நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி நாடகம்
கதைப்பதிவு: June 5, 2024
பார்வையிட்டோர்: 455 
 
 

(1991ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உறுப்பினர்கள்: 

பின்னணிக்குரல் (ஆசிரியர் குரல்)
தந்தை 
மகன் 
பெண் – 1 2 3 
கமலா 
இரும்பொறை 
ஆண்குரல் – 1 2 3 4 
பையன் 

காட்சி-1

(“நல்ல மனைவி நல்ல பிள்ளை” என்ற சீர்காழி கோவிந்தராஜன் பாடிய சினிமாப் பாடலின் முதல் இரண்டு அடிகள்) 

பின் ஓ…நல்ல மனைவி! மனித வாழ்வில் எத்தனை நலங்களைப் பெற்றுவிட முடியும்! ஆனால், ஒரு நல்ல மனைவியைப பெற்றவனுடைய வாழ்வுதான் உண்மையான பொன்னுலகம்! கண்கூடான சொர்க்கம்! நிம்மதி என்ற இனிமையான சொல் எத்தனையோ ஆயிரம் பக்கங்களையுடைய அகராதியில் ஒரு பக்கத்தில், ஓரிடத்தில் நிம்மதி யாக, நித்திரை செய்கிறது. மனித வாழ்வில் எத்தனையோ ஆயிரம் பேர் மத்தியில் எங்கோ ஒருவரிடம்தான் அது விழித்துக்கொண்டிருக்கிறது. 

(“எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி?” – 

டி.எம். சௌந்தரராஜன் பாடிய பாடல்-இசைத் தட்டு-ஓரிரண்டு அடிகள்-பின்னணியில். பின்னர் பாட்டு தேய்கிறது) 

பின் : கோடானுகோடி செல்வம் படைத்தவன் வாழ்வில் நிம்மதி இருப்பதாக நினைப்பது கனவு! குவியலோ குவியல் என்று புகழைக் குவித்தவன் வாழ்வில் அது இருக்கிறது என்பது வெறும் பேச்சு! பட்டமும் பதவியும் ஒருங்கே பெற்றவன் வாழ்வில் நிம்மதி குடிகொண்டிருக்கிறது என்பது கானல். ஆனால் நல்ல மனைவினயப் பெற்ற எவன் வாழ்விலும் நிம்மதி நிரந்தர கீதம் பாடிக்கொண்டிருக்கிறது. 

(நல்ல மனைவி- நல்ல குடும்பம் பாட்டு) – (இசைத் தட்டு) 

பின் : “மனைக்கு விளக்கம் மடவார்” என்பதைப் பழம் பாட்டு ஒன்றும் கூறுகின்றது. 

பெண் : “மனைத்தக்க மாண்புடையவள் ஆகித்தற் கொண்டான் 
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை”

ஆகா இதைவிட ஒரு படி மேலே நின்று வள்ளுவப் பெருந்தகை கூறுகிறார். 

பெண் :  ‘இல்லதென் இல்லவன் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை 

பின் : ஒரு திருமண நிகழ்ச்சியில் தந்தையும் வெளியூரிலிருந்து வந்த நான்கு பிள்ளைகளும் குடும்பத்துடன்கூட நேரிடுகிறது.  அப்போது- 

தந் : ராஜா! 

மகன் : ஏம்பா? 

தந் : உனக்குத் தவறு-இழைச்சிட்டேன்டா! 

மகன் : நீங்களா? எனக்கா? என்னப்பா சொல்றீங்க? 

தந் : உன் கூடப்பிறந்த மூன்று சகோதரர்களுக்கும் ஏதோ ஒரு வழி பண்ணினேன். அவனுங்களும் எப்படியோ முன்னுக்கு வந்துட்டானுங்க! பெரியவன் பெரிய பிஸினஸ் மேனா ஆயிட்டான். சுந்தரம் வட்டிக்குப் பணம் கொடுத்து வீடு வாசலுமா இருக்கான். ராமுவை எம்.ஏ. படிக்க வைச்சேன். உன்னைத்தான்- 

மகன்: அப்பா மூன்று பேருக்கும் நீங்க என்னென்னவோ கொடுத்தீங்கப்பா. ஆனால், எனக்கு நீங்க புதையல் எடுத்துக் கொடுத்திருக்கீங்கப்பா. 

தந் : புதையல்னா? 

மகன் : ‘ஆமாம்பா. ஒரு நல்ல மனைவியைத் தேடிக் கலியாணம் பண்ணி வைக்கிறீங்களே – அது போதும்பா. எ குட் வைய்ப் ஈஸ் எ கிரேட் ட்ரெஷர் ஆப் ஹஸ்பென்ட்.

தங் : ஆமாம்! ஒவ்வொரு மாதம் ஒவ்வொரு பிள்ளை யிடம் நிம்மதியா இருக்க ஆசைப்பட்டேன்* ஆனால், முதல் மூன்று மருமகளுங்களிடத்திலே கிடைத்த பதில்?… 

(காட்சி மாற்றம்-இசை) 

பெண் – 1 : நாங்க இந்த வருஷம் லீவு எடுத்துக்கிட்டு காஷ்மீர் போகணும், கெடுக்கிறதுக்கு நீங்க வந்து சேராதீங்க? 

பெண்-2 : ஏன் ? உங்களுக்கு வேறே பிள்ளை வீடே இல்லையா? 

பெண்-3: இவரு பி.எச்டி,  பட்டத்துக்கான தீரஸ் எழுதிக்கிட்டு இருக்கிறாரு இந்த நேரம் பார்த்துத் தான் நீங்க வந்து தொல்லை கொடுக்கணுமாக்கும்? 

(இசை) 

மகன் : என்னப்பா யோசிக்கிறீங்க? மூன்று மருமகளுங்க கிட்டே இருந்து கிடைத்த பதில்களை நினைச்சுப் அவங்களை பாக்கறீங்களாப்ப? ஏம்பா! நாங்க யெல்லாம்விட வசதிக் குறைவானவங்க என்கிறதுக் காகத்தானே என் மனைவியை நீங்க கேட்கலை? 

(குரல் கொடுத்து) கமலா… கமலா… 

கம் : என்னங்க அத்தான்? 

மகன் : அப்பா கூப்பிட்டாரு! (தாமதம்) 

கம் : என்னங்க மாமா? 

தந் : கமலா, உடம்பு சரியில்லை ஓய்வெடுக்கலாம்னு.. 

கம் : எங்க ஊருக்கு வாங்க மாமா…நல்ல இயற்கைவளம்! நாங்க குடிக்கிற கூழைக் குடிங்க. 

தந் : சந்தோஷம் மகளே! சந்தோஷம். நான் என் ராஜாவுக்குப் புதையலைத்தான் தேடிக் கொடுத்திருக்கேன்.  

(இசை) 

பெண் : பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் 
புத்தேளிர் வாழும் உலகு. 

பின் : பெண்கள் தாம் எய்திய கணவனை வழிபடுபவராயின், தேவர்கள் வாழும் உலகின்கண் அவர்களால் பெருஞ் சிறப்பினைப் பெறுவர். 

பெண் : பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் 
புத்தேளிர் வாழும் உலகு. 

பின் : வாழ்க்கையில் நல்ல மனைவி பெற்றுவிட்டாலே மானம் என்கிற தமிழ்க் கருவூலம் தன்னால் வந்தடையும். மனிதர்களில் பலர் எப்படியும் வாழலாம் என்ற குறிக்கோளையுடையவர்கள். சிலர் தாம் இப்படித்தான் வாழவேண்டும் என்ற குறிக்கோளைப் பொன்னாயுதமாகப் பெற்றிருக்கிறார்கள். 

கவரிமான் ஜாதி வாழ்க்கைதான் கன்னித் தமிழ் வாழ்க்கை. இதைத்தான் நாம் குறளோவியத்தில் சிறப்பான எண்ணமாககி காணுகின்றோம். 

“மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் 
உயிர்நீப்பர் மானம் வரின்” 

உலகில் எந்தக் கவிஞனும் சொல்லாத தன்மான வரிகள் இவை. 


(போர்முரசம், வீரர்கள் கூக்குரல்கள்) 

ஆண் – 1 : வெற்றி! வெற்றி! கணைக்கால் இரும்பொறை வீழ்ந்தான். 

ஆண்-2 : சேரன் பணிந்தான்! விற்கொடி வீழ்ந்தது. 

ஆண் – 1 : இறுமாப்பு படைத்த இருப்பொறை, செம்மாப்பு படைத்த செங்கணாரிடம் சரணடைந்தான்! 

(இசை) 

இரும் : (கலகலத்த சிரிப்பொலி) ஆ…சிறையிலடைத்து விட்டார்களாம் சிறையில்! இந்தக் கணைக்கால் இரும்பொறையைத்தானே. சிறையில் அடைக்க முடிந்தது! பொறையன் வீரத்தையேவா சிறையில் அடைத்துவிட்டார்கள்? செங்கணான் சூழ்ச்சியில் வென்றுவிட்டான்! இந்த வீழ்ச்சி ஒரு வீழ்ச்சி யாகுமா? இந்த வெற்றிதான் ஒரு வெற்றியாகுமா? 

கு. 1: டேய், பார்த்தாயாடா! கூண்டில் அடைப்பட்டும் சிங்கம் கர்ஜிக்கிறதை! 

கு. 2: நகத்தை நறுக்கியும் கூர் மழுங்கலைன்னு ஐயா கூப்பாடு போடறாரு! 

கு.3: அப்படியெல்லாம் சொல்லாதடா! நம்ம இரும் பொறை மானஸ்தன். வீரத்தை நியாயத்தில் வைத்துப் பார்க்கிறாரு! போர்க்களத்திலே வந்த பிறகு ரத்தம் சிந்தறது தப்புன்னு பேசற கதை தான்! 

கு.2: இதுலே என்னடா, மானஸ்தன் வந்து வாழுது! பொல்லாத மானஸ்தன். 

(இசை) 

இரும் : தண்ணீர், தண்ணீர், தண்ணீர்! நாவு வறண்டுவிட்டது! தண்ணீர் கொடுங்கள். 

கு.1: பார்த்தாயடா! மானஸ்தன் தண்ணீர் கேட்கறார்! 

கு.3: இந்தாங்க! அரைக்குவளைத் தண்ணீர்!

இரும்: வேண்டாம்; சோழநாட்டுச் சிறையீல் காவிரி நீர் குடிப்பதைவிட, இந்தச் சேரன் மானத்தோடு மாள்வதே நலம். எடுத்துச் செல்லுங்கள். 

கு.2: மானத்தைப் பார்த்தியாடா! அடம் பிடிக்குது. 

(சிறு சலசலப்பு) 

கு.1: காவிரிச் செல்வர்-கழுமலப்போரில் கணைக்கால் இரும்பொறையை வெற்றிகண்ட காவலர்-எழுபது கோயில்களை எடுத்த ஏந்தல் சோழ மாமன்னர் செங்கணான் வருகிறார், பராக்! பராக்! 

(இசை) 

பின் : சோழன் செங்கணான், சிறையில் அடைபட்ட கணைக்கால் இரும்பொறையைக் காணுகின்றான். மானத்தோடு உயிர்நீத்த நிலையை ஓர் ஓலையில் எழுதி வைத்துவிட்டு. மாண்ட நிலை தண்ணீருக்கு உரியது மட்டுமல்ல; அது கண்ணீருக்கும் உரியது தான்! நடந்ததைக் கேள்விப்பட்ட செங்கணான் தம் வாயால் அந்தக் குறளைச் சொல்லுகிறான். 

செங் : “மயிர்நீப்கின் வாழாக் கவரிமா அன்னார் 
உயிர்நீப்பர் மானம் வரின்” 

கணைக்கால் இரும்பொறை மானத்தின் இலக்கியம் இல்லை; இலக்கணம் தான்! 

(இசை) 

பின் : இல்வாழ்க்கைக்குத் தேவையானது முதலில் மனைவி! அடுத்தது மானம்! மூன்றாவது வரவுக்கு ஏற்ற செலவு! என்னதான் அபரிமிதமான வருவாய் வந்தபோதிலும், அதற்கேற்பச் செலவுசெய்து வாழ்க்கையைச் செப்பனிட மறந்தால்— 

அச்சாணி முறிந்து அடியோடு குடைசாய நேரிடும். ஏதோ சிறுகச் சிறுக ஆகும் செலவை நோக்கி, இது தானே இதுதானே என்று நாம் ஏனோ தானோ என்றிருந்துவிடக்கூடாது. அதுவே சுமையாகி நம் வாழ்வின் அச்சாணியை முறித்துவிடும்.

குறளாசானும் இதனை மெல்லிதான ஒரு கருத்தில் இழையோட்டிக் காட்டுகிறார். மயிலிறகு போன்ற அழகை வைத்து அங்கே ஆபத்தையும் காட்டுகிறார். 

பெண் : “பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் 
சாலமிகுத்துப் பெயின்” 

மயிற்பீலியை அது பொறுக்கும் அளவின்றி மிகுதி யாக ஏற்றினால் அம்மயிற்பீலி ஏற்றிய சகடமும் அச்சும் முறியும். 

(இசை) 

(தமுக்கு ஓசை) 

கு.4 : என்னப்பா இது…அமீனா புகுந்துவிட்டான். 

கு.5 : என்னிக்கோ ஆமை புறந்துவிட்டது. இன்னிக்கு அமீனா புகுந்துவிட்டான். 

கு.4 : ஆமை புகுந்துவிட்டதாவது?– 

கு.5 : வரவுக்கு மீறிய செலவு செய்யற பண்புதான் ஆமைக்குச் சமானம்னு சொன்னேன். 

கு.4: ஓகோ! ஆமாம். ஏதோ ஆயிரம் ரூபாய் சம்பாதனை – அப்பா சேர்த்து வைத்த சொத்து சுகம்இருக்குன்னு தலைகால்தெரியாமல் ஆடினான். இப்போ அமீனா மிஞ்சின ஒரு வீட்டையும் ஏலத் துக்குக் கொண்டுவந்துட்டான்! துரை காய்கறி பதார்த்தம் வாங்கி வரப்பக்கூட டாக்ஸி தான்! 

கு.1 : பிறத்தியார் மெச்சிக்க வாழற எவனுடைய கதை யும் அமீனா கிளைமாக்ஸ்லேதான் முடியும். வரவுக்கு ஏத்த செலவு இருக்கணும்; விரலுக்கேத்த வீக்கம் இருக்கணும். 

(இசை) 

பெண்.4: டீ.. பங்கஜம்! பார்த்தியோ, அந்த அலமு பண்ண ஆர்ப்பாட்டத்துக்குக் கைமேல பலன்! 

பெண் – 5 : வேண்டியதுதான்! தெருவிலே ஒரு புடவைக் காரன் போகக்கூடாது. தவணைமுறை என்று சொல்லிட்டா போதும். ரகத்துக்கு ஒரு சேலை தான்! நிறத்துக்கு ஒரு ஜாக்கெட்டுதான். 

பெண் – 4 : சொந்த நகை போய் கவரிங்காச்சு. இப்போது அதுவும் போயாச்சு. சம்பாதிக்கிறது காப்பணம்; செலவழிக்கிறது முக்காப்பணம்னா இந்தக் கதிதான். 

பெண்-5 : பஞ்சுதானேன்னு அளவுக்கு மீறி வண்டியிலே ஏத்தினா, இரும்பால ஆன அச்சாணியும் முறியத் தானே செய்யும்! 

பெண் – 4 : நறுக்குன்னு சொன்னாலும் நல்லாச் சொன்னேடி! 

(இருவரும் சிரித்தல்) 

ஒரு பையன் : (பாடம் படிக்கிறான்) 

“ஆன முதலில் அதிகம் செலவானால் 
மானம் அழிந்து மதிகெட்டுப்-போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு” 

பெண் – 5 : கேட்டாயா என் பையன் படிச்சதை! பெரியவங்களானப்புறம் இந்தச் சிக்கனபுத்தி தானா வராதுன்னுதான் நாலாங் கிளாசிலேயே இந்தப் பாட்டைப் படிக்கச் சொல்லிடராங்க. 

பெண் : “ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை” 

பின் : அவரவர்க்குப் பொருள் வருகின்ற நெறியளவு சிறிதாயிருப்பினும் போகின்ற நெறியளவு அதைக் காட்டிலும் அதிகமாகாதாயின் அதனால் கேடில்லை. 

பின் : உண்மையான மகிழ்ச்சி என்பது உள்ளத்தில் நமக்குள்ளே முதலில் ஏற்படுவதாகும். அதை அடைய நல்ல மனைவி, மான உணர்ச்சி, சிக்கன அறிவு முதலியன துணைபுரிகின்றன. இதைத்தான் திருவள்ளுவர், 

பெண் : “மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் 
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை” 

“மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் 
உயிர்நீப்பர் மானம் வரின்” 

“ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை 
போகா அகலாக் கடை” 

என மூன்று குறள்களில் அழகாகக் குறிப்பிட்டு ஓவியமாகத் தீட்டிக் காட்டியுள்ளார். 

இல்வாழ்வானுக்கு இன்ப வாழ்வு வேண்டும். இன்ப வாழ்வு உண்மையான வாழ்வாதல் வேண்டும்; போலி வாழ்வாகக் கூடாது. அதற்கென வையத்துள் வாழ்வாங்கு வாழ வள்ளுவர் பெருமான் வகுத்துச் சென்ற நெறிகளே இவைகள். 

– அலை தந்த ஆறுதல், முதற் பதிப்பு: டிசம்பர் 1991, பாரி நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *