லாட்ஜ் அறையைப் பூட்டிக்கொண்டு வெளியே வந்த சரவணன் எதிர் சாரியில் இருந்த ஓட்டலுக்கு அருகாமையில் இருந்த பெட்டிக் கடையைப் பார்த்தார்..
ரிசர்வ் வங்கியின் தலைமை அலுவலகத்தில் முக்கியமான உயர் அதிகாரி சரவணன்
உறவினரின் திருமணத்திற்காக அந்த சிறு நகரத்திற்கு வந்திருக்கிறார் அவர். அவரிடம் ரிசர்வ் வங்கியின் ‘லோகோ’வுடன் தலைமை அலுவலக விலாசம் பொறிக்கப்பட்ட காகித உறைகள் இருந்தன. அதில் மொய் வைப்பதை விரும்பவில்லை அவர். அதனால் மொய் கவர் வாங்க அந்தப் பெட்டிக் கடைக்குச் சென்றார்.
ஓட்டலிலிருந்து சோர்வாகவும் தள்ளாடியபடியும் வெளியே வந்து கொண்டிருந்தான் வடிவேல். வடிவேலுக்கு பத்து அல்லது பன்னிரெண்டு வயதிருக்கலாம். ஆனால் அவன் வறுமை அவன் வயதை பத்து வயது கூட்டிக் காட்டியது.
குழி விழுந்த கண்கள். ஒட்டிய கன்னம். ஒட்டிய வயிறு. ஆங்காங்கே ஒட்டுப் போட்ட உடை. கையில் ஒரு பை. தள்ளாடி வந்தவன், மேலே நடக்க முடியாமல் தரையில் அமர்ந்து தலையைப் பிடித்துக்கொண்டான்.
அவன் சிந்தையில் வீட்டில் பட்டினியாய்க் கிடக்கும் அம்மாவும் தங்கையும் கண் முன் வந்தார்க்ள. ‘ அவர்களுக்கு என்ன பதில் சொல்வது?’ மனம் கலங்கியது அவனுக்கு.
“வடிவேலு..”
“என்னம்மா..?”
“கையிலே நயா பைசா இல்லேடா..? கடைல கடன் சொல்லி டிபன் வாங்கியாறியா?
“ஏற்கெனவே ரெண்டு நாளு கடனுக்கு வாங்கிட்டதால இண்ணிக்கும் தரமாட்டாரும்மா கடை முதலாளி..! அம்மா, எனக்கு ஒரு யோசனை தோணுதும்மா,,”
“என்னா யோசனை சொல்லு வடிவேலு..?”
“சாமி உண்டிய உடைச்சி காசு எடுத்துக்கலாம்மா..? “
வடிவேல் சொன்ன யோசனை சரியாகப் பட்டது அம்மாவிற்கு ‘தொடர்ந்து யார்தான் கடன் கொடுப்பார்கள்!’.
உண்டியல் உடைந்தது. அதில் இருந்த 6 பத்து ரூபாய் நாணயங்களோடு கடைக்குச் சென்றான் வடிவேல்.
வழக்கமான கடையை விடுத்து ‘டவுனில்’, ‘லாட்ஜ்’க்கு எதிரில் இருந்த ஓட்டலில் ‘டிபன்’ வாங்க வந்தான்.
அவன் கேட்டதை ‘பார்சல்’ செய்தவுடன் கல்லா’வில் பணம் கேட்டபோது, வடிவேல் ஐந்து பத்து ரூபாய் நாணயங்களை வைத்தான்.
“தம்பீ.. ‘காயின்’ வாங்க மாட்டோம். ரூபாய் நோட்டாக் குடு..” என்றார் கல்லாவில் உட்கார்ந்திருந்த முதலாளி.
“வேற இல்லீங்க..?” பாவமாகச் சொன்னான் வடிவேல்.
“சர்வர்.. இந்த பார்சலை உள்ளே கொண்டு போ…! இந்தா உன் காயின், எடுத்துக்கிட்டு எடத்தை காலி பண்ணு.!.” கண்டிப்பாக விரட்டினார் முதலாளி.
கெஞ்சிப் பார்த்தான். கண்ணீர் விட்டான். முதலாளி இரக்கப்படவில்லை. பசி கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது. ‘சரி! வழக்கமாக வாங்கும் கடைக்கே சென்று இந்த நாணயங்களைக் கொடுத்து வாங்கிச் செல்வோம்’ என்று திரும்பிச் செல்லும்போதுதான் பசிக் கொடுமையால் மயங்கி, தடுமாறி, தரையில் உட்கார்ந்து, தலையைப் பிடித்துக் கொண்டு, துடித்தான் வடிவேலு.
வடிவேலு கீழே விழுந்ததைப் பார்த்த சரவணன், “அந்தப் பையனைப் பாருங்க. !.” என்று பதற, கடையிலிருந்து வெளியேறி வடிவேலுவை நோக்கிப் பெட்டிக்கடைக்காரர் ‘மினரல் வாட்டர்’ பாட்டிலுடன் போக, கூடவே சென்றார் சரவணனும்
பசி மயக்கம் என அறிந்ததும் மினரல் வாட்டரை கைக்குழியில் ஊற்றிக்கொண்டு முகத்தில் ‘பளிச்! பளிச்!’ சென அடித்தார்
பெட்டிக் கடையிலிருந்து ‘ஜூஸ் பாக்கெட்’ கொண்டு வந்து, கத்தறித்து அவனுக்குக் கொடுத்தார்
அக்கம்பக்கத்துக் கடைக்காரர்கள், வழிப் போக்கர்கள் என கூட்டம் கூடிவிட்டது.
“தம்பி ..எங்கேருந்து வரே! “ என்று விசாரித்தார் சரவணன்.
ஓட்டல் கடையில் நடந்ததைச் சொல்லி உள்ளங்கையில் மூடி வைத்திருந்த பத்து ரூபாய் நாணயங்களைக் கை விரித்துக் காட்டினான் அந்தச் சிறுவன்.
“பத்து ரூபாய் நோட்டு கொடுத்தாத்தான் டிபன் குடுப்பாங்களாம். வீட்ல அம்மாவும் தங்கச்சியும் பட்னியாக் கிடக்காங்க. !.” அழுதான் சிறுவன்.
‘பத்து ரூபாய் நாணயங்கள் செல்லத்தக்கவையே’ என்று ரிசர்வ் வங்கி பலமுறை விளக்கம் அளித்துவிட்டது. ஆயினும், நாணயங்கள் செல்லாது என்ற வதந்தி ஆங்காங்கே இன்னமும் நீடிப்பதையும், அதை வாங்க மறுக்கும் அவலத்தையும் கண்டு வருத்தினார் சரவணன்.
கும்பகோணத்தில் இருந்து கோவைக்கு வேலை நிமித்தம் நேர்முகத் தேர்வுக்காக வந்த பாரதி கண்ணன் என்ற இளைஞர், தன்னிடம் இருந்த நான்கு பத்து ரூபாய் நாணயங்களை மாற்ற முடியாமல் பசியோடு அலைந்த சம்பவம் பற்றி என்றோ படித்த பத்திரிகைச் செய்தி, நினைவில் வந்தது சரவணனுக்கு.
ரிசர்வ் வங்கியின் உயர் அதிகாரியான அவருக்கு , ‘காயின்’ வாங்க மறுத்த குற்றத்திற்காக உடனடியாக அந்த ஓட்டல் முதலாளிக்கு சட்டப்படி தண்டனை வாங்கித்தரவேண்டும்’ என்ற எண்ணம் வந்தது. அடக்கிக் கொண்டார்.
‘இந்த ஒரு கடைக்காரரை தண்டிப்பதால் எந்தப் பயனும் இல்லை..!’ என்று தன்னைத் தானே சமாதானப் படுத்திக்கொண்டார்.
அக்கம் பக்கக் கடைக்காரர்களெல்லாம், ஓட்டர்காரின் செயலை ஞாயப்படுத்தினார்கள்.
10 ரூபாய் நாணயங்களை வாடிக்கையாளர்களிடம் வாங்க மறுக்கக் காரணம், ‘வங்கிகளும் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாகவும்’ கூறினார்கள்.
தன்னை யாரென்று காட்டிக் கொள்ளவில்லை சரவணன். ‘முதலில் பசிக் கொடுமையால் வாடும் அந்தக் குடும்பத்திற்கு உணவளிப்பதே முதற்கடமை!’ என்றது அவர் மனம்.
நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து சிறுவனிடம் கொடுத்தார்.
அந்தச் சுயமரியாதை உள்ள சிறுவன் அவர் கொடுத்த நூறு ரூபாயை வாங்கவில்லை, மாறாக, “காயின்களை வாங்கிக்கிட்டு ரூபாய் நோட்டு கொடுத்தாலே பெரிய உதவிசார்..!” என்றான் சிறுவன்.
‘வறுமையில் செம்மை என்பது இதுதானோ!’ என்று வியந்தபடி பையனிடமிருந்து நாணயங்களை வாங்கிக் கொண்டு ஆறு பத்து ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்தார் சரவணன்.
சுற்றி இருந்தவர்கள் சரவணனை ‘சரியான ஏமாளியா இருக்காரே, இந்த ஆசாமி..!’ என்பதுபோல ஏளனமாகப் பார்த்தது.
கல்யாண மண்டபத்துக்கு வரும்முன் மீண்டும் லாட்ஜ் அறைக்குச் சென்று, மொபைல் போன் மூலம் ரிசர்வ் வங்கி கவர்னருக்கு மின்னஞ்சல் செய்தார். அடுத்த அரை மணி நேரத்திற்குள் அனைத்து டி வி சாணல்களிலும் இந்த அறிவிப்பு வெளியானது.
பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம் எனவும் இது தொடர்பாக புகார் வரும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து, ரிசர்வ் வங்கியின் சார்பில் செய்திக் குறிப்பு வெளியானது.
அன்றைய மாலைப் பத்திரிகைகளில் இந்தச் செய்தி ‘தலைப்புச் செய்தி’யானது.
கல்யாண மண்டபத்தில் ஒருவர் மாலைப் பத்திரிகையோடு சரவணன் முன் வந்து ரிசர்வ் பாங்க் எச்சரிக்கையைப் படிச்சீங்களா..? என்று செய்தியைச் சொல்லிக்கொண்டே சரவணன் முன் நீட்டியபோது “அப்படியா,!” என்று ஏதும் அறியாதவர் மாதிரி நாளிதழைப் பார்த்தார் சரவணன்.
(03-04-2022 மக்கள் குரல்)