நானும் வாழ்கிறேன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 23, 2016
பார்வையிட்டோர்: 8,549 
 
 

அடர்த்தியான தலை முடி நரையோடியிருக்கும்.இடது பக்கம் வாகெடுத்து நல்லா எண்ணெய் தடவி வலிச்சு சீவியிருப்பாரு. நல்ல அகலமான நெற்றியில் திருநீற்று பட்டை அடித்திருந்தாலும். மேல் திருநீற்றுகீற்றில் எண்ணெய் வழிந்து பாதி ஆங்காங்கு மறைந்தும்.கீழுள்ள இரு கோட்டிலும் வியர்வை முத்துக்கள் வெள்ளை நிறத்தில் திட்டு திட்டாய் உடைந்து வழிய காத்திருக்கும்.முழுக்கை சட்டை அணிந்து சட்டையின் கைகள் இரண்டும் ஒரு மடிப்பு மடிக்கபட்டிருக்கும். கால் சட்டை அவர் நடக்கையில் ஏதோ அவரை விட்டு பறக்க துடிப்பது போல அடிக்கடி பறந்து கீழே சரியும்.அவரும் அதை இடுப்புக்கு மேலே தூக்கி அரைஞான் கயிற்றுக்கிடையில் சொருகிக்கொள்வார்.

சின்னா சிரிச்சிகிட்டே கேட்டான். என்ன அண்ணண் நீங்க ஒரு ஜீன்ஸ் பேண்ட் தைக்கிற ஸ்பசலிஸ்ட். இப்படி பேண்ட்ட தூக்கி தூக்கி பிடிக்கிறத பார்த்த எவனாவது நம்ம கடைக்கி பேண்ட் தைக்க வருவான?

அது வரை அவனை இறுகிய முகத்தோடு கூர்ந்து நோக்கிய சண்முகம்.அவன் கேள்வியை முடித்தவுடன் தன் இடைவெளி விழுந்த முன் இரு பற்கள் தெரிந்த படி. டேய் சின்னா நம்ம பண்றது எல்லாமே நமக்கு பிடிச்சு .அத நம்ம உபயோக படுத்தணுமுணு அவசியமில்லையே! இந்த சிவன் கோயில் தெரு முக்குல.புரோட்ட போடுறானே நம்ம துறைசாமி.அவன்கடை எண்ணெய் பரோட்ட எப்படி?

பைபாஸ் ரோட்டல இருந்து வந்து வாங்கிட்டு போவானுங்க.அவன் முதலாளி ரங்கநாதன். மீனாட்சி இல்லம்னு.வடக்கு வீதில கல்யாண மண்டபம் மாதிரி வீடு கட்டிருக்கானே எப்படி? எல்லாமே அந்த தொரைசாமியோட கைதான்.அவன அன்னக்கி அந்த கோனார் இட்லி கடைல பார்த்தேன்.

அப்ப ராத்திரி ஒரு பத்தரை மணி இருக்கும்.கடைல தம்பியும் நானும் மட்டும் தான்.தம்பி கட்டிங் வெட்டிக்கிட்டு இருந்துச்சு. தம்பிகிட்ட சொல்லிட்டு கிளம்புறேன். அப்படியே சைக்கிள மிதிச்சுகிட்டு நடந்து போற மாதிரி போறேன்.அப்ப அந்த கோனார் இட்லி கடைல. தோசைகல்லு பக்கத்துல இரண்டு பேர் உட்கார்ர டேபில்ல ரோட்ட பாத்து உக்காந்து சாப்டுகிட்டுறுந்தான் அந்த தொரை சாமி. அப்பறம் போன வாரம் தம்பி வீட்டுக்கு பரோட்ட வாங்கிட்டு வர சொன்னிச்சு.அன்னக்கி நீ லீவு. அப்ப தொரை கடைக்கு தான் போனேன்.அப்ப அவன்கிட்ட கேக்குரேன் என்னய்யா நெதம் பரோட்டா சாப்பிட்டு நாக்கு அலுத்துபோச்சா? கோனார்கடை இட்லில உக்காந்துருக்கனு?

அட நீங்க வேறண்ண என்னோட நாக்கு ரொட்டிய இது வரைக்கும் பார்த்ததே இல்லையே.என்னய்யா சொல்ற உன்கைருசி உனக்கே பிடிக்காதா?ருசியா? ருசியானு கேட்டுகிட்டே சிரிக்கிறான். அப்படி ஒரு ஆழமா முதிர்ச்சியான சிரிப்பு சத்தமில்லாம.

மெதுவா சொல்றான் இந்த வைகாசி வந்துச்சுனா பதினேழு வருசம். பதினேழு வருசத்துக்கு முன்னாடி இந்த ரங்கநாதன் முதலாளி திருத்துறைப்பூண்டி ரோட்ல ஒரு கிளப்புகட வச்சிருந்தாரு.அப்பதான் இவர்கிட்ட வேளையில சேர்ந்தேன்.இலை எடுக்குறது,தண்ணி ஊத்துறது,டேபில் துடைக்குறுது,அப்பறம் மாஸ்டருக்கு ஒத்தாசையா இருக்கிறது.மத்தியானம் கட்டு சாப்பாடு ராத்திரி ரொட்டி மட்டும் போடுவாங்க. அப்பதான் முதலாளிக்கு கல்யாணமாயி ஏழு நாள் ஆகுதுனு பரோட்ட மாஸ்டர் சுந்தரம் சொன்னாரு. அன்னைக்கு முதல் நாள் மத்தியான சாப்பாடு முடிஞ்சோன எல்லாத்தையும் கழுவி கவுத்தீட்டு.ரொட்டி போடுறதுக்கு மைதமாவுல தண்ணிய ஊத்தி பிசைய ஆரம்புச்சாரு சுந்தரம்.

அப்ப எல்லாம் இப்ப மாதிரி கிடையாது.சிமெண்ட்தரைதான்.நல்ல பாலுமாதிரி சிமெண்ட் கரைச்சி மொலுகிருப்பானுக.அந்த தரையிலதான் மாவ அடிச்சு பிசைவாரு சுந்தரம்.அன்னக்கிதான் நான் முதல்தடவைய ரொட்டி தயாரவுரத பார்க்கிறேன் .ரொட்டிய பாத்திருக்கேன் ஆன சாப்டதில்லை. அது கூட லாரி ஏறி இந்த ஊர் வர்ரப்ப வழில ஒரு கிளப்புல நிப்பாட்டி ட்ரைவர் சாப்புடுறப்ப பார்த்தது.மத்தியானம் மூணு மணிக்கு ஆரம்பிச்சு சாயந்தரம் ஆறு மணியாச்சு முடிக்கிறதுக்கு. எண்ணெய ஊத்தி பிசைஞ்சு.உருட்டி வச்சத பாக்குறதுக்கு ஏதோ பொம்மை செய்ய வெள்ளைகளிமண்ணை தண்ணீல ஊத்தி பிசைஞ்ச மாதிரி இருந்துச்சு. அந்த மாவு உருண்டைய கொஞ்ச கொஞ்சமா பிச்சி.துணி மாதிரி அடிச்சு அடிச்சு விரிச்சி.நீட்ட வாக்குல பாம்பு மாதிரி உருளைய மடிச்சி. அப்படியே சுருளா சுற்றி. சப்பைய அடிச்சு தோசைகல்லுல போட்டப்ப.என்னோட நாக்குல இருந்து எச்சி வழிஞ்சிகிட்டு இருக்குதுனு சுந்தரம் பார்த்து சிரிச்சுட்டு.போய் அந்த குறுமா குண்டான எடுத்துட்டு வந்து அந்த அடுப்புல வையுனார்.

அந்த இடத்தைவிட்டு போகவே மனசில்லாம.ரொட்டி நெனைப்பிலேயே அவர்சொன்ன வேலையெல்லாம் செஞ்சுகிட்டிருந்தேன். சாப்பிட வந்தவங்களுக்கெல்லாம் நான் தான் ரொட்டி பரிமாறினேன். ரொட்டிய ஒவ்வொருவாட்டி தொடுறப்பையும்.அத திங்கணும்கிற ஆசை கூடிகிட்டே இருந்துச்சு.மனசு பூரா ரொட்டிதான். எச்சிவழிஞ்சப்பவே பசியும் ஆரம்பிச்சருச்சு.எப்படியும் கடைய அடைக்குறதுக்கு முன்னாடி எதாவது கண்டிப்பா கிடைக்குமுணு நம்பிக்கை இருந்துச்சு.

ஆளுங்க வந்தபடியே இருந்தாங்க.சுந்தரம் வியர்வையிலேயே குளிச்சிட்டு கல்லுக்கு முன்னாடியே நின்னாரு.ரொட்டிஉள்ளதட்டை வாழையிலைல மூடி இருந்தாங்க.அந்த இலைய தூக்கி ஒவ்வொருவாட்டியும் எடுத்துட்டு போறப்ப ஆசை ஒரு பக்கம் கூடும். தீர்ந்துவிடுமோங்கிற பயம் ஒரு பக்கம் கூடும். ஆளுங்க வரது குரைஞ்சது. முதலாளி கல்லா பெட்டிய விட்டு நகரவே இல்லை.அப்பவே பத்தரை மணியிருக்கும். முதலாளி வீட்டுக்கு போய்ட்டு வந்துடுறேன்.கடைய கொஞ்சம் பார்த்துக்கணு சுந்தரம் மாஸ்டர் கிட்ட சொல்லிட்டு போனாரு.அவருக்கு கடையில இருந்து அரைமையில் தூரத்தில தான் வீடு.வேட்டிய மடிச்சிகிட்டு உந்தி உந்தி சைக்கிள்ள ஏறி போனாரு.

கடையில நானும் மாஸ்டரும் மட்டும் தான் இருந்தோம் சாப்பாட்டாளுங்க யாரும் இல்லை.நான் தண்ணிதவளை பக்கத்துல படியில உட்காந்திருக்கேன்.அடுப்புக்கு வடக்க ஒரு பித்தளை குடத்தை கவுத்தி.ரெண்டு கையையும் முழங்கால்ல வச்சிட்டு உட்காந்திருந்தாரு மாஸ்டர். எனக்கு அவ்வளவு நேரம் சாப்பிடாம முழிச்சிருந்ததா ஞாபகமே இல்லை.அந்த தோசைகல்ல பார்த்துகிட்டே உட்கார்ந்திருந்தேன்.கல்லுல இருந்து பறக்குற ஆவி என் மனசுல அப்படியே படிஞ்சிகிட்டே இருந்துச்சு .வச்ச கண்ணு வாங்காம பார்த்துகிட்டே இருந்துருக்கேன் .

டேய் சாமி சாமினு மாஸ்டர் என்னைய கூப்புடுறார்னு அப்பதான் என் காதை தாண்டி உள்ள வந்துச்சு.தலைய திருப்பி அவர பார்கிறேன். சாப்புடிறியானு கேக்குறாரு.பல்ல காண்பிச்சிகிட்டே தலையாட்றேன். அப்ப நான் அனுபவிச்ச ருசிக்க போறோங்கிற மயக்கத்தை அதுக்கப்பறம் எதுக்காகவும் ஏற்படுத்திகிட்டதே இல்லை.

நம்ம சாப்டுட்டு கடைய கழுவீட்டு அடுப்பஅணைச்சு வைப்போம்.அவர் வந்தோன கடைய அடைச்சிட்டு கிளம்புவோம்னு. சுந்தரம் அண்ணன் சொல்றாரு.அப்படியே நின்னுகிட்டு தலையாட்றேன்.அந்த ரொட்டி போர்த்தியிருந்த இலையவே ரெண்டா அறுத்து மேஜையில போட்டு.ரெண்டு ரொட்டியும் குறுமாவ தூக்குவாலியில வைச்சுட்டு.என்னைய அந்த றோட்டால தண்ணி மொண்டுட்டு வா சாமினு சொல்லிட்டு. நீ சாப்பிட உட்காரு நான் இந்தோ ஒன்னுக்கு போய்ட்டு வந்துடுறேனு ரோட்ட தாண்டி போறாரு சுந்தரம்.

நான் போய் இலைக்கு முன்னாடி உட்கார்ந்து ரொட்டியவே பார்த்துட்டுருக்கேன்.அவர் வரட்டுமுனு இருக்கேன்.அப்ப ரொட்டி மேல இருந்த ஒரு ஏக்கம்,தவிப்பு? அதோட சரியா போச்சுண்ண. நாக்குக்கும் வயிற்றுக்கும் உள்ள பசி இருக்கே ரெண்டுமே வேற வேறண்ண. நாக்கு எந்திருக்கிறத்துக்கு முன்னாடி.வயித்தை சரியா மூடிட்டோமுணா .நாக்கு அதுக்கப்பறம் எட்டிபார்க்காதுனு அன்னைக்குதாண புரிஞ்சுது. அப்படியே ரொட்டியிலேயே மனசு நிக்கமா ஒடிகிட்டுருக்கு.

சடார்னு என் முன்னாடி ரெண்டு கையையும் இடுப்பபுல வச்சிகிட்டு முதலாளி நின்னுகிட்டுறுக்காரு.மூச்சிரைக்க முகமெல்லாம் வியர்வை படர்ந்திருக்கு.அவர பார்த்துட்டு எந்திரிக்கிறேன்.

எச்ச சோறு திங்கற பொறுக்கி நாயி உனக்கென்ன பரோட்டா கேக்குத?. குச்சிகாரி மவனே!அங்க பாருடா. நாயி எங்க சாப்பிடுதுனு. அங்க கடைவாசல்ல ரெண்டு நாய் இலைய திருப்பி போட்டு நக்கிட்டு நின்னுச்சு. நான் திரும்பரதுகுள்ள எனக்கு முன்னாடி இருந்த இலைய எடுத்து வெளியில வீசீட்டு. போடா அங்க போய் திண்ணுடா நாய்க்கு பொறந்தவனேனு சொல்லிட்டு. உள்ள போய் தட்டில இருந்த ரொட்டிய கட்டிட்டு இருக்காரு,

நான் அப்படியே திரும்பி அந்த நாய பார்த்துகிட்டே நிக்கிறேன். அந்த ரெண்டு நாயும் எனக்கு இன்னும் நினைவிருக்குண்ண. ரெண்டுமே பொட்டை நாய் அதுலஒன்னு கருப்பு கலரு.இன்னொரு நாய் குட்டி போட்டது. மடியோட நின்னுச்சு.காப்பிகொட்டை கலரும் வெள்ளைகலரும் மாறி மாறி இருந்துச்சு. கலுத்துலேருந்து கண்ணுக்கு கீழ வரைக்கும் காபி கலரு. மூக்கு கறுப்புகலரு.மீதி முகமெல்லாம் வெள்ளை கலரு.சுந்தரம் மாஸ்டர் கடை உள்ள நுழையுறாரு.அவர பார்த்ததோன முதலாளி. சுந்தரம் கடைய கட்டீட்டு வந்துடடுனு சொல்லீட்டு.

ரொட்டி பொட்டணத்தை கையில எடுத்துட்டு வீட்டுக்கு போய்டாரு.என்ன சாமி அதுகுள்ள சாப்டீயானு என்கிட்ட பதிலை எதிர்பார்க்காம சுந்தரம் சாப்பிட ஆரம்புச்சாரு. நான் அவரு சொன்ன வேலையெல்லாம் செஞ்சுட்டு.ரெண்டு பேரும் கடைய கட்டீட்டு அப்படீயோ நடந்து போய்ட்டுருக்கோம். ரோட்டோரத்தில சோத்துக்கைபக்கம் ஒரு புதர்ல சலசப்பு.

நான் சுந்தரம் மாஸ்டர் சொன்னோன அந்தபக்கம்பார்த்துட்டு அவருக்கு பின்னாடி போறேன். ஆறு குட்டிங்க இருக்கும் மடியில பால் குடிச்சிகிட்டு இருந்ததுண்ண. அந்த பொட்ட நாய் அதான் அந்த கடை வாசல்ல நின்னுச்சே.அப்படியே திரும்பி என்னை கொஞ்ச நேரம் பார்த்துட்டு சீறி கடிக்க வரமாதிரி குரைச்சுது பாருங்க. சுந்தரம் அண்ணன் பயந்து போய் பின்னாடி போறாரு. அதோட கண்ணுங்க முழுசா எனக்குள்ள போய் என்னைய ஏதோ பண்ணுது. மடைய திறந்து விட்ட மாதிரி கண்ல இருந்து அப்படியே தண்ணியா ஊத்துது.

என்னைய அதே கோபத்தோட நெருக்கமா பார்க்குது.நினைவு திரும்புறப்ப பார்க்கிறேன் அண்ணண் என்னோட கைய பிடிச்சு இழுத்துட்டு போய்ட்டுறுக்காரு . கண்ல தண்ணி அன்னைக்கி விடியற வரைக்கும் நிக்கவே இல்லை. சுந்தரம் என்கிட்ட கேக்குறாரு என்னடா சாமினு.நான் பேசவே இல்லை.

மறு நாள் முதலாளிகிட்டசொல்லிருப்பாரு போல.என்கிட்ட காலையில கேட்டாரு? நான் ஒன்னுமே சொல்லல.அதுக்கப்பறமா இன்னைக்கு வரைக்கும் அந்த ரொட்டிய பார்க்கிறப்ப தூக்குல தொங்குன எங்க அம்மாதான் ஞாபகத்துக்கு வரும்.அவுங்க என்ன கடுமைய வையுற மாதிரியே இருக்கும். நீ எனக்குதான் பொறந்தியானு கேக்குற மாதிரியே இருக்கும்.

சுந்தரம் அண்ணன்கிட்டேயே ரொட்டி போட கத்துகிட்டேன். அவர் பையன் சிங்கபூர் போய் சம்பாரிக்கறதாலே அவர வேலைக்கு போக வேணாமுனு சொல்லிட்டான .அவர் போனதுக்கு அப்பறம் நான் தான் ரொட்டி போட ஆரம்புச்சேன் .மாவரைக்கிற மெசின் மாதிரி.மாவுபிசைறதில இருந்து உருட்டி தட்டி போட்டு எடுக்குற வரைக்கும்.எந்த நெனைப்பும் இருக்காது. நம்ம கொட்டை சாமி இருக்காரே பெரிய கோயில்ல சித்தர் மடவாசல்ல.அவரு இப்படிதான் ஒரு ருட்திராட்சை கொட்டை மாலைய கண்ணமூடிகிட்டு ஒன்னு ஒன்னா கட்டைவிரல்ல தள்ளிகிட்டே சுத்துவாரே . அந்த மாதிரி தான்.ஆனா நான் கண்ணதிறந்திருப்பேன். ரொட்டிய பார்த்தாலே பயம் கலந்த ஒரு உணர்வுதான் வரும்.

ஒரு வருசத்தில முதலாளிக்கு குழந்தை பிறந்துச்சு .பொம்பளை புள்ளை கவிதானு பேறு வச்சாங்க. புள்ள நல்ல சிவப்பா மீனாட்சி அம்மா மாதிரியே இருக்கும். சிரிச்சா எனக்கென்னமோ எங்க அம்மா என்கிட்ட பேசுற மாதிரியே இருக்கும். கடைய டவுன்குள்ள மாற்றினாரு முதலாளி.வியாபாரம் நல்லா பெருகினுச்சு. வணிகர்சங்கத்துல சேர்ந்தாரு. அவரு போட்டோஎல்லாம் மாசமாசம் அந்த பேப்பர்ல வரும்.

கவிதா புள்ளயா அந்த புதாத்து பாலத்துக்கு பக்கத்துல ஒரு பெரிய ஸ்கூல் இருக்கே.அங்க தான் சேர்த்தாரு நான் தான் ஸ்கூலுக்கு கொண்டு போய்விடுவேன்.அங்க எல்லாம் பெரிய இடத்து பசங்கதான் படிப்பாங்கணு மெடிக்கல்ல வேலை பார்க்கிற ரமா அக்கா சொன்னுச்சி.பாப்பா நல்லா படிக்குதுனு முதலாளிதான் கடைக்கு வரவங்ககிட்ட பேசிட்டுஇருப்பாரு.

வருசம் அப்படியே போச்சு. வடக்கு வீதில மீனாட்சி இல்லமுனு பங்களா மாதிரி திருச்சியில இருந்து இஞ்சினியர வர வச்சி. மூணு வருசம் கூரைய தட்டி மாதிரி ரோட்டு பக்கம் அடைச்சு.யாரும் பார்க்க முடியாத மாதிரி கட்டினாரு.வீடு குடி போய் இத்தனை வருசமாகுது.ஒரு வாட்டி கூட அந்த வீட்ட முழுசா நான் பார்ததில்லை.

அந்த புள்ள கவிதாதான் என்னை சாமிண்ணன் சாமிண்ணணு சிரிச்சிகிட்டே கூப்பிடும். ஏதோ டாக்டர்ஆக போகுதான் மீனாட்சி அம்மா சொல்லும். இப்ப பன்னன்டான் க்லாஸ் படிக்குது.மோட்டார் சைக்கிள்ள போய்டு வந்துடும்.

ஆனா ஒன்னு மட்டும் அண்ணண் இது வரைக்கும் அந்த ரொட்டிய நான் சாப்பிட்டதே இல்லண்ணு யாருக்கும் தெரியாது.எங்க முதலாளிக்கு கூட தெரியாது. இத்தனை வருசத்தில எத்தனையோ பேர் என்கிட்ட கேட்டுருக்காங்க. உன் கடையில சாப்பிட மாட்டியானு .அது என்னமோண்ணண். நீங்க கேட்டதும் உங்கிட்ட சொல்லிட்டு இருக்கேன். ஆனா யார்கிட்டேயும் எந்த வெறுப்பும் இல்லண்ணன். எங்க அம்மாதான் அடிக்கடி ஞாபகத்துக்கு வரும். உடனே கண்ணுல தண்ணி வந்துரும். அது அப்படியே ஒரு பீதியா இருக்கும். பாப்பாவ பார்த்தோன மாறிடும். சரி நான் வரேண்ணண் பாப்பா கடைக்கு ரொட்டி வாங்க வர நேரம்.அது திங்காது. அந்த மீனாட்சீ அம்மாவுக்கு. .ரொட்டி இருக்கானு தெரியல நீங்க வந்து வாங்கிட்டு கிளம்புங்க.

தொரைசாமி கதை திருத்தரைப்பூண்டி ரோட்டுக்கு வந்தப்பவே.சின்னா – அண்ணண் பிட் ரெடியா இருக்கு நீங்க போய் வேலைய ஆரம்புய்ங்க. நான் காஜா கடைக்கு போய்ட்டு வந்துடுறேனு சொல்லிட்டு கிளம்பிட்டான்.அன்னக்கி முதல் பேண்ட்ட தைக்க ஆரம்பிச்ச சண்முகம்.ரொட்டி வாங்கிட்டு கிளம்புனத்துக்கும்.பேண்ட்டை தச்சி முடிச்சிட்டு அயன் பண்ண போடறத்துக்கும்.நேரம் சரியா இருந்துச்சு . நடுவுல டீ குடிச்சிருக்காரு,கரண்ட் போய் ஜெனரேட்டர் போட்டுறுக்காரு,தம்பி ஏதோ கேட்டுறுக்கு பதில் சொல்லிருக்காரு. அதை தவிர எதுவும் யார்கிட்டேயும் பேசல. ஸ்கூல் பென்ச்ல தூங்கி எந்திரிச்ச மாதிரி இருந்துச்சு அவருக்கு.

இந்த தொரைக்கு அப்படி என்ன ஒரு பிடிவாதம்?அதை பிடிவாதம்னு கூட சொல்ல முடியாதே நாம காண்பிக்கிற எதிர்ப்பு சம்பந்த பட்டவங்களுக்கு தெரியணுமே .யாராவது நம்மல பார்த்து சிரிக்கணும்,வருத்தபடணும்,வையணும் அவன் முதலாளிக்கு கூட தெரியாதுங்குறான். எதுக்காக இப்படி இந்த வாழ்கைய தொடர்ரான்.இத்தனை வயசாச்சி யாருஇருக்கா அவனுக்கு.புள்ள குட்டியோட வாழறவயசு. யார எதிர்த்து ஜெய்க்கிறதுக்கு இப்படீ எல்லாத்தையும் தொலைச்சிட்டு நிக்கிறான்.வாழறதுக்கு தானே மானம் ரோசம் எல்லாம் இப்படீ மொட்டைய நிக்கறததுக்கில்லையே.எந்த சுகத்துக்கும் அவன் ஏங்கலையா?
நாக்கு ருசியவே அந்த வயசுல அறுக்க தெரிஞ்சவனுக்கு பொம்பள சுகத்தைய அறுக்க தெரிஞ்சிறுக்காது. அப்படியே அவருள்ள கேள்வியா ஒடிட்டு இருக்கிறப்ப அவுங்க அப்பாவோட.சிரிச்ச முகத்தை பார்க்கிறார் சிந்தனை முழுவதும் அவரோட சிரிப்பா நிரம்பி வழியுது.

எங்க அப்பா என்னைய அப்பா அப்பானுதான் கூப்பிடுவார். எனக்காகவே தன்னை கடைசிவரை குழந்தையாகவே வச்சிகிட்டாரு. காலைல எழுப்பி கொல்லைக்கு போக வச்சி கால்கழுவி பல்லுதேச்சி குளுபாட்டி சாப்பாடு ஊட்டி என்னைய ஸ்கூலுல கொண்டு போய் விடுறவரைக்கும் எல்லாத்தையும் அவருதான் செய்வாரு.அதுக்காகவே நான் ஸ்கூலுக்கு போவேன். அவர் வாய திறந்து அதிகமா பேசுனதேகிடையாது.அவரு நடக்குறத பார்த்து எங்க ஊரு பொம்பளைங்க ஒதுங்கி சிரிச்சிகிட்டே போவாளுங்க.அவரும் சிரிச்சிப்பாரு.என் அம்மா முழுசா அவர வெறுத்தாள் .வாரத்துல நாலு நாளாவது இந்த புள்ளைய உனக்குத்தான் பெத்தணானு குச்சிகாரி சிரிக்கீங்க என்னை பார்த்து சிரிச்சிகிட்டே கேக்குறாளுங்கனு என்னைய வச்சிகிட்டே அவருகிட்ட சீறுவா.அப்பவும் அவரு சிரிச்சிகிட்டே என்னோட தலைய கோதிவிடுவாரு.வேலையும் ஒத்த ஆளா செய்ற வேலைக்கு மட்டும் தான் போவாரு.கூட்டமா ஆளுங்க கூட வேலைக்கு போகமாட்டாரு.எங்க அப்பத்தா சொல்லும் உன் அப்பனுக்குள்ள காளியாத்தா இருக்கா டா. அவ எப்பவும் சாந்தமாவே இருக்க மாட்ட.எல்லாம் மீறி போச்சுனா .அவை படையெடுத்துருவா.எல்லாரும் மண்ணோட மண்ணா போயீருவானுங்னு. வாசல்ல உட்கார்ந்து கத்திகிட்டுருக்கும்.அப்பத்தாவும் நான் ஆறாங்கிலாஸ் படிக்குறப்பவே. வாசலிருந்து இறங்கி ரோட்ல எவனையோ விளக்கமாத்த எடுத்துட்டு அடிக்க போயிருக்கு அப்ப கீழ விழுந்து மண்டையில சரியான அடி பேச முடியாம ரெண்டு மாசம் சீக்கா கடந்து செத்துபோச்சு..அன்னைக்கிக்தான் எங்க அப்பா அழுது பார்க்கிறேன். புலம்பிகிட்டே ஏதோ உளரிகிட்டே அழுவுறாரு .எனக்கு அப்பத்தாகிட்ட அவரு ஏதோ சொல்ற மாதிரி இருந்துச்சு.அதுக்கப்பறம் அவருக்கு என்னைதவிர வேற காரணமே இல்ல வாழறதுக்கு.

எட்டாம் வகுப்பு இங்கிலீஸ் பாடத்துல எல்லா பரிட்சையிலேயும் பெயிலானேன் . ஹெட் மாஸ்டர் வீட்ல இருந்து ஆளா கூப்பிட்டு வர சொன்னாரு. வந்து எங்க அப்பாகிட்ட சொன்னேன். எதுக்குனு கேட்டார். விசயத்தை சொன்னோன. என்னையே கொஞ்ச நேரம் பார்த்துட்டு.நாளையில இருந்து ஸ்கூல் போகாதப்பா.உனக்கு படிப்பு இனிமே ஏறாதுண்ணுட்டாரு.எதாவது வேலை கத்துக்கோனு சொல்லீட்டு வயலுக்கு போய்டாரு அன்னைக்கு வயலுக்கு போறேனு சொல்லிட்டு போனவரு. திரும்பி வீட்டுக்கு வரப்ப பொணமாதான் வந்தாரு.செட்டியார் தோப்புல கந்தன பார்த்திருக்காரு. கந்தன் அப்பா கூட ஸ்கூல்ல படிச்ச ஒரே நண்பர் அவரு மட்டும் தான் . ரொம்ப நாள் கழிச்சு அன்னைக்குதான் பார்த்திருக்கார் .அவர்கிட்ட. கொஞ்ச நேரம் பேசிட்டு நேரா கடைத்தெருவுல. கீழத்தெரு சின்னம்பி கடைக்கு போய். பூச்சி மருந்து வாங்கிட்டு.காளியாத்தா கோயில் குளத்துகிட்ட நின்னு குடிச்சிட்டு .சாத்தியிருந்த கோயில் வாசல்லயே படுத்துகிடந்துருக்காரு.படுத்தவர மூச்சு நின்னோனதான் தூக்கீருக்காங்க.அவர தூக்கி கொண்டாந்து முத்தத்துல பென்ச் போட்டு படுக்கையில போடுறாங்க. அவர் நெஞ்சுலேயும் கன்னத்துலேயும் அடிச்சடிச்சு அப்பா அப்பானு அழுதுகிட்டே எழுப்புறேன்.அவர் வேற எங்கயோ நான் எழுப்ப முடியாத இடத்தில தூங்கிட்டுருந்தார். எங்க அம்மா அழுவுரத பார்க்க அருவருப்பா இருந்துச்சு. அப்படியோ மரதூண்ல சாய்ஞ்சிகிட்டு அப்பா அப்பானு எச்சியையும் சளியையும் சட்டைய தூக்கி தூக்கி துடைச்சிகிட்டே தூங்கிட்டேன். காலைல எந்திருச்சோன துக்கத்துல நெஞ்சு ஏதோ எடைய சேர்த்து இழுக்குற காளை மாதிரி மெதுவாதுடிக்குது. அப்படியே ரெண்டு நாள் அழுதழுது தூங்கீட்டுருந்தேன். மூணாவது நாள் காலைல சுடுகாட்டுக்கு போய்ட்டு வரப்ப.அந்த கோயில் சந்துல பெரிய வீட்டு ஆத்தா ஆளுங்களுக்கு இட்லி சுட்டு வச்சிகிட்டுறுந்துச்சு.

சாம்பார் வாடை கோயில தாண்டி வீசுனிச்சு. ஒடி போய் ஒரு சருக எடுத்து பென்ச்ல வச்சிட்டு ஆத்தாவையே பார்த்துட்டு இருக்கேன். ஆத்தா அப்படியே மிரண்டு போய் என்னைய பார்த்துகிட்டே இட்லிய வச்சு சாம்பார ஊத்துச்சி.நாலு இட்லி சாப்பிட்றுப்பபேன்! அப்ப தான் எனக்கு எங்க அப்பன் ஞாபகத்துக்கு வரான் கண்ணுல தண்ணி ஊத்த ஊத்த வேகமா சாப்புடுறேன்.

மனுசன் தூங்குறது,பசிக்கிறது,ருசிக்கிறது எதுவுமே எதுக்காகவும் எந்த வயசுலேயும் நிக்காதுனு புரிஞ்சுது. எங்க அப்பன புதைச்சப்ப நானும் குழி உள்ள விழுந்து என்னையும் எங்க அப்பனோட மூடிருங்கணு கதறி அழுவுறேன்.அப்படி செஞ்ச அதே சண்முகத்துக்குள்ள தான் வாழ துடிக்கிற ஆத்மா ஒன்னு மறைஞ்சிருக்குனு இட்லி திண்ணோண புரிஞ்சது.இச்சையில்லாம மனுசனால வாழவே முடியாது.இச்சையில பிறக்கிற மனுசனுக்குள்ள இச்சையில்லாம போகுமா. பலருக்கு உள்ள ஒழிஞ்சிகிட்டுருக்கு நேரம் வர்ரப்ப தான் அது உள்ள இருக்குறது அவனுக்கே தெரியுது.

இப்படியே போய் கொண்டிருந்த மனஒட்டத்தை சின்னாதான் தடுத்து நிறுத்தினான். அண்ணண் எழுமிச்சை சாதமா.இல்ல சாப்பாடு வாங்கட்டுமானு சின்னா கேக்க அவனையே பார்த்த சண்முகம். நான் போய் சாப்டுக்கிறேனு சொல்லிட்டு. தன்னுடைய கால்சட்டைய தூக்கி இடுப்பு கயிறுல சொருகீட்டு. அப்படியே சைக்கிள எடுத்துகிட்டு.சன்னதி தெருவுல இருக்குற முருகன் கடைக்கு போறதுக்கு சிவன்கோயில் தெருவுல நுழையுறப்ப. கோயில் முக்குல ஒரே கும்பல். அந்த கும்பல பார்த்துகிட்டே நெருங்கி சைக்கிள அந்த சின்ன வேப்பமரத்தடியில. ஸ்டாண்டு போட்டு நிப்பாட்டீட்டு. ரோட்ட தாண்டி அந்த கும்பல் உள்ள நுழைஞ்சு.என்னய்ய இங்க கூட்டமுனு யாரோ பச்சை கலரு கட்டம் போட்டசட்டை போட்ட ஆளுகிட்ட கேக்குறாரு.

இந்த பஸ்டாண்டுல சைக்கிள் வண்டி எல்லாம் நிப்பாட்ற ஸ்டாண்டு இருக்குல்ல அந்த சாக்கடை வாய்காலஒட்டி .அங்க இந்த டோக்கன் கொடுக்குற பையன் மாரியப்பன் இருக்கானே.ஆமா ஒருத்தன் இருக்கான் பேரு தெரியாது சொல்லு. இந்த கடை முதலாளி பொண்ணு நேத்திக்கு சாயங்காலம் அவுங்க அம்மா ஊருக்கு போய்ட்டு வண்டிய எடுக்க வந்திருக்கு.வண்டிய மெதுவா ஓட்டிகிட்டே இவன்கிட்ட டோக்கன கொடுத்துட்டு திரும்பிருக்கு. அப்ப இந்த பய டோக்கன வாங்கீட்டு சும்மா இல்லாம அது இடுப்ப புடிச்சி கில்லியிருக்கான். அது நேரா கடைக்கு வந்து அவுங்க அப்பாகிட்ட சொல்லிருக்கு. அவுங்க அப்பா அவன கண்டிக்க ஸ்டாண்டுக்கு போயிருக்கார்.அவன் அங்க இல்லை.

இப்ப சத்த நேரத்துக்கு முன்னாடி.அந்த பய மாரியப்பன் இங்க பரோட்ட சாப்பிட வந்திருக்கான். அவன பார்த்துகிட்டே இருந்த தொரை சாமி. என்ன நெனைச்சானு தெரியல தோசைதிருப்பிய திருப்பி அவன் கழுத்தில இறக்கிட்டான். அவன் இலைல இருந்த பரோட்டா மேல பூரா இரத்தம் அப்படியே துடிதுடிச்சி செத்தான்.இதோ போலிஸ் ஜீப் வந்துருச்சினு அவன் சொல்ல. சண்முகம் கடைபக்கம் பார்த்துக்கொண்டிருந்தார்.அங்க தொரை சாமி அந்த தோசைகல்லையே பார்த்துட்டு உட்காந்துகிட்டுறுந்தார்.

சண்முகம் அந்த கும்பல விட்டு விலகி சைக்கிள தள்ளிக்கிட்டே அப்பா அப்பானு கண்ணில் நீர் ததும்ப விசும்பிக்கொண்டே கும்பலைக்கடந்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *