ஒரு நாய்க்காக கவலைப்படுகிறவன்; யாராவது இந்த உலகத்தில் இருப்பானா? இருப்பான். யார் அந்தப் பெரிய மனிசன்? நான்தான்.. (பெரிய மனிசன்;. வயது ஐம்பத்தாறு. ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்;..) எனது கதைக்குப் பிறகு வரலாம். இப்பொழுது இந்த நாயைப் பற்றி! அதாவது இந்த வீட்டில் அடியும் உதையும் பட்டுக்கொண்டு தனது வாழ்க்கைக்காகப் போராடிக்கொண்டிருக்கிறதே.. அந்த அற்ப சீவனைப் பற்றி.
இந்த நாயைக் குட்டியாக வீட்டிற்குக் கொண்டுவந்ததே நான்தான். அதை நான் கொண்டுவந்து சேர்த்தபொழுது பார்க்கவேண்டுமே! வெள்ளையாக நல்ல சடைக்குட்டி. பார்த்தால்… அப்படியே தூக்கிக்கொள்ள வேண்டும் போலிருக்கும். பிள்ளைகள் (எனது மருமக்கள்) ஒருவர் மாறி ஒருவராக அதைத் தாலாட்டுவார்கள். இரவில் அவர்களின் கட்டிலில் ஏறி அது சொகுசாக உறங்கும். அவ்வளவு செல்லமாக வளர்ந்த குட்டி. இப்பொழுது பாவம். உடுக்கத் துணிகூட இல்லாத ஒரு வறிய நோயாளியைப்போலப் படுத்திருக்கிறது. படுத்திருகிறதா? ஏதோ சத்தம்… ஓ! நாய்தான் குளறுகிறது. நன்றாக வேண்டிக்கட்டியிருக்கும். அதுதான் இந்தக் கத்தல் போடுகிறது.
‘உஞ்சு! உஞ்சு!”
கூப்பிட்டதும் ஒழுங்கான பிள்ளையைப்போல ஓடிவந்து கட்டிலின் கீழ் சுருண்டு படுத்துவிடுகிறது. சாப்பாட்டு நேரமன்றால் இப்படித்தான்.. அவர்களது வாயைப் பார்த்து வீணீர் வடித்துக்கொண்டிருக்கும். பிறகு என்ன? விறகுக்கட்டையால் குடுத்திருப்பார்கள். தொண்டை கிழியக் கத்தல் போட்டுவிட்டு தலையைப் பதித்து வாலை ஆட்டி மன்னிப்புக் கோரியவாறு அங்கேயே படுத்திருக்கும். (வெட்கம் கெட்ட ஜென்மம்) ஆனால் அது மன்னிக்க முடியாத குற்றமாயிற்றே? பாத்திரத்தில் தண்ணீரைக் கொண்டுவந்து முகத்தில் ஊற்றியிருப்பார்கள்.. அல்லது நெருப்புக்கொள்ளியால் குறி வைத்திருப்பார்கள். இது ஒரு காலைத் தூக்கி நொண்டியவாறே எனக்குக் கிட்ட ஓடிவரும் – முறைப்பாடு. நான் அதன்தலையைத் தடவிக்கொடுப்பேன். ஆறுதல் சொன்னதும் அப்படியே கட்டிலின் கிழ் படுத்துவிடும். சிலவேளைகளில் அடிபடுமுன்னரே இது காலைத் தூக்கிக்கொண்டு சாலத்துக்கு ஓடிவருவதைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும். சிறுவயதிலே படித்த ஷஒரு நாயின் சுயசரிதை!| நினைவிற்கு வருகிறது. (கவனியுங்கள்… படித்திருக்கிறேன்!)
படிப்பென்றால் ஐயாவுக்குத் தண்ணி பட்டபாடு! அப்பொழுது பள்ளிக்கூடத்தையும் எங்கள் ஊரையும் ஒரு கலக்குக் கலக்கியவன் நான். ஆனால் கலக்கத் தெரிந்தவர்களுக்குக் கதியில்லைப்போலும். எனது கல்வியைத் தொடரும் வாய்ப்பில்லாமல் அப்பு தலையைப் போட்ட சங்கதி அடுத்து வருகிறது.
அப்பு பிள்ளைகளைப் பெற்றுப் போட்;;;டார். பொருள் பண்டத்தை சேமித்து வைக்கவில்லை. ஐந்து பெண்களைப் பெற்றால்; அரசனும் ஆண்டியாவானாம். எங்கள் தரவளிக்கு இரண்டு போதாதா? அப்புவுக்கு ஆண்டியாகிற பலன் கிடைக்கவில்லை. ஒருநாள் இருளப்போகிற நேரத்தில் கண்களை மூடினார். தங்கைகளின் ஒப்பாரி.. எங்களையெல்லாம் தவிக்க விட்டுவிட்டுப் போட்டீங்களே!. (ஒரு சந்தேகம்; – எங்கள் என்பதில் சுயநலம் தொனிக்கிறதோ!) மூத்தவன் நான் இருக்கிறேன் மலையைப் போல. தவிக்கவிடலாமா? என் சகோதர பாக்கியங்களை ஒவ்வொருத்தனின் கையில் பிடித்துக் கொடுத்துவிட்டுத்தான் எனது பாட்டைப் பார்ப்பதென்று அன்றைக்குச் சபதமெடுத்துக் கொண்டேன். (மகன் தந்தைக்காற்றும் உதவி!)
வேலை தேடும் படலம் என ஒரு தேவையில்லாமலற் போய்விட்டது. எங்கள் நிலைக்கு இரங்கிய தந்தையின் நண்பரொருவர் தனது கடைகளில் கணக்கு எழுதுகிற வேலையைத் தந்தார். பிறகுதான் தெரிந்தது… அது அவரது வருமானத்தைப் பற்றி ஷகணக்கு விடுகிற| வேலை என்று! ஆனால் எனது வருமானத்துக்கு அவர் கணக்கு விடத் தொடங்கினார். அந்த வேலையில் இருந்துகொண்டே அரச வெற்றிடங்கள் பலவற்றிற்கு விண்ணப்பித்து காலப்போக்கில் ஓர் அரசாங்க லிகிதராக மாறிவிட்டேன்.
சகோதரிகளுக்கு மாப்பிள்ளை தேடும் படலத்தில் இறங்கி.. செருப்புத்தேய அலைந்து இரண்டு திருமணங்களையும் ஒப்பேற்றியபொழுது எனது கைகளும் மடியும் வறண்டுவிட்டன. சீர் கொடுத்ததில் கடன்பளு வேறு. வாழ்க்கையின் மிகுதி உழைப்பபெல்லாம் அதைச் சீர் செய்யத்தான் சரிவரும்போலிருந்தது. எனது திருமணத்தை நிச்சயிக்கப் பெரியோர்கள் இல்லாத புண்ணியத்தினாலும் பருவம் கடந்துவிட்ட காரணத்தினாலும் பிரமச்சாரியாகவே வாழ்க்கையைத் தொடரலாம் என முடிவு செய்தேன்.
மீண்டும் நாயின் குளறல். ரோசம் கெட்ட சவம். எப்படி வேண்டிக்கட்டினாலும் புத்தி வராது. நான் கூப்பிட்டபொழுது வந்து கட்டிலின் கீழ் படுத்துவிட்டு எனக்குத் தெரியாமலே நழுவிப்போயிருக்கிறது. மனசு கேட்கவில்லை. ‘உஞ்சு! உஞ்சு” – என்ன இருந்தாலும் அதற்கு நான்தானே துணை! (அல்லது எனக்கு அது துணையோ?)
‘மாமாவின்ரை பிறண்ட்தானே? அதுதான் அதுக்கு அடிச்சவுடனை அவருக்குக் கோபம் வருகுது…ஆவாவென்று கூப்பிடுகிறார்;.” – குசினியிலிருந்து வெளிப்படுகின்ற குரலையடுத்து கலகலச் சிரிப்புகள். மருமக்களின் கேலிப்பேச்சு. நக்கல்;;| எனக்கா அல்லது நாய்க்கா என்று புரியவில்லை. அது வாழ்ந்த வாழ்வுக்கு இப்படியும் ஒரு நிலை என எழுதப்பட்டிருக்கிறது போலும்! ஊருக்கு அதுதான் ராஐh! சண்டித்தனமாக ஊர்மேயப் போகும். சாப்பாட்டு நேரத்துக்கே வீட்டுக்கு வருவது அருமை. அதற்கு ஊரெல்லாம் சாப்பாடு இருந்தது;. இப்பொழுது பாவம்.. கிழடு தட்டிவிட்டது. அதனாலோ என்னவோ காது கேட்பதும் குறைவு. எத்தனை தரம் கூப்பிட்டு விட்டேன். ‘உஞ்சு! உஞ்சு!” அது அசைந்தால்தானே? அதற்குள்ளே சனியன் பிடித்த இருமல் வந்து என்னைப் பிடித்துக்கொண்டது. இருமல் பிடித்தால் ஒரு முடிவே இல்லை. நெஞ்சும் தொண்டையும் வலியெடுக்கின்றன. படுக்கையிலே எழுந்திருந்து நெஞ்சைப் பலமாக அழுத்திப் பார்த்தாலும் சுகமில்லை. இருமலை நிறுத்தும் முயற்சியாகக் காறல் எடுத்துத் துப்பினேன். எனது சகோதர பாக்கியத்துக்குப் பிடிக்கவில்லை. ‘அண்ணை உதென்ன வேலே செய்யிறாய்? பிள்ளையள் பிளங்கிற இடத்திலை சும்மா துப்பாதை!” (அண்ணை| என அழைத்ததே பெரிய காரியம் எனத் திருப்தியடைந்தேன்… அது இது| என அஃறிணையிற்தான் என்னைக் குறிப்பிடுவது வழக்கம்.
தொண்டையைக் கொஞ்சம் நனைத்தால் சரிவரும் போலிருந்தது. சுடுதண்ணீர் குடித்தால் நல்லது. எனக்காக அந்த அளவுக்குக் கரிசனைப்பட யார் இருக்கிறார்கள்? பச்சைத்தண்ணீராவது குடிக்கலாமென்ற நினைவில் விறாந்தையில் விளையாடிக்கொண்டிருந்த தங்கச்சியின் கடைக்குட்டியைக் கேட்டேன்.
‘தம்பி ராசா…இஞ்சை வாணை…! உனக்குப் புண்ணியம் கிடைக்கும் …இந்தப் பேணியிலை கொஞ்சம் தண்ணி எடுத்தாணை..!” என ஆதரவாகக் கேட்டவாறே எனது பேணியை நீட்டினேன். (எனக்கென ஒரு மூக்குப்பேணி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு பணிவன்போடு கதைத்தாற்றான் எனது கோரிக்கைகளுக்குத் தற்செயலான செவிசாய்ப்பாவது இருக்கும். அதை எனது அனுபவத்திற் கண்டிருக்கிறேன். ஆனால் இப்போது அந்த அதிசயமும் நடக்கவில்லை. அவன் துள்ளிக்கொண்டு எழுந்து தனது உடலை முதுகுப்பக்கமாக எனக்குத் திருப்பி ஷருவிஸ்ட்| ஆடுவதுபோல ஒரு நெளிப்புக் காட்டிவிட்டு ஓடினான். இனி இப்படித்தான் போவோர் வருவோரை எல்லாம் இரந்து இரந்து வரம் கிடைக்கும்வரை காத்திருக்க வேண்டும்.)
என்னைக் கண்டதும் ஷமாமா| என வாய் நிறைய அழைத்துக்கொண்டு வருகின்ற குழந்தைகளா இவர்கள்? முன்னர் அப்படி ஒரு நடப்பு இருந்தது. அலுவலகம்;.. நண்பர் குழாம்.. அறைவாழ்க்கை.. சாப்பாட்டுக்கடை என வீடுவாசலின்றிச் சுற்றித் திரிந்தாலும் இடைக்கிடை ஒரு மாறுதலுக்காக இங்குதான் வருவேன்;. எனது மற்ற தங்கைக்குப் பிள்ளைகள் இல்லை. அதனாலோ அல்லது அவளது அந்தக் கவலையைத் தாங்கமுடியாமலோ நான் அங்கு செல்வது குறைவு. குழந்தைகள் என்றால் எனக்கு உயிர். எனது சகல பிரச்சினைகளையும் கவலைகளையும் மறக்கடித்து மகிழ்விக்கிற சக்தி இந்தப் பிள்ளைகளின் சிரிப்புக்கு இருந்தது. வருகின்றபொழுது விளையாட்டுப் பொருட்கள் தின்பண்டங்கள் என அள்ளிக்கொண்டு வருவேன். அவர்களோடு நானும் ஒரு குழந்தயாகிவிடுவேன்.
தங்கச்சிக்கு நான் தேடிவைத்த மாப்பிள்ளையின் உத்தியோகம் பெரிய வருமானம் இல்லாதது. பிள்ளை குட்டிகளோடு அவர்கள் படுகிற க~;டத்தைக் காண மனது பொறுக்காமல் அவ்வப்போது பணமாகவும் உதவியிருக்கிறேன். பிள்ளைகளில் இருந்து பெரியவர்கள் வரை என்மேல் உயிரையே வைத்திருந்த இரகசியங்கள் இவைதானா?
அப்போது மாப்பிள்ளைக்கு என்மேல் அலாதிப் பற்று இருந்தது.. ‘ஷகொண்ணருக்குச் சாப்பாடு குடுத்தனியோ? அந்தாள் பாவம்! தனிக்கட்டை. நாங்கள்தான் ஒரு குறையுமில்லாமல் பார்க்கவேணும்.” இந்தக் கரிசனை வார்த்தைகளெல்லாம் என் காது படும்பொழுது எப்படி மனசு குளிர்ந்துபோகும்! இப்பொழுது.. இந்தாளுக்கு மதியில்லையோ…? சுருட்டைக் குடிச்சு குடிச்சு இருந்த இடத்திலேயே துப்பி வைக்குது… பிள்ளையள் பிளங்கிற இடம்.”
யெஸ்…டடி…! மாமாவாலை பெரிய கரைச்சல்தான்… என்னட்டை வாற பிரண்ட்ஸெல்லாம் கேக்கிறாங்க… அந்த மனிசன் ஆர் என்று. எப்படிச் சமாளிக்கிறதென்றே தெரியல்லை… இப்பிடிக் கிளீன் இல்லாமல் குப்பை மாதிரிக் கிடந்தால் எங்களுக்குத்தானே வெக்கம்?||
நான் தூக்கி வளர்த்த குழந்தை… என் நெஞ்சில் கால்களைப் பதித்து வளர்ந்த பெண்.. பெற்றோருடைய மூத்த குமாரி சொல்கிறது! இப்படி வார்த்தைகளால் நெஞ்சில் அடிக்கிற வலி இயற்கையாக நெஞ்சைப் பிய்த்துக்கொண்டு வருகிற இருமலைவிட மோசமானது.
குளித்து முழுகி துப்புரவாக இருக்கவேண்டுமென்ற விருப்பம் எனக்கு இல்லையா? மாற்றி உடுக்கத் துணிகள் வேண்டுமே? குளிர் நீரிற்கு உடல் இடம் தர மறுக்கிறது. நோய் முற்றினால் மருந்து வேண்டித்தரவும் கவனிக்கவும் மனுசரில்லை. இருமல் வரும்பொழுது ஒதுக்காகப் போய்த் துப்பலாமென்றால் இருந்த இடத்தைவிட்டு எழுந்து நடப்பதே கொல்லக் கொண்டுபோவது போலிருக்கிறது.
போதாக்குறைக்கு அந்தக் குட்டை நாயையும் கூப்பிட்டுத் தன்னோடை வச்சிருக்கு. எப்படிச் சொல்லியும் அது|க்குப் புத்தி வருகுதில்லை.|| என் சகோதர பாக்கியத்தின் கொமென்ற் அது.
‘என்ன சவத்துக்கு வந்து இஞ்சை கிடந்து இழுபடுகுது… எங்கையாவது கோயில்லை… மடங்களிலை… போய்க் கிடக்கவேண்டியதுதானே…|| இது அவர்.
‘டடி …ஒன்று செய்தாலென்ன…? வீட்டுக்குப் பின்பக்கமாய் மாமாவுக்கு ஒரு கொட்டில் போட்டுக் குடுத்தால் …நாயும் அவரோடை போயிடும்தானே?.
“அது நல்ல யோசினைதான்!||
நாயின் அவலமான அலறல் கேட்கிறது. அப்பிடியும் நடந்துவிடுமோ? பிரோரணைக்கு முன்னறிவித்தல் கொடுக்கப்பட்டுவிட்டது. இனி.. ஏகமனதாக நிறைவேற்றியும் விடுவார்கள். எனது பிரச்சினையில் கரிசனைப்படாமல் அவர்கள் எல்லோருமே கையை உயர்த்துவதற்குத் தயார்தான். என் மூலம் அவர்களது வாழ்க்கை வளம் பெற்றது என்பதை எங்கே நினைத்துப் பார்க்கப் போகிறார்கள்? பெரும்பான்மையான மனித சுபாவம்! இப்பொழுது நான் படுத்திருக்கும் உள் விறாந்தையிலே இரவில் பனித்தொல்லை தாங்கமுடியாது க~;டப்படுகிறேன். கோடியிலே ஒரு கொட்டிலென்றால் எப்படி இருக்கும்? நாலு பக்கமும் அடைப்புகள் இல்லாத ஒரு கூடாரமாக இருக்குமோ? எப்படியாவது போகட்டும். அந்தப் பிரச்சினையை இப்போதைக்கு விடுவோம்.
ஒரு வி~யம்! என்னைப் பற்றிய பிரச்சினைகளை ஓரளவு எனக்குக் கேட்கக்கூடியதாக அவர்கள் கதைப்பதிலிருந்து அதைக் கேட்டென்றாலும் எங்கேயாவது போய்த்தொலையட்டும் எனக் கருதுகிறார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது. அல்லது எல்லாவற்றையுமே இப்படிக் கரவாக நினைப்பது ‘நான் தனிமனிதன்’ என்ற தாழ்வு மனப்பான்மையினாலோ? எப்படியாயினும் மற்றவர்களுக்குத் தொல்லை கொடுக்காமல் வீட்டை விட்டுப் போய்விடுவதுதான் சரி என முடிவு கட்டினேன்.
பிள்ளைகள் பாடசாலைக்குச் சென்ற பின்னர்.. கோயிலுக்குப் போய்வருவதாகத் தங்கச்சியிடம் கூறிவிட்டு எனது கைத்தடியைத் துணைக்கு எடுத்துக்கொண்டு நடக்கத்தொடங்கினேன். நாய் வாசல்வரை வந்து ஊழையிட்டு அழுதது. கொஞ்சத்தூரம் பாதையிலும் ஓடிவந்தது. பிறகு அது போய்விட்டது!
கோயில் வாசலில் இரண்டுநாட்கள் தவம். வயிற்றுப்பாட்டுக்காக மற்றவனிடம் கை நீட்டவேண்டிய நிலை இங்கும் இருந்தது. ஆனால் இது வீட்டு நிலைமையை விடக் கேவலம். போகிறவனெல்லாம் ஒரு மாதிரியாகப் பார்க்கிறான். ஷஷஇந்த ஆளுக்கு என்ன குறை…? உழைத்துச் சாப்பிட முடியாதா…? கொள்ளையா பிடிச்சிட்டுது?|| நியாயமான கேள்வி! எனது உருப்படியைப் பார்த்தால் யாரும் அப்படித்தான் சொல்லுவான்.
மனதிலே தனிமையின் பயம் படிப்படியாக படபடக்கத் தொடங்கியது. வீட்டிலிருந்து யாராவது தேடிவந்து திரும்பக் கூட்டிப் போகமாட்டார்களா என ஏக்கமாயிருந்தது. இதற்குள்ளே ஒரு காணக்கிடைக்காத அற்புதக் காட்சியும் கிடைத்தது.
ஒரு வயோதிபத் தம்பதி கோயிலுக்கு வந்திருந்தனர். கோயில் சந்நிதானத்தில் சடுதியாக அந்த ஆளுக்கு மார்புவலி வந்துவிட்டது. நெஞ்சைப் பிடித்துக்கொண்டு நிலத்தில் விழுந்துவிட்டான். அந்த நேரத்தில் உதவிக்கு யாருமில்லை. கிழவி பட்டுவிட்ட பாட்டைப் பார்க்க வேண்டுமே! செய்வதறியாத திகைப்பு.. தவிப்பு. கணவனைத் தனது மடியிலே தூக்கி அணைத்து மார்பை வருடத்தொடங்கினாள். அவளது கண்ணீர் அவனது உயிரை மீட்டுக்கொண்டிருந்தது. என்ன அற்புதம்!
எனது நெஞ்சு நிறைந்துவிட்டது. ஒரு மனிதனுக்கு இதுதான் வேண்டும். நான் விட்ட மாபெரும் தவறு மனதிலே பட்டது. ஒரு துணையைத் தேடாமல் விட்டுவிட்டேனே! அதற்கு ஈடான ஆதரவு வேறு எங்கே இருக்கிறது? காலம் கடந்துதானே எனக்கும் இந்த ஞானம் பிறந்திருக்கிறது. ஒருவருக்கு ஒருவர் துணையாக வாழ்வதற்கு ஒன்றில் ஒன்று தங்கியிருக்கும் இயல்புள்ள இரண்டு உள்ளங்கள் தேவைப்படுகிறது. இப்பொழுது எனது வயது ஒரு பிரச்சினையல்ல. பெண்ணைத் தரப்போகிறவர்களுக்கும் அது ஒரு பிரச்சினையாக இருக்காது. நான் ஒரு உத்தியோகக்காரனாக இருந்திருந்தால்! மூன்று வருடங்கஞக்கு முன்னராவது இந்த எண்ணம் தோன்றியிருந்தால் எனது உத்தியோகத்தைக் காட்டியே கலியாணச் சந்தையில் ஒரு கலக்குக் கலக்கியிருப்னே;! உடல் ஒத்துழைக்காத காரணத்துக்காக அப்பொழுது வேலையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதுதான் நான் செய்த மடத்தனம். இனிக் கவலைப்பட்டும் என்ன பயன்?
என்னைப் புறக்கணிப்பதுபோலத் தோன்றிய தங்கச்சியின் செய்கைகளும் இப்பொழுது அவ்வளவு பாரதூரமானதாகத் தெரியவில்லை. அவளால் அப்படித்தான் இருக்கமுடியும். அவளுக்கு அவள் கணவனும் குழந்தைதைகளும்தானே உலகம்? இப்படி யாரும் இல்லாத இடத்தில் இருப்பதைவிட வீட்டிலே போய் ஏச்சுப் பேச்சுக்களைப் பொருட்படுத்தாமல் எப்படியாவது கிடப்பது மேல் எனத் தோன்றியது.
மீண்டும் பழைய குருடனாகக் கதவைத் திறந்துகொண்டு வீட்டுக்குள் நுழைந்தேன். முதலில் வரவேற்றது நாய்தான்! அதன் மகிழ்ச்சி! ஏதோ பல நாட்களுக்குப் பின் தூரப்பயணத்தால் வந்தவனை வரவேற்கிற குதூகலம். வாலை ஆட்டித் துள்ளித் துள்ளி உடலில் பாய்ந்து கால்களால் தடவி ஊழையிட்டது. அழுது அழுது வீட்டுக்குள் அழைத்துவந்தது. ஷஷஎங்கையண்ணை ரெண்டு நாட்களாய் போயிருந்தனீ..?” என் தங்கச்சி கேட்டாள். அதுகூட மாதாமாதம் பென்சனாக எனக்குக் கிடைக்கிற சொற்ப தொகையைக் கருத்திற் கொண்ட கரிசனையோ?
கட்டிலில் விழுந்தேன். நாயும் பக்கத்தில் சுருண்டு படுத்துக்கொண்டது. சில நாட்களுக்குள்ளேயே பழைய பிரச்சினை தொடங்கியது. தூது வந்தது மூத்த மருமகள். ஆதரவான சிரிப்பு. ‘மாமா. ஒன்று சொல்லுறன் கோபிக்காதையுங்கோ… இந்த நாயை எப்பிடிக் கலைச்சாலும் போகுதே இல்லை… உங்களை விடமாட்டன் எண்டு நிக்குது… நீங்கள் படுத்திருக்கிறபடியாத்தான் நெடுகலும் விறாந்தைக்கு வருகுது. என்ரை பிரண்ட்ஸ் வாற நேரமெல்லாம்… எனக்கு வெக்கமாயிருக்கு… ஆனபடியால் மாமா… கோபிக்காதையுங்கோ.. நாளையிலையிருந்து… கோடிப்பக்கம் ஒரு கொட்டில் போட்டிருக்கிறம்… அதிலை போய்ப் படுங்கோ!||
‘சரியம்மா…! என்னாலை உங்களுக்குத் தொல்லை வேண்டாம். நான் போறன்!|| என்று மாத்திரம் சொன்னேன் அழாக்குறையாக.
‘இல்லை மாமா…! உங்களுக்காக இல்லை… இந்த நாய்க்காகத்தான்…”
இரவு முழுவதும் உறக்கமே இல்லை. இந்த இடத்தை விட்டுப் போவது பெரிய கவலையாக இருந்தது.
இப்படி விறாந்தையில் கிடந்தால் பிள்ளைகளின் துடியாட்டங்களைப் பார்த்துக்கொண்டே ஷபிராக்காக’க் கிடக்கலாம். கோடிக்குப் போய்விட்டால் ஒரே தனிமைதானே? இப்பொழுது இருக்கிற ஓரளவு கவனிப்பாவது அற்றுப்போய்விடுமோ என்னவோ?
காலைச்சாப்பாட்டு நேரம் முடிந்த பின்னர் பிள்ளைகளுக்கும் விடுமுறை நாளாதலால் எல்லோருமாகச் சேர்ந்து எங்களை அப்புறப்படுத்துகிற பணியில் இறங்கினார்கள். முதலில் எனது பழைய கட்டிலைக் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். இதற்குள் ஷஷஎங்கை நாயின்ரை சிலமனைக் காணயில்லை?|| என்ற பேச்சும் அடிபட்டது. உண்மைதான்.. காலையிலிருந்தே நாயைக் காணவில்லை! எங்கேயாவது ஓடியிருக்குமோ?
என்னை இறக்கித் திண்ணையில் இருக்கச் சொல்லிவிட்டு கட்டிலைத் தூக்கினார்கள். அங்கே.. அது பாவம் செத்துப்போய்க் கிடக்கிறது!
அப்பாடா தொல்லைவிட்டது போ!
பாருங்கள்.. இதுதான் மனிச மனம்! நாய் செத்துப்போய்க் கிடப்பதைக் கண்டதும் தோன்றிய இரக்கத்தையும் மீறிக்கொண்டு ஒரு நிம்மதி தோன்றியதே. அது இனி என்னை அப்புறப்படுத்தமாட்டார்கள் என்ற சந்தோ~ம்தான். இந்தப் புத்தி மனிசனுக்கு இல்லாமல் வேறு எதற்கு வரும்?
எப்படியாயினும் கோடிக்குப் போகவேண்டிய அவசியம் இல்லாமற் போய்விட்டதே – அது பெரிய காரியம்தான் என்று எண்ணினேன். ஆனால் அதுகூட தப்புக் கணக்காகப் போய்விட்டது. நாயின் சடலத்தை அப்புறப்படுத்தப் போகிறார்கள் என நினைத்தேன். அதற்கு முதலே எனது கயிற்றுக் கட்டிலைத் தூக்கிக்கொண்டு கோடிப்பக்கமாகப் போகிறார்கள்! அடுத்தது நிச்சயமாக நானாகத்தான் இருக்கும்.
– சிரித்திரன் சஞ்சிகையிற் பிரசுரமானது – 1979