கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 11, 2024
பார்வையிட்டோர்: 103 
 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எனக்கு நாடகம் பார்க்கப் போக வேண்டுமென்ற அவா அதிகமாக உண்டாவதே இல்லை. காரணம் வெறுப்பல்ல. அவசியமின்மைதான். எல்லோரும் அவரவர்கள் கண், காது இவைகளை மாத்திரம் கொஞ்சம் திறந்து வைத்துக் கொண் டால் சுற்றிலும் எப்பொழுதும் நாடகமே தென்படும். தனிப் படச் செலவே செய்யத் தேவையில்லை. 

இதோ போகிறான் தெருவில், யாரோ பையன் ஒரு கையில் சரகு தென்னை, நெய் நிரம்பியது. மற்றொரு கையில் ஒரு காகிதப் பொட்டலம். சர்க்கரை போலும்! பையனுக்கு நாக்கில் ஜலம் ஊறுகிறது. வேண்டுமென்றால் சாவகாச மாகத் திண்ணையில் உட்கார்ந்து தின்றுவிட்டுச் செல்கிறது தானே. ஆனால் – நாழியானதற்குத் தாயாருக்குச் சமாதானம் என்ன சொல்கிறது? பையன் உள்ளத்தில் ஒரு அபாரயுக்தி பிரகாசிக்கிறது. அவ்வளவுதான். தெருவில் போய்க் கொண்டிருக்கும் பொழுதே நாக்கை நெய்யில் தோய்த்துச் சர்க்கரைப் பொட்டலத்திலும் தோய்க்கிறான்! ஆகா! என்ன சுவாரஸ்யம்! நல்ல மடிதான்!… 

அது போகட்டும். இதைப் பாறாங்கள். மாலை நேரம் கொத்தன்களும், தச்சன்களும், கூலியாட்களும் வீட்டிற்குத் திரும்பிப் போய்க்கொண்டிருக்கின்றனர். சிலருக்குத்தான் சுயப்பிரஞ்ஞை இருக்கிறது. சிலர் மகாராஜாக்களைப் போல் நடை போடுகிறார்கள். சிலர் வலது முன்காலை உயரத் தூக்கி நிற்கும் உயர்தரக் குதிரையைப்போல் காற்றில் காலடி வைக்கிறார்கள். ஒரு சிலர் வெகு அடக்க ஒடுக்கத்துடன் தென்படுவோருக்கெல்லாம் கும்பிடு போட்டுக் கொண்டே போகிறார்கள். ஒருவன் தெருப்புறத்துச் சாக்கடையுடன் பலமாகச் சண்டையிட்டு நிற்கிறான். ‘வெள்ளைக் குதிரை யின் வசியம்! 

உலகில் எவ்வளவு மகாத்மா காந்திகளும், புஸ்ஸி புட் ஜான்ஸன்களும் பிரசாரம் செய்த போதிலும், போதைப் பொருள்கள் உட்கொள்ளும் வழக்கம் நிற்காது. ஒவ்வொரு வனும், தன்னையும், உலகையும், குடும்பத்தையும், சிறிது நேரமாவது மறக்காவிட்டால் உலகமும், வாழ்வும் பெரும் பைத்யக்கார ஆஸ்பத்திரி ஆகிவிடும். இடம், பொருள், ஏவல், காரணம், காரியம் முதலிய விலங்குகளினின்றும் விடுபட்ட சில முக்தர்கள் மட்டும் மதப் பிரசாரத்திலும், வேதாந்தத்திலும், தேசசேவையிலும் விடுதலையை அடைகிறார்கள். ஆனால் படிப்பற்ற பாமரர்கள் அதே விடுதலையை அல்லது அதற்குச் சமமானதை இப்போதை யில் அடைகிறார்கள். அதுபற்றித்தான் உலகு தோன்றிய நாள் முதல் போதைப் பொருள் கண்டிக்கப்பட்டிருந்தும் அது சாகாமல் ஓங்குகிறது, ஞானபோதை ஏற்பட்டாலன்றி இந்தப் போதை விடாது – அடெ! ‘வெள்ளைக் குதிரையி லிருந்து வேதாந்தத்திற்குப் போய்விட்டேனே! 

நான் சொல்ல வந்தது, இவர்களில் பலர் வெகு இனிமை யாகப் பாடுகின்றனர் என்று. தேவாரம், திருவாசகம், தாயுமானவர், குதம்பைச் சித்தர், சிவவாக்கியர், மஸ்தான் முதலியவர்களுடைய பாடல்களை நாம் கேட்போமே, நஷ்ட மென்ன? இவர்கள் பாடுவதில் நிழல்கள் கூட உயிர் பெற்று விடுமோ என்று று தோன்றுகிறது. அவ்வளவு உருக்கம்! மற்றும் சிலர் நாடக மேடையில் முந்திய இரவில் பாடப்பட்ட புதுப் பாடல்களை அப்படியே பாடித் தீர்த்து விடுகிறார்கள். பின் நானெதற்குக் காசு கொடுத்து நாடகம் பார்க்கப் போக வேண்டும்?… 

மறுபடி திரை தூக்கியிருக்கிறேன், இதோ வேறு காட்சி. கொல்லைக்கட்டில் ஒருவர் குடியிருந்து வருகிறார். பெரிய சம்சாரி, அவருக்கு ஐந்து பெண்களும், ஒரு பிள்ளையும். அரசனாயிருக்கும் பாக்யமில்லாமலே ஆண்டியாகிவிட்டார் தகப்பனார், மூன்று பெண்களுக்குக் கலியாணமாகி விட்டது. இப்பொழுது யோசிக்கிறேன்:-‘பகீரதன் கங்கை கொண்டு வந்தில் என்ன ஆச்சர்யம்?”…நான்காவது பெண்ணை நேற்றுத்தான் ஐம்பத்திஐந்து வயதுள்ள மிராசு தாருக்குக் கொடுத்திருக்கிறார். கைம்பெண் என்ற நிலைமை வந்தால்கூட உளுந்து மூட்டைக்குத் தட்டு ஏற்பட நியாயமில்லை என்கிற தைரியம்தான் தகப்பனாருக்கு. கடைசிப் பெண்ணுக்குத் தகுந்த வரன் தேடிக் கொண்டிருக் கிறார். பையன் நான்காவது பாரமோ என்னமோ படித்துக் கொண்டிருக்கிறான். குபேரனைத் தன் வீட்டுக்கு வர வழைக்கும் வித்தை பையனிடம் இருப்பதாகத் தகப்பனார் நம்புகிறார். 

இக்குடும்பத் தலைவருக்கு இருபத்தைந்து ரூபாய் பென்ஷன். வேறு வேலை கிடைக்கவில்லை. ஆனால் அவர் மட்டும் வீட்டிலிருப்பதில்லை. பூனைபோல் குறுக்கும் நெடுக்குமாக எங்கோ அலைந்து கொண்டிருக்கிறார். அவர் அடிக்கடி களைப்பதையும், புருவத்தை உயர்த்துவதையும் கவனித்தால் ஏதோ அபூர்வ ஆராய்ச்சியில் லயித்திருப்பது போல் தோன்றும். 

அவர் வீட்டிலிருக்கும் பொழுது கடன்காரர்கள் வருவது கிடையாது. ஆனால் அவர் வீட்டிலிருந்தால்தானே! பால்காரி, தயிர்க்காரி, பழய வீட்டுச் சொந்தக்காரர், புது வீட்டுக்காரர் இவர்களுக்கெல்லாம் பெண்களும் தாயாரும் பதிலளிக்கும் சாமர்த்தியத்தைப் பார்த்தால் ஆகாயப் பந்தல் என்பதற்குப் பொருள் விளங்கும். தேன்மொழி கடன்காரர் களுக்குக் கூட இவர்களிடம் ஏண்டா பிசாசு போல் பணத்திற்கு அடித்துக் கொள்கிறோம் என்று தோன்றும்/ 

ஆனால் வீணில் சொல்லக் கூடாது. அவர்கள்மீது என்ன குற்றம்? உள்ளபடி இவர்கள் போக்கிரிகள் அல்ல, அக்கிரமக்காரர்கள் அல்ல, ஏழைகள் – பரம ஏழைகள்! அவ்வளவு வயிற்றுக் கொடுமை. தரித்திர நாராயணனுடைய திருவிலையாடல்!… 

வீட்டின் முன் கட்டிலிருக்கும் பாட்டி விஷயம் சொல்ல வில்லையே? நல்லவள்தான். ஆனால் இரும்புத்தாடை சதா அசை போட்டுக்கொண்டே இருக்கிறது. பட்சணவகையரு மெல்லப் படாதபோது பேச்சு. அப்பேச்சுக் கெதிரில் ஆகாய கங்கை தோற்றுப் போகும். வேகத்திலும் சத்தத்தி லும், “எங்கள் வீட்டுச் சோமு காப்பிக்குச் சர்க்கரை போட்டுக்கொள்வதில்லை. இந்த வருஷம் சீனி வெடிக்கட்டு வாங்கவே இல்லை. அவன் காந்தி கட்சி. எனக்கு ராத்திரி பலகாரத்துக்கு ஒண்ணுமில்லை. அரிசி நனைக்கணும். ” இது ஒரு மாதிரி துணுக்கு… 

இதெல்லாம் கவனிக்க இஷ்டமில்லையென்றால், கொல்லைக் கிணற்றங்கரைக்குச் செல்லுங்கள். அதோ தோப்பினின்று மணிப்புறா கூவுகிறது; காதில் விழுகிறதா? என்ன குளுமை! இனிமை! செந்தேன் தன்மை! என்ன அமைதி! எப்படி அலையலையாய் மோதி அக்குரல் தோப்பினுள் ஒலித்துப் பரவுகிறது! ஆகா! குக்குக்கூட! கூ! கூ?…

– மனநிழல் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: மார்ச் 1977, எழுத்து பிரசுரம், சென்னை.

வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *