“நல்ல ஊரு சார். இங்க வேல செய்றவங்க எல்லாருமே நல்ல மாதிரியான ஆளுங்கதான். நல்லா கோஆப்ரேட் பண்ணுவாங்க. கட்சிக்காரங்க, அரசியல்வாதி, உள்ளூர்க்காரங்கன்னு யாரும் ஸ்கூலுக்குள்ளார வர மாட்டாங்க. நான் இந்த ஸ்கூலுக்கு வந்து பத்து வருசமாச்சி. எந்தத் தொந்தரவும் இல்ல. நீங்களும் ரிட்டயர் ஆவுறவரைக்கும் இந்த ஊர்லியே ஓட்டலாம் சார். நன்மாறன்கோட்டங்கிற பேருக்கேத்த மாதிரிதான் ஊரு ஆளுங்களும் இருப்பாங்க.” என்று உடற்கல்வி ஆசிரியர் தனவேல் சொன்னார்.
“அப்படியா?” என்று ராமநாதன் கேட்டதோடு சரி.
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று இன்று காலைதான் கடலூர் மாவட்டத்திலிருந்து வந்து புதிய பள்ளிக்கூடத்தில் ராமநாதன் சேர்ந்திருக்கிறார். முதல் நாளே அதிகம் பேச வேண்டாம். கேள்விகள் கேட்க வேண்டாம். ஆசிரியர்கள் எப்படியோ, ஊர் எப்படியோ என்ற யோசனையில் அதிகமாகப் பேசாமல் இருந்தார்.
காலையில் வந்ததிலிருந்து ராமநாதனுக்கு ஒரே வேலையாக இருந்தது. வரிசையாக வந்து ஆசிரியர்கள் வாழ்த்து சொன்னார்கள். பணியேற்ற விபரத்தை உரிய அலுவலர்களுக்குத் தெரிவிப்பதற்கான கடிதங்களைத் தயார்செய்தார். மதியம் சாப்பிட்டார். உட்கார்ந்தே இருந்ததால் தூக்கம் வருவது மாதிரி இருந்தது. முதல் நாளே தூங்கினால் அசிங்கம் என்று நினைத்தார். கைக்கடிகாரத்தைப் பார்த்தார். இரண்டே கால்.
“ஒவ்வொரு வகுப்பா பாத்திட்டு வரலாமா சார்?” என்று கேட்டார். எதிரில் நாற்காலியில் உட்கார்ந்திருந்த தனவேல் மறுப்பு எதுவும் சொல்லாமல் “போகலாம் சார்” என்று சொல்லிவிட்டு, போவதற்கு தயாரான மாதிரி எழுந்து நின்றார். ராமநாதன் எழுந்து அறையை விட்டு வெளியே வந்தார். அவருக்குப் பின்னாலேயே தனவேலுவும் வந்தார்.
“மொதல்ல ஆறாம் வகுப்பு பாத்திடலாம். எங்க இருக்கு?”
“வாங்க சார்” என்று சொன்ன தனவேல் ராமநாதனுக்கு முன்னால் வராண்டாவில் நடக்க ஆரம்பித்தார். அவருக்குப் பின்னால் ராமநாதன் நடந்தார்.
ஆறாம் வகுப்பிற்குள் தனவேல் நுழைந்தார். ராமநாதனைக் கண்டதும் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியை, “வாங்க சார்” என்று சொன்னார். மாணவர்களையும், பிளாக்போர்டையும் ராமநாதன் பார்த்தார். பிறகு “நீங்க நடத்துங்க” என்று சொல்லிவிட்டு வகுப்பறையைவிட்டு வெளியே வந்தார். அடுத்தது ஏழாம் வகுப்பிற்குள் போனார். அடுத்தடுத்து பன்னிரெண்டாம் வகுப்புவரை ஒவ்வொரு வகுப்பிற்குள்ளும் நுழைந்துநுழைந்து பார்த்துவிட்டு, ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டு வந்தார். எல்லா வகுப்புகளிலுமே ஆசிரியர்கள் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்கள். தனியார் பள்ளிக்கூட அமைதியைவிட கூடுதல் அமைதியாக இருந்தது. புதிய தலைமை ஆசிரியரின் குணம் எப்படியோ, முதல் நாளன்றே கெட்டபெயர் வாங்க வேண்டாம் என்று எல்லா ஆசிரியர்களும் நினைத்திருக்கலாம் என்று நினைத்த ராமநாதன், பள்ளிக் கட்டிடத்தை விட்டு வெளியே வந்தார். மைதானத்தை ஒரு பார்வை பார்த்தார். என்ன தோன்றியதோ மைதானத்தை சுற்றிப்பார்க்க ஆரம்பித்தார். அவருக்கு இணையாக தனவேல் நடந்துகொண்டிருந்தார். பள்ளிக் கட்டிடத்திற்குச் சற்றுத் தள்ளி நேர்தெற்கிலிருந்த கழிப்பறைக்கு வந்தார். உள்ளே நுழைந்து பார்த்தார். கழிப்பறை பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. மூக்கை மூடிக்கொண்டு வெளியே வந்து “இவ்வளவு மோசமா இருக்கே. புள்ளைங்க எங்கப் போவும்?” என்று கேட்டார்.
“செவத்து மறவிலியே போயிடுங்க சார்.”
“டீச்சர்ஸுக்கு இருக்கா?”
“எச்.எம்.ரூம்க்குப் பக்கத்திலியே இருக்கு சார்.”
“லேடீஸ் டீச்சர்ஸுக்குத் தனியா இருக்கா?”
“இல்ல சார்.”
“எங்க போவாங்க?”
“அந்த ஒரு ரூம்லதான் போவணும். யார் போனாலும் ரெண்டுரெண்டு பேரா போவாங்க. ஒருத்தங்க உள்ளார இருந்தா, ஒருத்தங்க வெளிய காவலுக்கு நிப்பாங்க.” என்று சொன்ன தனவேல் லேசாகச் சிரித்தார்.
“நான் முன்னால வேல பாத்த ஸ்கூல்ல. தனித்தனியா இருக்கும். பெரிய ஸ்கூல்” என்று ராமநாதன் சொன்னதற்கு தனவேல் எந்தப் பதிலும் சொல்லவில்லை. “அப்படியா?” என்றும் கேட்கவில்லை.
ராமநாதன் பள்ளிக்கூடக் கட்டிடத்தையும், மைதானத்தையும் பார்த்தார். ஊருக்கு ஒதுக்குப்புறமாக, விஸ்தாரமான இடத்தில்தான் பள்ளிக்கூடம் இருந்தது. மதில் சுவர் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் உண்டாயிற்று. மைதானம் முழுவதும் வெயில் படர்ந்திருந்தது. வெக்கையாக இருந்தது. வியர்த்தது. ஜனவரி மாதத்திலியே நல்ல வெயிலாக இருக்கிறது என்று சொல்ல நினைத்தார். ஆனால் சொல்லவில்லை. தனவேல் எப்படிப்பட்ட ஆள், முதல் நாளே அதிகமாகப் பேசி வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டாம் என்ற தயக்கம் ராமநாதனுக்கு இருந்தது போலவே தனவேலுக்கும் இருந்தது. பக்கத்திலிருந்த வேப்ப மரத்தைப் பார்த்ததும் “வாங்க நிழலுக்கு போவம்” என்று ராமநாதன் சொன்னார். இருவரும் நடந்து வேப்ப மர நிழலுக்கு வந்தனர். சுற்றும்முற்றும் பார்த்தார் ராமநாதன். சாலையிலிருந்து பள்ளிக்கு வரும் வழியைப் பார்த்தார். பூண்டு செடிகள் மண்டிக் கிடந்தது. அதைப் பிடுங்கச் சொல்ல வேண்டும் என்று நினைத்தார். அதே மாதிரி மைதானம் முழுவதும் ஆங்காங்கே நின்றுகொண்டிருந்த பூண்டு செடிகளையும் பிடுங்கச் சொல்ல வேண்டும் என்று நினைத்தார். இன்றைக்கே சொன்னால் அதிகாரம் செய்கிறார் என்றாகிவிடும் என்ற பயத்தில் நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தார். அப்போதுதான் மனதில் தோன்றிய மாதிரி “ஏ.எச்.எம். எப்பிடி?” என்று கேட்டார்.
“நல்ல மாதிரியான ஆளு சார். அவரால எந்தத் தொந்தரவும் வராது.”
“அப்பிடியா?” என்று கேட்டதோடு சரி. அடுத்த கேள்வியை ராமநாதன் கேட்கவில்லை. தனவேலுவும் தானாக எதுவும் சொல்லவில்லை. இருவரும் சிறிது நேரம் பேசாமல் மைதானத்தைப் பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தனர்.
“நீங்க ட்ரசரிக்குப் போயி ஒங்களோட புரமோஷன் ஆர்டர் காப்பியக் கொடுக்கணும். மாதிரிக் கையெழுத்து போடணும் சார்.”
“இன்னிக்கி முடியாது. நாளக்கிக் காலையில போவலாமின்னு இருக்கன். இங்க எங்க ட்ரசரி இருக்கு?”
“ஒரத்தநாடு சார்.”
“வாங்க போயி ட்ரசரிக்கான தபால ரெடி பண்ணலாம்” என்று சொல்லிவிட்டு ராமநாதன் நடக்க ஆரம்பித்தார். அவருடன் தனவேலுவும் நடந்தார்.
தன்னுடைய அறைக்கு வந்து நாற்காலியில் உட்கார்ந்தார். “கிளார்க்கக் கொஞ்சம் கூப்புடுங்க சார்” என்று ராமநாதன் சொன்னார். எழுந்து சென்ற தனவேல் பக்கத்து அறையிலிருந்த கிளார்க்கை அழைத்துக் கொண்டுவந்தார்.
“நான் நாளக்கி ட்ரசரிக்குப் போவலாம்ன்னு இருக்கன். அதுக்கான தபால்கள ரெடிபண்ண முடியுமா சார்?” என்று ராமநாதன் கேட்டார்.
“ரெடி பண்ணி கொண்டுவர்றன் சார்” என்று சொன்ன வேகத்திலேயே கிளார்க்கு தன்னுடைய அறைக்கு சென்றுவிட்டார். தனவேல் நின்றுகொண்டிருந்தார். அவரிடம் ராமநாதன் எதுவும் பேசாததால் “நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. அப்புறமா வர்றன் சார்” என்று சொல்லிவிட்டு வெளியே போனார். வெளியே போன சிறிது நேரத்திலேயே உள்ளே வந்து “ஒங்கள ஒரு அம்மா பாக்கணும்ன்னு வந்திருக்காங்க சார்” என்று சொன்னார்.
“என்னயா?” என்று சந்தேகப்பட்டது மாதிரி ராமநாதன் கேட்டார்.
“ஆமாம் சார்.”
“பசங்க பிரச்சனயா இருந்தா நீங்களே என்னா, ஏதுன்னு விசாரிச்சி அனுப்பிடுங்க. இந்த ஸ்கூலப் பத்தி எனக்கொண்ணும் தெரியாதே.” என்று சொன்னார்.
“பாக்குறன் சார்” என்று சொல்லிவிட்டு தனவேல் வெளியே சென்றார்.
தனவேலிடம் பள்ளிக்கூட நடைமுறைகளைப் பற்றி, ஆசிரியர்களைப் பற்றிக் கேட்கலாமா என்று ராமநாதன் யோசித்தார். முதல் நாளே எல்லா விஷயங்களைப் பற்றியும் கேட்கலாமா, அது சரியாக இருக்குமா, ஒரு வாரம் கழித்து விசாரித்துக்கொள்ளலாமா, வந்த நாளிலேயே மற்றவர்களைப் பற்றி விசாரித்தால் தவறாக நினைக்கலாம். முதலில் தனவேல் எப்படிப்பட்ட ஆள் என்று தெரிந்துகொள்வோம் என்று நினைத்தார். இன்றிரவு பள்ளிக்கூடத்திலேயே தங்கிவிட்டு, நாளைக் காலையிலே கருவூலத்திற்குச் சென்று பதவி உயர்வு ஆணையை, மாதிரி கையொப்பம் போட்ட கடிதத்தைக் கொடுத்துவிட்டு மதியமே ஊருக்குப் போய்விடலாம். சனி, ஞாயிறு கழிந்து, திங்கள்கிழமை வந்து எங்கு தங்குவது என்பதை முடிவு செய்யலாம் என்று முடிவெடுத்தார். சுவரில் மாட்டியிருந்த காந்தி, அம்பேத்கார், பெரியார், நேதாஜி படங்களைப் பார்த்தார். பிறகு முக்கியமான காரியத்தை செய்வது மாதிரி கைக்கடிகாரத்தைப் பார்த்தார். நேரத்தைத் தெரிந்துகொண்டதும் அவருடைய முகம் மாறியது. பாட்டிலை எடுத்துக் கொஞ்சம்போல தண்ணீரைக் குடித்தார். பிறகு ஆசிரியர் வருகைப் பதிவேட்டை எடுத்து ஒவ்வொரு ஆசிரியரின் பெயராகப் படிக்க ஆரம்பித்தார். அப்போது அறைக்குள் வந்த தனவேல் “ஒரு அம்மா வந்து டி.சி. கேக்குது. இப்ப தர முடியாதின்னு சொன்ன கேக்க மாட்டங்குது சார்” என்று சொன்னார்.
“வரச் சொல்லுங்க.”
வெளியே சென்ற தனவேல் ஒரு பெண்ணையும் மூன்று பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு உள்ளே வந்தார். அந்த பெண்ணையும், அந்த பிள்ளைகளையும் சரியாகக்கூட பார்க்காமல் எடுத்த எடுப்பில் “சொல்லுங்கம்மா” என்று ராமநாதன் கேட்டார்.
“இவன் பேரு தினேஷ்குமாரு ஏழாவது படிக்கிறான். இவன் பேரு சந்தோஷ்குமாரு. ஆறாவது படிக்கிறான் சார்.”
“எங்க?”
“இந்தப் பள்ளிக்கூடத்திலதான் சார்.”
“ஏதும் பிரச்சனயா? வாத்தியாருங்க யாராச்சும் அடிச்சிட்டாங்களா?”
“இல்லெ சார்.”
“பின்னெ எதுக்கு டி.சி. கேட்டீங்களாம்?”
“நாளக்கி நாங்க ஊருக்குப் போறம் சார்.”
“போயிட்டு வாங்க. அதுக்கு எதுக்கு டி.சி. கேக்குறிங்க?”
“திரும்பி வர மாட்டம் சார்.”
மாமியார் மருமகள் சண்டை நடந்திருக்கும். புருசன் அடித்திருப்பான். அதற்காக கோபித்துக்கொண்டு பிள்ளைகளை அழைத்துக்கொண்டு பிறந்த வீட்டிற்குப் போகிற பெண்ணாக இருக்க வேண்டும். புருசன்மீது இருக்கும் கோபத்தில் வந்து மாற்றுச்சான்றிதழ் கேட்கிறாளே. என்ன பெண்ணாக இருப்பாள்? புருசன் பெண்டாட்டிச் சண்டையில் பிள்ளைகளை எதற்காக சிரமப்படுத்துகிறாய் என்று கேட்க நினைத்தார். ஆனால் கேட்கவில்லை. ஊர்ப் பிரச்சனை நமக்கு எதற்கு என்று நினைத்தார்.
“ஜுன் மாசத்தில வாங்க. வாங்கிக்கலாம்.”
“எங்கம்மா ஊருக்குப் போறம் சார். இனிமே இந்த ஊருக்குத் திரும்பி வர மாட்டம்.”
“நான் சொல்றத புரிஞ்சிக்கம்மா. ஜனவரி மாசத்தில் டி.சி. கொடுக்கக் கூடாது. மீறிக் கொடுத்தா டி.இ.ஓ., சி.இ.ஓன்னு எல்லாரும் ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பாங்க. பதில் சொல்லி மாளாது. நீங்க போயிட்டு அப்புறமா வாங்க” ராமநாதன் நிதானமாகச் சொன்னார். அவர் சொன்னதை அந்தப் பெண் காதில் வாங்காத மாதிரி நின்றது நின்றபடியே நின்றுகொண்டிருந்தாள். அவளுடைய பிள்ளைகளும் கைகளை கட்டியபடி நின்றது நின்றபடியே நின்றுகொண்டிருந்தனர். ஆடாமல் அசையாமல் மல்லுக்கட்ட வந்ததுபோல் அவர்கள் நின்றுகொண்டிருந்த விதம் ராமநாதனுக்கு லேசாக எரிச்சலை உண்டாக்கியது. தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்றுவந்த முதல் நாளே பிரச்சனையா என்று யோசித்தார்.
ராமநாதனுக்காக வக்காலாத்து வாங்குவது மாதிரி “ஐயா சொல்றது புரியலியா? ஜுன் மாசம் வாங்க. வந்த ஒடனே வாங்கிக்கிட்டுப் போயிடலாம். இப்ப கிளம்புங்க” என்று தனவேல் அந்தப் பெண்ணைப் பார்த்து சொன்னார். அவர் சொன்னதை அந்தப் பெண் கேட்வில்லை. அவர் பக்கம் திரும்பியும் அவள் பார்க்கவில்லை. அதனால் தனவேலுவுக்கு கோபம் உண்டாயிற்று.
“நாங்க சொல்றது புரியுதா இல்லியா? இப்ப டி.சி. தர முடியாது. கிளம்புங்க” என்று முன்பைவிடச் சத்தமாக தனவேலு சொன்னார். அப்போதும் அந்தப் பெண் தனவேல் சொன்னதைக் கேட்கவில்லை. அவர் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை. தனவேலையும் அந்தப் பெண்ணையும் மாறிமாறிப் பார்த்த ராமநாதன் “நீங்க ஒக்காருங்க சார்” என்று சொன்னார். தனவேல் ஒரு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு அந்தப் பெண்ணை முறைத்துப் பார்த்தார். அவளுடைய பார்வை கடைசிவரை அவர் பக்கம் திரும்பவே இல்லை.
“போயிட்டு ஜுன் மாசம் வாங்கம்மா” என்று ராமநாதன் சொன்னார். ராமநாதனுடைய குரலிலிருந்த அலுப்பையும், சலிப்பையும் பார்க்காமல் அந்தப் பெண் உறுதியான குரலில் “எனக்கும் எம் புள்ளைங்களுக்கும் இனி இந்த ஊரே வேண்டாம்ன்னு போறம் சார்” என்று சொன்னாள்.
“நீ சொன்னதையே சொல்லிக்கிட்டிருக்க? நான் சொல்றத புரிஞ்சிக்க மாட்டன்ங்கிற. இந்த சமயத்தில நான் டி.சியக் கொடுக்கக் கூடாது. மீறி கொடுத்தாலும் அத எடுத்துக்கிட்டுப் போயி எந்தப் பள்ளிக்கூடத்திலயும் சேரவும் முடியாது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், நீதிபதியோட புள்ளைங்கள மட்டும்தான் சேப்பாங்க புரியுதாம்மா” என்று ராமநாதன் சொன்ன சமாதானத்தை அந்தப் பெண் ஏற்றுக்கொண்ட மாதிரி தெரியவில்லை. அதனால் திமிர்ப்பிடித்த பெண்ணாக இருப்பாளோ என்று நினைத்தார். அப்போது டைப் செய்திருந்த இரண்டு காகிதங்களை கொண்டு வந்த கிளார்க் ராமநாதனின் முன் வைத்தார். அந்த இரண்டு காகிதங்களையும் எடுத்து அவர் கவனமாகப் படித்தார். பிறகு கையெழுத்துப்போட்டுக் காகிதங்களை எடுத்து கிளார்க்கிடம் கொடுத்து “கவர் போட்டுடுங்க” சொன்னார். காகிதங்களை எடுத்துக்கொண்டு கிளார்க் வெளியே போனார்.
எதிரில் நின்றுகொண்டிருந்த பெண்ணையும் மூன்று பிள்ளைகளையும் ராமநாதன் எரிச்சலுடன் பார்த்தார். முதல் நாளிலேயே என்ன சனியனாக இருக்கிறது என்று நினைத்தார். அவர்கள்மீது கோபம் உண்டாயிற்று. கோபத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் “நின்னுக்கிட்டேயிருந்து என்னெ சங்கடப்படுத்தாதீங்க. போயிட்டு ஜுன் மாசம் வாங்கம்மா” என்று சொன்னார். முன்பிருந்ததைவிட இப்போது அவருக்குப் பொறுமை குறைந்துவிட்டது என்பதை அவருடைய குரலே காட்டிக்கொடுத்தது, ராமநாதன் சொன்னதற்கு சம்பந்தம் இல்லாமல் அந்தப் பெண் சொன்னாள் “இந்த ஊர்ல இருக்க பயமா இருக்கு சார். அதனாலதான் கேக்குறன்.”
“சொந்த ஊர்ல இருக்கிறதுக்கு என்னம்மா பயம்?” நல்ல நகைச்சுவையைச் சொல்லிவிட்டதுபோல் ராமநாதன் சிரித்தார்.
“இந்த ஊர்ல இருந்தா எங்களக் கொன்னுடுவாங்க சார்.”
“என்னம்மா சொல்ற?” என்று கேட்ட ராமநாதன் குழப்பத்துடன் தனவேலைப் பார்த்தார். அவர் தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுபோல் உட்கார்ந்திருந்தார்.
“புருசன் பொண்டாட்டி சண்டயா?” என்று ராமநாதன் கேட்ட கேள்விக்கு அந்தப் பெண் பதில் சொல்லவில்லை. அவளுக்கு வலப்பக்கமாக கைகளைக் கட்டி நின்றுகொண்டிருந்த சந்தோஷ்குமார்தான் பதில் சொன்னான். “எங்கப்பாவ சுளுக்கியால குத்திக் கொன்னுட்டாங்க சார்.”
“என்னப்பா சொல்ற?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார். அவருடைய முகமும் குரலும் மாறிவிட்டது. பையன் சொல்வது உண்மையா என்று கேட்பது மாதிரி அந்தப் பெண்ணைப் பார்த்தார். அவளுடைய முகத்திலிருந்து எதையும் அறிந்துகொள்ள முடியவில்லை. அவளுடைய முகத்திலிருந்த இறுக்கத்தை, களைப்பை அப்போதுதான் பார்த்தார். கழுத்தில் தாலி இல்லை. சாதாரண மணிகூட இல்லை. கைகளில் ரப்பர் வளையல்கூட இல்லை. பெரிய சுமையை தூக்கிக்கொண்டிருப்பது போல நின்றுகொண்டிருந்தாள். மறுநொடியே பையனைப் பார்த்தார். பையனுக்கு மொட்டை அடிக்கப்பட்டுப் பத்திருபது நாள்தான் ஆகியிருக்க வேண்டும். புதிதாக முளைத்த முடி முள்முள்ளாக நின்றுகொண்டிருந்தது. பக்கத்தில் நின்றுகொண்டிருந்த தினேஷ்குமாரின் தலையும் அப்படித்தான் இருந்தது. ஏழுஎட்டு வயது மதிக்கத்தக்க பெண் பிள்ளையைப் பார்த்தார். அந்த பிள்ளை தன்னையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பதை அப்போதுதான் பார்த்தார். அந்த பெண்ணினுடைய முகத்தில் மட்டுமல்ல, அந்த பிள்ளைகளுடைய முகத்திலும் உயிர்ப்பில்லை. மீண்டும் ஒவ்வொரு முகமாகப் பார்த்தார்.
நெடுநெடுவென்று உயரமாக இருந்தாள். நல்ல கருப்பாக இருந்தாள். கிளிப்பச்சை நிறத்தில் சீலைக் கட்டியிருந்தாள். முப்பத்தைந்து வயது தாண்டி இருக்காது. ஆனால் அறுபது எழுபது வயது கிழவியினுடைய முகம் போன்றிருந்தது. சதை என்று அவளுடைய உடம்பில் எங்கேயுமில்லை. வந்ததிலிருந்து நட்டுவைத்த இரும்புக் கம்பி மாதிரி எப்பிடி ஒரே இடத்தில் நின்றுகொண்டிருக்கிறாள்? அவள் மட்டுமல்ல மூன்று பிள்ளைகளுமே கைகால்களை அசைக்காமல் இந்தப் பக்கம் அந்தப் பக்கம் என்று பார்க்காமல், கால்மாற்றிக்கூட நிற்காமல் கட்டிய கைகளைக்கூடப் பிரிக்காமல், ஆடாமல் அசையாமல், கழுத்தைக்கூட திருப்பாமல் எப்படி ஒரே இடத்தில் நின்றுகொண்டிருக்கின்றன? அவர்களுடைய முகத்தில் குழந்தைகளுக்கான அடையாளம் என்று எதுவுமில்லை. மீண்டும் அந்தப் பெண்ணையும், பிள்ளைகளையும் பார்த்தார். “எதாயிருந்தாலும் இப்ப டி.சி. தர முடியாது. போயிட்டு வாங்க. ஐயாவத் தொந்தரவு பண்ணாம கிளம்புங்க. ஒங்க குடும்பக் கதெ பள்ளிக்கூடத்துக்கு அவசியமில்லாதது.” என்று தனவேல் கறாராக சொன்னார். அவர் சொன்னதைப் பொருட்படுத்தாத மாதிரி ராமநாதனைப் பார்த்துத் தீர்மானமான குரலில் அந்தப் பெண் சொன்னாள்.
“நாங்க உசுரோட இருக்கணும்ன்னா டி.சி.யத் தாங்க சார்.”
அந்தப் பெண்ணினுடைய பேச்சு திமிர்த்தனம் கொண்ட பெண்ணினுடைய பேச்சு மாதிரி இருந்தது. ஆனால், அவளுடைய தோற்றமும், அவள் நின்றுகொண்டிருந்த விதமும் வேறாக இருந்தது. அவளை எப்படிப் புரிந்துகொள்வது என்று ராமநாதன் குழம்பினார்.
“ஆகஸ்ட் மாசம் வர வேண்டிய புரமோஷன், கோர்ட் வழக்குன்னுப் போயி ஆர்டர் வாங்கிக்கிட்டு வந்து இன்னிக்கித்தான் ஜாயின் பண்ணியிருக்கன். இந்தப் பள்ளிக்கூடத்தோட நெலம எனக்குத் தெரியாது. நான் விசாரிச்சிட்டு சொல்றன். நீங்கபோயிட்டு வாங்கம்மா. புள்ளைங்கள அழச்சிக்கிட்டு எதுக்கு வந்தீங்க?” என்று ராமநாதன் கேட்டார். அந்தப் பெண் சீக்கிரம் வெளியே போனால் போதும் என்று நினைத்தார். ஆனால், அந்தப் பெண்ணும், பிள்ளைகளும் வெளியே போகிற மாதிரி தெரியவில்லை. அதனால் ராமநாதன் கேட்டார்.
“எப்பிடியாச்சி?”
“வருசாவருசம் நடக்கிற மாதிரிதான் இந்த வருசமும் மாட்டுப் பொங்கல் அன்னிக்கு மாட்டுக்கு ஓட்டப்பந்தயம் வச்சாங்க. பந்தயத்தில எங்க மாடு ஜெயிச்சிடிச்சி. அதனால மாட்டயும், எம் புருசனயும் சுளுக்கியாலக் குத்திக் கொன்னுப்புட்டாங்க.”
ராமநாதன் எதுவும் பேசவில்லை. பேச வேண்டும் என்றும் தோன்றவில்லை. அந்தப் பெண்ணையே பார்த்துக்கொண்டிருந்தார்.
“நேத்துதான் கருமகாரியம் முடிஞ்சிது. இன்னிக்கி சாயங்காலம் எங்கம்மா ஊருக்குப் போறம்.”
ராமநாதனுக்கு தூக்கிவாரிப்போட்டது. அந்தப் பெண் சொல்வது உண்மையா என்று கேட்பது மாதிரி தனவேலைப் பார்த்தார். ராமநாதன் எதற்காகத் தன்னைப் பார்க்கிறார் என்பதை புரிந்துகொண்டது மாதிரி “வருசா வருசம் நடக்கிறதுதான் சார்” என்று சொன்னார். முன்பைவிட இப்போதுதான் ராமநாதனுக்கு கூடுதல் அதிர்ச்சியும் திகிலும் ஏற்பட்டது. பிறருக்குக் கேட்டுவிடப்போகிறது என்ற பயத்தில் கேட்பதுபோல “ஓட்டப்பந்தயத்தில மாடு ஜெயிக்கிறதுக்கும் மனுசன வெட்டுறதுக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டார். அதற்கு தனவேல் பதில் சொல்லவில்லை. அந்தப் பெண்தான் சொன்னாள்.
“மாட்ட வளத்தது அவுருதான? மாடு அவரோடதுதான?”
“ஊரே கூடிதான பந்தயம் வச்சிருப்பாங்க?”
“எங்க மாடு ஜெயிக்கும்ன்னு யாரும் எதிர்பாக்கல. அதான் பிரச்சன.”
“பந்தயத்தில யாரு மாடு ஜெயிச்சா என்ன? அதுக்குத்தான போட்டி நடத்தியிருப்பாங்க?”
“நாங்க காலனிக்காரங்க. எங்க மாடு காலனி மாடு.”
ராமநாதனுக்கு விஷயம் புரிந்த மாதிரி இருந்தது. ஆனாலும் குழப்பமாக இருந்தது.
“பந்தயம் எங்க நடந்தது?”
“மேலாயியம்மன் கோவில் முன்னால.”
“அது எங்க இருக்கு,”
“அவுங்க தெருவுல.”
“நீங்க அந்தத் தெருவுல இல்லியா?”
“நாங்க காலனி.”
“இத்தினி வருசமா யாரோட மாடு ஜெயிச்சிது?”
“அவங்க மாடு.”
“இத்தினி வருசமா ஒங்க மாடு போட்டியில கலந்துக்கிலியா?”
“இதான் பஸ்ட் வருசம். அவுங்கதான் கூப்புட்டாங்க. ஜெயிக்கணுமினு போவல. வெடிபோட்டதில கிராச்சிக்கிட்டு ஓடிப் போயி கோட்டத் தாண்டிப்புடிச்சி.”
“மாட்டுக்கு ஜெயிக்கணும்ன்னு தெரியுமா?” என்று யாரிடம் என்றில்லாமல் பொதுவாகக் கேட்டார் ராமநாதன். அதற்கு தனவேலும் பதில் சொல்லவில்லை. அந்தப் பெண்ணும் பதில் சொல்லவில்லை. இருவருமே பதில் சொல்லாததால் ராமநாதன் “எதுக்கு வெடி போடுறாங்க?” என்று கேட்டார்.
“போடுவாங்க சார். போட்டியில கலந்துக்கிறவங்கயெல்லாம் மாட்ட ஓட்டியாந்து கோவிலுக்கு முன்னால நிறுத்திடுவாங்க. ரெண்டு பர்லாங் தூரத்துக்கு அடப்பு மாதிரி ரெண்டு பக்கமும் படலக் கட்டிடுவாங்க. ஒரு எடத்தில கோட்டக் கிழிச்சிடுவாங்க. மாடுங்க கூட்டமா நிக்குற எடத்தில பெரியபெரிய வெடியா வச்சி வெடிக்கச் செய்வாங்க. சத்தத்தில மாடுங்க ஓடுங்க. ஓடுற மாட்டுல எது கோட்டத் தாண்டுதோ அதுக்குப் பரிசு கொடுப்பாங்க. இதுக்காகவே மாட்டப் பழக்குறவங்களும் இருக்காங்க.”
“மாடு பயத்திலதான் ஓடுது.”
ராமநாதன் கேட்ட கேள்விக்கு தனவேல் எந்தப் பதிலும் சொல்லவில்லை. அப்போதுதான் நினைவுக்கு வந்த மாதிரி அந்தப் பெண்ணிடம் ராமநாதன் கேட்டார் “போலீஸ் கேசு எதுவும் ஆவலியா?”
“மாடுமுட்டி செத்திட்டான்னு எழுதிட்டாங்க.”
“நீங்க ஒண்ணும் செய்யலியா?”
“ஊரே கூடி எழுதிக்கொடுத்தாங்க. நானும் கையெழுத்து போட்டுட்டன் சார்.”
அப்போது அந்தப் பெண் அழுவாள் என்று ராமநாதன் எதிர்பார்த்தார். ஆனால் அழவில்லை. சிறு விசும்பல், தேம்பல் இல்லை. நெற்றியைச் சுருக்கவில்லை. முகத்தைச் சுளிக்கவில்லை. அசைந்து நிற்கவில்லை. அதிர்ந்து பேசவில்லை. ஒவ்வொரு வார்த்தையையும் எவ்வளவு நிதானமாகப் பேச முடியுமோ அவ்வளவு நிதானமாகப் பேசினாள். மனம் உடைந்த மாதிரியோ, இரக்கத்தை கோரும் விதமாகவோ பேசவில்லை. அறைக்குள் நுழையும்போது அவளுடைய முகம் எப்படி இறுகிப்போயிருந்ததோ அந்த இறுக்கம் துளிகூட மாறாமல் இருந்தது.
திடீரென்று நினைவுக்கு வந்த மாதிரி தனவேலிடம் “ஒங்க ஊர் எங்க இருக்கு?” என்று ராமநாதன் கேட்டார்.
“பக்கத்திலதான். பத்து கிலோமீட்டர் தூரம் வரும் சார்.”
“அங்கியும் மாட்டுக்கு ஓட்டப்பந்தயம் நடக்குமா?”
“நடக்கும் சார்” என்று தனவேல் சொன்னதும், அடுத்து எதுவும் கேட்க வேண்டாம் என்று முடிவு எடுத்ததுபோல் பேசாமல் இருந்தார். ரொம்ப களைப்படைந்த மாதிரி தண்ணீர் குடித்தார். அந்தப் பெண்ணிடமும் தனவேலிடமும் நிறைய கேள்விகள் கேட்கவேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. மறுநொடியே கேட்கக் கூடாது, தவறாகிவிடும் என்று வாயை மூடிக்கொண்டார். அந்தப் பெண்ணை வெளியே அனுப்புவதற்கான வழிகளைப் பற்றி யோசித்தார். முன்பு சொன்னதுபோல ஒரே வார்த்தையில் ‘முடியாது போ’ என்று சொல்ல இப்போது அவருக்கு மனம் வரவில்லை. என்ன சொல்லி அனுப்பலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது ஒரு ஆசிரியை உள்ளே வந்தார்.
“சொல்லுங்க டீச்சர்” என்று ராமநாதன் கேட்டார்.
“நாளக்கி நான் சி.எல்.சார்” என்று சொன்னதோடு விடுமுறைக்கான விண்ணப்பத்தையும் கொடுத்தாள். விண்ணப்பத்தை வாங்கிக்கொண்டு “அவசர வேலயாம்மா?” என்று கேட்டார்.
“நாளக்கி எம் பொண்ணுக்கு பர்த் டே சார்.”
“ஓ அப்பிடியா? என்னோட வாழ்த்துக்கள சொல்லுங்க.”
“தேங்க்ஸ். வர்றன் சார்.”
“வாங்கம்மா.”
அந்த ஆசிரியை வெளியே போகும்போதுதான் பார்த்தார். நல்ல குள்ளமாக, குண்டாக, நல்ல நிறமாக இருந்ததை. கழுத்தில் ஒரு கைப்பிடிச் சங்கிலி கிடந்ததையும் பார்த்தார். அந்த ஆசிரியையின் பெயர் என்ன என்று விடுமுறை விண்ணப்பத்தில் பார்த்தார். பரிமளம். கைக்கடிகாரத்தைப் பார்த்தார். மணி நான்கு. நேரத்தைப் பார்த்ததும் அவசரப்பட்ட மாதிரி எதிரில் நின்றுகொண்டிருந்த பெண்ணிடம் “சரி. போயிட்டு வாங்கம்மா” என்று சொன்னார்.
“என்னால இந்த ஊர்ல இருக்க முடியல சார்.”
“நான் ஒரு தப்பும் பண்ணலம்மா” என்று சொல்லிவிட்டு லேசாகச் சிரிக்க முயன்றார் ராமநாதன். எப்படியாவது அந்தப் பெண்ணை வெளியே அனுப்பிவிட்டால் போதும் என்று நினைத்தார். ஊர்ப் பிரச்சனை நமக்கு எதற்கு என்று நினைத்தார். மே மாதம்வரை ஓட்டிவிட்டு சொந்த மாவட்டத்திற்கு மாறுதல் வாங்கிக்கொண்டு போய்விட வேண்டும். எத்தனை லட்சம் செலவு செய்தாலும் பரவாயில்லை. ஊர் ரொம்ப மோசம்போல் இருக்கிறது என்று நினைத்தார். அப்போது அந்தப் பெண் அழுத்தம் திருத்தமாக சொன்னாள்.
“எனக்கும் எம் புள்ளைங்களுக்கும் இந்த ஊர் வாணாம் சார்.”
“ஊர வுட்டுப்போயிட்டா சொத்துப்பத்து எல்லாம் என்னாவறது?”
“அப்பிடி ஒண்ணும் இல்லெ சார். மாமனா, மாமியா செத்திட்டாங்க. மூணு நாத்தனாரும் கல்யாணம் கட்டிக்கிட்டுப் போயிட்டாங்க. வீடு ஒண்ணுதான். அதுவும் கூர.”
அந்தப் பெண்ணிற்கு என்ன பதில் சொல்வதென்று ராமநாதனுக்குப் புரியவில்லை. சொன்னதையே சொல்கிறாள். தான் விரும்பியதையே சொல்கிறாள். அடுத்தவர்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்காத பெண்ணாக இருக்கிறாளே என்று நினைத்தாலும் அவளுடைய நிலையை நினைத்ததும் அவருக்கு வருத்தமாகத்தான் இருந்தது. ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் சொல்லலாமா என்று யோசித்தார். அந்த பெண்ணினுடைய முகத்தைக் கவனமாகப் பார்த்தார். பல நாட்களாகத் தூங்காத மாதிரி இருந்தது. அந்தப் முகத்தைத் தொடர்ந்து அவரால் பார்க்க முடியவில்லை. அந்த பெண்ணிடம் ஏதாவது பேசி அனுப்ப வேண்டும் என்று நினைத்தார். என்ன பேசுவது என்பதுதான் புரியவில்லை. அதனால் “பேரு என்ன?” என்று கேட்டார்.
“செல்வமணி.”
“ஒங்க வீட்டுக்காரரு பேரா?”
“அவுரு பேரு முத்துராமன்.”
“சரிம்மா, போயிட்டு வாங்க.”
“எம் புருசன சுளுக்கியாலக் குத்திக் கொன்னவங்கள தெனம்தெனம் பாத்துக்கிட்டு இந்த ஊர்ல என்னாலயும் எம் புள்ளைங்களாலயும் இருக்க முடியாது சார். இந்த மண்ணே வேணாமின்னுதான் போறன்.”
“ஒங்க விருப்பப்படி செய்ங்க. முழாண்டு பரீட்சகூட எழுத வேணாம். ஆறாவது ஏழாவதுதான? நானே பாஸ் போட்டு எழுதி வச்சியிருக்கன். ஜுன் மாசம் வந்து வாங்கிக்கிட்டுப் போங்க. அதான் என்னால செய்ய முடியும்.”
அந்தப் பெண் ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்றை ராமநாதனின் மேசைமீது வைத்தாள். அதைப் பார்த்ததும் அவருக்குக் கண்மண் தெரியாத அளவிற்கு கோபம் வந்துவிட்டது. “என்னம்மா செய்யுற? பணத்துக்காகத்தான் ஒன்னெ அலய வுடுறன்னு நெனச்சியா? சட்டத்தில எடமிருந்தா ஒரு நிமிசத்தில கொடுத்திருப்பன். மொதல்ல பணத்த எடு. என்னோட முப்பது வருச சர்வீஸில பசங்ககிட்டயிருந்து ஒரு பைசா வாங்குனவன் இல்லெ, தெரியுமா? நாலு வாத்தக் கூடுதலா பேசுனது தப்பாப்போயிடிச்சி” என்று சொல்லி ராமநாதன் கத்தியதும் அந்தப் பெண் பணத்தை எடுத்துக்கொண்டாள். முகத்தைச் சுளித்துக்கொண்டே “போயிட்டு வாங்க” என்று சொன்னார். அந்தப் பெண் வெளியே போகவில்லை. பிள்ளைகளும் அசையவில்லை. எவ்வளவு சொல்லியும் அசைய மறுக்கிறார்களே என்று ஆச்சரியப்பட்டு அந்தப் பெண்ணையும், அந்தப் பிள்ளைகளையும் பார்த்தார். நான்கு பேரின் தலையிலும் எண்ணெய் தடவாததால் அது அவர்களுடைய தோற்றத்தை மேலும் விகாரமாகக் காட்டியது. அதனால் மனம்மாறிய ராமநாதன் “நானும் மனுசன்தான். செய்ய முடிஞ்சா செய்ய மாட்டனா?” என்று தனக்குத் தானே சொல்லிக்கொள்வது மாதிரி சொன்னார்.
“மாட்ட கொன்னதோட வுட்டிருக்கலாம். ‘ஒம் மாடு எப்பிடி ஜெயிக்கலாம்ன்னு கேட்டுக்கேட்டு ஊரே கூடி சுளுக்கியால குத்துனத நான் என் ரெண்டு கண்ணாலயும் பாத்தன் சார். எம் மூணு புள்ளைகளும் பாத்துச்சி.”
“அந்த பேச்ச விடும்மா. அதுக்கும் பள்ளிக்கூடத்துக்கும் சம்பந்தமில்ல”
“பொணத்த ஒரு நாளு வீட்டுல போட்டு எடுக்கக்கூட விடல. ஆச தீர பொணத்தக் கட்டிப்புடிச்சி அழுதிருப்பன். ஒடனே பொணத்த எடுத்து கொளுத்தச் சொல்லிட்டாங்க.”
“கேக்கறதுக்கு கஷ்டமா இருக்கு. ரெண்டாயிரத்து பதிமூணுலயும் தமிழ்நாட்டுல இப்பிடி நடக்குதுன்னு சொன்னா, ஒலகத்தில யாருமே நம்ப மாட்டாங்க” என்று ரொம்ப களைப்படைந்த மாதிரி ராமநாதன் சொன்னார். பிறகு ரொம்பவும் உடைந்துபோன குரலில் கேட்டார். “வயசு என்னா இருக்கும்?”
“முப்பத்தியெட்டு. கறி எடுக்கிற அன்னிக்கி, மீன் எடுக்கிற அன்னிக்கி அவுருதான் குழம்பு வைப்பாரு. கறி தின்னா, மீனு தின்னா கண்ணுல தண்ணீ வரணுமின்னு சொல்லுவாரு. அப்பிடித்தான் சாப்புடுவாரு. புள்ளைங்களுக்கும் அப்பிடித்தான் தருவாரு.”
“நீ பிறந்த ஊர்லயும் மாட்டுக்கு ஓட்டப் பந்தயம் நடக்குமா? “
“நடக்கும்.”
“சரிம்மா. நான் யோசிச்சி சொல்றன். போயிட்டு வாங்க. பசங்க வேற நிக்குறாங்க.”
“கல்யாணமாயி வந்த பதனஞ்சி வருசத்தில அவுரு இல்லாம நான் அந்த வீட்டுல ஒரு நாள்கூட படுத்திருந்த தில்ல சார்” என்று அந்தப் பெண் சொன்னாள். இப்போதாவது அந்தப் பெண் அழுகிறாளா என்று ராமநாதன் பார்த்தார். அவள் அழவில்லை. ஒரு சொட்டுக் கண்ணீரில்லை. தாய்க்காரியின் இரண்டு கால்களுக்கிடையே கைகளைக் கட்டியவாறு இந்தப் பக்கம் அந்தப் பக்கம் என்று தலையைக்கூட அசைக்காமல் நின்றது நின்றபடி நின்றுகொண்டிருந்த அந்தப் பெண்பிள்ளையைப் பார்த்தார். அந்தப் பிள்ளை முகத்தில் வழிந்த வியர்வையைக்கூடத் துடைக்காமல் நின்றுகொண்டிருந்தது. மனதில் என்ன தோன்றியதோ “இங்க வா” என்று கூப்பிட்டார். அந்தப் பிள்ளை ராமநாதனுக்கு அருகில் வந்து நின்றது.
“பேரு என்ன?”
“மேலாயியம்மா.”
“எந்த சாமி கோவிலுக்கு முன்னால மாட்டுக்கான ஓட்டப் பந்தயம் நடந்தது?”
“மேலாயியம்மன்.”
“ஒங்கப்பாவ எந்தக் கோவிலுக்கு முன்னால வெட்டுனாங்க?”
“மேலாயியம்மன் கோவிலுக்கு முன்னால சார்.”
“ஒண்ணும் சொல்றதுக்கில்ல. போயிட்டு வாங்க” என்று சொன்ன ராமநாதன் சட்டென்று எழுந்து வெளியே போனார்.
ராமநாதன் வெளியே போனது செல்வமணிக்கு எரிச்சலை உண்டாக்கியது. தான் வந்த காரியம் நடக்குமோ நடக்காதோ என்ற கவலை உண்டாயிற்று. என்ன சொன்னாலும் புரிந்துகொள்ள மறுக்கிறாரே என்ற வருத்தம் ஏற்பட்டது. என்ன சொன்னால் மாற்றுச்சான்றிதழைத் தருவார் என்று யோசித்தாள். எதை சொல்வது?
பொங்கலன்று பதினோரு மணிக்கு கழுவுவதற்காக மாடுகளை ஆற்றங்கரைக்கு ஓட்டிக்கொண்டு போகும்போது வழியில் முத்துராமனைப் பார்த்த ஊராட்சிமன்றத் தலைவரின் தம்பி அன்பரசன் “பந்தயம் நடக்கப்போவுது, ஒம் மாட்டயும் ஓட்டிக்கிட்டுப்போய் வுடு” என்று சொன்னார்.
“ஊர் வம்பாயிடும் – வாண்டாங்க.”
“ஒம் மாடு ஜெயிக்கப்போவுதா? பாக்குறதுக்கே எலும்பும் தோலுமா அறுப்புக்கு வுடுற மாடு மாதிரிதான் இருக்கு. அறுப்புக்கே எவனும் வாங்க மாட்டான்” என்று சொல்லி அன்பரசன் சிரித்தார். அதற்கு முத்துராமன் எதுவும் சொல்லாமல் மாடுகளை ஓட்டிக்கொண்டு நடக்க முயன்றான்.
“கூட்டத்தோட கூட்டமாக நிக்கட்டும், வுடுறா” என்று சொல்லிக் கட்டாயப்படுத்தி முத்துராமனுடைய கையிலிருந்த மாட்டினுடைய கயிறுகளைப் பிடுங்கிப் பக்கத்திலிருந்த ஆளிடம் கொடுத்து “ஓட்டிக்கிட்டு போ” என்று சொன்னார். பக்கத்தில்தான் மாடுகளுக்கு நடக்க இருந்த ஓட்டப் பந்தயத்திற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன.
“வேண்டாங்க வேண்டாங்க” என்று கெஞ்சிய முத்துராமனின் குரல் அன்பரசனின் காதில் விழுந்த மாதிரி தெரியவில்லை. சிரித்துக்கொண்டே பந்தயம் நடக்க இருந்த இடத்திற்குப் போனார். வேறு வழியின்றி முத்துராமன் அவருக்குப் பின்னால் போனான். உள்ளூர் ஆட்களும் சரி, வெளியூர் ஆட்களும் சரி, முத்துராமன் வந்ததற்காகவும், அவனுடைய மாடுகள் வந்ததற்காகவும் யாரும் ஒரு கேள்வி கூடக் கேட்கவில்லை. விரட்டி அடிக்கவில்லை. அவனையும், அவனுடைய மாடுகளையும் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அவரவர் அவரவருடைய மாடுகளைத் தயார்செய்வதிலும், எப்படி ஜெயிக்க வைக்க வேண்டும் என்பதிலுமே கவனமாக இருந்தனர்.
மேலாயியம்மன் கோவிலிருந்து ஒரு பர்லாங் தூரம்வரை இருபதடி தூரம் இடைவெளி விட்டு இரண்டு பக்கமும் கழிகளால் தடுப்பு வேலி கட்டியிருந்தார்கள். தடுப்பு வேலியை ஒட்டி ஆண்களும் பெண்களும் நின்று வேடிக்கை பார்த்துகொண்டிருந்தனர். பல ஊர்க் கூட்டம்.
இருநூறு மாடுகளுக்கு மேல் இருக்கும். மேலாயியம்மன் கோவில் வாசலுக்கு முன் தடுப்பு வேலிக்குள் ஓடும் விதமாக மாடுகளை நிறுத்தி வைத்திருந்தார்கள். வெளியூர்களிலிருந்து பந்தயத்திற்கு மாடுகளை ஓட்டிக்கொண்டு வந்தவர்களும், பல ஊர் முக்கியஸ்தர்களும் எப்போது வெடி வைத்து மாடுகளை விரட்டலாம் என்று ஒன்றுகூடி முடிவெடுத்ததும், ஒரு கூட்டத்தினர் ஓடிப் போய் மாடுகள் நின்றுகொண்டிருந்த இடத்தில் பெரியபெரிய வெடிகளாகவும், சரம்சரமாகவும் வைத்து வெடிக்கச் செய்ததுமே மிரண்டுபோன மாடுகள் ஓட ஆரம்பித்தன. காலில் ஏற்பட்ட வெடிக் காயத்துடன் ஓடிப் போய் முத்துராமனுடைய ஒரு மாடு எல்லைக்கோட்டைத் தாண்டி ஓடிவிட்டது.
“யாரோட மாடு, யாரோட மாடு?” என்று கேட்டு மொத்தக் கூட்டமும் கத்தியது. எந்த ஊர் மாடு? முத்துராமனுக்கு தன்னுடைய மாடு ஜெயித்துவிட்டது என்பதுகூடத் தெரியாமல் மாடுகளைத் தேடி அலைந்துகொண்டிருந்தான். மாடுகளைக் கண்டுபிடித்து கயிறுகளை கையில் பிடித்து இழுத்தபோதுதான் ஏழு எட்டு பேர் ஓடி வந்து “இது ஒன்னோட மாடா?” என்று கேட்டனர்.
“ஆமாங்க.”
“இது எப்பிடிடா ஜெயிச்சிது?” என்று கேட்டபோதுதான் தன்னுடைய மாடு ஜெயித்திருக்கிறது என்ற விஷயமே முத்துராமனுக்குத் தெரிந்தது. விஷயம் தெரிந்ததும் அவனுக்குக் கடுமையான கோபம் உண்டாயிற்று.
“எந்த மாடுங்க?” என்று கேட்டான்.
“இந்த மாடுதான்” என்று காலில் காயம் பட்டிருந்த மாட்டை ஒரு பையன் அடையாளம் காட்டினான். உடனே அந்த மாட்டை முத்துராமன் சாட்டையால் சக்கையாக அடிக்க ஆரம்பித்தான். தன்னுடைய சினம் தீரும் மட்டும் எட்டிஎட்டி உதைத்தான். கெட்டகெட்ட வார்த்தைகளைச் சொல்லித் திட்டினான். “வா. ஒன்னெ அப்புறம் வச்சிக்கிறன்” என்று மாடுகளை ஓட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். அவனைத் தொடர்ந்து ஏழெட்டு பேர் பின்னால் வந்தனர். கோவில் பக்கமிருந்து இன்னொரு கூட்டம் அவனை நோக்கி வந்து மறித்துக்கொண்டது. கூட்டத்திலிருந்த பஞ்சாயத்துத் தலைவர் கேட்டார். “பரிசு பணம் வாங்காம ஏன் கிளம்பிட்ட?”
“அதெல்லாம் ஒண்ணும் வாணாங்க.”
“நீ எப்பிடி இங்க வந்த, ஒம் மாடு எப்பிடி வந்துச்சி?” தலைகால் புரியாத கோபத்தில் கேட்டார்.
“நான் ஆத்துக்குத்தான் போனங்க. ஒங்க தம்பிதான் மாட்ட வுடுடான்னு இழுத்துக்கிட்டுப் போனாரு. நான் முடியாதின்னுதாங்க சொன்னன்.”
“அவனுங்க சாவச் சொல்லுவானுங்க. சாவுவியா?” என்று கேட்கும்போது ஆத்திரத்தில் அவருக்கு உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.
“தப்பு நடந்துபோச்சிங்க” என்று சொன்னான். பிறகு சாட்டையால் மாட்டை அடித்தான். அடியைத் தாங்க முடியாமல் ஓட முயன்றது மாடு. மாடுகளை ஓட்டிக்கொண்டு நடக்க முயன்றான். நடக்க விடாமல் அவனையும், மாடுகளையும் மறித்துக்கொண்டு நின்றது கூட்டம்.
“பத்து ஊர் மாடு ஓடுற பந்தயத்தில ஒன்னோட மாடு ஜெயிச்சிதுன்னு சொல்ல முடியுமா? நீ ஜெயிக்கவா பந்தயம் நடந்துனோம்?” ஆத்திரத்தில் கத்தினார் தலைவர்.
“தப்பு நடந்துபோச்சிங்க. வேணுமின்னு செய்யல. ஊர் நடமுற எனக்கு தெரியாதுங்களா? இப்பவே நேரா ஓட்டிக்கிட்டுப் போயி அறுப்புகாரன்கிட்ட தள்ளிவுட்டுட்டு வந்திடுறன்.” பணிவுடன் சொன்னான் முத்துராமன். அவனுடைய பேச்சைக் கேட்கும் நிலையில் அந்த இடத்தில் யாருமில்லை.
“நீ மாட்ட வித்திட்டாப்புல இன்னிக்கி பத்து ஊர்க்காரன் முன்னால பட்ட அசிங்கம் போயிடுமா?” கோபமாகக் கேட்டார் தலைவர். நேரமாகநேரமாக அவருடைய குரலிலும், முகத்திலும் வேகம் கூடிக்கொண்டிருந்தது. சுற்றியிருந்தவர்களும் கோபமாகக் கத்திக்கொண்டிருந்தனர். அதில் ஒரு ஆள் “நாம்ப எல்லாம் என்ன மாடுடா வளத்தோம்? அதயெல்லாம் அறுத்து போட்டா என்ன?” என்று கேட்டான். ஓட்டப் பந்தயத்தில் ஜெயிக்காத தங்களுடைய மாடுகளைக் கெட்ட வார்த்தை சொல்லிப் பச்சைபச்சையாகத் திட்ட ஆரம்பித்தனர். வேகம் வந்த மாதிரி கூட்டத்திலிருந்த ஒரு ஆள் சாட்டை குச்சியுடன் தன்னுடைய மாட்டை அடித்து நொறுக்கிவதற்காக ஓடினான்.
“ஒங்க தெருவுலதான் யாருக்கிட்டயும் மாடு இல்லியே. ஒனக்கு மட்டும் எப்பிடி வந்துச்சி?” ஆத்திரத்தோடு தலைவர் கேட்டார்.
“மணல் லோடு அடிக்கலாமின்னு போன வாரம்தாங்க வாங்கியாந்தன்.”
“சரிதான். அதனாலதான் மாட்ட பந்தயத்துக்கு ஒட்டியாரச் சொல்லியிருப்பான்.”
“தப்பு நடந்துப்போச்சிங்க.”
செல்வமணியும், அவளுடைய பிள்ளைகளும் ஓடி வந்தனர். பெரிய கூட்டத்திற்கு நடுவில் முத்துராமனும் மாடுகளும் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்து பதறினர். பதட்டத்தில் செல்வமணி அழ ஆரம்பித்தாள். கூட்டத்தில், என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை. செல்வமணியால் அழ மட்டுமே முடிந்தது. அவளைப் பார்த்து அவளுடைய பிள்ளைகளும் அழ ஆரம்பித்தனர். அப்போது பேண்ட்டும், டீ சர்ட்டும் போட்டிருந்த நடுத்தர வயதுள்ள பையன் “இந்த மாட்டாலதான அசிங்கமாயிடிச்சி?” என்று சொல்லி முத்துராமனுடைய மாட்டை எட்டி உதைத்தான். அவனுக்குப் பக்கத்திலிருந்த பையனுக்கு என்ன தோன்றியதோ “கண்ணு இருந்ததாலதான வழியப் பாத்து ஓடுன? இனிமே ஒனக்குக் கண்ணு வேண்டியதில்ல” என்று சொன்ன வேகத்திலேயே கையில் வைத்திருந்த தார்க்குச்சியால் மாட்டினுடைய இரண்டு கண்களிலும் மாறிமாறிக் குத்தினான். மாட்டினுடைய இரண்டு கண்களும் வெளியே வந்துவிட்டன. வலியைத் தாங்க முடியாமல் மிரண்டு ஓட முயன்ற மாட்டின் மூக்கணாங்கயிற்றை மூன்று நான்கு பையன்கள் கெட்டியாகப் பிடித்துக்கொண்டனர். வலியில் மாடு இப்படியும் அப்படியுமாக உடம்பை அசைத்தபோது ஒரு ஆளினுடைய காலை மிதித்துவிட்டது. வலியில் அந்த ஆள் “வெட்டுங்கடா” என்று கத்தியதுதான், ஏற்கெனவே தயாராக இருந்ததுபோல் ஒரு ஆள் மாட்டினுடைய வயிற்றில் சுளுக்கியால் வெறிகொண்டதுபோல் குத்தினான். இரண்டாவது குத்திலேயே மாட்டினுடைய குடல் சரிந்துவிட்டது.
“பிஞ்ச செருப்பெல்லாம் எங்கள ஜெயிக்கிறதா?”
“இல்லெ சாமி. இல்லெ சாமி.”
“பொறம்போக்கு எடத்தில இருக்கிறவனெல்லாம் எங்கள ஜெயிக்குறதா?”
“இல்லெ சாமி. இல்லெ சாமி.”
“பன்னிக் கறி, மாட்டுக் கறி திங்கிறவனெல்லாம் எங்கள ஜெயிக்கிறதா?”
“இல்லெ சாமி. இல்லெ சாமி.”
தலைவர் ஆக்ரோஷத்தோடு கேட்கக்கேட்க, அழுதபடியும் கும்பிட்டபடியும் முத்துராமனும் செல்வமணியும் பதில் சொன்னார்கள்.
“இதோட என்னெ வுட்டுடுங்க” என்று சொல்லி முத்துராமனும் செல்வமணியும் கூட்டத்திலிருந்த ஒவ்வொரு காலிலும் விழுந்துவிழுந்து கும்பிட்டு கெஞ்சினர். அழுதனர். தலைவரின் காலில் விழுந்து கும்பிடும்போது முத்துராமனின் முதுகில் சுளுக்கியால் யாரோ குத்தினார்கள். அடுத்த குத்து வயிற்றில் இறங்கியது.
மாடும் முத்துராமனும் பிணமானது தெரிந்ததும்தான் கூட்டம் அமைதி அடைந்த மாதிரி இருந்தது. கோபம் தணிந்த மாதிரி இருந்தது. முத்துராமனையும், மாட்டையும் சுளுக்கியால் குத்திய மூன்று பையன்களிடமும் தலைவர் ஏதோ சொன்னார். அடுத்த நொடியே அந்தப் பையன்கள் கூட்டத்திலிருந்து விலகி வேகமாக நடக்க ஆரம்பித்தனர்.
முத்துராமன் செத்துவிட்டான் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு அவனுடைய தெருவிலிருந்தவர்கள் ஓடி வந்து கத்தி அழுது ஆர்ப்பாட்டம் செய்தார்கள். தலைவரும் ஊர்க்காரர்களும் சேர்ந்துகொண்டு மாடு முட்டிச் செத்துவிட்டதாகச் சொன்னார்கள். மாடு முட்டி முத்துராமன் செத்ததால்தான் ஆத்திரத்தில் மாட்டைக் கொன்றதாகச் சொன்னார். “பொய்” என்று சொல்லி கத்திய செல்வமணியின் வாயில் அன்பரசன் ஓங்கி அடித்து, “உசுரு வேணுமா வேணாமா?” என்று கேட்டார். மொத்த ஊரும் அதே கேள்வியைத்தான் அவளிடம் கேட்டது.
“மாடு முட்டித்தான் செத்தான். பொணத்த எடுத்துக்கிட்டுப் போங்க” என்று தலைவர் சொன்னார். முடியாது என்று முத்துராமனுடைய தெருக்காரர்கள் சொன்னதும் தலைவருக்கும் ஊர்க்காரர்களுக்கும் கோபம் வந்துவிட்டது.
“எப்பவும் போல ஊர் நல்லபடியா இருக்கணும்ன்னா பொணத்த எடுத்துக்கிட்டுப் போங்க. முடியாதின்னா விவகாரம் பெருசாயிடும். ஒங்க நல்லதுக்குத்தான் சொல்றன். நாங்க வேணும், ஊரு வேணும்ன்னா நாங்க சொல்றத செய்யிங்க.” என்று தலைவர் சொன்னார். ஊரும் அதையே சொன்னது. செல்வமணியும், அவளுடைய தெருக்காரர்களும் “முடியாதுங்க” என்று சொன்னபோது சட்டென்று “ஒங்க தெரு இருக்கணுமா வாணாமா?” என்று ஒரே வார்த்தையாகத் தலைவர் கேட்டார். அதையே அந்த இடத்திலிருந்த கூட்டமும் கேட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைக்கட்டுக்காரர்கள் சொல்கிறார்கள், என்ன செய்வது என்று முத்துராமனுடைய தெருக்காரர்கள் யோசித்தார்கள். முத்துராமனுக்கு அண்ணன், தம்பி, மாமன், மச்சான், அப்பா, அம்மா என்று யாரும் இல்லாததால் அந்த இடத்தில் பெரிய அளவில் தகராறு செய்ய செல்வமணியால் முடியவில்லை.
“போலீசு, கீலீசுன்னு போவக் கூடாது. மாடு முட்டி செத்த கேசு. நிக்காது. மாடு முட்டி பல ஊர்ல ஆளுங்க சாவறது தெரிஞ்ச விஷயம். மீறிப் போய் போலீச ஊருக்குள்ளார கொண்டாந்தா என்னா நடக்கும்ன்னு ஒங்களுக்கே தெரியும்.” என்று சொல்லித் தலைவர் மிரட்டியதும் முத்துராமனுடைய தெருக்காரர்கள் ராத்திரியில் வீட்டை கொளுத்திவிடுவார்களோ என்று பயந்தனர். இரண்டாயிரம் மூவாயிரம் பேர் கூடி நிற்கிற இடத்தில் நூறு பேர் என்ன செய்ய முடியும்? சிலர் “இவன் எதுக்கு மாட்ட ஓட்டப் பந்தயத்துக்கு ஓட்டிக்கிட்டுப்போனான்?” என்று செல்வமணியிடம் கேட்டனர். ஊர் வம்பைக் கொண்டுவந்துவிட்டானே என்று முத்துராமனைத் திட்டினார்கள். அவன் பொதுவாக அடாவடியான அளில்லை. ஊர் வம்புக்கு, சண்டைக்குப் போகாத ஆள். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கிற ஆள். பந்தயத்திற்குத் தானாக மாடுகளை ஓட்டிக்கொண்டு போயிருக்க மாட்டான் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனாலும், பந்தயத்திற்குப் போனது தவறு என்று சொன்னார்கள். கூச்சலாக இருந்தது. ஆளாளுக்குப் பேசினார்கள். ஆளாளுக்குக் கத்தினார்கள். திட்டினார்கள். பதைபதைப்பில் யாருடைய பேச்சைக் கேட்பது, என்ன செய்வதுதென்று தெரியாமல் செல்வமணி குழம்பிப்போனாள்.
“பொணத்த எடுக்கிற செலவ நாங்கப் பாத்துக்கிறம். போலீசுக்கான செலவயும் பாத்துக்கிறம். பொணத்த ஒடனே எடுக்கணும். பொதைக்கக் கூடாது. எரிக்கணும்.” என்று தலைவர் சொன்னார். செல்வமணிக்கும் அவளுக்கு ஆதரவாகப் பேசியவர்களுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒரு ஆளுக்காக ஊரை எதிர்க்கவும் பகைக்கவும் முடியுமா?
“ஓட்டப் பந்தயத்தில சிராச்சுக்கிட்டு ஓடும்போது மாடு முட்டி செத்திட்டான்” என்று எழுதிக் கையெழுத்துப் போடுங்கள் என்று தலைவர் கேட்டார். ஊரும் கேட்டது.
“சுளுக்கியால குத்துனத என் ரெண்டு கண்ணால பாத்தன்” என்று சொன்ன செல்வமணியின் கதறல் யாருடைய காதிலும் விழவில்லை. தலைவரும், ஊராரும் “மாடு முட்டித்தான் முத்துராமன் செத்தான்” என்று சொன்ன பேச்சுத்தான் எடுப்பட்டது. ஊர் கூடிவிட்டால், கூட்டம் கூடிவிட்டால் அதுதான் சட்டம்.
யாருக்கும் தெரியாமல் போலீசுக்குப் போகலாமா என்ற எண்ணம் செல்வமணி உண்டானது. போலீசுக்குப் போகலாம். கேஸ் கொடுக்கலாம். சாட்சி சொல்ல யார் வருவார்கள் என்ற கேள்வி எழுந்தது. சாமி ஊர்வலத்தின்போது கும்பிட்டதற்காக நான்கு வருஷத்திற்கு முன்பு ஜெயலட்சுமியினுடைய கண்களைப் பிடுங்கிய ஊர். தேர் வடத்தைத் தொட்டுவிட்டாள் என்று ஒன்பது வயதுப் பிள்ளை என்றுகூடப் பார்க்காமல் இரண்டு வருஷத்திற்கு முன்பு ரோஸியின் கையில் தீயை வைத்துக் கொள்ளுத்திய ஊர். அப்படிப்பட்ட ஊரை எதிர்த்துக்கொண்டு போலீசுக்குப் போக முடியுமா? போனாலும் ஜெயிக்க முடியுமா? ஊரைப் பகைத்துக்கொண்டு போலீசுக்கு போனதற்காக இரவில் வீட்டைக் கொளுத்தலாம். தனியாக மாட்டிக்கொண்டால் மானபங்கம் செய்யலாம். வீட்டைக் கொளுத்தினால் நான்கு உயிர் போகும். மானபங்கம் நடக்கும். எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு போலீசுக்குப் போகலாம் என்றால் தனக்கென்று யார் இருக்கிறார்கள்? தனக்கும் அண்ணன், தம்பிகள் இல்லை. முத்துராமனுக்கும் அண்ணன், தம்பிகள் என்று யாருமில்லை. முத்துராமனுக்காக யார் சண்டைபோடுவார்கள்? சண்டை போட்டாலும் எத்தனை நாள் போடுவார்கள்? இரவும் பகலும் பிணத்துடன் தான் ஒருத்தி மட்டும்தானே இருக்கவேண்டும் என்று யோசித்த செல்வமணி “மாட்டுக்காக நடத்தப்பட்ட ஓட்டப் பந்தயத்தில் மாடு முட்டி முத்துராமன் இறந்துவிட்டான்” என்று எழுதிய பேப்பரில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தாள். கையெழுத்துப் போடும்போது அவள் அழவில்லை. அவளுடைய கைகள் நடுங்கவில்லை.
நடந்த முமுக் கதையையும் சொன்னாலாவது மாற்றுச்சான்றிதழைத் தருவாரா என்று யோசித்தாள். மாற்றுச்சான்றிதழை வாங்காமல் இந்த இடத்தை விட்டுப் போகக்கூடாது என்பது மாதிரி செல்வமணியும் அவளுடையப் பிள்ளைகளும் நின்ற இடத்திலேயே நின்றுகொண்டிருந்தனர்.
ராமநாதன் உள்ளே வந்த வேகத்திலேயே “கிளம்புங்கம்மா. மணி ஆயிடிச்சி” என்று கடுகடுப்பாக சொன்னார்.
“ஒரு உசுரு போயிருச்சி. இந்த மூணு புள்ளைங்களோட உசுராவது எனக்கு வேணும். அதுக்காகவாவது டி.சி.யத் தாங்க சார்.” என்று சொல்லிவிட்டுக் கையெடுத்து கும்பிட்டாள். அப்போதுதான் அவளுடைய கண்களிலிருந்து சரம்சரமாகக் கண்ணீர் வழிந்தது.
– ஆனந்த விகடன் 19.04.2017