நாய்ப் பிழைப்பு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 9, 2014
பார்வையிட்டோர்: 29,315 
 
 

முன்குறிப்பு: இது, முழுக்க முழுக்க தனியார் நிறுவனம் ஒன்றில் நடந்த உண்மை நிகழ்வு. ஒருவேளை ஏதேனும் அரசு அலுவலகத்தில் நடந்திருந்தால், அதற்கு இந்தக் கதையில் வரும் நாய்கள் எந்தவிதத்திலும் பொறுப்பல்ல என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது!

அந்த நிறுவனத்தில், நிதித் துறை மேலாளர் கணேசனுக்கு எல்லோரும் பயப்படுவார்கள். அவருக்கு, ‘கறார்’ கணேசன் என்ற பட்டப்பெயரும் உண்டு. அவர் மேசைக்கு ஏதேனும் பணப்பட்டியல் போனால், ‘அது கையெழுத்தாகி வருமா அல்லது கொக்கி போட்டு வருமா’ என்று அனுப்பிய அலுவலர்கள், பிரசவ வார்டில் வெளியே காத்திருக்கும் அப்பாவைப் போலக் காத்திருப்பார்கள். அவ்வளவு லேசில் அது அனுமதியாகி வராது. கம்பெனியின் நிர்வாக மேலாளரே கணேசனைக் கண்டு கொஞ்சம் பயப்படுவார். அவரிடம் சொன்னால், ‘விதிப்படிதான்’ என்று தைரியமாகச் சொல்லிவிடுவார். சிரமமான பல கட்டங்களில் ‘முடியாது’ என்று சொன்ன அவருடைய பதில்களால்தான் அந்த நிறுவனம் ஒடுக்கல் விழாமல் சென்றுகொண்டிருக்கிறது என்பதை அனைவரும் அறிந்ததால்தான், அவருக்கு அந்த விசேஷ மரியாதை.

நாய்ப் பிழைப்பு

கணேசன், வெள்ளியால் ஆன வெற்றிலைப்பாக்கு பெட்டி ஒன்றை எப்போதும் வைத்திருப்பார். கொழுந்து வெற்றிலையை எடுத்து காம்பை மட்டுமில்லாமல்; நரம்புகளையும் லாகவமாக உருவி, பக்குவமாகச் சுண்ணாம்பைச் சேர்த்து சீவலோடு அவர் வெற்றிலையை உள்ளே தள்ளுகிற அழகே அலாதியானது. எப்போதும் மணக்கும் வாய்; அதிர்ந்து பேச மாட்டார்.

சிக்கலான பட்டியல் ஏதேனும் அவர் மேசைக்கு வந்தால், ஒரு வெற்றிலையை எடுத்து வாயில் போட்டுக்கொள்வார். அடுத்த நிமிடமே அதில் இருக்கிற அத்தனை குறைகளையும் கண்டுபிடித்துவிடுவார். கூட்டல், கழித்தல் உட்பட எந்த உபகரணத்தின் உதவியும் இல்லாமலேயே அவரால் சரியாக யூகிக்க முடியும். நிதித் தொடர்புடைய அத்தனை விதிகளும் அவருக்கு அத்துபடி. சில அலுவலர்கள், ‘பட்டியல், அவரிடம் போய் நிராகரிக்கப்படுவதற்கு முன்பு, அவரையே கேட்டு சரியாகத் தயார் செய்துவிடலாம்’ என்று நினைப்பதுகூட உண்டு. அடுத்தவர்கள் காசில் ஒரு தேநீர்கூட அருந்த மாட்டார். வீட்டிலிருந்து ஃப்ளாஸ்க்கில் காபி எடுத்து வருவார். மதியம், சின்ன டிஃபன் பாக்ஸ் ஒன்றில் இரண்டு தோசைகளும் தக்காளிச் சட்னியும் இருக்கும். காலை பத்து மணிக்கே தலைவாழை இலையில் கூட்டுப் பொரியலுடன் திவ்யமாகச் சாப்பிட்டு வந்துவிடுவார்.

அன்று காலையில் வழக்கம்போல் பக்தி ஸ்லோகம் ஒன்றை உச்சரித்துவிட்டு இருக்கையில் அமர்ந்தவருக்கு, முதலில் தட்டுப்பட்டது ஜோசப்பின் பயணப் பட்டியல். ஜோசப்புக்கு, ‘டைகர் ஜோசப்’ என்று பெயர். ‘ஏன் அப்படி அழைக்கிறார்?’ என்று புதிதாக வந்த எவருக்கும் தெரியாது. தொடக்கத்தில் கம்பீரமான ராஜபாளையம் நாய் ஒன்றை அவர் வைத்திருந்தார் என்றும், அதற்கு பெயர் ‘டைகர்’ என்பதால், அவரை அப்படி அழைப்பார்கள் என்றும் சொல்வார்கள்.

ஜோசப், ஒரு நாய் பிரியர். அவர் எப்போதும் நாய்களைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பார். நாய்கள் பற்றிய அத்தனைவிதமான தகவல்களையும் விரல்நுனியில் வைத்திருப்பார். ஆங்கில இலக்கியம் படித்தவர். திடீரென ‘ஷேக்ஸ்பியருக்குக்கூட நாய்கள்தான் பிடிக்கும்; பூனைகள் பிடிக்காது’ என்று சொல்வார். ‘ஷேக்ஸ்பியரின் ‘மேக்பத்’தில் ‘எல்லா நாய்களும் ஒன்றல்ல!’ என்று குறிப்பிடுகிறார் பாருங்கள்’ என்றும் சொல்வார். எதிராளிக்கு நாய் பிடிக்கிறதா என்பதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், உலகத்தில் இருக்கும் எல்லாவிதமான நாய்களைப் பற்றியும் விலாவாரியாகப் பேசுவார். நாய்களை அதிகமாக நேசித்ததாலோ என்னவோ, அவர் நடந்துவருவது, உட்காருவது போன்ற பாவனைகள் எல்லாம் கம்பீரமான ஒரு நாயைப்போலவே இருக்கும். எது எப்படியோ, அந்த நிறுவனத்தில் ஜோசப்பைப் போல யாரும் விசுவாசமாக இல்லை. ஒரு நாளும் வேறொருவர் சொன்னதை அவர் மற்றவர்களிடம் பகிர்ந்துகொண்டதே இல்லை.

ஜோசப்பின் பயணப் பட்டியலைப் பார்த்தவுடன் அவரையும் அறியாமல் கணேசனுக்கு இந்தச் சம்பவங்கள் எல்லாம் நினைவுக்கு வந்தன. பட்டியலில் ஜோசப் நான்கு முறை திருவனந்தபுரம் சென்றுவந்ததாக எழுதப்பட்டு இருந்தது. கணேசன் புருவத்தைச் சுருக்கினார். வெள்ளைவெளேர் என்றிருந்த அந்த முகம் சட்டென்று சிவந்துபோனது. வெள்ளிப் பெட்டியைத் திறந்து இளம் வெற்றிலை ஒன்றை எடுத்து வேட்டியில் தடவி, சீவலை வைத்து சுண்ணாம்பு சிட்டிகை சேர்த்து வாயில் போட்டுக்கொண்டார் கணேசன். கண்களை மூடி புருவத்தை நெறித்துச் சிந்தித்தார்.

‘கம்பெனி தொடர்பான எந்தக் கிளையும் திருவனந்தபுரத்தில் இல்லையே. அங்கு ஆய்வு செய்வதற்காக சென்றுவந்ததாக ஜோசப் எழுதியிருக்கிறாரே, இதை எப்படி அனுமதிப்பது’ என்பதுதான் கணேசனுக்கான சந்தேகம். ‘அவர் ஒருபோதும் பொய்ப் பட்டியலை அனுப்பிப் பழக்கப்பட்டவர் அல்ல; ஏன் இவ்வாறு எழுதினார், எதற்காக திருவனந்தபுரம் போனார்’ என்ற கேள்விகள் கணேசனுக்குள் எழுந்தன. ஜோசப்பையே விசாரித்துவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்தார். ஜோசப்பின் தொலைபேசி எண்களைச் சுழற்றினார். விவரம் கேட்டார்.

‘சார் அதெல்லாம் போன்ல சொல்ல முடியாது சார். நான் வேணும்னா கிளம்பிவந்து நேர்ல சொல்றேன்!’

கணேசன் அந்தப் பட்டியலை தூர வைத்துவிட்டு வேலையைத் தொடர்ந்தார்.

இரண்டு நாட்கள் கழித்து, அலுவலகம் முடியும் மாலை வேளையில் கணேசனைச் சந்திக்க வந்தார், ஜோசப். இருவரும் அலுவலக கேன்டீனுக்கு தேநீர் அருந்த சென்றனர்.

கம்பெனி எம்.டி-க்கு, வயது ஐம்பதுக்கு மேல் இருக்கும். பணம், சொத்து எல்லாம் இருந்தும் குழந்தைகள் இல்லாததால் ஒரு வெறுமை அவர் வாழ்க்கையில் இருக்கத்தான் செய்தது. ஆனால், அவர் கடுமையாக வேலையில் ஈடுபடுவதன் மூலம் அதைச் சுமுகமாக மாற்றிக்கொண்டார். மாலை நேர நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது, முடிந்த அளவுக்கு அவருடைய மனைவி ஷீலாவையும் அழைத்துச் செல்வார். ஷீலா, அப்படி ஓர் அழகு. நடந்து போகும்போது காற்று மண்டலத்தையே சுகந்தமாக்கிவிட்டுச் செல்லுமளவுக்கு சொர்ண விக்கிரகமாக வலம் வந்தாள்.

எம்.டி. சுதீர்குமார் எல்லா நேரமும் உடனிருக்க சாத்தியமில்லை. ஷீலாவின் துணையை அவர் வளர்த்த செல்லப் பிராணிதான் போக்கிவந்தது. அவளிடம் இருந்த நாய் ரகம் ‘பீகில்’ என்பது. பார்க்க மிகவும் அழகாக இருக்கும். அதை ‘ப்யூட்டிஃபுல் பீகில்’ என்றுதான் ஐரோப்பியர்கள் அழைப்பார்கள். அது, ‘வேட்டை நாய்’ வகையைச் சார்ந்ததுதான். சிறிய பிராணிகளான முயல் போன்றவற்றை அமுக்குவதில் அவை கில்லாடிகள். ஆனாலும் இன்று அவை அழகுக்காகவே வளர்க்கப்படுபவை. ஆள்பவர்களிடம் இருக்கிற நாய் ரகங்களும் பிரசித்தி ஆகிவிடுகின்றன. ராணி எலிசபெத் காலத்தில் இலக்கியத்திலும் ஓவியங்களிலும் அதிகமாக இடம்பெற்றவை அந்த ரகங்கள்தான். இப்போதுகூட திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும், காமிக் புத்தகங்களிலும் அதுதான் பிரசித்தம். ‘உலகப்புகழ் பெற்ற பீகில்’ என்றுதான் அதைச் சொல்வார்கள்.

ஷீலாவுக்கு அதை வளர்ப்பதில் ஒரு பெருமை. நாய்ப் பிரியர்கள், சின்ன வயதிலிருந்தே எந்த ரகத்தை வளர்க்கிறார்களோ, அதையேதான் எப்போதும் வளர்க்க ஆசைப்படுவார்கள். இப்போது ஷீலாவிடம் இருப்பது நான்காவது பீகில் நாய். கிடைத்தது பெண் நாய்தான். இருந்தாலும் போன இடத்தில் பார்க்க அழகாக இருந்ததால், குட்டியைத் தூக்கிக்கொண்டு வந்துவிட்டாள். அதற்கு கிரேக்கத்தின் அழகுக் கடவுளான ‘டயானா’வின் பெயரைச் சூட்டியிருந்தாள்.

‘பீகில் டயானா’ இப்போது வளர்ந்துவிட்டது. நாய்கள் எப்போதும் சில மாதங்களில்தான் பருவத்துக்கு வரும். அதுவும் ஆண்டுக்கு இருமுறைதான். டயானா, பருவத்துக்கு வந்துவிட்டது. அது செப்டம்பர் மாதம். 18 நாட்களுக்குள் இனச்சேர்க்கை நடக்கவேண்டும். ஷீலாவைப் பொறுத்தவரை ‘டயானா’ ஒரு நாய் அல்ல; வளர்ப்புப் பெண். இனச்சேர்க்கையை வயதின் காரணமாக இரண்டு முறை தவிர்த்துவிட்டார்கள். இப்போது புஷ்டியாக நன்றாகக் கொழுகொழுவென இருக்கிறது டயானா. தாராளமாக இனச்சேர்க்கை செய்யலாம். செய்துதான் தீருவது என்று ஷீலா முடிவெடுத்துவிட்டாள். மனைவியின் இந்தச் சராசரி ஆசையைக்கூட நிறைவேற்றாமல், சுதீர் நிம்மதியாக இருக்க முடியாது.

அலுவலகம் முழுவதும், ஜோசப்பின் நாய் குறித்த நிபுணத்துவம் அத்துப்படி. வேலையில் இருந்த ஜோசப்பை, தனது அறைக்கு வரும்படி அழைத்தார் எம்.டி.

‘ஜோசப்… எங்கள் வீட்டிலிருக்கும் டயானாவுக்கு எப்படியாவது இந்த முறை மேட்டிங் செய்யணும். இந்த விஷயமெல்லாம் எனக்குத் தெரியாது. நீங்கதான் ஏற்பாடு செய்யணும்’ என்று பேச்சைத் தொடங்கினார். ஜோசப் தனக்குப் பிடிக்காத எந்த ஒரு வேலையையும் யார் சொன்னாலும் கேட்காத சுபாவம் உள்ளவர். ஆனால், விஷயம் நாயைப் பற்றியது என்பதால், அவருடைய விழிகளும் ஜொலித்தன.

அன்றே எம்.டி., வீட்டுக்குச் சென்றார். ஜோசப்பைப் பார்த்ததும் அருகில் வந்து, கட்டைவிரலுக்குப் பக்கத்தில் இருக்கும் நெடுவிரலை முகர்ந்து பார்த்து அடையாளத்தை நினைவில் வைத்துக்கொண்டது டயானா. பொதுவாக நாய்ப் பிரியர்களை மிக எளிதில் நாய்கள் அடையாளம் கண்டுவிடும். அதற்குப் பிறகு டயானா, ஜோசப்புடன் விளையாட ஆரம்பித்தது. அதைப் பார்த்ததும் ஷீலா கண்களில் ஒளி மின்னல். கனிவான கரிசனத்துடன் ஜோசப்பை எதிர்கொண்டாள்.

‘என்ன சாப்பிடுகிறீர்கள்?’

‘இப்பத்தான் டீ சாப்பிட்டு வந்தேன்!’

‘பரவாயில்லை… ஜூஸ் சாப்பிடுங்க!’ என்றவள், பழரசம் கொண்டுவரச்சொல்லி வேலைக்காரப் பெண்ணைப் பணித்தார்.

‘ஹீட்டுக்கு வந்து எத்தனை நாளாகுது!’ என்று ஷீலாவிடம் கேட்டார் ஜோசப்.

‘ரெண்டு நாள் ஆகுது!’

‘இது ரொம்ப ரேர் ப்ரீட். கொஞ்சம் தேடித்தான் கண்டுபிடிக்கணும். நம்ம ஊர்ல இது அவ்வளவா பாப்புலர் இல்லை. நான் பார்க்கிறேன்!’

‘நீங்க என்ன பண்ணுவீங்களோ, ஏது பண்ணுவீங்களோ எனக்குத் தெரியாது; இந்த முறை டயானா கட்டாயம் குட்டி போட்டே தீரணும்!’ என்று சற்று அழுத்தமாகவே ஷீலாவிடம் இருந்து பதில் வந்தது.

அன்று இரவு முழுவதும் இணையத்தில் ஜோசப் தேடினார். பீகில் வைத்திருப்பவர்கள் பட்டியலைத் துழாவியபோது நான்கு வயதுள்ள ஆண் பீகில் ஒன்று, திருவனந்தபுரத்தில் ஒருவரிடம் இருப்பதாகத் தெரிந்தது. அந்தப் பெண்ணின் பெயர், வந்தனா. நல்லவேளை முகவரி கிடைத்துவிட்டது.

அடுத்த நாள், ஜோசப் திருவனந்தபுரத்துக்குச் சென்றார். வெகுநேரம் சிரமப்பட்டு அந்த முகவரியைக் கண்டுபிடித்தார். அழைப்பு மணியை அழுத்தியபோது 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கதவைத் திறந்தாள். முகத்திலேயே வெறுப்பும் எரிச்சலும் தெரிந்தன. ஜோசப்புக்கு ஓரளவு மலையாளம் தெரியும்.

‘என்ன வேண்டும், யார் நீங்கள்?’ என்று அந்தப் பெண் கேட்டாள்.

இது மாதிரி தகவலை எப்படி வாசலிலேயே நின்றுகொண்டு சொல்ல முடியும். எனவே ஜோசப், ‘கொஞ்சம் உங்களுடன் பேச வேண்டும்’ என்றார். அவள் அதை அவ்வளவாக விரும்பவில்லை. ஜோசப், தன் அடையாள அட்டையைக் காண்பித்த பிறகு முற்றத்தில் அமர அனுமதி தந்தாள். இதுவரை போலீஸிடம்கூட அந்த அட்டையை அவர் காட்டியது இல்லை. ஜோசப், சற்று இங்கிதம் தெரிந்தவர். சென்னையில் பல புத்தகக் கடைகளில் தேடி பீகில் பற்றி சுவாரஸ்யமான ஒரு புத்தகத்தை வாங்கிவந்திருந்தார். அதை அந்தப் பெண்ணிடம் கொடுத்தார். அவள் முகம் இப்போது சகஜ நிலைக்கு மாறியது.

‘அம்மா… என் கம்பெனியின் எம்.டி., அழகான பீகில் நாய் ஒன்றை வளர்த்துவருகிறார்.. ..’ என்று அவர் பேச்சை ஆரம்பிப்பதற்குள் கொழுகொழுவென்று ஒரு நாய் திமுதிமுவென வேகமாக ஓடிவந்தது. அது பீகில்தான். அது ஜோசப் மடியின் மீது காலை வைத்துக்கொண்டு வாலை ஆட்டியது.

‘ஹேய் டாமி… உள்ளே போ! வர்றவங்க மேல எல்லாம் ஏறக் கூடாதுனு எத்தனை முறை சொல்றது. அப்புறம் உனக்கு இன்ஃபெக்ஷன் ஆகிட்டா, நான்தான் அலையணும்’ என்று வந்தனா கத்தினாள்.

பிறகு, ‘டேய் பாஸ்கர் நாயே இங்கே வாடா… டாமியை ஏன் வெளியே விட்டே?’ என்று ஆவேசத்தில் சாமியாட, ஒருவர் பயந்தபடியே வந்து அதைக் கஷ்டப்பட்டு இழுத்துக்கொண்டு போனார். ஜோசப், விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்தார். விஷயத்தைச் சூசகமாகச் சொன்னார்.

‘புள்ளக்குட்டி இல்லாதவங்க. டயானாவைத்தான் குழந்தை மாதிரி வளக்கிறாங்க. உங்க டாமியோட மேட் பண்ணா நல்லா இருக்கும்…’ என்று இழுத்தவாறு நாசூக்காகச் சொன்னார். வந்தனாவுக்கு வந்ததே கோபம்.

‘கண்ட நாயோட எல்லாம் என் டாமியை மேட் பண்ணவைக்க முடியாது. இது இங்கிருந்த இங்கிலீஷ் வைஸ்ராயோட வீட்ல இருந்த பெடிகிரியைச் சேர்ந்தது. அவ்வளவு உசந்த இதை, ஏதோ ஒரு நாயோட சேரவிட முடியாது!’

ஜோசப்புக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. அந்தப் பெண் ‘நீ போகலாம்’ என்பதைப்போல எழுந்துவிட்டாள்.

ஜோசப், சென்னைக்குத் திரும்பினாலும் ஏதேனும் ஒருவகையில் எடுத்துக்கொண்ட காரியத்தை முடித்தே தீருவது என முடிவு செய்தார். வந்தனாவுக்கு இரண்டு மகன்கள். இருவரும் அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர்களாக இருக்கிறார்கள். கணவன் இறந்து பத்து வருடங்கள் ஆகின்றன. இப்போது டாமிதான் துணை. ‘வயதான காலத்தில் நாமும் இறந்துபோய்விடுவோம்’ என்ற ஒருவிதமான மனவியல் பார்வையே செல்லப்பிராணிகள் மீது பிடிப்பையும், அவை வேறு எந்த விலங்குடனும் சில நிமிடங்கள்கூட மகிழ்ச்சியாக இருந்துவிடக் கூடாது என்ற பொசஸிவ்னஸையும் ஏற்படுத்திவிடுகின்றன.

மறுநாள், மறுபடியும் ஜோசப் வந்து சென்றார். வந்தனாதான் வழக்கம் போல் கதவைத் திறந்தாள். ஜோசப்பைப் பார்த்ததும் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன.

‘நான்தான் ஏற்கெனவே சொல்லிவிட்டேனே ‘முடியாது’ என்று, ஏன் வந்து என்னைத் தொல்லை செய்றீங்க?’ என்று மலையாளம் கலந்த தமிழில் கேட்டாள்.

ஜோசப் சுதாரித்துக்கொண்டு, ‘நான் அதுகுறித்து வரவில்லை. இங்கே வேறொரு விஷயமாக வந்தேன். அப்படியே உங்களைப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்’ என்று சொன்னார். அவர் கொண்டுவந்திருந்த திருநெல்வேலி அல்வாவையும் அந்த அம்மாவிடம் கொடுத்தார்.

‘இதெல்லாம் எதற்கு?’ என்று முதலில் தயங்கிய அந்தப் பெண்மணிக்கு உள்ளுக்குள் திருநெல்வேலி அல்வாவைப் பார்த்ததும் முகத்தில் திடீரென ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிந்தது.

வந்தனாவுக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்ற தகவலை அவர் வீட்டு வேலையாள் பாஸ்கரிடம் பேசிக் கறந்திருந்தார். திருநெல்வேலி அல்வாதான் வந்தனாவின் வீக்னெஸ் என்று தெரிந்ததும் அதை வாங்கிக்கொண்டு போனார் ஜோசப். பிறகு, ‘சரிம்மா, நான் போய்ட்டு வர்றேன். என்னமோ உங்களை முதல்முறை பார்க்கும்போதே, எங்க அம்மா ஞாபகம் வந்திருச்சு’ என்று அண்டப்புளுகு ஒன்றை அவிழ்த்துவிட்டார். இந்த இடத்தில் ஒரு தகவல்… ஜோசப்புக்கே 58 வயதுதான் இருக்கும்.

நாட்கள் கடந்துகொண்டிருக்கின்றன. ஷீலாவிடமிருந்து வேறு நெருக்கடி. ஜோசப், மறுபடியும் திருவனந்தபுரம் சென்றார். இந்த முறை அழகான ஒரு பருத்தி சேலை. இரண்டு முறை சென்றபோதும் வெண்சங்கு நிறத்தில் வந்தனா உடுத்தியிருந்த புடவையைப் பார்த்ததால், அதே வண்ணத்தில் சரிகை வைத்த புடவை, கொஞ்சம் அல்வா, சாத்தூர் காரா சேவ் ஆகியவற்றையும் எடுத்துச் சென்றிருந்தார். தனிமையில் வாடுபவர்களுக்கு, பொருட்கள் முக்கியம் அல்ல; முகம் தெரியாதவர்கள் காட்டுகிற அன்பு, அலாதியான மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த முறை, வந்தனாவின் போக்கில் பெரிய மாறுதல்.

‘ஜோசப், பசங்களை வெளிநாட்டுக்கு அனுப்பிட்டு தனிமையில வாடிட்டு இருக்கேன். உங்க அன்பு பரிசுத்தமானது. இன்னைக்கு நீங்க என்னோட சாப்பிட்டுத்தான் போகணும்’ என்று வற்புறுத்தினாள். தனிமையில் இருக்கும் வயோதிகர்களுக்கு கொஞ்சம் அன்பு காட்டினால் எப்படி உருகிவிடுகிறார்கள் என்பது ஜோசப்புக்குப் புரிந்தது. அவரும் மறுக்காமல் வந்தனா தயாரித்த அவியலை விரும்பிச் சாப்பிட்டார். சிவப்பு அரிசியில் அது மிகவும் ருசியாக இருந்தது.

ஜோசப், ‘எங்க எம்.டி-க்கு குழந்தைகளே இல்லை. அந்த அம்மா ரொம்ப நல்லவங்க. அந்த டயானாவைத்தான் புள்ள மாதிரி வளக்கிறாங்க’ என்று மட்டும் மீண்டும் சொல்லி நிறுத்திக்கொண்டார். வந்தனாவின் கண்களில் நீர் சொரிந்தது.

‘ஜோசப், டயானாவைக் கூட்டிட்டு வாங்க. எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. நீங்க என்ன ஜாதி, நான் என்ன ஜாதினு ரெண்டு பேருக்குமே தெரியாது. என்னை அம்மா மாதிரி நினைக்கிறீங்க. நமக்குள்ளேயே ஜாதி இல்லாதபோது, வாயில்லாத பிராணிகளுக்கு என்ன ஜாதி வேண்டியிருக்கு. டயானா – டாமி. பெயர் பொருத்தம்கூட நல்லாத்தான் இருக்கு!’

அலுவலக கேன்டீனில் தேநீரை உறிஞ்சிக்கொண்டே கணேசன் கேட்டார்…

”இப்ப என்னய்யா… டயானா செனயாயிருச்சா?’

‘ஆயிடுச்சி சார்… ஒரு ஏ.சி. கார் போட்டு என் சொந்த செலவுல திருவனந்தபுரம் கூட்டிட்டுப் போனேன். நல்லபடியா எல்லாம் முடிஞ்சது. இப்ப அநேகமா 40 நாள் ஆகியிருக்கும். இன்னும் 25 நாள்ல குட்டி போட்டுடும்!’

”அதுக்கென்னய்யா நீ அவ்வளவு பெருமைப்படறே! எல்லாம் சரி… ஆனா, இதுக்கு எப்படி கம்பெனி பணத்துல இருந்து டி.ஏ. கொடுக்க முடியும்? சொல்லு பார்க்கலாம்!’

ஜோசப் மௌனம் காத்தார்.

”நா வேணும்னா ஒண்ணு செய்றேன். எம்.டி-கிட்ட சொல்லி அதுக்கான செலவை அவருகிட்ட வசூலிச்சிக் கொடுத்திர்றேன். போதுமா?’ என்று அதிரடியாக ஓர் அணுகுண்டைப் போட்டார் கணேசன். ஜோசப் பதறிப்போனார்.

”வேணாம் சார்… அது ரொம்ப கேவலமா இருக்கும். நான் சொந்தமா நாய் வளர்த்திருந்தா எவ்வளவு செலவு பண்ணியிருப்பேன்… அந்த மாதிரி இதை நெனைச்சிக்கிறேன். என்னோட டி.ஏ., பில்லை வித்ட்ரா பண்ணிக்கிறேன்!’

ஜோசப் சாப்பிட்டவற்றுக்கும் தேநீருக்கும் வலுக்கட்டாயமாகப் பணத்தைக் கொடுத்துவிட்டு, அவரை அலுவலகத்துக்கு அழைத்துச்சென்றார் கணேசன்.

– ஆகஸ்ட் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *