(2023ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தொழிலதிபர் ராமனின் மகள் இளம்பெண் மதுரிமா, துப்பறியும் ஜெகனின் அலுவலகத்தில் அமர்ந்து இருந்தாள். ஒல்லியான இளைஞன் ஜெகன் வந்தான். ‘வாங்க வணக்கம், சாரி மேம் உங்களை காக்க வெச்சுட்டேன்’ என்றான்.
மதுரிமா, அதைப் பொருட்படுத்தாமல் ‘என்னை மாதிரியே இருக்கும் பெண் யார்னு கண்டுபிடிச்சு சொல்றேன்னு அப்பா கிட்ட சொன்னீங்களாமே என்ன ஆச்சு அப்பா கேரக்டர் பத்தி தப்பா ஏதாவது சொன்னீங்க நான் சும்மா விட மாட்டேன்’ என்றாள்.
ஜெகன் பேசினான் ‘அதை நீங்க போன்ல சொல்லி இருக்கலாமே.. சரி வந்துட்டீங்க நான் துப்பறிய ரொம்ப கஷ்டப்படலை.. இதோ பாருங்க தினச்சுடர் தீபாவளி மலர்’.
‘அதுக்கு என்ன’ மதுரிமா சிடுசிடுத்தாள்.
‘அட.. இதோ மார்க் வெச்சு இருக்கேன் பாருங்க பட்டிமன்ற பேச்சாளர் சரஸ்வதி அம்மா பேட்டி.. உங்களுக்கு தமிழ் படிக்க தெரியுமா’ மதுரிமா முறைத்தாள்.
‘சரி நானே வாசிச்சு காட்றேன். உங்கள் வாழ்வில் மறக்க முடியாத நபர் யார் என்னுடைய உயிர்த் தோழி பெரிய மனிதரின் மனைவி அவள். யாருமே கொடுக்க முடியாத ஒன்றை என் குழந்தை பிறந்த உடன் இறந்த போது அவள் கொடுத்தாள். அவளை மறக்க முடியாது’ படித்து முடித்தான் ஜெகன்.
‘இதுல என்ன கண்டுட்டிங்க’ கேட்டாள் மதுரிமா.
‘நீங்க பிசினஸ்ல பிசியா இருக்கறதால யோசிக்க முடியலைன்னு நெனக்கிறேன். முறைக்காதீங்க. சரஸ்வதி அம்மா பொண்ணுதான் மலர்க்கொடி ஒங்கள மாதிரி இருக்கற பொண்ணு. அவங்க ஒங்க ட்வின் சிஸ்டர். இப்ப புரியுதா?’ என்றான் ஜெகன்.
மதுரிமாவின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது.
– ட்வின்ஸ் கதைகள் 10, முதற் பதிப்பு: 2020, எஸ்.மதுரகவி, சென்னை