உங்களுக்குச் சாமியைப் பிடிக்குமா ? எனக்குப் பிடிக்காது.!! – ஆத்திகமும் நாத்திகமும் எதிரெதிர் துருவங்கள் ஒன்று சேர முடியாத புகைவண்டி தண்டவாளங்கள், இணை கோடுகள். இருக்கு, இல்லை என்று எவரும் நிரூபித்தது இல்லை. இது இப்போதல்ல. ஆதி காலம் தொட்டே அப்படி.
இருக்கிறவர்களுக்குக் கடவுள் இருக்கார். இல்லாதவர்களுக்கு இல்லை. இப்படித்தான் ஒதுங்கிப் போய்…எவரெவருக்கு எது சரியோ அதைப் பிடித்துக் கொண்டு வாழ்வது முறை. அதை விடுத்து…ஏற்றத் தாழ்வு, மக்கள் பலம் அதிகம், குறைவு காரணங்களால் வஞ்சம், வன்மம், பகை என்பதெல்லாம் அத்துமீறல், அராஜகம்.
கோயிலில்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் ! சரி. மக்கள் கொண்டாடினால்தான் கோயில். இல்லையென்றால்…குட்டிச்சுவர். இதுதான் நிஜம். இதை எந்த ஆன்மீகவாதிகளாலும் மறுக்க முடியாது.
எனக்குக் கடவுள் பிடிக்காமல் போனதற்குக் காரணமே…. மக்கள் அட்டகாசங்கள்தான். எப்படி எப்பயெல்லாம் வேண்டுதல்கள், பரிகாரங்கள், பூசை, புனஸ்காரங்கள். தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரர்கள். எல்லாமே அவரவர்கள் கற்பனைக்கு எட்டியவை. காவடி எடுத்து, அலகு குத்தி, தலையில் தேங்காய் உடைத்து….உயிரை மட்டும் வைத்து உடலை வருத்தி ஒரு வரைமுறை இல்லாமல் மரண விளிம்புவரை சென்று நிறைவேற்றுகிறார்கள். பயங்கரம்.!
தெய்வம் இவர்களை இப்படி செய், அப்படி செய் என்று எவரையும் கட்டாயப் படுத்தவில்லை. கல்லை வைத்துப் படைத்தாலும் மண்ணை வைத்துப் படைத்தாலும் அந்த தெய்வம் ஏன், என்னவென்று கேட்பதே இல்லை. ஒருத்தன் மரணத்தைத் தொட்டு வேண்டுதல்கள் செய்கிறான் என்பதற்காக எந்த தெய்வமும் எதையும் அவனுக்கு அள்ளிக் கொடுத்ததும் கிடையாது. இப்படி இருந்தும் செய்கிறார்கள். தெய்வம் கொடுப்பதும், கொடுக்காததும் அவரவர்கள் மனநிலையைப் பொருத்த சமாச்சாரங்கள்.
தெய்வம் கேட்டால் செய். இப்படி கேட்டால் அது தெய்வமில்லை. தெய்வம் என்கின்ற ஒன்று இல்லாத போது இதையெல்லாம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. தெய்வம் இருந்தாலும் இப்படி செய்ய என்று அவர்களை அனுமதிக்கவும் கூடாது.
தெய்வம் இருந்தால் கோயிலில் கொள்ளை இருக்காது. அதுவும் களவு போகாது. சாமியே களவு போகும்போது தெய்வம் இருக்கிறதா..?
எங்கள் ஊரில் பூசாரி ஒருவர் இருந்தார். தினமும் மாரியம்மனுக்கு அவர்தான் காலை மாலை பூசை செய்வார். தீமிதி திருவிழாவின் போது பூசாரி என்கிற முறையில் அவர்தான் கரகம் எடுத்து முதல் ஆளாக தீக்குள் இறங்குவார். அப்படி இறங்கியவர் ஒரு முறை தடுக்கி அக்கினி குண்டத்தில் விழுந்து விட்டார். நெருப்பு சுட்டு உடம்பெல்லாம் கொப்புளங்கள். அவர் அதிலிருந்து மீண்டு வருவதற்கு ஆறு மாதங்களுக்கு மேலானது. தனக்கு தொண்டு செய்து பக்தியோடு இறங்கியவரை தெய்வம் இப்படி செய்யலாமா ?
ஆள் தடுக்கி விழுந்த போது குய்யோ முறையே என்று கூச்சல் போட்ட மக்கள் அப்போதும், மறுபடியும்.. “மனுசன் என்ன தப்பு செய்தாரோ… தெய்வம் தண்டித்துவிட்டது.!” – முணுமுணுத்தார்களேத் தவிர….அனுதாபப்படவில்லை.
என் வீட்டருகில் நண்பர் ஒருத்தர் குடி இருந்தார். அவர் நெற்றியில் திருநீறு இல்லாமல் பார்க்க முடியாது. ஆள் வீட்டை விட்டு வெளியே வந்தால் நேரம் பார்ப்பார், சகுனம் பார்ப்பார். ஆள் தொட்டது துலங்கவில்லை. வயசு ஐம்பது. இன்னும் வாடகை வீட்டில்தான் குடி. குழந்தையும் பிறக்கவில்லை. அவர் குறைகள் எதுமே நிவர்த்தி ஆகவில்லை என்கிறபோது….. அவர் பக்தி! செவிடன் காதில் ஊதிய சங்கு.
அப்புறம்…. இந்த ஆன்மீகவாதிகள் எனும் சாமியார்கள். பொரும்பாலானவர்களின் பின் பக்கம் படு மோசம், சந்தி சிரிப்பு. அப்படி இருந்தும் மக்கள் அவர்களை நாடித்தான் செல்கிறார்கள். காரணம் பக்தி. இந்த பக்தி என்கிற பனி மூட்டத்தில் மக்கள் மனமும் உடலும் மரத்துப் போக….அவர்கள் தங்களுக்கு என்ன நடக்கிறது என்பது தெரியாமலே விழுகிறார்கள்.
சாமி இருப்பது உண்மையென்றால்….”ஏய்! என் பெயரைச் சொல்லி எந்தப் பெண்ணையும் தொடாதே!” எச்சரித்திருக்க வேண்டும். மீறி தொட்டவன் கையை வெட்டி இருக்க வேண்டும். இல்லை….கால் கைகள் இழுத்து பக்கவாதமோ எதுவோ அடித்து…அடுத்து எழுந்திரிக்க முடியாமல் செய்திருக்க வேண்டும்.
அது இல்லாமல்….’அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்!’ என்பதெல்லாம் தப்பு.
அனுபவிக்கும் வரை அனுபவி என்று அனுமதித்து ஆளை ஆடவிட்டு…பிடிபட்ட பின் தண்டனை என்பது என்ன நியதி. அதிலும் நீதிமன்ற படி ஏறி விட்டால் அவ்வளவுதான். எத்தனை வருடங்கள் கழித்து தண்டனையோ ? தெய்வம் யார் பக்கம் கைகட்டி நிற்கிறது.!
நான் குற்றமற்றவன்….. என் பெயரைச் சொல்லி தவறாதே. தண்டிப்பது தான் தெய்வம். அப்படி இருக்க ஆட விட்டு வேடிக்கைப் பார்ப்பது தெய்வமாக இருக்காது.
அதற்கு அன்றே கொல்லும் அரசன் தெய்வமாக இருக்கலாம். ஏற்றுக்கொள்ளலாம்.
சாமிக்கு மாலை போடும் பக்தர்கள்…வேனிலும் வழியிலும் விபத்தில் கொத்து கொத்தாக சாகிறார்களே..! எல்லாருமா தவறு செய்தவர்கள். ஒருவனைத் தண்டிக்க அத்தனைப் பேர்களையும் அவதிக்குள்ளாக்குவதா தெய்வம். ?
சங்கடங்கள் தீர்க்கும் சங்கட சதுர்த்தி விழாக்களுக்கு மக்கள் காலையிலேயே எழுந்து குளித்து முடித்து….மடியாய் சாமிக்கு வேண்டியதெல்லாம் எடுத்த வைத்து….. இவர்கள் சங்கடப்படுவார்கள். சங்கடங்கள் தீர்க்கத்தானே சங்கடசதுர்த்தி… நீ ஏன் சங்கடப்படவேண்டும். சாமி முன் நின்று என் சங்டங்கள் தீர் என்று கையெடுத்துக் கும்பிட்டு வந்தால் உன் சங்கடங்கள் தீராதா..?
இப்படியெல்லாம் யோசித்து யோசித்து, மக்களிடமிருந்து பாடம் கற்று, ராகு காலாம் எமகண்டம்… போன்ற கெட்ட நேரங்களில் என் காரியங்கள் செய்து முடித்து, அமாவாசைக்கு அடுத்த நாள் பாட்டி முகம் என்ற கெட்ட நாள் கிழமைகளிலெல்லாம் என் காரியங்கள் முடித்து செவ்வாய் வெறுவாய், வெள்ளி கொள்ளி என்பதையெல்லாம் பரிசோதித்து, மீறாதே என்பதையெல்லாம் மீறி… ஒன்றுமில்லை என்பது தெரிந்து துணிந்தவனுக்குத் துக்கமில்லை என்று தெளிந்து இறுதியாய்க் .கடவுளும் இல்லை என்கிற முடிவிற்கு வந்து……எனக்குச் சாமி பிடிக்கவில்லை.
எனக்குச் சாமி பிடிக்கவில்லை, கும்பிடவில்லை, அதன் சடங்கு சம்பிரதாயங்களில் பிடித்தமில்லை, பங்குகொள்வதில்லை என்பதற்காக மற்றவர்கள் மனம் நோகும்படி அதைப் பற்றி இழித்தும் பழித்தும் பேசியது கிடையாது. என் மனைவி மக்கள்களை சாமி இல்லை நீங்கள் சாமி கும்பிடாதீர்கள் என்று ஒரு வார்த்தை சொல்வது கிடையாது. சொன்னதும் கிடையாது. நீங்கள் கும்பிடுங்கள் என்னை விடுங்கள் என்று சொல்லி….எல்லா கோயில் குளங்களுக்கும் அழைத்துச் சென்றிருக்கிறேன்.
கும்பகோணம், காஞ்சி, மதுரை, திருப்பதி, திருநெல்வேலி, ராமேஸ்வரம், கன்னியாக்குமரி, பழனி, திருச்செந்தூர்…….இத்தியாதி என்று என் வீட்டு ஜனங்கள் எல்லா கோயில் குளங்களையும் தரிச்சித்திருக்கிறார்கள். இத்தனைக் கோயில்களுக்கும் அழைத்துச் சென்ற நான்…..அவர்களை உள்ளே விட்டு நான் வெளியே நின்றதில்லை. கர்ப்பகிரகம்வரை கொண்டு விட்டு அவர்களை சாமிக்கும்பிட வைத்து நான் கோயில் கட்டுமானம் விக்கிரங்களைக் கவனிப்பேன். எந்தவித எந்திர வசதியும் இல்லாத அந்தக்காலத்தில்…கல்லில் எப்படி இந்த கைவண்ணம் வியப்பேன்.
எந்தெந்த கோயில்கள் எந்தெந்த அரசர்களால் எத்தனை ஆண்டுகள் கட்டியது, கட்டப்பட்டது வரலாற்றைத் தேடிப் பிடித்துப் படித்து….தமிழக கோயில்களின் வரலாறுகள் எனக்கு அத்துப்படி.
அப்புறம்… சதுரகிரி, வெள்ளையங்கிரி, பர்வதமலை, வள்ளிமலை, கொல்லிமலை, சபரிமலை என்று நான் நண்பர்களுடன் ஏறாத மலைக்கோயில்களும் இல்லை.
நான் கார் வாங்கியதிலிருந்து சனி ஞாயிறு விடுப்பு நாட்களில் அலுவலக நண்பர்கள் நான்குபேர்களை இழுத்துக் கொண்டு…நானே ஓட்டிச் சென்று பார்த்து வந்திருக்கிறேன். சனிக்கிழமை விடியல்காலை 4.00 மணிக்கு காரை எடுத்தால் திங்கள் விடியல்காலை 4.00 மணிக்கு வீட்டிற்குத் திரும்புவது எங்கள் வழக்கம். இப்படி மாதம் ஒரு பயணமென்று……..தமிழ்நாட்டில் ஏறக்குறைய எல்லா மலைக்கோயில்களையும் பார்த்து முடித்தோம். முதல்முறை சபரிமலை செல்லும்போது….காவிகட்டி மாலை போட்டால்தான் பதினெட்டு படி ஏறமுடியும் என்று எல்லோரும் சொன்னதால் அதற்காக நானும் அவர்களோடு மாலை போட்டு காவி கட்டி வேசம் போட்டேன். அங்கு சென்றதும்….படியேற மட்டும் இந்த விதி மற்றப்படி சாமியைத் தரிசனம் செய்வதற்கெல்லாம் அத இல்லை என்பது தெரிய….இரண்டாவது முறை போடவில்லை. இறுதியாக அப்படித்தான் சென்ற மாதம் மூன்றாவது முறையாக சபரிமலை சென்று திரும்பினோம்.
வழக்கம்போல் நான் காரோட்டினேன். திருச்சி வரும்போது மணி ஒன்று. அங்கே இரவுக்கடையில் டீக்குடித்து ஓய்வெடுத்துவிட்டு கிளம்பினோம். தஞ்சையைத் தாண்டியதும் விபத்து….அந்த நிசியில் நாய் ஒன்று எதையோத் துரத்திக் கொண்டு ஓட….நான் அது வண்டியில் மோதாமல் இருக்க எத்தனிக்க…..கார் என் கட்டுப்பாட்டை மீறி புளியமரத்தில் மோதி…..எஞ்சின் உடனே தீப்பற்றியது. நான் சீட் பெல்ட் இறுகத்தில் சிக்கித் தவிக்க…..உள்ளே உட்கார்ந்திருந்த நண்பர்களுக்கும் அடி குய்யோ முறையோ. சத்தம் கேட்டு.. ஓடி வந்த கிராம மக்களும், அப்போது அந்த வழியாக சென்ற பேருந்து வழி போக்கர்களும் ஓடிவந்து உதவி; எங்களைக் காப்பாற்றினார்களேத் தவிர கார் எறிவதைத் தடுக்க முடியவில்லை. வெடிக்கும் என்று பயந்து…யாரும் நெருங்கவில்லை.
ஆனால் அதை அணைக்கவும், எங்களைக் காப்பாற்றவும் அவர்கள் தங்கள் கைபேசிகளில் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தும், 108 அரசு அவசர சிகிச்சை ஊர்திக்கும் தகவல்கள் மேல் தகவல்களாகக் கொடுத்து ஆளாளுக்கு முயன்றார்கள்.
யாரும் வரவில்லை.
முயலாதவர்களெல்லாம் என்ன செய்வதென்று தெரியாமல் துடித்து, விழித்து கார் எரிவதை வேடிக்கைப் பார்த்தார்கள்.
எனக்கு அந்த நேரத்தில் உடலில் காயமில்லையேத் தவிர…மற்றப்பபடி உடலில் எங்கு, எப்படி, என்ன அடி என்பதெல்லாம் விபத்து அதிர்ச்சியில் தெரியவில்லை. சீட் பெல்ட் இறுக்கத்தின் விளைவு மார்பில் கொஞ்சமாக வலி இருந்தததேத் தவிர வேறெங்கும் பெரிதாய் வலி இல்லை.
அதனால் நான் சாலை ஓரம் அமர்ந்து கார் எரிவதையும், அது எப்போது, எப்படி வெடிக்கும் திiரைப்படக் காட்சிகளில் காட்டுவது போல் உயரம் சென்று விழுந்து சிதறுமா…என்று கவனித்துக் கொண்டிருந்தேன்.
அப்போதுதான் என் கார் எரிவதைப் பார்த்துக் கொண்டே மெதுவாக ஒரு சிற்றுந்து ஊர்ந்து என்னைக் கடந்து செல்ல…. அதிலிருந்து…..
“டேய்! சித்தப்பாடா..!” குரல் கேட்டது.
அடுத்த சில விநாடிகளில் அது நின்று…. அதிலிருந்து ஏழெட்டுப் பேர்கள் விரைந்து வந்தார்கள். அதில் முதலில் வந்த நபர் என் கூடப் பிறந்த அண்ணன் மகன் அறிவொளி…
“சித்தப்பா…! எரியறது உன் காரா?” என்றான் பதற்றமாக.
“ஆமா..” சொல்லிப் பார்த்தேன்.
அவன் மட்டுமில்லாமல் அவனோடு வந்த எல்லாருமே சபரிமலைக்கு மாலைப் போட்டிருந்தார்கள்.
“மலைக்குப் போறீங்களா..?”
“ஆமா..” அவன் சொல்ல…
எரிந்த கார் டப்பென்று பெரிய வெடிப்பாக இல்லாமல் லேசாக வெடிக்க….அடுத்த விநாடி என்னையுமறியாமல்….எனக்கு கண்கள் இருட்டி மயக்கம் வந்தது.
மறுநாள் மதியம்… நான் விழித்துப் பார்க்கும்போது…தஞ்சை தனியார் மருத்துவமனை கட்டிலில்… கையில் செலைன், முகத்தில் மூச்சுக்குழல், பக்கத்தில் ஆக்ஸிசன் சிலிண்டர்….. சுற்றிலும் மனைவி, மக்கள், சுற்றம், நட்பு…
“சாமியே இல்லேன்னு அடமாய் இருக்கீங்களே. சபரிமலைக்குப் போய் திரும்பின உங்களை அந்த ஐயப்பன்தான் உங்க அண்ணன் மகன் உருவில் தன் பக்தர்களாய் வந்து உங்க உசுரைக் காப்பாத்தி எனக்கு மாங்கல்ய பிச்சைக் கொடுத்திருக்கார். புரிஞ்சுக்கோங்க.” என் மனைவி தழுதழுத்தாள்.
விபத்திற்கு..சாமி சாயப் பூச்சு. அரிதாரம். !
‘சாமியே சரணம் ஐயப்பா!’
நான் உள்ளுக்குள் கூவி மெல்ல முறுவலித்தேன். வேறு வழி..?