நிசமும் நினைப்பும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கலைமகள்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 2, 2024
பார்வையிட்டோர்: 1,461 
 
 

“அடேடே! வி.பி.யா? வாருங்க; ஏது இந்தப் பக்கம் வந்து வெகு நாளாச்சே!” என உத்ஸாகத்துடன் வரவேற்றார் என்.பி.ராமலிங்கம்.

மூன்று நாள் தாடியைப் புறங்கையினால் பலமாகத் தேய்த்துப் பிறகு சிக்கிப் பின்னிப் பறந்து கொண்டிருந்த சிகையைக் கோதி விட்டுவிட்டு உள்ளே நுழைந்தார் வி.பி. அரைமணி நேரத்துக்கு மேல் உட்காரக் கூடாது. அவனிடம் இருக்கிறதை வாங்கிக்கொண்டு கடைசிப் பஸ் புறப்படுமுன் புறப்பட்டுவிட வேண்டும் என்ற வைராக்கியத்துடன், மனசு தனது நாட்டத்தின் பலன் காயா பழமா என்பது பற்றி அலமந்தது. சற்று அழுக்குப் பிடித்த நீண்ட கதர் ஜிப்பா, கரையோரத்தில் கால்பட்டுக் கிழிந்த வேஷ்டி, கீழே விழுவோமா வேண்டாமா எனத் தோளில் தொத்திக் கொண்டு தொங்கும் கதர் மேல்வேஷ்டி, அவருக்குத் தேசபக்தர் என விலாசம் ஒட்டின. குதிகாலடியில் அர்த்தசந்திர வட்டமாகத் தேய்ந்து போயும் விடாப் பிடியாகச் சேவை வைராக்கியத்துடன் மிளிரும் மிதியடியைத் தலைவாசலில் நிறுத்திவிட்டு, “என்ன ராமலிங்கம், எல்.எஸ்.பி. எங்கே?” என்று கேட்டுவிட்டு, சுற்றுமுற்றும் பார்த்தபடி கதவோரத்தில் இருந்த பெஞ்சின்மேல் உட்கார்ந்தார். “எல்.எஸ்.பி. பிரஸ்ஸுக்குப் போயிருக்கான். சித்தக் கழிச்சு வந்துடுவான்” என்றார் ராமலிங்கம். பிறகு சற்றுக் கழித்து “என்ன விசேஷம்” என்றார்.

“விசேஷம் ஒன்னுமில்லெ; ஒரு அஞ்சு ரூபா பணம் இருந்தாத் தேவலை” என முழங்காலைத் தேய்த்தார் ஸ்ரீமான் வி.பி.

“ஏது, ரொம்ப அவசரமோ?” என்று சற்று நிதானித்தார் ராமலிங்கம்; பிறகு விவகாரத்தை விளக்குகிறவர் மாதிரி, “இன்னிக்கு மணியார்டர் எதுவுமே வறல்லே; ஸ்டார் புக் ஸ்டால்காரப்பயல் அடுத்த வாரம் வாடான்னுட்டான். அதிருக்கட்டும்; நீ போன மாசம் எழுதினியே, அந்தக் கதை, அதைப் பத்தி புரொபஸர் சிதம்பரலிங்கம் என்ன சொன்னார் தெரியுமா? லோகத்திலேயே அந்த மாதிரிக் கதை என்று பொறுக்கி எடுத்தால் பத்துக் கூடத் தேறாதாம்; அவ்வளவு உயர்வாம்; தமிழுக்கு யோகம்னு தலைகால் தெரியாம கூத்தாடினார்.” ராமலிங்கம் சற்று நிதானித்து வி.பி. முகத்தைப் பார்த்தார்.

“அந்தச் சிதம்பரலிங்கம், அதான் இங்கிலீஷ் புரொபெஸர், அவன் தானே? அவன் மகா கண்டுட்டானாக்கும்! எல்லாரைப் பத்தியும் அவன் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருப்பான். நீ அவனிடம் முகவுரை கேட்டுக் காவடி எடுத்தியா? எவண்டா வர்ரான்னு கொக்கு மாதிரி உக்கார்ந்திருக்கிற கிழட்டுப் பொணத்துக்கு மின்னாலே நின்னு காக்கா புடிச்சா இது மட்டுமா சொல்லுவான்? இன்னும் சொல்லுவான். அவனுக்குத் தமிழைப் பத்தி என்ன தெரியும்? இங்கிலீஷைப் பத்தித்தான் என்ன தெரியும்? அவனுடைய இங்கிலீஷ் இலக்கியம் போன தலைமுறை இங்கிலீஷ்காரர்களுடன் போச்சே; பாட புஸ்தக வாத்தியாருக்கு…”

“ஏன் ஸார் வி.பி. அவரை ஏன் இப்படித் திட்டுகிறீர்? அவர் உம்மைப் புகழத்தானே செய்தாராம்?”

“என்னைப் புகழ அவன் யார்? அவனுடைய வறட்டு இங்கிலீஷும், விதரணை இல்லாத தமிழும்…”

“அதிருக்கட்டும் வருணேந்திரன் இந்த மாதம் விலாசினி பத்திரிகையிலே புதுத் தோரணையிலே…”

“புதுத் தோரணையிலே சரசுவதிக்கும் குடம் உடைச்சான்; என்னமோ தத்துப்பித்துன்னு…”

“சரி விடுங்கோ, உங்களுக்கு ஒத்தரையுமே புடிக்காது… ஸார், உங்களையாவது உங்களுக்குப் பிடிக்குமோ” என்று சற்று எகத்தாளமாகக் கேட்டார் ராமலிங்கம்.

“என்னை எனக்குப் பிடிக்கிறதோ பிடிக்கலியோ அதெல்லாம் உமக்கென்ன? அஞ்சு ரூபாய்க்கு விதியெக் காணோம்; உமக்கு ஆராய்ச்சி, பிரசங்கம், நையாண்டி வேறு ஒரு கேடா…” என்று உறுமினார் வி.பி.

“மிஸ்டர் வி.பி., நீங்க போயிட்டு நாளைக்குக் காலையிலே வாருங்க. எல்.எஸ்.பி. இருப்பார்; வந்து அவரோடே பேசிக்கிங்கோ; சரி, நாழியாறது…” என்று எழுந்திருந்தார் ராமலிங்கம்.

அந்தச் சமயம் பார்த்து எல்.எஸ்.பி. ஒரு கனைப்புக் கனைத்துக் கொண்டு, செருப்பை நடைவாசலில் போட்டபடி, “ஏது, உள்ளே பி.பி.யா?” என்று குரல் கொடுத்தபடி உள்ளே நுழைந்தார்.

வி.பி.யும் ராமலிங்கமும் முகத்தில் ஈயாடாதபடி நின்றிருந்ததைக் கண்டதும், நிலைமையை ஊகித்துக் கொண்டு, “ஸார் வி.பி. உங்களை சந்திக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறவர் ஒருத்தர் வந்திருக்கார்; நீங்களே இங்கே வந்துவிட்டீர்கள்; தெய்வ சங்கல்பம்னா இதுதான்; அவர் யார் தெரியுமோ, பெரிய புரொபெஸர், பழுத்த பண்டிதர், அபார ரஸிகர். சிதம்பரலிங்கம்” என்று சொல்லிக் கொண்டே அடுக்கினார்.

“புரொபெஸர்வாள் இப்படிக் கொஞ்சம் வரணும்; இவாள்தான் இன்னித் தேதிக்குத் தமிழிலே கதை எழுதறத்துக்குண்ணே பொறந்திருக்கறவர். வி.பி.ன்னு நாங்கள் கூப்பிடுவோம். பெயர் விக்கிரமசிங்கபுரம் பலவேசம் பிள்ளை” என ஓர் ஆவர்த்தி வாசித்து நிறுத்தினார் எல்.எஸ்.பி.

புரொபெஸர் சிதம்பரலிங்கம் உள்ளே வந்தார். தலையிலே பனிக்குல்லா, உடம்பிலே பிளானல் ஷர்ட்டும் கம்பளிப் போர்வையும், கண்ணில் தங்க விளிம்புக் கண்ணாடி, இடுப்பில் மல்வேட்டி.

“இவாள்தான் விக்கிரமசிங்கபுரம் பலவேசம் பிள்ளையோ? பலே பேர்வழி ஐயா – என்னை அப்பிடியே பிரமிச்சு உக்காரும்படி பண்ணிவிட்டீரே; திருநெல்வேலிச் சைவமோ!” என்றார்.

“இல்லை, செட்டியப் பிள்ளைமார்” என்று சுருக்கமாகச் சொல்லி நிறுத்திக் கொண்டார் வி.பி.

“ராமலிங்கம், நம்ம ராம விலாஸ்லெ போய் நாலு கப் காப்பி ஸ்டிராங்கா எடுத்தாறாச் சொல்லேன்; வி.பி., டிபன் எதுவும் கொண்டாரச் சொல்லட்டா? முகம் சோர்வாக இருக்கே. ராமலிங்கம், முறுகலா இரண்டு ஊத்தப்பமும் போட்டுக் கொண்டு வரச் சொல்லு; வெத்திலை பாக்குப் புகையிலையை மறந்துடாதே; வி.பி. இருக்கும்போது மறக்கலாமா?…”

“பத்மநாப ஐயர்வாள், எனக்கு இந்த வயசிலே, இந்த ராத்திரியிலே காபி சாப்டாத் தூக்கம் வருமா? ஒன்னும் வாண்டாம்னா.”

“அப்போ ஓவல்டின் கொண்டுவரச் சொல்லுகிறேனே… ஏதாவது கொஞ்சம் சிரமபரிகாரமா” என்று சொல்லிக்கொண்டே மேஜையைத் துழாவினார் எல்.எஸ்.பி. “இதுதான் இவருடைய புஸ்தகத்தின் கடைசி பாரம். இதிலேதான் நான் சொன்னேனே, அந்தக் கதை வந்திருக்கு; இந்த மனுஷனுக்குக் கற்பனை எங்கிருந்து தான் வருதோ; நானும் எத்தனையோ பேரைப் பார்த்திருக்கேன்; முகத்து முன்னாலே வச்சுச் சொல்லப்படாது; குணமும் அப்படித்தான்னா” என்று மேலும் தொடர்ந்து நாமாவளி நடத்தினார்.

சிதம்பரலிங்கம் சாவதானமாக நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு, “ஏன் நிக்கறேள்? உட்காருங்கோ” என்று கையமர்த்திவிட்டு, “நானும் உங்களை வி.பி.ன்னே கூப்பிடப் போறேன்” என்று அபூர்வ ஹாஸ்யம் பிடித்தது போல சிரித்தார்.

எதிரில் இருந்த இருவரும் ஒத்துச் சிரித்தனர்.

“மிஸ்டர் வி.பி., நான் சொல்லுகிறேனேன்னு வருத்தப்படப்படாது; உங்களுடைய கற்பனை ரொம்ப ரா (raw : சாணை பிடிக்காதது), ரொம்ப ஒயில்ட் (wild : வளமுறை மீறிய அபூர்வ கற்பனைகளை ருசிபேதத்தைப் பாராட்டாமல் பிரயோகிப்பது). நம்ம ஜனங்கள் ரசிக்கிறதுக்குச் சித்தெ நாள் பிடிக்கும்…”

“என்னைப் படித்து ரசிக்கிறவாள் இங்கிலீஷ் ஞானம் அவ்வளவு இல்லாத நம்ம ஜனங்கள்தான்” என்றார் வி.பி.

“நீங்கள் சொல்றது வாஸ்தவம்தான். நம்ம ஜனங்கள்னு நான் சொல்லவறப்போ, இங்கிலீஷ் படித்த நம்ப ஜனங்களைத்தான் சொன்னேன். அவாள் ரஸித்தால்தான் உங்களுக்குப் பேர் வரும். அதற்கு நான் ஒரு வழி சொல்றேன்; உங்கள் கதைகளை இங்கிலீஷில் நான் மொழிபெயர்த்துச் சீமைக் கம்பெனியில் பிரசுரிக்கிறேன்; அப்புறம் உங்களுக்கு உலகப் புகழ் வராத போனா…”

விவகாரம் தம் கையைவிட்டுத் தாண்டிவிடுமோ என்று பயந்த எல்.எஸ்.பி., “நான் இன்னொன்னு உனக்குச் சொல்ல மறந்து போச்சே… இதோ காப்பி வந்துட்டுது, முதல்லெ சாப்பிடு” என்று ஸர்வரிடம் இருந்த ஓவல்டினை வாங்கி மரியாதையாக ஆற்றிப் புரொபெஸரிடம் கொடுத்துவிட்டு, “கிட்டு, நம்ப ஸாரிடம் முதல்லெ ஊத்தப்பத்தை எடுத்து வையடா; என்ன, முறுகலாக் கொண்டாந்தியா? காபியெ அப்படியே ஆத்தாமே பெஞ்சிலே வய்யி. எங்கே ராமலிங்கம், இப்படி வெத்திலையெ எடுத்தா” என்றார் எல்.எஸ்.பி.

“சீமையிலா! என் புஸ்தகமா?” என்ற பெருமிதத்தில் எதிரில் இருந்த கண்ணாடி அலமாரியில் தோன்றிய மங்கிய பிம்பத்தைப் பார்த்துத் தலையைக் கோதிவிட்டுக் கொண்ட வி.பி.க்கு ஊத்தப்பத்தில் விசேஷ ருசி தென்பட்டது. புரொபெஸரது மேதையும் ஊத்தப்ப ருசியும் தம்முள் எது பெரியது என்பதற்காக அவரது மன அரங்கில் போட்டியிட்டன.

“நம்ம புரொபெஸர் தமிழிலே லிட்ரரி கிரிட்டிஸிஸம்னா என்னான்னு ஒரு புஸ்தகம் எழுதப் போறார்; அதுவும் நம்ம கம்பெனிக்கு எழுதப் போறார்; அதிலே தமிழ்ப் புது இலக்கியம் என்பது பற்றி ஒரு அநுபந்தமும் உண்டு” என்றார் எல்.எஸ்.பி.

“சபாஷ்! இப்பொ அதுதான் வேணும், வாசிக்கிறவாள் எல்லாம் மாடு பருத்திக்கொட்டை தின்கிற மாதிரி, எதையானாலும் விதரணை இல்லாமல் வாசிக்கிறா.”

“மாடு பருத்திக்கொட்டை தின்கிறாப்போலே, என்ன அபூர்வமான கற்பனை!…” என்று கண்ணை மூடிக்கொண்டு அந்த ‘அபூர்வ கற்பனை’யை அசைபோட்டார் புரொபெஸர்.

“என்ன வி.பி. மணி பத்தரை ஆயிட்டுது. லாஸ்ட்டு பஸ் போயிடப்படாது; நீ எதுக்கு வந்தேன்னு தெரியும்! நாளைக்குப் பத்து மணிக்கு இந்தப் பக்கமா வா…” என்றார் எல்.எஸ்.பி.

“என்னடா எல்.எஸ்.பி. என்னை ஒனக்குத் தெரியாதா? நாளை இல்லாட்டா, நாளன்னிக்கே வர்றேன்; வெளியே ஒரு நிமிஷம்…” என்று கொண்டே எழுந்து நடையைத் தாண்டி நின்றார்.

எல்.எஸ்.பி. நடைவாசலில் நின்றார்.

“ஒரு எயிட் அனாஸ் இருந்தாக் குடு” என்றார் எழுத்தாளர்.

கையில் வைத்திருந்த எட்டணாவை எல்.எஸ்.பி. இலக்கிய சேவைக்காகச் சம்பாவனையாக அளித்துவிட்டு, இருளில் மறைந்த திருவுருவத்தைத் திரும்பிப் பாராமல் உள்ளே வந்து உட்கார்ந்தார்.

“அபூர்வ ஆசாமிதான்; ஒத்தைக் கட்டை; உக்காத்தி வச்சு எழுத வைக்கறதுதான் கஷ்டம்” என்று புரொபெஸரிடம் விளக்கினார். சம்பிரதாயபூர்வமாகச் சிதம்பரலிங்கம் பிள்ளை காட்டிய இங்கிலீஷ் மோகத்தை வேட்டுவைப்பதாக அவர் பாவனை.

“அதென்ன அப்படி எண்ணிவிட்டீர்கள்! எனக்கு இந்த வயசுக் காலத்திலே படிக்கிறதாவது, மொழி பெயர்க்கிறதாவது!…” என்றார் சிதம்பரலிங்கம்.

“செய்ய வேண்டியதுதான்; நீங்கள் செய்யாட்டா, யார் செய்யறது? அதிருக்கட்டும்; உங்கள் புஸ்தகத்தை இந்த மார்ச்சில் முடித்துவிட்டால் வருகிற வருஷத்துக்குப் பாட புஸ்தகமாக வைக்க முடியுமா? முன்னுரையும் சுருக்காகக் கொடுத்துடுங்கோ. அப்புறம் வேறே என்ன?…”

ராமலிங்கம் ஒரு செக் புஸ்தகத்தை நீட்டினான். “ஏதோ ஐந்நூறு ரூபா போட்டிருக்கேன்; என் சக்திக்கு ஏற்றது” என்று செக்கில் கையெழுத்திட்டுவிட்டு மரியாதையாக இரண்டு கைகளாலும் நீட்டினான்.

“அது கெடக்கட்டும்னா; செக்தானா பிரமாதம்? நாளைக்கு வந்து முன்னுரையை வாங்கிக்கொண்டு போயிடச் சொல்லி விடுங்கோ; புஸ்தகம் ரெடியாத்தான் இருக்கு; ஒரு வாரத்திலே அனுப்பறேன்” என்று சொல்லி எழுந்தார்.

“நானே காலையில் வருகிறேனே” என வழி அனுப்பினார் எல்.எஸ்.பி.

சிதம்பரலிங்கக் கையெழுத்துப் பிரதி, பிரசுராலய க்ஷேத்திராடனம் புரிந்து புண்ணியம் சம்பாதித்தது என்பதை அறியாததற்குக் காரணம் தொழிலில் அவர் புதிது என்பதுதான்.

“ராமலிங்கம் அந்தப் பித்துக்குளி கணக்கிலே ஒரு எட்டணா கைப்பத்தெழுது; பொணம் எப்பப் பாத்தாலும் சமய சந்தர்ப்பம் தெரியாமெ வந்து கழுத்தை அறுக்கிறது, எதாவது தத்துப்பித்துனு…”

“எல்லாம் நீ குடுக்கற எளக்காரந்தான், அந்த நாய் மூஞ்சிலியே வந்து நக்க வருது. இந்தப் பயகள்கிட்ட நீ பொஸ்தகத்தை வாங்காதே, வாங்காதே, மானம் போறதுன்னு நான் எத்தினி நாள் மண்டையை உடைச்சுக்கிறது?” என்று கடிந்து கொண்டார் பங்காளி ராமலிங்கம்.

“போகட்டும் பொழைச்சுப் போறான். அவன் கதைதானே நிறைய விக்கிறது? இந்தக் கிழட்டு ராஸ்கல் பிடிச்ச பிடியில் ரூ.500 கறந்துவிட்டானே!”

“நீ வடிகட்டின முட்டாள்!”

“புஸ்தகம் பாடபுஸ்தகமா வந்தா அப்ப யார் முட்டாளோ!”

“வராவிட்டாலோ?”

“இந்த வருஷம் இல்லை என்றால் அடுத்த வருஷம்; அது லாஸ் இல்லை(நஷ்டமில்லை).”

“இந்த எழுதற பயல்கள் எல்லாருமே திருட்டுக் கூட்டம்; சொன்னாச் சொன்னபடி நடக்க மாட்டான்கள்; பொஸ்தகக் கடை வக்கிறதைவிடப் பொடலங்காய் விக்கலாம்.”

“புடலங்கா அழுகிப் போகும்டா முட்டாள்!”

2

ராம பத்மா பிரசுரகர்த்தர்கள் லிமிட்டெட் என இலக்கிய சேவைக்கெனவே உதயமான கம்பெனியின் நடையைவிட்டு இறங்கி, இருட்டுக்குள் தான் என்ற பேதம் அற்று லயித்துப் போன வி.பி.யை யார் என்ன சொன்னாலும் அவர் பிறவி எழுத்தாளர்தாம். இந்த இலக்கிய சிங்காதனம் கிடைக்கு முன்பே, தம்முடைய பெயரின் மேல் அவருக்கு வெறுப்பு உண்டு. இலக்கிய சிங்காதனம் தம்முடைய மானஸிக நிச்சயத்தைப் பொறுத்தவரையாவது கிடைத்துவிட்ட பிற்பாடு, தம்முடைய தகப்பனார் வழிப் பாட்டன் பேரில் இந்தப் பெயரை முன்னிட்டு வெறுப்பு ஸ்திரப்பட்டது. “மாட்டுக்கு பருத்தி விதை வச்சியா, வண்டியை இழுத்துக் குறட்டு ஓரமாக விட்டுவிட்டு, போயி சுப்பையாத் தேவனைச் சத்தங் குடுத்துட்டு வா” என்று அதிகாரம் செய்வோரிடம், இடுப்பில் துண்டை வரிந்துகொண்டு கும்பிக் கொதிப்பை ஆற்றிக் கொள்ள முயலும் ஜீவன்களுக்குப் பலவேசம் என்று பெயர் இருந்தால் முழுவதும் பொருத்தமாக இருக்கும். அன்று, சென்ற யுகம் என மனக்குறளி காலநிர்ணயம் செய்யக்கூடிய ஒரு காலத்தில், தகப்பனாருடைய சுண்டு விரலைப் பிடித்துக் கொண்டு அம்பாசமுத்திரம் உயர்தரப் பாடசாலைத் தலைமை ஆசிரியர் முன்பு, சிவப்பு உல்லன் குல்லாவுக்கு வெளியில் நாய்வால் மாதிரி நீட்டிக் கொண்டிருந்த வாழை நார் முடிப்புச் சடையும், எண்ணெய்க்கசடு வழியும் நெற்றியில் சாந்துப்பொட்டும், காதில் தட்டும், பச்சைக் கோட்டும், பிறந்த நாளுக்கு ஆச்சி வாங்கித் தந்த ஜரிகைக் கரை நீலப்பட்டு வேட்டியும் சிலேட்டும் கையுமாக நின்று நாமகள் கோட்டை வாசல் திறக்க வரங் கிடந்தபோது, “என்னடா, பேருக்கு ஏற்றாற் போலப் பலவேசமாக இருக்கியே; பின்னாலே புலிவேசம் போட்டுடப்போறெ, கையில் என்ன இருக்கு, தெரியுமா?” என்று பிரம்பைக் காட்டி அவர் வரவேற்றது, மனசில் சிலாசாசனம் போலப் பதிந்து கிடந்தது. அதிலிருந்து தொடங்கிய இந்த நாமாவளி ஆதமசோதனை இன்றுவரை தீர்ந்தபாடில்லை. குற்றாலநாதனான குறும்பலா ஈசனைச் சூசிப்பிக்கும்படி பலா ஈசன் என்பதன் திரிபா அல்லது திருடனிலும் தியாகியிலும் திபெத் என்ற வார்த்தையிலும் தன்னைக் கரந்து சகல ரூபனாக விளங்கும் அந்தச் சாட்சாத் பரம்பொருளின் கற்பனை இந்த இலக்கிய சோபையைப் பெற்றபோது… காலில் எதையோ சதக் என மிதித்தார். சாணிதான், வெறும் சாணி; பட்டணத்து ரோட்டில் சாணி என்பது அவருக்கு அபூர்வமாகத் தென்பட்டது; தமது ஊர் வளமைகளை நினைவுக்குக் கொண்டுவந்தது. கற்பனை இவ்வாறு பிறழ்ந்தது ஒரு விநாடிதான்; மறுபடியும் ஈசன் பலவேஷனாகத் தென்படுவது மாறி, பலவேசம் பிள்ளையே ராமலிங்கமும், எல்.எஸ்.பி.யும், சிதம்பரலிங்கமும், தாமுமாகக் காட்சியளித்துத் தம்முள் தர்க்கம் பண்ண ஆரம்பித்துவிட்டனர்.

இருட்டோ , நல்ல நிம்மதியான இருட்டு; தேனாம்பேட்டை கண்ணாயிரம் பிள்ளை தெரு, 1/27 நம்பர் மேல் மாடியில் உள்ள ‘கல்கத்தா இருட்டறை’க்கு (இது சரித்திரப் புளுகு அல்ல; சாசுவத உண்மை) போன மாசத்து வாடகைப் பாக்கிக்கும் இந்த மாதத்து வாடகைக்குமாக அந்திக்கால நாமாவளி செய்யவரும் வீட்டுக்கு உடமஸ்தரான பட்டணத்து முதலியார், இதுவரை காத்துக் கொண்டிருக்க வயிறுதான் பசிக்காதா, அவருக்கு வீடு வாசல் பிள்ளை குட்டி என்ற உலக பந்தங்கள் இல்லாத தனிக் கட்டையா? நிச்சயமாகப் போயிருப்பார்; நிம்மதியாகப் போய்ப் படுத்துத் தூங்கலாம்; சிறிது விடியற்காலையிலேயே எழுந்து வெளியே புறப்பட்டுவிட்டால், இந்தக் கடன்காரப் பயலிடம் எதையாவது வாங்கி, அவர் கடையண்டை கொண்டுபோய்க் கொடுத்துத் திருப்தி செய்துவிடலாம். இருந்தாலும் இந்த ராமலிங்கம் பயலுக்கு என்ன இவ்வளவு துடுக்கு? நான் புஸ்தகம் கொடுக்காமல் போயிருந்தால் அந்தப் பயல் கதிதான் என்ன? இவன் என்ன மகா பங்கு போட்டானாம்! 200 ரூபா செக், அது ரொக்கமாகிறதுக்கு முன்னால் ஆயிரத்தெட்டு தடவை அமிஞ்சி செக்கென்று எல்.எஸ்.பி. வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருந்தானாமே. சிவனேன்னு பேப்பர் வித்தவனெக் கொண்டுவந்து இந்தப் புஸ்தகக் கம்பெனியிலே மாட்டிவிட்டு விட்டான். என் புஸ்தகம் வராதெ போனா, கடையைச் சாத்த வேண்டியிருந்திருக்கும்னு எல்.எஸ்.பி.தான் என்கிட்டச் சொன்னானே. என்னா, எல்.எஸ்.பி. பேசாமெ உட்கார்ந்திருக்கே. ராமலிங்கம் என்னைப் பார்த்து, பல்லு மேலே நாக்கைப் போட்டு, வெளியே போன்னு சொன்னானே, அவனை என்ன பண்ணினாத் தேவலை? நீதான் சொல்லு! நான் எவனையாவது என்னிக்காவது மரியாதைக் குறைவாக…

‘அதை விடுங்க சார் வி.பி. ராமலிங்கம் பெரிய மனுஷ்யன், அவனை இப்படிப் பிரமாதப்படுத்தினா? நீங்கதானே தன்னை என்னமோ பெரிய மனுஷன்னு அவனையே நினைச்சுக்கும்படி செய்யறேள். போய்க் காபி வாங்கிண்டு வாடான்னு சொல்ல வேண்டியவனை ஒரு பொருட்டாக மதித்துப் பேசினால் தலைக்கொழுப்பு ஏறாதா? நான் தான் உங்களுக்கு மிந்தியே அவனுடைய யோக்கியதையைச் சொல்லியிருக்கிறேனே… நான் வேணும்னா மன்னிப்புக் கேட்டுக்கிறேன்!’

‘என்ன எல்.எஸ்.பி. உங்களை எனக்குத் தெரியாதா? நீங்களாவது மன்னிப்புக் கேட்பதாவது? நீங்க அன்னிக்கு வறத்துக்குக் கொஞ்சம் லேட்டாயிருந்தா பல்லை உதுத்துக் கையிலே குடுத்திருப்பேன் – ரைட்டர்னு மதிப்புக் கொடுக்காத மாட்டுக்குப் புத்தி வருத்த வேண்டாம்…’

‘நீங்க அவனிடம் பேச்சு எதுக்கு வச்சுக் கொள்ளுகிறீர்கள்? இனிமேலிக்கி, எதானாலும் என்னிடம் சொல்லுங்கள், என்னிடம் கேளுங்கள்… கடைசி பாரம் புரூப் வந்திருக்கு; ராத்திரி கொண்டு போய்ப் பாத்துப்பிட்டுக் காத்தாலே எட்டு மணி வாக்கிலே அனுப்பிச்சுடுங்கோ… அந்தப் பாரத்தை ஏத்தி இறக்கிவிட்டா இந்த வாரத்துக்குள்ளாறயே புஸ்தகத்தைக் கொண்டு வந்துடலாம்…”

(அப்படி வாடா மகனே. புரூப்பா வேணும்? கொடுத்தனுப்புறேன்… வாங்கிப் போட்டு வச்சாப் போறது. மன்னிப்புக் கேக்கட்டும். என் வீட்டு நடை வாசல்லெ வந்து நிக்க வைக்கிறேன்…)

‘எல்.எஸ்.பி., அந்தப் பாரத்தை இப்படிக் குடுங்கொ. காத்தாலெ தானே வேணும்? நானும் லைபரரிக்கு வர்றேன்; அப்பொ கொண்டு வந்து போட்டுவிட்டுப் போயிடறேன்…’

‘என்ன ஸார் வி.பி., என் கஷ்டம் உங்களுக்குத் தெரிய மாட்டேன்கிறதே…”

‘எல்.எஸ்.பி. உங்களைப் பற்றி எனக்கு மனஸிலே கல்மிஷமே இல்லை. ராமலிங்கம் வரட்டும்; புரூப்பை வாங்கிக்கொண்டு போகட்டும்… ஒரே பேச்சுத்தான்… ரெண்டு வார்த்தைக்காரன் நான் அல்ல.’

‘…ஸார்… ஸார்…’

‘…யார்… அது?…’

‘நான் தான் ராமலிங்கம், என்ன ஸார். என் பேர்லெ பிரமாதமாகக் கோவிச்சுண்டியளாமே? அன்னிக்குப் பேப்பர் கம்பெனி சிவசாமி இருக்கான்னோல்லியோ, அவன் பில்லுலெ பேசினதுக்கு மாறா, பவுண்டுக்கு ஒரு தம்பிடி ஜாஸ்தி பண்ணிக் கணக்குப் பண்ணி அனுப்பிட்டான். பாரம் கம்போஸாயி ரெடியான பிறகு பிரஸ்காரன் டிலே பண்ணுவானோ? சிவசாமி என்னைக் கேக்காமே காயிதத்தைப் பிரஸ்ஸுக்கே அனுப்பிச்சிட்டான். பிரஸ்காரனும் இங்கே ஒரு வார்த்தை சொல்லாமே பாரத்தை மிஷின்லே உட்டுப்புட்டான்; அப்புறம் பில் வறது. அந்தச் சமயத்திலே மனசு எப்படி இருந்திருக்கும்! இந்தப் புஸ்தக வியாபாரமே கேப்மாறி ஜாதிக்குத்தான் சரி… நீங்களும் வந்தியள்… நானும் என்னமோ எக்குத் தப்பா…”

‘என்ன ராமலிங்கம், உன்னை எனக்குத் தெரியாதா? வா, இப்படி உட்காரு; புரூப் அன்னிக்கே ரெடியாகிவிட்டது; நீ பாரு, குழந்தைப் பிள்ளை மாதிரி இருக்கக்கூடாது; ராம பத்மா கம்பெனி பங்காளி நீ; அடுத்த தடவை நான் பார்க்கிறப்போ…’

‘எக்ஸ்யூஸ் மி ஸார்’ என்றான் ராமலிங்கம். எழுத்தாளர் ஸ்ரீமான் வி.பி. மன அரங்கில் ஒரு வெற்றி.

இந்த வெற்றி ஸ்ரீமான் வி.பி. அவர்களை 1/27 கண்ணாயிரம் பிள்ளை தெரு மாடியாகிய கல்கத்தா இருட்டறையின் வாசலுக்கே கொண்டுவந்துவிட்டது.

பூட்டில் கையை வைத்தார். இரண்டு பூட்டு!

உடம்பு ஜில்லிட்டது. வீட்டுக்காரப் பயல் எதிர்ப் பூட்டுப் போட்டுவிட்டானா?

‘சட்! என்ன அசட்டுத்தனம். நேற்றுச் சாவியைத் தொலைத்த விபரீதத்தினால்தானே இந்த இரட்டைப் பூட்டு?’

“வெறும் கயிற்றரவு!” என்று கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்று படுத்தார்.

வெற்றி நிம்மதியிலே அசதி தாலாட்ட, தம்மை மறந்தார்.

3

“ஸார்! ஸார்!”

அயர்ந்த நித்திரையில் ராமலிங்க வெற்றி நாடகத்தில் மறுபடியும் மறுபடியும் உழன்று ரஸித்துக் கொண்டிருந்த இலக்கிய மேதை வி.பி.யை இந்த விகற்ப உலகுக்குச் சடபடவென்ற சத்தமும், ஏழாம் கிணற்றடியிலிருந்து வரும் “ஸார்” என்ற அழைப்பும் மல்லுக் கட்டி இழுத்து வந்தன.

“ஏது, வீட்டுக்கார முதலி விடியறத்துக்கு மிந்தியெ முற்றுகை போட்டுவிட்டானா?” என்ற உதைப்புடன், “என்ன முதலியார்வாளா, நேற்று வந்திருந்தீர்களோ? நான் ஒரு ஜோலியாய்ப் போனேன். வர்றத்துக்கு லேட்டாயிட்டது” என்று சமாதானம் சொல்லிக்கொண்டு கதவைத் திறந்தார்.

எதிரே ராமலிங்கம் நின்று கொண்டிருந்தார்; நீண்ட ஜிப்பா, மொராக்கோ தோல் பை சகிதம் நின்றிருந்தார்.

“ஏது! ராமலிங்கமா! வாருங்க உள்ளே” என்று அழைத்துக் கொண்டு சென்று நேற்றிரவு தமக்கு ஹம்ஸ தூளிகா மஞ்சமாக அசதியைப் போக்கிய ஜமுக்காளத்தின் பேரில் உட்கார வைத்துவிட்டு, காகிதப் பொட்டலத்தில் சுருட்டி வைத்திருந்த வெற்றிலை மடிப்பை எடுத்துக் கொண்டு அந்த ஜமுக்காளத்தின் வேறு ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு, காய்ந்து போன சுண்ணாம்பைச் சூர்ணமாக்கி, வெற்றிலையில் போட்டு மடக்கி வாயில் மென்று அதக்கிக்கொண்டு, “என்ன இவ்வளவு காத்தாலேலெ?” என்றார்.

ராமலிங்கம் வாய் பேசாமல் ஒரு கடிதத்தை எடுத்துக் கொடுத்திருந்தார். அதில் ரொக்கமாக ஒரு பத்து ரூபாயும் ஐந்து நாட்கள் தவணை கழித்துத் தேதியிட்ட 50 ரூபாய் செக்கும் இருந்தன. “ராமலிங்கம் கைவசமுள்ள புரூப்பைப் பார்த்துக் கையோட அனுப்பிச்சுட்டா ரொம்ப ஒத்தாசெயா இருக்கும்; புஸ்தகம் சீக்கிரம் வெளிவந்தால் எல்லாருக்கும் சவுகரியந்தானே?” என்று எழுதியிருந்தது.

“புரூப் எங்கே?” என்றார் வி.பி.

ராமலிங்கம் பேசாமல் எடுத்துக் கொடுத்தான்.

பேசாமல் எழுத்தெழுத்தாகப் பார்த்துத் திருத்திக் கொடுக்கலானார் எழுத்தாளர்.

மனசு ஒரு புதுமாதிரியான சுரம் பேச ஆரம்பித்தது.

நேத்துச் சோமாறிப் பயல் மாதிரி இந்த ராமலிங்கத்துடன் மல்லுக்கு நிற்காமல் உறுதியைக் காட்டினதுதான் செக்கும் பணமும் காலையில் சிட்டாகப் பறந்து வந்திருக்கிறது. ராமலிங்கம் என்ன பெட்டிப் பாம்பாக உட்கார்ந்திருக்கிறான்! என்ன மரியாதை! தாராளமாகப் பேசக்கூடப் பயப்படுகிறானே! இதுக்குத்தான் ஆத்ம சக்தின்னு பேரு. அறிஞ்சுதான் அஹிம்சையைப் பிடித்துக் கொண்டிருக்கிறார் மகாத்மா. எனக்கு நேத்தே இந்த மாதிரிதான் நடக்கும்னு தெரியும்.

“என்ன ராமலிங்கம், உங்க பிரஸ்காரனுக்கு ‘வந்தால்தான்’ என்று எழுதினால் ஏன் இத்தனை தடவை திருத்தினாலும் இரண்டு வார்த்தை மாதிரி ஸ்பேஸ் போட்டு வைக்கிறான்? முதல் புரூப், இரண்டாவது புரூப், இப்போ கடைசி பாரம் புரூப். எல்லாத்திலேயும் ஒரே மாரடிப்பாக இருக்கு.”

“மெட்ராஸ் பிரஸ்களில் எல்லாம் கம்பாஸிட்டர்கள் அப்படித்தான் போட்டுத் தொலைக்கிறான். என்ன எழவைப் பண்ணுகிறது…”

“எப்படியோ பார்த்துச் செய்; இந்த வாரக் கடைசியிலே புஸ்தகம் வந்து விடாது?” என விரல்களைச் சுடக்கு முறித்துக் கொண்டே கேட்டார்.

“ஏன், வெள்ளிக்கிழமையே வந்துடும். வெள்ளிக்கிழமை ராத்திரி எட்டு மணிக்குப் புஸ்தகம் ரெடியாயிடும்…”

“ராமலிங்கம், ஒரு நிமிஷம் இரேன், காபி சாப்பிட்டுவிட்டுப் போகலாம்; நான் தலையில் தண்ணியைக் கொட்டிக் கொண்டு வந்து விடுகிறேன்.”

“இல்லெ ஸார்; எனக்கு வேலை இருக்கு; மாம்பலம் போகணும்…”

“அடே ஒரு நிமிஷம் இருடான்னா; என்னிக்கோ ஒரு நாள் தான் உன்னைக் கூப்பிடுகிறேன்” என்று சொல்லிக் கொண்டே, வேகமாக மாடிப்படி வழியாக இறங்கினார் எழுத்தாளர்.

“நீயா கூப்பிடுகிறாய்…” என்று யாரும் இல்லாத அறையில் சிரித்துக் கொண்டான் ராமலிங்கம்.

4

வீட்டுக்கார முதலியாரவர்களுக்கு,

அநேக கோடி நமஸ்காரம். தாங்கள் நான் வீட்டில் இல்லாத சமயத்தில் இங்கு வந்து சென்று கொண்டிருப்பது கேட்க வருந்துகிறேன். இத்துடன் ரூ.50க்கு ஒரு செக் வைத்து அனுப்பி வைத்திருக்கிறேன். நாளது தேதி வரையில் உள்ள பாக்கியையும் வருகிற மாத வாடகையையும் எடுத்துக்கொண்டு மீதியைத் தங்கள் வசம் வைத்திருந்தால், நான் கடைப்பக்கமாக வரும்போது பெற்றுக் கொள்ளுகிறேன்.

இப்படிக்கு
தங்கள்
வி.பி.

1/27, கண்ணாயிரம் பிள்ளை தெரு,
தேனாம்பேட்டை,
சனிக்கிழமை

ராம பத்மா பிரசுரம் லிமிட்டெட் முதலாளி ஸ்ரீ எல்.எஸ்.பி அவர்களுக்கு

நமஸ்காரம்.

தாங்கள் தங்களது சகபாடி ஸ்ரீ ராமலிங்கம் மூலமாக ரூ. 50க்கு அனுப்பியிருந்த செக்கைப் பாங்கியில் எடுக்க மறுத்துவிட்டார்கள். இதன் மூலம் எனக்கு இரண்டாவது தடவை அவமானம் விளைவித்துவிட்டீர்கள். எழுத்தாளன் என்றால் உங்கள் வீட்டுக் கொத்தடிமை என நினைத்துக் கொண்டீர்களோ? இது ஜனநாயக உலகம். எழுத்துக்கும் எழுதுகிறவனுக்கும் எங்கும் மதிப்பு உண்டு. ராம பத்மா பிரசுராலயம் தமிழ் இலக்கிய சரித்திரத்திலேயே தனக்கென ஒரு மாசு விளைவித்துக் கொண்டிருப்பது கண்டு பரிதபிக்கிறேன். தங்கள் செக்குக்குக் கௌரவம் கொடுத்து, நான் வேறு ஒரு நண்பரிடம் அனுப்பியதனால் ஏற்பட்டுள்ள விபரீத பலனை, இலக்கிய நலனை முன்னிட்டாவது கூடிய சீக்கிரத்தில் நேர்படுத்த முடியும் என எதிர்பார்க்கிறேன்.

(குறிப்பு: திரும்பவும் தாங்கள் ராமலிங்கத்தை அனுப்பவேண்டாம்.)

தங்கள்
வி.பி.

1/27, கண்ணாயிரம் பிள்ளை தெரு
தேனாம்பேட்டை
புதன்கிழமை

கிணற்றில் கல் போட்ட மாதிரி ராம பத்மா கம்பெனி பேசாதிருந்துவிட்டது. அதையும் குற்றம் சொல்ல முடியாது. கவனத்தை இலக்கிய சேவையில் திருப்பி இருந்ததனால் இலக்கிய ஊழியரைப் பற்றிக் கவனிப்பதற்கு அதற்குப் போதில்லை.

வி.பி. நாளுக்கு நாள் துர்வாச விகாரம் படைக்க ஆரம்பித்துவிட்டார். அந்த நாய்ப் பயலுடைய புஸ்தகக் கம்பெனிக்கே போவதில்லை என்று தீர்க்கமாக வீட்டோ டு உட்கார்ந்திருந்தார். அனுப்பப்பட்டிருந்த பத்து ரூபாய் அவரது வைராக்கியத்துக்கு ஒத்தாசையாக இருந்தது.

வெள்ளிக்கிழமை மாலை நான்கு மணி இருக்கும். வீட்டுக்கார முதலியார் வக்கீல் மூலம், வீட்டை 24 மணி நேரத்துக்குள் காலி செய்யும்படி கொடுத்திருந்த நோட்டீஸ் வந்தது.

“அயோக்கிய ராஸ்கல்; இந்த நொள்ளை ரூமுக்கு நோட்டீஸ் வேறெயா? கார்ப்பரேஷன் ஹெல்த் இன்ஸ்பெக்டரிடம் புகார் சொல்லி இந்தப் பயலுக்குத் தண்ணிக் காட்டுகிறேன்” என்று காலி அறையினிடம் கறுவிக் கொண்டிருந்தார்.

“வி.பி. கதவைத் திற, என்ன, இந்த நேரத்திலா தூங்குகிறாய்?” என்ற எல்.எஸ்.பி. குரல் கேட்டது.

தமது கோபத்தை தெரிவிக்கும் பாவனையில் பதில் பேசாமல் கதவைத் திறந்தார் வி.பி.

“என்ன சொன்னாலும் வி.பி. நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி. உன் வேலைன்னா பிரஸ்காரன் ஒரு நொடியிலே முடிச்சுக் குடுத்துடறான். இந்தக் கவர் டிசைனைப் பாரு. இங்கிலீஷ் கெட்டப் மாதிரி; யாரு இந்த காலத்திலே உனக்கு இந்த மாதிரி இன்டரஸ்ட் எடுத்துண்டு செய்யறா?

“புஸ்தகம்னா இதல்லவா புஸ்தகம்? உனக்குத்தான் பொஸ்தகம் போடற விவகாரம் அத்துப்படியாயிருக்கு; உன்னைப்போல யாரிருக்கா.

“அதிருக்கட்டும்; அன்னிக்கி என்ன அப்படி கன்னா பின்னான்னு கடுதாசி எழுதிவிட்டே? நிதானம் வேண்டாம்? பின்னெ உனக்கும் ராமலிங்கத்துக்கும் வித்தியாசம் என்னா? அதெப் பார்த்த பிற்பாடு என் மனசு நொந்தே போச்சு. உனக்கு என்ன புள்ளையா குட்டியா?… ஏகக்கட்டை. அந்த ஒம் பணந்தான் பத்திரமா என்னிடம் இருக்கட்டுமே…”

“அது உனக்குத் தெரியாதா? வீட்டுக்காரன் நோட்டீஸ் கொடுத்து விட்டான்; அதுதான் அவ்வளவு கோபம்; உன்னை எனக்குத் தெரியாதா?” என்றார் இரண்டாவது பிரம்மா.

“இதுதானா பிரமாதம்! நாளைக்கே கிளியர் பண்ணிட்டா போச்சு. ஏன் இங்கே கெடந்து திண்டாடறே? வாடகைக்கு வாடகை மிச்சம்; குஷியாப் போதுபோக்கக் கம்பெனிக்குக் கம்பெனி ஆச்சு…”

“நான் வாடகை கட்டாயம் குடுக்கத்தான் செய்வேன்; அப்படியானா வறேன். சும்மா வந்திருக்க முடியாது…”

“அட சட்! வாடகையா பிரமாதம்! உனக்கு எவ்வளவு எடம் வேணும்? சும்மா இருக்கிற நேரத்திலே அங்கே வருகிற புரூப்பைப் பார்த்தா கணக்கு அட்ஜஸ்ட் ஆயிடுது; நீ உன் மூட்டையை இப்பவே கட்டு. ரிக்ஷாவிலேயே போய்விடலாம்.”

– கலைமகள், ஏப்ரல் 1945

புதுமைப்பித்தன் என்ற புனைபெயர் கொண்ட சொ. விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 - சூன் 30, 1948), மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன. இவரது படைப்புகள் மிக அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, 2002இல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *