தொலைந்த நதி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 9,021 
 
 

பதினாறு வருடங்கள் கடந்தும், நீ தந்து சென்ற நினைவுகள் என்னும் நதி எனக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. நேற்று தொலைக்காட்சியில் ‘மகாநதி’ படம் பார்த்துக் கொண்டிருந்தேன். அழுகை பொங்கியது. காவிரிக்கரையில் வாழ்ந்த ஒரு எளிய மனிதன் கூவம் நதிக்கரையில் நின்று கலங்குவதைப் பார்த்து அழுதேனா! அல்லது ‘இங்கே குளிக்கும் மனிதன் அழுக்கில் கங்கை கலங்குது’ என்று மகளைத் தோளில் சாய்த்துக் கொண்டு, பெருந்துயரத்துடன் ஒலித்த கமலின் குரல் கேட்டு அழுதேனா! நதிகளை நேசிக்கும் உன் நினைவுகள் தந்த வலியினாலும் அழுதேன் என்பதே உண்மை.

பறவைகளை நேசிப்பவர்கள் இருக்கிறார்கள். பூக்களை நேசிப்பவர்கள் இருக்கிறார்கள். புழுக்களை நேசிப்பவர்கள் கூட இருக்கிறார்கள். நதிகளை நேசிக்கிறவர்களும் இருக்கிறார்கள் என்பது உன் தோழமை எனக்குக் கிடைத்த பின்புதான் தெரிந்தது.

உனக்கு உஷா என்று பெயர் வைத்ததற்குப் பதிலாக யமுனா என்றோ, நதியா என்றோ வைத்திருக்கலாம் என நினைப்பேன். உன் நீண்ட இமைகளின் அசைவைப் பார்க்கும் போது, ‘நெட்டிமையார்’ எனப் பெயர் சூட்டியிருந்தாலும் பொருத்தமாகத்தான் இருக்கும் எனத் தோன்றியது.

அன்றொரு நாள் நன்னூல் இலக்கண வகுப்பின் மருட்சியிலிருந்து மீளாமல் நம் கல்லூரி மரத்தடியில் நின்றிருந்தேன். கொஞ்சம் மணியன் செல்வம் ஓவியப் பெண்களின் சாந்தத்துடனும், கொஞ்சம் ஸ்ரீரங்கத்து தேவதைகளின் சாயலுடனும் நீ நடந்து வந்து கொண்டிருந்தாய். எப்போதும் அழகாகத் தெரியும் மலைக்கோட்டை உன் பின்னால் அன்று பேரழகாய்த் தெரிந்தது. அன்றைய நம் உரையாடல்தான் உன் நட்பு எவ்வளவு உன்னதமானது என்பதை எனக்கு உணர்த்தியது.

கையில் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ வைத்திருந்தாய். நதிகளின் மீது உனக்கேன் அப்படி ஒரு காதல் என்று கேட்டேன். நதிகளை நேசிப்பது சக மனிதர்களை நேசிப்பது போன்றது; வாழ்கையை நேசிப்பது போன்றது என்றாய்.

ஏனென்றால் நதிக்கரையில்தான் நாகரீகம் தோன்றியது. சங்ககாலத்திற்கு முன்பே மனிதன் ஒரு சமூகமாக வாழத் தொடங்கியது நதிக்கரையில்தான்; நதி என்பது நதி மட்டுமே அல்ல; அது வரலாற்றின் ஊற்றுக்கண் என்று நீ பேசப்பேச உன் வார்த்தைகள் ஒரு நதியாக உருமாறி கல்லூரி வளாகத்தையே நனைத்துக் கொண்டிருந்தது.

பழந்தமிழ் நாட்டிலிருந்த, கடல் கோளில் அழிவுற்றுத் தொலைந்து போன பஃறுளி ஆற்றைப் பற்றி நீ சொன்ன பின்புதான் எனக்குத் தெரியும். உலகின் முதல் நாகரீக சமூகம் தமிழ்ச் சமூகம்; மிக உயர்ந்த வாழ்கை முறையைக் கொண்டிருந்த இனம் தமிழினம் என வல்லின வார்த்தைகளையும் மெல்லின வார்த்தைகளாக மாற்றி மெலிதான் உன் குரலில் பல்வேறு ஆய்வாளர்களின் கருத்துகளோடு எனக்கு எடுத்துரைத்தாய்.

சங்க காலப் பெண் புலவர் நெட்டிமையாரின் புறநானூற்று வரிகளை,

‘முந்நீர் விழாவின் நெடியோன்

நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே’ என்று நீ சொல்லி விளக்கிய போது ஒரு நதி பின்னோக்கிப் பயணிப்பது போன்ற பிரமையில் தத்தளித்தேன்.

சங்க காலத்திற்கும், அதற்கும் முந்தைய ஆதி மனித காலத்திற்கும் என்னை அழைத்துச் சென்ற உன் சரித்திர அறிவும், இலக்கியத் தேர்ச்சியும் நான் இழந்திருக்கவே கூடாதவை.

‘பஃறுளி ஆற்றுடன் பன்மழையடுக்கத்து

குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள

வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு

தென்றிசையாண்ட தென்னவன் வாழி’

என்று சிலப்பதிகாரம் சொல்கிறது என்றாய். கடல்கோளில் அழிவுற்ற லெமூரியா கண்டத்தில் பஃறுளி ஆற்றங்கரைதான் ஆதி தமிழினத்தின் பிறப்பிடம் என்று ஆய்வாளர்களின் ஆதாரங்களோடு சொல்லிவிட்டுப் புன்னகைத்தாய்.

நான் கன்யாகுமரிக்கு அப்பால் தொலைந்து போன கண்டத்தின் நதிக்கரையில் இருந்தேன். முன்பொரு யுகத்தின் முந்நீர் விழாவில் பாய்மரக்கப்பல் போட்டியில் நான் வென்றதைப் போலவும், பஃறுளியின் கரையில் நின்று நீ கைதட்டி மகிழ்வது போலவும் கால மயக்கத்தில் மெய்யுருகி நின்றிருந்தேன்.

பின்பொருநாள். நம் முன்னோருக்கும் முன்னோர்களின் கால்தடம் பதித்த காவிரிக்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தோம். அன்று பேராசிரியர் திருக்குமரன் கல்லூரி இதழுக்காக நம்மிடம் படைப்புகள் கேட்டிர்ந்ந்தார். நான் எழுதி வைத்திருந்த கவிதையை உன்னிடம் வாசித்துக் காட்டினேன். ‘எதிர்பாரத சந்திப்பில்’ என்று தலைப்பிட்டிருந்த அந்தக் கவிதையை சொல்ல ஆரம்பித்தேன்.

‘சிறுமியின் உப்பிய கன்னங்கள்

அதிர

பலூனொன்று உடைந்தது.

கருப்பு நிழல் வீசி

அமரர் ஊர்தியொன்று

கடந்தது.

குடை நிழலில் குழந்தை உறங்கும்

நடைபாதைக் கடையொன்று

அறுந்த செருப்பை எதிர்நோக்கியது.

வாடிய பூச்சரமொன்று

குப்பைத் தொட்டியின்

விளிம்பில் வந்து விழுந்தது.

வெயிலின் நிறத்தை ஊடுருவி

காகமொன்று கறித்துண்டு கவ்விப் பறந்தது.

யாவும் நிகழ்ந்த

அந்தக் கணத்தில்தான்

மறுதிசையில்

நானுன்னைக் கண்ட பரவசத்துடன்

சாலையைக் கடந்ததும்.’

பாராட்டுவாய் என எதிர்பார்த்தேன். ஆனால் நீயோ அது வெறும் காட்சிப் படிமங்களின் அடுக்காக இருப்பதாகவும், நிகழ்வின் வலியை ஏற்படுத்தவில்லை என்றும் சொன்னாய். அப்போது பற்றி எரிந்து கொண்டிருந்த காவிரிப் பிரச்சனையைக் குறித்து எழுதலாமே என்றும் என் கண்களை உற்றுப் பார்த்தாய். என்னையெல்லாம் நீ கவிஞனாக அங்கீகரிக்க மாட்டய் எனக் கோபப்பட்டேன்.

‘இக்கரைக்கும் அக்கரைக்கும்

பரிசல் ஓட்டிப் பரிசல் ஓட்டி

எக்கரை என்கரை என்று

மறக்கும்

இடையோடும் நதி மெல்லச்

சிரிக்கும்’ என்ற கல்யாண்ஜியின் வரிகளைச் சொல்லி அப்படி ஒரு அற்புதமான ஒரே ஒரு கவிதையாவது எழுதிவிடு என்றாய்.

நான் கோபம் தணியாமல் முறைத்தேன்.

‘போய் வா நதியலையே.

இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா!

வா வா நதியலையே

ஏழை பூமிக்கு நீர் கொண்டுவா’ என்று பாடிக் காட்டி நா. காமராசனின் வரிகளைப் போல் உன் ஆயுளுக்குள் இரண்டு வரிகளையாவது எழுதிக் காட்டு போதுமென்றாய். அப்படி ஒரு மகத்தான வரியை எழுதி விட்டால் கவிஞன் என ஒத்துக் கொள்கிறேன் என்றாய்.

எனக்கு மேலும் கோபம் வந்தது. ‘ஆறு, அணை இதை விட்டால் வேறென்ன தெரியும் உனக்கு, போடி’ என்றேன். பதிலுக்கு கோபப்படாமல் என் புறங்கையில் மென்மையாக முத்தமிட்டு ‘கண்டிப்பாக இந்தக் கை ஒரு நாள் அந்த மகத்தான வரியை எழுதும்’ என்றாய். அப்போதுதான் எனக்குப் புரிந்தது, நீ நேசிப்பது நதிகளை மட்டுமல்ல என்பது.

மூன்று வருடப் படிப்புக்குள், நமக்குள் எத்தனை யெத்தனை சம்பவங்கள். முக்கொம்பு போனது; காவேரி தியேட்டரில் சீவலப்பேரி பாண்டி பார்த்து விட்டு சௌபா எழுதிய உண்மைக் கதையோடு ஒப்பிட்டுப் பேசியது; எனக்கு நீ சட்டை வாங்கிக் கொடுத்தது; ஜூவியில் வந்த காதல் படிக்கட்டுக்கள் தொடரையும், தினமணிக் கதிரில் வந்த வள்ளுவர் முதல் வைரமுத்து தொடரையும் வாராவாரம் சேர்த்து வைத்து பைண்டு செய்து நீ தந்தது; தனுஷ்கோடி ராமசாமியின் பிரவாகம் சிறுகதை பற்றி மணிக்கணக்கில் பேசியது; ஒரு TDK 90 கேசட் முழுக்க… நதியைத் தேடி வந்த கடல், ஒரு ஓடை நதியாகிறது, காதலெனும் நதியினிலே போன்ற நதிகளின் பெயர்களைக் கொண்ட படப்பாடல்களை ஒரு சைடிலும், கங்கைக் கரைத் தோட்டம், யமுனை ஆற்றிலே, பரணி பரணி பாடி வரும் தாமிரபரணி என நதிகளின் பெயர்களில் துவங்கும் பாடல்களை மறு சைடிலும் பதிவு செய்து பரிசளித்தது; கொள்ளிடம் பாலத்தில் , மாலை வெயிலில் மினுங்கும் மணல்வெளியில் மௌனமாக நின்றிருந்தது; ஒருநாள் என் காதலியின் புகைப்படத்தைக் காட்டியபோது மறக்க முடியாத ஒரு ஏமாற்றப் பார்வையோடு நீ கைகுலுக்கி வாழ்த்தியது என எத்தனையோ நிகழ்வுகள், நினைவுகள்.

கடைசியாக எல்லோரும் பிரியும் நாளும் வந்தது. உன் யோசனைப்படி நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து பூம்புகாருக்கு ஒரு நாள் சிற்றுலா சென்றோம். மறக்கவே முடியாத நாள் அது. நான், நீ, கலைச்செல்வன், கவிவர்மன், மாணிக்கம், கிருஷ்ணசாமி, சாந்தி, ராணி, லாவண்யா, அனு, லோகநாதன், கலையரசி அக்கா எல்லோரும் ஆட்டம், பாட்டம் என அமர்க்களப்படுத்தினோமே. அன்று எடுத்த புகைப்படமெல்லாம் கலையிடம் தான் இருக்குமென நினைக்கிறேன்.

அன்று பூம்புகாரில் காவிரிக் கடலில் சங்கமிக்கும் இடத்தில் நின்றிருந்தோம். உன் வீட்டில் உனக்கு திருமண ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாகச் சொன்னாய். நான் வாழ்த்தியபோது, நமக்கு நடுவே ஒரு நதி தன் நெடும்பயணத்தை நிறைவு செய்து கொண்டிருந்தது. என்ன செய்வது.. அகண்ட காவிரிதானே ஆடு தாண்டும் காவிரி ஆவதும். ஆட்டோகிராபில் கையெழுத்துக்கள் பரிமாறிக் கொண்டு பிரிந்தோம், அன்றுதான் உன்னைக் கடைசியாகப் பார்த்தது.

இன்று வரை கல்லூரி நண்பர்களில் என்னுடன் தொடர்பில் இருப்பது கலைச்செல்வன் மட்டுமே. நான் சினிமாக் கனவுகளுடன் சென்னைக்கு வந்தபோது, எனக்கு வீடு பிடித்துக் கொடுத்து, எல்லா உதவிகளையும் அவன் தான் செய்தான். பிறகு சில மாதங்களில் குடும்பச்சூழ்நிலை கருதி மயிலாடுதுறைக்கே சென்று விட்டான். அவ்வப்போது போனில் பேசுவோம். உன்னைப் பற்றி ஏதாவது தகவல் கிடைத்ததா என அவனிடம் விசாரிப்பேன். ‘உஷாவுக்கு கல்யாணம் ஆயிருச்சாம் மாப்பிள. கேரளாவுல உஷா ஹஸ்பெண்ட் ஏதோ ரெஸ்டாரண்ட் வச்சிருக்காராம். போனவாரம் யுனிவர்சிட்டிக்கு ஒரு வேலையா போயிருந்தப்ப சாந்தி சொன்னிச்சு. மத்தபடி அட்ரஸ், போன் நம்பர் எல்லாம் கிடைக்கல மாப்பிள’ என்றான்.

உஷா, நீ நதிகளின் தேசத்திலிருந்து கடவுளின் தேசத்திற்கு இடம்பெயர்ந்து விட்டாய் என எண்ணிக் கொண்டேன்.

இன்று நான் கலைக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு போன் செய்தேன். வழக்கமான உரையாடல் முடிந்து, உன்னைப் பற்றி ஏதாவது தகவல் கிடைத்ததா என விசாரித்தேன். ‘மாப்பிள, இன்னிக்கு ட்வீட் படிச்சேன், கேளேன். ஆறில்லா ஊருக்கு அழகு பாழ். ஆறுதலான மனதுக்கு அமலா பால்.’ என்று சொல்லி சிரித்தான். ‘மாமா, உஷாவ பத்தி தகவல் கிடைச்சுதா?’ என்றேன்.

‘வேணாம் மாப்பிள, என் வாயக் கிளறாத. கடைல கட்டிங்க் போட்டுகிட்டிருக்கேன்.’

‘சொல்டா மாமா, நீ எதையோ மறைக்கற. சொல்டா’

சிறிது தயக்கத்துக்குப் பிறகு சொல்ல ஆரம்பித்தான்.’ மனச தேத்திக்கடா மாப்பிள. உஷாவோட ஹஸ்பண்ட் செத்துட்டாராம்டா. போன மாசம் ஒரு நாள் நம்ம உஷாவோட தம்பிய சாந்தி ஸ்ரீரங்கத்துல பாத்திருக்கு. அப்பத்தான் இந்த விஷயம் தெரியும். குரூப்பா வெப்பன்ஸோட அவங்க ரெஸ்டாரண்ட்டுக்குள்ள வந்து, அவங்க ஹஸ்பெண்ட்டை அடிச்சுக் கொன்னுட்டாங்களாம்.’

’ஏண்டா.. மாமா.. இப்பிடி? நிஜமாவா?’

‘சத்தியமாடா. முன்விரோதம், தொழில் போட்டின்னு கேச முடிச்சுட்டாங்களாம். ஆனா நடந்ததே வேறயாம் மாப்பிள. முல்லைப் பெரியாறு ப்ரச்சன பெருசா வெடிச்சுதுல்ல, அப்பத்தான் இது நடந்திருக்கு. உஷாவோட லைஃபை இப்படி நாசம் பண்ணிட்டாங்களே கொலகாரப் பாவிங்க. ரெண்டு பெண் குழந்தங்க வேற இருக்காம். சாரிடா மாப்பிள. உம்மனசு கஷ்டப்படுமேனுதன சொல்லாம மறச்சுட்டேன். இன்னிக்கு மப்புல இருக்கறப்ப போனடிச்சயா, அதான் கண்ட்ரோல் பண்ண முடியல. போ. நீயும் ஒரு ஆஃப் வாங்கி அடி. ‘

உஷா, உனக்கா இப்படி ஒரு அநீதி நிகழ வேண்டும்? என்றும் தீராத ஒரு துயர நதியை விழிகளில் சுமந்து கொண்டு நீ எங்கே இருக்கிறாய் உஷா?

– மார்ச் 2nd, 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *