நரிக்குறத்தி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 4, 2022
பார்வையிட்டோர்: 2,064 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தர்மமிகு தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னைப் பட்டணத்தில் நெடுஞ்சாலையொன்று ரயில் பாதையைக் குறுக்கே வெட்டிக்கொண்டு பாழ் இடமான ஒரு லெவல் கிராஸ்.

அந்த லெவல் கிராஸிங் கதவுகள் வழக்கம் போல் சாத்திக் கிடந்தன. அவை சாத்தப்பெற்ற இரண்டொரு நிமிஷங்களில் ஜனங்கள் வந்து குழுமினர். அப்புறம் வழக்கம்போல் கார், பஸ், லாரி , ரிக்ஷா , ஜட்கா , சைக்கிள் முதலான வாகனாதிகள் போக்குவரத்து விடுதிகளை அனுசரித்து, சாலையின் இடது பக்கங்களில் எதிர்ப்புதிரிட்டு ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நிற்கலாயின. சென்னை நகரமே ஸ்தம்பித்துப் போன மாதிரி ஒரு தோற்றம்.

சங்கீதக் கச்சேரிகளில் புடவை ரகங்களைப் பற்றிய பேச்சும், மளிகைக் கடைகளில் ரூபாய்க்குப் பதினாறுபடி அரிசி விற்ற காலத்தைப் பற்றிய பேச்சும், எழுத்தாளர் மாநாடுகளில் தனித்தமிழ், கலப்படத்தமிழ் பற்றிய பேச்சும் வழக்கமாக அடிபடுவதைப்போல, அந்த ரயில்வே கிராஸிங் அருகில் குழுமி நின்ற ஜனங்களிடையே நகரசபை நிர்வாகத்தின் கையாலாகத் தன்மை, சர்க்காரின் பாராமுகம், ரயில்வே போர்டின் அசமந்தம், ஐந்தாண்டுத் திட்டங்களிலுள்ள குறைகள், தேர்தல் கால வாக்குறுதிகள், பற்றாக்குறை பட்ஜட் விவாதப் பிரசங்க நினைவுகள், தனி மனித உரிமைகள், அரசியல் கட்சிகளின் செயல் திறன், கொள்கைக் குழப்பம் முதலானவை பற்றிய வழக்கமான ‘பாஷன் பேச்சுக்கள்’ கிளம்பின. அவரவர்க்குரிய அவசரம் , தேவை, காரியம் ஆகியவற்றைப் பொறுத்து, அந்தப் பேச்சுக்கள் ஆத்திரமாகவும், அலுப்பாகவும், சீறலாகவும், சலிப்பாகவும், கோபமாகவும், குத்தலாகவும், குறும்பாகவும் வெளிப்பட்டன. சிலர். வாய்விட்டுப் பேசாமலே. முகத்தைச் சுளிப்பதும், கையைச் சொடுக்குவதும், காலைத் தேய்ப்பதும் வெளிக்காட்டினர். மற்றும் சிலர், தங்கள் பொறுமை பறிபோய்க் கொண்டிருப்பதைச் சைக்கிள் மணிகளாலும், ஹாரன்களாலும் தெரியப்படுத்தினர். வேறு சிலர், அந்தக் கிராஸிங் கதவருகில் அரக்கனின் கண்ணைப் போல் ஒளிவிட்டு எரிந்து கொண்டிருந்த சிவப்பு விளக்கை அமைதியாக ஏறிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இப்படியாகத்தானே அங்கு ஜனநாயக தத்துவத்தின் ஒரு வீரியப்பகுதிய பிண்டப்பிரமாணமாக உருவாகிக் கொண்டிருந்தது!

‘ஆனால் அந்தச் சாலையின் இரு முனைகளிலும் குழுமி நின்ற நூற்றுக்கணக்கான ஜனங்களுடையவும் ஆத்திர அவசர கோபதாபக் குமுறல்களைக் கொஞ்சமும் சட்டை செய்யாதவனாய் – அத்தனை பேருடைய உரிமைகளையும் பறித்து, அவ்வளவு பேரையும் தடுத்து நிறுத்திப் போட்டுவிட்ட பெருமையில் திளைத்தவனாய் – லெவல் கிராஸிங்கின் உள்ளே, ரயில் பாதையோரம், கம்பீர நடைபோட்டுக் கொண்டிருந்தான் கேட் கீப்பர். ஆயிரக்கணக்கான கண்கள் அவனைக் கொத்திப் பிடுங்குவது போல் பார்த்துக் கொண்டிருப்பதைக்கூட லட்சியம் செய்யாமல், ருத்திரவெளியில் தன்னந்தனியே உலாவும் மந்திரவாதியைப் போல, பச்சைக் கொடிக் கருணையைக் கட்கத்தில் இடுக்கிக் கையைப் பின்னால் கோத்தவாறு உலாவிக் கொண்டிருந்தான். அவன் ஐந்து நிமிஷத்திற்கொருதரம் என்று அந்த லெவல் கிராஸிங் கதவுகளைச் சாத்தித் திறந்துவிடும் தொழிலை நாட்கணக்கில், மாதக்கணக்கில், வருடக்கணக்கில் செய்துவரும் அவனுக்கு இது பழகிப்போன , புளித்துப்போன அனுபவம். எனவே, தன்னைச் சுற்றி ஒன்றுமே நடவாத மாதிரி உல்லாச நடைபயின்று கொண்டிருந்தான் அவன். பொறுமையிழந்த சில இளைஞர்கள் இரும்புக்கிராதியின் இடுக்குகளில் நுழைந்து ரயில் பாதையைக் கடக்க முயலும் போதெல்லாம், அவர்களை விரட்டியடித்து ஜபர்தஸ்து செய்வது அவனுக்கு ஒரு பொழுதுபோக்காயிருந்தது.

அது ஆபீஸ் நேரம். கர்ப்பிணிக் கோலம் பூண்ட இரண்டு மின்சார ரயில் வண்டிகள் தெற்கிலிருந்தும், வடக்கிலிருந்தும் ஓடி மறைந்த பின்னும், சிவப்பு விளக்குகள் அணையவில்லை. கதவுகள் திறக்கப்படவில்லை . தேங்கிநின்ற ஜனப்பிளயத்தின் குமுறல் மிகுதியாயிற்று.

“இது என்ன சார், நியாயம்? ரயில் வண்டியில் போகிறவர்களும், பாட்டைசாரிகளும் இந்த ஜனநாயக நாட்டில் சமஉரிமை பெற்றவர்கள் தாமே? அவர்களை மட்டும் முன்னால் போக அனுமதித்துவிட்டு, நம்மை மட்டும் மடக்கிப் போட்டு வைப்பதேன்? ஒரே காரியாலத்தில் வேலை செய்யும் இருவரில் ஒருவர்,ரயில் டிக்கெட் வாங்கி முன்னதாகப் போகிறார்; பஸ் டிக்கெட் வாங்கிய மற்றவர், இதோ நின்று கிடக்கும் பஸ்ஸில் புழுவாய்த் துடித்துக் கொண்டிருக்கிறார். எந்த அளவுகோலைக்கொண்டு இவர்களுக்கு இந்த நியாயம் வழங்கப்பெறுகிறது?” என்று ஆவேசக் குரலில் கேட்டார் அங்கு நின்று நின்று கால் கடுத்துப்போன ஒரு வக்கீல் குமாஸ்தா.

“வாழ்க்கைப் போராட்டத்தில் பலமுள்ளவையெல்லாம் பல வீனமானவற்றை வென்று, பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னேறுவது இயற்கை!” என்று வறண்ட புன்னகையுடன் பதில் சொன்னார். கல்லூரிக்கு நேரமாகிவிட்டதே என்ற கவலையில் ஆழ்ந்து நின்ற ஓர் ‘உயிரியல்’ பேராசிரியர்.

‘ஹும் ! எல்லாம் அவரவர் வந்த வழி!” என்று சலிப்புடன் முகத்தைச் சுளித்தார் ஒரு கோயில் அர்ச்சகர்.

“வழியாவது, விதியாவது! இங்கே தினந்தினம். அடிக்கொருதரம் ஆட்டுமந்தைக் கூட்டம் போல் நின்று பள்ளத்தில், ஆளுக்கொரு பைசாவீதம் வீசியெறிந்தால் கூட, அந்தப் பணத்தைக் கொண்டு ஆறு மாசத்திற்கெல்லாம் ஒரு மேம்பாலத்தைக் கட்டி முடித்திருக்கலாமே!” என்று அலுத்துக் கொண்டான் பொருளாதாரப் பாடத்தில் ‘கோட்டடித்த ஒரு டியூடோரியல் கல்லூரி மாணவன்.

இப்படி எழுந்த இந்தக் காரமான பேச்சுக்களைக் காது கொடுத்துக் கேட்டுத் தம் கவலையை மறந்து நின்ற ஜனங்களின் கவனம், திடீரென்று வேறு திசையில் திரும்பியது. சோதனைகள் மிகும் போது, முகத்தின் அறிகுறிகள் கூடவே தோன்றும் என்று சொல்வதில்லையா? அவலச் சுவையான நாடகம் நடந்து கொண்டிருந்தாலும், இடையிடையே ஹாஸ்யச் சுவை வழங்க பபூன் தோன்றுவதில்லையா? அந்த மாதிரி, அங்கே குழுமி நின்ற ஜனங்களின் கோபதாபக் குமுறல் களைச் சாந்தப்ப டுத்துவதற்கென்றே கிளம்பி வந்தாற்போல் ஒரு வேடிக்கைச் சம்பவம் நிகழ்ந்தது. ஒவ்வொரு முறை அந்த லெவல் கிராஸிங் கதவுகள் சாத்தப்படும் போதெல்லாம் வழக்கமாக நடைபெறும் நிகழ்ச்சி தான் அது. அங்குள்ள ஜனங்களில் பலர் அநேகமுறை பார்த்து ரசித்த காட்சியும்கூட. அத்துடன், அந்த ஹாஸ்ய நிகழ்ச்சி, ஒரு நாடோடிப் பிறவியின் வயிற்றுப் போராட்டத்திற்காக நிகழப் பெறுவது என்பதும் அவர்கள் அறிந்த விஷயமே. ஆயினும் அதைத் திரும்பத் திரும்பக் காண்பதிலே அவர்களுக்கோர் அலாதி மகிழ்ச்சி. கால் கடுப்பைப் போக்கிக்கொள்ள அது கண் கண்ட லேகியம். எனவே, எல்லாருடைய கவனமும் ஒருசேரத் திரும்பியது.

சடையும், செம்பட்டையுமாகக் கூடு பின்னிய காய்ந்த நிலை; சிறிய முகம் ; இரும்பு வளையம் கோத்த செவிகள்; வெள்ளை, கறுப்பு, பச்சை, சிவப்பு முதலான வண்ண மணிகள் அணிந்த கழுத்து; சூணாம் வயிற்றுக்குக் கீழே மணி வடத்தாலான அரைஞானில் இறுகித் தொங்கிய கோவணம்; கால்களில் இரும்புக்காப்பு; அழுக்குப் படையால் அட்லாஸ்’ வரைந்து கிடந்த மானிற மேனி – இத்யாதி கோலத்திலிருந்த ஒரு பத்து வயது நரிக்குறவச்சிறுவன் அந்தச் சாலையின் பக்கவாட்டுச் சரிவிலிருந்து பாய்ந்தேறி ஓடி வந்தான்.

கொட்டி வைத்த இடத்திலிருந்து கொண்டு போக வருகிறவன் போல் வெகு அவசரமாக வந்த அவன், அந்தச் சாலையின் இடது புறம் நீண்ட வரிசைபோட்டு நின்று கிடந்த கார்களை நோக்கி விரைந்தான். அவனுடைய இலக்கில் முதலாவதாகச் சிக்கியது ஒரு டாக்சி . அதன் கதவருகில் போய் நின்று காதில் ஒரு கையை வைத்துக் கொண்டு, மறுகையால் உப்பிச்கரந்த சூணாம் வயிற்றைத் தட்டித் தாளமிட்டவாறு பாட ஆரம்பித்தான்.

பாட்டா அது? பத்துப் பதினைந்து சினிமாப் படங்களில் வந்த இருபதுக்கும் மேற்பட்ட பாடல்களின் பல்லவி, அனு பல்லவி, சரணங்களைத் துண்டு துண்டாக நறுக்கியெடுத்து, ஒரு கூட்டுக் கலவையாகத் தொகுத்து நீட்டிய பாடல் ‘ அது! இரண்டு மூன்று வார்த்தைகளுக்கு ஓர் இராகமென மாறி மாறி, மடித்து இணைந்து முடிவற்ற விதமாக நீண்டு செல்லும் ஒரு விசித்திர ‘இராக மாலிகை’ அதில் வரும் வார்த்தைகள் அவனுக்கே உரிய ஓசை நயத்துடன் குறுகியும், விரிந்தும், சிதைந்தும், தனிந்தும் வெளியேறினாலும், அவ்வுருவழிந்த வார்த்தைகளை அவன் தான் எத்தனை லாவகமாக, சரளமாகப் பாடுகிறான்! அந்தக் கதம்ப இசைக் கோலத்தோடு அவனுடைய கால்களும் தாளகதியில் ஆடின! ஆனால், பாட்டின் தாளமும், வயிற்றின் மேல்தட்டும் கைத்தாளமும், தரையில் தடம் புரியும் காலின் தாளமும் ஏழாம் பொருத்தத்தில் இருந்தன!

நரிக்குறவச் சிறுவன் உற்சாகமாகப் பாடிக்கொண்டே ஆடினான். அவனுடைய சினிமாக் கதம்ப இசையைக் கேட்டு அங்கு கால்கடுக்க நின்று ஜனங்களிடையே மகிழ்ச்சிக் கலகலப்பு ஏற்பட்டது. கதவு சாத்திக் கிடக்கும் கவலையை மறந்து, அந்த ‘கலை நிகழ்ச்சியில் தம் கவனத்தைச் செலுத்தினர்.

பையனின் குரல் கம்மிக் கரகரத்தது. பயின்று வைத்திருந்த – பாட்டின் அடிகள் தீர்ந்து போகவே, முடிவை முதலுடன் இணைத்துத் தொடர்ந்து பாடிக்கொண்டே இருந்தான், இடையிடையே. “ஐயா, சாமி! ஒரு பைசா போடு சாமி!” என்று ‘டையலாக்கும் பேசிக்கொண்டான். சாத்திக்கிடக்கும் கதவு திறக்கப்பட்டுவிடுமோ என்ற பரபரப்பும், அது திறக்காமலிருக்க வேண்டுமென்ற ஆதங்கமும் சேர்ந்து அவனுடைய ஆட்டம் பாட்டத்தின் ‘ரிதமைத் துரிதமாக்கின. அவன் கவனம் பாட்டிலோ, ஆட்டத்திலோ லயிக்கவில்லை, டாக்சியில் உட்கார்ந்திருப்பவரையும், அடுத்த காரிலிருப்பவர்களையும், அதற்கப்பாலுள்ள கார்களையுமே மாறி மாறி நோட்டமிட்டுக் கொண்டிருந்தது. அவனது பாட்டை ரசித்துக் கேட்டுக் கொண்டிருக்கும் தரை மகாஜனங்களை அவன் சட்டை செய்யவே இல்லை. அவர்களெல்லாம் தர்மம் செய்வதற்கு லாயக்கற்றவர்கள் என்பது அவனுடைய தீர்மானமோ என்னவோ?

‘டிக் டிக்’ என்று இயங்கிக் கொண்டிருந்த ‘மீட்டர்’ கருவியையும், லெவல் கிராஸிங்கின் சிவப்பு விளக்கையும் கவலையுடன் பார்த்தவாறு, டாக்சியில் அப்படியும் இப்படியுமாக நெளிந்தபடி அமர்ந்திருந்த பிரமுகர் , சட்டென்று திரும்பி, “போடா! சீ, போ! இங்கே மனுஷன் அவஸ்தைப்படறது போறாதுன்னு , இவன் வேற வந்து உயிரை எடுக்கிறான்! இந்தச் சனியன் பிடிச்ச இடத்திலே இது ஒரு தொல்லையாப் போச்சு!” என்று சீறினார்.

பையன் இதை காதில் வாங்கிக் கொண்டானோ இல்லையோ, அடுத்து நின்ற காருக்குப் பாய்ந்து சென்றான். மீண்டும் அதே பாட்டு, அதே ஆட்டம் !

அந்தக் காரில் இரண்டு ஆடவர்களும் ஒரு பெண்மணியும் அமர்ந்திருந்தனர். நரிக்குறவச் சிறுவனின் பாட்டைக் கேட்டு அவர்களுக்குச் சிரிப்பு வந்தது. ஆனால் காரில் அமர்ந்திருக்கும் தாங்கள் அந்தப் பாட்டை ரசிப்பது அகெளரவம் என்று எண்ணியோ என்னவோ, சிரிப்பை அடக்கிக்கொண்டு ஒருவரையொருவர் பார்த்துக் கண் சிமிட்டிக் கொண்டனர். பிறகு அம்மூவரில் ஒருவர் முகத்தில் அருவருப்புக் குறி தோன்ற இடது கையைத் துவள ஆட்டி, ஒண்ணுமில்லே, போடா!” என்று திருவாய் மலர்ந்தருளினார்.

தெற்கிலிருந்து ஒரு மின்சார ரயில் வண்டி ஓடி மறைந்தது. கதவு திறக்கப்படவில்லை . பையன் அடுத்த காருக்குத் தாவினான்.

அந்தப் பழைய மாடல் காரில் உட்கார்ந்திருந்த பழைய மாடல் மனிதரொருவர் பையனின் பாட்டையோ, லெவல் கிராஸிங் விளக்கையோ கவனியாமல், கையில் பிரித்து வைத்திருந்த தினப் பத்திரிக்கையில் ஆழ்ந்திருந்தார். நரிக்குறவச்சிறுவனின் அவியல் பாட்டுத் தொடர்ந்து கொண்டே இருந்தது. அமைதியாகத் தலை நிமிர்ந்து அவர், தமது பெரிய மணிப்பர்சை நிதானமாக திறந்து அதிலிருந்து சில்லறைகளைச் சீய்த்து, ஓர் ஐந்து பைசா நாணயத்தைப் பொறுக்கி எடுத்துக் காரின் ஜன்னல் வழியே தூக்கிப் போட்டார். விலை மதிப்பற்ற நேரத்தை வீணாக்காதவர் போலவும், சந்தர்ப்பக் கோளாறினால் அப்படி வீணாகும் நேரத்தில், இம்மாதிரி ஒரு தர்மம் செய்து அதைப் பயனுள்ளதாக்கிக் கொள்கிற வழக்கமுள்ளவர் போலவும் தோன்றியது அவருடைய இந்த செயல்!

இரையைக் கண்டு பாயும் பருந்தைப் போல் பாய்ந்து குனிந்து பையன், அந்த ஐந்து பைசாவை ஆவலுடன் எடுத்தான். அது நல்ல நாணயம்தானா என்று அவனுக்குச் சந்தேகம். கல்லின் மேல் அதைத் தட்டிப் பார்த்துத் திருப்தியடைந்தவனாய் ஒரு துள்ளுத் துள்ளி நிமிர்ந்து அடுத்த காருக்கு விரைந்தான்.

இந்தச் சமயத்தில், சிவப்பு விளக்க அணைந்து, கிராஸிங்கதவுகள் திறக்கப்பட்டன. சாலையின் இரு முனைகளிலும் தேங்கி நின்ற ஜனப்பிரளயம் எதிரும் புதிருமாக அலைமோதிச் சாய்ந்து ஐக்கியமாகி நகர்ந்தது. ‘ஹே’ என்ற இரைச்சல்! சைக்கிள் மணியொலிகளும், கார் ஹாரன் சப்தங்களும் முடியாமல் கார்களும், பஸ்களும் திக்கித் திணறின. சில கார்கள் ஸ்டார்ட்’ செய்த நிலையிலே உறுமலிட்டபடி நின்று கொண்டிருந்தன. நரிக்குறவச் சிறுவன் முற்றுகையிட்ட காரும் நகர வழியின்றி நின்றது. அது வேண்டுமென்ற பரபரப்புடன், பாட்டையும் ஆட்டத்தையும் துரிதகாலத்தில் ஆரம்பித்தான் பையன்.

புத்தம்புது மெருகுடன், அன்னப் படகுபோல் அழகாக விளங்கிய அந்த நீலநிறக் காரின் கண்ணாடி சன்னல்கள் அனைத்தும் பட்டுத்திரைகளால் மூடப்பெற்றிருந்ததால், உள்ளே உட்கார்ந்திருப்பவர்களைப் பார்க்க முடியவில்லை. ‘டிப் டாப்பாக டிரஸ் பண்ணிக்கொண்டு முன் சீட்டில் அமர்ந்திருந்த டிரைவர் மட்டுமே தெரிந்தான். பையனுக்கு அவசரம் தாங்கவில்லை. தன் முழுத் திறனையும் காட்டத் துவங்கினான் அவன். காரின் ஜன்னல் வழியே கை நீளுகிறதா என்றும் கவனித்துக் கொண்டான். கையும் நீளவில்லை ; திரையும் விலகவில்லை . கார் மெல்ல நகர்ந்தது.

பொறுமையிழந்த பையன் தன் பாட்டையும் ஆட்டத்தையும் நிறுத்திவிட்டு , ‘ஐயோவோசாமி! ஒரு பைசா போடு சாமி!’ கேட்டுக்கொண்டே டிரைவர் இருக்கும் பக்கமாகக் குனிந்து காரின் உள்ளே எட்டிப் பார்த்தான். மறுகணம், அங்கு ஏதோ ஒரு பேரதிசயத்தைக் கண்டு திடுக்கிட்டவன் போல் பின்னால் சாய்ந்தான். அதே சமயம், விருட்டென்று புறப்பட்டு விட்டது கார்.

வியப்பும் திகைப்புமாகப் பிரமித்து நின்ற நரிக்குறவப்பையன், புஷ்பக விமானம் போல் மிதந்து விரையும் அந்த நீலநிறக் காரையே வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தான். காரின் உள்ளே ஒரு நரிக்குறவப் பெண்ணும், அவன் பக்கத்தில் ஓர் அழகிய நவநாகரீக வாலிபனும் அமர்ந்திருப்பது, பின்புறக் கண்ணாடி வட்டத்தின் வழியே மங்கலாகத் தெரிந்தது!

***

“ஏய் – ஹே திண்டிகோடா! அத்ரே, கார் பண்டிலே வண்டி கோடி போய்ரே, போய்ரே!”

சாலையில் வலப்பக்கச் சரிவில் ஓடும் பெரிய சாக்கடை வாய்க்காலுக்கு அப்பால், ரயில்வேக்குச் சொந்தமான ஒரு துண்டு நிலத்தில் முளையடித்துப் போடப்பெற்றிருந்த சிறியதொரு கூடாரத்தில் எதிரில் குத்துகாலிட்டு அமர்ந்து, கிழிந்த அணில் வலையொன்றைக் செப்பனிட்டுக் கொண்டிருந்த ஒரு நரிக்குறவ வாலிபன் மெல்லத் தலை நிமிர்ந்து பார்த்தான்.

“ஏ , திண்டிகோடா! குத்ரே கார்பண்டிலே வண்டிகோடி போய்ரே!” என்று இரு கைகளையும் ஆட்டிக்காட்டி உரத்த குரலில் கூவிக்கொண்டே, தலைதெறிக்க ஓடிவந்தான் அந்தக் குறப்பையன்.

திண்டிகோடா என்று விளிக்கப்பட்ட வாலிபன், கையிலிருந்த வலையைப் போட்டுவிட்டு எழுந்து நின்று, தன் எதிரே ஓடிவரும் பையனை உற்றப் பார்த்தவாறு, “எக்க லபியோ மயிலங்கேளடா?” என்று வினவினான்.

இரைப்பு வாங்க ஓடிவந்த பையன், “தத்ரே, கார் பண்டிலே, வண்டி கோடி போய்ரே!” என்று கண்களை அகல விரித்து, வியப்பும் படபடப்புமான குரலில் கூவினான்.

ஒன்றும் புரியாமல் ஒருகணம் திகைத்து நின்ற திண்டிகோடா, கோபமாக விழிகளை உருட்டிக் ‘கரபுரா’ வார்த்தைகளில் ஏதோ அதட்டிக் கேட்டான்.

மணிலங்கோடா என்ற அந்தச் சிறுவன், மூச்சுத் திணறத் திணற பல்வேறு அபிநயங்களுடன் சரமாரியாகப் பொரிந்து தள்ளினான். அவனுடைய பேச்சில் ‘கார்பண்டி, வண்டிகோடி’ என்று சொற்களே மிகுதியாக அடிபட்டன.

“ஹே, சங்கிலிகொட்டா!” என்று வானத்தை அண்ணாந்து பார்த்துக் கேவிக்கொண்டே தலையைத் தாங்கிப் பிடித்த வண்ணம் தரையில் அப்படியே உட்கார்ந்து விட்டான் திண்டிகோடா…

கூடாரத்திற்குப் பின்னால், குப்பை கூளங்களைப் போட்டு எரியவிட்ட கல்லடுப்பிலே பானைச்சோறு பொங்கிக் கொண்டிருக்க, அதன் எதிரில் காலை நீட்டி உட்கார்ந்த நரிக்குறவ கிழவியொருத்தி, கம்பி இழையை நறுக்கிக் கருகமணிச் சரம் பின்னியவாறு இந்தப் பேச்சுக்களைக் காதில் வாங்கிக் கொண்டிருந்தாள். ஆனால் அவளுடைய கவனம் முழுவதும் அடுப்பில் பொங்கும் அவியல் சோற்றிலும், உருவாகிவரும் கருகமணிச் சரத்திலுமே லயித்திருந்தது.

தலைமேல் கைவைத்து இடிந்து போய் உட்கார்ந்திருந்த திண்டிகோடா சட்டென்று எழுந்து, “ஏ… அம்மாடியோவ்! இத்ரே லபோ !” என்று அந்தக் கிழவியைப் பார்த்துக் கத்தினான்.

கிழக்குறத்தி அவனைத் திரும்பிப் பார்த்தாள். பிறகு சாவதானமாக எழுந்து, பொங்கிக் கொதித்த அவியல் சோற்றை ஒரு துடுப்பால் கிளறிப் பதம் பார்த்துவிட்டுத் தனக்குள் ஏதோ முணுமுணுத்துக்கொண்டே வாலிபக் குறவனை நோக்கி வந்தாள்.

கோபமும் குமுறலுமாக எதிர் சென்ற திண்டிகோடா அந்தக் கிழவியிடம் ஏதோ படபடவெனப் பேசினான். சற்று முன் பையன் வந்து சொன்ன விவரங்களை, அவனிடம் அவன் சொல்லியிருக்க வேண்டும். கிழவியின் முகம் சுண்டிச் சுருங்கியது. “தூ!தூ!” என்று காறித் துப்பினாள். திண்டிகோடா விறைப்பாக வேறு பக்கம் திரும்பி நின்று கொண்டிருந்தான்.

“ஏ, மயிலங்கோடா ! இத்ரே லபோ!” என்று இரைந்து கூப்பிட்டாள் கிழவி.

குப்பையைச் சீய்த்துக் கொண்டிருந்த ஒரு ஜோடி கவுதாரிகளைக் கூண்டில் அடைப்பதற்காக, அவற்றை விரட்டிக் கொண்டிருந்த பையன் ஓடிவந்தான். அவனிடம் கிழவி ஏதோ கேட்டாள். வாலிபக் குறவனிடம் சொன்ன வார்த்தைகளை அவளிடமும் ஒப்பித்தான் பையன். கிழக்குறத்தி மேலும் கிளறிக் கிளறிக் கேள்விகள் தொடுத்தாள். “செப்புத்ரே! செப்புத்ரே!” என்று அதட்டினாள் கிழவி. பையன் தலையைச் சொறிந்து கொண்டு முகத்தைச் சுளித்தான். லெவல் கிராஸிங் கதவுகள் சாத்தப்படுவதற்கு அறிகுறியாக மணிச் சத்தம் கேட்டது. பையன் தன்னிடமிருந்த ஐந்து பைசாவைக் கிழவியின் முகத்திற்கு நேரே சுண்டிப் பிடித்து அவளுக்கு ‘நங்கு’ காட்டிவிட்டு லெவல் கிராஸிங்கை நோக்கி ஓட்டம் பிடித்தான்.

“ஏ, – தண்டிகோடா! இத்ரே ல போ!” என்று புன்முறுவலுடன் விழித்துக்கொண்டே, இடுப்பைப் பிடித்தவாறு வாலிபக்குறவனிடம் சென்றால் கிழவி. அவன் அவளைத் திரும்பிப் பார்க்காமல் எங்கோ வெறித்து நோக்கிக் கொண்டிருந்தான். கிழவி அவன் முகத்தை அண்ணாந்து பார்த்தபடி இதமான குரலில் ஏதோ சொன்னாள். அவள் சொல்வதை மறுப்பவன் போல் வேகமாகத் தலையசைத்து கையை ஆட்டினான் திண்டிகோடா. கிழவி தான் சொன்னதையே திரும்பத் திரும்ப அழுத்திச் சொன்னாள்.

திண்டிகோடா அவளை முறைத்துப் பார்த்தான். பிறகு ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவன் போல் ஆவேசமாகப் பாய்ந்து சென்று கூடாரத்தைப் பிய்த்தெறிந்தான். அதனுள்ளிருந்த தட்டுமுட்டுச் சாமான்களைக் காலால் உதைத்துத் தள்ளினான். “ஏ, திண்டிகோடா! ஏ, திண்டிகோடா!” என்று அலறிக்கொண்டே ஓடிவந்து அவனைத் தடுக்க முயன்றாள் கிழவி. திண்டிகோடா அவளை நெட்டித் தள்ளிவிட்டு, வளைப்படல்களையும் தகரக் குவளைகளையும் மூலைக்கொன்றாய் வீசியெறிந்தான். பிறகு அடுப்பில் பொங்கிக் கொண்டிருந்த சோற்றுப் பானையைத் தூக்கி மடேரென்று தரையில் போட்டு உடைத்தான். அவியல் சோறு நாலா பக்கமும் சிதறித் தெறித்தது.

இதைக் கண்ட கிழவிக்கு உயிரே போவது போலாகிவிட்டது. வாயிலும் வயிற்றிலுமாக லபோ , திகோ’ என்று அடித்துக் கொண்டு ஓடி வந்தவள் , வெறி பிடித்த மாதிரி அந்த வாலிபக் குறவனைப் பிய்த்துப் பிறாண்டினாள். திண்டிகோடாவின் கோபம் உச்சநிலையை அடைந்தது. அவன் அவளைக் கண் மூக்குத் தெரியாமல் அடித்து நொறுக்கினான். புழுதியில் விழுந்து புரண்ட கிழவி , நாய்க்குட்டி போல் ஓலமிட்டுப் புலம்பினாள். மேலும், அவளை அடித்துப் புடைக்க, கீழே கிடந்த ஒரு கம்பை எடுத்துக்கொண்டு பாய்ந்தான் நரிக்குறவன்.

***

“டேய். டேய்! இன்னாடா இங்கே கலாட்டா?” என்று கேட்டுக் கொண்டே , சாக்கடைப் பாலச் சுவரின் மேல் உட்கார்ந்திருந்த ஒருவன் இறங்கி ஓடிவந்தான். அவன் அங்கே நடைபாதையில் கடைவிரித்துப் பழ வியாபாரம் செய்பவன்.

திண்டிகோடா தன் கையிலிருந்த கம்பை வீசியெறிந்து விட்டுத் திரும்பினான். பழக்காரனைக் கண்டதும் அவனுடைய சீற்றம் சிறிதே தணிந்தது.

வேட்டியை உள் வட்டமாக மடித்து இடுப்பின்மேல் விட்டுக்கொண்டு கால்களைப் பின்னி ஒருக்களித்துச் சாய்ந்து நின்றவாறு, பீடியைப் பற்றவைத்துப் பல்லிடுக்கில் கடித்துக் கொண்ட பழக்காரன், “இன்னாடா நடந்துச்சு? எதுக்கு அந்தக் கெய்வியைப் போட்டு இப்படிச் சாத்துரே?” என்று புன்முறுவலுடன் கேட்டான்.

“ஐயோ, சாமி! அந்த அக்குருமையா கேக்கிறே?” என்று இரு கையையும் நீட்டிச் சொல்லிக்கொண்டே வந்த திண்டிகோடா , பழக்காரனின் எதிரில் டப்பெனக் குந்தித் தலையைத் தாங்கிப் பிடித்துக்கொண்டான்.

அவனுடைய நிலையைக் கண்ட பழக்காரனுக்கு உண்மையிலேயே பரிதாபமாகிவிட்டது. திண்டிகோடாவைப் பற்றி அவனுக்கு ஓரளவு தெரியும். மத்தியான வேளைகளில் பழ வியாபாரம் மந்தப்படும் போது, அந்த நரிக்குறவனிடம் தமாஷாகப் பேசிக் கொண்டிருப்பதில் அவனுக்கோர் அலாதிப் பிரியம். அதனால் அவனை பற்றிய சில விவரங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டிருந்தான்.

அந்த நரிக்குறக் குடும்பம் , இந்த லெவல் கிராஸிங் அருகிலுள்ள மைதானத்தில் டேரா போட்டுக்கொண்டு வந்து ஒரு மாதம் தான் ஆகிறது. அந்த இடத்தில் எப்போதும் ஏதாவதொரு குறக்கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். ஒரு கூட்டம் இடம் பெயர்ந்தால், மறுநாளே இன்னொரு கூட்டம் வந்து சேரும். காற்று மழைக்குத் தங்கிக்கொள்ள பக்கத்திலிருக்கும் ரயில்வே ஸ்டேஷன் வசதியாக இருப்பதால், அவர்கள் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தனர்.

சற்றுமுன் அடியும், உதையும் வாங்கிக்கொண்டு, அதோ பூனைக்குட்டி போல் முனகிக் கொண்டிருக்கும் அந்தக் கிழவிதான் திண்டிகோடாவின் தாயார்க்காரி. சிறுவன் மயிலங்கோடா அவனுடைய தம்பி , வண்டிகோடி என்பது அவன் மனைவியின் பெயர். அவளுக்குக் கல்யாணமாகி ஆறு மாசம் தான் ஆகிறது. திண்டிகோடா , திண்டிவனத்தில் பிறந்தவன்; மணிலங்கோடா, மயிலத்தில் பிறந்தவன் ; வண்டிகோடி, விக்கிரவாண்டியில் பிறந்தவள்!…..

“இன்னாடா, கம்முனு இருக்கிறே? எங்கனாச்சும் ‘சல்பேட்டா போட்டுக்கிணு வந்துட்டியா?” என்று குறும்பாகச் சிரித்துக் கேட்டான் பழக்காரன்.

“போ , சாமி! மன்சன் வவுறு பத்தி எரியறான்; நீ இன்னாடாக்கா , தமாஸ் பண்றே?” என்று பெருமிக் குமுறினான் திண்டிகோடா.

“இன்னாடா விசயம்? சும்மா சொல்லுடா. என்கிட்டே?”

“கஸ்மாலம் ! கஸ்மாலம்!” என்று தலையடித்துக் கொண்ட நரிக்குறவன், சடாரென்று எழுந்து, “ஏ, சாமி! என் சமுசாரம் ஓடிப்பிட்டா சாமி, ஓடிப்பிட்டா!” என்று புலம்பலுடன் கூவித் தலையைத் தாங்கிப் பிடித்த வண்ணம் குந்திக் கொண்டான்.

பழக்காரன் இதைக் கேட்டு உற்சாகமடைந்தவனாக பீடியை வேகமாக உறிஞ்சிப் புகையை ஊதிக் கலைத்துவிட்டு, “யாரு , உன் பொஞ்சாதி வண்டிகோடியா?” என்று ரொம்பவும் அக்கறையாகக் கேட்டான்.

திண்டிகோடா வெறுப்புடன் தலையசைத்தான்.

“அட, பாவமே! காலம் பறகூட அவ இங்கதானே இருந்தாள்? நான் கொத்தவால் சாவடிக்குப் போயி, சரக்குப் போட்டுக்கிணு வந்தப்போ பார்த்தேனே?”

“ஆமா, சாமி! அதுக்கப்புறம்தான் தெருமேலே கிளம்பிப் போனாள்.”

“எதுக்கு?”

“ஊசி, மணிவிக்க”

“அப்புறம்?”

“பண்டிமேலே போயிட்டாளாம்?”

“என்னது?”

“கார்பண்டிமேலே போயிட்டா சாமி!”

“ஓ!… ஊர்மேலே போயிட்டாளா?” என்று கெக்கலி கொட்டி நகைத்தான் பழக்காரன்.

திண்டிகோடாவின் கண்கள் சிவந்து பழுத்தன. எரித்து விடுவதுபோல் விழித்துப் பார்த்தான் அவன்.

“ஆமா; இது எப்படிடா உனக்குத் தெரிஞ்சது?” என்று வாழைப்பழத்தை உரிப்பது மாதிரி நைஸாக விசாரித்தான் பழக்காரன்.

“இப்பத்தான் சாமி, என் தம்பிப் பய வந்து சொன்னான்!” “அவனுக்கு எப்படித் தெரிஞ்சுதாம்?”

“ரயில் கேட்டண்டைப் பார்த்தானாம். பெரிய கார்பண்டியிலே குந்திக்கிணு போனாளாம்.”

“தனியா போனாளா? இல்லே…. ஜோடி மேலே போனாளா?

“பக்கத்திலே யாரோ ஒருத்தன் குந்திக்கினு இருந்தானாம் சாமி!” என்று தொண்டையடைக்க, பல்லைக் கரகரவெனக் கடித்துக்கொண்டு சொன்னான் திண்டிகோடா.

“கொறப் பொண்ணு பலே கைகாரிதான் போல இருக்கு!” என்று கடகடவெனச் சிரித்த பழக்காரன், பீடியைப் பாதியில் அணைத்து, செவியிடுக்கில் செருகிக்கொண்டு , ம்…. அவள் மேலே மிஷ்டேக் இல்லே நைனா!” என்றான் அலட்சியமாக. மீண்டும்

அவன் தொடர்ந்து, “ஆமா , அவள் தான் ஓடிப் போயிட்டா; அதுக்கு ஏன் உன்னோட ஆத்தாளைப் போட்டு அடிச்சே?” என்று வினவினான்.

“பின்னே என்ன சாமி? அந்தக் கய்லாத்து இப்படிப் பண்ணிப்பிட்டாளேன்னு இந்தக் கெய்விக்கிட்டே சொன்னா அதை நம்பமாட்டேங்குது. அவளை விசாரிச்சுக்கிட்டு அப்புறம் பேசிக்கலாம்னு சொல்லுது. அந்தக் கய்தே வரதுக்கு முன்னே, எங்கனாச்சும் புறப்பட்டுப் போயிடலாம்னு சொன்னா அதுக்கும் ஒப்புத்து வரமாட்டேங்குது. ஈசாம வருமா இல்லியா சாமி? அதுக்குத்தான் ரெண்டு வாங்கு வாங்கினேன்!” என்று பொங்கிக் குமுறினான் திண்டிகோடா.

“அட, சார்த்தான் போடா! உலகம் போற போக்கிலே அவளும் போயிருக்கிறார். திரும்பி வரப்போ நெறையப் பணம் கொண்டாருவாடா. உன்பாடு லக்குதான் ” என்று கூறி ஒரு கோணல் சிரிப்புச் சிரித்தான் பழக்காரன்.

இதைக்கேட்ட நரிக்குறவன் அடிப்பட்ட வேங்கைப்போல் துள்ளியெழுந்தான். அவன் முகம் பயங்கரமாகக் கறுத்துச் சிறுத்தது. “இன்னா சாமி சொன்னே? எங்க சனங்களைப் பத்தி உனக்கு ஒண்ணும் தெரியாது. நாங்கெல்லாம் சோத்திலே உப்புப் போட்டுத் துண்றவங்க. நேரம் தப்பி வந்தாலுமே பொண்ணுங்களை நாங்க சேத்துக்க மாட்டோம். இந்தக் கஸ்மாலத்தையா சேர்த்துக்குவோம்? எங்க சாதி சனமே அவ மூஞ்சியிலே இனி முய்க்கமாட்டோம் சாமி! தப்பித்தவறி அவளைமட்டும் நான் பார்த்துட்டா… கவ்தாரி கயித்தை முறிக்கிறாப்பலே முறிச்சுப் போட்டுட மாட்டேனோ!” என்று முரட்டுத்தனமாகக் கர்ஜித்தான்.

“இன்னா, பயக்கார! இங்கே கெராக்கி வந்து வந்து போவுது; நீ என்னமோ அந்தக் கொறவன்கிட்டே கோர்ட்டு கச்சேரி நடத்திகினு இருக்கிறியே!” என்று பூக்கடைக்காரி யொருத்தி குரல் கொடுக்கவே, பழக்காரன் சட்டென்று திரும்பி, ”சரிடா , அப்பறமா வந்து நாயம் சொல்றேன்; அந்தக் கெய்வியைப் போட்டு அடிக்காதே!” என்று சொல்லிக்கொண்டே தன் வியாபாரத்தைக் கவனிக்க விரைந்தான்.

திண்டிகோடா மௌனமாக உட்கார்ந்திருந்தான். ஆனால், அவனுடைய மனத்தின் வேக்காட்டை முகம் பிரதிபலித்துக் காட்டிக் கொண்டிருந்தது. சற்று நேரங்கழித்து எதையோ நினைத்துக் கொண்டவன் போல் தன் இடுப்பில் தொங்கிய ஒரு மடக்குக் கத்தியை எடுத்து நீக்கித் தனது இடது கை புஜத்தில், பின்னலிட்ட இரட்டைப் பாம்பு போன்ற சித்திரமாகக் குத்திக் கொண்டிருந்த பச்சைக் குறியைச் சதையோடு சீவியெறிந்தான். அது அவனுக்கும் வண்டிகோடிக்கும் கல்யாணம் நடந்தபோது குத்திய சடங்குப் பச்சை! அதைச் சீவியெறிந்த இடத்தில் இரத்தம் வழிந்தது. பொடிமண்ணை வாரி அந்தக் குருதிக்காயத்தில் அப்பிக்கொண்டு விருட்டென்று எழுந்து போய் , சிதறிக்கிடந்த சாமான்களையெல்லாம் ஒன்று சேர்த்து ஒரு பெரிய கோணிப்பையில் போட்டுக் கட்டுவதில் முனைந்தான்.

அவித்த மரவள்ளிக் கிழங்கைக் கடித்துத் தின்று கொண்டே அங்கு ஓடி வந்தான் சிறுவன் மயிலங்கோடா.. அவனிடம் திண்டிகோடா எதோ சொன்னான். பையன் அதைக் கேட்டு முரண்டு செய்வது போல் தலையசைத்தான். பாய்ந்து வந்த திண்டிகோடா அவன் கன்னத்தில் பளீரென ஓர் அறைவிட்டான். துடித்துப் பதறிய பையன் அழுது கொண்டே போய் கூடாரத் துணியைச் சுற்றிக் கட்டினான்.

அரைமணி நேரத்தில் ‘டேரா’ தூக்கியாகி விட்டது. திண்டிகோடா ஒரு பையைத் தோளில் மாட்டிக்கொண்டு, கட்கத்தில் வலைப்படலும், கையில் கவுதாரிக் கூண்டுமாகக் கிளம்பினான். பையனும், கிழவியும் மற்ற சாமான்களைத் தூக்கிக் கொண்டு, மௌனமாக அவனைப் பின் தொடர்ந்தனர். வியாபார மும்முரத்திலிருந்த பழக்காரன் அவர்களைக் கவனிக்கவில்லை.

சற்று தூரம் சென்ற திண்டிகோடா சட்டென்று நின்று வானத்தை அண்ணாந்து பார்த்து, “ஏ-ஹே, சங்கிலி கொட்டா!” என்று உரக்கக் கூவிக்கொண்டே ஒருபிடி மண்ணை வாரிக் காற்றில் வீசிவிட்டுத் தள்ளாடித் தள்ளாடி மேலே நடக்கலானான்.

வழக்கம்போல் அந்த லெவல் கிராஸிங் கதவுகள் சாத்திக் கிடந்தன. சாலையில் இருமுனை திசைகளிலும் வழக்கம் போல ஜனத்திரள் தேங்கிக் கிடந்தது. வாகனாதிகளும் வரிசை கூட்டி நின்று கொண்டிருந்தன. வெறுப்பும் வேதனையுமாக முணு முணுத்தவாறு சிவப்பு விளக்கின் எதிரில் போய் நின்றான் திண்டிகோடா. அவன் பின்னால் பையனும் , கிழவியும் வந்து நின்றனர். பையன் மயிலங்கோடா அங்கு நின்ற கார்களையெல்லாம் ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

எதிரும் புதிருமாக இரண்டு ரயில் வண்டிகள் ஓடிமறைந்த பின், சாத்திக்கிடந்த கதவுகள் திறக்கப்பட்டன. ஜனங்கள் சாடி மோதிக்கொண்டு சாய்ந்து நகர்ந்தனர். கூட்டம் கலையும் வரை தயங்கி நின்ற திண்டிகோடா ஒரு பெருமூச்சு விட்டபடி சாலையில் இறங்கி நடந்தான்.

பின்னால் வந்த சிறுவன் மயிலங்கோடா திடீரென உரத்த குரலில், “ஏ , திண்டிகோடா! இத்ரே, கார்பண்டிலே, வண்டிகோடி போய்ரே, போய்ரே!” என்று கூவிக்கொண்டே, எதிரே மெள்ள வந்து கொண்டிருந்த நீலநிறக் காரைச் சுட்டிக் காட்டினான.

இதைக் கேட்டு அடங்காச் சினமுற்ற திண்டிகோடா, சடாரென்று குனிந்து, அந்தக் காரினுள் தன் அனல் பார்வையை வீசினான். மறுகணம், தேள் கொட்டியவன் போல் துடித்துப் பின்னால் சரிந்து, கண்களை நிமிண்டிக் கொண்டு பரபரப்புடன் விழித்து நோக்கினான்.

அங்கே, அந்தப் பெரிய காரினுள், ஓர் நரிக்குறத்தி ஒயிலாகச் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். ஆனால், அவள் உண்மையான நரிக்குறத்தி அல்ல; நரிக்குறத்தி போல் ‘மேக்-அப்’ செய்து கொண்டிருந்த ஒரு சினிமா நட்சத்திர நடிகை அவள் ! மத்தியான ஷூட்டிங் முடிந்து, சிற்றுண்டிக்காகத் தன் வீட்டிற்குச் சென்றவள், இப்போது மீண்டும் படப்பிடிப்பிற்காக ஸ்டுடியோவுக்குப் போகிறாள் போலும்! “டோய்! நளினாதேவி போறாடா, நளினாதேவி’ என்ற குரல்கள் ஜனக் கும்பலிடையே இருந்து எழுந்தன. அடுத்த கணம் அந்த கார் குபீரெனக் கிளம்பி, சற்றைக்கெல்லாம் மறைந்தே போய்விட்டது.

பிரமை பிடித்தவன் போல் விக்கித்து நின்றான் திண்டிகோடா.

அதே சமயம், சாலையின் எதிர்த் திசையிலிருந்து, “ஏ….. பச்சைமணி, பாசிமணி, கருகமணி, ராஜாத்திமணி வாங்கலியோ ஆயே!” என்று ஓசையாகக் கூவிக்கொண்டே வெயிலில் வாடிச் சோர்ந்து வந்து கொண்டிருந்தாள் நரிக்குறத்தி வண்டிகோடி.

ஜெகசிற்பியன்

‘ஜீவ்கீதம்’ ‘சொர்க்கத்தின் நிழல்’ போன்ற பிரபலமான நாவல்களின் சொந்தக்காரரான ஜெகசிற்பியன் பிறந்து வளர்ந்தது மயிலாடுதுறை.

நாவலில் அவர் அளித்துள்ள பங்களிப்பைப் போல் சிறுகதையிலும் அவர் முத்திரை பதித்திருக்கிறார். ‘சிறுகதை வரலாறும் வளர்ச்சியும்’ எழுதியவர்கள் இவரை விடுவித்தது தமிழுக்கு உண்மையான வரலாற்றைத் தரவில்லை என்பது நிரூபணமாகிறது. சிறுபத்திரிக்கையில் அவர் அதிகம் எழுதவில்லை , வெகுஜனபத்திரிக்கையில் தான் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள சிறந்த சில கதைகளுள் ‘நரிக்குறத்தி’ குறிப்பிடத்தகுந்தது. இந்தக் கதை ஆனந்தவிகடன் நடத்திய வெள்ளிவிழாப் போட்டியில் (1957) பரிசு பெற்றது.

‘ஊமைக்குயில், சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் தி.ஜ.ர. “ஜெகசிற்பியன் கதைகளில் உள்ளுறையும் ஜீவன் ஒன்று இருக்கிறது. அது நம் உள்ளத்தோடு உறவு கொண்டு விடுகிறது. அதை நாம் எடுத்துரைப்பது சாத்தியம் அல்லது. ஆயினும் பல அம்ச லட்சணங்கள் சேர்ந்த சமுதாய சோபை ஒன்று வெளிப்படப்புலப்படும். அதை நாம் காணமுடியும்….” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜெகசிற்பியனின் படைப்பின் உள்விவகாரங்களை கண்டு கொண்டு தமிழன் பெருமைப்பட முடியாது.

– தஞ்சைச் சிறுகதைகள், தொகுப்புரிமை: சோலை சுந்தரபெருமாள், முதற் பதிப்பு: டிசம்பர் 1999, காவ்யா வெளியீடு, பெங்களூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *