெண்ணிடம் சட்டென்று சொல்ல தெரியாமல் விழித்தான் வீர சேகர்.

அவங்க என்னோட பிரண்ட்?

அப்ப அவங்க உங்க ஒய்ப் இல்லையா?

இந்த கேள்வி அவனை அச்சுறுத்துவதாக இருந்தது. மெல்ல தலையாட்டலில் மறுப்பை தெரிவித்தான்.

சாரி..உங்களை சங்கடப்படுத்திட்டேன், இந்தாங்க விபூதி இங்கிருக்கற பிள்ளையார் கோயில்ல அர்ச்சனை பண்ணினேன், இதை அவங்க நெற்றியில பூசிடுங்க..

கொடுத்த அந்த பெண் யாரென்று இவனுக்கு தெரியாது, பாவம் அவள் கணவனோ, குழந்தையோ இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கலாம், இவன் இந்த பெண்ணை கொண்டு வந்து சேர்த்ததை பார்த்திருக்கலாம், மனிதர்களுக்கு இடையில் ஏற்படும் அன்பே இந்த மாதிரி மருத்துவமனைகளிலும், இரயில் பயணங்களிலும்தான் வெளிப்படுகிறது

அந்த பெண் திருநீறை பூசிக்கொள்வாளா என்றே தெரியாது. சொல்லி விடலாமா என்று நினைத்தவன் வேண்டாம் வீண் கேள்விகள் எழும். சரி என்று வாங்கிக் கொண்டவன் ஐ.சி யூ வில் படுத்திருந்த அந்த பெண்ணை பார்க்க போகும்போது நெற்றியில் பூசி விடலாம் என்று நினைத்துக்கொண்டான்.

இந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்து இரண்டு நாள் ஆகி விட்டது, டாக்டர்கள் நாளை வரை காத்திருக்கலாம் என்று சொல்லி விட்டார்கள். கொண்டு வந்து சேர்த்தோமா? சென்றோமா என்றில்லாமல் எதற்காக இந்த வம்பில் வந்து மாட்டிக்கொண்டோம். ஒரு நிமிடம் வந்த எண்ணத்தை சட்டென்று உதறி சே..நான் மனிதன்தானே, இப்படி நினைக்கலாமா?

நல்ல வேளை இது அரசு பொது மருத்துவமனையாக இருப்பதால், மருத்துவ மனையில் சேர்த்த போது இருந்த கெடுபிடிகள் இப்பொழுது இல்லை. கையில் இருந்த பணம், இங்குள்ளவர்களுக்கு அவ்வப்பொழுது பிரித்து கொடுத்தே கரைந்து விட்டது.

அப்பா அனுப்பிய பணம். அனுப்பி விட்டு சொன்னது இவனுக்கு ஞாபகம் வந்த்து. தம்பி ரொம்ப சிரமப்பட்டுத்தான் இந்த பணத்தை அனுப்ப முடிஞ்சது. வெள்ளாமை இல்லை, பக்கத்து தோட்டத்துக்கு கூலி வேலைக்குத்தான் நானும் உங்கம்மாளும் போயிகிட்டிருக்கோம். உனக்கு இதுதான் கடைசி வருசம், சூதானமா செலவு பண்ணு. நல்லபடியா படிச்சு வரணும்னு ஆண்டவனை வேண்டிக்கிறோம் நானும் உங்கம்மாவும்.

ஆனால் அந்த பணம் ஒரு உயிரை காப்பாற்ற இப்படி செலவாகிக் கொண்டிருக்கிறது.

இந்த பெண் யார்? எதற்காக இவ்வளவு சிரம்ம் எடுத்து கொள்கிறோம் என்று புரியாமல் தன்னையே கேள்வி கேட்டு கொண்டான்..

அன்று தங்கியிருந்த அறையை விட்டு வெளியே வந்தவன், அந்த இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலை வழியாக நடந்து செல்வானேன்? வழியில ரோட்டோரமாய் இந்த பெண் குற்றுயிரும் குலையுயிருமாய் கிடந்ததை கண்டு பத்து நிமிடம் கை காட்டி எந்த வாகனமும் நிறுத்தாமல் ஒரு வேன் ஓட்டுநர் பரிதாபப்பட்டு நிறுத்த அந்த பெண்ணை ஏற்றி இந்த மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்ப்பதற்குள்…

எல்லாம் முடிந்து சேர்த்து விட்டு அந்த ஓட்டுநர் என்ன சொன்னார்? தம்பி நீ யாருன்னே எனக்கு தெரியாது, அதே போல அந்த பொண்ணும் யாருன்னு தெரியாது, ஏதோ மனிதாபிமானத்துல உனக்கு உதவி செஞ்சிருக்கேன், தயவு செய்து போலீஸ் கேஸ் அது இதுன்னு என்னை மாட்டி விடாதே, சொல்லி விட்டுத்தான் விடை பெற்றார்.

இரண்டு நாட்கள் ஆயிற்று, அறைக்கு ஒரு முறை போய் கதவுகளை சாத்தி விட்டு கல்லூரிக்கு விடுமுறை சொல்லி விட்டு வந்ததோடு சரி. பார்ப்போம், அந்த பெண் கண்ணை விழித்து விட்டால் போதும், மேற்கொண்டு விவரங்களை கேட்டு அவர்களிடம் ஒப்படைத்து விடலாம், யாரோ தோளை தொடும் உணர்வு வர சட்டென விழித்தான்.

ஐ.சி.யூ எங்கிருக்கு? போலீஸ் உடையணிந்து அதிகாரி போன்ற தோற்றமுடைய ஒருவர் பதிலை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தார். அவன் எழுந்து கை காட்டி மேலே சென்று வலது புறம் திரும்ப சொன்னான்.

நன்றி கூட சொல்லாமல் விறு விறுவென ஏறி சென்றார், அந்த போலீஸ் அதிகாரி..

இவனுக்கு சட்டென ஒரு சந்தேகம் வர மெல்ல எழுந்து அவரை பின் தொடர்ந்தான். படியேறி சென்றவர் சற்று தள்ளி அவர் ஐ.சியூ காவல் நிற்பவரிடம் ஏதோ விசாரிப்பதும், அவர் கைகளை ஆட்டி சொல்லி கொண்டிருப்பது தெரிந்தது. இப்பொழுது போக வேண்டாம், காத்திருப்போம், முடிவு செய்து வலது புறம் திரும்பாமல் இடது புறம் திரும்பி சற்று தூரம் நடந்து அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்து அவர் நடவடிக்கைகளை கவனித்து கொண்டிருந்தான்.

பதினைந்து நிமிடங்கள் பேசி முடித்து விட்டு காவல் அதிகாரி கிளம்பி அதே படி வழியாக கீழே செல்வதை பார்த்து கொண்டிருந்து விட்டு மெல்ல ஐ.சி.யூ வை நோக்கி வந்தான்.

இவனை கண்டதும் அந்த காவல்காரர் வேகமாக இவன் அருகில் வந்து தம்பி ஒரு போலீஸ்காரர் இப்பத்தான் நீ கூட்டிட்டு வந்த பொண்ணை பத்தி விசாரிச்சுட்டு போறாரு.

நான் இந்த மாதிரி இரண்டு நாளைக்கு முன்னாடி யாரோ ஒரு பையன் கொண்டு வந்து சேர்த்துட்டு போனான், அப்படீன்னு சொன்னேன். யாரு? பையன் எப்படியிருப்பான் அப்படீன்னு கேட்டுட்டு போனாரு.

அந்த பொண்ணு யாரு எவருன்னு சொன்னாறேண்ணே? ம்..சொன்னாரு ஒரு மாதிரியா சொன்னாரு, தம்பி நீ யாருன்னே தெரியாம கொண்டு வந்து சேர்த்தேன்னு சொன்னே. ஆனா இந்த பொண்ணை பத்தி நாம கேள்விப்பட்டதை பார்த்தா பொண்ணு பெரிய இடமாய் இருக்கும்போல, படிச்சிகிட்டு இருக்கற பொண்ணு, ஏதோ கசமுசவாம், அதனால வீட்டுல பிரச்னை, நான் அந்த பையன் கூடவே போயிடறேன்னு சொல்லிட்டு அந்த இராத்திரியில சண்டை போட்டுட்டு கிளம்பி வந்திருக்காம், அந்த போலீஸ்காரரு அவங்க பேரண்ட்சை கூட்டிட்டு வர்ரேன்னு போயிருக்காரு.

அவன் யோசனையாய் அவர் முகத்தை பார்த்தான். இப்ப நான் என்ன பண்ணறது?

தம்பி நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே, நீ படிக்கிற பையன்னு சொல்லியிருக்கே. அந்த பெண்ணை நீ கூட்டிட்டு வந்தியா?

ஐயோ எண்ணன்னே இப்படி கேட்கறீங்க, எனக்கு இந்த பொண்ணு யாருன்னே தெரியாதுன்னு உங்க கிட்டே இங்க கொண்டு வரும்போதே சொன்னேனே, அப்ப நீங்க என்னை நம்பலே? இல்லையா? அவரை உற்று பார்த்தான்.

தம்பி இங்க யாரு உண்மை சொல்றாங்க, யாரு பொய் சொல்றாங்கன்னு தெரியாது, அதை கேட்கறதும் எங்க வேலையில்லை. உன் கிட்டே காசு கேட்டேன், அது நிஜம், சங்கடப்படாம கொடுத்தே. இப்ப நான் சொல்றதை கேட்கறது கேட்காதது உங்க விஷயம், நீங்க சத்தமில்லாம விலகிக்குங்க, அந்த பொண்ணு யாருன்னு தெரிஞ்சு போச்சு, இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்க எல்லாம் வந்துடுவாங்க, நீங்கதான் காப்பாத்தி கொண்டு வந்தீங்கன்னு சொன்னீங்கன்னா, அவங்க நம்புவாங்களா இல்லையான்னு எனக்கு தெரியாது, அதை நிருபிக்கறதுக்கு நீங்க நாயா அலையணும். அதுவும் போலீஸ்காரங்களை பத்தி உங்களுக்கு தெரியும். அவர் சொல்ல சொல்ல இவனுக்கு அதன் உண்மைகள் கண்ணுக்கு தெரிய….

திடு திடுவென ஒரு கூட்டம், பார்த்தவுடனே தெரிந்து கொள்ளக்கூடிய பணக்கார தோற்றங்கள், உடன் நான்கைந்து போலீஸ் வர அவர்கள் அந்த காவல்காரரை சுற்றிக்கொள்ள இவன் மெல்ல நகர்ந்து அந்த இடத்தை விட்டு விலகி நடந்தான்.

காவல்காரர் சொல்லிக்கொண்டிருந்தார். எனக்கு இந்த பொண்ணை கொண்டு வந்து சேர்த்து விட்ட பையன் யாருன்னு தெரியாது, இரண்டு நாளா உங்க பொண்ணு உள்ளே கிடக்கு, இப்ப டாக்டரு வருவாரு, கேட்டுக்குங்க..

அப்பா அனுப்பிய பணம் செலவாகிவிட்டதால் அடுத்த மாசம் வரை எப்படி சமாளிக்க போகிறோம் என்ற கவலையில் வீரசேகர் நடந்து கொண்டிருந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *