தெய்வம் எங்கே?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 3, 2023
பார்வையிட்டோர்: 427 
 

மாலை நேரம். நண்பர். அழகனைப் பார்த்து வரலாம் என்று பூங்குளம் கிராமத்திற்குச் சென்றேன். நண்பர் கிராமப் புணரமைப்பு வேலையில் பங்கு கொண்டு பெரிதும் உழைத்தவாறு இருந்தார். வேலை முடிந்ததும் ஓய்வு நாடி சோலைப்புறம் வந்தார். சந்தித்தேன். “பொய்யாமொழியார் எங்கே?” என்றேன்.

“சிறுவர்களோடு செடிகளுக்கு நீர் ஊற்றிக் கொண்டிருக்கிறார்” என்றார்.

“தளர்ந்த உடலாயிற்றே, தாங்குமா?” என்றேன்.

“முடிந்தவரையில் உழைக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்தை அவர் எப்பொழுதும் செயலில் கடைப்பிடிப்பவர் ” என்றார். இதைக் கேட்டதும் நான் பொய்யா மொழியாரின் இனிய குணங்களை, இலட்சியக் கொள்கைகளை எண்ணி வியந்தவாறு சிறிது நேரம் இருந்தேன். அழகன் வியர்வை உலர உலாவிக் கொண்டிருந்தார்.

பொய்யா மொழியார் – பெரிய புலவர். ஆண்டிலே பழுத்து அனுபவத்தில் கனிந்தவர். சுருங்கச் சொன்னால் கறைபடாத வாழ்வு வாழக்கூடியவர். “எல்லா இன்பங்களும் இங்கே இந்த உலகத்தில் தான் இருக்கின்றன” என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டு அந்த இன்பங்களையெல்லாம் மக்கள் பெற வேண்டும் என்பதற்காக கிராமங்கள் தோறும் இளைஞர்களோடு புணரமைப்பு வேலையில் ஈடுபட்டு மக்கள் வாழ்வில் நலங்காணத் துடிப்பவர். அரசாங்க உதவியோ அன்பர்களின் பொருள் உதவியோ இல்லாமல் உழைப்பை மூலதனமாகக் கொண்டு புணரமைப்புத் தொழிலை நடத்தி வந்தார். அந்தத் தொண்டர் படையிலேதான் என் நண்பர் அழகன் இருந்தார்.

“அழகன்! தஞ்சைப் பெரிய கோவிலுக்குப் போகலாமா?- எனக்கு அதன் நிர்மாண அழகை, சிற்ப சித்திர வேலைப்பாடுகளைக் கண்டு மகிழ பல நாளாக ஆவல்… உங்களை அழைத்துப் போகலாம் என்று தான் வந்தேன்” என்றேன்.

“வருந்துகிறேன் வளவன், எனக்கு இப்பொழுது ஓய்வில்லை” என்றார். ”உயிர் பெறும் சித்திரங்களும் உணர்வை அள்ளும் ஓவியங்களும் நிறைந்த கலைக் கோயிலை, தலை நிமிர்ந்து நிற்கும் கோபுரம் காட்டும் தமிழரின் தலைசிறந்த கலைத்திறனைக் கண்டு மகிழ ஆசை இல்லையா அழகன்?”

“இல்லை வளவா! இல்லவே இல்லை!… அங்கே கலைஞன் கல்லை தன் கைத்திறத்தால் அழகுறச் செதுக்கி உயிர் உள்ள உருவம் போல அமைத்திருக்கிறான்.

ஆனால் இங்கே காலம் உயிர் உள்ள உருவங்களை உதிர வாய்க்கால் ஓடும் உடல்களை பசி, பிணி என்ற உளிகளால் அங்க அழகுகளையெல்லாம் சிதைத்து உயிரைப் போக்கிக் கொண்டிருக்கையில் கலையை, கைத்திறத்தை கற்பனை உயர்வைத் தமிழனின் தனிவீரத்தை, தலைசிறந்த பண்புகளைக் கண்டு மகிழ்ந்து இன்புற்றிருக்கும் நேரமா இது? கலை வேண்டியதுதான்! ஆனால் எப்பொழுது? உண்டு உடுத்த பிறகு உல்லாசமாக இருப்பதற்கும், வாழ்வு கசக்காமல் இருப்பதற்கும் தான் கலையும் அதன் குழந்தைகளான சிற்ப சித்திரங்களும்.

“பசி…. ஏழைகளின் சிறுகுடலைப் பெருகுடல் விழுங்கிக் கொண்டிருக்கிறது. இந்தச் சமயத்தில் பெரிய கோவிலைக் கண்டு, அது காட்டும் கலைக் கண்காட்சியை, காவியப் படப்பிடிப்பை, இராசராசன் கண்ட கற்பனைக் கனவு, நனவாக உருவாகி உயர்ந்த விதத்தை அந்த எழிற்கோவிலிலே இன்ப நடனம் புரியும் இதிகாசச் சிற்பங்களையெல்லாம் கண்டு இன்புற முடியுமா வளவன்?

“பெரிய கோவில் – பெருமையில் மட்டும் அல்ல! உருவத்திலும் உயரத்திலும் பெரியது. அதனால் தான் அங்கே ஆயிரத்தெட்டு சிவலிங்கங்கள் இருக்கின்றன! அவைகளுக்கெல்லாம் அந்திமகால பூசை நடக்கிறது. பாதாதி சேகமாக நெய்யும் பாலும் வழிந்தோடுகிறது. அதைப் பார்த்து கடவுளின் பால் பக்தர்கள் கொண்டிருக்கும் தெய்வீக அன்பை என்னால் நினைக்கவே முடியாது . நினைத்துப் பாராட்ட என் நாக்கு மறுத்துவிடும். ஆனால் என் நினைவெல்லாம் எங்கிருக்கும் தெரியுமா? பூங்குளம் கிராமத்தில், பொற்கலசமில்லாத என் கோவிலில் நெய்யையும் பாலையும் நினைத்தறியாத நடமாடும் தெய்வங்களை வழிபட்டு நிற்கும். சுவாமி விவேகானந்தர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

“ஏழைகள் தான் நான் வணங்கும் கடவுள்” என்கிறார். அது மட்டுமா? கடவுளைத் தேடி எங்கே செல்கிறீர்கள்?…. ஏழைகள், துன்பப்படுவோர், பலவீனர்கள் எல்லோரும் கடவுள்கள் இல்லையா? அவர்களை ஏன் நீங்கள் முதலில் தொழக்கூடாது” என்கிறார்.

“காந்தியார் கண்ட முடிவு என்ன தெரியுமா? கடவுள் தெய்வ லோகத்திலும் இல்லை, பாதாள லோகத்திலும் இல்லை! ஒவ்வொரு மனிதனிடத்திலும்தான் குடிகொண்டிருக்கிறார். அதனால்தான் மனித வர்க்கத்திற்குச் சேவை செய்வதன் மூலமாக நான் கடவுளைக் காண முயன்று கொண்டிருக்கிறேன்’ என்றார்.” ஒரு பெரிய விரிவுரை நடத்தி முடித்தார் அழகன். அப்பொழுது பொய்யாமொழியார் செடிகளுக்கு நிரூற்றிவிட்டு திருக்குறள் வகுப்பு நடத்தப் போய்க் கொண்டிருந்தார்.

“வணக்கம்” என்றேன்.

“வாழ்க” என்று கூறிவிட்டுச் சென்றார். நானும் நண்பரிடம் விடைபெற்று அறை நோக்கி வந்து கொண்டிருந்தேன். தூரத்தில் எங்கோ ஆலய மணி அடிக்கும் ஓசை கேட்டுக் கொண்டிருந்தது. என் உள்ளம் “தெய்வம் எங்கே?” என்ற வினாவை எழுப்பி விடை காணத் தவித்துக் கொண்டிருந்தது.

(தமிழ்ப் பொழில், செப். 1954 – மார்ச் 1955)

Print Friendly, PDF & Email

பகடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

சதிவிரதன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *