தெய்வீகக் குழந்தை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 3, 2021
பார்வையிட்டோர்: 3,047 
 

அன்று திங்கட்கிழமையாதலால் நீதிமன்றத்தில் நல்ல கூட்டம்.

வாய்தாவுக்கு வந்திருந்த அனைவருமே கும்பலாக நீதிமன்றத்தில் குழுமியிருந்தார்கள்.

நானும் ஒரு வாய்தாவுக்கு ஆஜராகத்தான் அன்று போயிருந்தேன்.  நீதி மன்றத்தின் உள்ளே கூட்டத்தோடு கூட்டமாக காத்திருந்தேன்.

காத்திருந்த போதுதான்,  கூட்டம் பரபரப்பாக இருப்பதைப் பார்த்து,  அதிகக் கூட்டம் அன்று மட்டும் ஏன் என்று சிலரிடம் நான் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.  அதாவது அன்று அந்தக் கோர்ட் மூலம் ஒரு பெண் குழந்தையை சட்ட முறைப்படி அதன் பெற்றோர்களிடம் நீதிபதி ஒப்படைக்கப் போகிறாராம்… இரண்டு நாட்களாக லோக்கல் செய்தித் தாள்களில் இதுதான் சுவாரசியமான சங்கதியாம்.

நான் அங்கிருந்த சிலரிடம் பேசிப் புரிந்து கொண்டது இதுதான்…

அதாவது நெல்லையில் ஒரு பெண்ணை ஒரு இளைஞன் கேலி செய்கிறான். அந்தப் பெண்ணின் அக்காள் மாப்பிள்ளை அந்த இளைஞனை, அவனுடைய நண்பர்களை வைத்துக் கொண்டே மிகக் கடுமையான வார்த்தைகளால் கண்டிக்கிறார்.

அதுவே இளைஞனின் மனசில் வன்மம் குடியேறி பழிவாங்கும் வெறியாக மாறுகிறது.  கோபத்தில் தன்னைக் கண்டித்தவரின் மூன்று வயசுப் பெண் குழந்தையை அந்த இளைஞன் கடத்திச் சென்று விடுகிறான்.

நெல்லையில் இருந்து கோவில்பட்டிக்கு வந்து குழந்தையுடன் கடைத் தெருக்களில் ஊர் சுற்றுகிறான்.  குழந்தை பயத்தில் அழத் தொடங்குகிறது.  அதன் அழுகையை நிறுத்த ஒரு பெரிய யானைப் பொம்மையை வாங்கி குழந்தைக்கு கொடுக்கிறான்.  ஆனாலும் குழந்தையின் அழுகை நிற்கவில்லை.

இளைஞன், எங்கே தான் மாட்டிக்கொண்டு விடுவோமோ என்கிற பயத்தில், நகரத்தை விட்டு வெளியே தனியே இருக்கும் ஒரு கோயிலுக்குப் போய்ச்சேரும் போது நேரம் அந்தி சாய்ந்து விடுகிறது.

அந்தக் கோயிலை ஒட்டியுள்ள ஒரு பாழுங்கிணற்றில் குழந்தையைத் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து அவசரமாக அகன்று விடுகிறான்.  சற்று நேரத்தில் நன்கு இருட்டி விடுகிறது.  எட்டு மணி வாக்கில் கோயிலைச் சாத்த வரும் குருக்கள், கிணற்றிலிருந்து ஏதோவொரு குழந்தையின் முனங்கல் சத்தம் கேட்டு, பதட்டத்துடன் கிணற்றை எட்டிப் பார்க்கிறார்.  சத்தம் மேலும் துல்லியமாகக் கேட்கவே, கையிலிருந்த டார்ச் லைட்டை அடித்து உள்ளே பார்க்கிறார்.

அந்தப் பெண் குழந்தை பெரிய யானைப் பொம்மையை இறுக்கிப் பிடித்தபடி தண்ணீரில் மிதந்து அழுது கொண்டிருக்கிறது.

குருக்கள் உடனே குரலை பெரிதாக எழுப்பி பொது மக்களைக் கூட்டியதும், அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குழந்தையைக் காப்பாற்றுகிறார்கள்.  போலீஸ் வசம் குழந்தை ஒப்படைக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப் படுகிறது.

போலீஸ் உடனே விரைந்து செயல் படுகிறது.  குழந்தையைக் காணவில்லை என்று எவராவது போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார்களா என்று தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் விசாரித்து, அடுத்த இரண்டே மணி நேரத்தில் நெல்லையில் இருக்கும் அதன் பெற்றோரைக் கண்டுபிடித்து விடுகிறார்கள்.

போலீஸ் நெல்லையில் இருக்கும் பெற்றோர்களிடம் தொடர்பு கொண்டு பேசியதும், இரவோடு இரவாக ஒரு டாக்ஸியில் பெற்றோர்கள் கோவில்பட்டி வந்து சேர்கிறார்கள்.  அடுத்த அரை மணி நேரத்தில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு குற்றவாளியைக் கைது செய்கிறது கோவில்பட்டி காவல்துறை.

மறுநாள் லோக்கல் தினசரிகளில் பரபரப்பாக செய்தி வெளியாகி கோவில்பட்டி போலீஸுக்கு ஏகப்பட்ட பாராட்டுகள் குவிகின்றன.

இன்று காலையில் அந்தக் குழந்தையை நீதிமன்றத்தில் ஒப்படைத்து, அதன் பிறகு சட்ட ரீதியான நடவடிக்கைக்குப் பின், அந்தப் பெண் குழந்தையை அதன் பெற்றோரிடம் ஒப்படைக்கப் போகும் நிகழ்ச்சியை நேரில் பார்க்கவே இந்தக் கூட்டம்.

சற்று நேரத்தில் கூட்டம் திடீரென சுறு சுறுப்பானது…

திரும்பிப் பார்த்தால், தன்னைக் காப்பாற்றிய அந்த பெரிய யானைப் பொம்மையை இறுகிப் பிடித்தபடியே, அந்தப் பெண் குழந்தையை ஒரு பெண் காவலர் பத்திரமாக உள்ளே கொண்டு வந்தார்.

குழந்தையைப் பார்த்ததும் அதன் தாய் கதறி அழுத அழுகையைப் பார்த்து.  குழுமியிருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீர் முட்டிக் கொண்டது.

கண்கள் கலங்க, தன் மூக்குக் கண்ணாடியை கழற்றி எடுத்து துடைத்துக் கொண்ட நீதிபதி, இது ஒரு ‘தெய்வீகக் குழந்தை’ என்றார்.  அதன்பின் குழந்தையை அதன் பெற்றோர்களிடம் உடனே ஒப்படைக்குமாறு தீர்ப்பும் வழங்கினார்.

அங்கிருந்த மக்கள் பலர் பலவிதமாக பேசிக் கொண்டனர்.  ஒரு வயதான பாட்டி, “எருமை வாகனத்தில் வந்து குழந்தையின் உயிரைப் பறிக்க முயன்ற எமன் தோற்றுப் போனான்.   காரணம், குழந்தை பெரிய யானையிடமல்லவா இருந்தது!! யானையை ஜெயிக்க எருமையால் முடியுமா?” என்றார்.  கூடியிருந்த அனைவரும் உணர்ச்சி பொங்க அதை ஆமோதித்தனர்.

இதில் இன்னொரு மிகப்பெரிய சுவாரசியமான உண்மை என்னவென்றால், வழக்கமாக அந்தக் கோயிலைச் சாத்திப் பூட்ட வருகிற குருக்களுக்கு இரண்டு காதுகளுமே சுத்தமாகக் கேட்காதாம்.  ஆனால், அன்றைய தினம் அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக் கோளாறினால், தன்னுடைய மருமகனை கோயிலுக்கு கதவைப் பூட்ட அனுப்பியிருக்கிறார்.

அதன் பிறகு நடந்தது எல்லாம் கடவுள் செயல்.

எப்போதும்போல அந்தக் காது கேளாத குருக்களே கோயிலைப் பூட்ட அன்றைக்கும் வந்திருந்தால், குழந்தையின் முனங்கல் சத்தம் கண்டிப்பாகக் குருக்களுக்கு கேட்டிருக்காது.

குழந்தை இரவு முழுக்க தண்ணீரில் யானையுடன் மிதந்து விறைத்துப் போய் இறந்தே போயிருக்கும்…

இதற்குப் பெயர்தான் ‘பகவத் சங்கல்பம்’ என்பது.

நீதிபதி சொன்ன மாதிரி அந்தப் பெண் குழந்தை ‘தெய்வீகக் குழந்தை’தான்… அதில் சந்தேகமில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *