கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 4, 2018
பார்வையிட்டோர்: 15,320 
 
 

கைக்கடிக்காரத்தைப் பார்த்தான் கதிரேசன். மணி மாலை 5:10. 20 அடி தூரத்தில், முக்கோணத் தாங்கியில் பொருத்தப்பட்ட தியோட லைட்டின் வழியே, விருத்தாசலத்தைச் சுற்றிச்செல்லும் புறவழிச்சாலைக்கான வரைபடத்தையும், அதற்கான நிலத்தையும் பார்த்துக்கொண்டிருந்த ஆனந்தனைப் பார்த்தான். பிறகு, நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்துவிட்டு மேற்கில் பார்த்தான். சூரியன் நல்ல வெளிச்சத்தோடு இருந்தது. பக்கத்தில் இருந்த நெல் வயலைப் பார்த்தான். புழுக்களைக் கொத்தித் தின்றுகொண்டிருந்தன கொக்குகள்.

‘இந்த பாயின்ட்டோடு நிறுத்திடலாமா சார்?’ எனக் கேட்டான்.

ஆனந்தனிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. தான் சொன்னது சரியாகக் கேட்கவில்லையோ என்ற சந்தேகத்தில் மீண்டும் சொன்னான்…

‘மணி ஆயிடிச்சு சார்.’

கதிரேசன் சொன்னதைக் காதில் வாங்காத ஆனந்தன், ‘நீ நிக்கிற இடத்தில் இருந்து பின்னால நகந்து மார்க் பண்ணு’ எனச் சொன்னான்.

அவன் சொன்னது மாதிரியே பின்னால் நகர்ந்து சென்று, ஓர் அடி நீளம் உள்ள இரும்புக் கம்பி ஊசியை நிலத்தில் ஊன்றி, அதைச் சுற்றி வெள்ளை மாவைத் தூவிவிட்டான். பிறகு, ஊன்றிய கம்பிக்கு நேர் எதிராக வடக்கில் வந்து, ஒரு கம்பியை ஊன்றி அடையாளம் போட்டான். ‘அடுத்து என்ன செய்வது?’ என்பது மாதிரி ஆனந்தனைப் பார்த்தான். அவன் வாயைத் திறக்காததால், ‘நேரமாயிடிச்சு சார். இங்கே இருந்து ரோட்டுக்கு நடக்கணும்; அப்புறம் காரை வரச் சொல்லணும். வீட்டுக்குப் போறதுக்குள்ள இருட்டிடும் சார்.’

கதிரேசன் சொன்னதை காதில் வாங்காமல், ‘மேற்க, வடக்கு-தெற்குல ஒரு ரோடு போவுதே, அது என்னா ரோடு?’ எனக் கேட்டான்.

‘விருத்தாசலம் டு ஆலடிக்குப் போற ரோடு சார்.’

‘ரெண்டு பர்லாங் தூரம் இருக்குமா?’

‘இருக்கும் சார்.’

‘அதுவரைக்கும் மார்க் பண்ணிடலாம். அடுத்த பாயின்ட்டுக்குப் போ’ – ஆனந்தன் சொன்னதும், மறுபேச்சு பேசாமல் இரும்புக் கம்பி ஊசிகள் இருந்த பையையும், வெள்ளை மாவு இருந்த பையையும் தூக்கிக்கொண்டு மேற்கில் நடக்க ஆரம்பித்தான். இந்த அளவுதான் வரும் என நினைத்த மாதிரி ஓர் இடத்தில் நின்றான். காலையில் இருந்து ஒவ்வோர் இடமாக அடையாளம் போடுவது; கம்பி ஊசிகளையும், வெள்ளை மாவு பைகளையும் தூக்கிக்கொண்டு நெல் வயல், கரும்பு, முந்திரிக் காடு, முள் காடு என நடப்பது; கடுமையான வெயில் என எல்லாம் சேர்ந்து அவனைக் களைப்படையச் செய்திருந்தன. ஆனந்தனுக்கு எந்த இடத்தில் அடையாளமிட வேண்டும் எனச் சொல்வது மட்டும்தான் வேலை… அதிலும் தியோட லைட்டைப் பார்த்து. கதிரேசனுக்கு, ஆனந்தன் சொல்கிற இடத்தில் கம்பி ஊசியை ஊன்றி அடையாளமிடுவதோடு, அதற்கு நேர் எதிர்ப்புறத்திலும் சரியான அளவில், சரியான இடத்தில் ஊசியை ஊன்றி அடையாளமிட வேண்டும். அது முன்பு அடையாளமிட்ட இடத்துக்கும், புதிதாக அடையாளமிடுகிற இடத்துக்கும் நேராக இருக்க வேண்டும். அது கல்லாக இருந்தாலும், முள்ளாக, சேறு, சகதி, உளையாக இருந்தாலும் அடையாளம் இட்டுத்தான் தீர வேண்டும். வடக்கிலும் தெற்கிலுமாக இரண்டு அடையாளங்களுக்கு இடையே உள்ள தூரத்தை அவ்வப்போது டேப்பால் அளந்துபார்க்க வேண்டும். அளவு பொருந்திவரவில்லை என்றால், அடையாளத்தை மாற்ற வேண்டும். ஆனந்தனுக்கு நின்றுகொண்டே செய்கிற வேலை. தியோட லைட்டின் வழியே பார்ப்பது; கையில் உள்ள காகிதத்தில் வரைவது; பிறகு கதிரேசனிடம் ‘அடையாளமிடு’ எனச் சொல்வது. புறவழிச் சாலையில் எந்தெந்த இடத்தில் கல்வெர்ட் பாலம் வருகிறது; மேம்பாலம், ஆற்றுப் பாலம், ரயில்வே மேம்பாலம் வருகின்றன என்பதை அடையாளமிடுகிற வேலையை எட்டு நாட்களாகச் செய்துகொண்டிருக்கிறான். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் முடித்துவிடுவான். முக்கோணத் தாங்கியில் பொருத்தப்பட்ட தியோட லைட்டில் கண்களைப் பொருத்திவிட்டால், அவனாகப் பேசினால்தான் உண்டு. பெரும்பாலும் கைசாடைதான் காட்டுவான். முன்னால், பின்னால் நகர்ந்து நிற்பது தவறாக இருந்தால், தான் ஒரு மேலதிகாரி என்பதைக் காட்டத் தவற மாட்டான். அவனுடைய குரல் எப்போது வரும், கை அசைவு எப்போது வரும் என கதிரேசன் காத்திருந்தான். சிறிது நேரம் கழித்து ஆனந்தனிடம் இருந்து கட்டளை வந்தது.

‘அங்க தூரத்துல ஏழு எட்டு மரம் நிக்குதில்ல… அங்க போய் நில்லு. நான் பார்க்கிறேன்.’

ஆனந்தன் சொன்னபடியே கதிரேசன் செய்தான்.

‘இது சாமி கோயில் சார்’ – கதிரேசன் கத்தினான்.

‘எதாயிருந்தாலும் க்ளியர் பண்ணித்தான் ஆவணும். நீ நேரா நில்லு.’

‘சாமிக் குத்தம் வந்துடும் சார்!’

”அதெல்லாம் பார்த்தா நம்ப நாட்டுல ஒரு அடி ரோடுகூட போட முடியாது. பொக்லைன் வந்தா எல்லாத்தையும் ஒரு நிமிஷத்துல க்ளியர் பண்ணிடும். பொக்லைனை சாமிக் குத்தம் ஒண்ணும் செய்யாது. அந்தப் பெரிய ஆலமர வேர்ல பாயின்ட் பண்ணு. அதுக்கு எதிர் சைடுலயும் மார்க் பண்ணு’ – கட்டளையாக வெளிப்பட்டது ஆனந்தனுடைய குரல். மறுபேச்சுப் பேசாமல் இரும்புக் கம்பி ஊசிகள், வெள்ளை மாவு இருந்த பையை எடுத்துக்கொண்டு போய், ஆனந்தன் சொன்ன இடத்தில் அடையாளமிட்டான். அதற்கு தெற்கு புறத்திலும் அடையாளமிட்டான். ‘சரியா இருக்கா சார்?’ கதிரேசன் கேட்டான்.

‘முன்னாடி போட்ட பாயின்ட்டயும், இப்ப போட்ட பாயின்ட்டயும் செக் பண்ணு’ என்று சொல்லிவிட்டு, ஆனந்தன் தியோட லைட்டில் கண்களைப் பொருத்திக் கொண்டான். கதிரேசன் அடையாளமிட்ட இடங்கள் சரியாக இருக்கின்றனவா எனப் பார்த்தான். பிறகு, ஆனந்தனை நோக்கிச் சொன்னான், ‘ஓ.கே சார்.’

ஆனந்தன் பதில் சொல்லவில்லை.

‘முன்னாடி போவட்டுமா சார்?’

‘போ’ என்பது மாதிரி ஆனந்தன் சைகை மட்டும் காட்டினான். பிறகு முக்கோணத் தாங்கியைத் தூக்கிக்கொண்டு மேற்கு நோக்கி இருபது முப்பதடி தூரம் முன்னோக்கி வந்தான். சந்தேகப்பட்டது மாதிரி ஓர் இடத்தில் முக்கோணத் தாங்கியை நிறுத்தி, தியோட லைட்டில் பார்த்தான். உடனே தலையைத் தூக்கி ‘கொஞ்சம் வடக்க நவுந்து நில்லு’ என்பதுபோல கதிரேசனை நோக்கிக் கையைக் காட்டினான். கதிரேசன் தவறாகப் புரிந்துகொண்டு தெற்குப் பக்கமாக நடந்தான்.

‘அங்க நிக்குற வேப்பமரத்துக்கிட்ட போ. முந்திரிக் காடு முடியுற எடத்தில…’ – கத்திச் சொன்ன பிறகுதான் கதிரேசன், ஆனந்தன் சொன்ன இடத்தில் போய் சரியாக நின்றான். மறுநொடியே ஆனந்தன் தியோட லைட்டில் கண்களைப் பொருத்திக்கொண்டான்.

சிறிது நேரம் வரைக்கும் ஆனந்தனிடம் இருந்து எந்தச் சத்தமும் வராது என்பது தெரியும். அதனால், கதிரேசன் சுற்றும் முற்றும் பார்த்தான். அவன் நின்றுகொண்டிருந்த இடம் முந்திரிக் காடு. அதை ஒட்டி கரும்பு வயல். இரண்டுக்கும் இடையேதான் புறவழிச் சாலை அமையப்போகிறது. எங்கு பார்த்தாலும் பசுமையாக இருந்தது. தெற்கில், விருத்தாசலம் நகரத்தில் இருந்த செல்போன் டவர்கள் தெரிந்தன. இன்னும் ஒரே ஓர் இடம்தான். அடுத்து விருத்தாசலத்தில் இருந்து ஆலடி போகிற ரோடு. ரோட்டில் அடையாளமிட்டுவிட்டால், வேலை முடிந்துவிடும் என நினைத்தான். அப்போது ஆலடி – பாலகொல்லை போகிற டவுன் பஸ் போனது. விருத்தாசலம் – ஆலடி போகிற ரோட்டின் மீது மேம்பாலம் போடுவானோ என நினைத்தான். அவன் தானாக எதையும் சொல்லக்கூடிய ஆள் இல்லை. கேட்கவும் முடியாது. அவன் மேலதிகாரி.

‘கதிரேசன்… கொஞ்சம் நகர்ந்து நில்லு. முன்னாடி மார்க் செஞ்ச இடத்துக்கும் இப்ப நீ நிக்கிற எடத்துக்கும் நேரா இருக்கா பாரு.’ ஆனந்தனுடைய குரல் கேட்டதும், குரலுக்கு ஏற்றவாறு கதிரேசன் நகர்ந்து நின்றுகொண்டு சொன்னான் ‘நேரா இருக்கு சார்.’

‘ஓ.கே பாயின்ட் பண்ணு’ – ஆனந்தன் கை சைகை காட்டினான். உடனே கதிரேசன் கம்பி ஆணியை ஊன்றி, வெள்ளை மாவைத் தூவினான். அந்தக் கம்பிக்கு நேராக வடக்கில் வந்து ஓர் ஆணியை ஊன்றி அடையாளமிட்டான். பிறகு, தானாகவே அடுத்து அடையாளமிட வேண்டிய இடத்தை நோக்கி அனுமானமாக நடக்க ஆரம்பித்தான். அப்போது ஆனந்தன், தியோட லைட்டில் கண்களைப் பொருத்தி அடுத்து அடையாளமிட வேண்டிய இடத்தைத் தேட ஆரம்பித்தான்.

கதிரேசன், விருத்தாசலம் – ஆலடிக்குப் போகிற ரோட்டுக்கு அருகில் வந்து நின்றான். அதைப் பார்த்த ஆனந்தன், ‘இன்னும் கொஞ்சம் முன்னால’ என்பது மாதிரி இடது கையால் சைகை காட்டினான். உடனே முன்னால் நடந்துவந்து நின்றான். ‘வடக்கில் நவுரு’ என்பது மாதிரி ஆனந்தன் கையைக் காட்டினான். கதிரேசன் நகர்ந்து நின்றான். மறுநொடியே தியோட லைட்டில் கண்களை பொருத்திக்கொண்டு சாலை நேராக வருகிறதா, அளவு சரியாக இருக்கிறதா எனப் பார்த்துவிட்டு, ‘மார்க்’ என்று சொல்லிக் கத்தினான். கதிரேசன் ஊசியை ஊன்றி, வெள்ளை மாவைத் தூவி அடையாளமிட்டான். அதே மாதிரி தெற்கிலும் சென்று அடையாளமிட்டான். ‘பாயின்ட்ஸ் செக் பண்ணு’ – ஆனந்தன் சொன்னதும் ரோட்டை ஒட்டி அடையாளமிட்ட இடத்தில் இருந்து கிழக்கில் நடந்து, மூன்று நான்கு இடங்களில் நின்று அடையாளமிட்ட இடங்கள் நேராக இருக்கின்றனவா எனப் பார்த்தான். ‘ஓ.கே சார்’ என்று சொன்னான்.

‘பேக் அப்’ – ஆனந்தன் சொன்னான்.

இரும்புக் கம்பி ஊசிகள் இருந்த பை, வெள்ளை மாவு இருந்த பையோடும் வந்த கதிரேசன், தியோட லைட்டைக் கழற்றி அதற்கு உரிய பையில் போட்டான். முக்கோணத் தாங்கியை கழற்றி, மடக்கி அதற்கு உரிய பையில் வைத்தான்.

‘போலாமா சார்?’

‘டிரைவரை வரச் சொல்லு. லேண்ட்மார்க் சொல்லிடு’ என்று சொல்லிவிட்டு, அடையாளமிட்ட ஒன்றிரண்டு இடங்களில் நின்று பார்த்தான். பிறகு, பைகளைத் தூக்கிக்கொண்டு ரோட்டுக்குச் சென்றுகொண்டிருந்த கதிரேசனை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

‘தண்ணி இருக்கா?’

‘இல்ல சார்.’

‘கூல் டிரிங்க்?’

‘தீந்துடுச்சு சார்.’

‘நாளைக்கி வரும்போது ரெண்டு மூணு பாட்டில் கூடுதலா வாங்கிக்கிட்டு வா’ என்று சொல்லிவிட்டு, ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டு கேட்டான், ‘டிரைவர்கிட்ட சொல்லிட்டியா?’

‘சொல்லிட்டேன் சார்.’

ரோட்டில் நின்று வடக்கிலும் தெற்கிலும் பார்த்த ஆனந்தனுடைய கண்களில், ரோட்டை ஒட்டி இருபது முப்பதடி தூரத்தில் மேற்குப் பக்கமாக ஒரு கூரை வீடு இருப்பது தெரிந்தது. ‘இங்க ஒரு வீடு இருக்கே. ஆளு இருப்பாங்களா?’

‘இருப்பாங்க சார்.’

‘குடிக்கிறதுக்கு தண்ணி இருக்குமா?’

‘இருக்கும் சார். அதைக் குடிச்சா ஏதாச்சும் இன்ஃபெக்ஷன் ஆயிடும் சார்’ அக்கறையோடு சொன்னான் கதிரேசன். அவன் சொன்னதை காதில் வாங்காமல், கூரை வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான் ஆனந்தன்.

மட்கிப்போன சிறிய கூரை வீடு. வாசல், தெற்குப் பக்கம் பார்த்து இருந்தது. வீட்டு வாசலில் இருந்து பத்து அடி தள்ளி ஒரு கிழவரும் கிழவியும் எதிர் எதிராக உட்கார்ந்துகொண்டு புளிச்சக் கீரையை உருவிக்கொண்டிருந்தனர். இரண்டு பேருக்கும் இடையில் முறம் இருந்தது. கிழவிக்குப் பக்கத்தில் அடுப்பு எரிந்துகொண்டிருந்தது. அடுப்பில் இருந்து ஏழு எட்டு அடி தூரத்தில் இரண்டு மாடுகள் கட்டப்பட்டிருந்தன. மாடுகள் கட்டப்பட்ட இடத்தில் இருந்து மேற்கில் பத்து அடி தூரத்தில் ஆறு ஆடுகள் கட்டப்பட்டிருந்தன. கிழவியைச் சுற்றி ஒரு கோழியும் ஏழு எட்டு குஞ்சுகளும் சுற்றிச் சுற்றி மேய்ந்துகொண்டிருந்தன. எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே வந்த ஆனந்தன் யாரிடம் என்றில்லாமல், ‘கொஞ்சம் தண்ணி கொடுங்க’ என்று கேட்டான்.

கீரை உருவிப்போடுவதை விட்டுவிட்டு எழுந்து வீட்டுக்குள் சென்று, ஒரு செம்பு நிறைய தண்ணீரைக் கொண்டுவந்து கொடுத்தாள் கிழவி. தண்ணீரை வாங்கிக் குடித்தான் ஆனந்தன்.

‘ஏதாச்சும் பிரச்னை வந்துரப்போவுது சார்.’

‘இன்னம் வேணுமா?’ கிழவி கேட்டாள்.

‘போதும்மா’ என்று சொன்னான் ஆனந்தன். திரும்பி கதிரேசனிடம், ‘தண்ணி வேணுமா?’ என்று கேட்டான்.

‘வேணாம் சார்’ – அவசரமாகச் சொன்னான் கதிரேசன்.

‘சீக்கிரம் டிரைவரை வரச் சொல்லு’ அதிகாரமாகச் சொன்னான் ஆனந்தன்.

‘மூணு கிலோமீட்டர்தான் சார். அஞ்சு நிமிஷத்துல வந்துடுவான்.’

கிழவி தரையில் உட்கார்ந்து, முன்புபோல புளிச்சக் கீரையை மீண்டும் உருவிப்போட ஆரம்பித்தாள்.

‘கார் எப்ப வரும்?’ – முறைப்பது மாதிரி ஆனந்தன் கேட்டதும், உடனே செல்போனை எடுத்து யாருக்கோ போன் போட்டான் கதிரேசன். போன் பேசுகிற சாக்கில் ரோட்டில் போய் நின்றுகொண்டான்.

‘என்ன… இங்க சமையல் பண்றீங்க?’ – யாரிடம் என்றில்லாமல் ஆனந்தன் கேட்டான்.

‘அடுப்பு எரிஞ்சா சோறு எங்கனாலும் வேவும்’ – கிழவர் லேசாகச் சிரித்தார்.

‘எப்பவும் இந்த எடத்துலதான் சமைப்பீங்களா?’

‘கல்யாணத்துக்கா ஆக்குறேன்? ஒரு சோறு; ஒரு குழம்பு. அதுவும் ஒரு நாளைக்கி ஒருவாட்டி. அதை இங்க வெச்சே பொங்கிடுவன்’ – கிழவி இரண்டு முந்திரிக் குச்சிகளை எடுத்து அடுப்பினுள் செருகினாள்.

‘மழைக் காலத்துல என்ன செய்வீங்க?’

‘நாள் மூச்சூடுமா மழை பெய்யப்போவுது?’ என்று கேட்ட கிழவி, பக்கத்தில் படியில் இருந்த அரிசியை ஒரு குண்டானில் கொட்டி அலசிவிட்டு, அள்ளி உலையில் போட்டாள். கரண்டியால் கிண்டிவிட்டு உலையை மூடினாள். அடுப்பில் இரண்டு குச்சிகளை வைத்தாள். கிழவி செய்கிற ஒவ்வொரு வேலையையும் பார்த்த ஆனந்தன், ‘ஊருக்குள்ளார இல்லாம எதுக்குத் தனியா காட்டுல இருக்கீங்க?’ என்று கேட்டான்.

‘ஊருக்குள்ளார குடியிருந்தாலும் தூங்குறது மட்டும்தான… மத்த நேரமெல்லாம் இந்தக் காட்டுலதான. இந்த எடத்துலியே படுத்து, இந்த எடத்துலியே எந்திரிச்சா கால் நட மிச்சம்தான… வயசான காலத்தில நடக்க முடியுதா?’ – கிழவி சாதாரணமாகச் சொன்னாள்.

‘திருடன் பயம் இல்லியா?’

கடகடவெனச் சிரித்தார் கிழவர். ஆனந்தனிடம் திருப்பிக் கேள்வி கேட்பது மாதிரி கேட்டார், ‘நகை, பணம் இருக்கா… வெலகொண்ட பொருளு இருக்கா? எங்ககிட்ட கை காலுதான் இருக்கு. அத திருடுறதுக்கு எந்தத் திருடன் வரப்போறான்?’

கிழவிக்குப் பின்னால் சுற்றிக்கொண்டிருந்த கோழிக்குஞ்சுகளில் ஒன்று அவளுடைய மடியில் ஏறியது. அதைத் தூக்கி தரையில் விட்டுவிட்டு, ‘தூரமா போங்க கழுதைகளா… என் இடுப்புலியா தீனி கெடக்கு! ஏன் இடுப்ப சுத்திச் சுத்தியே வர்றீங்க?’ என்று கேட்டுச் சிரித்தாள். அடுப்பில் வெந்துகொண்டிருந்த சோற்றில் ஒரு கரண்டி அள்ளி, வாயால் ஊதி, ஆறவைத்து தரையில் ஓர் இடத்தில் கொட்டினாள். கோழிக்குஞ்சுகள், சோற்றைக் கொத்தித் தின்ன ஆரம்பித்தன.

‘யாரு நீங்க… என்னா ஊரு?’ – கிழவர் கேட்டார்.

‘விருத்தாசலம். காரு வர்றதுக்காக வெயிட் பண்ணிக்கிட்டிருக்கேன்.’

‘காரு வரமுட்டும் குந்துங்களேன்…’ – பக்கத்தில் கிடந்த ஒரு முந்திரிமரக் கட்டையைக் காட்டினார். கிழவர் காட்டிய முந்திரிமரக் கட்டையில் உட்கார்ந்தான். ரோட்டில் நின்றிருந்த கதிரேசன், ஆனந்தன் மரக்கட்டையில் உட்கார்ந்ததைப் பார்த்துவிட்டு வேகமாக வந்து, ‘நடந்து போய்க்கிட்டு இருக்கலாம் சார். கார் வந்ததும் அப்படியே ஏறிக்கலாம்’ என்று சொன்னான்.

‘கார் வருதானு ரோட்டுல நின்னு பாரு. எடம் தெரியாமப் போயிடப்போறான்.’ மறுபேச்சு பேசாமல் ரோட்டுக்குப் போனான் கதிரேசன். செல்போனில் பேச ஆரம்பித்தான்.

வீட்டைப் பார்த்தான் ஆனந்தன். மூன்று, நான்கு பேர்தான் படுக்க முடியும். கூரை மட்கிப்போயிருந்தது. வீட்டுக்குப் பின்புறம் இரண்டு வாழைமரங்கள் இருந்தன. ஒரு முருங்கைமரமும் ஒரு தென்னைமரமும் இருந்தன. வீட்டை ஒட்டியே வடக்கில் நெல் வயல் இருந்தது. மேற்கில் கரும்புக் காடு, தெற்கில் முந்திரிக் காடு… மேற்கில் பார்த்தான். சூரியன் சற்று நேரத்தில் மறைந்துவிடும்போல் இருந்தது. ஜிலுஜிலுவென காற்று வீசிக்கொண்டிருந்தது. வானத்தில் குறுக்கும் நெடுக்குமாகப் பறவைகள் பறந்துகொண்டிருந்தன. அவ்வப்போது ரோட்டில் செல்கிற வாகனங்களின் சத்தத்தைத் தவிர வேறு சத்தம் இல்லை. பகலிலேயே இவ்வளவு அமைதியாக இருந்தால், இரவில் எப்படி இருக்கும்?

‘எப்பயும் இங்கதான் குடியிருப்பீங்களா?’

‘பத்து வருஷமா இங்கதான் இருக்கோம்.’

‘ஊருல இருக்கவேண்டியதுதான?’ அக்கறையாகக் கேட்டான்.

‘இங்கிருந்து பாத்தா ஊரும் காடு மாதிரிதான் இருக்கும்’ – கிழவர் சிரித்தார்.

‘ராத்திரியில பயமா இருக்காதா… எப்பிடித் தூங்குறீங்க?’

‘எதுக்கு? எங்ககிட்ட இந்த மண்ணுதான் இருக்கு. இதெ திருடிக்கிட்டுப் போறதுக்கு எந்த நாட்டுத் திருடன் வரப்போறான்?’

‘புள்ளைங்க இல்லியா… தனியாவா இருக்கீங்க?’

‘அதெல்லாம் நெறயா இருக்கு. மூணு மவனுவோ, ரெண்டு மவ, பேரப்புள்ளைங்கன்னு ஒரு பயிர் ஆடு அளவுக்கு இருக்கு’ – சலிப்புடன் சொன்னார் கிழவர்.

‘அப்படியா!’ – சந்தேகப்பட்டது மாதிரி கேட்டான் ஆனந்தன்.

‘பத்து வருஷத்துக்கு முன்னாடி பங்கு பாகத்தப் பிரிக்கும்போது மூணு பேரும் எங்களுக்கு யாரு சோறு போடுறதுன்னு சண்டப் பண்ணிக்கிட்டானுவ. ‘எங்களுக்காக நீங்க சண்ட பண்ணிக்க வாணாம். காட்டுல இருக்கிற மோட்டார் கொட்டாயிக்கிட்ட இருக்கிற களத்துல தங்கிக்கிறோம்’னு நாங்களே ஒதுங்கி வந்துட்டோம்’ – கிழவரின் குரலில் கசப்போ வெறுப்போ துளியும் இல்லை. எப்போதும்போல கீரையை உருவி முறத்தில் போட்டுக் கொண்டிருந்தார். கீரை உருவுவது, அடுப்பில் இருக்கும் சோற்றைக் கிண்டிவிடுவது, சுற்றிவரும் கோழிக் குஞ்சுகளை விரட்டிவிடுவது எனப் பல வேலைகளைச் செய்துகொண்டிருந்தாள் கிழவி.

‘ஆடு, மாடெல்லாம் உங்களுதா?’

‘மாடு ரெண்டும் பெரியவனுது. ஆடுவோ நடு மவனோடது. முதல்ல மேய்க்கிறதுக்கு ஆளில்லன்னு சொல்லி பெரியவன்தான் மாடுவுள ஓட்டியாந்து எங்கிட்ட வுட்டான். அதப் பாத்துட்டு ‘அவனோட மாடுவுள மட்டும்தான் மேய்ப்பியா? இதெயும் மேயி’ன்னு கொண்டாந்து ஆடுவுள கட்டிப்புட்டுப் போயிட்டான் நடு மவன். ‘முடியாது’ன்னு சொல்ல முடியுமா?’ – கிழவர் சிரித்தார். அவருக்கு எல்லா பற்களுமே இருந்தன. ஆனந்தனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

‘முடியாதுன்னு சொல்ல வேண்டியதுதான?’

‘நாங்க சும்மாதான குந்தியிருக்கம். எங்களுக்கும் வேல வேணாமா… பொழுதுபோவ வேணாமா? மாட்டு சாணிய, ஆட்டுப் புழுக்கைய அள்ளட்டுமின்னுதான் கொண்டாந்து வுட்டு இருக்கானுவ.’

‘செலவுக்குத் தருவாங்களா?’

‘தருவாங்க… போட்டி போட்டுக்கிட்டு. கூலி ஆளுவுள கொண்டாந்து வுட்டுட்டு, ‘வேல வாங்கு’னு சொல்லிட்டுப் போவாங்க. ‘முந்திரிக் கொட்டையைப் பொறுக்கி வையி’னு சொல்லுவாங்க. காட்டுல ஆடு மாடு நுழையாம பாத்துக்கச் சொல்லுவாங்க. ‘கரன்ட் உள்ள நேரத்துக்கு மோட்டார் போடு’ம்பாங்க… இப்பிடி நூறு வேல தருவாங்க. அது போதாதா?’ – கிழவர் வாய்விட்டுச் சிரித்தார்.

‘வயசு என்ன இருக்கும்?’

‘எழுவதத் தாண்டிடுச்சு.’

‘கண்ணுல்லாம் நல்லாத் தெரியுதா?’

‘ஓ, ஃபர்ஸ்ட் கிளாசா.’

‘நடக்க முடியுதா?’

‘இங்க கட்டியிருக்கிற ஆடு, மாடெல்லாம் யாரு மேய்க்கிறது? இந்த ஆடு, மாடு எல்லாம் எங்கூட நடக்க முடியாது’ – கிழவர் சொன்னதும், சோற்றைக் கிண்டிவிட்டு வெந்துவிட்டதா எனப் பார்த்த கிழவி நமுட்டுச் சிரிப்பு சிரித்தாள்.

‘ஒங்களோட இன்னொரு மவன் கொண்டாந்து கோழிய வுட்டுட்டாரா?’ – சிரித்துக்கொண்டே ஆனந்தன் கேட்டான்.

‘மெட்ராஸுல வேலயில இருக்கான். இன்ஜினீயர், ரோடு போடுற வேல. கவர்மென்ட் உத்தியோகம்’ – கிழவர் சிரித்தார்.

‘அப்பிடியா!’ – ஆச்சர்யமாகக் கேட்டான்.

‘படிச்சு என்னா பண்றது? பணம் காசு சம்பாரிச்சு, உத்தியோகத்தில் இருந்து என்னா பண்றது? மண்ணுல கெடந்து கூடப்பொறந்த அண்ணன் தம்பிவோ, அக்காளுவோ கஷ்டப்படுறாங்களேனு அம்பது, நூறுன்னு தர மாட்டான். பத்து வருஷத்துக்கு மின்னாடி அவனாலதான் ஊட்டுல சண்ட வந்துச்சு. ‘ஒடனே பங்கு பாகத்தப் பிரி’னுட்டான். தனக்குச் சேர்ந்த காட்ட, ஊட்ட வித்து காசாக்கிக்கிட்டுப் போயிட்டான். ‘எதயும் விக்காத, நாங்க உசுரோட இருக்கமட்டும் ஒன்னோட பாகத்த பாத்துக்கிறம். நம்ப காட்டுக்குள்ளார பிறத்தியாளக் கொண்டாந்து வுடாத’ன்னு இந்தக் கிழவரு எம்மானோ சொல்லிப் பாத்தாரு. கால்ல வியிந்துகூடக் கேட்டாரு. அவன் நாங்க சொன்ன எதயும் கேக்கல. ‘இனிமே இந்தப் பட்டிக்காட்டுக்கு எதுக்கு வரப்போறம்? எல்லாத்தயும் வித்து காசாக்கு; மெட்ராஸுல ஊடு கட்டி வாடகைக்கி வுட்டுறலாம்’னு பொண்டாட்டிக்காரி சொன்னதைத்தான் கேட்டான். அதுல இருந்து தம் பேச்ச கேக்கலியேனு இவுரு அவங்கிட்ட பேசறதயே வுட்டுட்டாரு. இதுவே போதுமின்னு அவனும் போயிட்டான். அதுல இருந்து ஊருக்கு வரதயும் வுட்டுட்டான். நாங்க சாவுற அன்னிக்காச்சும் வருவானோ மாட்டானோ! எதுக்கு காசு செலவுன்னு ஊட்டுலியே இருந்தாலும் இருப்பான். எங்கள மறந்ததுகூடக் குத்தமில்ல. பொறந்ததுல இருந்து சோறு போட்டு வளத்த இந்தச் செங்காட்ட மறந்துட்டானே!’ – கிழவியின் கண்களில் இருந்து நீர் வழிந்தது. அதைப் பார்த்த கிழவர், ‘போன கதய எல்லாம் எதுக்கு இப்பச் சொல்ற?’ – வேகமாகக் கேட்டார்.

‘காட்டுல வேல செஞ்ச புள்ளயக் கட்டியிருந்தா, காடு வேணும், ஊடு வேணும், ஊரு வேணும், காட்டுல வேல செய்ய நாலு சனம் வேணும்னு அனுசரிச்சுப்போயிருப்பா. படிச்சவ; கவர்மென்ட் உத்தியோகத்துல உள்ளவ; அவளுக்கு எதுக்கு காடு, ஊடு? இப்ப எங்க காட்டுல யார் யாரோ வர்றாங்க, யார் யாரோ போறாங்க’ – சொல்லிக்கொண்டே சோறு வெந்துவிட்டதா எனப் பார்த்தாள். சோறு வெந்துவிட்டது தெரிந்ததும் இறக்கிவைத்து வடித்தாள். கீரைச் சட்டியைத் தூக்கி அடுப்பில் வைத்தாள். வடிகஞ்சித் தண்ணீரை கிழவர் நன்றாக ஆற்றினார். எடுத்துக்கொண்டு போய் மாடுகளின் முன் வைத்தார். கீரையை உருவிவிட்டுப் போட்டிருந்த புளிச்சத் தண்டுகளை அள்ளிக் கொண்டுபோய் ஆடுகளுக்கு முன் போட்டார். வீட்டுக்குள் சென்று ஏழு எட்டு மிளகாய்களை எடுத்து வந்து கிழவியின் முன் வைத்தார்.

‘ஒங்கப்பனா பூண்டு எடுத்தாருவான்?’ – கிழவி கேட்டதும் திரும்பிப் போய் மூன்று பூண்டுப் பற்களை எடுத்துவந்து கிழவியிடம் கொடுத்தார். கிழவி பூண்டை உரிக்க ஆரம்பித்தாள். கிழவிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கிழவர் மிளகாய்களைக் கிள்ளி கீரைச் சட்டியில் போட்டார். உடனே கிழவி உரித்திருந்த பூண்டுகளை எடுத்துச் சட்டியில் போட்டு, உருவி வைத்திருந்த கீரையையும் அள்ளிப்போட்டு, கொஞ்சம் தண்ணீரை ஊற்றினாள்.

கிழவரும் கிழவியும் வேலை செய்வதைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த ஆனந்தன் கேட்டான்… ‘இப்ப உங்கள யார்தான் பாத்துக்குறாங்க?’

‘ஒருத்தருமில்ல’ – அழுத்தமாகச் சொன்னாள் கிழவி.

‘என்னம்மா சொல்ற?’ – ஆச்சர்யமாகக் கேட்டான்.

‘ரேஷன் கடையில இருவது கிலோ அரிசி தர்றான். அதுலதான் காலம் ஓடுது.’

‘மத்தச் செலவுக்கு?’

‘காட்டுல கெடக்குற கீரதான்; குச்சிதான். நீதான் பாக்குறல்ல…’ – சிரித்தாள் கிழவி.

‘உங்க மகனுங்ககிட்ட கேக்கக் கூடாதா?’

‘சோறு போடுன்னா? அப்பிடிக் கேக்கலாமா நானு?’ – அலுப்பாகச் சிரித்தார் கிழவர். கீழே கிடந்த இரண்டு மூன்று அரிசிகளை எடுத்து கோழியின் முன் போட்டுவிட்டுச் சொன்னார்…

‘அவனவன் சோத்தை அவனவன்தான் சம்பாரிக்கணும். அவனவன் வவுறு அவனவன்கிட்டதான இருக்கு?’

ஆனந்தனுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. சிறிது நேரம் பேசாமல் இருந்துவிட்டு கேட்டான்… ‘சனங்களே இல்லாத எடத்துல இருக்கிறது கஷ்டமால்ல?’

கிழவர் கடகடவெனச் சிரித்தார். ‘காட்டுல இருக்கிறது கஷ்டமில்ல. ஊருல இருக்கிறதுதான் கஷ்டம். பாம்பு, பல்லியவிட துஷ்ட மிருகம் மனுசங்கதான்.’

‘பேசுறதுக்குக்கூட ஆளில்லியே.’

கிழவர் கோபப்பட்ட மாதிரி கேட்டார். ‘எதுக்கு அப்பிடிச் சொல்றீங்க? இங்க ஆடுவோ நிக்குது; மாடுவோ நிக்குது. அப்புறம் கோழிக்குஞ்சுவோ நிக்குது. இது போதாதா? சுத்தி நிக்குற பயிர் பச்சயப் பாத்தா போதாதா? கரும்புக் காடு, முந்திரிக் காடுன்னு எம்மாம் நிக்குது, எல்லாத்துக்கும் மேல ரோட்ல போறவங்க எம்மாம் பேரு வருவாங்க தெரியுமா? சைக்கிளு பஞ்சரு, காரு பஞ்சரு, மோட்டார் பைக்கு பஞ்சருன்னு தெனம் ஒரு ஆளாவது வந்து இங்க வண்டிய நிறுத்தாம இருக்க மாட்டாங்க. பள்ளிக்கூடத்துக்குப் போற புள்ளைங்க தெனம் தெனம் வந்து தண்ணீ கேக்குங்க. அதுக்குன்னே குடம் வெச்சிருக்கேன். ந்தா… அங்க இருக்குதில்ல!’ – கிழவர் கை காட்டிய இடத்தைப் பார்த்தான். வாசலை ஒட்டி ஒரு செப்புக்குடம் இருந்தது. அதற்குப் பக்கத்தில் சில்வர் செம்பு ஒன்றும் இருந்தது.

‘தனியா நீங்க இருக்கிறதுதான் ஆச்சர்யமா இருக்கு!’ – சிரித்துக்கொண்டே சொன்னான் ஆனந்தன்.

‘நாங்க தனியா இல்ல. எங்ககூட கள்ள வீரன் இருக்கான்.’

‘அது யாரு?’

‘ந்தா… கிழக்கால நிக்குறான் பாரு ஒருத்தன்’ கிழவர் கிழக்குப் பக்கமாகக் கையைக் காட்டினார்.

ஆனந்தன் ரோட்டுப் பக்கம் பார்த்தான். ஆள் யாரும் கண்ணில் படாததால் ‘நீங்க யார சொல்றீங்க?’ என்று கேட்டான்.

லேசாகச் சிரித்த கிழவர், ‘அங்க வெள்ள குதிர மேல கள்ள வீரன் சாமி குந்தியிருக்கான் பாரு.’

ஆனந்தன் எழுந்து நின்று கிழக்கில் பார்த்தான். ரோட்டில் இருந்து கிழக்கில்,

ஒரு பர்லாங் தொலைவில், ஏழு எட்டு மரங்களுக்கு இடையே சிமென்ட்டால் செய்யப்பட்ட குதிரை மட்டும்தான் மங்கலாகத் தெரிந்தது. சாமி சிலை இருப்பது தெரியவில்லை. ‘கதிரேசன்’ என்று கூப்பிட்டான்.

‘இப்ப கார் வந்துடும் சார். கிளம்பிட்டானாம்’ – சொல்லிக்கொண்டே கதிரேசன் ஆனந்தனுக்குப் பக்கத்தில் வந்தான்.

‘முன்னாடி மார்க் பண்ணும்போது ‘சாமி கோயில் இருக்கு’னு சொன்னியே, அந்த எடமா அங்க மரம் நிக்குற எடம்?’

‘அந்த எடம்தான் சார்.’

‘அந்த எடமா சாமி கோயிலு?’ – லேசாகச் சிரித்தான் ஆனந்தன்.

கிழவருக்குக் கோபம் வந்துவிட்டது. ‘எதுக்கு சிரிக்கிறே? நீ நெனைக்கிற மாதிரி கள்ள வீரன் சாமி சாதாரண ஆளில்ல. அவனுக்கு இருவத்தியோரு சேனாதிபதி இருக்காங்க தெரியுமா? முப்பலி வாங்கக்கூடியவன். எதிரிய வெல்றவன். என்னா ஒண்ணு… சாராயம் வெச்சி படைக்கலைன்னா மட்டும் கோவப்படுவான்’ – பெருமையாகச் சொன்னார்.

‘போலாம் சார்’ – கதிரேசன் சொன்னான். அதற்கு ஆனந்தன் பதில் சொல்லாமல், கிழவி கீரை வெந்துவிட்டதா என்று பார்ப்பதையும் கீரையைக் கிண்டிவிட்டதையும் பார்த்தான். அப்போது தானாகவே கிழவர் சொன்னார்…

‘கள்ள வீரன், வேட்டையில பெரிய சூரன். இருவத்தியோரு சேனாதிபதியோடதான் ஒவ்வொரு நாளும் வேட்டைக்கிப் போவான். அப்ப எதிர்ல யார் வந்தாலும் சாம்பல்தான். பேய், பிசாசு, துர்தேவாதிங்க ஊருக்குள்ளார அண்டாம அவன்தான் பாத்துக்குவான். அவனோட கண்ண மீறி ஒரு ஈ, எறும்பு, ஊருக்குள்ளார நுழைய முடியாது. முப்பூசப் போட்டு, மனசுல உள்ளத அவங்கிட்டப் போயி முறையிட்டா போதும். அப்பிடியே நிறைவேத்திக் குடுத்துடுவான். அவனோட நிழலு எப்பவும் ஊரு மேல விழுந்துக்கிட்டேயிருக்கும். எங்க ஊரு சனங்களுக்கு அவந்தான் மூச்சுக்காத்து. அந்தப் பயல நம்பித்தான் நான் இந்தக் காட்டுல குந்தியிருக்கேன்.’

கிழவருக்கு உற்சாகம் கூடிவிட்டது. கள்ள வீரன் சாமியினுடைய வீரம், பராக்கிரமம், ஊரைக் காக்கிற விதம்; வேட்டைக்குச் செல்கிற விதம்; குதிரை, சேனாதிபதிகள், திருவிழா எப்படி நடக்கும்; திருவிழாவில் எவ்வளவு ஆடு, கோழி, பன்றி காவு கொடுப்பார்கள்; எத்தனை ஊர் சனங்கள் திருவிழாவுக்குக் கூடுவார்கள்; ஊரில் யார் யாருக்கு என்னென்ன நல்லது செய்திருக்கிறான்… எனப் பட்டியலிட ஆரம்பித்தார்.

கிழவருடைய உற்சாகமான பேச்சைக் கேட்ட ஆனந்தன், எழுந்து நின்று கோயில் இருக்கிற இடத்தையும் கிழவருடைய வீட்டையும் பார்த்தான். நேராக இருந்தது. ‘ரோட்ட ஒட்டி கிழக்கால மார்க் செஞ்சியே அந்த எடத்துக்கிட்டப் போ’ ஆனந்தன் சொன்னதும் லேசாகத் தயங்கிய கதிரேசன், கடைசியாக அடையாளமிட்ட இடத்தில் போய் நின்றான். கதிரேசன் நின்ற இடமும் கிழவருடைய வீடும் நேராக இருந்தன. ஒன்றும் சொல்லாமல் வெறுமனே ‘வா’ என்பது மாதிரி சைகை மட்டும் காட்டினான்.

கிழவி கீரையை இறக்கிவைத்து கடைய ஆரம்பித்தாள். கிழவி கேட்காமலேயே வீட்டுக்குள் சென்று கிழவர் உப்பை ஒரு பிடி அள்ளிக்கொண்டுவந்து கொடுத்தார். பாதி உப்பை வாங்கி கீரையில் போட்டுவிட்டு

எஞ்சியதை திரும்பக் கிழவரிடமே கொடுத்தாள். உப்பை வாங்கிக்கொண்டு வீட்டுக்குள் சென்று வைத்துவிட்டு வந்தார்.

சொல்லவேண்டிய விஷயம் மறந்துபோனது நினைவுக்கு வந்த மாதிரி, சிரித்துக்கொண்டே கிழவர் சொன்னார்… ‘கள்ள வீரன் சாமியப் பத்தி சொன்னப்ப சிரிச்சீங்கல்ல… அவன் யாரு தெரியுமா? கருப்புசாமி, தூண்டிக்காரன், குள்ளக்கருப்பு, முனியன் சாமிகளவிட பெரியாளு. காட்டுத் தெய்வம். எப்பவும் ஊருக்கு வெளியதான் இருப்பான். வெள்ளிக்கி வெள்ளி பூச கேப்பான். மொட்ட போட்டு, முப்பூச கொடுத்து ‘இன்னத செய்டா’னு சொன்னா, ரவ பிசகாம காரியத்த செஞ்சி முடிச்சுடுவான். ஆடு, மாடு காணாமப் போனா, நகை நட்டு திருட்டுப்போனா, திருடுனவங்களக் காட்டிக் கொடுத்திடுவான். எப்பவுமே கும்பமர சாலையில, நீர்நெல தேங்கிய எடத்திலதான் அவனுக்கு இருப்பு. பவரான சாமி’ – கிழவரின் முகத்தில் மகிழ்ச்சி நிறைந்திருந்தது.

கீரையைக் கடைந்து முடித்த கிழவி, கிழவரைப் பார்த்து ”கோமணத் துணி தளர்ந்துபோய் கெடக்குறதுகூடமா தெரியாம ஒரு ஆளு இருப்பான்? வெக்கம் மானம் வேணாம்!’ என்று கேட்டுச் சிரித்தாள். அடுப்பை, தண்ணீர் தெளித்து அணைத்தாள். எழுந்து, வீட்டுக்குப் பின்புறமாகச் சென்று, குண்டானில் தண்ணீரைக் கொண்டுவந்து மாடுகளுக்கு முன் வைத்தாள். மீண்டும் வீட்டுக்குப் பின்புறம் சென்று ஒரு குண்டானில் தண்ணீரைக் கொண்டுவந்து ஆடுகளுக்கு வைத்தாள். ஒரு சில்வர் தட்டில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றிவைத்தாள். கோழிக் குஞ்சுகள் தண்ணீரைக் குடிக்க ஆரம்பித்தன.

கிழவியினுடைய ஒவ்வொரு செயலையும் பார்த்த ஆனந்தன், கிழக்கில் கள்ள வீரன் சாமி கோயில் பக்கம் பார்த்தான். பிறகு, கிழவர், கிழவி உட்கார்ந்திருந்த இடத்தைப் பார்த்தான். நாளைக்கு காலையில் வந்ததும் அடையாளமிட வேண்டிய இடம் கிழவருடைய வீடு. பேன்ட் பாக்கெட்டில் இருந்த வரைபடத்தை எடுத்துப் பார்த்தான். பிறகு, அணைக்கப்பட்டிருந்த அடுப்பைப் பார்த்தான். சோற்றுக் குண்டான், கீரைச் சட்டி, ஆடு, மாடு, கோழி, பள்ளிக் குழந்தைகள், வழிபோக்கிகளுக்காக தண்ணீர் வைத்திருந்த செப்புக்குடத்தைப் பார்த்தான். எல்லாம் இன்னும் ஒன்றிரண்டு மாதங்கள் வரைதான் இருக்கும். பிறகு பொக்லைன் வந்து எல்லாவற்றையும் சமமாக்கும்; கருங்கல் ஜல்லி கொட்டப்படும்; தார் ஊற்றப்பட்டு சாலையாகும். இரவும் பகலும் ஓயாமல் வாகனங்கள் ஹாரன் அடித்தபடி எந்தத் தடையும் இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும்.

பெருமூச்சுவிட்ட ஆனந்தன், கதிரேசனிடம் கேட்டான், ‘கார் என்னாச்சு?’

‘இப்ப வந்துரும் சார்.’

‘ரோட்டுல நின்னு பாரு.’

கதிரேசன் ரோட்டுக்குப் போய் நின்ற சில நொடிகளிலேயே கார் வந்து நின்றது. ‘கார் வந்துடுச்சு சார்.’

‘வண்டியில ஏறு’ என்று சொன்ன ஆனந்தன், பேன்ட் பாக்கெட்டில் இருந்து வரைபடத்தை எடுத்துப் பார்த்தான். கடலூர் – சேலம் செல்வதற்கு விருத்தாசலம் நகரத்துக்கு வெளியே செல்லும் புறவழிச் சாலை,

15 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட வேண்டும். 12 கிலோமீட்டர் தூரத்துக்கு அளந்து அடையாளமிடப்பட்டுவிட்டது தெரிந்தது. இன்னும் மூன்று கிலோமீட்டர் தூரம்தான். நாளைக்கு முடிந்துவிடும். நாளை காலையில் வந்ததும் அடையாளமிட ஆரம்பிக்கவேண்டிய இடம், கிழவருடைய வீட்டை ஒட்டியுள்ள ரோடுதான். அதைச் சொல்லலாமா?

‘இப்பவே நெருப்பை வைக்க வேணாம்’ என நினைத்தான். கிழவரையும் கிழவியையும் ஆனந்தனுக்கு ரொம்பப் பிடித்திருந்ததால், ‘ரெண்டு பேரும் அப்படியே இருங்க. ஒரு போட்டோ எடுத்துக்கிறேன்’ – செல்போனை எடுத்தான்.

‘படமெல்லாம் எடுக்காதீங்க. நம்ப படத்த எடுத்து, நாம்பளே பாத்துகிறதா பெருசு?’ கிழவர் வெடுக்கெனக் கேட்டார். ஆனந்தனுக்கு வெட்கமாகிவிட்டது. ஆனாலும் ஒன்றிரண்டு படங்கள் எடுத்தான். அப்போது அருகில் வந்த கதிரேசன் அக்கறையுடன் சொன்னான் ‘மணி ஆகிடுச்சு சார். டீ, காபிகூட குடிக்கல.’

‘இந்த இடம் நல்லா இருக்கு. ஏ.சி-யில வர்ற மாதிரி காத்து ஜிலுஜிலுனு வருது.’

‘இருட்டப்போவுது சார்.’

‘கார்ல போயி இரு’ – ஆனந்தன் வேகமாகச் சொன்னதும், மறுபேச்சு இல்லாமல் கதிரேசன் காரிடம் போய் நின்றுகொண்டு, ‘கிறுக்கன்’ என்று சொன்னான்.

திடீரென நினைவுக்கு வந்த மாதிரி ஆனந்தன் கேட்டான்.. ‘இந்த ஊரு பேரு என்ன?’

‘நறுமணம்!’

‘நல்லா இருக்கு. அந்த நகர், இந்த நகர்னு இல்லாம.’

‘நீங்க வடக்கத்தி ஆளா?’

‘இல்லை. மெட்ராஸ் பக்கம்…’

‘என்னா வேலயா இங்க வந்தீங்க?’ – ஆர்வமாகக் கேட்டார் கிழவர்.

‘விருத்தாசலத்தச் சுத்தி பைபாஸ் போடுறாங்க. அதுக்கு அளக்க வந்தேன்.’

‘ரோடு போடுறவங்களா?’

‘ஆமாங்க. ஹைவேஸ் டிபார்ட்மென்ட்.’

‘ரோடு எந்தப் பக்கம் வருது?’

ஆனந்தனுக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை. கிழவருடைய முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்தான். அப்போது கிழவி, ‘இருட்டாவப்போவுது. ஊட்டுல வெளக்கு ஏத்தல?’ என்று கேட்டாள். உடனே கிழவர் வீட்டுக்குள் சென்று சிறிய விளக்கு ஒன்றை ஏற்றிவைத்துவிட்டு, இரண்டு சாப்பாட்டுத் தட்டுகளுடன் வெளியே வந்தார். தட்டுகளை வாங்கி அதில் சோற்றையும் கீரையையும் போட்டுவைத்தாள் கிழவி.

‘ஒருவா சோறு சாப்புடுங்களேன்…’ – கிழவி ஆனந்தனிடம் சொன்னாள்.

‘வேண்டாம்மா. வரேன்’ காரை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அப்போது கிழவர் கேட்டார், ‘கிளம்பிட்டிங்களா?’

‘ஆமாங்க. நேரமாகிருச்சு’ – மீண்டும் நடக்க ஆரம்பித்தான்.

‘ரோடு எந்தப் பக்கமா வருது?’

ஆனந்தன் வருவதைப் பார்த்துவிட்டு டிரைவர் காரை ஸ்டார்ட் செய்துவிட்டதால் கிழவர் கேட்டது அவனுடைய காதில் விழவில்லை.

‘இந்த கூரை வூட்டுல நெருப்ப வெச்சிடாதீங்க. நாங்க போறதுக்கு சுடுகாட்டத் தவிர வேற எடமில்ல’ – கிழவர் சொன்னது காரில் ஏறிவிட்ட ஆனந்தனுடைய காதில் விழவில்லை. சைலோ கார் விருத்தாசலத்தை நோக்கி ஓட ஆரம்பித்தது. காரில் இருந்தபடியே திரும்பிப் பார்த்தான். கிழவியும் கிழவரும் வீடும் தூசு மாதிரி காணாமல்போயிருந்தனர்!

– நவம்பர் 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *