தோழர் இறந்து விட்ட பின்பும் ரயில் ஓடிக் கொண்டிருக்கிறது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 27, 2019
பார்வையிட்டோர்: 11,886 
 
 

“தோழர் விருப்பப்படி அவர் இறந்த பிறகு பிரேதத்தை அவரது உற்ற நண்பர்கள் நீளவாக்கில் இரண்டு குழி வெட்டி தோழரை இரண்டாகப் பிளந்து இரண்டு குழிகளிலும் அடக்கம் செய்து விட்டார்கள். காற்று சூழ்ந்திருக்கிறது , மதியத்தில் டைனோசர்கள் புற்கள் மேய்ந்து கொண்டிருக்கின்றன.”

***

ஈரோடு பாரதி புத்தகாலயத்தில் புதியதாக ஏதாவது நாவலோ , சிறுகதைக் கொத்துக்களோ கிடைக்குமா என்று நான் தேடிக்கொண்டிருந்த சமயம்தான் என்று நினைக்கிறேன் அல்லது அப்படி தோணுகிறதோ என்னவோ , கடைக் கல்லாவின் முன் அமர்ந்திருந்த அதிகை நீண்ட நேரமாகவே என்னிடம் ஏன் ஒரே ஒரு கவிதை தொகுப்போடு கவிதை எழுதுவதை நிப்பாட்டிப் போட்டீனீர்கள்? என்று வினவ சென்னிமலை தோழர் ஒரு கணம் மனதில் பளீரென மின்னலிட்டு மறைந்தார்.

கவிதை நாயகிக்கு தொன்னூறுகளில் நிறையப்பேர் ஆடை அணிகலன் பூட்டி அழகுப் பார்த்த நேரத்தில் , கவிதைகளில் இருந்த ஆடை அணிகலன்களை களைந்து , கவிதை தன்னளவில் நிர்வாணமாகவே இருக்கட்டும் என எழுத ஆரம்பித்தவன் நான்.., பத்து , பனிரெண்டு வருடங்களாக எழுதியவற்றுள் இருபத்தி இரண்டு கவிதைகளை மட்டும் வாய்ப்பாடு சைசில் புத்தகமாக 2003 ல் கொண்டு வந்த சமயம் சென்னிமலை தோழருக்கு ஆசையுடன் முதல் பிரதியை நீட்டினேன்.

சமர்ப்பணம் யாருக்கு? புத்தகத்தோழர் ரகுவிற்கா? பேஸ் பேஸ்.., எல்லாஞ் செரி அவுரு ஈங்கூர்ல இருக்கிற மாதிரின்னா கொண்டி நீட்டி பாக்கச் சொல்லிட்டு , அப்புடியே சரக்கு வாங்கிட்டு வரச்சொன்னம்னா .., மளார்ன்னு சந்தோசத்துல ஏற்பாடு பண்ணுவாப்ல…, ஆளு வெளியில்ல இருக்குது! செரி முதல் கவிதை ஆஹா .., ஆஹா ரெண்டாவது மூனாவது த்தூக் கருமம் புடிச்ச எழவு எனச் சொல்லி புத்தகத்தை வீட்டு வாசலில் எறிந்தார் , இருந்தும் மளாரென ஓடிச்சென்று லுங்கியைத் தூக்கிவிட்டு உட்கார்ந்தார் வாசலில். அன்றோடு கவிதை எழுதுவதை நிப்பாட்டி விட்டேன் என்று அதிகை எழில்நிலவனுக்கு விளக்கிய சமயம் டெலிபோன் அழைக்கவே, அதிகை அதை எடுத்து காதில் வைத்துக்கொண்டார்.

அந்த சமயத்தில் எனது கைப்பேசியும் அழைக்கவே எடுத்து வணக்கம் என்றேன். எதிர்முனை வணக்கம் கிடக்கு கழுதை.., என்றார் நண்பர். சொல்லுங்க .., டவர் குறைவான இடத்துல இருப்பீங்க போலிருக்கு.., இருக்கிற எடமாப் பாத்து நின்னு பேசுங்க என்னுது ரிலையன்ஸாப் போச்சி.., டவுன்லதான் நிக்கேன்.., டவர் இருக்குது அப்பறம் போயிடுது.., ஒரே கூத்து இந்த டப்பிய வெச்சுட்டு.., ஹாங் இப்பக் கேக்குது சொல்லுங்க என்றேன். நண்பர் விசயத்தை சுருக்கமாக கூறக்கூற அதிர்ச்சியில் சிலையாய் நின்று போனேன். திருப்பூர்க்கும் , கூலிப்பாளையத்துக்கும் இடையில் பேசஞ்சர் ரயில் சென்றுக்கொண்டிருந்த போது , பெட்டி விட்டு பெட்டி தாவுகையில் கை பேலன்ஸ் தவறி விழுந்து நொடியில் தோழர் இறந்து விட்டாராம். ரயில்வே போலிஸ் பாடியை போஸ்ட்மார்ட்டம் செய்து தைத்து சென்னிமலை அனுப்பி விட்டதாம். விசயம் அறிந்ததும் தோழர் தொடர்பான பதினேழு வருட நினைவுகள் சரமாரியாக என்னுள் பெருக்கெடுத்து ஓடின.

கைப்போனில் கதைச்சது யார் உங்களது பெட்டையா? என்றார் அதிகை. நான் மண்டையை இருபுறமும் ஆட்டி மறுத்து விட்டு மண்டையைப் பிடித்தபடி நாற்காலி ஒன்றில் அமர்ந்தேன். தோழர் என்கிற மனிதரின் மறைவு பற்றிய செய்தியை அதிகைக்கு சொன்னதும் ” தோழர் என்றால் ஆமிக்காரரோ? என்றார். ஒரு சில கவிதைகளையும், சிறுகதைகளையும், ஒரே ஒரு நாவலை மட்டுமே தமிழ் இலக்கியத்திற்கு தந்தவரை இலக்கிய உலகு எப்படிக்கேட்க வேண்டுமோ அப்படியே அச்சு அசல் கேட்டார், ” ஒரு ரீ சாப்பிடுவோம் ” என்றவரிடம் மறுப்பை உதிர்த்து விட்டு கடையை விட்டு கிளம்பினேன்.

தோழரை நேரில் சந்தித்து உரையாடிய எல்லா சந்தர்ப்பங்களும் எனக்கு நினைவில் இருக்கின்றன, அவை பொக்கிஷங்களாக மனதில் பதுங்கி இருக்கின்றன. கடைசியான சந்திப்புகளில் தோழரின் மனம் சற்று பிறழ்ந்து இருப்பதை அடுத்தவர்கள் தெரியப்படுத்தியிருந்தாலும் இந்த மண்டைக்குள் வெறும் மசாலா மட்டுமே இருப்பதால் அப்படி தோன்றவில்லை.

தொன்னூறுகளின் தொடக்கத்தில் முதன் முறையாக ஈங்கூர் ரகுதான் என்னை சென்னிமலை சென்று தோழரைப் பார்த்து வருவோம் வாருங்கள் என்று அழைத்துப் போனார். முதன் முறையாக சென்னிமலை சென்றதும் அப்போதுதான்.

வீட்டில் அம்மாவிடம் சென்னிமலை செல்கிறேன் என்றதும்.., ” இப்போதான் நல்ல புத்தி வந்திருக்கு என்றது. நல்ல புத்திக்கும் சென்னிமலைக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியாமல் ஏன்? என்றேன். சாமி கும்பிடத்தானே என்றதும் விளங்கியது. நீங்கள் வேண்டுமானால் உங்கள் நண்பரிடம் திருப்பதி போகிறேன் என்று சொல்லுங்கள் மொட்டை போடவா? என்பார்கள் அதுப்போலத்தான் இதுவும்.

கூட்டிப்போன நண்பர் ரகு இப்போது லக்னோவில் மாட்டுப்பண்ணை வைத்திருக்கிறார். மதிய சாப்பாட்டுக்கு பள்ளியில் இன்னமும் மணியடிக்கவில்லை, நேரம் இருக்கும் போல என்று காகங்கள் வேப்பையிலிருந்து பறந்து போகும் கவிதைகளை எழுதிக்கொண்டிருந்தவர், இப்போது ஏதாவது எழுதுகிறிர்களா? என்று கேட்டால், ஏதுங்க அதுக்கெல்லாம் இப்போ நேரம்? கவிதை எழுதீட்டு இருந்தா ஊட்ல சோத்துக்கு குஞ்சி மணிய வாயில வெச்சிக்க வேண்டீதுதான் என்கிறார். சரிப்போயிச்சாட்டாது வாசிக்கிற பழக்கமாச்சிம் உண்டா? என்றால், வெலை என்னங்க ஒவ்வொண்ணும் ஒரு மாட்டுக்கன்னுக்குட்டி வெலை சொல்றான்.., அந்த காசுக்கு நாலு தீவனம் வாங்கி மாடுகளுக்குப் போட்டா அதுக தின்னாலாச்சும் ரெண்டு படி பாலு சேத்திக்கொடுக்கும் என்பார். நல்ல வேளை இப்பெல்லாம் யாரு கவிதை எழுதிட்டு இருக்காங்க செஞ்சிட்டு இருக்காங்க.., அப்படின்னெல்லாம் சொல்லவில்லை.

சென்னிமலை வண்டிப்பேட்டையில் இறங்கியதும் நண்பர் குமரன் சிலையைக் காண்பித்தார். அதை ஒரு பிரம்மாண்டத்தை பார்ப்பதைப்போலவோ , போராட்ட தியாகியைப் பார்ப்பது போன்ற உணர்வுடனோ அப்போது குமரனை பார்க்கவில்லை என்பதை உறுதியாக என்னால் சொல்ல முடியும். கொடியை குமரன் காத்தது திருப்பூரில். சிலைக்கு பின்புறத்தில் துணிக்கடை,டீக்கடை ஓட்டல் என்று இருந்தன. மற்றபடி நிறுத்தத்தில் பேரூந்து வருகைக்கு காத்து நின்றிருந்தவர்கள் என சொற்ப கூட்டமே இருந்தது. நண்பர் திருப்பூரில் “ஓஷோ பேசன்ஸ்” என்ற பெயரில் சங்கீதா தியேட்டரை ஒட்டி மாடியில் கம்பெனி வைத்திருக்கையில் கட்டிங் மாஸ்ட்டராக தோழர் இவரிடம் நான்கு வருடங்கள் பணிபுரிந்தவர் என்பதால் ஏற்கனவே தோழர் வீட்டுக்குபலமுறை வந்து போனவர்தான்.

உத்துக்குளி சாலையில் என்னை மேடேற்றி கூட்டு வந்தவர் ” பிராந்திக்கடை” கண்டதும் என்னைப்பார்த்து கண்சிமிட்டிவிட்டு கடைக்குச் சென்றார். மூன்று கோட்டர் பாட்டில்கள் வாங்கி இடுப்பில் இரண்டையும், சைடு பாக்கெட்டில் ஒன்றையும் செருவிக்கொண்டு மறுபடி ஒரு முறை கண் சிமிட்டி விட்டு நடக்க ஆரம்பித்தவர் பின்னால் நடந்தேன். ” இது எதுக்குங்க மணி பத்தரைதானே இருக்கும்? என்றேன். ” நீங்க வேற.., நேரங்காலமெல்லாம் தோழருக்கு கெடையாது. அதும்மில்லாம சரக்கோடதான் அவுரு ஊட்டு வாசப்படியயே நாம மிதிக்கோனும், அப்படி போவலின்னா, இங்கெதுக்கு அப்புறம் என்னைப்பாக்க பஸ் ஏறி வரனும்? உங்கூட்டிலயே பொட்டாட்ட சிவனேன்னு கவுந்து படுத்துக் கெடக்க வேண்டீதுதான.., எனக்குனு வாச்சதுக ஒன்னு கூட சுத்தமில்லே என்றுதான் பேசுவாராம். ஒரு மனிதன் சீக்கிரம் சுடுகாடு அனுப்புவதற்கான ஏற்பாட்டோடு செல்வதாகத்தான் பட்டது அப்போது

“புடுங்கிக் கத்தை
கட்டிப் போடலாம்னுதான்
வர்றோம்
ஒன்னத்தீம் புடுங்க முடியாமயே
அடுத்தவன் வாயைப்
பாத்துட்டே போயிடறோம்”. – வாழ்க்கை ( தோழர் 1993)

மாரியம்மன் கோவிலையொட்டி விஸ்தாரமான சந்து ஒன்று தெற்கே பிரிந்தது. மேற்குப் புறமாக புளியமரங்கள் நெட்டுக்கு நின்றிருந்தன. அந்த வீதியில் நண்பரும் நானும் செல்கையில் ” கடக் கடக்” என்ற ஒலி ஒவ்வொரு வீட்டினுள்ளிருந்தும் கேட்டபடி இருந்தது. அவர்களெல்லாம் வீட்டுனுள்ளேயே கைத்தறி நெய்து கொண்டிருந்தார்கள் கொஞ்ச தூரம் வந்ததும் ஒரு வீட்டின் படலை உள்புறமாக தள்ளி நண்பர் உள் செல்ல நானும் சென்று படலை பழையபடி சாத்தினேன். வீட்டின் முன்புறம் பந்தக்காலில் சங்கிலியோடு கருத்த புஷ்டியான நாய் கட்டப்பட்டிருந்தது.

படலை நீக்கி உள்நுழைந்த சமயம் படுத்திருந்த அது விருட்டென எழுந்து எங்களை நோக்கி துடைச் சதையை கவ்வி இழுத்து விடுவது போலப் பாய்ந்து குரைத்து வந்தது. சங்கிலியின் தூரம் குறைவாக இருக்கவே கோபத்துடன் குரைத்து சங்கிலியை வேறு ஒரு கடி கடித்து உதறியது. எனக்கு நாய் என்றால் சிறு வயதிலிருந்தே பயம்தான். ஐந்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த சமயம் நாய்க்கடிப்பட்டு தொப்புள் சுற்றிலும் பத்து ஊசி போட்ட ஞாபகம் கருநாய்களைக் கண்டால் ஞாபகமாகிவிடும்.

– டேய் மணி கம்முனிருக்க மாட்டே.., பன்னாட்டு சாஸ்த்தியாப் போச்சாட்ட இருக்குதே, ஊட்டுக்கு ஒருத்தரையுமே வர வுடமாட்டியா? ” சத்தமிட்டபடி வெற்று மேலோடு லுங்கியை உதறிக்கட்டியபடி தோழர் வீட்டினுள்ளிருந்து வந்தார். ரகு கொஞ்சம் ஒதுங்கி , ” வாயில்லாச் சீவனப்போட்டு கட்டி வெச்சு வளர்க்கிறீங்களே.., நாயமா தோழர்” என்றார்.

– நீங்க வேற அவுத்துட்ட சடுதிக்கி கெடையில் நிக்குதிங்றீங்களா? துரூவா பீக்காட்டுக்கு ஓடி வயித்த ரப்பீட்டு ஓடியாந்து ரோட்டும் பேர்லேயே நின்னுக்கும். போற வார வண்டிகள முடுக்கீட்டு மேக்கைக்கும் கிழக்கைக்கும் ஓடீட்டு என்ன ரவுசுங்றீங்க.

– நாயி ஜம்முனு இருக்குது வாலை வெட்டீட்டீங்ளே.., மொண்ணை வால் நாயின்னு ஆயிப்போச்சுங்களே.

– அது எங்கப்பன் பண்ண வேலை, வாலு சு?ண்டுக்குதுன்னு முன்னீல வெச்சு இது சிறுசா இருக்கப்பவே தறிச்சுப் போட்டாப்ல, வாலு சுருண்ட நாயிதான் ஊட்டுக்கு ஆகாதாம்ல. இதுக்கு கொசுவர்த்தி சுருள் கணக்கா மூணு சுத்து சுருள் இருந்துச்சு. அது கெடந்து சாட்டாது வாங்க உள்ளார. டீ வெக்கிலாம்னா ஊட்ல சனமே இல்ல. தலை ஏனோ வலிக்குதுடான்னு
எங்கம்மா சித்த முந்தித்தான் திண்ணைல நீட்டி கெடந்திச்சு. மளார்ன்னு நூலு போட டெக்சுக்கு போயிடுச்சு . சரி நாம வெக்கலாம்னா டீத்தூள் டப்பா எங்க கெடக்கோ .., சக்கரை டப்பாவுல இருக்கோ என்னமோ.., சரீங்க ரகு கூட ஆரவோ கூட்டிட்டு வந்திருக்கீங்களே .., பெரிய்ய எழுத்தாளரா? ஆடு திருடுன கொரவானாட்ட இருக்குற முழிய மாத்தச் சொல்லுங்க
நக்சலைட்டுனு புடிச்சிக்கொண்டி உள்ளார வெச்சு நிமித்தீருவான், அப்பறம் பஞ்சாயத்துக்கு நாமதான் படியேறனும், உக்கோருங்க இப்டி ஷோபாவுல. என்ன விஷயம்? எப்படி போயிக்கிட்டிருக்கு?

– பேசிட்டு இருக்கதான் வந்தோம் தோழர்.., மேற்படி வாங்கியாந்திருக்கேன், கொறிச்சுக்க ஏதாச்சிம் முறுக்கு, மிச்சர் ஊட்ல இருக்கா?

– இங்கென்ன மசுரா இருக்குது., வெறுஞ்சோறும் , டவரால துளி பண்ணக்கீரைய வணக்கி வச்சதுதான்.., வாரதுதான் வாரீங்க ஒரு நேந்தர்ஞ் சிப்ஸோ. வறுக்கியோ வாங்கியாந்திருந்தா பரக் பரக்குன்னு கொறிச்சிட்டே நாயம் போட்டு நொக்கு வாங்கியிருக்கலாம், சித்த சடவா இருக்குதுன்னு நீட்டி உட்டு இப்பத்தான் உழுந்தேன் பாயில.

இப்படி தொட்டதுக்கெல்லாம் எகத்தாளம் பேசும் மனிதனை வாழ்வில் முதலாகப் பார்த்த கணம் கொஞ்சம் அதிர்ச்சியாக எனக்கு இருந்ததுதான் என்றாலும், தோழருக்காக அவரின் நட்பை வேண்டி என் பங்கிற்கு வெளியே கடைத்தெருவிற்கு வந்து எதிர்ப்பட்ட கடை ஒன்றில் குச்சிக்கெழங்கு சிப்ஸ், நேந்தரஞ் சிப்ஸ், செவ்வாழை ஆறு பழம் என வாங்கி ஓடி வந்தேன்.

உள்ளே அவர்கள் தரையில் பாய் விரித்து அமர்ந்து முதல் ரவுண்டை ஆரம்பித்திருந்தார்கள். நண்பர் தனது பேண்டை உருவி ஷோபாமீது போட்டு தோழரின் லுங்கி ஒன்றை அணிந்து கால்நீட்டி அமர்ந்திருந்தார். மூட்டாத லுங்கியை சுத்துப் போட்டு சொருவி இருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

– அந்த சுவத்துல மூனாவது சுவிட்சை தட்டி விடுங்க நண்பரே.., மேல காத்தாடி சுத்தட்டும்.. உள்ளே நுழைந்த என்னிடம் தோழர் பீடி புகையும் விரலில் நீட்டி சொன்னார். நான் சுவிட்சைப் போட்ட சமயம் மின்சாரம் இல்லை போல.

என்ன ஒரு அட்டூழியம் பாருங்க ரகு,, ஒரு காத்தாடி கூட நமக்கு சதி பண்ணுது . மனுசன் நிம்மதியா இருக்குற நேரமே குடிக்கிர நேரம்தான், சரி வந்தா காத்தாடி சுத்தட்டும்.., நீங்க சரக்கு அடிப்பீங்களா நண்பரே! இதென்ன வாய்க்குள்ளார என்னேரமும் போண்டா கெடக்கறாப்பல உம்முனு இருக்கீங்க? கூச்சப்படாம ஒக்காருங்க. அதுகளை எல்லாம் நேர்ல பாத்துருக்கீங்ளா? என்றபடி தோழர் இரண்டு கைகளையும் நீட்டி பந்து பிடிப்பது போல பிடித்து உருட்டிக் காட்டினார்.

என்ன நண்பரே! புடிச்சு கசக்கிப் பாத்திருக்கீங்ளா? டியூப்லைட்டா இருப்பீங்க போலிருக்கே,, உங்களுக்கு எந்த ஊரு ?

ஈரோடு என்றேன்.

நண்பரே ஈரோடுங்கறது சரி ., ஈரோட்ல எந்த ஏரியா? ஏரியான்னு ஒன்னு இருக்கும்ல.

சூரம்பட்டில

சூரம்பட்டிலயா? அங்க பசக இருக்காங்க எதுனா பிரச்சனைன்ன என் கையில சொல்லுங்க, தட்டி லேப்பறதுக்கு அவிகளே போதும், துளி ஊத்திக்குங்க என்றவர் மூன்றாவது சில்வர் தம்ளரில் பாதி அளவு சரக்கு ஊற்றி , தண்ணீர் கலந்து எடுத்து நீட்டினார். ஒன்றுமே சொல்லாமல் வாங்கி வாயில் அன்னாந்து ஊற்றிக்கொண்டேன்.

அட நண்பரே, வேண்டாம்னு ஒரு வார்த்தை சொல்லியிர்ருந்தீங்னா மடக்குனு நானே ஊத்தியிருப்பேன்.., அது சரி நாங்க பொழங்கற சாதிதான் வாயை ஒட்டியே குடியுங்க.., அன்னாந்து இனி ஊத்துனீங்னா எனக்கு கேவலம். சரி உடுங்க.., ஏனுங்க ரகு நண்பர் என்ன எழுதிட்டு இருக்காரு.., கேட்டாவுது சொல்லுங்க.., ரொம்ப கூச்சப்படறாப்ல..என்றதும் உள்ளே துளி சரக்கு இறங்கி விட்ட வேகத்தில் , சிறுகதைகள் எழுதுவதையும் எப்போதாவது கவிதை எழுதுவதையும் தோழரிடம் கூறினேன்.

சிறுகதை எழுதிறீங்ளா? அடக்கொடுமையே .. அதுல நீங்க எழுதுறதுக்கு என்னத்த உட்டு வெச்சாப்ல அந்த புதுமைப்பித்தன் ? அதான் இந்தாங்கடான்னு எழுதி வச்சிட்டு போயிச் சேந்தூட்டப்லையே! இப்போது நண்பர்தான் எனக்கு உதவியாய் பேச்சை வளர்த்தார். அப்படி எப்படிங்க தோழர் நீங்க சொல்லலாம்! அது ஒரு காலக்கட்டம்தானே.

சரி சொல்லப்படாது தான் , சொன்னாத்தானே நான் தோழர். பேச்சு மட்டும் இல்லீன்னா நான் டுபுக்கு டோங்கிர் தோழர் ஆயிடுவேன். கதையின்னா ஒருத்தர் எழுதுனாப்லையே அஸ்வகோஷோ முட்டக்கோஷோ ஒருத்தரு.., புற்றில் உறையும் பாம்புகள் அதான்.., எழுதுனா அது மாதிரி ஒன்ன எழுதீட்டு அவராட்டவெ கதை எழுதுறத நீங்க நிப்பாட்டிக்கணும் நண்பரே.

அதுகள எல்லாம் தாண்டின எழுத்து என்னோடதுன்னு ஒரு நெனப்பு எனக்குள்ளார எப்பயும் ஓடிட்டே இருக்குங்க தோழர்.

ரகு இந்த நண்பர் ஒரு வாட்டியாவது எப்பாச்சிம் ஜெயிச்சுட்டு சாவட்டும் என்ன ஒரு நம்பிக்கை ஒலி ,ஒளி பாருங்க.., உங்க வாழ்க்கைய நீங்க தகிரீமா எழுதுங்க நண்பரே. பிரச்சனை வந்தா இந்த தோழர் முன்னாடி நிப்பான், நான் பாத்துக்கிறேன், இன்னொரு பெக் ஊத்திக்குங்க,, பத்தாம் நெம்பர் பீடி ஒன்னு பத்த வெச்சு ஊதுங்க என்றவர் என் முன் பீடிக்கட்டையும், தீப்பெட்டியையும் நீட்ட மறுக்காமல் வாங்கி பற்ற வைத்து ஊதினேன்.

நண்பரே நாம இப்போ மசமசப்புல இருக்கம், பழம் எடுத்து புட்டுச்சாப்பிடுங்க . வெறும் சரக்கவே உள்ளார ஊத்துனீங்கன்னா கொடலு நாசமாப் போயி உங்களை நம்பீட்டு இருக்குற இலக்கியத்தை ஏமாத்திட்டு கெளம்பீடுவீங்க. குடிச்சா பரவாயில்ல.., வகுறு ரொம்ப சாப்பிடுங்க. உங்க கவிதையில ஒன்னு நீட்டமா இல்லாம பொட்டிக் கவிதை ஒன்னு சொல்லுங்க.., கேப்போம் வெக்கப்படாம பாட்டா வேணாலும் பாடுங்க, ரகு கூட்டிட்டி வந்திருக்கார்னா நீங்க பெரிய்ய ஆளாத்தான் இருக்கோனும்

” எல்லாம் உணர்ந்தவன் சொல்லிப்போனான்
எல்லாம் பொய் என்று – ஏனென்று கேட்க
நானாக உணர வேண்டுமாம். ”

அடங் கொக்க மக்கா.., நீங்க மீறுன பொயட் நண்பரே, வெளையாட்டுக்கு சொல்லுலே .., என்ன பயங்கரம், ” என தோழர் சொல்ல, ரகு என்னிடம் திரும்பினார் ” தோழரே, பாராட்டிட்டாப்ல , நீங்க இனிமே தைரியமா எழுதலாம் . ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்ங்ற மாதிரிதான்”, என்றார்.

முதன் முதலாக ஒரு தாதா ரேஞ்சிக்கு இருக்கும் படைப்பாளியிடம் பாராட்டு பத்திரம் வாங்கவா நான் இங்கு வந்தது? கோவையில் எண்பதுகளின் கடைசியில் சுற்றிக் கொண்டிருந்த போது இதைத்தானே செய்துகொண்டு இருந்தேன். தெருச் சண்டையில் கலந்து மிதி வாங்கி , மிதி கொடுத்து ஒளிந்து ஒளிந்து திரிந்தவன் தானே, இந்த தோழரும் பயம் பீறிட எங்காவது ஓடி ஒளிந்திருப்பாரா? சோற்றுக்கு வழியில்லாமல் ஈரத்துணியை வயித்துக்கு கட்டிக்கொண்டு இரவையும் பகலையும் கழித்திருப்பாரா?

தோழர் நீங்க என்னை தட்டிக்கொடுக்கனும் , பாராட்டனும் , மேலும் எழுதத்தூண்டனும்னு உங்களை பார்க்க வரலை அதுமில்லாம உங்க வீட்டில மருந்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லை . புதுமைப்பித்தனை நீங்க வாசீத்தே இருக்க முடியாது” என்று உறுதியாக சொன்னேன். அதே சமயம் மின்சாரம் வந்து மேலே காத்தாடி சுழல ஆரம்பித்தது. தோழர் இரண்டு கால்களையும் விரித்து சுழலும் காத்தாடியையும் அண்ணாந்து ஒரு முறை பார்த்துப் பேசினார்.

நான் புதுமைப்பித்தனை படிச்சதில்லை, பாரதிய படிச்சதில்லை மார்க்சியமும் படிச்சதில்லை.., படிச்சேதான் ஆகோனுங்ற அவசியமும் எனக்கு இல்லை . எல்லாம் கேள்வி அறிவுதான். பத்து இடத்துல பத்து பேர் பேசியதை வெச்சுத்தான் நான் உறுதியா பேசுவேன். முடிஞ்ச மட்டிலும் தமிழ் இலக்கியத்தை யார்கிட்ட வேணாலும் காப்பாத்தச் சொல்லுவேன். சரி நண்பரே , நான் ஏதோ இலக்கியம்னு நெனச்சுட்டு எப்பாச்சிம் எழுதுறவன். என்னை சந்திக்க ஏன் வந்தீங்க ?

பார்த்து பேசீட்டு , கொஞ்சம் சரக்கு ஊத்தீட்டு கொண்டாட்டமா இருந்துட்டு போகலாம்னு தான் ரகு கூட்டி வந்தார். அதானே.., கொண்டாட்டத்துக்குத்தானே இப்ப ஊத்திக்கிட்டம்.., பத்தலை அப்படின்னா மறுக்காவும் வாங்கியாந்து குடிப்பம். என்ன இப்ப ? சரி நண்பரே எந்த நேரத்துல எழுதுவீங்க.., நானெல்லாம் தோணறப்ப எழுதுறதுதான்.. சில எழுத்தாளர்கள் டீயைக்குடிச்சிட்டே எழுதுறாங்களாம்.., சிலரு பாட்டுப்போட்டு கேட்டுட்டு , சிலரு தண்ணிய போட்டுட்டு.., இப்ப போன வாரம் கேள்விபட்டேன்.., ஒரு எழுத்தாளரு தன்னோட மனைவிய துணிகளை அவுக்கச்சொல்லி ரூம்ல அதுக்கும் இதுக்கும் நடக்கச்சொல்லீட்டு மூடு கெளம்பி எழுதுவாராமா.., நீங்க நகத்தை கொறிச்சுட்டே எழுதுவீங்களாட்ட இருக்குது.., ஒரு விரல்லயும் நகத்தைக் காணமே! பயங்கரமா எழுதுறேண்ட்டு விரலைத் தின்னு போடாதீங்க..

இந்த முதல் சந்திப்பை இத்தனை வருடம் கழிந்தும் நான் ஞாபகத்தில் வைத்திருப்பதற்கு காரணம் என்று எதுவுமில்லை. ஏற்கனவே தோழர் பற்றியான குறிப்புகளை கவிதாசரண் மற்றும் சுகன் இதழ்களில் அவ்வப்போது வருடத்திற்கு ஒரு முறையேனும் அவரது மனப்பிறழ்வுகளையும் வாழ்க்கை மீதான ஆர்வத்தையும் முடிந்த அளவு பதிவு செய்திருக்கிறேன். இந்த படைப்புகளை என் வாயிலாகவே தோழர் கண்ணுற்றபோது ” எதுக்கு இந்த வேண்டாத வேலை .., என்ன கொன்னே போட்டீயே என்னமோ பண்ணு .. ஆமா இப்படி குறிப்புகளா கதை எழுதுறீயே படிக்கறவிய என்னதான் சொல்றாக? யாருக்கு என்ன புரியப்போவுது. எனக்கே ஒன்னும் புரியல.. சின்னப்பொடுசு கொஞ்சம் லேட்டா ஊடு போனா என்ன சொல்லுது தெரியுமா? யம்மோவ அப்பன் சென்னிமலையிலேயே மல்லு குடிச்சுட்டு , இசியத் தின்னுட்டு வந்திடுச்சு.., அப்பன் சோத்தை எனக்குப் போடு” அப்பிடுங்குது . சரக்கடிச்சா கண்ணு இப்ப செவந்து கோவப்பழமாட்ட மின்னுதா மளார்னு கண்டுபுடிச்சுக்குது..,

அது பேசறதுக்கு நீ எழுதுறது எவ்வளவோ பரவாயில்ல போ” என்றார்.

மூத்த எழுத்தாளர்கள் உடல்நலக்குறைவு காரணமாக இறந்த மறு நிமிசத்திலிருந்து பேரிதழ்கள் அவரது நினைவுகளை பலரிடம் எழுதி வாங்கிப் பெற்று மலர் வெளியிட்டு அஞ்சலி செய்கிறது, முன்பெல்லாம் ஏது இப்படி? சிற்றிதழ்கள் ஒரு கட்டம் கட்டி பெருந்தகையின் மறைவுக்கு அஞ்சலி என்று போட்டு விடுவார்கள். வந்து கொண்டிருந்த இதழ்களில் ஏதேனும் ஒன்று மட்டும் ரூபாய் 200 லிருந்து 300 க்குள் அன்னாரது புகைப்படம் ஒன்றை ப்ளாக் செய்து இதழின் முகப்பில் பதிந்திருக்கும்.இன்று அப்படி இல்லைதான். ஒரே எழுத்தாளரே எல்லா பேரிதழ்களிலும் இறந்த பெருந்தகை பற்றி வகை வகையாய் எழுதி வெளிவந்திருக்கும் . கிராமத்திலேயே சுற்றுவதால் இதற்கெல்லாம் பைசா வாங்கிக் கொள்கிறார்களா என்று தெரியவில்லை.

இப்படியான நினைவோடை என்று எனக்கு எழுதுவதாக இருந்தால் ஒரு கிங்க்பிசர் பீருக்காவுது வகைச்சல் பண்ணீட்டு எழுது , பீரை வாங்கி ஒடச்சு மூனு மூடிய நெலத்துல ஊத்தீட்டு அப்புறமா நீ ஏத்திக்க. ஆர், சண்முகசுந்தரத்தோட எழுத்து நம்ம மண்ணு எழுத்துதான், இன்னமும் அவரை பேசீட்டு இருக்காங்கள்ள, அது மாதிரி நீ செத்துட்டாலும் பத்து வருசத்துக்காவுது பேசுற மாதிரி ஒரு எழுத்து எழுதீட்டு செத்துப் போயிரு . கொள்கே, கோட்பாடு,இயம்னு யாரு பொறத்தாண்டியும் நீ போயிட்டீன்னா உன்னோட நீ என்ன நினைக்கிறியோ அதான் அங்க இருக்கனும் . ஒரு கோட்பாட்டாளர் எழுதினா உன்னோட வாசகர்கள் அதை எளிமையா கண்டுபுடிச்சி காறித்துப்பிடுவாங்க.., கவனமா இருக்கனும் குறிப்புகள்

1. தனியாக நடக்கும் போது எஸ்.பி,பியின் பாடல்களில் ஏதேனுமொன்றை பாடியபடி செல்வதும்,குழந்தைகளின் செய்கைகளை நின்று நிதானித்து பார்த்து ரசிப்பதும், காற்றில் விரலால் ” உலகம் ” என்று எழுதிப்பார்ப்பதும் இவரது பழக்கங்கள். சுந்தர ராமசாமி இப்படி செய்வார் என்று ஜெயமோகன் உயிர்மையில் எழுதியிருந்தார். காற்றில் ” அ” போடுவது அவர் வழக்கமென்று,

2. சாருவின் கோணல் பக்கங்கள் மூன்று தொகுதிகளையும் என்னிடம் கேட்டு வாங்கி எடுத்துச் சென்று வாசித்தவர் பின்னர் கூறுகையில் ” இவுருக்கு தான் சொல்றது தான் பெருசு.. கேட்டுக்கோ” அப்புடிங்ற நெனப்பு உள்ளுக்குள்ளார இருக்கு. இளையராஜாவை இவுருக்கு புடிக்காம போனது விளங்கலை, மிகப்பெருசை சிறுசா சொல்றதும், ஒன்னுமில்லாததை ஊதிப்பெருசாக்கி காட்டறதுமே இவரு வேலையாட்ட இருக்கு. வாரா வாரம் ஒவ்வொரு கோனல் பக்கமா படிச்ச திருப்தியா இருக்கும்னு நெனைக்கேன். ஒட்டுக்கா , ஓரேமுட்டா படிக்கறப்ப எரிச்ச வருது.

3. தோழருக்கு மிக பிடித்தமான திரைப்படம் ” இம்சை அரசன் 23 ம் புலிகேசி” ” புறாவுக்காக போரா? என்ன அக்கப் போராக இருக்கிறது ? யாரங்கே யாரடா அங்கே.., என்கிற வசனங்களை நண்பர்கள் மத்தியில் கூறி சிரிப்பில் ஆழ்த்தியவர். என்னிடம் தனித்து அவர் கூறியது.., ” எம்பட சின்ன பொடுசு இன்னும் என்னைப்பார்த்து கேட்கும் .., ” அங்கே என்ன தெரிகிறது?

4. தோழருடன் கடைசியாக சென்னிமலை அண்ணமார் திரையரங்கில் பார்த்த படம் சிவாஜி. இடைவேளை சமயத்தில் இருவரும் வெளியே சிகரெட் ஊதியபடி நின்றிருந்த சமயம் ரசிகர் ஒருவர் சைசாக தோழரை நெருங்கி சன்னமாகப் பேசினார். அவர் கையிலும் சிகரென் புகைந்தபடி இருந்தது. ” ஏனுங் ரஜினி சார் மொளகா திங்கறாரே .., கிட்டக்காட்டறப்போ ரெண்டு மூனு மொளகா நெசமாலுந்தின்னுருப்பாருங்கல், அப்புறம் மொளகா மாதிரி முட்டாயி செஞ்சு தின்னிருப்பாப்ல அப்புடித்தானுங்? என்றபோதும் தோழர் என் முகம் பார்த்து ” முடியில” என்றபோது அவரது காது வழியாகவும் சிகரெட் புகை வந்தது.

5. நீ எப்பாச்சிம் இதை எழுது என தோழர் என்னிடம் சில சந்தர்ப்பங்களில் சிலவற்றை சொல்வார். இதை எழுதிக்கொண்டிருக்கையில் ஒன்று ஞாபகம் வருகிறது. தோழரின் நண்பர் தலையில் உருமாலைக் கட்டு கட்டிக்கொண்டு பீடி கையில் புகைய தன் பசுமாட்டை ஓட்டிக்கொண்டு சென்றிருக்கிறார், ” ஏங்க மாம்ஸ் மட்ட மத்தியானத்துல மாட்டை இழுத்துட்டு போறீங்க..? என்று தோழர் வினவ ” ஒன்னுமில்ல தோழர் மாட்டை பிங் பாக் பண்ண கூட்டிட்டு போறேன்” என்றிருக்கிறார்.( சினைக்கு காளையிடம் கூட்டிச்செல்வது) மற்றொரு நண்பர் தோழரிடம் புலம்பியது, :” என்ன நிம்மிதிய கலியாணம் பண்டி நானு கண்டேன் தோழர்.., இவளுங்கள பிங்பாங்க் திங்கட் கிழமை பண்ணனும்னா இந்த வாரம் திங்கக்கெழமைல இருந்து நைசு பண்ட வேண்டி இருக்குது என்னா ஒரு கேவலப் பொழப்பு பாருங்க ” .

6. கடைசியான சந்திப்புகளில் , ” மொகுடு முட்டீட்டுது , மொகுடி முட்டீட்டுது கெளம்பித்தான் ஆவோனுமாட்ட இருக்குது பொழப்பத் தேடி. ” அப்படின்னு சொல்லிக்கொண்டேயிருந்தார். ( கடன் எச்சாயிட்டுது)

7. டீ சாப்பிடும் போதெல்லாம் வறுக்கு ஒன்னு இருந்தா கொறிச்சுட்டே குடிக்கலாம் எனக்கூறி விட்டு என்னைப்பார்த்து சிரிப்பவர். வறுக்கிப்பிரியர், தோழருடன் பியர் அருந்தும் போது அவர் கூறுவது இன்னம் காதில் ஒலிக்கிறது. ” எட்டு வருசத்துக்கு முன்னால உங்க அப்பன் செத்தப்ப மறு வாரமே இன்னொரு எழவுக்கு உன் ஊடு வரனும்னுதான் நண்பர்கள் பேசினோம். நோவுல நீயும் போயிடுவே அப்படின்னு.., கடவுளு கெட்டிக்காரரு , உன்னைய பொழக்க வெச்சி பீரு குடிக்கவாவது உட்டு வெச்சிருக்காரு”.

8. ” மணல் கடிகை” ன்னு ஒரு புத்தகம் திருப்பூரை சுத்தி எழுதப்பட்டிருக்கு அப்புடின்னியே குடுத்திருந்தா படிச்சிருப்பன்ல . ” என்ற தோழருக்கு ” படிக்க கொடுத்தவரு அவசரம்னு வாங்கிட்டாரு அதுல திருப்பூரை பத்தி நாம புதுசா தெரிஞ்சிக்கிற அளவுக்கு ஒன்னுமில்ல தோழர் என்றேன். ” இல்ல சொன்னியேன்னு கேட்டேன்” என்றவருக்கு கொடுத்திருந்தால் ஏடாகூடமாய் நடந்திருக்க வாய்ப்பு இருந்ததை சொல்லவில்லை, கடைசியா அவர் படித்த நாவல் இலக்குமி குமரனின் ” அக ஒட்டு” , மோசமில்லை என்று ஒரே வரியில் கூறி கொடுத்துச்சென்றார். ஜே ஜே சில குறிப்புகள் படித்தவர் அதில் அநுபந்தம் 2ல் ஜேஜேயின் புத்தகங்கள், கால்பந்தாட்டக்காரனின் நினைவுகள், சந்நியாசிகள், நூல் நிலையங்களின் ஜன்னல்கள் இதெல்லாம் வந்திடுச்சா? வந்திருந்தா குடேன் படிக்க என்றார்.

9. தோழர் மறைவுக்குப் பிறகு பதினைந்தாம் நாள் சடங்கில் கலந்துகொள்ள நான் சென்றிருந்த சமயம் அவரது துணைவியார் ஒரு துண்டுக்காகிததை கொண்டு வந்து என்னிடம் நீட்டினார். இந்த நினைவுக்குறிப்பை எழுதும் இச்சமயத்தில் பத்திரப்படுத்தியிருந்த தாளை எடுத்து விரித்தேன், அவசரத்தில் அடித்து அடித்து எழுதிய கவிதை அது. எதை சொல்ல வர இதை எழுதினார் என்று தெரியவில்லை.

தோழரின் வெளி வராத இந்தக் கவிதையை நீங்களும் பாருங்களேன். எப்போதும் வந்து போகும் சின்னான் என்று தலைப்பிட்டிருக்கிறார் தோழர்.

சின்னான் தளவாய்பாளையத்துக்காரன் எல்லா வீடுகளுக்கும் சென்று போய் வருவான் இட்ட பணி அனைத்தும் முகம் சுணங்காமல் செய்பவனுக்கு, அடுத்த வீட்டு சமாச்சாரங்களை
அடுத்தடுத்த வீடுகளுக்கு பறப்பி விடத்தெரியாது.

முசை பிடித்த நாயொன்றின் கடிபட்டு தொப்புள் சுற்றி ஊசி போட்டவன் ஒரு மாத இடைவேளைக்குப் பின் எனைக் காண வந்தவன், முட்டுச்சேலை உள்ளதா துவைத்துப் போட்டுப் போகிறேன் என்று !

அப்படிப்பட்ட பணி எதையும் அவனுக்கு நான் இதுவரை கொடுத்ததுமில்லை. ஏதோ ஞாவத்தில் தவறாக கேட்டுவிட்டேன் என்றவன் நாய்களை கொல்வது எளிதான காரியம் என்றான்.
பூனையாகட்டும் முயலாகட்டும் கழுத்தை கையில் பிடித்து இறுக்கினாலே போதுமானது என்ன கால்களால் கொஞ்சம் பிறாண்டும் என்றான், நாய்களை மரத்தில் கட்டி வைத்து
குண்டாந்தடியில் மண்டையில் ஒரு போடு போட்டால் போதும் மரித்துவிடும் என்றான் ஏன் இந்த கொலை வெறி என்றேன்.

நாய்கள் நம்மை கடிப்பதும் நாம் நாய்களை கொல்வதும் வழக்கமாக நடப்பதுதானே என்றவன் குடிக்க கொஞ்சம் தண்ணீர் கேட்டு வாங்கி குடித்து, நாத்து நடும் வேலை இருப்பதாய்க் கூறி விடைபெற்றான

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *