“கடவுளும் இல்லை, ஒண்ணும் இல்லை! எல்லாம் சுத்தப் பொய். நீ என்னடான்னா, நெத்தியில பட்டை பட்டையா விபூதி பூசிக்கிட்டு வந்த தோடில்லாம, கடவுளைப் பத்தி என் கிட்டயே புகழாரம் வேற பாடிக்கிட்டு இருக்கே! போடா போ, நீங்களும் உங்க மூட நம்பிக்கையும்!” – அக்கௌன்டன்ட் ராமசாமியைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னான் கிளார்க் கோவிந்தன்.
“காலங்கார்த்தால இப்படி வாய்க்கு வந்தபடி பேசாதடா! ஹ¨ம்… உன்னை யெல்லாம் அந்தஆண்டவன்தான் மன்னிக்கணும்..!” – தலையில் அடித்துக்கொண்டு சொன்னான் ராமசாமி.
“ஏண்டா, நான் கடவுளே இல்லைங்கறேன்… நீயானா கடவுள்தான் என்னை மன்னிக்கணும்கறே! என்னடா நினைச்சிட்டிருக்கே உன் மனசிலே? கடவுள்னு ஒருத்தர் இருந்தா, என் முன்னாடி வரச் சொல்லு, பார்ப்போம்! அப்ப ஒப்புக்கறேன்… கடவுளாம், கடவுள்! போடா, சரிதான்!” – நக்கலாகப் பேசினான் கோவிந்தன்.
“கடவுள் இருக்கார். நிச்சயம் இருக்கார். இது சத்தியம்! நீ நம்பலேங் கறதுக்காக அவர் இல்லாம போயிட மாட்டார்!” – அடித்துச் சொன்னான் ராமசாமி.
“அப்ப ப்ரூவ் பண்ணு!” – சவால் விட்டான் கோவிந்தன்.
“நீ கடவுள் இல்லேன்னு ப்ரூவ் பண்ணு!’’
‘‘நீதானே கடவுள் உண்டு உண்டுங் கறே! நீதான் ப்ரூவ் பண்ணணும்!”
இவர்கள் இருவரும் இப்படி சவாலுக்கு சவால் விட்டுக்கொண்டு இருக்க,
“கோவிந்தன் சார், ராமசாமி சார்… மேனேஜர் வந்தாச்சு! அது தெரியாம நீங்க ரெண்டு பேரும் பேசி, சளசளன்னு அரட்டை அடிச்சுக்கிட்டு இருந்தா, மெமோ கிமோ கொடுத்துடப் போறாரு… ஜாக்கிரதை!” என்று அட்டெண்டர் பாலு வந்து உஷார் படுத்திவிட்டுப் போனான்.
உடனே இருவரும் கப்சிப் ஆகி, தத்தம் வேலையில் மும்முரமாயினர்.
கண்களும் கைகளும் மனதும் முழுவதும் அவரவர் வேலையில் லயித்தன. அவர்கள் டேபிளில், பாலு கொண்டு வந்து வைத்த டீயைக்கூட இருவரும் கவனிக்கவில்லை.
“சார், ஆறிடப் போகுது, முதல்ல டீயை எடுத்துக்குங்க! இப்படி சின்ஸியரா ஒர்க் பண்றீங்களே சார், என்னத்துக்குனு தெரியலையே! மேனேஜர்தான் ரெண்டு நாள் லீவு ஆச்சே!” – சிரித்துக்கொண்டே சொன்னான் பாலு.
“அடப்பாவி… மேனேஜர் வரலையா? அப்ப ஏண்டா எங்களை ஏமாத்தினே! படுபாவி… உன்னை உதைச்சா என்ன?” – சீறினான் கோவிந்தன்.
“கோவிந்தன் சார், ராமசாமி சார்… மேனேஜர் உள்ளே இருக்கார்னு நான் சொன்னதை நம்பி, பயந்து அரை மணி நேரம் ஒழுங்கா வேலை செஞ்சீங்க. ஆனா, உண்மையில் அவர் உள்ளே இருக்காரா, இல்லையாங்கிறது இப்பவும் உங்களுக்கு நிச்சயமா தெரியாது, இல்லியா? அதே மாதிரிதான் கடவுளும்! கடவுள் இருக்காரா, இல்லையாங்கிற சர்ச்சை முக்கியம் இல்லை. கடவுள் இருக்கார்ங்கற நம்பிக்கையில், பயத்தில் மனிதன் ஒழுங்கா நடப்பான்… நடக்கிறான் இல்லையா? அதுதான் முக்கியம்!”
– பாலு சொல்ல, மறுத்துப் பேச முடிய வில்லை இவர்களால்!
– வெளியான தேதி: 08 ஜனவரி 2006
Great truth told in sinple terms – great creativity