கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: June 3, 2022
பார்வையிட்டோர்: 16,639 
 
 

(1953ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பல நூறு ஆண்டுகளுக்குமுன் பாரசீக நாட்டில் மசூக் என்ற அரசன் ஆண்டுவந்தான். அவன் இன்ப விருப்பினன். இரக்க நெஞ்சுடையவன். ஆனால் முன் கோபி. சிறிது அடம்பிடிப்பவன். ஆயினும் அவன் தீய குணங்களுக்கு அவன் குடிகள் ஆளாகவில்லை. அவர் களுக்கு அவன் நல்லரசனாகவே இருந்தான். தீயகுணங் கள் யாவும் அவனிடம் மாறாப் பற்றுடைய நல்லமைச்ச னிடமே காட்டப்பட்டன.

மசூக்கின் நல்லமைச்சன் மன்சூர் வயது சென்ற வன். உடல் பருத்து ஆள் அருவருப்பான தோற்ற முடையவனாயிருந்தாலும் அவன் அறிவிற் சிறந்தவன். தங்கமான குணம் உடையவன். மன்னனிடம் அவன் கொண்ட பற்றுக்கு எல்லையில்லை. மன்னன் விருப்பத் துக்கும் கோபதாபங்களுக்கும் ஏற்க நடக்கும் அவன் பொறுமைக்கும் எல்லையே கிடையாது. மன்னன் கால் புதையரண (Boot) த்தின் பரிசினால் அவன் பற்கள்

மகிழ்ச்சியோடு இருந்தபோது அவன் விளையாட்டுக் குறும்பின் சின்னமாக மன்சூரின் ஒரு கண் போயிற்று. ஆனால் இத்தகைய இன்னல்கள் கூட மன்சூரின் பணி விணக்கத்தையோ, மன்னனிடம் அவன் கொண்ட பாசத்தையோ குறைக்கவில்லை.

மசூக்குக்கு இஸ்லாம் நெறியில் அளவற்ற பற்று. பாரசீக மக்களிடையே இன்னும் நிலவிவந்த பழைய ஜர துஷ்டிர நெறியையும் புத்த நெறியையும் அவன் வெறுத்தான். தான் மேற்கொண்ட மெய்ந்நெறியை
ஏற்க மறுத்தவர் யாரும் பாரசீக நாட்டில் இருக்கக்கூடா தென்று அவன் கட்டளையிட்டான். புறச்சமயத்தவர் பலர் இதனால் தண்டிக்கப்பட்டனர். பலர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். கஸ்ரூ என்ற மாயாவி ஒருவனும் அவன் புதல்வன் ஆமீன் ஆதாப் என்பவனும் மட்டும் இந்துஸ்தானத்துக்கு ஓடிச்சென்று பருகச்ச நகரில் தங்கினர். அங்கே அவர்கள் தம்மையே பாரசீக அரசன் என்றும் இளவரசன் என்றும் கூறிக்கொண்டு வாழ்ந் தனர். நகைச்சுவை மிக்க மன்னன் மசூக் இதைக் கேள்விப்பட்டபோது சினங்கொள்ளவில்லை. ”கரும்புத் தோட்டத்துக்கு யார் வேண்டுமானாலும் உரிமை கொண்டாடட்டும். கரும்பை நான் சுவைக்கு மட்டும் அதுபற்றி எனக்கு என்ன கவலை?” என்று கூறி அவன் நகைத்தான்.

மன்னன் மசூக்கின் நகைத்திறம் எப்போதும் ஒளி வீசுவதில்லை. அவன் எப்போதும் சுமுகமாயிருப்பது மில்லை. இவ்விரண்டையும் பேணுவதில் அரண்மனை மருத்துவர், விகடகவி, கதைவாணர், பாடகர் ஆகிய பலர் அரும்பாடு பட்டனர். அமைச்சன் அரசாங்கக் கடமைகளில் மிகக் கடினமான கடமையும் அதுதான் ஆனால் அரசன் ஓயாது தின்ற இனிப்புப் பண்டங்களும் இனிய குடிவகைகளும் அவர்கள் முயற்சியை அடிக்கடி வீணாக்கின. மன்னன் அடிவயிற்றுச் செரிமானம் குறைந்தவுடன் நகைச்சுவைக்குப் பஞ்சம் உண்டாகி விடும். அரண்மனை அல்லோல கல்லோலப்படும். அமைச்சனுக்குப் பொறுக்க முடியாத தலையிடியும் அலைச் சலும் ஏற்படும்.

அரசன் உள்ளத்தில் கடுகடுப்பும் நேரம் போக மாட்டாத நிலையும் ஒருநாள் ஏற்பட்டது. அன்று விகட கவியை அவன் வேம்பென வெறுத்தான். கோமா ளியைக் காண அவன் குமுறினான். கதைவாணர் வாய் திறக்கவிடாமல் கடுகடுத்தான். அமைச்சனோ அணுக அஞ்சினான். அரசனுக்குப் புதிய பொழுதுபோக்குக்கான வழிதேடி அவன் புறப்பட்டான். நகரின் ஒரு பக்கத்தில் மக்கள் கும்பல் கூடி இரைந்துகொண்டிருந்ததை அவன் கண்டான். அவர்கள் நடுவே ஒரு கிழவி தமிழகத்தி லிருந்து கொண்டுவரப்பட்ட வகைவகையான வண்ணப் பொருள்களை விற்றுக்கொண்டிருந்தாள். அதைப் பார்த்ததும் அமைச்சன் வாடிய முகத்தில் தெம்பு உண் டாயிற்று. ‘ஆம்! அரசன் மனநிலையை மாற்றத்தக்க புதுமை இதில் தான் இருக்க வேண்டும்’ என்று கருதிய வனாய், அவளை அரசனிடம் இட்டுச்சென்றான்.

மாயப்பொடி. –அவன் கருதியது தவறன்று. கிழவி யிடம் இருந்த பொருள்கள் எல்லாமே அரசனுக்குப் பிடித்திருந்தன. ஒவ்வொன்றையும் ஆவலுடன் பார்த்த பின் அத்தனையையும் ஒருங்கே விலைபேசி வாங்கிவிட் டான். ஆனால் தட்டு முழுவதையும் அரசனிடம் ஒப் படைக்கும் போது கிழவி ஒரு சிறு புட்டியை மட்டும் தனியாக மறைத்தெடுத்து இடுப்பில் ஒளித்து வைக்கப் போனாள். அரசன் அதுகண்டு “எனக்குரிய பொருளை ஒளிக்கப் பார்க்கிறாயா?” என்று சீறினான்.

அவள் நடுநடுங்கி, ”ஐயா! இஃது ஒன்றுமில்லை. ஒரு சிறு புட்டி. யாருக்கும் உதவாது. எங்கள் குடும்ப உரிமைப் பொருளாதலால், எனக்கு மட்டுமே அருமை உடையது,” என்றாள்.

“வெறும் புட்டியா? அதில் என்ன இருக்கிறது?”

அரசன் கிழவியின் மூக்கைப் பிடித்துக்கொள்ளல்

ஆண்டியின் புதையல் “ஒன்றுமில்லை, ஆண்டவரே ஒரு சிறிது வெள்ளைத் தூள் மட்டும் தான்”

“ஓகோ, நஞ்சு, நஞ்சு! ஆகா, அப்படியா செய்தி? இதோ உன்னைத் தூக்கிலிடுகிறேன் பார்” என்று அரசன் இரைந்தான். அமைச்சன் இடையில் வந்து தடுக்கா விட்டால், அவன் அவளைக் கொன்றே இருப்பான்

கிழவி எண்சாணும் ஒருசாணாகக் குறுகி, “ஐயா! அது நஞ்சால்ல என்று காட்ட நானே அதை உட்கொள் கிறேன், பாருங்கள் ” என்றாள்.

அரசன் கோபம் குறும்பாக மாறிற்று. அவன் கிழவியின் நீண்டு வளைந்த மூக்கை இரு விரல்களால் இறுகப் பிடித்துக்கொண்டான். புட்டியிலுள்ள தூளில் ஒரு கரண்டி அவள் நீட்டிய நாக்கிலிடப்பட்டது.

தூள் நாக்கிலிடப்பட்டதுதான் தாமதம். மன்னன் கைப்பிடியிலிருந்த மூக்கையும் காணோம்; நாக்கையும் காணோம். அவற்றுக்குரிய கிழவியையும் காணவில்லை. மன்னன் கைப்பிடி மட்டும் மூக்கைப் பிடிக்கும் பாவனை யில் வெட்டவெளியில் எதையோ பிடித்துக் கொண்டி ருப்பதுபோல் தொங்கிற்று.

ஒரு மாடப்புறா மன்னன் கையினிடையே ஓடிப் பக்கத்திலுள்ள மரத்தில் அமர்ந்து, பின் நகரைக் கடந்து பறந்தது.

கிழவி எப்படி மறைந்தாள் என்று எல்லோரும் மலைப்பும் திகைப்பும் அடைந்தனர். தூள் ஒரு மாயத் தாளாயிருக்கலாம். ஏனென்றால், திடீரென்று பறந்து சென்ற மாடப்புறாவாக அவள் மாறியிருக்கக் கூடும் என்றான் மன்சூர்.

தூளை இன்னொருவனுக்குக் கொடுத்துப் பார்க்க அவர்கள் விரும்பினார்கள். மன்னன் அமைச்சன் பக்கம் குறும்பு நகையுடன் திரும்பினான். ஆனால் அமைச்ச னுக்கும் இத்தகைய காரியங்களில் கைப்பாவையான ஓர் ஆள் இருந்தது. அதுவே அரண்மனைப் பணியாட் களின் தலைவன் ஹட்ஜ்பட்ஜ். அவன் வேண்டாவெறுப் பாக அத் தூளை அருந்த வேண்டி வந்தது. ஒரு கரண்டி அருந்தியும் எந்த மாறுதலும் காணவில்லை. கரண்டி மேல் கரண்டி அவன் வாயில் திணிக்கப்பட்டும் எந்தப் பயனும் ஏற்படாதது கண்டு, எல்லோரும் ஏமாற்ற மடைந்தனர். ஹட்ஜ்பட்ஜ் மட்டுந் தான் தப்பினேன் பிழைத்தேன் என்று மகிழ்ச்சியுடன் நழுவி ஓடினான்.

தூளின் மருமம் – தூளின் மருமம் அறியப் பல ஆராய்ச்சிகள் நடைபெற்றன. புட்டியை மூடப் பயன் படுத்தி இருந்த தாள் சுருளில் ஏதோ எழுதப்பட்டிருந் தது என்பது தவிர வேறு எதையும் எவராலும் கண்டு பிடிக்கமுடியவில்லை. அத்துடன் அவ்வெழுத்துக்கள் எவருக்கும் புரியாத வடிவம் உடையனவாயிருந்ததனால் அதன் செய்தியும் தெரியவில்லை.

மன்னன் அவைப் புலவர்களெல்லாரும் இது தமக் குத் தெரியாத ஏதோ புதுமொழி என்று கூறிக் கைவிரித் தனர். ஆனால் மன்னன் அமைச்சனிடம், “நாளை உச்சிப் பொழுதுக்குள் இதை யாரைக்கொண்டாவது நீ புரிய வைக்க வேண்டும். இல்லாவிட்டால் உன் தலை போய் விடும்,” என்றான்.

உச்சிப் பொழுதுவரை அவைப் புலவர் மூளையைக் குழப்பிக்கொண்டனர். அமைச்சனோ என்றும் தொழாத முறையில் எல்லா நெறிகளுக்கும் உரிய தெய்வங்களுக்கும் மாறிமாறித் தொழுகை புரிந்தான். ஆனால் உச்சிப் பொழுதில் ‘அம்மொழி எனக்குத் தெரியும்’ என்று கூறி ஒருவன் வந்தான். அது பாலி மொழி. 4’கிழக்கு நோக்கி மூன்று தடவை தலைவணங்கி இத்தூளை உண்பவன் உண்ணும்போது விரும்பிய எந்தப் பறவை அல்லது விலங்கு வடிவத்தையும் அடைவான். அத் துடன் அவ்வப்பறவை அல்லது விலங்கு மொழியையும் அப் பொடியின் ஆற்றலாலேயே உணர்ந்து அவற்றுடன் உரையாடுவான். அவன் பழைய உருவமடைய விரும்பி னால் புத்தகுரு என்ற இறைவன் பெயர் கூறிக் கிழக்கு நோக்கி மூன்று தடவை வணங்க வேண்டும். ஆயினும் விலங்கு அல்லது பறவை வடிவத்திலிருக்கும் போது அவன் எக்காரணங் கொண்டும் சிரித்துவிடக்கூடாது. சிரித்தால் சொல்லவேண்டிய இறைவன் பெயர் மறந்து விடும். விலங்கு அல்லது பறவை வடிவத்திலேயே இருக்க வேண்டி வரும்,” என்று அவன் அப் பாலிமொழி எழுத்துக்களைப் படித்துக் கூறினான்.

மன்னன் இது கேட்டு எல்லையிலா உவகை கொண் டான். பாலிமொழியாளன் வாய் நிறையச் சர்க்கரை யிட்டுக் கை நிறையப் பொற்காசுகள் கொடுத்தனுப்பி னான். அனுப்புமுன் அமைச்சன், “அரசே! சொன்னது சரியா என்று பாராமல் அவனை அனுப்பலாமா?” என்று கேட்டான்.

அரசன்! “ஆகா! அப்படியே செய்தால் போயிற்று. வா! இங்கே வந்து நீயே அதை மெய்ப்பித்துக் காட்டு. எங்கே என் நல்லமைச்சனை ஒரு கறுப்பு நாயாக நான் என் கண் முன்னே காணட்டும்!” என்றான்.

மன்னன் குணமறிந்த அமைச்சன் மறுத்துப் பேசாது தூளை முறைப்படி உட்கொண்டான். மறுகணம் அவன் ஒரு கறுப்பு நாயாகி மன்னனை நோக்கி வால் குழைத்து நின்றான். அந்த உருவத்திலும் அமைச்சன் கண் ஒன்று குருடாகவும் பல் உடைந்தும் இருப் பதைக் கண்ட மன்னன் குலுங்கக் குலுங்க நகைத்தான். அமைச்சன் மட்டும் வருந்தித் தன்னையடக்கிக் கொண்டு சிரிக்காமலிருந்தான். சிரித்தால் திரும்ப அமைச்சனாக முடியாது என்பதை அவன் மறக்கவில்லை. விரைவில் அவன் நாயுருவம் மாற்றி மன்னனுடன் மாயப் பொடி யின் உதவியால் பல உருவெடுத்து நாடு சூழ்வந்து வேடிக்கை பார்த்துக் களித்தனர்.

குயிலுருவிலும் குருவியுருவிலும் இருவரும் அடிக் கடி சென்று பிறர் அறிய முடியாத பல செய்திகளையும், பிறர் மறைசெய்திகளையும் அறிந்து உலாவினர். இந்த உலாவில் ஒரே ஒரு புது நிகழ்ச்சிதான் மன்னனுக்கு அதிர்ச்சி தந்தது. ஒரு தடவை ஈ உருவெடுத்து ஒரு மதில் பக்கம் குந்தியிருக்கையில் மன்னனை ஒரு சிலந்தி பரபரவென்று வந்து விழுங்க விருந்தது. அமைச்ச ஈ மன்னனை வெடுக்கெனக் கடித்திழுத்துச் சென்றிராவிட் டால் மன்னன் சிலந்தியின் வயிற்றுக்கு இரையாகியிருப் பான். மாற்றுருவில் ஏற்படும் இவ்விடையூற்றிந்து அவர்கள் அது முதல் ஈ முதலிய நோஞ்சல் உயிர் வடிவம் எடுப்பதில்லை.

மாய நாரைகள் – ஒரு நாள் மன்னனும் மதியமைச்ச னும் கடற்கழிகளின் பக்கமாக உலவிக்கொண்டிருந்த னர். அவர்கள் உடை பொதுநிலை உடையாயிருந்ததனால், யாரும் அவர்களை மன்னனென்றும் மதியமைச்சனென் றும் கண்டுகொள்ளமுடியாது. கடலடுத்த எரிக்கரையில் அவர்கள் கண்ட ஒரு காட்சி அவர்கள் ஆர்வத்தைத் தட்டி எழுப்பிற்று. ஓர் அழகிய பால்வண்ணச் செங்கால் நாரை தலையைச் சாய்த்தும் கழுத்தைக் கோணியும் காலை மாறிமாறித் தூக்கியும் வகைவகையாக ஆட்டங்காட்டி நின்றது. அந்த ஆட்டத்தின் பொருளென்னவென்றறிய அரசன் அவாக்கொண்டான். உடனே இருவரும் நாரை யுருவெடுத்து அந்தப் பால்வண்ணச் செங்கால் நாரை யிடம் சென்றனர்.

செங்கால் நாரை தன் நாரை விருந்தினரைக் கண்டு அகமகிழ்ந்து ஒரு மீன் துண்டத்தை விருந்தாக அளித் தது. அரச நாரையோ நாரையுருவிலிருந்தாலும் அரச னானதால் நாரை உணவை உண்ண விரும்பவில்லை. அது கண்ட செங்கால் நாரை அதனிடம் இன்னும் பரிவுடன் பழகிற்று. அப்போது அமைச்ச நாரை அதன் ஆட்ட பாட்டத்தின் காரணம் கேட்டது. அதற்குச் செங் கால் நாரை அழகிய குழைவுநெளிவுடன், ‘அதுவா, நாரை அரசனும் பெருமக்களும் கூடிய அவையில் நான் முதன் முதலாக ஆடல் அரங்கேற்றப் போகிறேன். அதற்காகப் பழக்கிக்கொள்கிறேன்’ என்று கூறிப் பின் னும் ஒருமுறை தன் நீண்ட கழுத்தை வளைத்துக் கால் களை முடக்கிக் கண்களை உருட்டிக்காட்டிற்று. அது கண்ட அரச நாரைக்குச் சிரிப்பை அடக்கமுடியவில்லை. அறிவாற்றல் மிக்க அமைச்ச நாரையும் அரசன் செய் வதுபோல் செய்யும் பழக்க மிகுதியால் சிரித்தது. தன் னைக்கண்டு சிரித்த விருந்தினர்மீது கடுங்கோபங்கொண்டு செங்கால் நாரை பறந்து போய்விட்டது.

மன்ன நாரையும் மதியமைச்ச நாரையும் இப்போது மனித உருவம் பெற முயன்றன. ஆனால், அந்தோ! பழைய உருவமடைவதற்கான மந்திரத் தெய்வத்தின் பெயர் நினைவுக்கு வரவில்லை. தாம் செங்கால் நாரையின் ஆடல் கண்டு சிரித்ததற்கு இப்போது மன்னன் வருந்தினான். மதியமைச்சனும் வருந்தினான். நாரை தந்த உணவை உண்ணாததால் கடும்பசி உண்டாயிற்று. ஆனால் இப் போதும் மன்னன் நாரையுணவை நாடவில்லை. அரசவை உணவையே நாடினான். தங்கிடமும் வேறு காணமுடியாமல் அவர்கள் அரண்மனை நோக்கிப் பறந்து சென்றனர்.

அரசனுக்காகக் கொண்டுவரப்பட்ட உணவு திரும் பக்கொண்டுபோகப்பட்டது. அரசன் அதை அணுகு முன் பணியாட்கள் அவனைத் துரத்திவிட்டனர். அதைப் பணியாட்களே தின்பதையும் அரசன் கண்டான். இரவு முற்றிலும் பட்டினிகிடந்தபின் காலையில் வேறுவழி யின்றி இரு நாரைகளும் ஏரி தேடிச்சென்று மீன் நாடி உண்டன.

மன்னனும் அமைச்சனும் நாரைகளாகவே மன வருத்தத்துடன் நாடும் காடும் திரிந்தனர். மக்களோ மன்னனை நெடுநாள் காணாததால் பருகச்சநகரிலிருந்த மாயாவி கஸ்ரூவையே அழைத்து மன்னனாக்கினர்.

மாயாவி மன்னனாகப் பவனி வந்தான். மன்னன் நாரை வடிவில் செயலற்றுப் பார்த்துக்கொண்டு பறந்து திரிந்தான்.

கிழவியாக வந்து பொடி விற்றதும், நாரையாக வந்து தம்மை ஆவலூட்டிச் சிரிக்கவைத்து நாரையாக்கிய தும் அந்த மாயாவியே என்று அமைச்ச நாரை உணர்ந்து கொண்டது. ஆனால் மாயாவீயின் மாயத்தில் அதன் நன்மதி சிக்குண்டு கிடந்தது.

மாய ஆந்தை – மாய நாரைகளிரண்டும் எங்கும் திரிந் தன. மன்ன நாரை அடிக்கடி மனமுடைந்து உயிரை மாய்த்துக்கொள்ளலாம் என்று கருதும். ஆனால் அமைச்ச நாரை மாயாவிகளின் பழங்கதைகள் பலவற்றை எடுத் துரைத்து, ” மாயம் எப்போதும் சில காலந்தான் வெல் லும்; அஃது இறுதியில் அழிவது உறுதி,” என்று அறி வுறுத்தித் தேற்றிற்று.

ஒருநாள் நாரை மனிதமொழியிலேயே மனங்கவரும் சோகப்பாடல் ஒன்றைக் கேட்டு மருட்சி கொண்டது. பாட்டு ஓசை வந்த திசையில் சென்று இரண்டும் தேடின. அப்போது முழு நிலா எறித்துக்கொண்டிருந் தது. நீரோடைகளிலெல்லாம் பாலோடைகள் பளபளத்தன. நாணற் கொடிகள் அப்பாலோடைகளை நாடி வளை யும் கருநாகங்கள் போல் காட்சியளித்தன. அவற்றைப் பார்த்துத் தூங்கிய ஏக்கக் கண்களுடன் ஓர் ஆந்தை பட்ட மரக்கொம்பொன்றில் பரிவுடன் குந்தியிருந்தது. பாட்டுப் பாடுவது அந்த ஆந்தைதான் என்று கண்டு அரச நாரையும் அமைச்ச நாரையும் அதனிடம் சென்று மனித மொழியிலேயே பேச்சுக்கொடுத்தன. ஆந்தையும் மனிதமொழி தெரிந்த நாரைகளைக் கண்டு வியப் படைந்து, தானும் மனிதமொழியிலேயே பேசிற்று.

“ஆந்தை நங்கையே உன் பாட்டின் இசை என்னைப் பரவசப்படுத்துகின்றது. நீ ஆந்தையன்று, ஓர் அரசிளங் குமரியாயிருக்கவேண்டும்,” என்று மன்ன நாரை புகழ்ந்தது.

“ஆம் நாரையரசே நான் இந்துஸ்தானத்து மன்னன் மகள் ரோது மக்கன் தான். ஒரு மாயாவி என்னைத் தன் மகனுக்கு மணம் செய்விக்க எண்ணினான். நான் இணங் காததால் ஒரு மாயப் பழத்தைத் தின்ன வைத்து ஆந்தை யாக்கிவிட்டான். நான் என் தந்தையையும் சுற்றத்தாரையும் பிரிந்து இரவில் இடுகாடும் பாழ்வெளியும் திரிந்து வருந்துகிறேன்,” என்று ஆந்தை நங்கை இனிய சோகக் குரலில் அழுதது. மன்னனும் உடனழுதான்.

ஆந்தை மீண்டும் மன்னனைப் பார்த்து “நாரை இளைஞரே! நீரும் நாரையாயிருக்கமுடியாது. நல்ல நாகரிகமுடையவராயும் காணப்படுகிறீர். நீர் யாரோ?” என்றது.

மன்ன நாரை “ஆம். நானும் ஓர் அரசன் தான். இதோ என் தோழன் என் அமைச்சன்” என்று கூறித் தன் கதையைச் சொல்லிற்று.

ஆந்தை, “ஆகா! நானும் கேள்விப்பட்டிருக்கிறேன், பாரசீக அரசன் மசூக்கும் அமைச்சன் மன்சூரும் திடீரென்று காணாமற்போய்விட்டார்கள் என்று. நீங்கள் நாரையாகவா வாழ்கிறீர்கள். அது கேட்டு நான் வருந்துகிறேன். ஆனால் இன்னொரு வகையில் நான் மகிழ்கிறேன். எனக்கு ஒரு நாரையால் நன்மை ஏற்படும் என்று என் இளமையில் ஒரு குறிகாரன் கூறியிருந்தான். என்னை நீர் மணந்துகொள்ள இசைந்தால் எனக்கு மகிழ்ச்சி உண்டாகும்,” என்றாள்.

மன்னன், “நான் என் அமைச்சனுடன் அதுபற்றிப் பேசிப் பின் மறுமொழி கூறுகிறேன்,” என்று அகன்றான்.

மன்னன் தனியிடம் சென்று அமைச்சனைப் பார்த்து, “ஆந்தைங்கையிடம் எனக்கு இரக்கம் தோன்றி விட்டது. அதற்கு உதவி செய்ய வேண்டும்,” என்றான்.

அமைச்சன், “அரசே முன்னே ஒரு மாயக்கிழவியை யும் மாய நாரையையும் கண்டு ஏமாந்து போனோம். இந்த மாய ஆந்தை கூறுவதை நம்பி ஏமாறக்கூடாது. மேலும் தாங்கள் போயும் போயும் இந்த அந்தசந்தம் கெட்ட ஆந்தையையா மணப்பது” என்றது.

மன்னன், “அதெல்லாம் முடியாது, அந்த ஆந்தை இளவரசியை மணக்கத்தான் வேண்டும்,” என்றது.

அமைச்சன், “சரி. தங்கள் விருப்பம் அதுவானால் அதன்படி நடக்கட்டும். ஆந்தையை நீங்கள் மணந்து கொள்ளுங்கள்,” என்றான்.

மன்னன், “மணப்பது நானன்று; நீதான். நீ அதை அந்தசந்தம் கெட்டது என்றாய், நீ அந்தசந்தம் கெட்ட வன் என்பதை மறந்து நீதான் அதை மணக்க வேண்டு மென்று கட்டளையிடுகிறேன்,” என்றான்.

அமைச்சன் மனக் கிளர்ச்சியில்லாமலே ‘சரி’ என்றான்.

ஆனால் அவர்கள் பேச்சுக்கிடையே ஆந்தை கடுஞ் சினத்துடன் அலறிற்று. “ஆகா, அரசே! என்னையா ஏமாற்றப் பார்க்கிறாய். நான் மணந்தால் ஓர் அரசனை மணப்பேன். இல்லாவிட்டால் இதோ……..”

ஆந்தை கழுத்து முறிந்து விடுவது போல் பாவித்தது.

அரசன் ஓடோடி ஆந்தையைத் தாங்கி “உன்னை நான் மணப்பதாக உறுதி கூறுகிறேன். மனம் கலங்காதே!” என்றான்.

ஆந்தை மனமகிழ்ந்தது. ஆனால் அடுத்த கணம் அது கீழே விழுந்தது.

கீழே ஆந்தையைக் காணவில்லை. அழகான இளவரசி நின்றாள்.

இளவரசி இப்போது நாரைகளை ஏறிட்டுப் பார்க்கக் கூடவில்லை. சரேலென்று நடந்தாள். நாரைகள் பின் தொடர்ந்தன.

பாரசீகம் கடந்து காடுமேடு நடந்து இளவரசி இந்துஸ்தானத்துக்குள் நுழைந்தாள்.

நாரைகளும் உடன் சென்று இந்துஸ்தானத்தின் எல்லையில்லா அழகைக் கண்டு வியந்தன.

யமுனைக் கரையில் இளவரசி வந்து நின்று ஆற்று நீரின் அழகைக் கண்டு பரவசப்பட்டு நின்றாள். அச் சமயம் ஆற்றில் ஓர் அழகிய பொன்படகு மிதந்து வந்தது. அதில் தாடி மீசையுடன் அழகிய அரசவை உடையில் ஒருவர் அரியணையில் வீற்றிருந்தார்.

அவரைக் கண்டதும் இளவரசி கைதட்டி ‘அப்பா, அப்பா’ என்று கூவினாள்.

அவன் இந்துஸ்தானத்தின் அரசன்; அவன் படகைக் கரைப்பக்கம் செலுத்தினான். இளவரசி படகிலேறி மன்னனை அணைத்துக்கொண்டாள். மன்னனும் கண் ணீர்விட்டு, ‘இத்தனை நாளும் எங்கே சென்றிருந்தாய் என் கண்மணி ‘ என்று கலங்கினான்.

நாரைகள் இளவரசியை விடாது பின்தொடர்ந்தன. படகோட்டி அவற்றை விரட்ட எண்ணி ஒரு கழியை எறிந்தான்.

அமைச்ச நாரையின் ஒரு கால் முறிந்தது. ஆயினும் நாரைகள் படகிலேயே வந்து ஒண்டிக்கொண் டன. அரசநாரை அச்சமயம் தன் மனித மொழியையும் அரச பதவியையும் பயன்படுத்தி “இந்துஸ்தானத்தின் அரசனான என் சோதரரே! வணக்கம்!” என்றது .

நாரை பேசுவதைக் கேட்டு இந்துஸ்தானத்து மன்னன் மலைத்தான். ஆனால் அதே சமயம் ஒரு நாரை தன்னுடன் சமத்துவ தோரணையில் உரையாடுவது அவனுக்குப் பிடிக்கவில்லை. ஆகவே அவன் படகை விரைந்து ஓட்டும்படி படகோட்டிக்குக் கட்டளை யிட்டான்.

ஆனால் தற்செயலாகப் படகோட்டியின் பெயரே நாரைகள் மறந்துவிட்ட இறைவன் பெயர் புத்தகுரு ‘ வா யிருந்தது. இந்துஸ்தானத்து மன்னன் படகோட்டியை ‘புத்தகுரு’ என்று அழைத்துப் பேசினான். அந்தப் பேரைக் கேட்டவுடனே இரண்டு நாரைகளும் துள்ளிக் குதித்தன. கிழக்கு நோக்கி நின்று அவசர அவசரமாகத் தலையை மூன்று தடவை தாழ்த்தின. இரண்டும் ஒரே மூச்சில் ‘புத்தகுரு’ என்றன. உடன் இந்துஸ்தான் அரசன், இளவரசி ஆகியவர்களின் முன் இரண்டு நாரைகளிருந்த இடத்தில் அழகும் இளமையும்மிக்க ஓர் அரசனும் கிழ அமைச்சர் ஒருவரும் நின்றனர்.

மன்னன் உடலில் வழக்கமான பாரசீக அரசன் உடையும் உடைவாளும் கிடந்தன. வைரங்கள் பதித்த அந்தப் பளபளப்பான உடைவாள் இந்துஸ்தானத்து அரசன் கண்களைப் பறித்தன. வாளின் தலையில் அந்த வாளை விட ஒளிவீசும் மணிக்கல் ஒன்று கண்களைப் பறித்தது. அஃது உண்மையில் ஒரு நூற்று நாற்பதி னாயிரம் பொன் பெறுமானமுள்ள அந்நாளைய உலகின் மிகச் சிறந்த மணிக்கல் ஆகும். இளவரசி அந்த மணியையும் வாளையும் பாரசிக அரசன் முகத்தையும் மாறி மாறி மலைப்புடன் பார்த்தாள்.

இந்துஸ்தானத்து அரசன் பாரசீக அரசனை முறைப்படி வணக்கம் செய்து வரவேற்றுத் தழுவினான்.

பாரசீக அரசன் மசூக் இளவரசியின் முன் மண்டி யிட்டு, “உனக்கு வாக்களித்தபடி உன்னை மணக்க விருப்புகிறேன். உன் விருப்பமும் என் சோதர அரசன் விருப்பமும் அறியக் காத்திருக்கிறேன்.” என்றான்.

இந்துஸ்தானத்து அரசன் மனமகிழப் பாரசீக அரசன் மசூக் இளவரசி ரோது மக்கனை மணந்து அணி செய்விக்கப்பெற்ற உச்சைனி நகரத் தெருக்களில் ஊர்வலம் வந்தான்.

சில நாட்களுக்குள் மாமனிடமும் மனைவியிடமும் பிரியா விடைபெற்று, நூறாயிரம் படைவீரருடன் பாரசீகத்தின் மீது மசூக் படையெடுத்துச் சென்றான். கஸ்ரூ போரில் தோற்றுக் கொலைத் தண்டனை விதிக்கப்பட்டான். அவன் மகன் ஆமீன் ஆதாப் அவன் தந்தையின் மாயத்தாலேயே ஒரு நாரையாக மாற்றப்பட்டு உருமாறி வெளியே போகாதபடி ஒரு பெரிய கூண்டில் அடைபட்டு வாழ்நாள் முழுதும் அல்லற்பட்டான்.

மசூக் தன் மனைவியான இந்துஸ்தானத்து இளவரசியை அழைத்து அவளுடன் மீண்டும் பட்டஞ் சூட்டிக்கொண்டான். மதியமைச்சன் மன்சூரை அவன் இதன் பின் என்றும் தன் கடுஞ் சீற்றத்துக்கும் குறும்புக்கும் ஆளாக்காமல், அன்பாக நடத்தினான். அவன் அறிவமைந்த நல்லுரையுடன் ஆட்சி இனிது நடந்தது.

– ஆண்டியின் புதையல், முதற் பதிப்பு: ஏப்ரல் 1953, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *