தொடாத எல்லை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 11, 2016
பார்வையிட்டோர்: 9,484 
 
 

‘நாங்கள் பயணம் செய்த கூட்ஸ் வண்டி மலாயா எல்லையைத் தாண்டி சயாமில் நுழைந்தபோது பிற்பகல் மணி ஒன்று. இராமு, சுப்பன், வேலு இன்னும் பலரும் பசி மயக்கத்தில் சுருண்டு கிடந்தார்கள். எனக்கும் கடுமையான பசி. தாங்க முடியவில்லை.

“குர்ரா..குர்ரா” ஒரு முரட்டு ஜப்பான்காரன் கையில் நீண்ட கத்தியோடு வந்து எங்களைக் கீழே இறங்கச் சொன்னான். அவனின் குரலிலிருந்த முரட்டுத்தனம் எங்களைப் பயமுறுத்தியது. “சீக்கிரம் இறங்குங்க. இல்லாட்டி இந்த கட்டயன் வெட்டிப்புடுவான்.” யாரோ எங்கள் பின்னாலிருந்து கத்தினார்கள்.

கீழே இறங்கியபோது, அந்த இடம் எல்லை நகரான பாடாங் புசார் என்று தெரிந்தது. வெளியே மண்டையைப் பிளக்கும் வெயில். எங்களையும் கூட்ஸ் வண்டியில் வந்த சுமார் நூறு பேரையும் கொண்டுபோய் ஸ்டேசனுக்குப் பக்கத்தில் இருந்த கொட்டாயில் உட்கார வைத்தான்.

கொஞ்ச நேரத்தில் பச்சரிச் சோறு, சூப்பு, கருவாட்டுப் பொரியல் எனச் சாப்பாடு வந்தது. ஒரு கவளம் சோற்றை வாயிக்குள் தள்ளியபோது எனக்கு வீட்டு ஞாபகம் வந்தது. முதல் நாள் வேலைக்குப் போன மனுசன் இன்னும் வீடு காணோம்னு செல்லாயும் புள்ளைகளும் துடிப்பாங்களே. என் கண்களில் நீர் மல்கியது.’

************
இன்னும் மிஞ்சியிருக்கும் தாத்தாவின் ஒரே ஞாபகச் சின்னம் அந்த இரும்புப்பெட்டி. அதிலிருந்த காகிதக் கட்டுகளை எடுத்து கவனமாகப் பிரித்துப் படித்துக் கொண்டிருந்தான் மாலன்.

பழுப்பேறிய தாள்களில் எழுத்துக்கள் மங்கலாகத் தெரிந்தன. தாத்தா விடைபெற்றுப்போய் இருபது ஆண்டுகளாகின்றன. மாலனின் ஜனனத்திற்கு முன்பே அவரின் மரணம் நிகழ்ந்து விட்டது. ஆனாலும், அவரின் இரும்புப் பெட்டியும் ஜப்பானியர் ஆட்சியின்போது சயாம் மரண இரயில் அமைக்கும் பணியில் அவர் அனுபவித்த கொடுமைகளின் பதிவுகளும் இன்னும் அப்படியே இருக்கின்றன.

தாத்தாவின் குறிப்புகளைப் படிக்கப் படிக்க மாலனுக்கு வியப்பாக இருந்தது. இது என்ன நாவலா? என் குடும்பத்தில் இப்படியோர் எழுத்தாளரா? ஓர் எழுத்தாளர் பாரம்பரியத்தில் வந்தவனா நான்? அப்படியானல் நானும் எழுத்துத்துறையில் ஈடுபட்டு வெற்றிபெற முடியுமா? இதற்கு அப்பாவும் அம்மாவும் ஒப்புக்கொள்வார்களா? நீரின் குமிழிகளாய் ஏதேதோ எண்ணங்கள் அவன் மனத்துக்குள் பிரவகித்த்தன.

காகிதக் கட்டுகளின் முன் அட்டையைத் திருப்பிப் பார்த்தான். ‘சயாம் மரண இரயில் அல்லது சாவின் விளிம்பு’ என்ற மங்கிய கொட்டை எழுத்துகள் அட்டையில் புதைந்து போயிருந்தன. கீழே ‘சாவின் எல்லையைத் தொட்டு விட்டு வந்தவனின் வரலாற்றுக் குறிப்புகள்’ என்று எழுதியிருந்தார். பின் பக்கத்தைப் பார்த்தான். தாள்கள் கிழிந்துபோய் பல பக்கங்கள் காணாமல் போனதற்கு அடையாளம் தெரிந்தது. இதனை எழுதி முடிக்காமலே தாத்தா போய்விட்டாரா?

விட்ட பகுதியிலிருந்து தொடர்ந்து படித்தான். தாத்தாவின் விறுவிறுப்பான, சுவையான எழுத்துநடை அவனுக்குப் பிடித்துப்போனது. எஸ்.பி.எம். தமிழ் இலக்கியப் பாடத்தில் படிக்கும் குறிஞ்சி மலர் நாவலின் தமிழ்ச்சுவையில் மயங்கிப்போன மனம் அவனுடையது. தாத்தாவின் தமிழிலும் அவன் மனம் லயித்தது.

முறுக்கிய மீசையோடு கண்ணாடி பிரேமில் முறைத்துக்கொண்டிருந்த தாத்தாவுக்குப் படையல் போட்ட ஒரு நாளில் அப்பாவிடம் கேட்டான்.

“அப்பா. தாத்தா பத்தி சொல்லுங்க”

“என்னத்த சொல்றது? அப்பா ஒரு அறிவிஜீவின்னு சொல்வாங்க. நல்ல படிச்ச மனுசன். சயாமுக்குப் போய் தப்பிப் பிழைச்சி வந்த பிறகு ரவாங் பப்ளிக் வோர்க்ஸ் டிப்பாட்மன்ல நல்ல வேல.. அதை தூக்கியெறிஞ்சிட்டு பத்திரிகை வேலைக்குப் போனாரு. எப்ப பார்த்தாலும் கதை கவிதைன்னும் எழுத ஆரம்பிச்சாரு. அப்ப நான் கைக்குழந்தை ஊம்.. இன்னும் எப்படியோ நல்லா வாழ்ந்திருக்கலாம்” சோற்றைப் பிசைந்துகொண்டே சொன்னதில் அப்பாவின் உள்வலி தெரிந்தது.

“அப்படியில்ல மாலன். உங்க தாத்தா நல்லாதான் வாழ்ந்தாராம். அந்தக் காலத்துலேயே சிறுகதை, கவிதை போட்டியில நிறைய பரிசுகள் வாங்கினாராம். வீட்டுல அவர் எழுதின கதை கவிதைகள் நிறைய இருந்துச்சி. மூனு முறை வீடு மாறி வந்தோம். எல்லாம் போச்சு. இப்ப மிஞ்சி இருக்கிறது அந்த இரும்புப் பெட்டிதான்.” அம்மா இலையில் ஊற்றிய பாயாசமும் இனித்தது. அவரின் வாய் உதிர்த்த சொற்களிலும் அந்த இனிப்பு இருந்தது.

“அம்மா, நானும் தாத்தா மாதிரி எழுத்தாளரா வர முடியுமா? எனக்கும் அந்தத் திறமை இருக்குமா?”

“ஏன் முடியாது? தாத்தா திறமை பேரனுக்கும் இல்லாமலா போய்விடும். நீ விருப்பப்பட்டா, உனக்கு ஆர்வம் இருந்தா நிச்சயம் உன்னால முடியும். அது இல்லாமலா அன்னிக்கு உங்க பள்ளி தமிழ் விழா கட்டுரைப் போட்டியில முதல் பரிசு வாங்கிட்டு வந்தே?” நம்பிக்கை இழையோடும் அம்மாவின் மொழியில் எப்போதும் கிடைக்கும் ஆறுதல் அன்றும் கிடைத்தது.

அப்பாவைக் கவனித்தான். தாத்தாவின் முறைப்புப் பார்வை அவரின் முகத்தில் படர்ந்திருந்தது.

************
‘தம்ராட் கேம்ப்பில் இரவு உணவுக்குப் பிறகு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம். உணவா அது? வெறும் சோற்றில் நீரை ஊற்றிப் பிசைந்து, உப்பைச் சேர்த்துச் சாப்பிட்டோம். காட்டுமரங்களை வெட்டி ரயில் பாதை அமைக்கும் பேய்த்தனமான உழைப்பு எங்களை உருக்கிவிட்டது. சயாமுக்கு வந்த இந்த மூன்று மாதங்களில் எங்களில் பலர் பாதியாக இளைத்துவிட்டோம். சத்துள்ள உணவும் எப்போதாவதுதான் கிடைக்கிறது.

பேசிக்கொண்டே எப்போது தூங்கினோம் என்று நினைவில்லை. நள்ளிரவு மணி பன்னிரண்டு இருக்கும். திடீரென்று பக்கத்தில் துப்பாக்கி வேட்டுச் சத்தம் சரமாரியாகக் கேட்டது. கிடுக்கிட்டி எழுந்தோம். இராமு வாய்விட்டுக் கத்திவிட்டான். வெளியே எட்டிப் பார்த்தோம். பிணக்கொட்டாயில் தீ கொளுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது.

மறுநாள் காலையில்தான் எங்களுக்கு உண்மை தெரிந்தது. “நேத்து பதினைஞ்சு பேரு, சீக்காலிங்கல கொண்டுவந்து இங்க வச்சு சுட்டுத் தள்ளிட்டானுங்க. நீங்களும் சீக்கு புண்ணு ஏதும் வராம பாத்துக்குங்க. இல்லாட்டி நீங்களும் இப்படித்தான்” கங்காணி சொன்னதைக் கேட்க நாங்கள் பயந்து நடுங்கினோம்.’

********************

தாத்தாவின் ஏடுகளைப் பிரித்துப் படிக்கப் படிக்க அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்துகொள்ளும் ஆவல் மாலனின் மனமெங்கும் முகாமிட்டது.

எத்தனையோ ஆயிரம் பேரைப் பலிகொண்ட வரலாறு இது. எல்லாம் சயாம் இரயில் பாதை அமைக்கப்பட்ட குழிகளில் புதைக்கப்பட்டு விட்டனவா? இந்நாட்டில் இது முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா?

ஈராண்டுகளுக்கு முன் மூன்றாம் படிவத்தில் படித்தபோது, வரலாறு பாடப்புத்தகத்தில் இது பற்றிய விளக்கம் சிறு குறிப்பாக மட்டும் இடம்பெற்றிருந்தது மாலனின் நினைவில் தட்டுப்பட்டது. இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானியரின் கொடுமைக்கு ஆளாகிச் சயாமுக்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டவர்களின் கதறல்கள் காற்றிலே கலந்து மறைந்து விட்டனவா? மாலனின் எண்ணத்தில் இது வண்டாக மாறிக் குடைந்து கொண்டிருந்தது.

கடந்த வாரம் தலைநகரில் எழுத்தாளர் இயக்க ஏற்பாட்டில் நடைபெற்ற கதை வகுப்பில் மாலன் கலந்துகொண்டபோது அவனின் எழுத்தார்வத்திற்குத் தீனி போடுவதாக அமைந்தது.

அந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய மூத்த எழுத்தாளர் கார்த்திகேயன் எல்லார் மனங்களிலும் தைக்கும்படி தம் கருத்துக்களை முன் வைத்தார். “இந்நாட்டில் மூத்த எழுத்தாளர்களுக்குப் பிறகு, இலக்கியம் படைக்கும் புதிய எழுச்சிமிக்க இளம்தலைமுறை படைப்பாளிகளை உருவாக்க வேண்டும். இதிலே, தொய்வுநிலை ஏற்படக் கூடாது. நமக்கு நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம் படைக்கும் புதிய எழுத்தாளர் அணி இருவாக வேண்டும். அதற்கு இதுபோன்ற கதை வகுப்புகள் வழிவகுக்கும். இதுவும் முக்கியமான சமுதாயப் பணிதான். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து தோள்கொடுக்க வேண்டும்”

கார்த்திகேயனின் எண்ணங்களை அசைபோட்டவாறு வீட்டுக்குப் போனவனுக்கு வசை காத்திருந்தது. சிமெண்டுத் தொழிற்சாலையில் வேலைமுடிந்து மாலையில் வீடு திரும்பிய அப்பா அவனைப் பிடித்துக் கொண்டார்.

“இன்னிக்கு டியூசன் வகுப்புக்குப் போகலையாமே. வேற எங்கதான் போன?” அப்பாவின் குரலில் கடுமை எட்டிப் பார்த்தது.

“இன்னிக்கு கோலாலம்பூர்ல கதை வகுப்பு நடந்திச்சு. எழுத்தாளர் கார்த்திகேயன் வந்திருந்தாரு. நல்ல வாய்ப்பு. அதுல கலந்துக்க போனேம்பா. எங்கள் தமிழ் சாரு வேலவன் தான் கூட்டிக்கிட்டுப் போனாரு.” எப்படியாவது அப்பாவிடமிருந்து தப்பிக்க வேண்டும். கொஞ்சம் அப்பாவித்தனமாய்ச் சொல்லிப் பார்த்தேன்.

“டியூசன் வகுப்புக்குப் போகாம கதை வகுப்பா? என்னடா கதை சொல்ற? இந்த வருசம் எஸ்.பி.எம். பரீச்ச இருக்கு. மறந்திட்டியா? உன்ன டாக்டரா ஆக்கிப் பார்க்க ஆசப்படறேண்டா. என் ஆசையில மண்ண அள்ளிப் போட்றாதடா” அப்பாவின் வேண்டுகோளுக்கு இடையில் கண்டிப்பும் உறுதியும் கண்ணை உருட்டின.

அம்மாதான் உதவிக்கு வந்தார். “விடுங்க, பையன் ஆசைப்பட்டான். நான் தான் போகச் சொன்னேன். உங்க அப்பா மாதிரி கதை, கவிதைன்னு எழுத இப்பவே ஆர்வப்படறான். நாம ஏன் தடுக்கணும்?” மூத்த மகதான் நீங்க விரும்பின மாதிரி யூனிவசிட்டிக்குப் படிக்க போயிருச்சி. இவனுக்கு என்னை துறையில ஆர்வம், ஈடுபாடு இருக்கோ அப்படி போகட்டுமே”

“அதுக்கின்னு, இவன் தாத்தாதான் எழுத்து, பத்திரிகைன்னு வீணா போயிட்டாரு. இவனுமா? நீயே பையன கெடுத்திடுவ போலிருக்கு”

“இல்லங்க. உங்க ஆசையை இவன்மேல திணிச்சி நீங்கதான் இவன கெடுத்துடுவீங்கன்னு எனக்கு பயமா இருக்கு. நேத்து பாருங்க. அன்னையர் தினம். எனக்கு அருமையா கவிதை எழுதி படிச்சிக் காட்டினான்.” தான் எழுதிய அன்னையர் தினக் கவிதை தக்க சமயத்தில் கைகொடுத்ததில் மாலனுக்கு மகிழ்ச்சி.

“ஊகும்.. இது சரி பட்டு வராது. டாக்டர் மாலன நீ எழுத்தாளர் மாலனா மாத்தப் பார்க்குற. இது நடக்காது. நான் சம்மதிக்கவே மாட்டேன். வீணா அவன் எண்ணத்தையும் மாத்திடாத” முனகிக் கொண்டே துண்டை உதறித் தோளில் போட்டவாறு குளிக்கப் போனார் வீரையா.

***********

‘காஞ்சனாபுரிக்கு வந்து மூன்று மாதங்கள் கடந்து விட்டன. மலாயாவிலிருந்து என்னோடு வந்தவர்களில் பலர் இப்போது இல்லை. மலாய்க்காரர்கள் குறைவு, சீனர்களும் அதிகமில்லை. தமிழர்கள்தாம் பெரும்பாலும் மாட்டிக்கொண்டோம். இராமு, சுப்பன், மணியம், கணபதி, வேலு எனக்குத் துணையாய்ச் சில பேர். அதிலும், சுப்பனைப் போன வாரம், காலிலே புண் இருப்பதை அறிந்து இரவில் அழைத்துக்கொண்டு போனார்கள். அதன் பின் அவன் வரவேயில்லை.

அன்று இரவு நான் வேலை செய்த இராணுவ முகாமின் சமையல் கிடங்கில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. உணவு பரிமாறிவிட்டு, ஜப்பானிய வீரர்கள் சாப்பிட்டு முடித்தவுடன் பாத்திரங்களைக் கழுவ நான் காத்திருந்தேன். அப்போது, துப்பாக்கியோடு முகாமிற்குள் ஓடி வந்த ஜப்பானிய வீரனின் கையிலிருந்த ரேடியோவில் ‘காந்தி, காந்தி என்ற பெயர் பலமுறை கேட்டது. செய்தியைக் கேட்ட ஒருவன் கோபத்தோடு அருகிலிருந்த பெட்டியை உதைத்தான். அது என்மேல் வந்து விழுந்ததில் இடது முழங்காலுக்குக் கீழ் காயம்பட்டு இரத்தம் வந்தது. நான் வலி தாங்காமல் துடித்தேன்.

என்னவென்று முதலில் ஒன்றும் புரியவில்லை. இரயில் பாதை அமைத்து இந்தியாவைத் தாக்கத் திட்டமிட்ட இவர்களுக்கு, காந்தி பிரிட்டிஷாருடன் சமாதானமாகிப் போனதால் ஏற்பட்ட ஏமாற்றம் என……………… கொண்டேன்’

**********************

மாலன் ஆவலோடு படித்துக்கொண்டிருந்தான். தாத்தாவின் நூலில் சில எழுத்துகள் ஏடுகளோடு மக்கி மறைந்துவிட்டன. ஒருவாறு ஊகித்துப் படித்தான். அப்பா எப்போது அறைக்குள் நுழைந்தார் எனத் தெரியவில்லை. அவன் கையிலிருந்த ஏடுகளை வெடுக்கெனப் பிடுங்கி தரையில் வீசினார். ஏற்கெனவே தாள்கள் மக்கி இற்றுப்போன காகிதக் கட்டு தரையில் வீசப்பட்டதால் மூலைக்கொன்றாய்ச் சிதறியது. மாலன் பதறிப்போனான்.

“அப்பா, தாத்தா எழுதின கதையை நான் படிக்கக் கூடாதா?” நியாயமான கேள்வி. வீரையா என்ன பதில் சொல்லப் போகிறார்? சத்தம் கேட்டு அறையின் கதவருகே வந்து நின்ற மாலனின் அம்மாவுக்குத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆவலாய் இருந்தது.

“தப்பில்ல, தாத்தா எழுதின கதையை படிக்கலாம். ஆனா, அந்த மனுசன் மாதிரி கதை, கவிதைன்னு இப்பவே எழுத ஆசைப்படற பாரு. அதுதான் தப்பு”

“இல்லப்பா. இது தப்பில்ல. கவிதை, கதை எழுதுறதெல்லாம் தாத்தா வழி எனக்குக் கிடைச்ச சொத்து. இதெயெல்லாம் நான் ஏன் இழக்கணும்? உங்களுக்கென்ன நான் டாக்டராகனும்தானே? தமிழ் இலக்கியத்துல டாக்டராகிறேன். போதுமா?” மாலனின் துணிவும் தெளிவான சிந்தனையும் அம்மாவுக்கு வியப்பாக இருந்தன. இப்படிப் பேச இவன் எங்கே கற்றுக்கொண்டான்?

“தமிழ் இலக்கியத்துல டாக்டரா? இவன் என்ன சொல்றான் பாரு. இதுக்கெல்லாம் நீதான் காரணம். இவன கெடுக்கிறதே நீதான். பார்ப்போம், எவ்வளவு நாளைக்கி இவன் இப்படிப் பேசறான்னு” மனைவியைப் பார்த்து முறைத்துக்கொண்டு அறையை விட்டு வெளியேறினார் வீரையா. அவரின் குரலில் பழைய கடுமை இல்லை. இன்னும் கொஞ்சம் பேசினால் மாலனின் வழிக்கு வந்துவிடுவார் போலிருந்தது அம்மாவுக்கு.

“அப்பா சொல்றதும் சரிதான். இதுக்கெல்லாம் நீங்கதான் காரணம். ரொம்ப நன்றிமா”

“நன்றி இருக்கட்டும். முதல்ல படிப்ப கவனி. இன்னும் மூனு மாசத்துல பரீச்ச வருது. அதுல சிறப்பா செய்தா உன் லட்சியத்த நீ எட்டிப் பிடிக்கலாம். இல்லாட்டி உங்க அப்பா கிட்ட நான் வாங்கிக் கட்டணும்” வழக்கம்போல் அம்மாவின் உற்சாகம் கலந்த சொற்கள் மாலனுக்குத் தெம்பூட்டியது.

தரையில் சிதறிக் கிடந்த தாள்களைக் கவனமாகச் சேகரித்துக் கொண்டு நிமிர்ந்தபோது, சுவரில் கண்ணாடி பிரேமில் முறுக்கிய மீசையோடு எப்போதும் முறைத்துப் பார்க்கும் தத்தா இவனைக் கூர்ந்து உற்றுப் பார்ப்பதாகத் தோன்றியது. அவர் தொடாத எல்லையைத் தொட்டுச் சாதனை புரிய வேண்டும் என்ற எண்ணம் அவன் அடிமனத்தின் ஆழத்தில் சயாம் மரண இரயில் தண்டவாளத்தின் இறுகிப் போன கட்டைகளைப்போல உறுதியாய்ப் பதிந்துபோனது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *