கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 27, 2018
பார்வையிட்டோர்: 5,320 
 

அளவில் சிறிய கோவில் தான் சிலசமயம் அர்ச்சகரையும், கைலாசநாதரையும் தவிர வேறு யாரும் இருக்கமாட்டார்கள். சிறிய பிரகாரம், நவகிரக சந்நதி, பைரவர் எல்லாம் உண்டு. அம்மன் பெரியநாயகி, லோகத்துக்கும் அவள் தான் பெரியநாயகி. நாயகன் யாரென்று என் வாயால் சொல்ல வேண்டுமா? கோயிலுக்கென்று நுழைவு வாயில் இடது பக்கத்தில் சிறிய தோட்டம் உண்டு. சொல்லிக் கொள்கிற மாதிரி பெரிய வரும்படி எதுவுமில்லை. கிழக்கு நோக்கியிருக்கும் வாயிலில் பாமிணி ஆறு ஓடுகிறது. தெற்கு நோக்கி இருக்கும் வாயிலில் தான் வெகுஜனம் புழங்குகிறது. சிவனுக்கு ஏன் சொத்து நாலுமுழ வேஷ்டி போதாதா? போதும் போதும் ஆனால் அர்ச்சகருக்கு, அவருக்கு குடும்பத்தைக் காவந்து பண்ணும் பொறுப்பிருக்கிறதே. ஏதோ ஒருவேளை நமசிவாய என்று சொல்லி ஈரத் துணியை வயிற்றில் கட்டிக் கொள்ளலாம். வேளா வேளைக்கு ஆகாரத்துக்கு மனம் அலைபாயாதா? ஏதோ பிரதோஷம், தேய்பிறை அஷ்டமின்னா தட்டுல அஞ்சோ பத்தோ விழும் மத்த நாள்ல. நாலு காலத்தையும் முணுமுணுக்காமல் மாசானம் தான் பண்ணி வைக்கிறார். அவர் போஜனத்துக்கு ஊர்ல யார்கிட்ட போய் கையேந்துவார் சொல்லுங்க.

மன்னார்குடியில் வசிக்கும் கைலாசநாதரையே ஊர்மக்களுக்கு தெரியாமல் போகும் போது ஜெயராமனையா தெரியப் போகிறது. எல்லாருடைய வாழ்க்கையும் ஒரு கதை தானே. ஜெயராமன் வாழ்க்கையைப் பத்தி இங்கு அதிகமாக பிரஸ்தாபிக்கப் போவதில்லை. அவர் தொழில் பேருந்து நிலையத்தில் சுண்டல், வேர்க்கடலை விற்பது. இப்போதுமா என்று நீங்கள் கேட்டால் நான் என்ன சொல்வது. யார் வாழ்க்கையில் தான் சிவன் விளையாடவில்லை. ஜெயராமன் தற்போது கோயில் பூந்தோட்டத்தைப் பராமரிப்பதும் பூஜை வேளையில் மணியடிக்கும் வேளையும்தான் செய்து வருகிறார். வயது அறுபதை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நேரா சிவனைப் பார்த்தேன் என்று சொல்லிக் கொண்டிருந்தால் நீங்கள் நம்புவீர்களா? பார்த்திருப்பாரோ என நமக்கும் சந்தேகம் வரத்தான் செய்கிறது. ஏன்னா குடும்பத்தையும், சொந்த பந்தத்தையும் உதறிவிட்டு இங்கு வந்து ஏன் சம்போ மகாதேவான்ட்டு உட்காரணும். அர்ச்சகருக்கும் ஜெயராமனுக்கும் ஏழாம் பொருத்தம். கோயிலே கதின்னு கிடக்கிற என்னைய உட்டுபுட்டு மனக்கோயில் கட்டுன பூசலார் மாதிரி அவருக்கு ஈசன் தரிசனம் தந்துட்டான்னோன்னு மனசுல ஒரு முள் தைச்சிருச்சி. இந்த முள்ளை பிடுங்கி தூர எறிஞ்சிட்டுப் போக அர்ச்சகருக்கு மனசில்லை.

இந்த ராகவனை எந்த லிஸ்ட்டில் சேர்க்கறதுன்னு நீங்களே முடிவு பண்ணிக்கீங்க. இவன் வயசுல்ல இளவட்டப் பசங்க எல்லாம் என்னத்த தேடறாங்க? சாக்கடையில விழுந்துட்டு நாரக் கூடாதுன்னா எப்படிங்க? உலகம் எங்கங்க போயிட்டு இருக்குது. கூட்டிக் கொடுத்தவன் காசில நாமளும் பங்கு கேட்டா கேவலம் இல்லீங்களா? இந்த வயசுல ரமணரை பிடிச்சிப் போச்சின்னா வாழ்க்கை சர்க்கரையாவாங்க இனிக்கும். எல்லாத்துக்கும் துணிஞ்சவனாலதான் வாழ்க்கையில கொடி நாட்ட முடியுது. நான் நல்லவன்னு சொல்லிகிட்டு நின்னா அரசாங்க ஆபீஸ்ல காரியம் ஆவுமாங்க. துட்டுக்கு தானேங்க மகுடிப்பாம்பா மயங்கறாங்க. மனுசப் பொம்மைகளுக்கு யாருங்க கீ கொடுத்து உட்டுருக்கிறது. ஒருத்தன் தங்கத்தட்டுல சாப்பிடுறதுக்கும் இன்னொருத்தன் எச்சில் இலை பொறுக்கிறதுக்கும் என்னங்க காரணமா இருக்க முடியும். ராகவன் படிப்புல, காதல்ல, வேலைல மூணுத்துலையும் கோட்டைவிட்டவங்க. ஏங்க ஏட்டுப்படிப்பு மட்டுந்தான் படிப்பாங்க? அனுபவம் படிப்பில்லையா? வாழ்க்கையே கறாரான வாத்தியார் தானுங்களே. பள்ளத்துல விழுந்துட்டா காப்பாத்துங்க காப்பாத்துங்கன்னு கத்திப் பார்ப்போம் யாரும் வரலைனா நாமே முயற்சி பண்ணி மேலேறப் பார்ப்போமேங்க. வாழ்க்கையில ஏதோவொரு பிடிப்பை வைச்சித்தானே வாழவேண்டியிருக்கு. அந்த நம்பிக்கை தானுங்க ராகவனுக்கு இந்த கைலாசநாதர். அவரே அள்ளிக்கொடுக்க ஆசைப்பட்டாலும் விதி உடணும் இல்லீங்களா? எப்படியும் வாழ்றவனை உட்டுட்டு உண்மையைத் தேடி ஓடுறவனை சோதிக்கிறதுதான் சாமிங்களா? மந்தையிலேர்ந்து பிரிஞ்சு போறது ஆட்டுக்கு நல்லதா, கெட்டதாங்க? எல்லாரும் ஓடுறதை ஒதுக்குப்புறமா நின்னு பார்க்கறதுக்கு ஒருசிலராகத்தாங்க முடியும். ராகவனால எவன் சொத்தையும் அடிச்சி பிடுங்க முடியாது. எவளையும் மயக்கி வழிக்கு கொண்டுவர மெனக்கடவும் முடியாதுங்க.

சூழ்நிலையை விதிதான் நிர்ணயிக்கிறது என்பதை நம்பத்தான் வேண்டியிருக்கு. ஏன்னா சென்னையிலேர்ந்து வந்த கையோடு ராகவன் ஏன் கோயிலுக்கு ஓடுவானேன். குகைக்குள்ள மான் வந்தா சிங்கம் சும்மா உடுமாங்க அப்படித்தாங்க ஜெயராமனும். பிரகாரத்தை சுற்றி வந்து அமர்ந்த ராகவனிடம் ஜெயராமன் “எந்த ஊரு” என்று பேச்சை ஆரம்பிக்க. ராகவன் “சென்னை” என்றான்.

வந்திருக்கிறது மான்தான்னு சிங்கத்துக்கு தெரிஞ்சிப்போச்சிங்க சமயம் பார்த்து பாயப் போவுதுங்க. “சிவனைப் பார்த்தாச்சா?” என்றார் ஜெயராமன்.

“பார்த்தேன் சந்நதிக்கு போயிட்டுத்தான் வந்தேன்” என்றான் வெகுளித்தனமாக ராகவன்.

“அது லிங்கத்திருமேனி நான் கேட்கிறது சிவனை” என்றார் ஜெயராமன் அவனை உற்றுப் பார்த்தபடி.

“நீங்க கனவுல பாக்குறதை சொல்றீங்களா?” என்றான் ராகவன் அப்பாவித்தனமாக.

“அப்ப பாத்ததில்லை” என்றார் ஜெயராமன் ஏளனமாக.

“…………………………..”

“நான் பாத்திருக்கேன் என் இரண்டு கண்ணாலேயும் பார்த்து இருக்கேன். அவன் எப்படி கோயிலைவிட்டுட்டு மயானமே கதின்னு கிடக்கானோ அது மாதிரி என்னை எல்லாத்தைவிட்டும் ஒதுங்க வைச்சிட்டான். கோயில்ல கூலிக்கு மாரடிக்கிற நாயாத்தான் என்னைப்பத்தி வெளியில தெரியும். ஒரு நாள் மாசானம் கையேந்துற உனக்கே இவ்வுளவு திமிறான்னு கேட்டான் தெரியுமா? அடுத்த நாளே சைக்கிள்லேந்து விழுந்து கையை உடைச்சிட்டு வந்து நின்னான் தெரியுமா? ஆளைப் பார்த்தாலே ஜாதகத்தையே கண்டுபிடிச்சிருவேன் தெரியுமா? உன்னைப் பத்தி சிவன்ட்ட நான் சொன்னாத்தான் உண்டு. இல்லாட்டி விதியிலேர்ந்து நீ தப்ப முடியாது. அப்புறம் எல்லாரையும் போல நீயும் பிறந்து வறர்ந்து இறந்து, பிறந்து வளர்ந்து இறந்து தான் புரிஞ்சிக்க. எம்பேர் ஜெயராமன் பேர்ல மட்டும் நீ ராமன் இல்ல நிஜத்துலேயும் நீ ஸ்ரீராமன் தான்னு எங்க ஆத்தாவே சொல்லிச்சி தெரியுமா?”

ஜெயராமன் பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்த மாசானம் அருகே வந்து, “எல்லாருக்கும் கொள்ளி வைக்கிற சிவன் இவன் நேர்ல வந்தான்னு சொல்றானா? இந்தக் கோயில்ல காலம் காலமா கைங்கர்யம் பண்ற நானெல்லாம் விளக்கமாத்துகட்டை இவன் மட்டும் பட்டுப் பீதாம்பரமா. சிவனை கட்டி ஆள்றேன்கிறான்னே படுக்க ஒரு வீடு இருக்கான்னு கேளு. போட்டுக்க மாத்து துணி இருக்கா? ஊர் உலத்துல யாராச்சும் மதிக்கிறான்னா இவனை பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை. நல்லா வாய்ல வருது. இந்தக் கிறுக்கன தர்மகர்த்தா எந்தலையில கட்டிட்டு போயிட்டார் பாரு என்றார்.

“வழிச்சிட்டு போறவனுவனுவோ சொல்லுறானுங்கன்னா நான் பாத்தது இல்லன்னு ஆயிடும்மா” என்றார் ஜெயராமன் ஆதங்கத்துடன்.

“இந்தக் காலத்துல போய் சிவனைப் பார்த்தேன் எமனைப் பார்த்தேன்னு சொன்னா பைத்தியம்னு தான் சொல்வாங்க என்ன தம்பி நான் சொல்றது” என்றார் மாசானம்.

“அவன் எங்கூட பேசுறாங்கிறேன்” என்றார் ஆவேசத்துடன் ஜெயராமன்.

“மூளை குழம்பிப் போச்சின்னா சிவன் மட்டுமில்லை செத்தவன் கூட எங்கூட பேசுறான்னுதான் சொல்லிகிட்டு திரிவே” என்றார் தன் பங்குக்கு மாசானம்.

“நான் சொல்றது உண்மையா இல்லையான்னு நான் செத்ததுக்கப்புறம் தெரிஞ்சிப் போயிடும்ல” என்றார் விரக்தியுடன் ஜெயராமன்.

“உனக்கு கிரகம் புடிச்சி ஆட்டுது. இல்லைனா இப்படி சொல்லிகிட்டுத் திரிவியா” என்றார் மாசானம் தலையிலடித்தபடி.

“கும்புட்டு போறவனுக்கெல்லாம் கல்லா தெரியிறவன் எனக்கு மட்டும் ஏன் சிவனாத் தெரியறான்” என்றார் ஜெயராமன்.

“கல்லோ, கடவுளோ அந்த ஆராய்ச்சியெல்லாம் நமக்கெதுக்கு குழந்தை குட்டின்னு ஆனதுக்கப்புறம்” என்றார் தீர்க்கமாக மாசானம்.

“நாயன்மார்கள் வாழ்க்கையில அவன் விளையாடலையா” என்றார் விசனத்துடன் ஜெயராமன்.

“எந்தக் காலத்து கதை அது. அதுக்கும் இதுக்கும் ஏன் இப்ப முடிச்சிப் போட்டு பேசுற” என்றார் மாசானம்.

“பட்டினத்தாருக்கு நுனிக் கரும்பு எப்படி இனிச்சிதுன்னு கேட்பீங்களா” என்றார் ஜெயராமன்.

“வரும்படி வர்ற கோயில்ல தானே ஜனங்க ஈ மாதிரி மொய்க்கிறாங்க. இங்க யாராவது வந்து எட்டிப் பார்க்குறாங்களா. சிவனுக்கு நாலு முழ வேட்டி சாத்திட்டிப் போறேன். காப்பு உண்டா, கவசம் உண்டா இங்க” என்றார் ஆதங்கத்துடன் மாசானம்

“சித்தன் போக்கு சிவன் போக்கு” என்றார் எங்கோ பார்த்தபடி ஜெயராமன்

“உன்னையெல்லாம் திருத்த முடியாது அகல் விளக்கையெல்லாம் எடுத்து கிணத்து கிட்ட போட்டுட்டு பூட்டி சாவியை வீட்ல வந்து கொடுத்துட்டு கூலியை வாங்கிட்டுப் போ” என்று கிளம்பினார் மாசானம்.

ஜெயராமன் ராகவனிடம் “பித்தா, பிறைசூடி அவன். யாருக்கு தன்னை வெளிப்படுத்திக் கொள்ளனும்னு அவன் தான் முடிவு பண்ணுவான். உன்னோட விதி வேலை செய்ய ஆரம்பிச்சிடிச்சி. அடுத்த தடவை வரும் போது என்னைய தேடாத நான் இங்கன்னு இல்ல எங்கயும் இருக்க மாட்டேன் பிரகாரத்தை மூணு தடவை சுத்திட்டு திரும்பிப் பார்க்காம போ” என்றார்.

எழுத்து தன் தொழிலாக ஆனதுக்கப்புறம் எத்தனையோ தடவை கோயில்ல வந்து ஜெயராமனை தேடி இருக்கிறான் ராகவன். ஆனால் அவர் இவன் கண்ணுக்குத் தென்படவே இல்லை.

ஞானச்சுடரை தூண்டிவிட்ட அவரது கைகளுக்கு வெறும் எழுதுகோலாகத்தான் இன்றுவரை ராகவன் இருக்கிறான். இவன் தனித்த மண்பானையாகத்தான் இருந்தான். அவருடனான சந்திப்புக்கு பிறகு பானை உடைந்து காற்று வெளியுடன் கலந்துவிட்டது. ஏதோவொன்றுடன் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. அதுதான் கடவுளா என்றால் இருக்கலாம். அதற்கு நீங்கள் என்னப் பெயர் வேண்டுமானாலும் சூட்டிக் கொள்ளலாம். இந்த அணையப்போகவிருந்த சுடரை ஏற்றி வைத்த அந்த ஜெயராமன் இப்போது எங்கே இருக்கிறார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *