நானும் இந்த அறையும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 4, 2020
பார்வையிட்டோர்: 5,243 
 
 

மாலைநேரம். சூரியன் மேற்கில் தெரியவில்லை. ஆனாலும் இன்னும் இருட்டு ஆகாமல் வெளிச்சம் இருந்து கொண்டுதான் இருந்தது. திருவேங்கடம் நடையைக் கொஞ்சம் வேகமாக்கிக் கொண்டார். எப்படியாவது இருட்டுருதுக்கு முன்னாடி வீட்டுக்குப் போயிடனும். மாசம் ஒருத்தன்கிட்ட சோறு. இன்னிக்கு மத்தியானத்தோட பெரியவன் வீட்டுமுறை முடிஞ்சிடுச்சி. இரவு சாப்பாட்டுக்குச் சின்னவன் வீட்டுக்குப் போயிடனும். மனசில எண்ண ஓட்டங்கள் ஆயிர ஆயிராமாய் ஓடிக்கொண்டிருந்தன.

“என் பொண்டாட்டி இருந்தான்னா.. ஞா இந்த பொழப்பு பொழைக்க வேண்டியதில்லை. யாருகிட்டையும் கைக்கட்டி வாய்ப்பொத்தி நிற்க வேண்டியதில்லை. மூணு வேளையும் வயிறு நிறைய சாப்பாடு. நல்ல தூக்கம். அழகான காதல். நிறைவான வாழ்க்கை. எல்லாம் போச்சு. இன்னிக்குத் தனி மனிதனாய் இங்கிட்டும் அங்கிட்டும் போயிட்டுருக்கேன். சம்பாரிச்ச பணத்தையும் இருக்கிற சொத்தையும் மகனுங்க பேரில எழுதிட்டேன். ஏன்னா என்ன நல்லா கவனிச்சிக்குவாங்கன்னு..” இதயம் படபடக்குது. வேர்த்து வியர்த்துக் கொட்டுது. நடக்க முடியல. கண்ணாடி வேற மங்கலா தெரியுது.

அப்பதான் அந்த உருவத்தைப் பார்த்தேன். பார்க்க பயமா இருந்தது. பேயோ.. பிசாசோன்னு பயந்து போயிட்டேன். தலை மட்டும்தான் தெரிந்தது. தலையைச் சுற்றியும் கைகளால் காற்றை விலாசிக்கொண்டிருந்தது. உருவம் சின்னதாய் இருந்தாலும் தெளிவாய் என்னுடைய பூசிய கண்களுக்குத் தெரிந்தது. என்னாவாயிருக்கும் என்று யோசனை செய்து கொண்டே நடையை மேலும் கூட்டினேன். அந்த உருவம் என் பின்னாலேயே வந்தது. எதுவோ.. ஏதுவோ.. ஒன்னு என்ன தொரத்தி வருதுன்னு தெரியுது.

”நீ யாரு? எதுக்கு என் பின்னாலே வர்ர..? என்ன கொல்ல போறீயா? அப்படின்னா என்ன கொல்லு. எனக்கு சந்தோசம்தான். நானும் எம் பொண்டாட்டி போன இடத்துக்கே போயிடுறேன்”

அந்தத் தலை உருவம் எதுவும் பேசாமல் திருவேங்கடத்திற்குப் பின்னேலே வந்தது. அவர் நின்றால் நிக்கும். சென்றால் செல்லும்.

“எதுக்கு ஞா பின்னாலே வர்ர.. என்ன அடிச்சி கொல்லவும் இல்ல. எனக்கு முன்னால கோரப்பற்களைக் காட்டி பயமுறுத்தவும் இல்ல.. அப்புறம் எதுக்கு?” என்று கட்டை விரலை தூக்கிக்காட்டி கோபத்தோடு கேட்டார்.

மீண்டும் தொடர்ந்தது அதே நடை பயணம்.

”என் பின்னால வராதன்னு சொல்றன்ல… அப்புறம் ஏ பின்னாலே வாரே..

சரி நீ யாரு? உன் பேரு என்ன?

அந்தத் தலையிடமிருந்து அமைதிதான் வந்தது.

”நானும் தனியாத்தான் நடந்து போறேன். உன்னோட பேச்சுத்துணைன்னா நடக்கறதுக்கு வலி தெரியாது. ஏதாவது பேசு.. நான் கேட்குகிறேன்” என்றார் திருவேங்கடம்.

“நான்தான் கொரோனோ”

“கொரோனோன்னா யாரு? எனக்கு புரியல?”

“நான் ஒரு வைரஸ் கிருமி.

“வைரஸ் கிருமியா ! அப்படின்னா நீ என்னா பன்னுவா?

“ஒரு மனுஷகிட்ட இருந்து இன்னொரு மனுஷகிட்ட போவேன். போனேன்னா அந்த மனுஷன கெட்டியா புடிச்சுக்குவேன். எங்களோட இன விருத்திய உற்பத்தி செஞ்சுக்குவோம். அந்த மனுஷனோட உடம்புல இருக்குற செல்கள் எல்லாத்தையும் அழிச்சி நாங்க தின்னுறுவோம்”

“நீ என்ன மிருகமா?”

“என்ன மிருகமா! உங்க வழக்குல எங்கள மிருகம்முன்னு சொன்னிங்கின்னா.. அப்படியே வச்சுக்கோங்க..”

“சரி ஏன் என் பின்னாடியே வர்ற.. வேற எங்கையாவது போக வேண்டியதுதான..“

“நான் உன்னை புடிச்சிட்டேன். அதனால உன்கூடத்தான் வருவேன்”

“இந்த வயசானவகிட்ட என்ன இருக்குன்னு எங்கிட்ட வந்த?”

“உங்க ஆளுங்க எல்லாம் நல்லதை சாப்பிட்டுச் சாப்பிட்டு ஆரோக்கியமா இருக்காங்க.. அமெரிக்கா, இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகளெல்லாம் சீக்கிரமாகவே மனுஷங்ககிட்ட போயிட்டோம். அங்கெல்லாம் எங்களுடைய ஆளுமைதான். உங்க நாட்டுல இப்பதான் நாங்க வறோம். அடிக்கிற வெயிலுக்கு நாங்களெல்லாம் பரவுவதே ரொம்ப கஷ்டமாயிருக்கு. அதனால உங்கள மாதிரி இருக்கிற வயசானவங்க, நோய் எதிர்ப்பு சக்தி கம்மியா உள்ளவங்களா பாத்து நாங்க புடிச்சிக்கிறோம்.

“அப்ப என்ன புடிச்சிக்கிட்டியா!”

“ஆமாம்! நான் உன்னை கெட்டியா புடிச்சிக்கிட்டேன்”

”இல்ல நீ என்கிட்ட பொய் சொல்ற.. என்னையெல்லாம் உன்னால புடிக்க முடியாது. ஏன்னா? எனக்கு எந்தவொரு கெட்ட பழக்கமும் கிடையாது. தினமும் உடற்பயிற்சி செய்யுறன். பீப்பி.. சுகர்.. கூட எனக்கு இல்ல. அப்புறம் எப்படி நீ என்கிட்ட வருவ..” பெருமிதமாகவே தன்னைப் பற்றிச் சொல்லிக்கொண்டார் திருவேங்கடம்.

”அதெல்லாம் எனக்கு தெரியாது. இப்ப நான் உன் உடம்புல புகுந்திட்டேன். கெட்டியா பிடிச்சும்கிட்டேன். இனிமேல் இங்கிருந்து போகவும் மாட்டேன்” முடிச்சு முடிச்சாய் உள்ள கொரோனோவும் தலையை ஆட்டிக்கொண்டே சொன்னது.

அதற்குள் இருட்டாகியிருந்தது. பேச்சு வாக்கில் திருவேங்கடம் தன்னடைய சின்ன பையன் வீட்டிற்கு வந்துவிட்டிருந்தார்.

”ஏ கொரோனோ மிருகமே.. நான் என்னோட சின்ன பையன் வீட்டுக்கு வந்திட்டேன். இதுக்கு மேல நீ வர வேண்டாம். உன்னோட உறவெல்லாம் கேட்டுக்கு அந்தப் பக்கமாகவே இருக்கட்டும்.”

”அதெப்படி நான் உனக்குள்ளதான இருக்கன். நீ உள்ள போனீன்னா நானும்தான வருவேன்”

”உள்ள பேரக்குழந்தைகள்லாம் இருக்காங்க. அவுங்கள எனக்கு ரொம்ப புடிக்கும். நீ வீட்டுக்குள்ள வந்து அவுங்கள பயமுறுத்தி நிக்காத.. எனக்கே உன்ன பார்த்தா பயமா இருக்கு. அவுங்க சின்ன புள்ளைங்க. பயந்து போயிருவாங்க..”

”நான் வர்றது உறுதி. ஆனா உனக்காக ஒன்னு சொல்றன். கொஞ்சம் கேளு.. வீட்டுக்குள்ள போறதுக்கு முன்னாடி கைகால்களைக் கழுவி விட்டுப் போ. வீட்டுக்குள்ள இருக்கிறவங்கள யாரையும் தொடாத. எந்தப் பொருளையும் தொடாத. நேரா உன்னோட அறைக்குப் போயிடு. தனித்து இரு. நான் உன்கிட்ட இருந்து வேற யாருக்கிட்டேயும் பரவமாட்டேன். ஆனா இது இன்னிக்கு மட்டும்தான்.” கொரோனோவும் திருவேங்கடத்திற்கு விளக்கம் கொடுத்தது.

“எனக்கு அறுபது மேல வயசாயிடுச்சி. அப்படியிருந்தும் என்னை ஒருமையில நீ வா போன்னு கூப்பிடுற… ”

“எனக்கு அதெல்லாம் தெரியாது. நான் ஒரு வைரஸ். உங்கள மாதிரி மனிதர்களை அழிக்கும் சக்தி எங்ககிட்டதான் இருக்கு. உங்களை அடக்கி ஆளும் அதிகாரமும் எங்ககிட்டதான் இருக்கு. அதனால நான் உன்னை எப்படி வேணுமின்னாலும் கூப்பிடுவேன். அப்படியெல்லாம் நீ என்கிட்ட கேள்வியெல்லாம் கேட்க முடியாது. ஏதோ உனக்கு நல்லது சொல்லனுமுன்னு நினைச்சா… நீ என்கிட்டயே கேள்வி கேட்குறீயா? கோபமானது கொரோனோ.

வாசல் கேட்டை திறந்து வீட்டுற்குள் செல்லுவதற்கு முன் குழாயடிக்குச் சென்றார். கைக்கால்களை முழுக்க கழுவிக்கொண்டார். கொரோனோ சொன்னதுக்காக இல்லை. நம்முடைய சுத்தத்திற்காகத்தான் என்று தனக்குள்ளே மனம் ஒப்புதல் செய்து கொண்டார் திருவேங்கடம்.

ஈரக்கால்களுடன் கதவிற்கு முன்னால் நின்றார். கதவை இரண்டு முறைதான் தட்டியிருப்பார். அதற்குள் மருமகள் கதவை திறந்து,

”வாங்க மாமா… அதற்குள் தேதி ஒன்றாகி விட்டதா? என்று சொல்லிக்கொண்டே வாயில் முணுமுணுத்துக்கொண்டே சமையலறைக்குள் புகுந்தாள்.

பையனும் திருவேங்கடத்தை வரவேற்று அண்ணனையும் அண்ணியையும் பற்றி விசாரித்தான். பேரக்குழந்தைகள் தாத்தாவின் கால்களைக் கட்டிக்கொள்ள ஓடி வந்தன.

”வேண்டாம் குழந்தைகளே! தாத்தா முதல்ல குளிச்சிட்டு வந்திடுறேன். அப்புறமா நாம விளையாடலாம்” என்று சொல்லிக் கொண்டே வேகமாகத் தனது அறைக்குள் சென்று கதவைத் தாழ் போட்டுக்கொண்டார். எங்கே இருக்கிறது கொரோனோ வைரஸ் என்று அறை முழுவதும் தன்னுடைய கண்களைச் சுழற்றி ஒருமுறை பாரத்துக்கொண்டார். லைட் வெளிச்சத்தில் எங்கையும் இல்லை. அப்பாடா… என்றிருந்தது அவருக்கு. குளிக்கச் சென்றார். சோப்பை நன்றாகத் தேய்த்துக் குளித்தார். மனமும் உடம்பும் புத்துணர்ச்சியாகத் தென்பட்டது. மெல்லிய ஆடையை அணிந்து கொண்டார்.

தன்னுடைய வெற்றுடலைத் தலை குனிந்து பார்த்தார். தோல்கள் சுருங்கி வயதானவர்கள் போல் தோற்றம் தந்தன. மனசுக்குள் இளம்வயதுன்னு நினைப்பு. வயசாயிடுச்சில்ல அப்படித்தான் இருக்கும். அமைதியாய் புன்னகை மட்டும் செய்தார். கதவு தட்டும் சத்தம் கேட்டது. பையன்தான் சாப்பிட அழைத்தான். ஏனோ அவருக்கு வெளியே சென்று குடுபத்தினருடன் சேர்ந்து சாப்பிட விருப்பமில்லாமல் போனது. ஒருவேளை கொரோனோ ஞாபகம் அவரை அவ்வாறு எண்ண வைத்திருக்கலாம்.

“நான் இங்கையே சாப்பிட்டுக்கிறேன்பா.. சாப்பாடு கொண்டு வந்து குடு…

கொஞ்ச நேரத்தில் மீண்டும் கதவு தட்டப்பட்டது. திருவேங்கடம் கதவை திறந்து சாப்பாட்டை மட்டும் வாங்கிக்கொண்டார். உடனடியாக மீண்டும் கதவு தாழிடப்பட்டது. திருவேங்கடத்திற்கு நடந்து வந்த களைப்பினாலும் குளித்ததனாலும் வயிறு பசி எடுத்தது. சாப்பிட்டவுடன் படுக்கையில் படுத்துக்கொண்டார். கொஞ்ச நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றார். இரவு நேரம் கொஞ்சம் வேகமாகவே சென்றது.

நடு இரவு. அந்த அறையின் படுக்கையில் திருவேங்கடத்திற்கு தலைமாட்டுக்கு மேல்தான் அந்தக் கொடிய வைரஸ் அமர்ந்திருந்தது. அறை முழுவதும் இருட்டாக இருந்தது. திருவேங்கடத்திற்குள் கொரோனோ வைரஸ் தன்னுடைய ஆளுமையை நிலைநாட்ட தொடங்கியிருந்தது. இனபெருக்கத்தின் மூலமாக அவரின் உடம்பு முழுக்க கொரோனோ வைரஸால் பரவவிட்டிருந்தது.

அந்த அறையில் அவர் எங்கெங்குச் சென்றாரோ அங்கெல்லாம் வைரஸ்கள் சுற்றித் திரிந்தன. வேகமாகச் சுற்றிய ஃபேன்னிலிருந்து வந்த காற்றுத் திருவேங்கடத்தின் மீது படாமல் இல்லை. ஆனாலும் அவரின் உடம்பு ரொம்பவே வியர்த்திருந்தது. உடம்பு கொஞ்ச கொஞ்சமாய் சூடாகத் தொடங்கியது. சுவாசப் புற்றுகளும் அடைபட்டு மூச்சு விடுவதற்குப் பாடாய் படுத்திக்கொண்டிருந்தது. இதற்கு நடுவே ஆழ்ந்த தூக்கத்தில் கனவுகள் வேறு. துரத்துவது போன்று.. குழிக்குள் விழுவது போன்று.. யாரோ தன்னுடைய உடம்பை அழுத்துவது போன்று… இரத்தம் சொட்டசொட்ட அறுபட்ட ஆட்டுத் தலையை எடுத்துச் செல்வது போன்று… இப்படி ஒரு கனவா? அப்பப்பா ஓராயிரம் கனவுகள். எதுவுமே ஞாபகத்தில் வைத்திருக்க முடியாதவையே! யாரோ இதயத்தைச் சம்மட்டியால் ஓங்கி ஓங்கி அடிக்கின்ற மாதிரி வலி. கண் இமை மூடியிருக்க உள்ளேயிருக்கும் கண்கள் மட்டும் இப்படியும் அப்படியுமாகச் சென்று வந்து கொண்டிருந்தது. திடிரென்று பின்னந்தலையில் யாரோ தட்டி எழுப்பினார் போன்று திடுக்கென்று எழுந்து உட்காந்து கொண்டார் திருவேங்கடம். ஒருவேளை பின்னாலிருக்கும் கொரோனோ வைராஸா கூட இருக்கலாம். யாருக்குத் தெரியும்? திருவேங்கடத்திற்கு தூக்கம் முழுமையாகக் கலைந்திருந்தது.

”என்ன நல்ல தூக்கமா? இப்படி பாதியில முழிச்சிக்கிட்டியே! ஐய்ய்யோ…”

“நீயா… எப்படி உள்ள வந்த? வீட்டுக்குள்ள வரக்கூடாதுன்னு சொன்னன்ல்ல… அப்புறம் எதுக்கு வந்த? ஏ வந்த?” கேள்விகளை அடுக்கினார் திருவேங்கடம்.

“நீ உள்ள வந்தல்ல… அதான் உன் கூடவே ஒட்டிட்டு வந்திட்டேன்” – வைரஸ்

“ஐயோ… உங்கிட்ட தொந்தரவா போச்சு…” ரெண்டு முறை அதிகப்படியான இருமல். இருமல் நின்றவுடன், ”எப்படி எங்கிட்ட நீ வந்த?”

“நீ வர்ற வழியில உன்னோட பிரண்ட பாத்து கைக்குலுக்கினியா?”

”ஆமாம்! கைக்குலுக்கினேன். அதுக்கு என்ன இப்போ?”

“அவருகிட்ட இருந்துதான் உன்கிட்ட வந்தேன். நீ என்னா பன்னுனா? உன் கையை காதுல விட்டு குடைஞ்ச.. நான் காது வழியா உடம்புக்குள் வந்துட்டேன்”

கொஞ்சம் ஆச்சர்யம் கலந்த முகத்தோடுதான் கொரோனோவைப் பார்த்தார் திருவேங்கடம்.

“சரி… என்னோட பிரண்டுக்கிட்ட எப்படி வந்த?”

“இரு.. உனக்கு முதல்ல இருந்து சொல்றன். சீனாவுலதான் முதல்ல நாங்க உருவானோம். அப்புறம் அங்கிருந்து அப்படியே மனிதர்கள் மூலமா அமெரிக்கா, இத்தாலி, ஜெர்மனியின்னு பரவினோம். உன் பிரண்டோட பையன் அமெரிக்காவுல இருந்து இந்தியா வந்தான். அவன் மூலமா அவுங்க அப்பா நீன்னு வந்திட்டோம். இன்னும் ஓரிரு நாட்களுக்குள் இந்தியா முழுவதும் பரவி விடுவோம்”

“நியூஸ்ல கூட இதபத்தி எதுவும் சொல்லலையே.. ”

”ஆமாம்! அமெரிக்கா பையன். அவனோட அப்பா, அம்மா. அப்புறம் நீ. உங்ககிட்ட இருந்துதான் மற்ற அனைவர்கிட்டேயும் போகனும். இதபத்தி இன்னும் அரசாங்கத்துக்குக் கூட தெரியாது. அதுக்குள்ள உங்க எல்லார்கிட்டேயும் ஒட்டிக்குவோம். முதல்ல உங்க வீட்டு பையன், மருமகன், பேரக்குழந்தைகள்ன்னு ஆரமிச்சி இந்த ஏரியாவையே சுத்தி வளைச்சிருவோம். ஹா..ஹ்ஹாஹா… என்று சிரித்தது அந்த வைரஸ்.

திருவேங்கடத்தின் உடம்பு அனலாய் கொதித்தது. மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமபட்டார். நடப்பது கனவு அல்ல நிஜம். உண்மையாலுமே நமக்கு கொரனோ வைரஸ் காய்ச்சல் வந்து விட்டது. நம்மூலம் நம் மக்களிடையே பரவும் அபாயமும் உள்ளது. தன்னுடைய அனுபவத்தில் எத்தைனையோ வலிகளை அனுபவித்திருக்கிறார். ஆனாலும் இந்த வலியை, காய்ச்சலை, உடம்பு எரிச்சலை தாங்க முடியாதவராய் நிலை தடுமாறிப்போனார். இதே வைரஸ் காய்ச்சல் குழந்தைகளுக்கு வந்தால், கொஞ்சம் நினைத்துப் பார்த்தார். மனம் பதைபதைத்தது.

“உடனடியாக அரசாங்கத்திடம் இதைப்பற்றி தெரியப்படுத்தி உங்களை கொல்லவும் மக்களைப் பாதுகாப்பாக இருக்கவும் வழிவகை செய்ய போகிறேன்” என்றார் திருவேங்கடம்.

மீண்டும் அதே சிரிப்பு! எங்களுக்கு அழிவே கிடையாது. ஒட்டு மொத்த மனித இனத்தையே அழிச்சி நாங்கதான் இந்த உலகத்தையே ஆளப்போறோம். மீண்டும் அதே சிரிப்பு.

அந்த நேரத்தில் கதவு தட்டும் சத்தம் கேட்கிறது.

”அப்பா… அப்பா…” பையன்தான் அழைக்கிறான்.

உள்ளேயிருந்து கொண்டே ”என்னப்பா…” ஒற்றை வார்த்தையில் திருவேங்கடம்.

“உங்களோட பிரண்ட் ராமநாதன் அங்கிள் வீட்டுல கேஸ் வெடிச்சிடுச்சாப்பா..”

“என்னாச்சுடா….”

“எல்லோரும் உடல் கருகி செத்துட்டாங்களாம். நான் போயி ஓரெட்டுப் பாத்திட்டு வந்திடுறேன். நீங்க காலையில போங்கப்பா…”

இப்போது திருவேங்கடம் கலகலவென்று சிரித்தார். கொரோனோ தொற்று உள்ள என்னோட நண்பன் குடும்பமும் இப்ப இல்ல. மிச்சம் இருக்கிறது நானும் இந்த அறையும்தான். ஏய் மிருகமே! உன்னையும் நான் அழிக்காம விட மாட்டேன். அலைமாறியில் உள்ள விளக்கை எடுத்தார். மூடியைத் திறந்தார். திரியை கழட்டி கீழேப் போட்டார். பாட்டிலில் இருக்கும் மண்ணெண்யைத் தன்னோட உடம்பில் பாதியையும், அறைப் பகுதியில் கொஞ்சமும் ஊற்றினார். கொரோனோ வைரஸின் உடம்பில் புள்ளிபுள்ளியாய் முட்டை வடிவமாய் பெரியதாய் தோன்ற ஆரமித்தது. திருவேங்கடம் தீப்பெட்டியை உரசி நெருப்பைத் தன் உடம்பில் பற்ற வைத்துக்கொண்டார். திருவேங்கடத்தின் உடம்பு நெருப்பாய் கொதித்தது. கொரோனோ வைரஸ் நெருப்பில் வெந்து சாம்பலானது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *