ராஜேந்திர பிரசாத் சாலையில் இருந்தே வாகன நெரிசல் ஆரம்பமாகிவிட்டது. கோவில் அமைந்திருந்த தெருவுக்குள் காரை திருப்புவது என்பது தேவையில்லாத ஜம்பம். காரை ரிவர்ஸ் எடுத்து அகநானூறு தெருவில், இங்கே வாகனங்கள் நிறுத்தாதீர் என்ற பலகை மாட்டப்பட்டிருந்த வீட்டின் முன்பு காரை நிறுத்தினேன்.
“கொஞ்ச தூரம் நடக்கணும்…” என்றேன் தேப்தூத் ரேவிடம்.
“திக் ஆச்சே.. திக் ஆச்சே…” என்றவாறே உடன் நடந்தான். அவனுக்கு இரவு பன்னிரண்டு மணிக்கு தான் விமானம். கொல்கத்தாவிலிருந்து அலுவல் நிமித்தமாக வந்திருந்தான். எங்களின் அலுவலக அந்தஸ்துபடி விமானத்தில் பயணிக்க எங்களுக்கு எலிஜிபிலிட்டி போதாது. ஆனாலும் நாங்கள் விமானத்தில் சென்று வேலையை துரிதமாக முடித்து திரும்ப வேண்டும் என்று நிர்வாகம் எதிர்பார்க்கும். இதெல்லாம் வெளிப்படையாக சொல்லாமல் நிகழ்த்தப்படும் அநீதிகள். வேலை முக்கியம் என்பதால் வாயை மூடிக்கொள்வோம். பயணத்திற்கு இரண்டாம் வகுப்பு ஏ.சி ரயிலுக்கு ஆகும் செலவை தான் திருப்பி தருவார்கள். மீதம் உள்ள தொகையை சம்பளத்திலிருந்து தான் போட வேண்டும். நள்ளிரவு விமானங்களின் டிக்கெட் விலை குறைவாக இருப்பதால், அலுவல் நிமித்தமாக எங்கு பயணிக்க நேர்ந்தாலும் நாங்கள் அதையே தேர்ந்தெடுப்போம்.
பத்தரை மணிக்கு விமான நிலையத்தை அடைந்தால் போதும். அதுவரை என் வீட்டிலேயே ஓய்வெடுப்பது தான் முதலில் போட்ட திட்டம். மதியத்திலிருந்தே நெட்ப்ளிக்ஸ்சில் சாக்ரெட் கேம்ஸ் ஓடிக்கொண்டிருந்தது. இடையிடையே ரே, கணேஷ் கைத்தொண்டே போல் பேசிக் காண்பித்தான். அம்மா அவனுக்கு ஏதோ ஆகிவிட்டது என்பது போல் பார்த்தாள். அவள் கையிலிருந்த காபியை வாங்கிக் கொண்டு புன்னகை செய்து சமாளித்தான் ரே.
“டெம்பிள் கோ. டுடே பேமஸ் பங்க்சன்…” என்றாள்.
“ஒ!” ஏதோ அதிசயத்தை தெரிந்து கொண்டவனைப் போல் அவன் ஆர்வமாக கேட்டான்.
“இன்னைக்கு குமரகுன்றம் விஷேசமா இருக்கும். கூட்டிட்டு போக வேண்டித்தான!” என்றாள் அம்மா.
“யுவர் பிரெண்ட் நோ லைக் டெம்பிள்…” என்று என்னை சுட்டிக் காண்பித்து ரேவிடம் சொன்னாள். ரே அம்மாவிடம் நல்ல பேர் வாங்க வேண்டும் என்று நினைத்திருக்கக் கூடும். உடனே கோவிலுக்கு போகலாம் என்று நச்சரிக்கத் தொடங்கிவிட்டான். எனக்கு கோவிலுக்கு போவதில் விருப்பம் இல்லை என்றாலும் மற்றவர்களின் ஆன்மீக நம்பிக்கைகளுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுப்பேன். ஆனால் ரே அப்படி இல்லை. அவனுக்கு கோவில் என்பதன் மீது தனி மரியாதையோ அபிப்ராயமோ இருந்ததில்லை. அவன் காளிகட் காளி கோவில் வரை அடிக்கடி போய் வருவான். எதற்காக என்று அம்மாவுக்கு தெரிந்தால் அவனை வீட்டினுள்ளேயே சேர்க்க மாட்டாள். அம்மாவின் முன்பு நல்ல பிள்ளை போல் நடிக்கிறான். எனக்கும் வெளியே போனால் தேவலை என்று தோன்றியது.
கார் எங்கள் தெருவை தாண்டியதும் கேட்டேன், “வேற எங்காவது போலாமா? அம்மா கேட்டா கோவிலுக்குனு சொல்லிக்கலாம்…”.
“நோ…” என்றான் உறுதியாக. நான் காரை குரோம்பேட்டை நோக்கி நகர்த்தினேன்.
நாங்கள் நடந்து சென்ற வழியெங்கும் வாகனங்கள். ஏராளமான இருசக்கர வண்டிகள் கோணல் வாக்கில் நின்றுகொண்டிருந்தன. எங்கே தங்களின் வண்டியை நுழைக்கலாம் என்று எதிர்ப்பார்த்தவாரு சில இரு சக்கர வாகன ஓட்டிகள் காத்துக் கொண்டிருந்தனர்.
கோவிலில் கூட்டம் தான். ஆனால் இதை விட அதிக கூட்டத்தை சிறுவயதில் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு தைப்பூசத்தின் போதும் சானடோரியத்திலிருந்து அம்மா நடக்க வைத்தே அழைத்து செல்வாள். ஆட்டோ எல்லாம் அப்போது வாழ்க்கையில் ஆடம்பரமான விசயமாக தான் இருந்தது. எங்களோடு சேர்ந்து பலரும் நடந்து வருவார்கள். அதனால் தூரம் ஒரு பிரச்சனையாக தெரிந்ததில்லை. இப்போதுதான் சில நூறு மீட்டர்களுக்குக் கூட வண்டி தேவைப் படுகிறது. வெகு தூரம் நடந்த களைப்பு கோவில் வாசலில் அண்டாவில் இருக்கும் புளியோதரையைப் பார்த்ததுமே பறந்து போய்விடும்.
அம்மா, “சாமி கும்பிட்டா தான் தருவாங்க…” என்பாள்.
அது உண்மையில்லை என்பது வளரவளர தான் தெரிய ஆரம்பித்தது. சில கைலி கட்டிய ஆசாமிகள் நேரடியாக புளியோதரை அண்டாவை நோக்கி செல்வார்கள். பக்கத்திலேயே தயிர் சாதத்தையும் வாங்கிக் கொண்டு விறுவிறுவென திரும்பி விடுவார்கள். ஒருநாளும் அவர்கள் கோவிலுக்குள் போய் பார்த்ததில்லை. எனக்கும் அவர்களை பின்பற்ற வேண்டும் என்றே தோன்றும். நாம் வந்தோமா இல்லையா என்று சாமிக்கு தெரியவா போகிறது என்று நினைத்துக் கொள்வேன். ஆனால் அம்மாவிடம் சொல்ல முடியாது. அம்மா ஆர்வமாக, ஒவ்வொரு சாமியையும் கும்பிடுவாள். கோவில் சுவற்றில் எழுதப்பட்டிருக்கும் அருணகிரிநாதர் பாடலை எழுத்துக் கூட்டி படிப்பாள். இப்போது அந்த ஆர்வமெல்லாம் எங்கு போனது என்று தெரியவில்லை. மூட்டு வலி வந்ததிலிருந்து வீட்டில் இருப்பதையே அதிகம் விரும்புகிறாள். நான் இப்போது போல அப்போதும் ஒப்புக்குசப்பாணியாக தான் கோவிலுக்கு போய் வந்திருக்கிறேன்.
மலை உச்சிக்கு வேகமாக ஓடி முருகரை கும்பிட்டுவிட்டு வந்துவிடலாம் என்று தோன்றும். ஆனால் அம்மா முதலில் மலை நடுவே இருக்கும் சுந்தரேஸ்வரரை தான் கும்பிட வேண்டும் என்பாள். அங்கே கால் மணி நேரமாவது ஆகும். பின் மீண்டும் மலை ஏற வேண்டும். எப்போது கீழே போவோம் என்று நான் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருப்பேன். புளியோதரை தீர்ந்துவிட்டால் என்ன ஆவது என்ற எண்ணமே பிரதானமாக இருக்கும். ஒரு வழியாக அம்மா கீழே இறங்குவாள். ஆனால் வழியில் இடும்பனை கும்பிட வேண்டும் என்று நின்றுக் கொள்வாள். இடும்பன் சன்னதியிலிருந்து புளியோதரை அண்டா தெளிவாக தெரியும். புளியோதரை தீர்ந்துவிடக் கூடாது இடும்பா என்று கூட வேண்டியிருக்கிறேன். அந்த புளியோதரை கைக்கு வரும் தருணம் கண்களில் நீரெல்லாம் வந்திருக்கிறது.
இப்போது அதே இடத்தைப் பார்த்தேன். தட்டை தேன்குழல் விலை ஐம்பது என்று போட்டிருந்தது. புளியோதரையை இருபது ரூபாய் கொடுத்து சிறு தொன்னையில் பலரும் வாங்கிக் கொண்டிருந்தனர்.
“புளியோதரை சாப்பிடலாமா!” என்றேன்.
“முதல சாமிய கும்புடனும்… அப்பறம் தான் பிரசாத்” என்றான் ரே. அம்மாவின் காற்று அவனுக்கும் அடித்திருக்கக் கூடும். அம்மாக்களுடன் உரையாடுபவர்கள் அம்மாக்களாகவே மாறிவிடுகிறார்கள்.
நாங்கள் விநாயகர் சன்னதியை நோக்கி நடந்தோம். ‘கண்ட கோயில் தெய்வம் என்று கையெடுப்பது இல்லையே’ வகை தான் நானும். எனக்கு கடவுளிடம் வேண்டுவதற்கு எதுவுமே இருந்ததில்லை. சம்பிரதாயமாக விநாயகருக்கு வணக்கம் சொல்லிவிட்டு நின்றேன். அர்ச்சகர் தன் கையை உயரத்தில் வைத்துக் கொண்டு விபூதியை வேண்டா வெறுப்பாக போடுவது போல் போட்டார். ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்வதனால் வரும் சலிப்பு அது. என் வங்கி க்ளார்க்குகள் இப்படி தான் வாடிக்கையாளர்களிடம் சலித்துக் கொள்வார்கள். சில நேரம் என்னிடமும். அந்த அனுபவம் இருந்தததால், நான் அர்ச்சகரின் செய்கையை பெரிதாக அலட்டிக் கொள்ள வில்லை. ரே அர்ச்சகர் தட்டில் பத்து ரூபாயை போட்டான். அவர் தன் வேட்டி மடிப்பிலிருந்து ஒரு விபூதி பொட்டணத்தை எடுத்துக் கொடுத்தார். எதையோ சாதித்துவிட்டவனாக ரே என்னை பார்த்து புன்னகை செய்தான்.
நான் நவகிரகத்தை நோக்கி நடந்தேன். அவன் வேகவேகமாக என் அருகே வந்து நின்றான். முகத்தில் பெருமிதம் இன்னும் குறையாமல் இருந்தது.
“ஒன்பது முறை சுத்தலாம்” என்றான். இருவரும் நவகிரகத்தை சுற்றத் தொடங்கினோம். சுக்கிரனிடம் வந்த போது படிக்கட்டின் பக்கவாட்டு சுவர் அருகே இரண்டு பெண்கள் நின்று கொண்டிருந்ததை கவனித்தேன். அதில் இளையவளாக இருந்தவள் தன் மஞ்சள் துப்பட்டாவை கையில் விரித்துப் பிடித்திருந்தாள். அதில் கொஞ்சம் காசு இருந்தது. அருகே நின்றுகொண்டிருந்த பெண்மணி என்னிடம் சொன்னாள்,
“சார் தங்கச்சிக்கு கல்யாணம். மடிப்பிச்சை கேட்கிறோம்”
அவள் கழுத்திலும் தாலி இல்லை என்பதை என்னால் கவனிக்க முடிந்தது. நான் எதுவும் பேசாமல் நவக்கிரகத்தை சுற்றினேன்.
ரே “என்ன!” என்றான். மடிபிச்சை என்பதை உடனடியாக ஹிந்தியில் எப்படி சொல்வது என்று தெரியவில்லை. கல்யாணத்திற்கு பணம் கேட்கிறார்கள் என்று ஆங்கிலத்தில் சொன்னேன். அதற்குள் நாங்கள் மேலும் இரண்டு முறை சுற்றி முடித்து விட்டோம். அந்த பெண்கள் அங்கேயே நின்றுக் கொண்டிருந்தனர். ஓரிருவர் காசு போட்டுவிட்டு சென்றார்கள்.
கடைசி முறை சுற்றும் போது, இளையவள் ரேவை பார்த்து கேட்டாள், “சார் என் கல்யாணத்துக்கு மடி பிச்சை கேட்கிறோம்” தனக்கு தமிழ் தெரியாது என்பதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
நான் அவளைப் பார்த்தேன். முகம் களைத்திருந்தது. அவளுக்கு முப்பது வயதிற்கு குறையாமல் இருக்கும். நவகிரக பாதையை விட்டு வெளியேறி அவர்கள் அருகே சென்ற ரே, தன் பர்ஸிலிருந்து புது ஐநூறு ரூபாய் தாளை எடுத்து அவள் விரித்திருந்த துப்பட்டாவில் போட்டான். எனக்கு அதிர்ச்சியாகவே இருந்தது.
“பத்து ரூபாய் போட வேண்டிதான! ஐநூறு ரொம்ப அதிகம்” கோவில் படிகளில் ஏறும்போது சொன்னேன்.
“எவ்வளவோ மோசமான விஷயத்துக்குலாம் செலவு பண்ணிருக்கேன். கல்யாணத்துக்கு தான!” என்றான்.
“சொல்றாங்க. உண்மைன்னு எப்படி தெரியும்! அவங்க அக்கா தங்கச்சியானே எனக்கு டவுட்டு” என்றேன் நான். அவன் என்னையே கூர்ந்து கவனித்தான். பின் திரும்பி அந்த பெண்களைப் பார்த்தான்.
“ஜானே தோ. உண்மைன்னு நினச்சு ஹெல்ப் பண்ணினேன். உண்மையானு டெஸ்ட் பண்ணியா பாக்க முடியும்!” என்றான்.
நான் கோவில் உச்சியை நோக்கினேன். மிக நீண்டதொரு வரிசை வளர்ந்து கொண்டே போனது. சன்னதியை அடைய முக்கால் மணி நேரமாவது ஆகிவிடும்.
“எங்க நின்னு கும்பிட்டாலும் சாமி தான்!” என்றேன் நான்.
“என்ன!” ஏதோ பெரிய தத்துவத்தை புரிந்துக்கொள்ள முயல்பவன் போல் கேட்டான்.
“சாமிய இங்க நின்னு கூட கும்பிட்டுக்கலாம். இவ்ளோ பெரிய க்யூல எதுக்கு நின்னுகிட்டு!
“உண்மையானு டெஸ்ட் பண்ணியா பாக்க முடியும்னு கேட்டியே! டெஸ்ட் பண்ணிடுவோம்”
“ஹே! அதெல்லாம் வேணாம். வீட்டுக்கு போலாம். நான் உண்மைன்னு நினச்சு தான் ஹெல்ப் பண்ணேன். அது போதும்”
“ஜஸ்ட் தெரிஞ்சிக்கலாம். அவங்க உண்மை சொல்லிருந்தா சந்தோசம். பொய் சொல்லிருந்தா இது ஒரு பாடம்” என்றேன். அவர்கள் பொய் சொல்லிருக்கக் கூடும் என்றே நான் நம்பினேன். அதை உறுதி செய்து கொள்வதற்காக தான் அவர்களை பின்தொடர விரும்பினேன்.
ரேவும் சரி என்றான். நாங்கள் மேலே ஏறாமல் அப்படியே திரும்பி இடும்பன் சன்னதி அருகே இருந்த படிகட்டில் அமர்ந்தோம். சிறு வயதில் புளியோதரையை பார்த்துக் கொண்டிருப்பது போல இப்போது அந்த பெண்கள் நின்றுகொண்டிருக்கும் இடத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்கள் கிளம்பும் வரை அங்கேயே அமர்ந்திருக்க முடிவு செய்தோம்.
ரே அவ்வப்போது திரும்பி மலைமேல் நின்றுகொண்டிருந்த கூட்டத்தை பார்த்தான். கூட்டம் குறையாமல் தான் இருந்தது. நாங்கள் செய்வது சரியா என்று உறுதி செய்து கொள்வதற்காக தான் அவன் அப்படி பார்கிறானோ என்று தோன்றியது. கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் கடந்திருக்கும். இளையவள் தன் துப்பட்டாவில் இருந்த பணத்தை மற்றவளின் கையிலிருந்த துணிப்பைக்குள் கொட்டினாள். நாங்கள் அந்த தருணத்திற்காக காத்திருந்தவர்களாக எழுந்து நின்றோம். அந்த பெண்கள் கோவிலை விட்டு வெளியேறத் தொடங்கினார்கள்.
நான் செல்போனைப் பார்த்தேன். மணி 7.43 P.M.
“நான் போய் கார எடுத்துட்டு வரேன். நீ அவங்க எப்படி போறாங்கனு பாரு”
“ஏன் சார் நோ பார்க்கிங் போர்டு இருக்கு தெரில…” கேட்டின் அருகே நின்றுகொண்டு சொன்னார் அந்த வீட்டுக்காரர்.
“சாரி சார்”
“பண்டிகை நாளுனாலே இதே ரோதனையா போச்சு!” என்று தனக்குத் தானே முணுமுணுத்துக் கொள்வது போல் என் காதில் கேட்கும்படி சொன்னார். அவர் அருகே நின்றுகொண்டிருந்த நாய் என்னை பார்த்து இரண்டு முறை குறைத்துவிட்டு அமைதியானது. அவர் சங்கிலியை விட்டிருந்தால் அந்த நாய் என் மீது பாய்ந்திருக்கக் கூடும்.
நான் அவசர அவசரமாக காரை எடுத்தேன்.
“அந்த ஆட்டோல தான் போறாங்க…” என்றான் ரே.
ஒரு பெரிய நடிகரின் புகைப்படத்தையும், அவரின் வசனத்தையும் தன் மேல் தாங்கிய ஆட்டோ, ஹஸ்தினாபுரம் சாலையில் திரும்பியது. அது திரும்பிய பல குறுகிய தெருக்களில் காரை திருப்ப கொஞ்சம் சிரமப் பட வேண்டி இருந்தது. ரே அவ்வப்போது தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டான். திடீரென்று எருமை மாடொன்று மிரண்டு சாலையில் குறுக்கே வந்துவிட்டது. நானும் மிரண்டு தான் போனேன். எங்களின் நல்ல நேரமா, மாடின் நல்ல நேரமா என்று தெரியவில்லை, கார் மாடை முட்டாமல் அதன் பக்கத்தில் போய் நின்றது. அதற்குள் முன் சென்ற ஆட்டோ எங்களின் பார்வையில் இருந்து மறைந்துவிட்டது.
எங்களை ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு மாடு தன் போக்கில் நடந்தது. நான் ரேவைப் பார்த்தேன். எதுவும் ஆகியிருக்கவில்லை என்ற ஆசுவாசம் அவன் முகத்தில் தெரிந்தது. எங்களின் தோல்வியை, இல்லை என்னுடைய தோல்வியை ஒப்புக் கொள்ள முடிவு செய்தேன்.
“திரும்பிடலாம்” என்று சொல்ல வாயெடுக்கும் போதே, அந்த ஆட்டோ திரும்பி எங்களை நோக்கி வந்து கொண்டிருந்ததை கவனித்தேன். அதே மாடு இப்போது ஆட்டோவின் முன்னே ஓடியது. ஆட்டோ மாடின் உடலை உரசிக்கொண்டு வளைந்து சாலையை விட்டு இறங்கி, மீண்டும் அதே நேக்குடன் சாலையில் ஏறியது. சென்னையில் ஆட்டோ டிரைவர்கள் வழக்கமாக பிரயோகிக்கும் வார்த்தையிலேயே அந்த மாட்டை திட்டினான் ஆட்டோ வாலிபன்.
“ஹே எருமை”
நான் புன்னகை செய்தேன்.
ரே, “கியா ஹுவா பாய்!” என்றான்..
“எக்ஸ்ப்ளெய்ன் பண்ணுனா, புரியாது விடு” என்றேன். அந்த ஆட்டோ காலியாக இருந்ததை ரே தான் முதலில் கவனித்தான்.
“அவங்க போன ஆட்டோ தான! அப்போ இங்க தான் எங்கயாவது இறங்கி இருப்பாங்க!.
“ஆகே சலோ. அவங்க வீடு எங்க இருக்குனு பாத்திருவோம்” என்றான். எனக்கு இருந்த ஆர்வத்தைவிட இப்போது ஏனோ அவனுக்கு அதிக ஆர்வம் தொற்றிக்கொண்டது.
தோல்வியை தவிர்த்துவிட்ட கர்வத்தோடு நான் ஆக்ஸிலரேட்டரை அழுத்தினேன். சாலை வளைந்த திசையில் காரை வளைத்தேன். அந்த தெரு நீண்டு கொண்டே போனது. ஆனாலும் ஆட்டோ திரும்பி வந்ததை வைத்துப் பார்த்தால் சில நூறு மீட்டருக்குள் தான் அந்த பெண்களின் வீடு இருக்க வேண்டும் என்று தோன்றியது. காரை ஓரமாக நிறுத்தினேன்.
ரே இறங்கி தெருவை நான்கு புறமும் நோட்டம்விட்டுவிட்டு, முன்னே நடந்தான். தெரு ஆங்காகே, குறுக்கு தெருக்களாக பிரிந்தது. நான் அவனை பின் தொடர்ந்தேன்.
“சரி இவ்ளோ தூரம் வந்துட்டு, பெட் கட்டாம போனா எப்டி!” என்றேன்
“கியா?”
“அவங்க உண்மைய சொல்றாங்கணு நீ சொன்ன. ஏமாத்துறாங்கணு நான் சொன்னேன். உண்மையா இருந்தா ரெண்டாயிரம் நான் தரேன். அவங்க ஏமாத்துக்காரங்களா இருந்தா ரெண்டாயிரம் நீ தரணும்”
ரே ஒப்புக் கொண்டான். சிறிய வீடுகள் மிக நெருக்கமாக அமைந்திருந்த அந்த தெருவில் ஒரு வீட்டின் முன்பு வாழை மரங்கள் கட்டப்பட்டு, நல்வரவு என்று ஒளி விளக்கால் அலங்கரிக்கப் பட்டிருந்தது.
“கல்யாண வீடு மாதிரி தான் இருக்கு” என்றேன் ரேவிடம்.
அந்த வீட்டில் வாசலில் நின்றதுமே, “வாங்க வாங்க” என்று வரவேற்றார் ஒரு பெரியவர்.
“மாப்பிள்ளையோட ஃபிரண்ட்ஸ் போல” என்று பின்னே நின்று கொண்டிருந்த ஒரு அம்மாவிடம் சொன்னார். நான் வீட்டின் வாசலில் மணமக்களை வாழ்த்தி வைக்கப்பட்டிருந்த பேனரை பார்த்தேன். வேறொரு பெண்ணின் புகைப்படம் இருந்தது. இரண்டாயிரம் மிச்சம்.
ரேவிடம் பேனரை பார்க்கும் படி ஜாடை காண்பித்தேன்.
“தோ அசார், தயார் கரோ” என்று ரேவின் காதுகளில் கிசுகிசுத்தேன்.
“வெயிட் பண்ணு. அந்த பொண்ணுக்கு கல்யாணம்னு தான் சொன்னா! இன்னைக்கே கல்யாணாம்னு சொன்னாளா! இங்க தான் எங்கயாவது இருப்பா!” என்றான் ரே.
நாங்கள் ஹிந்தியில் உரையாடிக் கொண்டிருப்பதை அந்த பெரியவர் பார்த்துக் கொண்டே நின்றார்.
“இதோ வந்துர்றோம்” என்று பெரியவரிடம் சொல்லிவிட்டு நான் திரும்பி நடந்தேன். அந்த வீட்டை கடந்து போனால், திரும்பி வரும் போது அவரை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பதால் தான் அப்படி செய்தேன். ரேவும் இணைந்து கொண்டான்.
எந்த வீட்டில் அந்த பெண் இருக்கக் கூடும் என்று யூகிக்க முடியவில்லை. ஒரமாக நின்று தெருவை கவனித்தோம். கல்யாண வீட்டு பெரியவர் எங்களையே நோக்குகிறார் என்பதை தெரு விளக்கின் ஒளியிலும் கண்டுகொள்ள முடிந்தது.
“விடமாட்டார் போல” என்றான் ரே.
திடீரென்று ஏதோ சப்தம் கேட்க, திரும்பினோம். ஒருவர் கீழே கிடந்தார். அவரது சைக்கில் அவரின் மேல் கிடந்தது. எருமை மாடு கீழே கிடந்தவரை பொருட்படுத்தாமல் கடந்து சென்றது. நாங்கள் இருவரும் ஒடிச்சென்று அவரை தூக்கினோம். மிகவும் மெலிந்திருந்த அந்த ஆளுக்கு வயது அறுபதுக்கு மேல் இருக்கும்.
“நன்றிங்க” என்று சங்கோஜத்துடன் எழுந்து கொண்டார். ரே அவருடைய சைக்கிலை நிமிர்த்தி அவரிடம் கொடுத்தான்.
“சார், அடிலாம் ஒன்னும் படலல்ல?”
“அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க”
“வாங்க வீட்ல விட்டுற்றோம்…”
“வேணாம்ங்க. வீடு, இங்க தான் பக்கத்துல.. நானே போய்க்குறேன்” என்று எங்களை நிமிர்ந்து பார்க்க விருப்பம் இல்லாதவர் போல் சைக்கிலை தள்ளிக் கொண்டு வலது புறமாக திரும்பிய குறுக்குத் தெருவிற்குள் நுழைந்தார்.
ரே மீண்டும் மணியைப் பார்த்தான்.
“இப்ப கிளம்புனா வீட்டுக்கு போயிட்டு ஏர்போர்ட் போக கரெக்டா இருக்கும். போலாம்” என்றான்.
“அவங்க ஏமாத்திருக்காங்க. நீ ரெண்டாயிரம் எடு!” என்றேன்.
“அதுக்கு அவங்க ஏமாத்துனது ப்ரூவ் ஆகணும். நீ இன்னொரு நாள் வந்து அவங்கள தேடு. அவங்க சொன்னது உண்மையா பொய்யானு தெரிஞ்சிக்கிட்டு அப்பறம் பெட்ல நீ ஜெயிச்சியா நான் ஜெயிச்சனானு பாப்போம்” என்றவன் குனிந்து கீழே இருந்து எதையோ எடுத்தான்.
“அந்த சைக்கில் ஆத்மிதுன்னு நினைக்கிறேன்” என்றவாரே என்னிடம் நீட்டினான்.
ஆதார் அட்டை. நான் குறுக்குத் தெருவைப் பார்த்தேன். அவர் சைக்கிளை ஒரு வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்ததை கவனித்தேன்.
“சார் சார்” அவர் பின்னே ஒடினேன்.
அது ஒரு ஸ்டோர் வீடு. கேட்டின் உள்ளே இருப்புறமும் வரிசையாக வீடுகள் அமைந்திருந்தன. முதல் வீட்டு வாசலில் அமர்ந்து ஒரு அம்மா அருவாமனையில் மீனை ஆய்ந்து கொண்டிருந்தாள். எங்களை நிமிர்ந்து பார்ப்பது நேர விரயம் என்று சொல்லும் பொருட்டு அவள் தன் வேலையில் மூழ்கியிருந்தாள். மூன்றாவது வீட்டு வாசலில் அந்த ஆள் நின்று கொண்டிருந்தார்.
எதிரே நின்ற உயரமான ஆசாமி, “நான் என்னய்யா பண்றது! இத வச்சு தான் நான் சாப்டனும்” என்றவாறே கையில் இருந்த காசை எண்ணினான்.
பின்பு உள்ளே எட்டிப்பார்த்தவாறே, “சரி, உன் புள்ளைங்ககிட்ட சொல்லிடு. என் பொண்டாட்டி பேசுனதெல்லாம் மனசுல வச்சிக்க வேணாம்னு. காலிலாம் பண்ண வேணாம். நான் பேசிக்குறேன். மாசமாச்சுனா வாடகைய கொடுத்துட்டா அவ ஏன் இங்க வந்து நிக்கப்போறா!” என்றான்.
காசை சட்டைப் பையில் வைத்தவன், திரும்பி எங்களை நோக்கி நடக்க, நாங்கள் மூன்றாவது வீட்டை நோக்கி நடந்தோம்.
“சார்…” என்றதும் அவர் வெளியே எட்டிப்பார்த்தார். அந்த பார்வையில் ஆச்சர்யமும் தயக்கமும் ஒருங்கே வெளிப்பட்டது.
“இத விட்டுட்டீங்க” என்று ஆதார் அட்டையை நீட்டினேன்.
“நன்றிங்க” என்று நிலையை தாண்டி வந்து வாங்கிக்கொண்டார்.
“காலைல இருந்து நிதானம் இல்ல…” என்றார்.
வீட்டின் உள்ளே கவனித்தேன். முன் எறிந்த ஒரு எல்.ஈ.டி பல்ப் அந்த வீட்டிற்கு போதிய வெளிச்சத்தை தந்திருந்தது. நுழைந்ததுமே ஒரு அடுப்படி, அதன் பின்னே இருந்த ஒரே ஒரு அறை என்ற அளவில் அந்த வீடு இருந்தது. ஒரு திரை துணியால் உள்ளறை மறைக்கப் பட்டிருக்க, உள்ளிருந்து யாரோ ஒரு பெண்மணி, ‘ம்மா, ம்மா’ என்று முனகுவது கேட்டது. அந்த குரல் தாங்கமுடியாத வலியை குறிக்கும் ஓலமாக ஒலித்தது. நான் உள்ளே கவனித்ததை அவரும் கவனித்தார்.
“என் மனைவிங்க…” அவர் அதை சொல்லியிருக்க வேண்டாம். சொல்லிவிட்டாரே என்பதற்காக நான் சம்ப்ரதாயமாக கேட்டேன்,
“ஏதாவது உடம்புக்கு…”
“வயித்துல கேன்சர். டாக்டர் முடியாது கூட்டிட்டு போனுட்டார். மூணு நாளா உசுரு பிரிய மாட்டேங்குது…வலில துடிக்குறா”
மனதிலிருப்பதை யாரிடமாவது கொட்டி தீர்த்துவிட வேண்டும் என்று காத்திருந்தவரை போல் என்னிடம் சொல்லிவிட்டு அழத் தொடங்கிவிட்டார். அதுபோன்ற ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டு எங்களுக்கு பழக்கமில்லை. ரேவும் என்ன செய்வது என்று தெரியாமல் என்னையே பார்த்தான்.
“உஷ்கா பீவி…” என்று மட்டும் சொன்னேன். அவன் புரிந்து கொண்டான். மேற்கொண்டு அங்கே நிற்கவேண்டாம் என்று தோன்றியது.
“ஒண்ணும் கவலப்படாதீங்க சார்…” என்றேன். உண்மையிலேயே வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை. எவ்வளவோ படித்தும் துயரில் நிற்பவருக்கு ஆறுதல் எப்படி சொல்வது என்பதை கற்றுக் கொண்டிருக்கவில்லை. அவர் அப்படியே நிலையில் அமர்ந்து வாயைப் பொத்திக் கொண்டார். அவரின் அழுகுரல் உள்ளேயும் கேட்டிருக்கக் கூடும்.
திரையை விலக்கிக் கொண்டு வெளியே வந்த பெண்ணொருத்தி, “அப்பா அப்பா! அம்மா போது பா போது பா” என்று அந்த ஆளினுடைய முதுகை பிடித்து உலுக்கினாள். அந்த ஆள், “ஐயோ மீனாட்சி” என்று கதறியவாறே எழ, அந்த பெண் அவரை தாங்கி உள்ளே அழைத்துச் சென்றாள். அவள் இருந்த பதட்டத்தில் வாசலில் நின்று கொண்டிருந்த எங்களை பொருட்படுத்தவில்லை. ஆனால் நாங்கள் இருவருமே அவளை கவனித்தோம். நாங்கள் தேடி வந்த இருவரில், இளையவள் அவள். இன்னொரு பெண்ணும் உள்ளே இருக்கக் கூடும்.
“நான் பெட்ல தோத்துட்டேன் பாய்” என் கண்களை பார்க்காமல் ரே, உறுதி இழந்த குரலில் சொன்னான்.
“நானும் தான்” என்றேன் நான். வீடு வரும்வரை நாங்கள் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
– ஜனவரி 2021