நக்ஷத்திர பூஜை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 23, 2022
பார்வையிட்டோர்: 2,747 
 

(1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அகோரமையர் துணியைப் பொறுக்கிவிட்டார். *பிறகும் தயங்கினார். இருபது ரூபாய் கொடுத்து, அந்த உத்தரீயத்தை வாங்குவது சரியா என்று அவ ருக்குச் சந்தேகம். முடிவில் மனத்தைத் திடப்படுத் திக்கொண்டு, ஒரு பெருமூச்சையும்விட்டு, “இதையே எடுத்துக்கொள்ளுகிறேன்” என்றார். ‘சரி’ என்று சொல்லி, கடை வேலைக்காரர், அந்த வஸ்திரத்தை ஒரு காகிதப் பையில் செருகிக் கட்டினார்.

கையில் ஐம்பது ரூபாயுடன் அகோரமையர் சென்னைப்பட்டினத்திற்கு, அந்தக் கிறிஸ்ட்மஸ் விடு முறைக்கு வந்தவர். இது வெகுநாளாக அவருக்கு இருந்த ஓர் ஆசை. அவருக்கு இருப்பிடம் திருவா ரூர். கச்சேரி குமாஸ்தா வேலை. பரம சாது என்றே பெயர். அவருடைய பத்தினி ஒரு விவேகி. இறுக் கின ஞாண் கயிற்றைத் தளர விடாமலே இருந்து விட்டால், வில்லின் சக்தி போய்விடும் என்று அறிந்தவள். “உங்கள் இஷ்டப்படி சென்னைப்பட்டி னம் போய், பத்து நாளாவது கவலையற்று இருந்து விட்டு வாருங்கள்” என்று சொன்னாள்.

அதன் மேல் அவர் ஒரு நீள லகோடாவை எடுத்து, ‘ சென்னை யாத்திரை பண்டு ‘ என்று அதற்கு நாமகரணம் செய்து, அதில் சிறுகச்க, கையில் தங்கும் சில்லறைக் காசுகளையே போட்டு, சுமார் மூன்று வருஷத்தில் அறுபது ரூபா யைச் சேர்த்துவிட்டார். போகவர, ரெயில் சார் ஜுக்குப் பத்து ரூபாய்க்கு மேல் பிடிக்காது. அவ ருடன் கூட வேலை பார்க்கும் விசுவநாதையர், சென்னையில் தம்முடைய தம்பி நரசிம்மையரின் வீட்டில், செலவில்லாமல் தங்கியிருக்கும்படி ஏற் பாடு செய்துவிட்டார். ஆகையால் அகோரமைய ருக்கு வெகு சந்தோஷம். நாற்பத்தைந்து வயதுக் குள்ள உலக அனுபவமும், பதினெட்டு வயதுக் குள்ள உல்லாசமும் சேர்ந்த வண்ணமாய் விடு முறையைக் கழித்தார்.

இஷ்டப்பட்ட காட்சிகளை யெல்லாம் கண்டார். விதம் விதமான ஹோட்டல்களின் தயாரிப்புகளைப் பரீக்ஷை செய்தார். கணக்கில்லாமல் நடந்து கொண் டிருந்த பாட்டுக் கச்சேரிகளுக்குள் பொறுக்கி, முதல் தரமான சங்கீதத்தை அனுபவித்தார். ஆனால், விசேஷமாக, சினிமாக்களிலே பொழு தைச் செலுத்தினார். ‘புருஷோத்தமையா’ நடித்த படங்கள் எந்த எந்தத் தியேட்டர்களில் காண்பிக் கிறார்கள் என்று கண்டுபிடித்து, ஒரு படம் விடா மல் பார்த்து, தம்முடைய வெகு நாளைய மனோ ரதத்தை நிறைவேற்றிக்கொண்டார்.

‘நக்ஷத்திரம்’ என்பது புருஷோத்தமையா ஒரு வருக்குத்தான் தகும் என்பது அவருடைய அபிப் பிராயம். புருஷோத்தமையாவைக் குறிப்பிட அதைக்காட்டிலும் உயர்ந்த வார்த்தை இல்லைபே என்று குறைப்படுவார். அவருடைய மனைவி, சிடி) சமயம், பிரியமாய்ப் பரிகாசம் செய்வது உண்டு. ”இதென்ன பக்தி இது! தேசபக்தி ஜனங்களுக்கு நல்லது. ராஜபக்தி இகலோகத்தில் பலனைக் கொடுக்கும். தெய்வ பக்தி இரு லோகத்திற்கும் நல்லது. அதெல்லாம் விட்டுவிட்டு, ஒரு நக்ஷத்திர பக்தி உங்களுக்கு ஏற்பட்டு, அர்த்தங்கூடப் பாதி புரியாத தெலுங்குப் படங்களுக்கு உங்களை இழுக்கிறதே!” என்று. “வெறுமனே சொல்லாதே! வார்த்தை களுக்கு அர்த்தம் ஒன்று விடாமல் புரியவேணும் என்று அவசியமா? அவர் நடிப்பதே போராதா? சன்னியாசியாய் வரட்டும். ராஜாவாக நடிக்கட்டும். அவருடைய சாமர்த்தியமும், கம்பீரமும், சாந்தியும், உயர்ந்த குணமும் வேறு யாருக்கு வரும்? ஒவ் வொரு தடவை அவருடைய படத்தைப் பார்த்து விட்டு வரும்போதும், கோவிலுக்குப் போய் வந்த மாதிரி இருக்கிறது என் மனசு” என்று அவர் பதில் சொல்லுவார். அத்துடன் அந்த அம்மாள் பரிகாசத்தை நிறுத்தி விடுவாள்.

விடுமுறையின் கடைசித்தினம், அகோரமையர், எஸ்ப்ளனேடில் நடந்துகொண்டிருந்தவர், ஒரு துணிக் கடையின் முன்பு நிற்கலானார். அதன் வாச லில் கட்டித் தொங்கவிட்டிருந்த பலகையில், ஓர் அடி உயரமுள்ள அக்ஷரங்களால், ‘பொங்கலுக்குப் பரிசு வாங்கிக் கொடுங்கள்’ என்று புத்திமதி அளிக கப்பட்டிருந்தது. அதுவும் சரிதான். வீட்டிற்குத் திரும்பும்போது, வெறும் கையாகப் போவானேன்?’ என்று எண்ணி, கடைக்குள் நுழைந்தார். நுழைந் தவர், சற்றுத் தயங்கிக்கொண்டு, ஏதோ ஓர் இடத் தில் நிற்கவே, அங்கிருந்த கடை வேலைக்காரர், உத்ஸாஹத்துடன், “வாருங்கோ! ஜரிகை உத்தரீ யமா பார்க்கிறீங்கோ? இதோ இருக்கு, ‘லேடஸ்ட் பாஷன்.’ நேத்திக்குத்தான் புது ‘ஸ்டாக்கு’ வந் தது. ‘புருஷோத்தமையா உத்தரீயம்’ என்று இதுக் குப் பெயர். ரொம்பப் பேர் வாங்கிண்டு போறாங்க’ என்று சொல்லி, அவருக்கு எதிரே இருந்த பீரோ விலிருந்து பல உத்தரீயங்களை எடுத்து மேஜை மேல் குவித்துவிட்டார்.

அவை ஒரு விநோதத் தினுசாகத்தான் இருந் தன. கரைகளில் சாதா ஜரிகைக்குப் பதிலாக, தக்க எழுத்துக்களால், புருஷோத்தமையாவின் பெயர் மாத்திரமல்ல, அவர் நடித்துள்ள பல படங் களின் பெயர்களும், மாற்றி மாற்றி நெய்யப்பட்டி ருந்தன. அவற்றைக் காணும்பொழுது, தெய்வமே தன்னை அவ்விடத்திற்குக் கைபிடித்து அழைத்து வந்ததாக அகோரமையருக்குத் தோன்றிற்று. ஓர் உத்தரீயத்தைப் பொறுக்கினார். விலை இருபது ரூபாய். அந்தப் பணம் அவர் கையில் பாக்கியிருந் தது. ஆனால் அந்த வஸ்திரத்தை வாங்கினால், வீட்டி லுள்ளவர்களுக்கு வாங்கப் பணம் கிடையாது. பக்தி ஒரு பக்கமும், குடும்ப வாஞ்சை ஒரு பக்கமும் அவரை இழுத்தன.

முடிவில், ‘இன்று ஒரு நாள் போக, பாக்கி ஆயுசு முழுவதும் குடும்பத்திற்காகவே உழைக் கிறேனல்லவா? இந்த ஒரு தடவை மாத்திரம் என் ஒருவனுடைய சந்தோஷத்திற்காக இதை வாங்கி, புருஷோத்தமையாவிடம் நேரில் சென்று இதைச் சமர்ப்பித்துவிட்டு, அவர் மூலமாக நான் இதுவரை அனுபவித்திருக்கும் ஒப்பற்ற ஆனந்தத்திற்கேற்ற என்னுடைய நன்றியறிவைத் தெரிவித்தால், இதன் ஞாபகமே எனக்கு என்றென்றைக்கும் போதும்.’ இவ்விதமெல்லாம் எண்ணி மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு, நாம் முதலில் கண்டபடி, அந்த வஸ்திரத்தையே வாங்கினார்.

வாங்கினபிறகு, ஞாபகம் வரவே, ‘புருஷோத்த மையாவின் வீடு எங்கே இருக்கிறது, தெரியுமோ?’ என்று கடை வேலைக்காரரைச் சிறிது சங்கோசத் துடனே கேட்டார். தன்னுடைய எண்ணத்தை அவர் ஊகித்துவிடுவாரோ என்று பயம்!

“அது ராயபுரத்திலிருக்கு. ஏன் ? அங்கே போகணமா?”

அகோரமையர் தலையை அசைத்தார். அதற்கு மேல் தைரியமில்லை.

“இங்கிருந்தபடி இடத்தைச் சொல்றதுகஷ்டம். ஆனா அது ஒன்றும் வேண்டாம். நீங்க இங்கே சத்தே இருங்கோ. அவர் வீட்டுக்கு இந்தச் சாமானை அனுப்பப்போறேன். அவர் ஆர்டர்படி நெச பொடவை இது. ‘பாக்’ பண்ணி, தயாராயிருக்கு. அவருடைய வேலைக்காரப் பையன், எதிர்க்கே இருக்கிற கார்ப்பரேஷன் மார்க்கட் டிலே பழம் வாங்கப் போயிருக்கான். அஞ்சு நிமிஷத்தில் வந்துடுவன், இதை வாங்கிண்டு போக. அவனோடே நீங்க டிராமில்கூடப் போயிடலாம்” என்று வேலைக்காரர் சொன்னார்.

அந்த ஏற்பாட்டின் பிரகாரமே, கால் மணி நேரத்திற்குள் அகோரமையர் புருஷோத்தமையா வின் வீடு போய்ச் சேர்ந்தார். டிராம் வண்டியி லிருந்து இறங்குவதற்கு முன், பையன் பழக்கூடை யையும் பொட்டலத்தையும் எடுத்துக்கொண்டு, ஒரு விஷயம் சொன்னான். “நீங்க என்னோடு கூடவே நுழையாதேங்க. ஐயா ஏதாவது சொல்லு வார். நான் மொதல்லே உள்ளே போயிடறேன்” என்றான்.

அப்படியே அவன் செய்ய, இரண்டு நிமிஷம் பொறுத்துவிட்டு, அகோரமையர் வாசற் கதவைத் தட்டினார். அத்தருணத்தில் வீட்டிற்குள் ஒரு கூக்குரல் கேட்டது. பையன் அழுகிறதும், ஒரு பெரிய மனிதன் அவனைப் பளார் பளார் என்று அடித்துக் கொண்டே திட்டுகிறதுமாயிருந்தது. ‘காமாட்டிப் பயலே, டவுனுக்குப் போய் இரண்டு சாமான் வாங்கிண்டு வர தூன்னா, ரண்டு மணி நேரமா அதுக்கு? ஒன் பல்லைப் பிடிங்கூடறேன், பாரு!” இன்னும் பூசைகள்; இன்னும் சில திட்டல்கள்.

அகோரமையர் திடுக்கிட்டு நின்றார். ‘இவ்வளவு குரூரமான மனிதனுக்கு, புருஷோத்தமையா தன்னுடைய வீட்டில் இருக்க, என்னமாய் இடங் கொடுத்தார்?’ என்றே அவர் வியந்தார். அச்சமயத் தில் வாசற்கதவு திறக்கப்பட்டு, ஒரு மனிதர் வெளியே வந்தார். அகோரமையரின் திடுக்கம் பன்மடங்கா யிற்று. அந்த மனிதரைப் பார்த்தால், புருஷோத் தமையா மாதிரியும் இருந்தது, ஆனால் அவரல்ல போலவும் தோன்றிற்று. அதே உயரம், அதே உருவம், அதே தோற்றம். ஆனால் அகோரமையர் மனசுக்குள் பதிந்துள்ள ஒரு மனோகரமான, சாந்தி ஸ்வரூபமான வதனத்திற்குப் பதிலாக, அம்மைத் தழும்புகள் பெருகிய தடித்த தோலுடன், கோபத் தினால் கோணலாக இழுக்கப்பட்ட இந்திரியங்களைப் படைத்த ஒரு முகத்தைக் கண்டார். இருந்தாலும், அவருக்கு அதுவும் ஏதோ ஒருவிதத்தில் புருஷோத் தமையாவின் முகத்தையே ஞாபகப்படுத்தியது.

“யார்? நீ எங்கே வந்தாய்?’ என்று அந்த மனி தர், ஒரு தெலுங்கர் பேசும் தமிழில் சீறினார். அகோரமையருக்குத் தெற்றல் கண்டுவிட்டது.

“நா ஆ ஆன் திதிதிதிதிருவாலூர். உங்களைக் கண்டு கொண்டு போகலாம் என்று வந்தேன்…”

“ஒன்றும் காணவேண்டாம். நான் ஒன்றும் பிச்சை போடப் போறதில்லே…”

“இல் லேல் லேல் லே…”

“பின்னே எதுக்காக வந்தாயாம்? இந்த வித் தையெல்லாம் தெரியும். ஒன்னைப்போல், நூறு பேரைப் பார்த்திருக்கேன். மொதல்லே அப்படி இப்படீன்னு பேசறது. கடேசிலே முடியறது யாசகத்திலே…”

“நான் சத்தியமாய்ச் சொல்லுகிறேன்…”

“சரித்தான்னா, எனக்கு ஒன்னோடே வாயாடச் சாவகாசமில்லை. போன்னா, மரியாதையாய்ப் போறயா, இல்லெயா?…. யார்ரா அங்கே, அந்த நாயை அவுத்துவிடு…”

அகோரமையர் துக்கத்துடன் திரும்பினார். பாவம்! அவர் மனம் பட்ட பாட்டைச் சொல்லவும் வேண்டுமா? அன்றிரவு, ரயில் வண்டியில் கஷ்டப் படாமல், வீட்டில் சுவஸ்தமாகச் சயனித்திருந் தாலுங்கூட, அவருக்கு ஒருபொட்டுத் தூக்கமும் வந் திராது. ‘இவரா நான் இதுவரை பூஜித்து வந்த மகான்?’ என்று நினைக்கும்போதெல்லாம் தம்மு டைய அறிவீனத்தைக் குறித்து உண்டாகும் அவமானம் போதாதென்று, இதுவரை புருஷோத்தமை யாவின் படங்களைக் காணும் பொழுதெல்லாம் தாம் உட்கொண்ட ஆனந்தத்தையெல்லாம், திரும் பக் கக்குகிறமாதிரியே கஷ்டப்பட்டார். கோவிலில் தெய்வத்திற்கு அர்ச்சனை செய்துகொண்டிருக்கையில், நம்முடைய கண்ணெதிரில் அது ஒரு பிசாசாக மாறினால் எப்படி இருக்கும்? –

தம்முடைய சம்சாரத்தினிடத்தில் இதையெல் லாம் எப்படிச் சொல்லுகிறது? அவருடைய ‘பக்தி’ யைக் குறித்து அந்த அம்மாள் இதற்கு முன் பரிகாசம் பண்ணுவது அகோரமையருக்கு ஒரு விளையாட்டு மாதிரி களிப்பாகவே இருக்கும். ஆனால் இது ஒரு பரிகாச விஷயமல்ல, விளையாட்டுச் சமாசாரமல்ல. நினைத்தால் துக்கத்தைப் பொங்கச் செய்யும் காரி யம். தனக்குப் பட்ட புண்ணை, கட்டை அவிழ்த்து அவளிடம் காட்ட இஷ்டமில்லை. நடந்ததை ஒருவ ரிடமும் ஒன்றும் சொல்லுவதில்லை என்றே தீர்மானித்தார்.

மறுநாள் காலையில் வீடுபோய்ச் சேர்ந்தவுடன், அவளுடைய கேள்விகளுக்குச் சுருக்கமாகவே பதில் சொல்லிவிட்டு, பல் விளக்கவேண்டியதைச் சாக்கிட்டு, தப்பித்துக்கொண்டு போனார். அந்த அம் மாள் அவர் கொண்டுவந்த மூட்டையை அவிழ்த்துச் சாமான்களை ஒழுங்குபடுத்தத் தொடங்கினாள் . பட்டினத்துத் துணிக்கடையின் பொட்டலம் அவ ளுடைய கண்ணிற்படவே, முதலில் அதையே பிரித் தாள். பிரித்ததும் அவளுக்கு உண்டான ஆனந்தத் தைச் சொல்லி முடியாது. அச்சமயம் அகோரமை யர் அவ்விடத்திற்குத் திரும்பி வரவே, அவரை ஒரு தடவை இறுகக் கட்டிக்கொண்டுவிட்டு, அவருக்குச் சாஷ்டாங்கமாய் நமஸ்காரம் செய்தாள். ‘இந்த மாதிரிப் புடைவை வேண்டுமென்றுதான் இரண்டு வருஷங்களாக ஆசைப்பட்டுக்கொண்டிருக்கிறேன். உங்களுக்கு அதை யார் சொன்னது? விலையோ, தற்கால விலையாக 175 ரூபாய் போட்டிருக்கிறதே, உங்களுக்குப் பணம் எது?” என்று பிரியமும் சந் தோஷமும் போட்டி போடுகிற குரலில் கேட்டாள்.

அகோரமையர் ஒரு விநாடி தயங்கினார். அவ ளுடைய ஆனந்தத்தில், அதை அவள் கவனிக்க வில்லை. அவளுடைய கண் அந்தப் புடைவையின் மேலே-. அந்த ஒரு விநாடியில் அவருக்கு எல்லாம் புரிந்துவிட்டது. நேற்றைக்கு டிராம் வண்டியில் போகும்போது, அந்தப் பையன் கொண்டுபோன பொட்டலமும் என் பொட்டலமும் ஒன்றுக்கு ஒன்று மாறிப் போயிருக்கவேண்டும். இரண்டுக் கும் கடைப்பெயர் போட்ட ஒரே மாதிரிப் பை. துணியும், பட்டுப்புடைவையும் ஒரே கனம், ஒரே பருமன். அதனால்தான் இரண்டு பேரும் ஏமாந்து போனது. அதெல்லாம் இருக்கட்டும். இப்பொழுது இவள், புடைவை கிடைத்ததென்று இவ் வளவு சந்தோஷப்பட்ட பிறகு, அது ஒரு தவறு, புடைவை கிடையாது என்று சொல்லி இவளுடைய மனசை என்னமாய்ப் புண்படுத்துகிறது? ஒரு பொய்யைத்தான் பேசவேண்டும்’ என்று தீர்மானித்தார்.

(இம்மாதிரி நல்ல எண்ணத்துடன் சொல்லும் பொய்களை, யமதர்மராஜனும் சித்திரகுப்தனும் ஒருவருடைய பெயரிலும் பற்று எழுதுகிறதில்லை, ஓர் அநாமத்துப் புஸ்தகத்தில் பதிகிறான் என்றே கேள்வி. கேள்வியை எழுதிவிட்டேன். ஆனால் இவ்விஷயத்தின் யதார்த்தத்தை அறியவேண்டு மானால், பொய் சொல்லுகிறவர்களிடமே கேட்டு அறிந்துகொள்ளவேண்டும்.)

அவ்விதம் தீர்மானித்த அகோரமையர், தமக்கு முதலில் தோன்றின பொய்யைச் சொல்லிவைத் தார். “பணமா? நான் இந்தப் புடைவைக்கு விலை கொடுக்கவில்லை. ஒரு லாட்டரியில் ஒரு ரூபாய் டிக் கட்டு ஒன்று வாங்கினேன். இது கிடைத்தது” என் றார். இவ்விதம் சொற்பச் செலவுக்கு, இவ்வளவு உயர்ந்த புடைவை கிடைத்ததற்காக அந்த அம் மாள் இரு மடங்கு சந்தோஷப்பட்டுக்கொண்டிருக் கையில், தாம் விசுவநாதையரிடம் சென்று, உண் மையைத் தெரிவித்து, தம் மனசில் உள்ள பளுவை நீக்கி, மேல் யோசனையைக் கேட்கவேண்டுமென்று தீர்மானித்தார். அவ்விதமே, அவரிடம் சாங்கோ பாங்கமாக நடந்ததையெல்லாம் சொல்லிவிட்டு, (நான் இப்பொழுது என்ன செய்கிறது? சொல்லு” என்று கவலையுடன் கேட்டார்.

விசுவநாதையருக்கோ , ஒருவிதமான கவலைக் கும் அவசியம் தென்படவில்லை. “அடேயப்பா! பார்த்தால் பூனை மாதிரி இருக்கிறாய். ஆனால் என்ன காரியம் செய்து விடுகிறாய்! அவன் வேண்டாம், வேண்டாம் என்றால் கூட, உன் இஷ்டப்படியே, நீ பொறுக்கின ‘ப்ரெஸன்டை’யே அவன் கையில் சேர்த்துவிட்டு, பதிலுக்கு 175 ரூபாய்க்கு ஒரு புடை வையைத் தட்டிக்கொண்டு வந்துவிட்டாயே! அடுத்த தடவை பட்டினம் போகிறபோது, என் வீட்டுக்காரிக்கும் ஒரு புடைவை சம்பாதித்துக் கொண்டுவா, அப்பா!” என்றார்.

“பரிகாசம் இருக்கட்டும். வாஸ்தவத்தில், நான் (இப்பொழுது என்ன செய்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. அதைச் சொல்லேன்!” என்று கெஞ்சினார்.

“நீ செய்யவாவது! பகவான் தான் உன் கண் ணைத் திறந்தார். நக்ஷத்திரமாவது நக்ஷத்திரம்! முகத்தில் பூசிய பவுடர் பாதி, எத்தனையோ டைரெக் டர்கள் தங்கள் பிராணன் போக, அவனுக்கு உருப் போட்டுக்கொடுத்த வார்த்தைகள் பாதி, இவைகளை வைத்துக்கொண்டு ஒரு சோதாப்பயல் மினுக்கிக் கொண்டு, ஒரு பேய் பிடிக்கிறமாதிரி, உன் மன சைப் பிடித்துக்கொண் டிருந்தான், இத்தனை நாளாக. அவன் எந்த மாதிரி ஆசாமி என்று இப் போது உனக்குத் தெரிந்துபோய்விட்டது. நீயாகச் சிருஷ்டித்திருந்த மனிதன் செத்தான் என்று ஒரு முழுக்குப் போட்டுவிடு. இந்தப் பைத்தியமும் தொலையட்டும், ரெயில் வண்டிக் கரியும் தொலையட் டும்” என்று சந்தோஷமாய்ப் புத்திமதியளித்தார்.

“சரி, நீ சொல்லுகிற மாதிரியே, அவனைக் குறித்து ஒரு ஸ்நானம் செய்துவிடுகிறேன். ஆனால் புடைவை விஷயத்தில் என்ன செய்கிறது ? உத்தரீயத்தின் விலையைக் கழித்தாலும், அவனுக்கு 150 ரூபாய்க்குமேல் நஷ்டமாய்ப் போயிருக்கிறதே, கடைக்காரனைத் தொல்லைப்படுத்தப் போகிறானே, எல்லாம் வெளியாய்விடுமே?”

“ஒன்றும் அப்படியில்லை. நடந்ததை ஒருவ ராலும் ஊகிக்க முடியாது. உன் பெயர் கூட ஒருவ ருக்கும் தெரியாது. அந்தக் கடைக்காரரை நான் நன்றாய் அறிவேன். மூன்று புருஷோத்தமையாக் களுக்குப் பதில் சொல்லக்கூடியவர். அனுப்பின புடைவையைப் பெற்றுக்கொண்டு, அவன் தான் பொய் சொல்லுகிறான் என்று எந்தக் கோர்ட் டிலும் சாதிக்கக் கூடியவர். நீ அவருக்காக விசாரப்படவேண்டாம்.”

“அப்படியானால் நியாயப்படி புருஷோத்தமை யாவுக்கு 155 ரூபாயை நான் அனுப்பவேண்டாமா, கடன் வாங்கியாவது? வேறொன்றும் எழுதாமல் மொட்டையாய் ஒருமணி ஆர்டர் செய்துவிட்டால்….”

“இதோ பார்! அகோரம், இந்தமாதிரி தெய் – வமே கைகலந்து, ஒரு காரியத்தை முடிக்கும் போது, நீ குறுக்கே வந்து உன் நியாயத்தைப் பேசினாயானால், தெரியுமா செய்தி? நடந்ததெல் லாம் உன் அகமுடையாளிடம் போய்ச் சொல்லி விடுவேன். இனிமேல், உன் ஆயுசுக்கு, நீ சொல் லுவதொன்றையும் நம்பமாட்டாள்!” என்று பய முறுத்திவிட்டு, திடீரென்று வயிற்றைப் பிடித்துக் கொண்டு, ‘ ஓஹோ ஹோ!’ என்று அடக்க முடியா மல் சிரிக்கத் தொடங்கினார்.

“உனக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா?” என்று சற்றுக் கோபமாகவே அகோரம்மையர் கேட்டார்.

“பைத்தியம் ஒன்றுமில்லையப்பா” என்று விசுவ நாதையர் தம்முடைய கண்களைத் துடைத்துக் கொண்டு விவரித்தார். “இதுதான் சமாசாரம். அந்தச் சோதா மனிதன், வேலைக்காரப் பையனைக் காலதாமசம் செய்ததற்காகத் திட்டி அடித்ததற்கும், உன்னைப் பேசக்கூட விடாமல், வெருட்டி ஓட்டின தற்கும் காரணம் புரிந்ததா? அவன் உன்னுடைய பொட்டலத்தை எடுத்துக்கொண்டு ஓட்ட மாய் ஓடிப்போனது யாரோ ஒரு ஸ்திரீயுடன் பிரிய வார்த்தைகள் பேசிவிட்டு, அதை ஆடம்பரமாய்க் கொடுப்பதற்குத்தான். அவளும் அதை ஆவலுடன் திறந்திருப்பாள். அப்பொழுது அதில் ‘ஸ்பெஷல் ஆர்டர்’ ஆன பட்டுப்புடைவைக்குப் பதிலாக ஒரு வெள்ளைத் துணி, அவனுக்கு மாத்திரம் புகழ்ச்சி யாக இருக்கிற ஒரு வெள்ளைத் துணியைக் காணும் பொழுது, அவனை அவள் என்ன என்ன சொல்லி யிருப்பாள்? அவள் ஒன்றும் அவனுக்குச் சளைத்த வளாக இருக்கமாட்டாளே! இந்தக் காட்சியை ஒரு ‘ஸ்டூடியோ’வும் எடுக்காமல் போய்விட்டதே!” என்று மறுபடியும் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினார்.

அந்த வைபவத்தைத் தன் மனசில் கல்பிக்கும் பொழுது, அகோரமையருக்கும் தடுக்கமுடியாமல் சிரிப்புப் பெருகி, மனச்சாந்தியுடன் மனைவியிடம் திரும்பினார். ‘நக்ஷத்திர பக்தியால் யாருக்கு என்ன லாபம்?’ என்று அவள் அடிக்கடி கேட்பதுண்டே, இதோ பார்! அதனால் தான் உனக்கு இந்தப் புடைவை கிடைத்தது!’ என்று சொல்லிக்காட்டினால் எவ்வளவு திருப்தியாக இருக்கும்! நிஜத்தைச சொல்ல முடியாதபடி, ஒரு பொய்யைச் சொல்லி யாய்விட்டதே என்கிற ஒரு குறைதான் அவருக்கு.

– கொனஷ்டையின் கதைகள், முதற் பதிப்பு: மே 1946, புத்தக நிலையம், திருச்சி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *