(1963ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கந்தன் ஒரு பெரிய மனிதனல்லன். பாராளுமன்றப் பிரதிநிதியுமல்லன். கடவுளையும் மனிதனையும் இணைத்துக்காட்டும் வைதீகக் குருக்களாக, மதகுரவ ராகக் கூட இல்லை! ஆனால் நான் அவனிலே அளவுக்கு மீறிய மதிப்பு வைத்திருந்தேன். ஏன் தெரியுமா?
அவன் வெள்ளை உள்ளம் படைத்தவன். சாதாரண மான ஒரு சலவைத் தொழிலாளி. அவனுடைய கரம் பட்ட துணி எவ்வளவு தூய்மையாகப் பிரகாசிக்கின் றதோ அந்த அளவு உள்ளத் தூய்மையை நான் அவ னிலே கண்டிருக்கிறேன். சிரித்த முகத்துடனும், பொலிவான தொந்தியுடனும் தோன்றி “எசமான்” என்று அவன் அழைக்கும்போது என் மனது குளிர்ந்து விடும். துண்டுச் சால்வையைத் தோளிற் போட்டுக் கொண்டு சற்று உப்பிப்போன முகத்தைத் திருப்பி “எசமான் வெள்ளிக்கிழமை வருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போவானானால் வெள்ளிக்கிழமை வரத் தவறினாலும் அவன் வரவு தவறாது என்று நிச்சயமாக நாம் நம்பியிருக்கலாம்.
அத்தகைய கடமையுணர்ச்சிமிக்க தூய்மை உள்ளம் படைத்த கந்தனுக்கு ஒருநாள் இருந்தாற்போலிருந்துவிட்டுப் பைத்தியம் பிடித்துக் கொண்டது! அதுவும் “விசித்திரமான” ஒரு நம்பிக்கையினாலேற்பட்ட பைத்தியம். அந்தப் பைத்தியத்திற்கு அந்த விசித்திரமான நம்பிக்கைச் சிதைவுக்குத்தான் ஒருநாள் அவன் தன் ஆருயிரையும் பலிகொடுத்தான். இந்தச் சம்பவத்தை நினைக்க நினைக்க எனக்கே பைத்தியம் பிடித்து விடும் போலிருக்கிறது.
எடுத்தவுடன் எல்லாரையும் நம்பிவிடுகின்ற அபாயம் நம்மிற் பலருக்கில்லாமலிருக்கலாம். ஆனால் என்னைப் போன்ற “பிஞ்சு” எழுத்தாளர்கள் அப்படி யிருக்கமாட்டார்களென்று சொல்ல முடியாது. ஏனென்றால் இந்த “நம்பிக்கைச் சுபாபம்” என்றோ ஒருநாள் எனக்கு நாசத்தைத்தான் தரும். என்று கந்தன் என் னைப் பலமுறை எச்சரித்திருக்கிறான். ஆனால் இறுதி யாகக் கந்தன் எந்த “நம்பிக்கைச் சுபாபத்தை’ எதிர்த்தானே அதே சுபாபத்திற்கு அவன் பலியாக நேர்ந்ததுதான் பரிதாபகரமான வரலாறு.
கந்தன் எந்த விடயத்தையும் எடுத்தவுடன் நம்ப மாட்டான். ஆனால் நம்பிவிட்டானோ பரம்பொருளான பரமசிவனே முன்னாலே குதித்து நின்று உன்னுடைய நம்பிக்கை தப்பானது என்றாலுங்கூட அவன் தனது நம்பிக்கையை விட்டுவிட மாட்டான். அவ்வளவு பிடி வாதக்காரனவன்.
கந்தனுக்கோ, இந்த உலகத்திலே ஆகக் கூடி இரண்டே இரண்டு பேரில் மாத்திரம்தான் அதிக நம்பிக்கை. அந்த இரண்டு பேர்வழிகளில் ஒருவரை நான் மனித உருவத்தில், நடமாடுங் கோலத்தில் கண்டு களித்திருக்கிறேன், அவர் தான் சுப்பையாச் சோதிடர்.
எனக்கு இந்தச் “சோதிடம் கீதிடம்” என்பதிலெல் லாம் அவ்வளவு நம்பிக்கையில்லை. சோம்பேறிகள் வயிற்றுப் பிழைப்புக்காகக் கட்டி வைத்த சுயநல ஏடு கள்தான் “சோதிடக் களஞ்சியங்கள்” என்பது என் வாதம். ஆனால் கந்தனுக்கு அவற்றின் மேலே அபார நம்பிக்கை. ‘சுப்பையாச் சோதிடர் சொன்னாச் சொன் னதுதான். ஒருவார்த்தை பிழையாது” என்பான் கந்தன். “வெறும் பொய், புரட்டு, ஏமாற்றுவேலை’ என்பேன் நான். பார்க்க வேண்டுமே கந்தனுக்கு வரும் கோபத்தை! “எசமான் என்னைப்பற்றி என்ன வேண்டுமானாலுஞ் சொல்லுங்கள்; பரவாயில்லை! ஆனால் சோதிடத்தை, அதன் புனிதத் தன்மையை மட்டும் குறைத்துப் பேசாதீர்கள்! நான் கண்ணாற் கண்ட கடவுள் சுப்பையாச் சோதிடர்தான். அவர் சொன்ன நாளிற்றான் என் மனைவி இறந்தாள். மகளுக்குப் பிள்ளை பிறந்தது. மகனுக்கு வருத்தம் மாறியது. அவர் என் குலதெய்வம்” என்று கூத்தாடுவான் கந் தன். அப்படிப்பட்ட சுப்பையாச் சோதிடர்தான் கந்த னின் அகால மரணத்திற்குக் காரண கருத்தர் என்பது என் விவாதம்!
“இரண்டு ரூபாயைக் கொடுத்து இரண்டு இலட்சம் ரூபாய்களைத் தட்டிக் கொள்ளுங்கள். அதிட்டம் உங் களை அழைக்கிறது. அதன் அரவணைப்பை அலட்சியப் படுத்தி இலட்சக் கணக்கான ரூபாய்களை இழந்துவிடா தீர்கள்”. என்று சந்துபொந்துகளெல்லாம் அரசாங்கச் செலவில் விளம்பரம் செய்த கொழும்புத் திட்டக்காலம் அது. கந்தனுக்கும் ஒரு நப்பாசை! இரண்டு ரூபாய்களைக் கொடுத்து இரண்டு இலட்சம் ரூபாய்களைப் பெறுவதென்றால் யாருக்குத்தான் ஆசை பிறக்காது! “கேவலம் இதற்கா யோசிக்க வேண்டும்? இரண்டு ரூபாய்க் காசுதானே. பேசாமல் விட்டெறிந்துவிட்டு விடலாமா” என்று ஒரு ‘அதிட்டச் சீட்டு’ வாங்கி யோசித்தான் கந்தன்.
ஆனால் ‘சட்’டென்று பிறந்த ஒரு எண்ணம் அவன் யோசனையைச் சிதறடித்து விட்டது. அதிட்டம் இருக்க வேண்டாமா அதிட்டம். வீணாகப் போய் ஏன் காசைக் கொடுக்க வேண்டும்? இரண்டு ரூபாயென் றால் ஏதோ எளிதிற் கிடைத்து விடுகிறதா?” சுப்பையாச் சோதிடர் வீட்டை நோக்கி அவன் கால்கள் வேகமாக நடந்தன. வீட்டு முற்றத்தில் வெற்றிலை பாக்கை மென்று விழுங்கிக்கொண்டே ஒரு கயிற்றுக் கட்டிலில் குந்திக் கொண்டிருந்த சுப்பையாச் சோதிடர் கந்தனைக் கண்டதும் குசலம் விசாரிக்க ஆரம்பித்து விட்டார்.
”ஏனப்பா, நீ இந்த ஊரிலேதானே, இருக்கின்றாய்? எங்கே ஒரு நாளாவது வீட்டுப் பக்கம் வரவேண்டு மென்ற யோசனை உனக்கில்லாமற் போய்விட்டது! கலிகாலமல்லவா, அதிலே நீ என்னை மறந்து போவதும் ஒரு பெரிய தவறா?” நீட்டி முழக்கினார் சுப்பையாச் சோதிடர், “இல்லை எசமான். கொஞ்ச நாளாக சும்மா வண்டிமாடு எனக்கும் உடம்பு சரியில்லை. மாதிரி வயது அறுபதாகியும் உழைத்துக் கொண்டிருப்பதென்றால்…”.
“சரி, சரி உன்பாடும் கஷ்டம் தான்… இங்கு வந்த விசேடம்?” என்று வாயைத் திறந்தார் சுப்பையாச் சோதிடர் – கந்தனின் குலதெய்வம்!
“உங்களை ஒரு சங்கதி கேட்டுச் செய்யலாமென்று, இந்தக் கொழும்புத் திட்டமென்று ஒரு திட்டம் நடத்து கிறார்களாமே, அதிலே இரண்டு ரூபாய் கொடுத்து ஒரு ‘சீட்டு’ எடுத்தால் அதிட்டமும் இருந்தால் இரண்டு இலட்சம் ரூபாய்கள் அடித்து விடுமாமே. அதுதான் என் அதிட்டம் எப்படி என்று உங்களைக் கேட்டுச் செய்யலாம் என்று,”
“சரி, சரி எங்கே உன்கையை இங்கே கொண்டுவா பார்க்கலாம்”.
“அப்பா, பெரியாள் நீ. இந்தச் சித்திரை மாதம் பத்தாம் தேதிக்குள் நிச்சய மாக ஒரு இலட்சாதிபதியாகிவிடுவாய். அப்படியே கையிலே தனரேகை தேர்ச் சக்கரம் மாதிரி அடையா ளம் போட்டுக்கொண்டு கிடக்கிறது. எங்கே அதிட்டம் அடித்ததும் என்னை மறந்துவிடுவாயோ, என்னவோ?”
“மறந்து விடுவதா எசமான்! நான உங்களை மறப் பேன். இல்லை! ஒரு நாளும் மறக்க மாட்டேன்” சுந்தனின் கண்களில் கண்ணீர் சுரந்தது. “எசமான், அப்படியானால் இப்பொழுதே இரண்டு ரூபாயைக் கொடுத்து ஒரு அதிட்டச் சீட்டு எடுத்திடட்டுமா?”
“என்னடா, நான் சொன்ன பிறகுமா, சந்தேகப் படுகிறாய்? சுப்பையாச் சோதிடர் சொன்னாச் சொன் னதுதான். போ, உடனேயே ஒரு ‘சீட்டு’ எடுத்துக் கொள்!”
சமீபத்திலிருந்த அஞ்சல் நிலையத்தை நோக்கிக் குடல் தெறிக்க ஓடினான் கந்தன், அவசரம், அவசர மாக வேட்டித் தலைப்பில் முடித்து வைத்திருந்த காசு இரண்டு ரூபாயையும் அவிழ்த் தெடுத்து ஒரு ‘அதிட்டச் சீட்டு’ வாங்கிக் கொண்டான். இப்பொழுது அவன் மனதிலே ஒரு அமைதி. இரண்டு இலட்சம் ரூபாய்களின் சொந்தக்காரனாகிவிட்ட பேரமைதி. நிம்மதி யான மனதுடன் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.
வாசிகசாலை முழுதும் எள் போட்டால் எள் விழாத அளவுக்குச் சனக்கூட்டம், ஏன் தெரியுமா? அன்று தான் கொழும்புத்திட்ட ‘அதிட்டச் சீட்டு’ எவனோ ஒரு மனிதனுக்கு இரண்டு இலட்சம் ரூபாய்களைச் சொந்தமாக்கும். கந்தனும் கால் கடுக்க வெளியே நின்று கொண்டிருந்தான். என்னவோ முதற் பரிசு மட்டும் தனக்குத்தான் என்ற நம்பிக்கை அவனுக்குத் திட்டமாக இருந்தது. “சுப்பையாச் சோதிடர் சொன் னாற் சொன்னதுதான்” என்று அவன் வாய் முணு முணுத்தது. அவனுக்கெங்கே தெரியப் போகிறது. இந்த அதிட்டச் சீட்டில் இருபது வாங்கி அடுக்கி வைத்துவிட்டுச் சுப்பையாச் சோதிடர் நித்திரை கொள் ளாது வானொலிப் பெட்டிக்கு முன்னால் தவமிருப்பது?
வானொலியின் ‘கர் புர்’ ரென்ற சத்தம் கூடியிருந்த வர்களின் காதுகளைக் குடைந்தெடுத்தது. அந்த ‘அகோர’ உறுமலுக் கிடையில் “இது இலங்கை வானொலி, கொழும்புத் திட்ட அதிட்டச் சீட்டில் வெற்றி பெற்ற இலக்கம் (முதற் பரிசு) ஈ. வை. 0587”.
எல்லோரும் அசடு வழியும் முகங்களுடன் தத்தம் சீட்டுக்களின் எண்களைத் திருப்பித், திருப்பிப் பார்த் தார்கள். ஒருவருக்கும் அந்தப் பரிசு கிடைக்கவில்லை. பாவம், கந்தன் தனது சீட்டின் எண்களைப் பார்த் தான். ஈ.வை.0..5.. 8…!”
“பொய், பொய்! எனக்குத்தான் பரிசு, எனக்குத் தான் பரிசு! சுப்பையாச் சோதிடர் சொன்னாற் சொன் னதுதான். எனக்குத்தான் பரிசு, எனக்குத்தான் பரிசு!… ஆ…ஆ…ஆ… எனக்குத்தான் பரிசு!” ஆவேசக் குரலில் கத்தினான் கந்தன். ‘எங்கே என் பரிசை என்னிடம் கொடுங்கள்’.
கூடியிருந்த மக்களைப் பார்த்துக் கந்தன் கர்ச்சித் தான். சனங்கள் திகைத்துவிட்டனர். “பாவம், திடீரென்று பைத்தியம் பிடித்துக் கொண்டது. வீண் நம்பிக்கைச் சிதைவின் விளைவு” என்று பேசிக் கொண்டனர்.
கந்தன் எதையுமே இலட்சியம் செய்யவில்லை. எனக்குத்தான் பரிசு, எனக்குத்தான் பரிசு” என்று கத்திக் கொண்டே ஓடிக்கொண்டிருந்தான். ‘நம்பிக்கைதான் வாழ்க்கையின் உயிர்நாடி. அந்த நம்பிக்கை – ஆசைக் கனவு என்று கோரமாகச் சிதைகின்றதோ, அன்றைக்கு மனிதன் பேயாக மாறிவிடுகிறான்”. ‘நம்பிக்கைத் தத்துவ”த்தைப்பற்றி விரிவுரை செய்தார். கூட்டத்தில் நின்ற ஒரு படித்த இளைஞர்.
கந்தனைச் சுற்றிப் பல பள்ளிச்சிறுவர்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். அழுக்கடைந்த கந்தல் துணிகளை மூட்டையாக்கித் தோளிற் சுமந்து கொண்டிருந்த கந்தன் அவர்களைப் பார்த்துப் பயங்கரமாகச் சிரித்தான்.
“எனக்குத்தான் பரிசு…”
“பைத்தியம் பரிசு கேட்கிறது” பள்ளிச் சிறுவர்கள் “கல, கல” வென்று சிரித்தார்கள்.
“முட்டாள்கள், இதோ நான் பரிசு வாங்கத்தான் போகிறேன். வாங்கிவந்தபிறகு மட்டும் என்னைப் பார்த்துச் சிரிக்கக்கூடாது! என்ன.”
கந்தன் தெளிவான குரலில் அந்தச் சிறுவர்களைப் பார்த்துப் பேசினான். “எங்கே வாங்கிவா பார்க்கலாம்!” பள்ளிச் சிறுவர்கள் எல்லோரும் ஏகோபித்த குரலில் கத்தினார்கள்.
“இதோ வாங்கி வருகிறேன்…’ ‘தொபுக்…’ கென்ற பலத்த சத்தம்! “ஐயோ, பைத்தியம் கிணற்றுக்குள் குதித்துவிட்டது” என்று கத்திக்கொண்டு ஓடினார்கள், பள்ளிச் சிறுவர்கள், அப்புறமென்ன…!
அந்தத் தூய மனம், படைத்த கந்தன் பைத்தியகாரக் கந்தனாகிக் கிணற்றுக்குள் குதித்துச் செத்துப் போனான் என்று எழுத வேண்டுமா?
– வாழ்வு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1963, தமிழ்க்குரல் பதிப்பகம், ஏழாலை வடக்கு, சுன்னாகம் (இலங்கை).