(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நீலவானம் ஒரே லயத்தில் பளீரென்று விரிந்து கிடந் தது. துணுக்கு மேகமொன்று அபூர்வ மாக தெளிந்த நீலத்தி னுள் பளீச்சென்று அடையாளங் காட்டிற்று; முயற்குட்டியொன்று புல்வெளி யொன்றினுள் இலக் கற்று ஓடிக் கொண்டிருப்ப தனைப் போல.
பாரதிக்கு அந்த மனநிலை யிலும் நிறைவான சிரிப்பொன்று இதயத்தினுள்ளே அவிழ்ந்து உதிர்ந்தது. தன் பூனைக் கண் களை இமைக்காமல் ஆகாயத் தையே பார்த்துக் கொண்டிருந் தாள். வடிவம் மாறுகின்ற பிஞ்சுமேகம் இப்போது இரண் டாக உடைந்து வெள்ளைக் கோழிகளாக அவளின் கண் களுக்கு அடையாளம் சொல்லி ஒன்றை ஒன்று துரத்திக் கொண்டிருந்தன.
சரசரவென்று சத்தம் கேட் டது. மெல்லத் திரும்பிப் பார்த் தாள். காட்டுக் கோழியொன்று காரைப் பற்றைகளுக்கு ஊடாக வீரிட்டவாறு சென்றது. நெஞ் சைக் கவ்வி வேதனைப்படுத்திற்று அந்த வீரிடல். என்னைக் காப்பாற்றுங்கள் என்று அலறிய அந்தக் குரல் சட்டென்று ஒடுங்கிக் கரைந்தது. சிவஞானம் இப்போது அந்தக் கோழியின் கழுத்தை முறித்து, அதன் இறக்கைகளை உரிக்கத் தொடங்கியிருப்பான்.
ஆகாயத்தில் இரண்டு கோழிகளும் நூல் நூலாகக் கிழிந்து போயிருந்தன. பாரதி தன்னெதிரே பார்த்தாள். நாயுருவிச் செடிகளில் கொத்துக் கொத்தாய் பச்சைக் காய்கள். மஞ்சளும் சிவப்புமாய் சின்னச் சின்னப் பூக்கள், மெல்ல எழுந்து போய் பூக்களையும் காய்களையும் உருவிப்பிடுங்கினாள். சின்னஞ்சிறு சருகுகளை உதறினாள், வாய்க்குள் போட்டு லேசாகக் கடித்து உமிழ்ந்தாள்.
விநோதமான ருசியை உணர்ந்தாள். புளிப்பும் கசப்பும் கலக்கப்பட்ட பசபசவென்ற ருசி. பூக்கள் இவற்றோடு சேர்ந்து அரைபட்டு நாக்கை இலேசாகவே எரிந்து சுணைக்க வைக்கின்ற சலிப்பேதும் தராதருசி. எதையும் துப்ப விரும்பாமல் மென்று விழுங்கச் சொல்லுகின்ற சுவை, நினைவுக் குருவி விரைந்து எழுந்து பறந்து பின்பக்கம் விரைந்து இறந்த காலத்து மரத்தின் விரிந்த கிளையில் உட்கார்ந்தது.
சட்டென்று வீட்டின் பின்பக்கம் மனதினுள்ளே சித்திரம் தீட்டிற்று. செழுமையான சோலையாக அவளின் அக்கா கமலம் அதை வளர்த்திருந்தாள். அன்னமுன்னா, கொய்யா, ஒட்டுமா மரம், தோடை, எலுமிச்சை … எந்த நேரமும் பூவாய், காயாய், பழமாய் சொரியும் சோலை. செல்வக் குழந்தைகளிடையே கவனிப்பாரற்ற ஏழைச் சிறுவனாய் அந்த நாயுருவி. என்ன காரணத்தாலோ அதன் பூவையும் காயையும் பரிவோடு தொட்டு ஒற்றைக் காயைப் பிடுங்கி மென்று தின்னுவாள் பாரதி. கமலத்திற்கு அது பிடிக்கவே பிடிக்காது. தங்கையை மென்மையாகக் கடிந்து கொள்வாள். அடுத்த காயைப் பிடுங்காமல் தடுப்பாள்.
பாரதிக்கு கண்களிலே நீர்முட்டிற்று. மனதினுள்ளே நெருஞ்சி முட்கள் ஊர்ந்தன. உதடுகள் நடுங்கின. உடலிலிருந்த பலமெல்லாம் வடிந்தாற் போல களைப்பு உண்டாகிற்று. நாயுருவிக்குப் பின்னே தெரியும் உடல்பருத்து உயர்ந்து வளர்ந்த பாலை மரத்தைத் தொட்டு நின்றன அவளது கண்கள்.
அந்தச் சுற்றுமதில், அழகான நாற்சார் வீடு, வீட்டின் சாமான்கள், ஆசையாய் உறவு பாராட்டி வளர்த்த மரஞ்செடிகள்… எல்லாமே கமலத்தைப் போல சிதைந்து போய்விட்டன. எல்லாமே, கமலத்தை எல்லாருமே மாதாளம் பழம் என்று சொல்வார்கள். முற்றிப் பழுத்து செக்கச் செவலென்று சிவந்த செழுமையான மாதாளம்பழம். அந்த மாதாளம் பழம். அவர்களின் வீட்டைப் போலவே உடைந்து சிதறி மணிமுத்துகள் பரவி கதை முடிந்து போயிற்று.
“அக்கா …”
“என்னடா?’
அக்காவிற்கு விசித்திரமான நீலக் கண்கள், பளபளக்கின்ற மாபிள்க் கண்கள், கமலாவை நேசம் பொங்க விழுங்கிற்று கமலாவின் கண்கள். சட்டென்று மலர்ந்து சிலிர்த்தாற் போல பளபளத்தன அந்தப் பெரிய கண்கள்.
“உங்களினுடைய ஆசை என்ன?’
“உம்மை நான் டொக்டராகப் பார்க்க வேணும்…”
செல்லக்கோபம் பாரதியின் முகத்தில் வண்ணத்துப் பூச்சியாகச் சிறகடிக்கும். குரல் சிணுங்கலோடு அதட்டும்:
“உங்களின்ரை ஆசையைக் கேட்கிறேன்….?’
கேள்வியோடு அவளைப் பார்ப்பாள் கமலம்.
“உம்முடைய ஆசைதான் என்னுடைய ஆசையும். உம்முடைய ஆசை தான் என்ன?”
“நான் டொக்டராகவே வரவேணும்…”
“நானுந்தான்….”
முகம் பூரிக்கத் தொடர்வாள் கமலம்:
“சாதாரண மக்களுக்கு இந்தத் தொழிலாலை நிறைய நன்மை செய்ய முடியும்…”
“உண்மைதான்…”
கையிலே சட்டென்று ஊசி ஏறிற்று. நினைவு கலைந்தது. பெரிய நுளம்பொன்று திக்குமுக்காடியவாறு விர்ரென்று பறந்தது. தோல் சுணைத்து எரிந்தது. எரிச்சலோடு தோலை அழுத்தி உரஞ்சினாள். காலடியிலே மஞ்சளும் கபில நிறமும் கலந்து பாலை இலைச்சருகொன்று குருவியாகத் தாழ்ந்து பறந்து வந்து அமர்ந்து கொண்டது. அந்தச் சருகினை பூவொன்றினைப் போன்று மென்மையாக எடுத்தாள். மேற்புறம் பளபளவென்று மஞ்சளும் பச்சையும் கலந்திருந்தது. உள்ளங்கையில் படுத்திருந்த அடிப்புறம் சொர சொரப்பாக இருந்தது. தன்னையறியாமலே விரலில் தடவிவிட்டு ஓரமாக எறிந்தாள்.
இந்த நிலையைப் போல, வாழ்வின் நினைவுகளிலே கசந்து போனவையெல்லாம் சருகாக உதிர்ந்துபோனால் என்ன, உதிர்ந்து போன சருகினை வீசி எறிந்தாற் போல மனதிலே கிடக்கும் கசப்பான காயங்கள் யாவற்றையும் எடுத்து எறிய முடிந்தால் எவ்வளவு நல்லதென்றே நினைத்தபோதே சிரிப்பும் வேதனையும் கயிற்றுப் புரிகளென முறுகின.
அவர்களின் வீடு சிறியதுதான். ஆனால் அழகானது, தன்னுள் கால்வைக்கின்ற எவரையும் வசீகரித்து நெகிழவைத்து திரும்பத் திரும்பப் பார்க்க வைத்து கவர்கின்ற அழகிய சித்திரம், வாசலில் நறுமணங்கமழும் பூக்களின் இதழ்களிலே, தண்ணீர் வார்க்கின்ற போது பூக்கள் மலர்ந்து புன்னகையை உதிர்த்தி சிலிப்பதாக கமலம் அடிக்கடி சொல்லி புளகாங்கிதமடைந்து அவளே பூவாகி மகிழ்வாள். பால் துளிகளாய் பூச்சொரியும் மல்லிகைப் பூக்களின் தாயான செடியை அவள் நேசித்தாள். அதனோடு தொட்டுத் தொட்டுப் பேசுவாள். ஷெல் விழுந்து எல்லாரும் ‘பங்க ருக்குள் தஞ்சம் புகுந்து விட்டு வெளியே வந்ததும் கமலம் ஓடிப்போய் முதன் முதலில் பார்த்தது மல்லிகைப் பந்தலைத்தான். எரிந்து சிதைந்து உருக்குலைந்த சடலமாய்க் கிடந்தது மல்லிகை, அதைக்கண்டு பேச்சு மூச்சற்று நின்றவளின் முகம் அதைத்துப் போயிற்று. அன்று பறிபோன அவளது புன்னகையும் மலர்ச்சியும் கடைசிவரை திரும்பி வரவில்லை. கற்பனையாகத் தொலைந்து போயிற்று. அதைப்பற்றி யார் அக்கறை கொண்டனர்?
“அக்கக்கா …”
–
வேப்பம் பூவின் மென்மையோடு தோளைத் தொட்ட குரலிற்காக இடது பக்கமாகத் திரும்பினாள் பாரதி. வயிற்றைக் குமட்டும் நாற்றத்தினை அணிந்துகொண்டு காவிப்பற்களோடு நின்றாள் சுமதி.
“அக்கக்கா பசிக்குது… பசிக்குது…”
பாரதியின் இதயம் சூடு பொசபொசக்கும் தண்ணீர்ப் பானைக்குள் உடைந்து விழுந்து வெம்மையில் துடிதுடித்தது. பெற்றோரைக் கண்முன்னே இழந்த கணம், அடுத்த கணத்தினை விழுங்கி முவடிதற்குள் தனது சுயத்தை இழந்து புலம்பத் தொடங்கினவள் சுமதி, ஜனவரி முதலாம் திகதி அதிகாலையில் சரியாகப் பிறந்தவள். பதினாறு வயதாகி விட்டது.
“அக்கக்”
“சரி பின்னாலை வா…” முன்னே நடந்தாள் பாரதி.
கைகளைத் தட்டி பரவசமாகத்துள்ளினாள் சுமதி. அவளையறியாமலே இடுப்பு முடிச்சு விடுபட்டு பாவாடை கழன்று பெரிய இலையாய் உதிர்ந்தது. விகற்பமின்றி வந்த அவளைப் பரிவோடு தொட்டன பாரதியின் கண்கள். அப்போதும் அவள் துள்ளியவாறு காட்டுக் கோழி போல எந்தக் கூச்சமுமின்றி வந்து கொண்டிருந்தாள்.
“சுமதி…”
அவளின் பிடரியைத் தொட்டு அடித்தது பாரதியின் அதட்டல். புன்னகையோடு துள்ளலைக் குறைத்தவாறே, “என்னக்கக்கா” என்றாள்.
“பாவாடையைக் கட்டும்….”
அப்போதே அவளின் கண்கள் பாவாடையைத் தேடின. சருகுத் தரையின் இழுபட்ட பாவாடையைத் தூக்கியபோது, மூக்கினுள் துர்நாற்றம் அறைந்து நுழைந்திட பாரதி முகத்தைச் சுழித்துக் கொண்டாள்.
பாரதியின் மனம் தலையிலே கைவைத்துப் புலம்பிற்று. விம்மல் சுழித்துக்கரைந்தது.
“இவளின் எதிர்கால வாழ்க்கை எப்படி ஆகப்போகிறது? இவளும் கமலாவைப் போல கொதறக் கொதறச் சிதைக்கப் படமாட்டாள் என்பதற்கு எவரால் உத்தரவாதம் தரமுடியும்?”
“சுமதி…”
“அக்கக்கா …”
“இந்தப் பாணைச் சாப்பிடும்…”
சந்தோஷமாக வாங்கிக் கொண்டாள்.
சுற்றிலும் பார்த்தாள் பாரதி. மரங்களும் செடிகளும் கைகோர்த்து மனிதருக்குப் பாதுகாப்பாய் வேலி கட்டி நின்றன. அடர்ந்து விரிந்த மரக்குடைகளின் நிழலில் கிழிந்த பாய்களில் உதிர்ந்த சருகுகளாய் கிடக்கின்ற மனிதர்கள். குழந்தை ஒன்று கால் கைகளை உதவியவாறு வீரிட்டு அழுதது. எவரின் முகத்திலும் அந்த வீரிடல் சலனமெதையும் தோற்றுவிக்க வில்லை. தானே களைத்து அழுகையை நிறுத்திற்று அந்தப் பிஞ்சு. பாரதி அதனருகே சென்றாள். இந்தக் குழந்தையின் பசியை எவரால் ஆற்ற முடியும்? மூளைக் காய்ச்சலால் இறந்துபோன அந்த இளங்தாயை காட்டில் எறிந்து அந்த அழுகிய நாற்றம் எத்தனை தினங்களாகக் காட்டினை கவ்விப் பற்றி வயிறு குமட்டி அச்சம் கொள்ள வைத்தது.
குழந்தையைப் பார்த்தாள்.
சேற்றுள் அமுங்கி சிதைவுற்ற இளமொட்டாகக் கிடந்தது. அதன் எதிர்காலம் சதுப்பு நிலமாகத் தெரிந்தது.
தலையை மெல்ல நிமிர்த்திய முகம் வார்த்தைகளை வக்கிரம் சொரியக் கொட்டிற்று:
“இந்தக் குட்டிப் பேய் எப்ப சாகப்போகுது…”
பாரதியின் நெஞ்சினுள் கூரிய அலகாகக் குத்தின அந்த வார்த்தைகள். இப்போது எந்தக் காயமும் நெஞ்சிலே ரணமாவதில்லை . கறையான் புற்றாகி விட்டது மனம்.
பாரதி எழுந்தாள்.
மலை வேம்பில் ஏட்டில் பாய்ந்த குரங்கின் வயிற்றை ஒட்டிய படியே இருந்த குட்டியினை வெறுமையாகப் பார்த்தான். நெஞ்சினுள்ளே அடுக்கடுக்காய் மூடியெழும் கறையான் புற்றுகள், பிரிக்கப்பிரிக்க கூடுகளாகும் துயரங்கள்.
காட்டின் உச்சந்தலையில் சூரியன் உட்கார்ந்தபடி வெய்யிலை உள்ளே கொட்டிற்று. பொறுக்க முடியாத இலைகள் சட்டென்று கருகி கிரணங்களில் தொங்கியவாறே நிலத்திற்கு விரைந்து இறங்கின. காட்டினுள்ளே உறங்கிய காற்று, வெய்யிலைப் பார்த்ததும் புரண்டு படுத்தது மறுபுறமாக.
குழந்தை வீரிட்டு அழுதது. வெய்யில் தன் உடலுள் ஊசி கொண்டு துளைக்கிறதைச் சொல்லிற்று, அந்தக் களைத்து நொந்து ஒலித்த பிஞ்சுக்குரல்.
அது எதனால் அழுகிறது? பசியால், வேதனையால், தாகத்தால், தனிமையால், அல்லது இவை யாவும் கலந்த ஒருமையால். யோசித்தபடியே குழந்தையை நோக்கி நடந்தாள் பாரதி. குழந்தையின் அழுகை காட்டுக்குருவியாய் எங்கோ பறந்து போயிருந்தது. “இந்தக் குட்டிப் போய் எப்ப சாகப் போகுது” என்ற மூர்க்கமாகச் சீறிய மனித சர்ப்பம் இப்போது ஒரு தாயாகி மார்பகத்துள் அந்தக் குஞ்சினை அணைத்து வைத்திருந்தது. நெற்றியில் பொங்கிய வேர்வை நீராய்த் தெரிந்தது உள்மன ஈரம்போல.
பாரதிக்கு நா வரண்டது. ஆலமரப் பக்கமாக வெட்டிய துரவுதான் தண்ணீரின் இடம். எல்லாரும் சேர்ந்து துப்பரவாய் பத்திரமாய் பொக்கிஷமாகக் காத்து வருகின்ற துரவு. தண்ணீர்த் தேக்கம்.
பிளாஸ்டிக் குடம் ஒன்றை எடுத்துக் கொண்டு நடந்தாள். தண்ணீர் குடிக்கிற வேளையிலெல்லாம் கமலம் சீறிப்பாயும் நீரூற்றாக நினைவினைத் தொட்டு சம்பவங்களால் நனைப்பாள். “எந்த வேளையாயினும் சரி வீட்டில் இருந்த வேளையில் தண்ணீரை சூடாக்கி வடித்துத்தான் யாராயிருந்தாலும் குடிக்க வேண்டும்.”
குரல் அருகிலே கேட்டது வீணையின் ஓசையாய்:
“பாரதி, நீ டொக்டராக வரவிரும்பினால் சில விஷயங்களைக் கேட்க வேண்டும். மனித உடம்பில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர். ஆனபடியால் நீ குடிக்கிற தண்ணீரை சூடாக்கி, ‘பில்டர்’ பண்ணிக் குடிக்க வேண்டும். எல்லாரை விடவும் டொக்டர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். நல்ல தண்ணீர் குடித்தால்தான் ஆரோக்கியமாக இருக்க முடியும்…”
பாரதியின் கண்கள் கலங்கின.
மனதுள் துயரம் கட்டியெழுப்பிய கறையான் கூடுகளில் நடுக்கம் துளிர்த்தது.
“அக்கா … அக்கா ….”
அழுத குரலில் நினைவு கலைந்தாள்.
இராஜேஸ்வரி. எட்டு வயதுக் குழந்தை.
“என்ன…?”
பதறினாள் அவள்…
“அக்கா, அப்புவை பாம்பு, கறுத்தப் பாம்பு கடிச்சுப் போட்டுது, வாயிலை நுரை கக்குது…”
“எங்கினை?”
“துரவுக்குப் பக்கத்திலை….”
“வா… ஓடி வா…”
களைக்கக் களைக்க ஓடினாள் பாரதி,
துரவின் வாசலில் வாயில் நுரைகக்க மரக்கட்டையாய்க் கிடக்கும் சுப்பையா.
முதலில் துரவில் இறங்கி நீரைக் குடித்தாள். அவளுக்கே அவள் போக்கு ஆச்சரியமாக இருந்தது. பிறகு சுப்பையாவின் அருகே வந்து, மூக்கருகில் கைவைத்து நாடி பிடித்துப் பார்த்தாள். மூச்சு இறந்து போயிற்று சற்று முன்னர்.
“பாரதி டொக்டருக்குத்தான் நாங்கள் படிக்க வேணும். அப்போதான் சாதாரண மக்களுக்கு நன்மை செய்யலாம்” என்றாள் கமலா அருகே வந்து. பாரதி தன்னை அறியாமலே அழத்தொடங்கினாள். தன்னிலை மறந்து கதறினாள். இதைப் பார்த்த இராஜேஸ்வரி பரிதாபமாக அலறினாள்:
“அப்பூ, யாருமில்லாத என்னை இந்தக் காட்டுக்குள்ளை தனியா விட்டிட்டுப் போயிட்டீங்களே…”
– விநோதினி (பதினொரு சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2000, விண்மீன் பப்ளிகேஷன், கொழும்பு.