கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 17, 2023
பார்வையிட்டோர்: 1,279 
 

“உம்பேர் என்ன‌?” உடுத்திக்கொண்டிருந்த‌வளிட‌ம் கேட்டேன்.

“விம‌லா” என்ற‌வ‌ளின் பெய‌ர் வேறு என்ன‌வோ என்று அவ‌ளின் புன்ன‌கை சொன்ன‌து.

“எவ்ளோ?” கேட்டேன், க‌ன‌த்த‌ ப‌ர்ஸை கையில் எடுத்த‌வாறே..

“முத்து சார் சொல்லியிருப்பாரே, ரெண்டாயிர‌ம் ரூபா” என்றாள் செய‌ற்கை சிரிப்புட‌ன்.

ப‌ண‌த்தை எடுத்து நீட்டினேன், ஐநூறு ரூபாய் நோட்டுக‌ள் ப‌த்தாவ‌து இருக்கும் என்று அறிந்த‌வ‌ள், ஆச்ச‌ர்ய‌மும் ஆயாச‌முமாய் என்னைப் பார்த்தாள்.

“இன்னொரு த‌ட‌வை வேணுமா?” என்றாள்.”இல்லை, நீ கிள‌ம்பு..” என்றேன், அவ‌ள் க‌ண்க‌ளைப் பார்த்த‌வாறு. முக‌ம் நிறைந்த‌ ம‌கிழ்ச்சியுட‌ன் அவள் கிள‌ம்பிச் சென்ற‌வுட‌ன், எழுந்து சென்று க‌த‌வை தாளிட்டுவிட்டு வ‌ந்து ப‌டுக்கையில் சாய்ந்தேன். ‘உன்னை ப‌ழிவாங்கிட்டேன்டி’ என்று ச‌த்த‌மாய் க‌த்த‌வேண்டும் போல் இருந்த‌து எனக்கு. இர‌ண்டு ம‌ணிநேர‌த்திற்கு முன் அவ‌ள் வாங்கி வ‌ந்திருந்த‌ பிரியாணி பாதி சாப்பிட‌ப்ப‌டாம‌ல் டேபிள் மேல் இருந்த‌து. சாப்பிட‌த் தோன்றாம‌லும், தூக்கி எறிய‌த் தோன்றாம‌லும் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். ‘எப்ப‌டி சாவ‌து?’ இதுதான் என் முன்னால் இருந்த‌ மிக‌ப்பெரிய‌ கேள்வி.

தூக்குப் போட‌லாம், விஷ‌ம் சாப்பிட‌லாம் இது இர‌ண்டும்தான் பெரிய‌ அள‌வில் முய‌ற்சிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. வேற‌ எதாவ‌து வித்தியாச‌மாய்? என் உட‌ல்கூட‌ அவ‌ள் கையில் கிடைக்க‌க்கூடாது. ர‌யில் முன் பாய‌லாமா? வேறு என்ன செய்ய‌லாம், ரூமிற்கு உள்ளேயா, இல்ல‌ வெளியே ப‌ல‌ர் பார்க்க‌ செய்வ‌தா? என்ன‌ கொடுமை இது? ஏன் இவ்வ‌ள‌வு குழ‌ப்பம்.!

“ம‌ரண‌தேவா! என்ன‌ சொல்ற‌ நீ.?” என்று க‌த்தினேன்.

க‌ண்ணை மூட‌ எத்த‌னிக்கும்போது, க‌த‌வு த‌ட்ட‌ப்ப‌ட்ட‌து.

திற‌ந்தேன். ஒரு சிறுவ‌ன், ப‌த்து வ‌ய‌து இருக்க‌லாம், முக‌ம் கொள்ளா சிரிப்புட‌ன் நின்றிருந்தான்.

“யார் வேணும்?” என்றேன்

“நீங்க‌தான்”

“ரூம் மாறி வ‌ந்திருப்ப‌, யார் நீ?”

“நான்தான் ம‌ர‌ண‌தேவ‌ன், கூப்பிட்டீங்க‌ளே?” என்றான்.

“ச்சீ.. ப்போ, வெளையாடாத‌” என்று க‌த‌வை சாத்திவிட்டு வ‌ந்து க‌ட்டிலில் சாய்ந்தேன். கொஞ்ச‌ம் ச‌த்த‌மாக‌த்தான் க‌த்திவிட்டேன் போல‌. வெளியில் இருக்கும் அந்த‌ பைய‌னுக்கு கேட்டிருக்கிற‌து. நாளை காவ‌ல்துறையிட‌மும், ஊட‌க‌ங்க‌ளிட‌மும் “அவ‌ர் அப்ப‌டி ச‌த்த‌ம் போட்ட‌வே என‌க்கு மைல்டா ட‌வுட் ஆச்சி சார்” என்று அவ‌ன் சொல்லிக் கொண்டிருக்கும் காட்சியை ம‌ன‌திற்குள் ஓட்டிப் பார்த்து புன்ன‌கைத்துக் கொண்டேன்.

மீண்டும் க‌த‌வு த‌ட்ட‌ப்ப‌ட்ட‌து. அவ‌னேதான். எழ‌க்கூட‌ தோன்றாம‌ல் அப்ப‌டியே சாய்ந்து ப‌டுத்த‌வாறே க‌ண்க‌ளை மூடிக்கொண்டு அந்த‌ ச‌த்த‌த்தை உதாசீன‌ப்ப‌டுத்த‌ முய‌ன்றேன். க‌த‌வு த‌ட்டும் ச‌த்த‌ம் அதிக‌மாகிக் கொண்டே போன‌து, க‌த‌வு உடைந்து விடுவ‌தைப் போன்று அதிர‌ ஆர‌ம்பித்த‌து.

சென்று க‌த‌வை திற‌ந்தேன். அதே சிறுவ‌ன், அதே சிரிப்புட‌ன். கொஞ்ச‌ம் கூட‌ அந்த‌ சிறுவ‌னின் செய்கை என‌க்கு எரிச்ச‌ல் ஊட்டாத‌து ஆச்ச‌ர்ய‌மாக‌ இருந்த‌து. அந்த‌ க‌ட்ட‌ங்க‌ளை எல்லாம் தாண்டி விட்டேனோ?

“லூசாடா நீ, ஏன் க‌த‌வை ஒடைக்கிற‌?” என்று மெதுவான‌ குர‌லில் கேட்டேன்.

“நீங்க‌தானே என்னை கூப்பிட்டிங்க‌, இப்ப‌ வ‌ந்திருக்கேன், க‌த‌வை மூடிகிட்டா எப்ப‌டி?” என்றான்.

குழ‌ப்ப‌த்துட‌ன் அவ‌னைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று சுற்றுப்புற‌த்தில் ஏதோ வித்தியாச‌மாக‌ தோன்ற‌ சுற்றிப் பார்த்தேன். அறை இருந்த‌ விடுதியின் ஐந்தாவ‌து மாடியில் ந‌ட‌ந்து (அ) நின்று கொண்டிருந்த‌ யாரும் என் அறையைப் பார்த்துக் கொண்டிருக்க‌வில்லை. அவ‌ன் க‌த‌வைத் த‌ட்டிய‌ ச‌த்த‌த்திற்கு இந்நேர‌ம் விடுதி உரிமையாள‌ரே வ‌ந்திருக்க‌ வேண்டும். ஆனால் யாரும் க‌வ‌னிக்க‌வில்லையே.. ஏன்?

“அவ‌ங்க‌ளுக்கு எல்லாம் நான் தெரிய‌ மாட்டேன், நான் பேசுற‌தும், க‌த‌வு த‌ட்டுற‌தும் உங்க‌ளுக்கு ம‌ட்டும்தான் கேக்கும். ஏன்னா நீங்க‌தானே என்னைக் கூப்பிட்டிங்க‌” என்றான் என் ம‌ன‌தைப் ப‌டித்த‌வ‌னாக‌.

அதிர்ச்சியில் ப‌டாரென்று க‌தவை மூடி தாழிட்டு அந்த‌ க‌த‌வின் மீதே சாய்ந்து நின்று கொண்டிருந்தேன். என் இத‌ய‌ம் அடித்துக் கொள்ளும் ச‌த்த‌ம் என‌க்கே கேட்ட‌து. ஒரே விநாடியில் மீண்டும் விய‌ர்த்து வியர்வை என் வெற்றுட‌ம்பில் பாம்பாய் ஊறிய‌து. சுவாச‌ம் பெருமூச்சாய் இய‌ங்கிக் கொண்டிருந்த‌து.

என்ன‌ ந‌ட‌க்கிற‌து இங்கே? அவ‌ன் சொல்வ‌து உண்மையா, இல்லை என்னை குழ‌ப்ப‌ யாரோ திட்ட‌மிட்டு வேலை செய்கிறார்க‌ளா? ஏன் என‌க்கு ம‌ட்டும் இப்ப‌டி எல்லாம் ந‌ட‌க்கிற‌து? கேள்விக‌ள், கேள்விக‌ள், கேள்விக‌ள்..

மீண்டும் க‌த‌வு த‌ட்ட‌ப்ப‌ட்ட‌து. ஆனால் இம்முறை ச‌த்த‌ம் அறையின் உள்ளிருந்து கேட்ட‌து. ப‌ய‌த்துட‌ன் திரும்பினேன். குளிய‌ல‌றைக் க‌த‌வில் இருந்து ச‌த்த‌ம் வ‌ந்த‌து. ந‌க‌ர‌ ம‌றுத்த‌ கால்களை மிக‌ பிர‌ய‌த்த‌ன‌ப்ப‌ட்டு ஒவ்வொரு அடியாக‌ எடுத்து வைத்து ந‌டுங்கும் க‌ர‌ங்க‌ளால் குளிய‌ல‌றையைத் திற‌ந்தேன். அவ‌னேதான் நின்றிருந்தான்.

“எப்ப‌டி சாகுற‌துன்னு குழ‌ப்பமா, வா, நான் உன்னை க‌ட்டி புடிச்சிக்குறேன், நீ செத்துடுவ‌” என்று கைக‌ளை நீட்டினான்.

அடுத்த‌ வினாடி, என் மூளை ச‌ட‌ ச‌ட‌வென‌ க‌ட்ட‌ளைக‌ள் பிற‌ப்பிக்க‌ திரும்பி அறைக்க‌த‌வுக்கு ஓடினேன். தாழ்ப்பாளை நீக்கி க‌த‌வைத் திற‌ந்து வெளியே பாய்ந்த‌வ‌ன், அப்படியே உறைந்து நின்றேன். அறைக்கு எதிரில் தூணில் சாய்ந்தவாறே அவ‌ன்தான்.

ஓட‌ ஆர‌ம்பித்தேன். அதோ எதிரில் அறைக‌ளுக்கு முன்னால் இருந்த‌ மாடி வ‌ராண்டா திரும்பும் இட‌த்தில் அவ‌ன். ச‌ட்டென்று முடிவெடுத்து இட‌துபுற‌ம் திரும்பி ப‌டிக்க‌ட்டுக‌ளை நோக்கி தாவினேன். கீழ் செல்லும் ப‌டிக்க‌ட்டில் அவ‌ன் நின்று கைக‌ளை நீட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். மேலேறும் ப‌டிக‌ளில் ஓட‌ ஆர‌ம்பித்தேன். ஆறாவ‌து மாடி தாண்டி ஏழாவ‌து மாடிக்கு செல்லும் ப‌டிக‌ளில், ப‌டிக்க‌ட்டுக‌ள் 180 டிகிரி திரும்பும் இட‌த்தில் அவ‌ன்.

இம்முறை அவ‌ன் ஓர‌மாக‌ நின்றிருக்க‌ கிடைத்த‌ ச‌ந்தில் புகுந்து மேலே ஓட‌ ஆர‌ம்பித்தேன். ஏழு மாடிக‌ளைத் தாண்டி மேலே மொட்டை மாடிக்கு வ‌ந்தேன். இத‌ற்கு மேலும் அறைக‌ளைக் க‌ட்டுகிறார்க‌ள் போலும். செங்க‌ற்க‌ள், ச‌ர‌ளை, ம‌ண‌ல், க‌ம்பிக‌ள் என்று மாடி முழுதும் இறைந்து கிட‌ந்த‌ன‌. என் உட‌லில் விய‌ர்வை ஆறாய் ஊற்றிக் கொண்டிருந்த‌து. என் தாடையில் இருந்து நான்கைந்து சொட்டுக‌ள் கீழே ம‌ண‌லில் விழுந்த‌ன‌. பின்னால் தொண்டையை க‌னைக்கும் குர‌ல் கேட்ட‌து.

திரும்பிப் பார்க்க‌ திராணிய‌ற்று ஓட‌ ஆர‌ம்பித்தேன். எங்கே செல்வ‌து, எதாவ‌து வ‌ழி கிடைக்காதா என்று இட‌மும் வ‌ல‌மும் தேடிய‌வாறு ஓடிக்கொண்டிருந்தேன். காலில் எதுவோ த‌ட்ட‌, த‌டுமாறி விழுந்த‌வ‌ன் சுதாரிப்ப‌த‌ற்குள் வ‌ந்த‌ வேக‌த்தில் தேய்த்துக் கொண்டு மாடியின் விளிம்பிற்கு வெளியே உருண்டேன்.

எழுப‌த்தைந்து அடிக்கு கீழே சாலையில் நின்றுகொண்டிருந்த‌ ப‌ச்சை நிற‌ நீள‌மான காரின் மைய‌ப்ப‌குதியை குறிவைத்து புவிஈர்ப்பு என்னை இழுத்துக் கொண்டிருந்த‌து. சிரிக்க‌ ஆர‌ம்பித்தேன் “டேய், உன்கிட்ட‌ இருந்து த‌ப்பிச்சிட்டேன்டா” என்று சொல்ல‌ நினைத்தேன். தூர‌ம் குறைய‌ குறைய‌ முக‌த்தில் அடித்த‌ காற்றின் வேக‌த்தால் க‌ண்க‌ளில் நீர் நிறைய‌ ஆர‌ம்பித்த‌து. அந்த‌ நிலையிலும் அந்த‌ காரின் மேல் எதுவோ இருப்ப‌துபோல் தோன்ற‌ உற்றுப் பார்த்தேன். அவன்தான்.. முக‌ம் நிறைய‌ புன்ன‌கையுட‌ன் கைக‌ளை விரித்துக் கொண்டு மேல்நோக்கி பார்த்த‌வாறு என்னை ஆர‌த்த‌ழுவ‌ காத்திருந்தான்.

நன்றி: ஜனவரி 15 – 31, 2011, அதீதம் இதழ்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *