இவருக்குப் போய் வேலை கொடுக்கிறோமே?! இவர் அந்தக் கட்சியைச் சேர்ந்தவராச்சே?! கடவுள் நம்பிக்கையோ கடவுள் பயமோ கிடையாதே?! நம்மைக் கரை சேர்ப்பாரா? இல்லை., நட்டாற்றில் விட்டுவிடுவாரா? சந்தேகத்தோடேயே வேலையை ஒப்படைத்தான் வேல்முருகன்.
இவன் பேரோ முருகன்! அவர் பேரோ ஆறுமுகம்! ., ரெண்டும் முருகன் பேர்தான். ரெண்டில் எந்தச் சாமி உண்மையான சாமியோ?! ஓரிருவாரத்தில் தெரிந்துவிடாப் போகிறது!.
அப்போது வந்தான் கதவு மாட்டும் கந்த சாமி. அவன் இன்னொரு சாமி! .முருகன் நினைத்துக் கொண்டான்’சே! கடவுள் பேரிலேயே எல்லாரும் நம்ம கிட்ட வேலைக்கு வராங்க! ‘ஜெயம்’ நம்ம பக்கம்தான்!கடவுள் நம்பிக்கை அவன் கண்ணைஅப்படி மறைத்தது!!’.
கந்தசாமி கேரளா ஸ்டைலில் குழைச்ச சந்தனத்தை நெற்றியில் இடப்புறம் இறக்கி நெற்றியில் இட்டிருந்தான்.முகத்தில் நறுக்கப்பட்ட மீசை., கேரள வாசம் இவன் முக்குவரை அடித்தது. ஆனால், பேச்சிலோ அவன் சுத்தமாய் மலையாளம் கலக்காத தமிழ் பேசினான்.
சொல்லும் வேலைக்கு மறுப்புச் சொல்லாமல் சந்தனம் இட்டவன் சாந்த சொரூபியாய் பேசினான். ஆறுமுகமோ அடிக்கவறா மாதிரி அடித்தொண்டையில் கட்டைக்குரலில் பேசினான். இவனுக்குப் பயம் பற்றிக் கொண்டது.
மரவேலை செய்ய வந்தவனுக்கு மரியாதை செய்து அட்வான்ஸ் கொடுத்தனுப்பினான். அவன் அத்தோடு மாயமானான்! போன் ‘சுவிட்சாப்’ செய்யப்பட்டதுதான் மிச்சம்!. அடித்தொண்டையில் அடிக்க வரா மாதிரி பேசின ஆறுமுகம் கடவுளை நம்பினானோ இல்லையோ தெரியவில்லை..! வாங்கிய காசுக்கு மனசாட்சிக்குக் கட்டுப் பட்டு கடைசிவரை நேர்மையாய் நடந்து சந்தனம் பூசி ஏமாற்றிய
மரவேலைக்காரனை சட்டையைப் பிடித்துக் கொண்டுவந்து நிறுத்தி வேலை வாங்கி காசை மீட்டுத்தந்தான்.
கடவுளை நம்பாவிட்டாலும் மனசாட்சியை நம்புகிறவர்கள் எவ்வளவோ மேல் .! ‘நம்பிக்கை வைத்துக் கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா! அது உள்ளத்தின் காட்சியம்மா.. அதுதான் உண்மைக்குச் சாட்சியம்மா!’
உலகத்தில் தெய்வமிருக்கோ இல்லையோ மனசாட்சி இருக்கு! கடவுள்ல எத்தனையோ இருக்கு! ஆனா மனசாட்சில ஒண்ணே ஒண்ணுதான் இருக்கு!