(1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கதை உறுப்பினர்
ஆடவர்
1. கொரார்டு : அரிய மருத்துவன் – ஹெலெனா தந்தை.
2. பெர்ட்டிரம் :- காலஞ் சென்ற ரூஹிலான் பெருமகன் புதல்வன்- ஹெலெனாவின் காதலுக் காளாய் அவளை வெறுத்தும் இறுதியில் மணந்து ஏற்றுக்கொண்டவன்.
3. பிரான்சு அரசன் :- காலஞ் சென்ற ரூஸிலான் பெருமகனிடம் பற்றுக் கொண்டவன் – ஹெலெனாவையும் பெர்ட்டிரமையும் மணவினையால் இணைத்தவன்.
பெண்டிர்
1. ரூஸிலான் பெருமாட்டி : ரூஸிலான் பெருமகன் மனைவி – பெர்ட்டிரம் தாய் – ஹெலெனாவின் காதலுக்குத் துணை தந்தவள்.
2. ஹெலெனா : மருத்துவன் கொரார்டு மகள் – தந்தை இறந்த பின், ரூஹிலான் பெருங்குடியில் பணியாளாய்ப் பெர்ட்மாமைக் காதலித்து அரசனுதவியால் மணந்தவள்.
3. தயானா : பிளாரென்சு நகரிலுள்ள நங்கை – ஹெலெனாவின் ஆருயிர்த் தோழியானவள் – பெர்ட்டிரம் தகாக் காதலுக்காளாய் அதனை மறுத்தவள்.
4 மூதாட்டி : தயானாவின் தாய்.
கதைச் சுருக்கம்
கொரார்டு அரிய மருத்துவன். அவன் இறந்தபின் அவன் மகள் ஹெலெனா ரூஸிலான் பெருங்குடியில் பணி யாளாய் அமர்ந்தாள். பிரான்சு அரசன் நண்பனாகிய ரூஸி லான் பெருமகன் இறந்தபின் அவன் மகன் பொட்டிரமை அரசன் அமைச்சர் மூலம் அழைத்துத் தன்னிடம் வைத்துக் கொண்டான். அவனடம் உள்ளூறக் காதல் கொண்ட ஹெலெனா, அப்பகையில் ரூஸிலான் பெருமாட்டியின் துணை பெற்று அரசனிடம் சென்று அவனது பாண்டு நோயைத் தந்தையின் அருமருந்தொன் றால் குணப்படுத்தினாள். அரசன் மகிழ்ச்சியுற்று அவளுக்குத் தன் கணையாழியைக் கொடுத்த துடன், அவள் விரும்பிய ஆடவனை மணமுடிப்பதாகச் சொல்ல, பெர்ட்டிரமையே விரும்பி மணமுடித்தாள். பெர்ட்டிரம் அவளை வெறுத்து ரூஸிலானில் விட்டு விட்டு பிளாரென்சு சென்று, அங்கே படைத் தலைவனாய்த் தயானா என்ற பெண்ணைக் காதலித்தான்.
சின்னாளில் மன வெறுப்புற்ற ஹெலெனாவும் வெளியேகித் திரிந்து, இறுதியில் தற்செயலாய் அதே பிளாரென் சில் வந்து ஹெலெனாவின் ஆருயிர்த் தோழியாய் அவள் துணையால் அவளுடையில் பெர்ட்டி ரமுடன் தனியிட மடைந்து, அவன் காதலைப் பெற்று அவன் கணையாழியை வாங்கிக்கொண் டாள். இதற்கிடையில் ரூஸிலானுக்குச் சென்று மண மக்கள் பிரிவு கேட்டு வருந்திய அரசன், பெர்ட்டி ரமை யழைத்து ஹெலெனா பற்றி உசாவி, அவன் அவளை வெறுத்து வேறு பெண்ணைக் களவு முறையில் மணந்ததாகக் கூறினான். அதே சமயம் மறைவிலிருந்து ஹெலெனாவும் தயானாவும் வந்து கணையாழி காட்டிப் பொட்டிரமின் மனத்தை மாற்றினர். பொட்டிரம் ஹெலெனாவுடன் வாழ்ந்தான். அரசன் உதவி யால் தயானா இன்னொரு பெருமகனை மணந்தாள்.
நன்கு முடிவுறின் நலமே அனைத்தும்
1.கைக்கிளைக் காதல்
பிரான்சு நாட்டில் கொரார்டு (Goarard) என்ற ஓர் அரிய மருத்துவன் இருந்தான். அவன் நோய் ஆராய்ச்சியிலும் மருந்தாராய்ச்சியிலும் ஒப்பற்றவன். அந்நாளைய மருத்துவரறிவுக்கு அப்பாற்பட்ட பல புதிய மருந்து வகைகள் அவனுக்குத் தெரிந்திருந்தன.
கொரார்டுக்கு ஹெலெனா (Helena) என்னும் புதல்வி ஒருத்தி இருந்தாள். கொரார்டு அவளுக்கு எத்தகைய பொருட்குவையையும் வைக்கவில்லை. ஆயினும் அவன் தன் மருந்து வகைகளையும் அவற்றை வழங்கும் முறைகளையு மட்டும் அவளுக்குக் கற்பித்திருந்தான்.
தந்தை இறந்தபின் ஹெலெனா, தன் தந்தைக்கு அறிமுகமான ரூஸிலான் (Rousillon) என்ற பெருங் குடியிற் சென்று, பணியாளாய் அமர்ந்திருந்தாள். அப் பெருங்குடியின் பெருந்தலைவனா யிருந்த பழைய ரூஸிலான் பெருமகனார் இறந்துவிட்டமையால், இளைஞனாகிய அவர் மகன் பெர்ட்டிரம் (Bertram) புதிய ரூஸிலான் பெருமகன் ஆனான்.
பழைய ரூஸிலான் பெருமகனார் பிரான்சு அரச னுக்கு நெருங்கிய நண்பர். ஆகவே, அரசன் அவர் மகனாகிய பெர்ட்டிரமைக் காண விரும்பி அவனை அழைத்து வரும் பொருட்டுத் தன் அமைச்சனான லாபியூ (Lafew) என்பவனை, அவன்பால் அனுப்பினான். பெர்ட்டிரம் அவ்வமைச்சனுடன் புறப்பட்டு அரச னைக் காணச் சென்றான்.
ரூஸிலான் குடியில் காலடி வைத்தது முதல் ஹெலெனா தன் நெஞ்சை முற் றிலும் பொட்டிரமுக்குப் பறி கொடுத்தாள். ஆயினும், தன் ஏழைமையும் துணையற்ற தன்மையும் எங்கே, அவன் உயர்குடியும் புகழும் எங்கே, என்று அவள் மனம் சாம்பினாள்.
பெர்ட்டிரமின் தாயான ரூஸிலான் பெருமாட்டி ஹெலெ னாவின் மன நிலையை உய்த் துணர்ந்து கொண்டாள். அவள் பார்வைக்கு, ஹெலெனாவின் ஏழைமையைவிட அவள் அழகும் குணமுமே விளக்கமாகத் தோன் – றின. ஆகவே அவள் ஹெலெனா வின் காதலுக்கு இணக்கமளித்தாள். ஆயினும், பெர்ட்டிரம் அவளை மதியாமல் அசட்டையாயிருந்தான். அதனால் அவள் மிகவும் மனச் சோர்வு அடைய நேர்ந்தது.
பெர்ட்டிரம் போனபோது ஹெலெனா, அவன் போன பக்கமே நோக்கி நின்று, “அந்தோ நெஞ் சாரக் கலந்து உறவாடாவிடினும் இதுவரையிற் கண்ணார வேனுங் காண முடிந்தது; இன்று அதற்கும் வழியில்லையே” என்று மன மாழ்கினாள்.
பெர்ட்டிரமை அழைத்துப் போக வந்த அமைச்சன் அரசவைக் காரியங்கள் பலவும் பேசிக் கொண்டிருந்தபோது, அரசன் பாண்டு நோயினால் வருந்துகின்றா னென்றும், அதற்கு அரண் மனை மருத்துவர் அனைவரும் பற்பல மருந்துகள் கொடுத்தும் குணம் வந்தபாடில்லை என்றும் கூறியது அவள் நினைவிற்கு வந்தது. வரவே, அவள் மனத்தில் சில ஆழ்ந்த எண்ணங்கள் தோன்றின. “ஆ! என் தந்தை குறித்துத் தந்துபோன புது வகை மருந்து களுள் பாண்டு நோய்க்கான மருந்தும் ஒன் றன்றோ? அதன் மூலம் ஒருவேளை என் எண்ணங்கள் ஈடேறு மாயின் எவ்வளவு சிறப்பாகும்” என்று அவள் வாய் விட்டுக் கூறினாள்.
அவள் கூறிய மொழிகளை, அடுத்து நின்று கேட்டுக்கொண்டிருந்த ரூஸிலான் பெருமாட்டி, “அரசன் பிணியும், இம்மங்கை பிணியும் ஒருங்கே நீங்குதல் திருவுளமாயின், அஃது அங்ஙனமே நிறைவேறுக” என்று மனத்துட்கொண்டு, அவளை அரசன்பால் விடுத்தனள்.
ஹெலெனா, அரசனை அணுகுவதே முதலில் அரு மையாக இருந்தது. அணுகியபோதும் அவள் மருந்தை அரசன் உட்கொள்ளுவதற்கு அவன் அவையோர் ஒருப்படவில்லை. இந்நிலையில், அரசன் காதில் இச்செய்தி விழுந்தது. தனது நல்வினைப் பயனால் தூண்டப்பட்டு அவன், “எப்படியும் நோய் குண மடைவதாகக் காணவில்லை. பிற மருத்துவர் அனைவரும் கைவிட்டனர். இப்புது மருந்தால் குணம் ஏற் படாவிட்டாலும் கேடென்னை? அஃது ஒருவேளை என் உயிர் கொள்ளும் நஞ்சாய் இருந்தாலுங்கூட இவ் வேளைக்கு அது என்னை நோயினின்றும் தப்பவைக் கும் கருவியாகவே அமையும்” என்று கூறி, அவளை வரவிடுத்தான். பின்பு அவள் கொரார்டின் புதல்வி என்றும் மருந்து கொரார்டின் புது மருந்துகளுள் ஒன்று என்றும் கேட்ட போது அரசனுக்குப் பின்னும் நம்பிக்கை உண்டாயிற்று.
ரூவிலான் பெருமாட்டியும் ஹெலெனாவும் கண்ட ‘கனவு நனவாயிற்று. அம்மருந்து உட்கொண்ட இரண்டு மூன்று நாட்களில் அரசன் நோயின் அடை யாளமே இல்லாதபடி முழுமையும் குணமடைந்தான். ஆகவே, அவன் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டு அவளுக்கு விலை மதிப்பற்ற ஒரு கணையாழியைப் பரிசாக வழங்கினான். அதோடு அவ் அவையில் யாரை வேண்டுமானாலும் அவள் மணந்து கொள்ளலாம் என்றும், அவளுக்கு அவன் உறுதி கொடுத்தான். ஹெலெனா, அங்கே வேறு யார்மீதும் கண்ணெடுத்துப் பாராமல் ரூஸிலான் பெருமகனாகிய பெர்ட்டிரமையே கணவனாகத் தெரிந்தெடுத்தாள்.
பெர்ட்டிரம், பழக்க மிகுதியினாலும் பணியாள் என்ற புறக்கணிப்பினாலும் ஹெலெனாவின் அழகை யும் உயர் குணங்களையும் மதியாதவனா யிருந்தான். ஆகவே, தன் விருப்பத்திற்கு மாறாக அவள் தன் மீது சுமத்தப்பட்டதை அவன் வெறுத்தான். ஆயினும் என் செய்வது? அரசன் ஆணையை மறுப்பது முடி யாது ; ஆதலால், பெர்ட்டிரம் அவளை வேண்டா வெறுப்பாக மணந்து கொண்டான்.
ஆயினும், மணத்தைத்தான் ஒருவர் வலிந்து சுமத்த முடியுமே யன்றிக் காதலைச் சுமத்த முடியா தன்றோ? ஹெலெனா, ‘காதலற்ற மணம்’ என்னும் கடுநரகிற்கு ஆளானாள். மண நாளிலேயே பெர்ட்டி ரம், அவள் பக்கம் பாராமல் கடுகடுத்துப் பேசவும் சீறிவிழவுந் தொடங்கினான். அவற்றையெல்லாம் அவள் பொறுமையே உருவாக நின்று தாங்கிவந்தும், அவன் அவள்மேலுள்ள வெறுப்பைச் சற்றும் குறைக்காமல் அவளைத் திட்டி, “என் குடிப் பெருமையையும் பொருளையும் எண்ணித்தானே என் தலைக்குக் கண்ணி வைத்தாய். நீ அவற்றையே போய் மணந்து வாழ்” என்று அவளை ரூளிலானுக்கே அனுப்பினான். அனுப்பிவிட்டுப் பல நாடுகளிலும் திரிந்து இறுதியில் பிளாரென்சு என்னும் நகரம் வந்து, அந்தகர் அரசனது படையிற் சேர்ந்தான். வேண்டா மனைவியுடன் வாழ்வதை விடப் போரில் மாள் வதே. நல்லது என்ற எண்ணத்துடன், அவன் வேண்டு மென்றே போர் முனைகளிற் சென்று நின்று காலனை விரும்பி வழிபாடு செய்தான். ஆனால், இவ்வகையி னால் அவனுக்கு, அவன் விரும்பிய முடிவு சிறிதும் கிட்டவில்லை. நேர்மாறாக அவன் வெற்றியும் புகழும் மிகுந்து படைத்தலைவன் ஆவதற்கே அஃது உதவிற்று.
ரூஸிலான் பெருமாட்டி, முதலில், ஹெலெனா வுக்கு ஆறுதலாக , “பெர்ட்டிரம் சீற்றந் தணிந்து வருவான்; பொறுத்திரு” என்று கூறிவந்தாள். ஆனால், திங்கள் ஒன்றிரண்டாயின. வரும் வகை எதுவுங் காணோம். ஹெலெனாவுக்கு, வாழ்க்கையிற் பற்று வர வரக் குறையலாயிற்று. ரூஸிலான் பெரு மாட்டிக்கோ, உலக வெறுப்புப் பின்னும் மிகுதியா யிற்று .
இந்நிலையில், பெர்ட்டிரமிட மிருந்து கடித மொன்று வந்தது. வற்றற்பாலையில் நீர்வேட்கையாற் செயலிழந்தவன், நீரென்ற பெயரைக் கேட்டவுடனே உயிர்த்தெழுவது போல, ஹெலெனா உள்ளந்துடிக்க எழுந்து சென்றாள். ரூஸிலான் பெருமாட்டியும் எல்லாம் வல்ல இறைவனை வணங்கிக் கடிதத்தைப் பிரித்துப் பார்த்தாள். பார்த்தவுடனே அவள், கை களும் உடலும் துடிக்க, “சீ சிறுமைப் பட்ட பதரே” என்று கூறி நிலத்திற் சாய்ந்தாள்.
அக் கடிதத்தில், “பொட்டிரம் மண நாளிற் கொண்ட வெறுப்புச் சற்றும் மாறாது. தாயே, ஹெலெனாவுக்கு உரியவன் நானல்லன்; அவள் உன் னையும் உன் குடியையும் பொருளையும் விரும்பினாளே யன்றி, என்னையோ என் காதலையோ விரும்பினவள் அல்லள்; அவற்றையே அவள் அடைக; நான் இனி அவளுக்கும் உனக்கும் உரிய அவ்வீட்டில் நுழை யேன்” என்று எழுதியிருந்தான்.
ஹெலெனாவின் உள்ளத்தில் பாலைப் புதர்போல் உலர்ந்து நின்ற கைக்கிளைக் காதலையும் இக் கடிதத் தின் தீமொழிகள் எரித்தன. ” இத் தீயவளின் தீவினைக்காக, வீட்டுக் குரியவர் வீட்டைத் துறப்பதா? வேண்டாம் – நானே போய்விடுகிறேன்” என்று மொழிந்து அவள் வெளியேறினாள். ரூஸிலான் பெரு மாட்டி எவ்வளவோ தடுத்தும், அவள் புலி கண்டு மருண் டோடுபவள் போல் ஓடினாள்.
2.மாதர் நட்பு
அப்பொழுது அவள் உள்ளம் பட்ட பாட்டை யாரே கணித்துக் கூறவல்லார்? ஒரு நேரம், ‘காதலற்ற இவ்வுலகினின்று அகன்று விடுவோமா’ என்று எண்ணுவாள். ஆனால் அடுத்த நேரம், ‘காதலனற்ற மறு உலகில் எங்ஙனம் சென்று வாழ்வேன்’ என்று எண்ணி அலைக்கழிவாள்.
அவள் மனதில் ஒன்றன்பின் ஒன்றாகப் பெர்ட் டிரமின் வாழ்க்கைப் படங்கள் எழுந்தெழுந்து நடன மிட்டன. அதன் இறுதிக் காட்சியை நினைக்க நினைக்க அவள் அங்கங் குலைந்தது. பெர்ட்டிரம் அன்று வெறுப்பு நிறைந்த கண்களோடு அவளை ஏளன நகை கொண்டு நோக்கிப் , “பேதாய், எனக் கும் உன் காதலுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. இதோ, என் கையிலிருக்கும் இக்கணையாழியை என் னிடமிருந்து, எத்தகைத் திற மிருந்தாலும் உன்னால் வாங்க முடியுமா? அதுபோலத்தான் என் காதலைப் பெறும் திறமும் இருக்கும். நீ இக் கணையாழியைப் பெறும் நாளே என் காதலைப் பெறும் நாள்” என்று நன்கு முடிவுறின் நலமே அனைத்தும் 9 சீறி யுரைத்த கனல் மொழிகள் அவளது நெஞ்சத் திரையில் கொழுந்துவிட் டெரிந்து துன்பமாகிய புகையை எழுப்பின.
என் செய்வாள் பாவம்! பஞ்சு படப் பதைக்கும் பாதத்தையுடைய அம்மெல்லியலாள், பருக்கைக் கற்க ளென்றும் படர்முள்ளென்றும் படுக ரென்றும் பாராமல் அலைந்து திரிந்து, இறுதியில், வினைப் பய னின் வலியால், பெர்ட்டிரம் வாழ்ந்துவந்த அதே பிளாரென்ஸில் வந்துசேர்ந்தாள்.
ஆ, விதியின் இயைபு கிடந்தவாறு என்னே! ஹெலெனாவை விட்டொழிய வேண்டும் என்று வெளிவந்த பெர்ட்டிரமும், டெர்ட்டிரமின் வீட்டி லீராது அகல வேண்டு மென்று புறப்பட்ட ஹெலெ னாவும் இப்படி அயல் நாட்டில் வந்தொன்றுதல் வியப்புடையதன்றோ ?
ஹெலெனா அவ்வூரில் ஒரு மூதாட்டியுடன் தங்கி அவள் ஆதரவில் இருந்துவந்தாள். அம் மூதாட்டி யின் புதல்வி தயானா (Diana) என்பவள் ஹெலெனா வின் மறு பதிப்போ என்று சொல்லும்படி ஒத்த பருவமும் ஒத்த உருவமும் சாயலும் உடையவளா யிருந்தாள். சின்னாட்களுக்குள் அவ் விருவரிடையே இணைபிரியா நட்பும் பற்றும் ஏற்பட்டன. அப்போது அவர்கள் ஒருவர்க் கொருவர் பொதுச் செய்திகளையும், பின்பு தத்தம் விருப்பு வெறுப்புக்களையும், இறு தியில் தத்தம் வாழ்க்கைச் செய்திகளையும் கூறிக் கொண்டனர்.
அவர்கள் இருவரும், இரு வேறுடலிலும் மாறிப் –புக்க ஒரே உள்ளத்தின் இரு பகுதிகளே என்னும்படி இங்ஙனங் கனிவுடன் கலந்து உறவாடி இருக்கு நாளில், ஒருநாள் ஹெலெனா கல்லுங் கரையும் வண்ணம் தன் காதற் கதையையும் காதலனது புறக் கணிப்பின் போக்கையுங் கூறினாள். கேட்ட தயானா அத்தனையும் தனக்கே நிகழ்ந்த தெனத் துடித்துத் தத்தளித்தாள்.
எல்லா வகைகளிலும் தயானா ஹெலெனாவை முற்றிலும் ஒத்து இருந்தாள். ஆனால், ஹெலெனா, காத லொளியைக் கண்ணுற்றும் அதன் கொடிய வெம்மையுட் பட்டுக் கருகி வாடிய மலர் போன்ற வள். தயானா வோ, காதலின் கடைக்கணிப்புக்கும் புறக்கணிப்புக்கும் ஒன்றுபோல் ஆளாகாத நறுமலர் போன்றவள். ஹெலெனாவின் கதையைக் கேட்கக் கேட்கத் தயானாவுக்குத் துயர் ஒருபுறம் நேரினும் அத்தகைய துயரினும், ஹெலெனாவைத் தன் வழிப் படுத்தி அடிமையாக்கும் அக் காதல் எத்தகைய தென்றும் அத்தகைய காதலை அவளிடம் எழுப்பிய தலைமகன் யாவன் என்றும் அறியும் வேட்கை அதனினும் மிகுந்து நின்றது.
அவ்வேட்கை மிக்க தயானா, அதற்கேற்பத் தான் அவ்வகையிற் கண்ட ஒரே நிகழ்ச்சியை ஹெலெனாவுக்கு எடுத்துக் கூறினள். உயர் நிலையி லுள்ளவனும் அழகு மிக்கவனும் மங்கையர் கருத்தை ஈர்ப்பவனுமான ஓர் இளைஞன், தான் வெறுத்துத் தள்ளினும் போகாமல் தன்னைத் துன்புறுத்துவதை யும், அவனிடமோ பிறரெவரிடமோ தனக்கு ஹெலெனாவின் காதலைப் போன்ற உணர்ச்சி ஏற் படாததையும் அவள் தெளிந்த உள்ளத்தோடு எடுத்துரைத்தாள்.
நன்கு முடிவுறின் நலமே அனைத்தும் 11 பலநாள் இங்ஙனம் உரையாடி வருகையில் இரு வரும், தம்மில் ஒருவரைப் புறக்கணிக்கும் காதலனை யும், மற்றொருவர் புறக்கணிப்புக்கு ஆளாகுங் காத லனையும் பற்றிப் பலவும் பேசுவர். அப்போது ஹெலெனா, அவ் விருவரைப் பற்றிய உரைகளும் பெரிதும் ஒத்திருக்கக் கண்டு வியந்து ஒருநாள் தயா னாவினிடம் அவளை நாடிய இளைஞனின் பெயர் என்ன என்று கேட்டாள். அவள் பொட்டிரம் என்று கூறியதும், ஹெலெனா திடுக்கிட்டு “என்ன, என்ன, பெர்ட்டி ரமா? பெர்ட்டிரமா!” என்றாள்.
ஹெலெனாவின் நிலைகண்டு வியப்புற்ற தயானா, “என் ஆருயிர்த் தோழீ, ஏன், அப் பெயரில் என்ன? அதனால் உனக்கு ஏன் இத்தனை பரபரப்பு” என்றாள் .
“தயானா! இன்னும் அவரைப்பற்றிச் சற்றுக் கூறு. என் காதலன் பெயரும் அதுவேயாதலால் என் மனம் பதறுகின்றது.”
“அவர் ஏதோ ரூஸிலான் குடியைச் சேர்ந்தவர் என்று என்னிடம் கூறினார்.”
இவ்வுரை கேட்டதும் ஹெலெனா இடியே றுண்ட அரவமென அலறி வீழ்ந்து, “ஆ, கொடுமை கொடுமை : கடவுளே இதுவும் உன் திருவுள்ளமோ” என்று புலம்பி மயங்கினாள்.
இப்போது, “அந்நங்கையர் இருவர் வாழ்க்கை யையும் இரு வேறு வகையிற் பாழ்படுத்தி வருபவர், இருவேறு மனிதரல்லர்; ஒருவரே” என்பது அவர் களுக்கு விளங்கிற்று. அதுமுதல் அவர்கள் பெர்ட்டிரமைப்பற்றி முன் போல் கனிவுடன் உரையாடுவதில்லை. ஆனால், ஹெலெனா மட்டும் தன்னை வெறுத்த பெர்ட்டிரமை, அவன் விரும்பினும் தான் விரும்பாது. ஆட்டி வைக்கும் இத்தோழி மூலமே தன் வயப்படுத் தலாம் என்று கருதி, அக் கருத்தைத் தயானாவிற்குத் தெரிவித்தாள். தயானாவின் தாய் பெர்ட்டிரமிடந் தன் மகளுக்குள்ள வெறுப்பையும், ஹெலெனாவின் துயரையும் கண்டு அவர்கள் ஏற்பாட்டிற்கு இணங்கினாள்.
3.பழம் நழுவிப் பாலில் விழுந்தது!
தயானா என்றும் பெர்ட்டிரமை வெறுத்து அவன் காதலைப் புறக்கணித்தே வந்திருந்தாள். அவளும் அவள் தாயும் அவனிடம், “நீங்கள் பெரிய இடத் தைச் சேர்ந்தவர்கள். உங்களுடன் ஒத்த மண வாழ்க்கை கொள்ள எங்களுக்குத் தகுதியில்லை ” என்று தெளிவாகத் தங்கருத்தை அறிவித்து மிருந் தனர். அவ்வாறிருந்தும், காதலின் தூய்மையை முற் றும் அறியாத பெர்ட்டிரம், “மண வாழ்வு கிட்டா விடினுங் கவலையில்லை; எவ்வகையிலும் அவளை அடைந்தே தீருவேன்” என்று தனது சிற்றின்ப வேட்கை தோன்றக் கூறினான்.
கற்பிலும் தன் மதிப்பிலும் குறைவுறாச் செல்வர் பகளாகிய தயானாவும் அவள் தாயும் இத் தீமொழிகள் கேட்டு நெருப்பிற் பட்ட புழுவெனத் துடித்துப் பொங்கினும், ஹெலெனாவின் நன்மையை எண்ணித் தப் மை அடக்கிக்கொண்டு, அவன் ஏற்பாட்டிற்கு இணங்கியவர்கள் போல நடித்து, அவனைத் தயானா தனியே வந்து காணுவதற்கான இடமும் நேரமும் குறித்தனர். குறித்த நேரப்படி குறித்த விடத்தில் பெர்ட்டிரம் வர, ஹெலெனா தயானாவின் தோற்றத்துடன் அங்கு வந்து ஆராக் காதலோடு அவனுடன் அளவளாவி மகிழ்ந்தாள். அம்மகிழ்ச்சி நேரத்தில் ஹெலெனாவின் கணையாழியைப் பெர்ட்டிரம் வாங்கிக் கொண்டான். அதற்கு மாறாக, அவன் தன் கணையாழியை ஹெலெனாவிடம் கொடுத்தான்.
இதற்கிடையில், பிணி நீங்கப்பெற்ற அரசன் அதற்குக் காரணமான ஹெலெனாவின் மண வாழ்வைக் கண்ணுற்று மகிழ எண்ணி, அவளையும் பெர்ட்டிரமையும் தன்னிடம் வருமாறு அழைப்பு விடுத்தான். அப்பொழுது, அவர்கள் இணக்கமின்றித் தனித்தனி பிரிந்து காணாமற் போனதை ரூஸிலான் பெருமாட்டி மூலம் அறிந்து, அரசன் நேரில் வந்து அப்பெருமாட்டிக்கு ஆறுதல் சொல்லுவதோடு தானே முயன்று அவர்களைத் தேடுவதென்றும் முற்பட்டான்.
அவ்வண்ணமே அரசன், ரூஸிலான் வந்து ரூஸிலான் பெருமாட்டியின் பெருந் துயர் கண்டு தன் னிலை மறந்து கண்ணீர் உகுத்துக் கதறினான். பின்பு திறனுடைய தூதரையும் ஒற்றரையும் ஏவி, ஹெலெ னாவையும், பெர்ட்டிரமையும் தேடிக் கொணருமாறு பணித்தான். அவன் தூதரும் ஒற்றரும் அவர்களைப் பல நாள் பல இடங்களிலும் தேடினர். இறுதியில் அவர்கள், பெர்ட்டிரமைப் பிளாரென்சில் கண்டு, அவ்வூர் அரசன் இணக்கம் பெற்று அவனை கொண்டுவந்தனர். இச் செய்தி யறிந்த ஹெலெனா, தானும் தயானாவையும் அவள் தாயையும் உடன் கொண்டு நேரே ரூஸிலான் வந்தாள்.
அரசன் பெர்ட்டிரமிடம் ஹெலெனாவைப் பற்றி உசாவியபோது, அவள் உயிருடன் இருக்கிறாளோ மாண்டொழிந்தாளோ தனக்கொன்றுந் தெரியா தென்றும், அவள் இது வரையில் மாண்டிராவிட்டால் விரைவில் மாள வேண்டு மென்றே தன் மனம் விரும்புகின்ற தென்றும், அவள் மாண்டிருப்பின், அதனை அறிந்த மறு நொடியே தான் இன்னொரு மாதை மணஞ் செய்துகொள்ளும்படி ஏற்பாடு ஹெலெனா அரசனது அழைப்பைப் பெறுதல் செய்யப்பட்டிருக்கின்றதென்றுங் கூறினான். அரசன், ‘இன்னொரு மாதென்றது. யார்’ – என்று கேட்கப் பெர்ட்டிரம், தயானாவைப்பற்றி மொழிந்து, அவ ளுடன் தான் ஏற்கெனவே உளமுவந்து களவியல் முறையில் மணஞ்செய்து கொண்டதாகவுந் தெரிவித்தான்.
அரசன் பெர்ட்டிரமிடம் எல்லையற்ற சினங் கொண்டானாயினும், ஹெலெனாவின் செய்தி யறியாது எதுவுங் கூறமுடியாத நிலைமையிலிருந்தான்.
அப்போது, ஹெலெனாவே முன் வருவது கண்டு, அரசன் எல்லையற்ற மகிழ்ச்சியோடு அவளை எதிர் கொண்டு அழைத்தான். உடனே அவளைப் பெர்ட் டிரமிடம் அழைத்துச் சென்று, அவளை ஏற்றுக் கொள்ளும்படி கூறப், பெர்ட்டிரம், தான் மனங் கலந்து கேசிக்கும் மங்கையையன்றி, வேறு யாரை யும் ஏற்க முடியா தென்றும், வேண்டுமானால் தான் விரும்பிய மாதை மணக்கும் உறுதியுடன் இவள் இறக்கும் வரைக்குங் காத்திருக்கத் துணிந்து விட்டதாகவும் கூறினான்.
அரசன் சினங்கொண்டு, ‘இனி இவன் இறப்பதே நன் ‘றென்று பெர்ட்டிரமை வீழ்த்தப்புகும் எல்லையில், அவன் கையிற் கிடந்த கணையாழி அரசன் கண்களுக் குப் புலப்பட்டது. “இது நான் ஹெலெனாவுக்குக் கொடுத்த கணையாழி அன்றோ! இஃது உன் கையில் எப்படி வந்தது? கூறுக” என்று கேட்க, அவன் திகைத்து மிரள மிரள விழித்தான்.
அந்நேரத்தில் ஹெலெனா இடையிட்டுப் பெர்ட் டிரமிடம் தனக்கு ஒரு வழக்கிருக்கின்ற தென்று கூறினாள். ஹெலெனா என்ன சொல்லப் போகிறாள் என்று பெர்ட்டிரம் அவள் பக்கம் திரும்பியதும், அவள் தன் கையில் அணிந்திருந்த பெர்ட்டிரமின் கணையாழியை அவனிடம் காட்டி, “இதனை நான் பெருகின்ற நாளே தம் காதலைப் பெறும் நாள் என்று முன்பு மொழிந் திருக்கின்றீர்; அவ்வாறே, கணையாழியைப் பெற்றேன்; தம் காதலையும் பெற்றவளானேன்; இப்போது யாது கூறுகின்றீர்” என்று தீர்ந்த குரலில் தனது வழக்கை எடுத்துரைத்தாள்.
பெர்ட்டிரம் அது கேட்டு, நிகழ்ந்தது இன்ன தென்றறிய இயலாமல் திடுக்கிட்டு, “இது நான் என் காதலிக்கன்றோ கொடுத்தது! நீ திருடியோ, அல்லது கொலை செய்தோதான் இதனைக் கவர்ந்திருக்க வேண்டும்; அப்படியாயின், உன்னை எளிதில் விடேன்” என்றான்.
ஹெலெனா, “அரசே, ஏழையாயினும் யான் திருட்டும், கொலையும், கொள்ளையும் அறியேன்; இச் செல்வர் என் உள்ளம் கொள்ளை கொண்டவர். போதாதென்று என் தோழி ஒருத்தியின் காதலைத் திருட்டாற் பெறவும், அவள் கற்பைக் கொள்ளை கொள்ளவும் முயன்றுள்ளார்” என்று கூறி, மறைந்து நின்ற தயானாவையும் அவள் தாயையும் வெளியே வருவித்து, அவர்கள் மூலம் கணவன் குறிப்பிட்ட களவியல் மணம் அவன் நினைத்தபடி வேறொரு மாதுடனன்று ; தன்னுடனேயே நிகழ்ந்தது என்பதை விளக்கினாள்.
பெர்ட்டிரம், ஹெலெனாவின் திறனையும் வடமீன் போல் சற்றும் மாறாத நிலையான காதலையுங் கண்டு, தான் செய்த பிழைகளுக்கெல்லாம் அவள் பால் மன்னிப்புக் கேட்டு அவளை மனமார ஏற்றுக்கொண்டான். தயானாவினிடமும் தன் பிழை பொறுக்குமாறு வேண்டி, அவளைத் தன் தங்கையாகக் கருதி நடத்தலானான்.
தயானாவின் ஒப்பற்ற கற்புறுதி கண்டு வியந்த மன்னன், ஹெலெனாவின் திறத்துக்குப் பரிசாக அவளுக்குப் பெர்ட்டிரமை அளித்தது போல், தயானாவுக்கும் தன் பெருமக்களுள் ஒருவரைக் கணவனாகத் தேர்ந்தெடுத்து வழங்கினான்.
– K.அப்பாதுரைப் பிள்ளை, சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் (ஆறாம் புத்தகம்), முதற் பதிப்பு: ஜனவரி 1942, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை