கத்திரி வெயில் மண்டடையை பிளந்து கொண்டிருந்தது. அனல் வீசுவதைத் தாங்க முடியாமல் பல வகையான நவீன வசதிகள் இருந்தும் மனிதர்களே முடங்கி கிடைக்கையில், பாவம்……. தெருநாயால் என்ன செய்ய இயலும்? வேலிகாத்தான் புதர்கள் மட்டுமே அங்காங்கே பசுமையாய் காட்சி அளித்தது. அப்படியான ஒரு புதரின் அடியில் சிறிய குழியைத் தோண்டி தனது தற்காலிக வீட்டின் குளிர்ச்சியில் அந்த நாய் பகல் முழுவதும் உறங்கி கிடந்தது.
ஆனால் புதிய ரயில் தண்டவாளங்களைப் போடுவதற்கு குழந்தைக் குட்டிகளுடன் ஆண்கள், பெண்கள் அனைவரும் குடும்பத்துடன் அந்த வேகாத வெயிலிலும் நாள் முழுவதும் நாயாய் உழைத்துக் கொண்டு இருப்பதை அந்த நாய் அதிசயமாய் வைத்தக்க் கண் வைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தது.
தனது கோடை விழாவில் ஒவ்வொரு நாளின் நிறைவையும் கதிரவன் வித விதமான விதத்தில் கொண்டாடிக் கொண்டு இருந்தது. தனது ஒளி கரங்களால் பல வண்ணங்களின் கலவைகள் இழைத்து குழைத்து ஒளி ஒவியங்களை ஒவ்வொரு நொடியிலும் புதிது புதிதாக தீட்டி மகிழ்ந்து கொண்டாடி மறைந்தது. தெருநாய் மெல்ல வெளியே வந்து முன்னங்கால்களை நீட்டி முதுகை நிமிர்த்தி சோம்பலை கொட்டி முறித்தது. பழுத்த பழமாய் விழுந்து கொண்டிருக்கும் சூரியனை நோக்கி வள்……வள்ள்ளெ என்று எரிச்சலுடன் குரைத்தது. அங்கே பெரிய ஒளிரும் கருமேகத்திட்டு ஒன்று இரைக்காகப் பாய்ந்தோடும் நாயாய் மாறி இறைச்சித் துண்டாய் தெரிந்தச் சிகப்புச் சூரியனை விழுக்க பாய்ந்துக் கொண்டு இருப்பதை அது பார்த்திருக்கிறது.
எதிரே இருந்த தாம்பரம் இரயில் நிலையத்தின் எட்டாவது நடை மேடைக்கு தெருநாய் தாவியது. அங்கும் இங்கும் அலைந்து திரிந்தது. பசிக்கு ஏதாவது கிடைக்குமா என்று ஒடி ஒடிப் பார்த்தது. வெளியூர் பயணிப்பவர்கள் மிகச் சிலரே வந்து இருந்தனர். அவர்கள் உணவு பொட்டலங்களை சாப்பிட்டு விட்டு எறியும் எச்சில் உணவுக்காகத்தான் இப்படி அலைந்தது. ஆனால் அவர்களும் பிரித்து சாப்பிடுவதாக தெரியவில்லை. பொழுது போக்கிற்காக சிலர் வாங்கி கொறித்த வேர்க்கடலைகளில் சிதறிய சிலதுகள் மட்டும் நாய்க்குக் கிடைத்தது. இந்த நாயைப் போன்று இன்னொன்றும் பசியில் அங்கு அலைந்து கொண்டிருந்தது. ஒன்றைப் பார்த்து ஒன்று பொறமையில் வள்ளென்று முறைத்துக் கொண்டன.
நம்ம நாய் ரயில் தண்டவரளங்களை தாண்டி குதித்து மனம்போனப் போக்கில் ஒடி கொண்டிருந்தது. எங்கிருந்தோ சமைத்த இறைச்சியின் நல்மணம் காற்றில் கரைந்து பரவி அதன் மூக்கில் சொட்டு சொட்டாய் வியர்த்தது. சிவப்பு செங்கற்களாலான ஒரு கட்டிடத்தில் இருந்து அந்த வாசனை வந்ததைக் கண்டது. அந்த கட்டிடத்தை கண்டதும் தயங்கி நின்றது. மனிதர்களே அந்தக் கட்டதையும் அதிலுள்ள மனிதர்கள் பற்றி ஒரு மாதிரியாக பயத்துடன் பேசுகிறார்கள். பசிக்கானப் போராட்டத்தை சட்டம்-ஒழுங்கு கலவரமாய் மாற்றும் இரசவித்தைகள் கற்ற மந்திரவாதிகள் அதில் வசிப்பதாக வதந்திகள் அந்த நாய் கேள்விபட்டு இருந்தது. நாய்ப் பிறவி அதுவும் கேவலமான தெருநாய்….. அது அச்சம் கொள்வது யதார்த்தம்தானே!
பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பார்கள். அச்சமும் அதில் அடக்கம் அல்லவா?
அந்த போலிஸ் கட்டித்தை அந்த நாய் நெருங்கியது. அதினுள் இருந்த உருவத்தை கண்டு மிரண்டது. கன்று குட்டி அளவிற்கு கொழுத்த போலிஸ் நாய் இறைச்சியைப் புசித்து கொண்டு இருந்தது. உயர்ந்த சாதியோகவோ, வெளிநாட்டு சாதியோகவோ அல்லது இரண்டும் கலந்த ரகமாகவோகவோ அந்த நாய் இருக்கும். அதிகாரமும் ஆதிக்கமும் வன்மும் அதன் கண்களில் மட்டும் அல்ல அதன் உடல் முழுக்க வழிந்துக் கொண்டு இருந்தது. நீளமான குண்டாந்தடிகள் வாசலில் பயப்படும்படியாக நிறுத்து வைக்கப்பட்டு இருந்தன.
ஏ.சி. அறையில் மதியம் உணவிற்கு பின்பு சுகமாய் குட்டி தூக்கம் போட்ட உற்சாகத்தில் போலிஸ்நாய் இருந்தது. மாலையில் குடிப்பதற்கு எலும்பு சூப் பளபளக்கும் எவர்சில்வர் குவளையில் ஊற்றப்பட்டு இருந்தது. பிரித்து வைக்கப்பட்டிருந்த உயர்க பிஸ்கெட்டின் மேட்டுகுடி மணம் எல்லாரையும் வா வா என்று அழைத்தது. பெரிய நாக்கை சுழற்றி போலிஸ் நாய் சப்பு கொட்டி குடித்தது.
தனது சின்ன நாக்கை தொங்கப் போட்டப்படி ஏக்கத்துடன் தெருநாய் அதை வாசலில் நின்றபடி முறைத்துப் பார்த்து கொண்டு இருந்தது. அதன் நாக்கில் ஜொல் வடிந்துக் கொண்டே இருந்தது.. அதை கவனித்து விட்டது போலிஸ்நாய். முகத்தை கொடூரமாக்கி பெரிய நாக்கை எரிச்சிலிலும், கோபத்திலும் இன்றும் நீளமாக நீட்டி உர்ர்ர்ர்…. என்று உறுமியது. பயந்த போய் தெருநாய் கப்பென்று வாயை மூடிக் கொண்டு வாலைச் சுருட்டிக் கொண்டது..
அதன் பணியாளனான போலிஸ்காரன் பளபளக்கும் அதன் மேனியை சிறப்பு உபகரணங்களினால் நன்றாக நீவி விட்டுக் கொண்டு இருந்தான். நல்ல சொகுசில் போலிஸ் நாய் சொர்க்கத்தில் மிதந்தவாறு கிடத்தது. பின். நடு முதுகை நிமிர்ந்தி விடைத்து திமிர் விட்டது.
அப்பொழுது பயங்கரவாத பூச்சாண்டி தொலைப்பேசியில் மணி ஒலித்தது. அதை தெரடர்ந்து அந்த ரயில் நிலையம் பரபரப்பாகியது!
“காமாண்டர்….பாஸ்ட்..ரெடி பார் சர்ச்” என்று காச்மூச்சென இங்கிலீசில் அதற்குக் கட்டளைகளை இட்டு கொண்டு காவலர்கள் போலிஸ் நாயுடன் விரைந்தனர். போகும் பொழுது அவர்கள் பூட்டு காலால் பசியுடன் நாக்கைத் தொங்கப் போட்டுக் கிடந்த நாயை எட்டி உதைத்தனர். ஆலமரம் விழும் பொழுது சிறிய செடிகள் எல்லாம் மிதிப்பட்டு அழிக்கப்படுவது தவிர்க்க இயலாது என்று திருவாய் மலர்ந்த டில்லி எசமானின் ஏவல்காரர்களுக்கு இது ஒன்றும் பெரியதாகத் தெரியவில்லை. நடைமேடையில் இருந்து தண்டவாளத்தில் விழுந்த தெருநாய் உயிர்போகும் வலியில் தீனமாய் அலறி துடித்தது. குரைத்து கொண்டு வலியில் தள்ளாடியவாறு ஒடியது. இந்த நாயின் அலறல் கேட்டு அங்காங்கு இருந்த நாய்கள் தோழமையுடன் குரைத்தன. அவை ஒருவிதமான ஆறுதலையும். பாதுகாப்புணர்வையும் தெருநாய்க்குத் தந்தது.
அடுத்தடுத்து வந்த இரு ரயில்களின் பெட்டிகள் தேடுதல் வேட்டைக்கு உள்ளாகின, போலிஸ் நாயும் பெட்டிபெட்டியாய் தாவி குதித்து மோப்பம் பிடித்து அலைந்தது. சோற்று மூட்டைகள், பிஸ்கேட் பாகெட்டுகள் வாசனை திரவியங்களின் வாசனைகள் அங்கிருந்த மூட்டை முடிச்சிகளில், பெட்டிகளில் கொட்டி கிடந்தன. வெடிகுண்டுகளில் மருந்து வாசனை எதும் மூக்கில் நாறவில்லை அலைச்சலும் தவிப்பும் தான் மிச்சமாகின. ஒய்ந்து போய் நடைமேடையில் இருந்த போலிஸ் பூத் அருகில் போலிஸ் நாயுடன் ரயில்வே போலிசார் காத்திருந்தனர்.
நடைமேடையில் பயணிகள் குவியத் தொடங்கினர். சிலர் தாங்கள் கொண்டு வந்த உணவுபொட்டலங்களை பிரித்து உண்டனர். எஞ்சிய உணவை காகிதத்துடன் மடித்து வீசினர். அதற்காக காத்திருந்த தெருநாய்கள் அவைகளை உண்ண ஆளாய் பரந்தன. சின்ன சச்சரவுகள், குரைப்புகள் இருப்பினும் அவைகள் தங்களுக்குள் பகிர்ந்து உண்டன. தெரு நாயிற்கு இருந்த கொடிய பசி நோய் தற்காலிகமாக தீர்ந்தது. அது மகிழ்ச்சியுடன் ஒடியாடி விளையாடி திரிந்துக் கொண்டு இருந்தது.
போலிஸ் நாய் உர்….உரர்…என்று அதை பார்த்து முறைத்து கொண்டிருந்தது. தனக்கு அதிகாரத்திற்கு உட்பட்ட இடத்தில் தான் சுதந்திரமாக திரிய முடியவில்லை…. அவைகள் சுதந்திரமாக திரிகின்றன என்ன எரிச்சல், கவலை, ஆதங்கம் அதில் இருந்தது தெரிந்தது.
பயணியை வழி அனுப்ப வந்த ஒரு குடும்பத்தினருடன் பொமரேனியன் பெட்டை நாய் ஒய்யார நடை போட்டு வந்தது. காத்திருந்த நேரத்தில் சிறுவர்கள் அதனுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த அற்புத கணத்தில் போலிஸ் நாயும் பெட்டை நாயும் ஒன்றென்றை ஒன்று பார்த்தன அண்ணலும் நோக்கினன் அவளும் நோக்கினாள் கதையாகி போனது. ஆசையும் காமமும் அங்கு ஜொள்ளாய் வடித்து ஆறாய் ஒடியது.
இரண்டும் காதலால் கசிந்துருகி முணகியது. தின்று திணவெடுத்து கிடந்த போலிஸ் நாயின் உடம்பு முறுகிகேறி விரைத்தது. காவலர்களுடன் இணைக்கப்பட்ட சங்கிலி இல்லைமெனில் பாய்ந்து அந்த இடத்திலேயே குதறி இருக்கும். எசமானனுக்கு உள்ள இந்த சுதந்திரம் ஏவல் நாய்களுக்கு பல சமயங்களில் இருப்பதில்லை.
“இது வெற தொல்லை” என்று முணுமுணுத்துக் கொண்டே காவலர்கள் அதை பலவந்தமாய் இழுந்து கொண்டு போய் பூத்திற்குள் அடைந்தனர். மீண்டும் ரயில் வந்ததும் பரபரப்புடன் நாயை இழுத்துக் கொண்டு பெட்டிகளில் ஏறி இறக்கினர்
கண்ணில் பட்டும் கையாலாக எரிச்சலுடன் ஒடிய அந்த போலிஸ் நாயின் மூக்கில் வெடிமருந்து வாசனை எக்குத்தப்பாய் பற்றி எரிந்தது. அது வெறியிடன் பாய்ந்து ஒரு சிறுவன் தோளில் மாட்டி இருந்த பையைக் கவ்வி இழுத்தது. பயத்தில் அந்த சிறுவன் அலறி கொண்டு பையை மேலும் இறுகப் பற்றிக் கொண்டான். எங்கோ காட்ட வேண்டிய வெறியை, ஆத்திரத்தை அந்தச் சிறுவனிடம் அந்த போலிஸ் காண்பித்தது. குதறப்பட்ட சிறுவன் கையிலிருந்து இரத்தம் குபுகுபுவென கொட்டியது. போலிஸ் விசில்கள் பறந்தன்ன. சைரன்கள் ஒலித்தன…. கண் இமைக்கும் நேரத்தில் இசட் பிரிவு.. கியூபிரிவு..சிறப்பு பிரிவு… உளவு பிரிவு…பறக்கும் படை ….. என்று பல படைகள் படைபடையாய் கிளம்பி வந்தன.
அந்த ரயில் நிலையம் போலிஸ் வலையத்திற்குள் உடனடியாய் வந்தது. சிறிது நேரம் பரபரப்பிற்குள் அது ஒன்றுமில்லாத புஸ்வானமாகி சந்திச் சிரித்தது. அந்த சிறுவன் தீபாவளிக்கு வெடித்தது போக மீதி இருந்ததை தனது பாட்டிக்கு காட்டுவதற்க்கா பெற்றோருக்குத் தெரியாமல் பையில் எடுத்து கொண்டுவந்து விட்டான். இந்த கலேபரத்திற்கு காரணமான போலிஸ் நாயை அனைவரும் திட்டி தீர்த்தனர். அதற்கும் அவைகள் ஒரளவு புரிந்ததால் அது நொந்து நூலானது..
தரதரவென அதை இழுத்து கொண்டு போய் பூத்தின் உள்ளே பூட்டி வைத்தனர். ஆசுவாசப்படுத்தி கொண்டு அது வெளியே மெதுவாக எட்டி பார்த்தது. அதற்கு அதிர்ச்சியில் மூச்சே நின்று விட்டது.
தெருநாயுடன் பொமரேனியன் நாய் கொஞ்சி குலாவிக் குழைந்து கொண்டிருந்தது. முன்னங்கால்களை, பின்னங்கால்களை இரு புறங்களும் வாகாய் நீட்டி தவழ்ந்து தவழ்ந்து ஒருவாறு மகிழ்ச்சியில் முணகியது. அதேபோல் தெருநாயும் முணகியவாறு நகர்ந்து பொமரேனியனை உரசி முத்தமிட்டது, பொமரேனியனும் அதை காதலாகி கசிந்து முத்தமிட்டது. நடந்த முடிந்த களேபரத்திற்குள் இப்படி ஒரு காதல் கோட்டை எழுப்பப்படுமென யாரும் எந்த நாயும் எதிர்பார்க்க வாய்பில்லை.
அதிலும் போலிஸ்நாய் எதிர்பார்க்கவில்லை. வயிற்றெச்சலில் அதன் உடலொங்கும் பற்றி எரிந்தது. ஆத்திரத்தில் அதன் நரம்ம்புகள் புடைத்தன. அதனால் உணர்ச்சிகள் கட்டுப்படுத்த முடியாமல் போனது. வயிறு முட்ட சாப்பிட்டு சிறிது ஒய்வு பின்பு ஒதுக்கு புறமாய் செல்வதெல்லாம் மிகவும் நிதானமாக நடைபெறும். ஆனால், இன்று அனைத்தும் துரிதமாக நடை பெற்றதால் போலிஸ் நாயிற்கு அடக்கி வைக்கப்பட்ட சிறுநீர் கழிக்கும் உணர்வு மேலிட்டது. நிமிடத்திற்கு நிமிட அது அதிகமாகியது. இங்குமெங்கும் அலை பாய்ந்தது. வயிறு உப்பியது. சங்கிலியுடன் பிணைக்கப்பட்டு இருந்தால் அது பரிதாபகரமாய் ஊளை இட்டது. அதன் எசமானர்களுக்கு அதன் அவஸ்தை புரிந்தாலும் அவர்கள் அங்கு நின்று கொண்டிருந்ததை மிக பெரிய எசமானர்களுக்கு, அவர்களின் மெமோக்களுக்கும், திட்டுகளுக்கும் பயந்தார்கள். விரைப்புடன் நின்று கொண்டிருந்த அவர்கள் தங்கள் அதிகாரிகளைப் பார்த்து திருதிருவென முழித்தனர்.
“அதற்கு இப்பவே அழைத்து கொண்டு செல்வது அவசியமோ?” என்று அந்த அதிகாரிகள் நக்கலடித்தார்கள்.
ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்க இயலாது என்ற எளிய முதுமொழியை இந்த மனிதர்களுக்கு எப்படி புரிய வைப்பது அந்த நாயுக்கு தெரியவில்லை.
தங்களின் உறவினரை வழி அனுப்பிவிட்டு அந்த குடும்பம் கிளம்பியது. தெருநாய்-பொமரேனியனின் காதல் கோட்டை கலைந்து அவைகள் நிகழ்காலத்திற்கு வந்தன. பெட்டைநாய் காதல் பார்வை வீசியவாறு பிரியா விடை பெற்றது. தனக்கு சொர்க்கததைக் காட்டிய தெருநாயிற்கு வாலையாட்டி பொமரேனியன் நன்றி தெரிவித்தது. மகிழ்ச்சியில் தெருநாய் துள்ளி குதித்து தனது வாலை பலமாக ஆட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.
இதை கண்ட போலிஸ் நாயிற்கு எரிச்சல் தலைக்கு எகிறியது. ஆத்திரத்தில் என்ன செய்யவாதென புரியாமல் கட்டியிருந்த சங்கிலியை கடித்து, பிடித்து இழுத்தது. என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் காவலர்கள் விசாரணை இன்றி அதைப் போலிஸ் பூத்திற்கு கொண்டு சென்று அடைந்தனர். இன்னும் அதற்கு இன்னும் கோபமும் இயலாமையும் அதிகமாகியது. தரையிலும் சுவரிலும் சிறுநீர் புஸ்க் புஸ்க்கான கழித்தது.
அதை கண்ட போலிஸ்காரர்களுக்கு பொத்துக் கொண்டு கோபம் வந்தது. “இந்த நாயிற்கு.. இவ்வளவு திமிரா?” என்று குண்டாந்தடியால் நாலு அடிகள் போட்டனர். அந்த நாயின் அலறல் நீண்ட தூரம் கேட்டது.
கிழக்கு வானில் சித்திரை நிலவு மேலெழுந்து குளிர்ந்த ஒளிக்கீற்றுகளை இரயிவே திடல் முழுவதும் மெல்ல வீசி எறிந்தது. புல் பூண்டுகள் புதர்கள் தண்டவாளங்கள், நாய்கள் என்று அனைத்தும் புத்தொளியில் முழுகி புது பொலிவை பிரதிபலித்தன. அதில் தெருநாய் தனது நண்பர்களுடன் கும்மாளமிட்டு கட்டிபுரண்டு விளையாடிக் கொண்டிருந்தது. உச்சகட்ட மகிழ்ச்சியில் அந்த நாய்கள் நிலவை நோக்கி ஒற்றைக் காலை தூக்கின.
அதை மன உளச்சலுடனும் ஏக்கத்துடன் போலிஸ்நாய் பார்த்துக் கொண்டிருந்தது. அந்த நேரம் ஒரு மனிதனை சீருடை அணிந்த இருவர் சங்கிலியால் விலங்கிட்டு இழுத்து கொண்டு செல்வதை போலிஸ் பூத்தில் அடைப்பட்டு கிடந்த அந்த நாய் கவனித்தது. விலங்கிடப்பட்ட அவன் கையில் ஒரு சோற்றுப் பொட்டலம் இருந்தது. அவன் கூனிகுறுகி அவமானத்துடன் மனதிற்குள் குமைவதை அவனின் இறுகிய தோய்ந்த முகம் காட்டியது. மனிதர்கள் ஏன் இப்படி கேவலமாய் இருக்கிறார்கள் என்று அந்த போலிஸ் நாய் சிந்தித்து கொண்டிருந்தது!