தோல்வியில் பிறக்கிறது வெற்றி!!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 20, 2017
பார்வையிட்டோர்: 6,967 
 
 

வெற்றிவேல் சவுதி அரேபியா செல்வதற்காக விமான நிலையத்தில் காத்து கொண்டிருந்தான். அவனை வழி அனுப்ப வந்திருந்த அவன் அத்தை பையன் வினோத் சூட்கேஸை வைத்து விட்டு பக்கத்து நாற்காலியில் அமர்ந்தான். “ மாப்ள திரும்பவும் சவுதி அரேபியா.. உன்ன சம்பளம் குடுக்காம அனுப்பிவெச்ச நாடு.. இப்ப உனக்கு காசு குடுத்து கிளாஸ் எடுக்க கூப்பிடுது… உன்ன நெனச்ச பெருமையா இருக்கு டா “ அவன் பேசியதை கேட்ட வெற்றியின் முகத்தில் ஒரு சிறு புன்முறுவல். ஆமாம் சம்பளம் கொடுக்காமல் அனுப்பிய நாடு தான் ஆனால் அன்று எனக்கு சம்பளம் சரியாக கொடுத்திருந்தால் நான் இன்று எந்த ஒரு கால நிலையிலும் விவசாயம் செய்து லாபம் ஈட்ட முடியும் என்று கூறும் ஒரு பெருமைமிகு நவீன கால விவசாயியாக இங்கு அமர்திருந்திருக்க மாட்டேன். வெளியில் பார்த்து கொண்டிருந்த பொது ஒரு சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் நின்று கொண்டிருந்தது. அவன் மனம் அவன் வாழ்கையை அசைபோட்டது.

வெற்றிவேலின் அப்பா தங்கராசு ஒரு பனியன் கம்பெனி தொழிலாளி.. அவருக்கு இவன் ஒரே மகன். வீட்டுக்கு பக்கத்தில் இவர்களுக்கு கொஞ்சம் நிலம் இருந்தது.. அதில் கொஞ்சம் விவசாயம் செய்து வந்தார்கள். பனிரண்டாவது வரைக்கு மட்டுமே படித்த தங்கரசுவுக்கு தன் நண்பன் இன்ஜினியரிங் படித்து நல்ல நிலைமையில் இருப்பதை பார்த்து தன் மகனையும் எஞ்சினீர் ஆக்க வேண்டும் என்பது கனவு. வெற்றிவேலுவுக்கும் டாக்டர் கனவு ஐஏஸ் கனவு எல்லாம் இருந்தது. ஆனால் மிடில் கிளாஸ் பசங்க எல்லாருக்கும் தெரிந்த ஒரே ஒரு வாழ்க்கை மந்திரம் “நாம் ஆசை பட்டது கிடைக்கவில்லையெனில் கிடைத்ததை ஆசைப்பட்டு ஏற்று கொள்ள வேண்டும்”.. இவன் அப்பாவின் ஆசை படி நன்றாக படித்தான்.. நல்ல காலேஜ்இல் சீட் கிடைத்தது.. படித்து முடித்ததும்.. காம்பஸ் இன்டர்வியூஇல் வேலை கிடைத்தது..25000 ருபாய் சம்பளம். வெற்றிக்கு அப்பாவின் ஆசையை நிறைவேற்றிய சந்தோஷம்.. இனி எல்லாம் ஜெயம் என்று நினைத்திருந்தான்.

ஹைதராபாதில் வேலை.. முதல் மாதம் சம்பளம் வந்தவுடன் அம்மாவுக்கு புடவை அப்பாவுக்கு புது டிவிஎஸ்.. பின்பு மாதம் 15000 ருபாய் வீட்டு செலவுக்கு பணம் குடுக்க வேண்டும் என கணக்கு போட்டு சந்தோஷ பட்டுகொண்டான். முதல் நாள் ட்ரைனிங் வகுப்பில் இவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.. ஆரம்பித்த பத்தாவது நிமிடத்தில் HR ஆபிசர் வந்தார்.. இவர்கள் கையில் ஒரு லெட்டர் கொடுக்க பட்டது.. HR ஆபிசர் பேச ஆரம்பித்தார் “ கம்பெனி இப்போது கஷ்டத்தில் இருக்கிறது அதனால்.. உங்களுக்கு ஒப்புக்கொண்ட சம்பளத்தை எங்களால் கொடுக்க இயலாது.. உங்கள் கையில் இருப்பது புது சம்பள விவரம்.. நீங்கள் ஒத்துகொண்டால் நீங்கள் தொடரலாம் இல்லையெனில் நீங்கள் வெளியேறலாம்” என்றார். வெற்றிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இவனுடன் படித்தவர்கள் பாதி பேருக்கு வேலை கிடைக்கவில்லை. இந்த வேலை போனால் வேறு வேலை கிடைக்கும் என்பது நிச்சயம் இல்லை. ஒத்துகொண்டான். வீட்டில் சொல்லவேண்டாம். நம் செலவுகளை குறைத்துவிட்டு வீட்டுக்கு பணம் அனுப்புவோம் என நினைத்துகொண்டான். மாதம் கழிந்தது. அக்கௌண்டை செக் செய்தவனுக்கு அதிர்ச்சி வெறும் 12000 மட்டுமே வந்திருந்தது. HR ஆபீசுக்கு ஓடினான். நீங்க தங்கியிருந்த ரூம் மற்றும் உணவுக்கு 7000 ருபாய் என்றார் கூலாக. யாரும் இதை பற்றி சொல்லவே இல்லையே என்றார்கள் இவனும் இவன் உடன் வேலை செய்பவர்களும். காண்ட்ராக்ட் ஆக்ரீமெண்டை நீங்கள் சரியாக படிக்கவில்லை என்றார் அவர். வேறு வழி இல்லை. வீட்டில் சொன்னான். பரவாயில்லை வம்பெதற்கு வீட்டுக்கு கொஞ்சம் அனுப்பு நீ உன்னை நன்றாக பார்த்துகொள் என்றார் அப்பா. பல்லை கடித்து கொண்டு வேலை பார்த்தான். விலைவாசி ஏறி கொண்டே போனது ஆனால் இவன் சம்பளம் ஏறவில்லை. சம்பாரிப்பது இவனுக்கே பத்தவில்லை ஆனால் அப்பாவுக்கும் வயதாகி விட்டதால் இவன் பணம் அனுப்பியாக வேண்டும்,

வேலையில் சேர்ந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. 12000 சம்பளம் 18000 ஆகி இருந்தது. ஆனால் இவன் தங்கி இருந்த ரூம் வாடகை 3500இல் இருந்து 6000 ஆகி இருந்தது. 3 ருபாய் தோசை 10 ருபாய் ஆகி இருந்தது. மாதாமாதம் வீட்டுக்கு பணம் அனுப்புவதற்குள் இவனுக்கு விழிபிதுங்கியது. வேறு கம்பெனியில் வேலைக்கு சேரலாம் என தேடினான் எங்கு சென்றாலும் இப்போது Construction Industry நிலைமை சரி இல்லை.. அதனால் பழைய சம்பளத்தில் இருந்து 10% மேல் இன்க்ரிமென்ட் தர முடியாது என்றார்கள். வீட்டில் அப்பாவுக்கு நீரிழிவு நோயால் மருந்து செலவு ஜாஸ்தி ஆகி விட்டது. இதில் வீட்டில் கல்யாண பேச்சு வேறு.. மாதம் 1 இலட்சம் சம்பாரித்தால் தான் இந்த நகர வாழ்க்கையில் குடும்பத்துடன் வாழ முடியும் என தோன்றியது இவனுக்கு.. 1 இலட்சம் சம்பளம் யார் தருவார்கள் அதுவும் 3 வருடம் மட்டும் அனுபவம் உள்ள ஒரு என்ஜிநீர்க்கு.. அந்த சமயத்தில் இவன் நண்பன் அருண் துபாயில் வேலை செய்து கொண்டிருந்தான். அவனுடன் facebookஇல் சேட் செய்து கொண்டிருந்த பொது அங்கு ஒரு என்ஜிநீர்க்கு குறைந்த பட்ச சம்பளமே இந்திய மதிப்பில் 80000 ருபாய் என சொன்னான். துவண்டு கிடந்த இவன் மனம் உயிர்த்தெழுந்தது… அரபு நாட்டிற்கு வேலைக்கு சென்றாக வேண்டும்.. சென்றால்.. இரண்டு வருடத்தில் கொஞ்சம் பணம் சேர்த்து வீட்டு பிரச்சனைகள் அனைத்தையும் முடித்து விடலாம். அதன் பிறகு சம்பாரித்து சேமிக்கலாம் கல்யாணத்திற்கும் பிரச்சனையில்லை.. வாழ்க்கையில் திரும்ப அவனுக்கு ஒரு பிடிப்பு வந்தது.. வேலை தேட ஆரம்பித்தான். கூகுளில் வரும் அத்தனை கம்பனிக்கும் அப்ளை செய்தான்.. எந்த கம்பெனியில் இருந்தும் பதில் இல்லை.. போன் செய்து கேட்டால் இங்கு எந்த புதிய ப்ரோஜெக்டும் இல்லை என்றார்கள்.. வந்தால் சொல்கிறோம் என்றார்கள்.. கடைசியாக facebook மூலம் சென்னையில் ஒரு அரபி கம்பெனி நேர்காணல் இருக்கிறது என தெரிந்தது.. அப்ளை செய்தான்.. நேர்காணலுக்கு வர சொல்லி மெயில் வந்தது.. உலகில் இருக்கும் அத்தனை தெய்வங்களுக்கும் வேண்டுதல் வெய்த்தான். முடிவில் வேலை கிடைத்து விட்டது அதுவும் 1 இலட்சம் சம்பளம்.. இவன் கண்ணை இவனலையே நம்ப முடியவில்லை.. வீட்டில் சொன்னனான் அவர்களுக்கும் சந்தோஷம்.. இன்னும் 2 மாதத்தில் சவுதி அரேபியாவில் ஜெட்டாஹ் நகரத்தில் வந்து கம்பெனியில் சேர வேண்டும் என்று சொன்னார்கள்.. ஆனால் விசா மற்றும் இதர வழிமுறைகளுக்காக 25000 ருபாய் கட்ட வேண்டும் என்றார்கள். 1 இலட்சம் பர்சனல் லோன் அப்ளை செய்தான். ஒரு வழியாக எல்லா வேலைகளும் முடிந்து கிளம்ப வேண்டிய நாள் வந்தது.. எல்லா கடவுளையும் கும்பிட்டு விட்டு சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் ஏறினான்.

ஜெட்டாஹ் விமான நிலையத்தில் இவனை அழைத்து போக கார் அனுப்பி இருந்தார்கள். காரில் ஏறி கொண்டான். இவனை அழைத்து போக வந்திருந்தவன் ஒரு பாகிஸ்த்தானி அவனுடன் அவன் நண்பனும் வந்திருந்தான். இருவரும் உருதுவில் பேசி கொண்டிருந்தார்கள். உருதுவும் ஹிந்தியும் வார்த்தைகள் கொஞ்சம் ஒத்திருக்கும் அதனால் ஹிந்தி தேர்ந்தவர்களால் உருது புரிந்து கொள்ள முடியும். இவனுக்கு கொஞ்சம் ஹிந்தி தெரியும் அதனால் அவர்கள் பேசுவதை கவனித்து கொண்டிருந்தான்.. “ ஏற்கனவே 6 மாதமாக கம்பெனியில் சம்பளம் தரவில்லை.. இப்போது புதிதாக இவரை எதற்கு வேலைக்கு எடுத்தார்கள் என்றே புரியவில்லை” என்றான் ஒருவன் அதற்க்கு மற்றொருவன் “ கம்பெனியிடம் நிறைய விசா இருக்கிறது அதை வீணாக்க கூடாது இல்லையெனில் திரும்ப கிடைக்காது.. அதனால் இந்த மாதிரி ஒருத்தரை கூட்டி வந்து பிறகு இப்போதைக்கு வேலை இல்லை.. நீங்கள் திரும்ப செல்ல டிக்கெட் தருகிறோம் நீங்கள் உங்கள் நாட்டுக்கு செல்லுங்கள் பிறகு வேலை வரும்போது உங்களை கூப்பிடுகிறோம் என்று சொல்லி அனுப்புவதே இவர்களுக்கு வாடிக்கை” என்றான். வெற்றிக்கு உலகமே இருண்டு போனது போல் இருந்தது.. அழ வேண்டும் போல் இருந்தது.. அவர்களிடம் எதாவது கேட்கலாம் என்றால் வாயில் இருந்து வார்த்தை வரவில்லை.

கார் ஒரு தொழிலாளர்கள் தங்கும் இடத்தில் நின்றது கம்பெனி HR இவனுக்காக காத்து கொண்டிருந்தார்.. அவர் பெயர் ராபிக் என்றும்.. மதுரைக்காரர் என்று தெரிந்த பிறகே இவனுக்கு மூச்சே வந்தது.. அவரிடம் அவர்கள் பேசியதை குறித்து கேட்டான்.. “ அவர்கள் சொன்னது போல் கம்பெனி கொஞ்சம் நஷ்டத்தில் தான் இயங்கி கொண்டிருக்கிறது ஆனால் கவலை படாதீர்கள்.. 6மாதமாக சம்பளம் இல்லை தான்.. ஆனால் கவலைப்படாதீர்கள்.. நம் ஊர்க்காரர்கள் இங்கு நிறைய பேர் இருக்கிறோம்.. நீங்கள் வேலையில் சேருங்கள்.. கொஞ்சம் முன் பணம் தருவார்கள் அதை வெய்த்து சமாளியுங்கள்.. இன்று இல்லாவிட்டாலும் எதாவது ஒரு நாள் சம்பளம் குடுத்து விடுவார்கள்.. தங்குமிடம் உணவு நாங்கள் குடுத்து விடுவோம்.. எதை பற்றியும் சிந்திக்காதீர்கள்.. எல்லாம் சரி ஆகும் “ என்றார். இவனுக்கு வேறு வழி தெரியவில்லை. சொன்னதுபோல் முன்பணம் கொடுத்தார்கள் அதில் கொஞ்சம் வீட்டுக்கு அனுப்பிவிட்டு கொஞ்சம் செலவுக்கு வெய்த்து கொண்டான்.. வீட்டில் இதை பற்றி சொன்னால் வருத்த படுவார்கள் அதனால் சொல்ல வேண்டாம் என முடிவு செய்தான். இங்கு மூன்று மாதத்திருக்கு ஒரு முறை தான் சம்பளம் குடுப்பார்கள் என்று வீட்டில் பொய் சொன்னான்.. சம்பளம் இல்லை ஆனால் வேலை கொஞ்சம் கஷ்டம்.. தினமும் சம்பளத்திற்காக சண்டை என நாட்கள் கழிந்தது.. மூணு மாதத்திருக்கு பிறகு ஒரு சம்பளம் கொடுத்தார்கள்.. அதன் பிறகு அதை பற்றி பேச்சே இல்லை. ஒரு கட்டத்திற்கு மேல் வீட்டில் மறைக்க முடியவில்லை. அப்பாவிடம் உண்மையை சொன்னான்.. திரும்ப வந்து விடு என்றார்.. இவனுக்கு மனது ஒத்து கொள்ளவில்லை.. போகும் வரைக்கும் போகட்டும்.. கம்பெனி சரியானால்.. எல்லா சம்பளமும் வந்து விடும்.. பிறகு ஊருக்கு சென்று விடலாம் என்று இருந்தான்.. இரண்டு வருடம் ஓடி விட்டது.. இது வரை 6 சம்பளம் மட்டுமே கொடுத்திருந்தார்கள்.. இப்போதும் கம்பெனி சரி ஆகும் வழி தெரியவில்லை.. திடீர் என்று ஒரு நாள்.. கம்பெனி ஆபீஸ் திறக்கவில்லை.. ஏதோ பிரச்சனை என்றார்கள்.. ஒரு வாரம் போனது.. பார்த்தால்.. கம்பெனி நடத்துபவர்கள் சொல்லாமல் கொள்ளாமல் மூடி விட்டார்கள் என்று செய்தி வந்தது.. தூதரகத்தில் புகார் கொடுத்தார்கள்.. தூதரகம் விசாரித்தது.. முதலாளிகளிடம் பணம் இல்லை வந்ததும் தருகிறோம் என்றார்கள் .. பிறகு நாங்கள் என்ன செய்வது, எங்கள் சம்பளத்துக்கு வழி என கேட்டபோது. இப்போதைக்கு ஒரு சம்பளம் கொடுத்து ஊருக்கு அனுப்பி விடுகிறோம்.. எல்லாரும் அக்கௌன்ட் நம்பர் கொடுத்து விட்டு செல்லுங்கள் பணம் வந்ததும் அதில் டெபொசிட் செய்துவிடுகிறோம் என்றார்கள்.. வேறு வழி இல்லாமல் எல்லாரும் ஒத்துக்கொண்டு கிளம்பி விட்டார்கள்.. இப்போது இவனும் ஊருக்கு வந்து விட்டான்.

வந்ததில் இருந்து இவன் யாரிடமும் பேசவில்லை உறவுக்கார்கள் வந்தார்கள் ஏதோ துக்கம் விசாரிப்பது போல் விசாரித்து சென்றார்கள். சிலர் எனக்கு தெரிந்த கம்பெனியில் சேர்த்து விடுகிறேன் என்றார்கள், இவனுக்கு திரும்ப அந்த பழைய கம்பெனி நாட்கள் ஞியபகத்திருக்கு வந்து போனது.. மறுபடியும் ஒரு கம்பெனி கைக்கும் வாய்க்கும் பத்தாத சம்பளம். நினைத்தாலே பயமாக இருந்தது. சிலர் இவன் வயதில் இருப்பவர்கள் வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டார்கள் இவன் இன்னமும் சரியாக சம்பாரிக்க கூட ஆரம்பிக்கவில்லை என குத்தி காட்டினார்கள். சிலர் இவன் அறிவுக்கு வெளிநாடு எல்லாம் போகலாமா என்றார்கள். இவனுக்கு செத்துவிடலாம் போல இருந்தது. நான் என்ன தவறு செய்தேன். இப்படி வாழ்வதற்கு தற்கொலை செய்துகொள்ளலாம் என்றிருந்தது.. ஆனால் அம்மா அப்பாவிற்கு இவன் ஒரே மகன். இவன் போய்விட்டால் வயதான காலத்தில் அவர்களை யார் பார்த்து கொள்வார்கள் என்று நினைப்பு இவனை தடுத்தது.

ஒரு வாரம் கழிந்தது, அப்பா மெதுவாக என்ன செய்யலாம் என்று இருக்கிறாய் என்றார்.. வேலை தேட வேண்டும் என்றான்.. ஆனால் மனம் ஒத்துக்கொள்ளவில்லை.. அவர் வேறு ஏதும் பேசவில்லை.. எதாவது கேட்டு இவன் எதாவது செய்து கொண்டால் என்ன செய்வது என அவருக்கு ஒரு பயம். எழுந்து சென்று பின்னாடி இருக்கும் தோட்டத்திற்குள் நடந்து கொண்டிருந்தான். நன்றாக விளைந்து கொண்டிருந்த தோட்டம் இப்போது தண்ணீர் இல்லாததால் வெறும் தென்னை மரங்கள் மட்டும் இருந்தது.. அதுவும் தண்ணீர் இல்லாமல் அதிகம் காய்ப்பதில்லைஎன்று அம்மா சொன்ன ஞயாபகம். மர நிழலில் சில கீரைகள் முளைத்திருந்தது. வீட்டிற்க்கு பின்னாடி இவன் அம்மா நட்டு வைத்திருந்த கறிவேப்பிலை மரம் பாத்திரம் கழுவும் தண்ணீர் இருப்பதால் நன்றாக வளர்ந்திருந்தது. பக்கத்தில் சின்ன பாத்திகளில் கொஞ்சம் கொத்தமல்லியும் புதினாவும் இருந்தது. இவன் அம்மா அழைக்கும் சத்தம் கேட்டது. காய்கறி வாங்க கடைக்கு போகவேண்டும் என்றார்.

இவர்கள் ஊரில் முன்பு சந்தை நடக்கும் இப்போது அந்த இடத்தில பெரிய கட்டிடம் இருந்தது.. இவர்கள் ஊருக்கும் reliance fresh வந்திருந்தது. உள்ளே சென்று சுற்றி கொண்டிருந்தவனுக்கு கண்ணில் ஒரு கீரை பட்டது திடீரென்று மனதிற்குள் ஒரு கீற்று.. அங்கு இருக்கும் அதே கீரை தான்.. அவன் தோட்டத்தில் விளைந்திருக்கும் சிறுகீரை.. இங்கு அது ஒரு கட்டு 10 ருபாய் என்று இருந்தது. அவன் தோட்டத்தில் அது சும்மா விளைந்து கிடந்தது. கை பிடி அளவு கூட இல்லாத கறிவேப்பிலை கொத்து 12 ருபாய் என்றிருந்தது. கொத்துமல்லி கட்டு 10 ருபாய் புதினாவும் 10 ருபாய். பார்க்க பார்க்க இவனுக்கு இவன் தோட்டமும் அந்த செடிகளும் மனதிற்குள் ஓடியது. வீட்டிற்கு வந்தது முதல் இவனுக்கு அதே யோசனையாக இருந்தது.. கீரைகள் குறித்து புத்தகங்கள் வாங்கி படித்தான். இவர்கள் அன்றாடம் வாழ்க்கையில் உபயோகிக்கும் பல கீரைகள் 10 முதல் 15 தினங்களில் வளர்ந்து விடும் என்றும் அதை குறைவான இடத்தில வைத்து வளர்த்தால் கொஞ்சம் வளர்ப்பது சுலபம் என்றும் தெரிந்து கொண்டான். facebook மற்றும் கூகுளில் இது குறித்து தேடினான் அதில் சில விவசாயிகளை பற்றின கட்டுரைகளும் அவர்கள் தொடர்பு எண்ணும் கிடைத்தது. அவர்களை சென்று சந்தித்தான். அவர்கள் இது மிகவும் சுலபமான ஒரு விஷயம் அதிக பேராசை படாமல் செய்தால் அளவாக சம்பரிக்கலாம் என்றார்கள். ஆனால் இவர்கள் நிலத்தில் விவசாயம் செய்து பல வருடங்கள் ஆகி இருந்தது மற்றும் இவர்கள் போர்வெல் பைப்பில் வரும் தண்ணீர் பத்துமா என்றும் யோசித்தான். அதில் ஒரு விவசாயி எந்தவொரு நிலத்தில் ரெண்டு வருடத்திருக்கு மேலாக எந்த ரசாயன உரமும் கொட்டபடாமல் இருக்கிறதோ அந்த நிலம் மொத்தமாக ரசயனங்களில் இருந்து விடுபட்டு ஆர்கானிக் முறை விவசாயத்திற்கு ஏற்ற நிலமகிறது என்றார். அதுவும் கீரைகள் எல்லாம் சிறு சிறு பாத்திகளில் மட்டுமே நடவேண்டும் மற்றும் தண்ணீர் தெளிப்பான் மூலம் தெளித்தாலே போதும் என்றார். வெற்றிக்கு நம்பிக்கை துளிர் விட ஆரம்பித்தது.

வரும் நாட்களில் வேலையை தொடங்கினான். காலை எழுந்தவுடன் தோட்டத்திற்கு சென்று பாத்திகள் அமைக்க தொடங்கினான். அப்பா வெளியில் வந்து பார்த்தார். “என்னடா பண்ற” என்றார் “ஒன்னும் இல்லப்பா .. சும்மா இருக்கறதுக்கு பதில எதாவது செய்யலாம்னு..” என்று இழுத்தான். அப்பாவுக்கு தெரிந்தால் ஒத்துகொள்ள மாட்டார் என தெரியும். சரி.. வேலை கிடைக்கும் வரை எதாவது நல்ல விஷயத்தை செய்தால் சரி என்று சென்றுவிட்டார். அப்பா வேலைக்கு போன பிறகு அம்மாவை அழைத்து வந்து இவன் யோசனையை பற்றி சொன்னான். அவன் அம்மாவுக்கும் சரி என்று பட்டது. சின்ன சின்னதாக 10 , 12 பாத்தி அமைத்தார்கள்.விவசாயிகளிடம் இருந்து வாங்கி வந்திருந்த விதைகள் மற்றும் செடிகளை நட்டான்.. கீரை, மல்லி மற்றும் புதினா எல்லாம் நட்டாகிவிட்டது. மாலையில் மெதுவாக கடை தெருவுக்கு நடந்தான். கடைகளில் இவற்றிக்கு இருக்கும் மவுசு மற்றும் இவை எங்கிருந்து வருகின்றன என்பது குறித்து தெரிந்து கொள்ள கடைக்காரர்களிடம் பேச்சு கொடுத்தான். அப்போது தான் முக்கால்வாசி காய்கறிகள் வெளிஊர்களில் இருந்து வருவதையும் கீரைக்கு பெரிய மவுசு இருந்தும் அவை அதிகம் கிடைப்பதில்லை என தெரிந்தது. இவனுக்கு உற்சாகம் தோற்றி கொண்டது. அன்றிலிருந்து தோட்டத்தில் வேலை செய்வதும் கீரைகள் குறித்து புதிதாக தெரிந்து கொள்வதும் புது கீரைகளை நட்டு வைத்து அதை சிறப்பாக வளர்ப்பது எப்படி என கற்றுகொலள்வதுமாக இருந்தான். மெது மெதுவாக ஒவ்வோன்றாக விளைய ஆரம்பித்தது. முதலில் மார்க்கெட் விலையை தெரிந்து கொண்டான். பிறகு இவனுக்கு இது வரைக்கும் ஆனா செலவுகளில் இருந்து ஒரு விலையை முடிவு செய்தான். இரண்டையும் ஒப்பிட்டு ஒரு விலை நிர்ணயம் செய்தான். கேட்ட நேரத்தில் கிடைக்கும் மற்றும் விலையும் வெளி வியாபாரிகளை விட கம்மியாக என்பதால் எல்லா கடைகளும் இவனிடம் வாங்கி கொண்டார்கள். அவர்களிடமும் விற்று தீர்ந்தது. அதுபோக facebook மூலமும் விற்க ஆரம்பித்தான் அதற்க்கும் நல்ல வரவேற்பு இருந்தது. முதல் மாதத்தில் பெரியதாக லாபம் ஒன்றும் இல்லை ஆனாலும் இவன் நம்பிக்கை விடவில்லை. அடுத்த மாதத்தில் நிலம் சரியாக இருக்க வியாபார வட்டம் உருவாகி விட இவனுக்கு செலவுகள் குறைந்தது. இரண்டாவது மாதம் 10000 ருபாய் லாபம் வந்தது. அடுத்த மாதம் அது 30000 ருபாய் ஆனது. அடுத்தது கீரைகளுடன் சேர்த்து காளான் பண்ணையும் வைத்தான்.

வருடங்கள் ஓடின இப்போது இவன் தோட்டம் ஒரு ஒருங்கிணைந்த பண்ணையாக மாறி இருந்தது. கீரை மல்லி புதினா காளான் போன்றவற்றால் தினசரி வருமானமும் தென்னை மா போன்ற மரங்களால் மாத வருமானமும் அது போக மாட்டு பால், ஆடு மற்றும் தோட்டத்தில் இருக்கும் குட்டையில் இருக்கும் மீன் ஆகியவற்றால் 3 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு குறிப்பிட்ட வருமானமும் வந்து கொண்டிருந்தது. தான் மட்டும் வளர்ந்தால் போதாது என்று நினைத்த வெற்றி இன்று பலருக்கு இது குறித்து வகுப்புகள் மற்றும் செயல் விளக்கங்கள் அளித்து கொண்டிருந்தான். இவனை குறித்து கேள்விப்பட்ட அரபு நாட்டு பணக்காரர் ஒருவர் இவனை அங்கு வந்து அந்த நாட்டு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்குமாறு கேட்டுகொண்டார் அதற்காக தான் இப்போது விமான நிலையத்தில் காத்து கொண்டிருந்தான். வாழ்க்கையில் பணம் எங்கிருக்கிறது நிம்மதி எங்கிருக்கிறது வெற்றி எங்கிருக்கிறது என்று தேடி ஓடி கொண்டிருக்கும் மனிதனுக்கு அவை அனைத்தும் அவன் பக்கத்திலேயே இருக்கிறது என்பதை தெரிவிக்க ஒரு தோல்வி தேவைப்படுகிறது. வெற்றிவேலுவின் இன்ஜினியரிங் வாழ்கையின் தோல்வியே அவனை ஒரு விவசாயியாக வெற்றி பெற வெய்த்திருக்கிறது. ஒவ்வொரு தோல்வியின் பின்னும் ஒரு வெற்றியின் ரகசியம் ஒளிந்து கொண்டிருக்கிறது அதை புரிந்துகொள் நண்பா!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *