நடுவுல ஒரு லட்சத்தைக் காணோம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 5, 2020
பார்வையிட்டோர்: 6,280 
 
 

வெளியில் மினுக் மினுக் என்று எரிந்து கொண்டிருந்த “…..இது உங்களுடைய பாங்க்” அறிவிப்பின் பின்னால் அமைந்திருந்தது அந்த வங்கி. சாதாரண கால கட்டத்தில் அந்த வங்கிக்குள் திருவிழா போல கூட்டம் நிற்கும். அவரவருக்குத் தெரிந்த சிப்பந்தியைப் பிடித்து, வாடிக்கையாளர்கள் முன்னுரிமை புதுப்பித்துக் கொண்டு, அவர்களின் வேலைகளை முடித்துக் கொள்ளும் இலாவகம்! சேட் பாங்க் மாதிரி டோக்கன் முறை ஏற்படுத்தப் படவில்லை. இன்று கோவிட் காலம்! வங்கியினுள் நுழையவும் வெளியேறவும் மிகவும் ஸ்லோ மோஷனில் செய்ய வேண்டியுள்ள கட்டாயம்.

மாலை மணி ஏழரையைத் தாண்டிவிட்டது. அந்தப் பேங்கில் இன்னும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.

கோவிட் காலத்தில் ஹாய்யாக இருந்த சிப்பந்திகள் சீக்கிரம் தப்பித்து வீட்டிற்குச் செல்லும் நடைமுறையில் இன்று ஏன் மாற்றம்?

காரணம் சிம்பிள்! குளோசிங்க் கேஷில் ஒரு லட்சத்தைக் காணோம்! டாலி ஆகும் வரையில் சிப்பந்திகள் யாரும் வீட்டிற்குக் கிளம்பக் கூடாது என்பது நடைமுறை கட்டுப்பாடு.

மகாதேவன் கேஷ் கவுன்டரின் மீது தலையைக் கவிழ்த்துக் கொண்டு நிற்க, மற்றவர்கள் எல்லோரும் முகத்தைக் கொஞ்சம் சீரியஸ்ஸாக வைத்துக் கொண்டு, “வேணும் உங்களுக்கு! நீங்க அவசரக் கையெழுத்துப் போட வேண்டாம்னு, எப்பப் பாத்தாலும் டீகேஎஸ் சொல்லுவாரில்ல! சே! இன்னிக்கு அவரும் லீவில்”. சொடக்குப் போட்டு பேசினான் ராஜகோபால். கேஷில் இருந்த ரகுராமன், சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் வேதாளத்தைத் தோளில் சுமந்து சென்றதைப் போல, அன்றைய நாளின் பரிவர்த்தனைகளை ஆரம்பத்திலிருந்து இன்வர்ட் அவுட்வர்ட் கேஷ் குறிப்புக்களுடன் கம்ப்யூடரில் சரிபார்த்தான்.

இன்னொரு பக்கம் ஜோப் வாரப்பன் கைகளில் டெட்டால் கலந்த நீரைத் தடவிக் கொண்டு ஒவ்வொரு கட்டாக ரொக்கத்தைப் பரிசோதித்துக் கொண்டிருந்தான். இதைத் தவிர, பாலன் கேஷ் கவுன்டிங்க் மிஷினில் மீண்டும் மீண்டும் நோட்டுக்களைப் போட்டுத் துவைத்துக் கொண்டிருந்தான்.

எல்லார் மனதிலும் என்னதான் ஒரு ஓரத்தில் கோபம் குடி கொண்டிருந்தாலும், கடைசியில் அனைவரும் “ சீக்கிரம் பணம் கிடைக்க வேண்டுமே!” என்று எல்லாக் கடவுள்களையும் வேண்டிக் கொண்டிருந்தனர். மகாதேவன் மேல் அவர்கள் அனைவருக்கும் அனுதாபம்தான் பிறந்தது.

ஏன் பிறக்காது? பணம் கிடைக்கவில்லையானால், மகாதேவன் கையிலிருந்து பணம் கட்ட வேண்டுமே! “அதுவும் அஞ்சு பத்து இல்லைய்யா! ஒரு லட்ச ரூபா!” பெரிசு சண்முகம் யாரிடமோ போனில் கூப்பிட்டு சொல்லிக் கொண்டிருந்தார். செக்யூரிட்டி நரேந்தர் மீண்டும் ஒருமுறை துப்பாக்கியைத் துடைத்து, தன் இடுப்பில் கட்டியிருந்த பெல்டில் பலகாலமாக பாதுகாப்பாக வைக்கப் பட்டிருந்த துப்பாக்கி குண்டுகளைத் தடவிப் பார்த்தான். ‘கேஷ் டேலி’ முடிந்ததும் அவன் துப்பாக்கியையும் குண்டுகளையும் பாதுகாப்பு அறையில் வைத்தபின்தான் வீட்டிற்குச் செல்லலாம்.

மானேஜர் சிகாமணி குறுக்கும் நெடுக்கும் நடந்து அடுத்த நடவடிக்கைகள் குறித்து மனசில் திட்டம் போட்டுக் கொண்டிருந்தார். அருகில் மாமா சீனி- அவந்தான் அந்த வங்கியில் முதலும் கடைசியும்- எல்லாவற்றிலும். ஏனென்றால் அவன் சீனியர். எல்லாரையும் சரிக்கட்டிவிடுவான். சமமாகப் பழகுவான்.பீடின்னா பீடி…. சிகரெட்னா சிகரெட்…… காவடின்னா காவடி என்பது போல.

பரிமளாவிற்குப் புரிந்தும் புரியாதது போல் இருந்தது. கேஷ் டேலி ஆகவில்லை என்பது நிச்சயமாகப் புரிந்தது. வைஜயந்தியிடம் கேட்டதற்கு, “நீ ஏன் சிரிக்க மாட்டே! நீ கட்ட வேண்டாமில்ல?” என்றதும் மனதில் கொஞ்சம் மத்தாப்பு. ஏனென்றால் அவள் அங்கே சேர்ந்து ஒரு வாரமே ஆகியிருந்தது. அன்று கேஷில் உதவி செய்தவண்ணமிருந்தாள். ஆகவே, எப்படி என் தலையில் விடியும் என்ற எதிர்க் குரல் மட்டும் குரல்வளையை நெரித்தது.

“இன்னா நீ இப்டி கேட்டுகினே? நீ துட்டு கட்ட வாணாம்! அந்தக் கெயவந்தான் கட்டணும். அவன்தானே கையெழுத்து பொம்மை?” யுவபிரசாத் கிண்டலடித்தான்.

பரிமளாவுக்கு மனதளவில் “ஐயோ! இப்படிப்பட்ட இடியாப்பச்சிக்கலா பேங்க்?” என்ற துயரம் தோன்றியது.

“ஏதோ வந்தோம்! கையெழுத்துப் போட்டோம்; லாகின் பண்ணோம்; வேலையில்லாத நேரத்தில் ஏஸி அளிக்கும் சுகத்தில் கற்பனைக் குதிரையின் வேகத்தில் வேகமாகப் பயணித்து, வாட்ஸப் பார்த்து, ராங்க் நம்பரைக் கலாய்த்து…..கொஞ்சம் கிளுகிளுத்து, எப்படியெல்லாம் நினைத்தேன்! சே! இவ்வளவு கடினமானதா! அதுவும் கையைக் கடிக்கும் அளவிற்கு?”

ஆமா! எல்லா என்ட்ரியும் வந்திருக்குதா? மாமா- சீனி வெளியே வந்தான். “யோவ் யோவ்! நீ ஒரு தபா பார்த்துடு சீனி- மகாதேவன் கண்ணீரும் கம்பலையுமாகக் கெஞ்சினார்.”

“இப்ப அழுவறே! சாயங்காலம் பேனாவ ஆட்டிகிட்டு, “ஆச்சா? குடு சீக்கிரம்! கையெழுத்துப் போடணும்னு தினம் அவசரப் படுவியே! அனுபவி ராஜா அனுபவி!

இன்னிக்கி வாட்ஸப்ல வந்துது- எவனோ ஒரு சின்னப் பையன் பத்து லட்சம் ரூபாயை அபேஸ் பண்ணிட்டானாம் வேற பேங்குல. உனுக்கு ஒரு லட்சம்தான் தண்டம்” என்ற சீனி கேஷ் கேபினுக்குள் நுழைந்தான்.

வைஜயந்தி கொஞ்சம் நினைத்துப் பார்த்தாள்: அவளுடைய அப்பாவிற்கும் இதே வயது தான் இருக்கும்- மகாதேவனைப் போல். பாவம்தான்! கடவுளை மீண்டும் வேண்டினாள்.

“சார்! பொறுமையாத் தேடினா கிடைக்கும் கண்டிப்பாக!” என்றாள் வைஜயந்தி. “கிடைச்சாத்தான் நான் நிம்மதியடைய முடியும். என் பெண் கலியாணத்திற்காக சேர்த்து வைத்த பணத்தைத்தான் இப்ப குடுக்கணும். என்ன நியாயம்மா இது?” என்பது போல பார்த்தார் மகாதேவன். “ரகு! குட் நியூஸ் சொல்லுய்யா!” என்று அவனிடம் மன்றாடி நின்றார்.

“ கேஷியர் ஒப்படைக்கும்போது சரியாக இருந்ததா?” என்றபடி வெளியில் தலை காட்டினார் சிகாமணி- வழக்கமான பரிவு கலந்த கண்டிப்புடன்.

மகாதேவன் தலையை ஆட்டியது அத்தனை சுறுசுறுப்பாக இல்லை. எண்ணிப் பார்த்திருந்தாலல்லவா அவர் உறுதி சொல்ல முடியும்? “ஐயோ – இனிமேலாவது சரியா எண்ணித்தான் கையெழுத்துப் போடவேண்டும்.” என்ற பிரசவ வைராக்கியம் பிறந்தது அவரிடம்.

நீண்ட இடைவேளைக்குப் பின்…..

“சார்! கிடைச்சிடிச்சு” என்று பணக் கற்றையைக் கைகளில் ஏந்தியபடி ஓடி வந்தான் ரகு. எல்லாரும் ரகுவையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

“ டபுள் லாக் கேஷில் தனியாக வைத்து இருந்தது சார். நான் ஒட்டு மொத்தமாக கணக்குப் பார்க்கும்போது சரியாயிடிச்சு.”

“ நானும் பார்த்திட்டேன் சார்! சரிதான்” என்றான் சீனி.

மகாதேவனின் தோளில் தட்டினார் சிகாமணி. அதற்குப் பல பொருட்கள் உண்டு. மகாதேவனுக்குப் புரிந்தது.

சீனி முன்னால் நின்றான் கையை நீட்டிக் கொண்டு, “சார் செக் கொடுங்கள்!” என்று மகாதேவனிடம் கேட்டுக் கொண்டு.

மகாதேவன் திடுக்கிட்டார், “ யோவ்! எல்லாம் சரியாயிடுச்சு இல்ல? அப்புறம்?”

“நம்ம வழக்கப் படி நீங்கள் தண்டம் கட்ட வேணுமில்ல? பிராஞ்சில் நாளைக்குப் பார்ட்டி கேக்கறாங்க நம்ம பசங்க!” என்று முடித்தான் சீனு. மகாதேவன் மறுக்கவில்லை.

மானேஜர் சீனுவைப் பார்த்ததில் வேறு ஒரு அர்த்தம் இருந்த மாதிரி தோன்றியது.

அதைக் கண்டுக்காமல், மகாதேவனுடன் மற்ற எல்லோரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்*

சந்திரசேகரன் (நரசிம்மன்) அவர்கள் புகழ்பெற்ற தென்னிந்திய இந்து பிராமண வழக்கறிஞர்கள் குடும்பத்தில் அரியலூரில் பிறந்தார். மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம்(1976) பெற்று சமூக விஞ்ஞானி ஆவதற்குத் தொடர்ந்தார். கல்லூரியின் சிறந்த ஆல்ரவுண்ட் மாணவருக்கான டாக்டர்.எம்.நஞ்சுண்டராவ் தங்கப் பதக்கம் வென்றார். பார்வை: நான் என்னை ஒரு தலைவர், வழிகாட்டி, ஆலோசகர், வழி கண்டுபிடிப்பாளர், பிரச்சனை தீர்வு காண்பவர், பேச்சுவார்த்தை நடத்துபவர், ஆராய்ச்சியாளர், பொருளாதார…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *