(1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அன்றொரு நாள் ஹோட்டலில் காப்பி சாப் பிட்டுக்கொண் டிருக்கையில், “ஊர்வசியைப் பார்த்து விட்டு வரலாம், வருகிறாயா?” என்று கேட்டான் என் நண்பன் ரகு.
“ஊர்வசியா ? அது யார், ஊர்வசியும் மேன கையும் ?” என்று நான் கேட்டேன்.
ரகு புன்சிரிப்புடன், “அதோ பாரப்பா உன் தலை மேல்” என்றான்.
பின் பக்கம் திரும்பி நிமிர்ந்து பார்த்தேன். பின்னால் இருந்த சுவரின்மேல் நாலடி உயரமுள்ள படமொன்று மாட்டியிருந்தது. நாட்டியம் ஆடும் தோற்றத்திலிருந்த ஒரு நங்கையின் படம் அது. நான் ஆச்சரியத்துடன் அதை விழித்துப் பார்த்ததைக் கண்டு, “என்ன, படத்தைப் பார்க்கும்போதே மூர்ச்சையாய் விடுவாய்போல் இருக்கிறதே!” என்றான் ரகு.
“யார் அவள்?”
“அடே, கிணற்றுத் தவளையே ! ‘கந்தர்வா ஊர்வசி’ என்ற நாட்டிய ஜோடியைப் பற்றி நீ கேள்விப்பட்டதே இல்லையா ? அவர்கள் பெயர் தேசம் முழுவதும் பிரபலமாய் இருக்கிறதே ! ஜூபிடர் தியேட்டரில் ஒரு வாரமாய் அவர்கள் நடனம் நடந்துகொண் டிருக்கிறது. அதைத்தான் பார்த்துவிட்டு வரலாம் என்று கூப்பிட்டேன்” என்றான்.
“சரி, வருகிறேன். இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறதே! அதற்குள் எனக்குத் தெரிந்த நாட்டி யக்காரி ஒருத்தியின் கதையைச் சொல்லுகிறேன், கேட்கிறாயா? நிஜமாய் நடந்த கதை” என்று சொல்லி, அவன் சம்மதத்துக்குக் காத்திராமல் கதையை ஆரம்பித்தேன்.
1
நான் காலேஜில் படித்துக்கொண்டிருந்த போது சங்கர் என்பவன் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பனாக இருந்தான். அவன் பணக் காரன் ; தாய் தகப்பனாருக்கு ஒரே பிள்ளை. ஆகையால் அவன், ஐ.ஸி. எஸ். பரீட்சையில் தேர்ச்சி பெற்றுக் கலெக்டர் வேலை பார்க்கவேண்டு மென்று சீமைக்குச் சென்றான். ஆனால் அங்கே இரண்டு தடவை போயும், ஐ.ஸி.எஸ்.பரீட்சையில் தேர்ச்சி பெறாதபடியால், பாரிஸ்டர் பரீட்சை கொடுத்துவிட்டு இந்தியாவுக்குத் திரும்பினான்.
ஒரு நாள் காலை வேளையில், சங்கர் தன் பங்களாத் தோட்டத்தைச் சுற்றிப் பார்த்துக்கொண்டு வருகையில் ஒரு விசேஷ சம்பவம் நடந்தது. மரங் களில் உட்கார்ந்து நானாவிதமான பட்சிகள் பாடிக் கொண்டிருந்தன. அந்தப் பட்சிகளின் பாட்டுக்குச் சுருதி போடுவதுபோல் அற்புதமான ஓசை ஒன்று திடீரென்று மெதுவாகக் கேட்கத் தொடங்கியது.
அது எதனுடைய ஓசை, எங்கிருந்து வருகிறது என்று அவன் நாலு பக்கமும் பார்த்தான். அவன் பார்த்துக்கொண் டிருக்கையிலேயே ஒரு மரத்தின் கிளையிலிருந்து ‘திடும்’ என்று அவன் தோளின் மேல் குதித்து உட்கார்ந்தது, கன்னங் கறேல் என்றிருந்த ஒரு ரு குரங்குக் குட்டி. சங்கர் பயந்துபோய்த் தோள் பட்டையிலிருந்து அந்தக் குரங்கை உதறித் தள்ளி னான். அப்போது, “சீ, ராமா! இங்கே வா, போக்கிரி!” என்று ஒரு குரல் கேட்டது. குரங்கு மறுபடியும் மரத்தின்மேல் ஏறிக்கொண்டது.
சங்கர் நிமிர்ந்து பார்த்தான். அந்த மகிழமரத்தின் மேல் இரண்டாகப் பிரிந்திருந்த ஒரு கிளையில் கால்களைத் தொங்கப் போட்டுக்கொண்டு சாய்ந்து உட்கார்ந்திருந்தாள் ஒரு பெண். தலைப்பின்னலை எடுத்து மார்பின்மேல் போட்டுக்கொண்டு, அதன் அடியில் ஒரு ‘ரிப்பனை’ வைத்து முடிந்துகொண்டிருந்தாள் அவள். ஒரு பாட்டின் அடியை இசைத்துக்கொண்டிருந்தது அவள் வாய்.
சங்கர் அப்படியே பிரமித்துப் போய், அந்தப் பெண்ணின் அழகிய வதனத்திலிருந்து பார்வையை எடுக்கமுடியாமல் நின்றான். அந்த மோஹன உருவம் ஒரு நிமிஷம் சங்கரைக் கனவு லோகத்துக்கு விரட்டி அடித்தது. ‘அழகுத் தெய்வமே இப்படிக் கொலு வீற்றிருக்கிறதோ’ என்று அவன் பிரமை அடைந்தான்.
பிரமை நீங்கியதும், “நீ யார், அம்மா?” என்று கேட்டான்.
அவன் தன்னைப் பார்த்துவிட்டதை அறிந்ததும் அந்தப் பெண்ணின் முகம் வெட்கத்தினால் சிவந்தது. தன்னுடன் அவன் பேசத் தொடங்கினதும், தலையைக் குனிந்துகொண்டு மரக்கிளையிலிருந்து கீழே குதித் தாள். முன்னாலிருந்த பின்னலை எடுத்துப் பின்னால் வீசினாள். தோட்டத்தின் ஒரு கோடியைக் கையினால் சுட்டிக் காண்பித்து, “நாங்கள் அந்த வீட்டுக்குக் குடித்தனம் வந்திருக்கிறோம்” என்றாள்.
“இந்தக் குரங்கு யாருடையது?”
“எங்களுடையதுதான். அது ஒண்ணும் பண்ணாது; ரொம்பச் சாது. மனுஷாளைக் கண்டால் அப்படித்தான் கிட்டே வந்து விளையாடும்” என்று கூறிவிட்டு, “ராமா, வா!” என்றாள். அந்தக் கருங் குரங்கு மரத்திலிருந்து தாவி அவள் தோள் பட்டை யில் வந்து அமர்ந்தது. அதன் கன்னத்தில் விளையாட் டாக ஒரு தட்டுத் தட்டிவிட்டு, அவள் சங்கரைப் பார்த்துப் பெருமையும் வெட்கமும் கலந்த சிரிப்பு ஒன்றைச் சிரித்துவிட்டு, அங்கிருந்து போகத் தொடங்கினாள். அப்பொழுது சங்கர் தைரியமாக ஒரு கேள்வியைக் கேட்டான்.
“உன் பெயர் என்ன என்று சொல்லவில்லையே!” அவள் சட்டென்று நின்று அவனை ஒரு தரம் ஏற இறங்க நோக்கினாள்.
“சிங்காரி.”
சிங்காரி! என்ன வேடிக்கையான பெயர்!
பங்களாவை நோக்கிப் போகும் பொழுது சங்கரின் மனம், அந்தக் காலத்தில் பிரபலமாய் அடி பட்ட ஒரு பாட்டைப் பாடிக்கொண்டிருந்தது:-
ஜகத்தை மயக்க வந்த
முகத்தைப் படைத்திட்ட
சிங்காரி! ஒய்யாரி!
2
சங்கர் நேராகத் தன் தாயிடம் சென்றான். “ஏன் அம்மா, அந்த வெளிப் பங்களாவில் யாரோ குடித்தனம் வந்திருக்கிறார்களே, அவர்கள் யார்?” என்று கேட்டான்.
“அது யாரோ, எனக்குத் தெரியாதப்பா. எல்லாம் இந்தக் குமாஸ்தா கிருஷ்ணப் பிள்ளையின் வேலை. அந்த மனிதனை முன்னாலேயே நான் பார்த்து இருந்தால் அவர்களை வீட்டுக்குள்ளேயே நுழைய விட்டிருக்க மாட்டேன்” என்றாள் அவன் தாய்.
சங்கர் மாடியில் தன் அறைக்குள் சென்று யோசனையில் ஆழ்ந்தவனாய் உட்கார்ந்தான். திடீரென்று வெளியே மரத்தடியில் சல சல என்று சப்தம் கேட்கவே ஜன்னல் வழியாய் எட்டிப் பார்த்தான். கீழே, மரத்தடியில் நின்றுகொண்டு ஒரு மனிதன் உண்டி வில்லால் பறவைகளை அடித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். அந்த மனிதனின் உருவம் பார்ப்பதற்கு விநோதமாய் இருந்தது. அவன் உயரம் நாலரை அடிக்கு மேல் இராது. ஆனால் நல்ல பருமன். முதுகின் மேல் ஒரு மூட்டையை வைத்துக் கட்டினதுபோல் கூனல் விழுந்திருந்தது. அவ்வாறே மார்பும் முன் பக்கம் திரண்டு பருத்திருந்தது. கிழடு தட்டியிருந்த அவன் முகத்தில் பயங்கரமான பெரிய மீசை.
“பொன்னா! பொன்னா!” என்று சங்கர் கூப்பிட்டதும், வீட்டு வேலைக்காரன் வந்தான்.
“அது யார்?”
“அவனா? அவன்தானுங்க, அந்தத் தோட்ட வீட்டுக்கு வந்திருக்கான்.”
“யார் அவன்?”
“நவாப் மைதானத்திலே ‘சர்க்கஸ் கம்பெனி’ வந்திருக்கு பாருங்க ; அந்தக் கம்பெனியைச் சேர்ந்தவனாம்” என்றான்.
அன்று சாயங்காலம், சிங்காரியைப் பார்க்க வேண்டுமென்று அவன் மனசில் ஏற்பட்ட அடக்க முடியாத ஆவல், அவனை அந்த வீட்டுக்கு இழுத்துச் சென்றது. அவனைக் கண்டதும் சிங்காரி ஒரு பெஞ்சியை எடுத்துப் போட்டு, “உட்காருங்கள்” என்றாள்.
“இந்த வீடு இவ்வளவு நாளாய்ப் பூட்டிக் கிடந்தது. உங்களுக்கு விடுவதற்குமுன் சுத்தம் செய்து வெள்ளை யடித்திருக்கிறார்களா என்று பார்க்க வந்தேன்” என்று சங்கர் புளுகினான்.
“நான்தான் இரண்டு நாளாய் ஒட்டடை அடித்துப் பெருக்கிச் சுத்தம் பண்ணினேன்.”
“வீட்டில் வேறு யாரும் இல்லைபோல் இருக்கிறதே?”
“யார் இருக்கிறார்கள்? நானும் எங்க அப்பாவுந் தான் இங்கே. அவரும் இப்போது எங்கேயோ போயிருக்கிறார்.”
சங்கர் மனசிலிருந்த பாரம் சற்றுக் குறைந்து, “உன் அப்பாவா அவர்?” என்று வினவினான்.
“அப்பா என்றால், சொந்த அப்பா இல்லை. நான் குழந்தையா யிருந்தபோதே என் அப்பா அம்மா இருவரும் இறந்துபோய் விட்டார்கள். இவர்தான் என்னை எடுத்து வளர்த்தார். எனக்கு வேறு பந்துக்கள் இல்லை.”
சங்கர் மனசில் பாரம் இன்னும் குறைந்தது; “உன் அப்பா சர்க்கஸ் கம்பெனியைச் சேர்ந்தவராமே?”
“ஆமாம்; நான் கூடத்தான் சர்க்கஸிலே ‘ஆக்ட்’ பண்ணுகிறேன். அப்பாவைப் பார்த்தால் குள்ளமாய் என்னவோபோல் இருக்கிறார் என்று நினைக்காதீர்கள்! அவர் எவ்வளவு அற்புதமான வித்தைகள் எல்லாம் செய்வார், தெரியுமா? நீங்கள் ஒரு நாள் சர்க்கஸுக்கு வந்து பாருங்களேன்” என்றாள்.
3
சங்கர் அன்றிரவு சர்க்கஸ் பார்ப்பதற்குச் சென்றான்.
பாதி ஆட்டம் ஆயிற்று. பாண்டு வாத்தியக் காரர்கள் மெதுவாக ஓர் ‘இங்கிலீஷ் நோட்’ வாசிக்க ஆரம்பித்தார்கள். ஒரு நடனமாது அரங்கத்துக்கு ஓடிவந்து நடனம் செய்யத் தொடங்கினாள். மேல் நாட்டு நாட்டியக்காரிகளைப் போல் அவள் உடை அணிந்துகொண் டிருந்தாள். அவள் செய்த நாட்டியமும் மேல்நாட்டு ரகத்தைச் சேர்ந்ததாகத் தான் இருந்தது. அவள் யாரோ சட்டைக்காரி என்று நினைத்து சங்கர் அருவருப்புடன் பெருமூச்சு விட்டான். அடுத்த கணம் அவனுக்குத் தூக்கி வாரிப்போட்டது. அவள் முகத்தைப் பார்த்ததும் அவள் தான் சிங்காரி என்று கண்டுகொண்டான்.
உடனே கோபமும் ஆத்திரமும் பொங்கிக்கொண்டு வந்தன. சிங்காரியை சிங்காரியை இந்தமாதிரியான உடையில், இப்படிப்பட்ட நாட்டியம் செய்வதற்கா விட வேண்டும்?
நாட்டியம் முடிந்ததும், சிங்காரி தலை குனிந்து வணங்கிவிட்டு ஓடி மறைந்தாள். ஜனங்கள் நீண்ட நேரம் கரகோஷம் செய்தார்கள்.
அரைமணி நேரம் கழித்து மறுபடியும் சிங்காரி அரங்கத்தில் தோன்றினாள். இந்தத் தடவை அவளுடன் அந்தக் குள்ளனும் வந்தான். இப் பொழுதும் சிங்காரி கவுன்தான் அணிந்திருந்தாள். அந்தக் குள்ளன் கையில் ஒன்றரை அடி நீளமுள்ள பெரிய கத்திகள் சுமார் இருபது காணப்பட்டன. ஒவ்வொரு கத்தியின் பிடியிலும் துணி சுற்றப்பட் டிருந்தது. பிடிகளை மண்ணெண்ணெயில் தோய்த்து அவற்றில் நெருப்பைக் கொளுத்தினான் அவன். அதற்குள், நான்கு பேர் ஊஞ்சல் பலகைபோல் நீளமாய் இருந்த ஒரு பலகையைத் தூக்கிக்கொண்டு வந்து அரங்கத்தின் நடுவில் செங்குத்தாய் நிற்க வைத்தார்கள்.
அதன் எதிரில், அதனுடன் ஒட்டினாற்போல் சிங்காரி நின்றுகொண்டாள். அவளைப் பார்த்தபடி, இருபதடி தூரத்தில் எரியும் கத்திகளைப் பிடித்து நின்றான் குள்ளன். ஒரு பெண் அவன் கண்களைத் துணியால் இறுகக் கட்டினாள். உடனே, “ஒன் !” என்று சிங்காரி கத்தினாள்.
குள்ளன் ஒரு கத்தியை அதன் கூர்மையான நுனியைப் பிடித்துத் தன் தோள்பட்டைக்கு மேல் ஓங்கி வீசி எறிந்தான். அந்தக் கத்தி விர்ரென்று நெருப்பைக் கக்கிக்கொண்டே பறந்து சென்று சிங்காரியின் வலது முழங்காலுக்கு அருகில், இரண்டு அங்குல தூரத்தில், பலகையில் பொத்துக்கொண்டு நின்றது.
அப்புறம் “டூ!” என்ற கத்தல்; இடது முழங்காலுக்கு அருகில் வேறொரு கத்தி! இப்படி இரண்டு மூன்று நிமிஷத்துக்குள் அந்தப் பெண்ணின் உடலைச் சுற்றித் திகு திகு என்று ஜ்வாலை விட்டு எரியும் கத்திகளாலேயே இழைத்து விட்டான் அந்தக் குள்ளன்.
இந்தக் காட்சியைக் கண்டதும் சங்கரின் உடல் குபீலென்று வியர்த்தது. ஆனால் சிங்காரி சிறிதும் பயப்பட்டதாகத் தெரியவில்லை. கண்ணைக்கூடக் கொட்டாமல், புன்னகை தவழும் முகத்துடன் தந்தத் தினால் செய்த சிலைபோல் நின்றாள். அந்தக் காட்சி முடிந்ததும், சர்க்கஸ் பார்த்தது போதுமென்று சங்கர் எழுந்திருந்து வெளியே சென்றான்.
“நல்ல பிழைப்பு இது ! நித்தியகண்டம் பூர்ணாயுசு என்றிருக்கும் இந்த வாழ்க்கையிலிருந்து கூடிய சீக்கிரம் இவளை நாம் விடுவிக்க வேண்டும்” என்று அவன் மனம் திடமான தீர்மானத்துக்கு வந்திருந்தது.
4
மறுநாள் காலையில் குள்ளன் தன் வீட்டில் ஒரு பிடிலை வைத்துக்கொண்டு பாடிக்கொண் டிருந்தான். சிங்காரி, தோட்டத்தில் மரத்தடியில் தன் குரங்குடன் விளையாடிக்கொண் டிருந்தாள். அப்போது சங்கர் அவள் பின்னால் வந்து நின்றதை அவள் கவனிக்க வில்லை.
குரங்கைப் பார்த்து, “ராமா! உன் பெயர் நன்றாகவே இல்லை. இனிமேல் உன்னைச் சங்கர் என்று தான் கூப்பிடப் போகிறேன். என்ன சொல்லுகிறாய் ?” என்று கேட்டாள்.
“ஆஹா, அப்படியே செய்யலாம்! அதற்கு என்னைப் பொறுத்தவரையில் ஒரு விதமான ஆட்சேபமும் இல்லை” என்றான் சங்கர்.
சிங்காரி திடுக்கிட்டுப் போனாள். கலவரத்தினாலும் வெட்கத்தினாலும் அவள் உடல் குலுங்கிற்று.
“எப்படி நீங்கள் சத்தம் செய்யாமல் வந்தீர்கள்? உங்கள் காதில் விழவேண்டுமென்று நான் அதைச் சொல்லவில்லையே ! நீங்கள் அதைக் கேட்டது சரியா?”
“தப்புத்தான் ; ஆனால் நீ என் காதில் விழக் கூடாத வார்த்தையைப் பேசப் போகிறாய் என்று தெரிந்திருந்தால் நான் காதைக் கெட்டியாய் மூடிக் கொண்டிருப்பேனே!”
“நீங்கள் நேற்றுச் சர்க்கஸுக்கு வந்திருந்தீர்களே!”
“ஆமாம்.”
“ஆனால் பாதியில் எழுந்து போய்விட்டீர்கள். ஏன், உங்களுக்குப் பிடிக்கவில்லையா?”
சங்கர் பெருமூச்செறிந்தான்.
“ஆமாம் சிங்காரி, அந்தச் சர்க்கஸ் ஒன்றும் எனக்குக் கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை!”
“நீங்கள் சீக்கிரமே போய்விட்டீர்கள். நல்ல காட்சிகள் எல்லாம் அப்புறந்தான் நடந்தன. மிருகங்களெல்லாம் நேற்று ரொம்ப மூர்க்கமாய் இருந்தன. என்ன அதட்டியும் ‘லியோ’ வாயைத் திறக்கவே மாட்டேன் என்று விட்டது.”
“அது யார், லியோ?”
“லியோதான் எங்கள் சிங்கங்கள் எல்லாவற்றிலும் பெரியது. அதன் வாயில்தான் நான் தலையை விடுவேன்.”
சங்கர் நடுக்கத்துடன் உதட்டைக் கடித்தான். “சிங்காரி! இந்த மாதிரி யெல்லாம் நீ ஆபத்தான செய்யலாமா? உனக்கு உன் விளையாட்டுக்களைச் உயிர்மேல் ஆசை யில்லையா?”
சிங்காரி கல கலவென்று மணியோசை போன்ற குரலில் நகைத்தாள்.
“ஐயோ, எங்கள் பிழைப்பே அதுதானே?”
“நீ விளையாட்டாய்ப் பேசுகிறாய். சர்க்கஸில் நீ சேர்ந்திருப்பதே எனக்குப் பிடிக்கவில்லை. வேண்டாம்; இந்த வாழ்க்கையை விட்டுவிடு…?”
“விட்டுவிட்டு…?”
“என்னைக் கல்யாணம் பண்ணிக்கொள், சிங்காரி!”
சிங்காரி ஒரு கணம் திகைத்து நின்றாள். பிறகு, “அதெப்படி முடியும்? உங்கள் அந்தஸ்து என்ன, எங்கள் நிலைமை என்ன? நான் உங்கள் ஜாதியைச் சேர்ந்தவள்கூட அல்லவே?” என்றாள்.
“அதனால் என்ன? நான் ஜாதி வித்தியாசம் பார்க்கிறவனல்ல. என் பெற்றோர்களும் பார்க்க மாட்டார்கள்.”
“ஆனாலும் என் அப்பா சம்மதிக்கமாட்டார்.”
“ஏன்?”
“அவர் குணம் ஒரு தினுசு. நமக்குச் சமமானவர்களுடனும், நம்மைச் சேர்ந்தவர்களுடனுமே சம்பந்தம் செய்துகொள்ள வேண்டுமென்று அவர் சொல்லுவார். எனக்கு நாட்டியம் தெரியும்; கத்தி வித்தை தெரியும். கம்பிமேல் நடப்பேன்; மிருகங்களுடன் பழகுவேன். இதெல்லாம் தெரிந்தவனுக்குத் தான் என்னைக் கல்யாணம் செய்து கொடுப்பார்.”
“அப்பா சம்மதிக்க மாட்டார் என்றுதானே யோசிக்கிறாய்? நான் அவரைக் கேட்டுப் பார்க்கிறேன். அவர் சரி என்று விட்டால் அப்புறம் உனக்குச் சம்மதந்தானே ?”
சிங்காரி சம்மதித்தாள். ஆனால், அவள் சம்மதித்து என்ன பிரயோசனம்? சிங்காரிக்குத் தெரியும் வித்தைகளை யெல்லாம் அறிந்த ஒருவனுக்குத்தான் அவளைக் கல்யாணம் செய்து கொடுக்க முடியும் என்று கண்டிப்பாய்க் கூறிவிட்டான் குள்ளன்.
“சிறிது காலம் அந்த ஊரில் இருந்த பிறகு சர்க்கஸ் கம்பெனி வேறு ஊருக்குப் போய்விட்டது. அத்துடன் சங்கரும் வீட்டை விட்டுக் கிளம்பிப்போய் விட்டான். சிங்காரி எந்த எந்த ஊருக்குப் போனாளோ அந்த ஊருக்கெல்லாம் அவனும் போய்க்கொண்டிருந்தான் என்று கேள்விப்பட்டேன். இது நடந்து ஐந்து வருஷங்கள் ஆகின்றன. அதற்கு அப்புறம் நான் என் நண்பன் ஊருக்குப் போகவில்லை; அவனைப் பார்க்கவும் இல்லை. சிங்காரியையும் அப்பொழுது சர்க்கஸில் இரண்டு தடவை பார்த்ததுதான். அப்புறம் இன்றுதான் அவள் முகத்தை மறுபடியும் பார்த்தேன்.-“
“இன்றா? எங்கே?”
நான் என் பின்னால் சுவரில் மாட்டியிருந்த படத்தைக் காட்டினேன். “இவள்தான் நான் ஐந்து வருஷத்துக்கு முன் பார்த்த நாட்டியக்காரி சிங்காரி. இப்பொழுது வளர்ந்திருக்கிறாள். அதிக அழகும் பெற்றிருக்கிறாள். அதனுடன் ஊர்வசி என்று பெயரையும் மாற்றி வைத்துக்கொண்டிருக்கிறாள் போல் இருக்கிறது.”
“சிங்காரி இவள் தானா? என்ன ஆச்சரியம்! அப்படியென்றால் உன் நண்பன் என்ன ஆனான்? இவள் தன்னுடைய நாட்டிய சகாவான கந்தர்வாவை அல்லவா கல்யாணம் செய்துகொண்டிருக்கிறாள்?” என்றான் ரகு.
“நாங்கள் ஜூபிடர் தியேட்டருக்குள் போய் உட்கார்ந்தோம். நாட்டியக் கச்சேரி ஆரம்பமாயிற்று. முதலில் மன்மதன் – ரதி நடனம்; அடுத்தாற்போல் ராதா – கிருஷ்ண நடனம். இப்படி, தேவேந்திர சபைபோல் நிர்மாணிக்கப்பட் டிருந்த மேடைமேல் கண்களுக்கும் காதுகளுக்கும் ஹ்ருதயத்துக்கும் ஒருங்கே விருந்தளிப்பதுபோல் அற்புதமான நடனக் காட்சி நடந்தது.
அந்த நடனத்தின் சௌந்தர்யத்தை நான் என்ன வென்று விவரிப்பேன் ! கலைத் தெய்வத்தின் பிரதி நிதிகள் என்று அவர்களை ரஸிகர்கள் போற்றுவதில் நான் ஆச்சரியப்படவில்லை. பாதியில், என்னையும் அறியாமல், “அட பாவி! இவன் எப்பொழுது இந்தத் தெய்விகக் கலையை அப்பியாசம் பண்ணிக் கொண்டான்! இப்படிப் பிரமிக்கத் தக்க விதமாய் நாட்டியமாடும் சாமர்த்தியம் இவனுக்கு எங்கிருந்து வந்தது?” என்று வாய் விட்டுக் கூறினேன்.
“யாரைச் சொல்லுகிறாய்?” என்றான் ரகு.
“இந்தக் ‘கந்தர்வா’வைத்தான் சொல்லுகிறேன். மனிதன் தன் பெயரை மாற்றிக் கொள்வது கஷ்டமான காரியம் அல்ல. சங்கர் என்ற பெயர் பிடிக்காவிட்டால் ‘கந்தர்வா’ என்றோ இன்னொரு கின்னரன் என்றோ சுலபமாக மாற்றிக்கொண்டு விடலாம். ஆனால், அதனுடன் தன் வாழ்க்கையை இப்படி அடியோடு மாற்றிக்கொள்வது எப்படிச் சாத்தியமாயிற்று?” என்றேன்.
இதோ திரை மறுபடியும் மேலே போகிறது! சிங்காரியும் சங்கரும் மறுபடியும் மேடைமேல் தோன்றுகிறார்கள்.
– காளியின் கண்கள் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: செப்டெம்பர் 1943, கலைமகள் காரியாலயம், சென்னை.