பஸ் ஸ்டாண் டை நோக்கி விரைந்தேன். வியர்வையைக் கைகுட்டையால் துடைத்தபடி நெருங்கியபோது, அங்கிருந்து தாசாஹள்ளி செல்லும் தனியார் பஸ் புறப்படத் தயாராக இருந்தது. குளிர்ந்த காற்று வீசியபோதும் வெப்பத்தின் தகிப்பைத் தவிர்க்க முடியவில்லை.
ஜன்னல் ஓரமாக அமர்ந்திருந்த பயணி ஒருவரிடம் என்னுடைய கைப்பையை கொடுத்து வாங்கிக் கொள்ளும்படி சொன்னேன். இனி சிரமமில்லை ஏறி உள்ளே செல்லலாம். உள்ளே நடத்துநர் டிக்கெட் கொடுக்கும் மும்முரத்தில் இருந்தார்.
பின்பக்க கதவுக்கருகில் ஒருவன் மூன்று ஆடுகளைப் பின்னங் கால்களைத்தூக்கி ஒன்றன்பின் ஒன்றாக வலுக்கட்டாயமாக உள்ளே நுழைத்துக் கொண்டிருந்தான். கிராமப்புறங்களில் இது சாதாரணமான நிகழ்ச்சி. நகரங்களில் சந்தை நடக்கும் சமயங்களில் கிராமப்புறங்களில் இருந்து வரும் மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கும்போதுகூடவே கோழி, ஆடு போன்றவற்றையும் வாங்குவதுண்டு.
இவற்றைக் கொண்டு செல்ல தனியார் பஸ்கள்தான் வசதி. நெருக்கடியைப் பற்றியோ ஓவர்-லோடு பற்றியோ ஓட்டுநரும், நடத்துனரும் கண்டுகொள்ளமாட்டார்கள். அவர்களுக்கு இதனால் மேல்வரும்படி கிடைக்கும்.
தங்களுடைய லக்கேஜ்கள் பஸ்ஸிற்குள் பத்திரமாக இருந்தால் போதுமென்று உள்ளே திணித்துவிட்டு, பஸ்ஸின் மேற்கூரையில் பயணிகள் அமர்ந்து கொள்வது கிராமத்து பஸ்களில் சர்வசாதாரணமான நிகழ்ச்சியாகும்.
நானும் நெருக்கிக்கொண்டு ஏறினேன். என்னுடைய கைப்பையை வாங்கி சாமான்கள் வைக்கும் இடத்தில் கிடைத்த சிறிய இடைவெளிக்குள் நுழைத்தேன்.
நிற்பதற்குக் கூட இடமில்லை. சுற்றிலும் மூட்டை முடிச்சுகள். சில பெண்கள் குழந்தைகளை மடியில் கிடத்தி அமர்ந்திருந்தனர். கிராம மக்களுக்கே உரிய வெற்றிலைப் பாக்கு புகையிலை வாசனை. ஈரம் உலராத புடவைகள் வாசனை. ஒரு காலை தூக்கிக்கொண்டு நாரைபோல் மாற்றி மாற்றி நிற்கவேண்டியிருந்தது.
சிரா நகரத்திலிருந்து தாசாஹள்ளி 25 கி.மீ. தூரம்தான். ஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் சிராவிலிருந்தும் ஒரு பஸ் தாசாஹள்ளியிலிருந்தும் கிளம்பும். அந்த தடத்தில் ஓடும் எல்லா பஸ்களுக்கும் ஒருவரேதான் முதலாளி. அதேபோல் ஓட்டுநர், நடத்துநர், க்ளீனர் எல்லாம் பழக்கப்பட்டவர்கள். பாதி பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்கமாட்டார்கள். அரசுக்குச் சேர வேண்டிய தொகை பற்றியெல்லாம் அவர்களுக்குக் கவலை இல்லை. கிடைப்பதில் பாதி முதலாளிக்கும், ஓட்டுநர், நடத்துநர், க்ளீனர் போன்றவர்களுக்கும் சேர்ந்துவிடும். அதுவும் அவர்களது அன்றாட சாராய செலவுக்குச் சரியாகிவிடும்.
பஸ் கிளம்பியது. வெளியிலிருந்து வீசிய காற்று பஸ்ஸிற்குள் இருந்த புழுக்கத்தைத் தணித்தது. கம்பியைப் பிடித்தபடி நின்றுகொண்டிருந்த என் காதுகளில் ஒரு வயதான மூதாட்டியின் புலம்பல் கேட்டது.
“”ஒரு நிமிஷம்தாம்பா. தண்ணி குடிச்சிட்டு வரலாம்னு இறங்கினேன். அதுக்குள்ள பஸ் கௌம்பிடிச்சு. பஸ் பின்னாலேயே கத்தறேன், நிக்கவே இல்லை.”
“”இப்படி பொலம்புறதாலேயோ, அழுவறதாலேயோ என்ன ஆகப்போகுது? எதுக்காக பையை பஸ்ஸிலே வெச்சிட்டு இறங்கினே?” பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்மணி வாயில் வெற்றிலையைக் குதப்பியபடி சாவகாசமாகக் கேட்டாள்.
“”நான் என்ன வேணும்னா போனேன்? தாகம் நாவை வறட்டுது. இந்த வெயில் கொடுமையிலே தண்ணி குடிக்கலைன்னா இன்னும் வறண்டில்ல போகும்? ஒரு அடையாளத்திற்காக நம்ம பொருளை வெக்கலைன்னா சீட் போயிடுமே? இந்த தள்ளாத வயதிலே நின்னுகிட்டு வர முடியுமா? சொல்லு தாயி?” கிழவி கேட்டாள்.
“”அப்படியென்ன பெரிய சொத்தை அந்தப் பையில் வெச்சிருந்தே?” இன்னொருவர் கேட்டார்.
“”நாங்க ஏழைங்க சாமி! என்ன பணம்? என்ன சொத்து இருக்கப் போகுது? எட்டணா முறுக்கு, நாலணா பொம்மைங்க மூணு, ஒரு கிலோ மாம்பழம், ஒரு கட்டு வெற்றிலை, கொஞ்சம் புகையிலை, பாக்கு இதான்சாமி அந்தப் பையிலே வெச்சிருந்தேன்.”
விவரம் கேட்டவர் ஏதோ பெரிதாக எதிர்பார்த்தார் போலிருக்கிறது. “”சே! இதைத்தான் பையிலே வெச்சிருந்தியா?” வெறுப்புடன் முகத்தைக் திருப்பிக் கொண்டார்.
அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு என்ன நடந்திருக்குமென்பது புரிந்தது. ஒரு மணி நேரத்திற்கு முன்பு புறப்பட்ட பஸ்ஸில் அந்தக் கிழவி ஏறி அமர்ந்திருக்கிறாள். புறப்படுவதற்கு முன்பு தாகமெடுக்கவே பையை இருக்கையில் வைத்துவிட்டு தண்ணீர் குடிக்க கீழே இறங்கியிருக்கிறாள். வருவதற்குள் பஸ் கிளம்பிவிட்டது. அந்தப் பை மட்டும் தாசாஹள்ளிக்குப் போய்விட்டது. பஸ்ஸிற்குப் பின்னால் கூவியபடியே ஓடியிருக்கிறாள். யாருமே இவளைக் கவனிக்கவில்லை. பஸ் போய்விட்டது.
“”எப்படியும் அதே பஸ் திரும்பவும் இப்ப எதிரில் வருமில்ல? இங்கேயிருந்து ஒரு பஸ் கௌம்பறச்ச எதிர் பக்கத்திலும் ஒரு பஸ் வர்றது வழக்கம்தானே?” பஸ் பயணிகளில் ஒருவர் சொன்னார். “”வேணும்னா டிரைவர் கிட்ட சொல்லி பஸ்ûஸ நிறுத்திக் கேட்கலாம். இதோ பாரும்மா, உன்னோட ஆஸ்தி எங்கேயும் போயிடாது. திரும்பவும் கெடைக்கும். பொலம்பறதைக் கொஞ்சம் நிறுத்து.”
பஸ் முழுக்க எல்லோரும் இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஓட்டுநருக்குப் பின்னால் அமர்ந்திருந்த பயணி ஒருவர், “”டிரைவர் சார், எதிரே வர்ற நம்ம பஸ்ûஸ நிறுத்தி ஏதாவது பை அந்தப் பஸ்ஸில் கெடச்சுதான்னு அந்தப் பஸ் டிரைவரிடம் கேளுங்க!” என்று அதிகாரத் தோரணையில் சொன்னார்.
“”என்ன சொல்றீங்க நீங்க? சாப்பிடுகிற பொருளை வெச்சிருக்கிற பையை எவனாவது விடுவானா?” மறுப்பது போல் அவருக்கு எதிரே அமர்ந்திருந்த பெண்மணி கேட்டாள். பார்வைக்கு நகரத்துப் பெண்மணிபோல் இருந்தாள். இதைக் கேட்டதும் கிழவியின் கண்களில் நீர் கோர்த்தது. முகத்தில் லேசான கவலை படர்ந்தது.
“”எத்தனையோ கஷ்டத்துக்கு நடுவே பழங்களையும் முறுக்கையும் என்னோட பேரக் குழந்தைகளுக்காக வாங்கினேன் தாயி” அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை.
அவளைப் பொறுத்தவரை ஒரு கிலோ மாம்பழம் என்பது விலை மதிப்பற்ற பொருள்தான் என்று நினைத்துக் கொண்டேன். எனக்கு முன் நின்றிருந்தவர் வசதியானவர் போல் தோன்றினார். என்னைப் போலவே கம்பியைப் பிடித்தபடி அவரும் நின்றுகொண்டிருந்தார். என்னைப் பார்த்து, “”பாருங்க சார் அந்த மாம்பழம் என்ன முப்பது ரூபா இருக்குமா? சரியான தொல்லை பிடிச்ச கிழவியா இருப்பா போலிருக்கே? இங்கே பஸ்ஸில் நான் எத்தனை தடவை பிக்பாக்கெட்ல ஆயிரக்கணக்கில் ரூபாய்களைத் தொலைத்திருக்கிறேன் தெரியுமா? என்னதான் ஜாக்கிரதையாக இருந்தாலும் அடிச்சிடறாங்க. ஆனா நான் அதை வெளியில் சொல்லிக்கிறதில்லை”என்றார்.
அவர் அப்படிப் பேசியது சரியல்ல என்று தோன்றியது. அவர் பேசியது பற்றி அந்தக் கிழவியும் கவலைப்படவில்லை. முகத்தில் சோகம் குறையாமல் சொன்னாள், “”எங்களப் பொறுத்தவரை அந்த ரூவா ஆயிரம் ரூவாக்குச் சமம். தெரியுமா?”
இந்த வித்தியாசமான வாதங்கள் என் இதயத்தைத் தாக்கியது. “”அந்த ஐயா சொன்ன மாதிரி எதிரே வர்ற பஸ்ûஸ நிறுத்தி அந்த டிரைவர்கிட்டே கேட்கச் சொல்லுங்கப்பா” ஏற்கெனவே இதுபற்றி டிரைவரிடம் சொல்லியிருந்த முன்பக்கத்து பயணியிடம் அந்தக் கிழவி கெஞ்சினாள்.
இது போன்ற ஏக்கத்தையும், சோகத்தையும் கொண்ட கண்களை இதுவரை நான் யார் முகத்திலும் பார்த்தில்லை. “”கண்டிப்பா கிடைக்கும் பாட்டி” என்று சொல்லியவர் பக்கத்திலிருந்தவரிடம் சுவாரசியமாக பேச ஆரம்பித்தார். பஸ்ஸில் இருந்த இட நெருக்கடியையும் மறந்து ஒவ்வொருவருமே தாங்கள் தொலைத்த பொருட்களையும் அனுபவங்களையும் பரிமாறிக் கொள்ளத் தொடங்கினர்.
“”போன தடவை சந்தையிலே எருமை மாட்டை வித்துட்டு…எல்லாம் புதுநோட்டு…நாலாயிரத்து சொச்சம்…இப்படித்தான் பையில வெச்சு சீட் பக்கத்திலேயே வெச்சிருந்தேன். ஒண்ணுக்குப் போயிட்டு வரலாம்னு இறங்கறேன், பஸ் கௌம்பிடிச்சு. வேட்டியெல்லாம் ஈரம். அடிச்சு பிடிச்சு ஓடி வர்றேன், பஸ் நிக்கவே இல்லை.”
“”அப்புறம்?”
“”அப்புறம் என்ன? போனது போச்சு. கெடைக்கவே இல்லை.”
இன்னொருத்தி ஆரம்பித்தாள். “”இப்படித்தான் ஒரு தடவை தாசாஹள்ளி சந்தையிலே இருநூறுவா மதிப்புள்ள துணிகளை வாங்கி மூட்டை கட்டி எடுத்துட்டு வந்தேன். இதே மாதிரிதான் சீட் கீழே வெச்சுட்டு தொலைச்சிட்டேன். கிடைக்கவே இல்லை.”
ஒவ்வொருவர் கதையும் கிழவியின் நம்பிக்கையைத் தகர்ப்பது போலிருந்தது. கிழவியின் முன் நெற்றியில் இருந்த சுருக்கெல்லாம் சிறுத்து கண்களும் கவலையைப் பிரதிபலித்தன.
சில பயணிகள், “போனது போனதுதான்’ என்று உறுதியாகச் சொன்னாலும் சிலர் மட்டும் கிழவிக்கு நம்பிக்கையூட்டும் வகையில் ஆறுதல் சொன்னார்கள். பஸ் போய்க் கொண்டிருந்தது. மேலும் சிலர் நடத்துநரிடமும் எதிர் வரும் பஸ்ûஸ நிறுத்தச் சொல்லிக் கேட்டுக்கொண்டனர்.
இன்றைய தினத்தில் ஒரு கிலோ மாம்பழத்தின் விலை ஏழைகளைப் பொறுத்தவரை, விலை மதிப்பற்றது என்பதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். மூதாட்டியின் கண்களில் தெரிந்த கனிவு அந்த மாம்பழங்கள் மூலம் இழந்திருப்பதுபோல் தோன்றியது. அந்தத் தேடல் என் மனக் கண்ணில் காட்சியாக படிந்தது. வாசற்படியில் தெரிந்த பாட்டியின் உருவத்தைப் பார்த்ததும் குழந்தைகள் ஓடி வந்து “”பாட்டி வந்துட்டா!”என்று குதூகலத்துடன் சுற்றி வளைக்கின்றனர். “”பாட்டி என்ன வாங்கி
வந்திருக்கே?” என்று கேட்டபடியே அவள் கையிலிருந்த பையை பிடுங்குகிறார்கள். “”ஆ மாம்பழம்! இதோ எனக்கு பொம்மை!” என சந்தோஷத்துடன் கூக்குரலிட்டபடி ஆளுக்கொன்றாக எடுத்துக் கொள்வதைப் பார்த்த கிழவியின் முகம் சந்தோஷத்தால் மலர்கிறது. ஆனால் நடக்கப் போவது என்ன? அந்தக் கிழவியின் முகத்தில் குடியிருக்கும் சோகத்தை குழந்தைகளால் உணர முடியுமா? எந்த நேரத்திலும் கண்களிலிருந்து தெறித்து விழக் காத்திருக்கும் கண்ணீரும், பேச முடியாமல் தவிக்கும் அவரது உதடுகளும் மொத்த சந்தோஷமும் இந்த உலகத்தைவிட்டே போய்விட்டதுபோல் உணர்த்தியது. இதை உணராமல் அந்தக் குழந்தைகள் அவளை நச்சரித்தபடி,””பாட்டி என்ன வாங்கி வந்திருக்கே?” என்று ஏக்கத்துடன் கேட்கும் குரல்கள் என்னுடைய காதுகளில் ஒலித்தன.
திடீரென பிரேக் பிடித்த பஸ் குலுங்கலுடன் நின்றது. என்னுடைய சிந்தனைகளும் கலைந்தன. எதிரே சற்று இடைவெளிவிட்டு இன்னொரு பஸ் நிற்பது தெரிந்தது. அனைவரது பார்வையும் அந்தப் பஸ் மீது பதிந்தது. “”ஐயா…ஐயா! தயவுசெஞ்சு அந்த டிரைவர் ஐயாவிடம் கேளுங்க…”கிழவி பரபரத்தாள். ஜன்னல் வெளியே தலையை நீட்டி வெளியே பார்த்தாள்.
எங்கள் பஸ் டிரைவர் எதிர்புறத்தில் இரண்டடி தள்ளி நின்ற பஸ் ஓட்டுநரை பார்த்துக் கேட்டார்,””ஏம்பா…கிருஷ்ணா, உன்னோட பஸ்ல ஏதாவது பையை பார்த்தியா?”
ஒரு விநாடி பஸ் முழுக்க அமைதி. அவர் சொல்லப்போகும் பதிலில்தான் அந்தக் கிழவியின் எதிர்பார்ப்பு அடங்கியிருப்பதுபோல் தோன்றியது. அனைவரும் ஆவலோடு பார்த்தனர். அந்தப் பஸ் டிரைவர் என்ன சொன்னார் என்பது எங்கள் காதுகளில் விழவில்லை. ஆனால் ஓர் ஆள் மட்டும் கையில் ஓர் அழுக்கான பையைத் தூக்கிப் பிடித்தபடி அந்தப் பஸ்ஸில் இருந்து இறங்கி எங்கள் பஸ்ûஸ நோக்கி வருவது தெரிந்தது. “”இங்கே பாருங்க, இது யாரோட பை?” என்று உரத்தக் குரலில் கேட்டான்.
அந்தக் கிழவி வெளியே விழுந்துவிடுவதுபோல் ஜன்னலுக்குள் தன்னுடைய தளர்ந்த உடம்பை நுழைத்து இருகைகளையும் நீட்டிச் சொன்னாள்.
“”என்னோடதுதான் சாமி!”
– அ.குமார் (அக்டோபர் 2011)