தெய்வம் ஆசி வழங்குகிறது

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 5, 2022
பார்வையிட்டோர்: 2,108 
 
 

(1980 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வழக்கம் போல அதிகாலை பஸ்ஸைப் பிடித்துப் பத்து மைல்கள் பயணம் செய்து சந்தியில் இறங்கிய ஆசிரியர் சுந்தரலிங்கம், ஐப்பசி மாதத்து மழையைத் தாக்குப்பிடித்து ஒருமைல் தூரம் சேற்று வழியில் பதனமாக நடந்து பாடசாலையை அடைந்தபோது, எதிர் வீட்டுக்காரன், நேற்று வந்த கடிதத்தை அவரிடம் நீட்டினான்.

அதிபர் என்ற பொது விலாசத்திற்கு வராமல், அவரது சொந்தப் பெயருக்கு வந்த அரசாங்கக் கடிதம் என்பதனால் ஆசிரியர் அக்கடிதத்தை எடுத்துப் பரபரப் புடன் படித்தார். ஒருமுறைக்கு இரண்டு மூன்றாந் தடவையாக அதைப் படித்தார்.

1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நான்காம் திகதி யுடன் உமக்கு ஐம்பத்தைந்து வயது பூர்த்தியாகி விடுகின்றது. அன்றைய தினமோ அதற்கு முன்னரோ பாடசாலைக்குரிய சகல பொருட்களையும் பிரதம உதவீ ஆசிரியரிடமோ அல்லது நாம் குறிப்பிடும் வேறு யாராவது ஒருவரிடமோ ஒப்படைக்க வேண்டும். உமது உபகாரச் சம்பளம் சம்பந்தமாக இத்திணைக்களத்தோடு தொடர்பு கொள்ளவும். சேவை நீடிப்புத் தேவையாயின் ஆறு மாதங்களுக்கு முன்னதாக எமக்கு விண்ணப் பிக்கவும்.

மீண்டும் ஒரு முறை அக்கடிதத்தைப் படித்தார் சுந்தரலிங்கம். சேவை நீடிப்பு……

சுந்தரலிங்கத்தார் தன்னை அறியாமலே புறுபுறுத்துக் கொண்டார்.

“இந்தச் சேவை நீடிப்பு யாருக்கு வேண்டும்? எழுத் தறிவித்தவன் இறைவன் ஆகும் என்று பழைய வாக்கியம் இருக்கத்தான் செய்கிறது. ”ஆசிரியன் நாட்டின் அச்சாணி. அவர்களுடைய சேவை மிகமிக மகத்தானது” என்று பேசிக் கொள்ளாத அரசியல்வாதியே கிடையாது தான்.

ஆனால், அந்த மகத்தான சேவையைச் செய்துவரும் “இறைவனுக்கு” நாட்டில் உள்ள அந்தஸ்து தான் என்ன ?

ஆசிரியர் சுந்தரத்தின் மனப்பாம்பு. இறந்தக்காலச் சருகுகளில் சரசரவென்று ஊரத்தொடங்கியது.

முப்பத்து மூன்று ஆண்டுகளின் முன்னே, வெள்ளைக்காரனின் ஆட்சி அஸ்தமித்து, இந்த நாடு சுதந்திரோத யத்தைத் தரிசித்துக்கொண்டிருந்த பொற்காலம். அந்தக் காலத்திலேதான் அவர் ஆசிரியப் பயிற்சியை முடித்துக் ,கொண்டு வெளியேறுகிறார்.

மூன்று மாதங்களின் பின்னால் அவருக்குப் புருஷ லட்சணமான உத்தியோகம் கிடைத்தது. – ”நான் அழகாகத்தான் இருப்பேன்” என்று அடம் பிடித்துக்கொண்டு நிற்கும் கண்டி நாட்டின் நித்திய சௌந்தர்யம் இருபத்திரண்டு வயது இளைஞரான அவரைச் சொக்குப் பொடி போட்டு மயக்கிற்று. பசுமை போர்த்த மலைகள், மலைக்குவடுகளிலிருந்து உருக்கிய வெள்ளியாய் இழிந்துவரும் நீரோடைகள், கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் புஷ்பித்துக் கிடக்கும் பள்ளத் தாக்குகள் எல்லாமே அவரைக் கவிஞனாகவே மாற்றி விட்ட ன . 1

ஆனால் இந்நாட்டின் சுதந்திரோதயம் அந்தக் குறிஞ்சி நாட்டு உழைப்பாளிகளின் உரிமைகளைப் பறித்தபோது; நாளைக்கு இதுதானே நமக்கும் நடக்கப் போகின்றது என அவர் உள்ளுணர்வு சொல்லிக் கொள்கையில் அவரது கவித்துவம் “தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டு” நிர்க்கதியாக நிற்கும் அத்தொழிலாள மக்களுக்காகக் கண்ணீர் வடித்தது. அவரது மன உளைச்சல்கள் நிர்க்கதியாகிவிட்ட அச்சமூகத்துக் குழந்தைகளுக்கு ஆகக்குறைந்தது எழுத் தறிவையாவது புகட்டிவிட வேண்டும் என்ற கர்ம யோகமாய் அவருள் விரிந்தன.

ஆ! இந்தத் தொழிலாள வர்க்கத்துக்குத்தான் எழுத் தறிவிக்கும் இறைவன்மேல் எத்தனை மரியாதை

ஒருநாட் சாயங்கால வேளை.

மலைக்குவடுகளில் வீசியெறியப்பட்ட சாம்பலின் ‘மூட்டமாக மேகம் படர்ந்து கொண்டிருந்தது. சற்று முன்னர் பெய்த ஒரு பாட்டம் மழையில் தலைமுழுகிய தேயிலைச் செடிகளின் குமரியழகைத் தலை நீட்டிய தளிர்களில் தரிசிததவராக அவர் “சித்தம் போக்கு சிவம் போக்காக’ நடந்து கொண்டிருந்தார். – அருமையான அமைதி…! தூரத்தே தேயிலைத் தொழிற்சாலையிலிருந்து வரும் ஓசை, அந்த அமைதி யைக் குலைக்கத் திராணியற்றதாய், அந்த அமைதியில் அடங்கிற்று. 1. சுந்தரம் நடந்து கொண்டேயிருந்தார்.

அவருக்கு எதிராக வந்துகொண்டிருந்த அவரது சக ஆசிரியர் கேட்டுக் கொண்டார். “மாஸ்டர் கொஞ்சம் கெதியாக நடவுங்கள்.”

“ஏன்……?”

“ஏனா…? பின்னால் திரும்பிப் பாருங்கள். தங்கள் வேலை முடிந்து தொழிலாளர்கள் வந்து கொண்டிருக் கிறார்கள். அவர்கள் உங்களைத் தாண்டி முன்னால் செல்ல முடியாமல்…”

“ஏன் அவர்கள் போவதை நான் தடுத்தேனா…?”

தடுப்பது போலத்தான். அவர்கள் உங்களை முந்திக் கொண்டு போகமாட்டார்கள். இது அவர்கள் நமக்குக் காட்டும் மரியாதை…”

சுந்தரம் திரும்பிப் பார்க்கிறார். புல்லுக் கத்திகள், முளளுக்கிண்டிகள் சகிதம் பத்துப் பதினைந்து தொழி லாளர்கள். அவர் ஓரமாக ஒதுங்கிக் கொண்டு “நீங்கள் போங்கள்” என்கிறார்.

அத்தொழிலாளர்கள் தோளிலிருந்த ஆயுதங்களைக் கையிலெடுத்தபடி அடக்கமாக அவரைத் தாண்டிச் செல் கின்றனர்.

ஆசிரியருக்கு மெய்சிலிர்க்கிறது! ஏற்கனவே கர்ம யோகமாக அவருள் விடிந்துவிட்ட “இறைவன் சேவை” அந்தக்கணமே பக்தியோகமாய், அந்த யோகமே அவருக்கு எல்லாமாய்… கீதோபதேசம் குருசேத்திரத்தில் மட்டுமா நடக்க வேண்டும்?

இதெல்லாம் பழைய…பழைய கதை… மலையகத்து மக்கள் சிவனாரின் தென்னாட்டில் இருந்து வந்தவர்களின் பரம்பரையினர் தான். ஆனால் அவர்கள் ஐந்தொழில் புரியும் அம்பலவாணராயல்ல; அப்படியிருந்திருந்தால் மதுரை மாறனின் – பிரம்படி அந்தக்கணத்திலேயே அண்டசராசரங்களின் மீதும் பட்டது போலச் சுதந்திரோதய காலத்திலேயே அவர்கள் மேலே விழுந்த அடி நம்மீதும் பட்டிருக்கும்.

ஆனால் அந்த அடி ஐம்பத்தாறில் விழுந்தது. அடுத்த அடுத்த ஆண்டுகளில் சுந்தரம் ஊருக்கு மாற்றம் பெற்றார்.

மலை நாட்டுச் சேவைக் காலத்திலேயே அவருக்கு ஊரிலே திருமணமாகியிருந்தது. ‘ஊரோடு மாற்றம்” என்ற ஜீவன்முக்தி இப்போது அவருக்குச் சித்தித்திருத் தாலும் ஆண்டுகள் வளரவளரக் குடும்பச் சுமையும் கூடிக் கொண்டுதான் வந்தது. ஆனால், என்றைக்கோ கர்ம யோகமாய் விடிந்துவிட்ட அவரது சேவைமனப்பான்மை அல்லும் பகலும் பாடசாலை மாணவர்கன் என்றே சிந்திக்க வைத்தது.

அந்தச் சிந்தனை திறமை மிக்க ஆசிரியர் வரிசையில், அவரைச் சேர்த்தது.

ஆனால் திறமையும் சேவை மனமும் இருந்தால் மட்டும் போதுமா…?

அவருக்கு வளைந்து கொடுக்கத் தெரியவில்லை. எவருக்கும் கூழைக்கும்பிடுபோட அவரால் முடியவில்லை. ‘காக்காய் படிக்க” மனமில்லை . ஆகவே, அவரோடு-ஏன் அவருக்குப் பின்னாலும் சேவைக்கு வந்தவர்கள் பலரும் அதிபராக உயர்ந்தபோதும் சுந்தரம் உதவி ஆசிரியராகத் தான் இருந்தார்.

“என் சேவை மூப்புக்காக என்னை அதிபராக்கட்டும், அல்லது நிருவாக ரீதியான பரீட்சைப் பேறுகளின் அடிப் படையில் எனக்குப் பதவி உயர்வு தரட்டும். எந்த அரசியல்வாதியினதும் சிபார்சில் எனக்குப் பதவி உயர்வு தேவையில்லை” என்று அவர் நெஞ்சை நிமிர்த்தியதில் அவரிலும் சேவை மூப்புக் குறைந்தவர்களின் கீழ் 2 தவி ஆசிரியராகச் சேவை செய்யவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு அவர் ஆளானார்.

ஆனால் அவர் அதைப்பற்றிக் கவலைப்படவேயில்லை !

காலம் மாறும் என்ற நம்பிக்கை அவருக்கிருந்தது. ”உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்” என்ற தத்துவார்த்த கோஷத்தில் நம்பிக்கை கொண்ட அவர், தொழிற்சங்க அங்கத்தவராகிக் கொண்டு ”பயிற்றப் பட்ட ஆசிரியர்களுக்கு மொழி அடிப்படையில் சம்பள வித்தியாசம் இருக்கக் கூடாது. எல்லோருக்குமே சம சம்பளம் வேண்டும். எந்த ஆசிரியரும் கடமையினிமித்தம் கந்தோருக்கோ அல்லது வேறெங்கோ சென்றாலும், ஏனைய அரசாங்க ஊழியருக்குப் போல அவர்களுக்கும் பிரயாணச் செலவும், படிச்செலவும் வழங்கப்படல் வேண்டும்” என்று உரத்துக் குரல் எழுப்பினார்.

அவரது குரலுக்குப் பதில் கிடைக்காமலுமில்லை . சம சம்பளம் என்ற கோரிக்கை வெற்றியடைந்ததாகத் தோன்றியபோது, அவரது மாணவனாக இருந்த ஆசிரி யருக்கும் அவருக்கும் ஒரே சம்பளம் கிடைத்தது! ஆகக் குறைந்தது மூன்று வருட சேவைக்கு ஒரு வருடச் சம்பள உயர்வாவது தேவை ” என்ற கோரிக்கை இன்னமும் கோரிக்கையாகவே இருக்கின்றது.

பிரயாணச் செலவு, படிச்செலவு என்பன வார்த்தைகளில் வடிக்க முடியாத வேய்ங் குழலின் இனிய நாதம் போல இன்னமும் நாதரூபமாகவே இருக்கின்றது. –

ஆனால் ஆறு ஆண்டுகளின் முன்னால் பரீட்சை ஒன்று எழுதிச் சித்தியடைந்ததில் அவர் அதிபராக உயர்ந்து விட்டார்.

ஆனாலும் அதனால் என்ன பயன்…?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னே அவரது மாணவ னாக இருந்தவன், எந்த அரசியல்வாதியையோ பிடித்து வங்கி உத்தியோகத்தன் ஆகிக் கொண்டு முப்பத்து மூன்று வருடங்கள் மட்டையடித்த அவரைவிட அதிகமாகச் சம்பளம் பெறுகிறான்.

மகா வித்தியாலயங்களில் பொருட். கணக்கெடுக்க வரும் தமது அலுவலக உத்தியோகத்தர்களோடு ஒரு சில ஆசிரியர்களும் அதே வேலையைச் செய்யப் பணிக்கப் படுவார்கள். கந்தோர் எழுத்தாளர்களுக்குப் பிரயாணச் செலவு, படிச்செலவு வேறு. ஆனால் ஆசிரியர் களுக்கு…?

அரசியல்வாதிகள் “ஆசிரியத் தொழில் மகா புனித மானது” என்று சொல்லிச் சொல்லியே தமது வர்க்கத் தினரின் தலையில் மிளகாய் அரைக்கிறார்கள். அவர் களிடம் அரைபட்டது போதும் என்று நாட்டின் அறிவாளிகள் நைஜீரியாவிற்கும் ஸாம்பியாவிற்கும் செல் கிறார்கள்.

அந்த வசதியற்றவர்கள், ஓய்வு பெறுவதைத் தவிர – வேறு வழியேயில்லை.

சுந்தரத்தின் நினைவு இழைகள் படீரென அறுபட்டது போலத் தோன்றிற்று. கணந்தான். ஆயினும் தன்னைச் சுற்றி நூலிழை பின்னும் பட்டுப்புழுவின் துரிதத்தோடு மீண்டும் நினைவு இழைகளை அவர் மனம் பின்னிக் கொள்கிறது.

வயிற்றுக்கும் வாய்க்குமே போதாது என்ற நிலையில் தான் அவரது சம்பளம். இந்த லட்சணத்தில் பிள்ளை களின் ‘போடிங்’ செலவு வேறு! எத்தனைதான் செட்டாகச் சீவித்தாலும் கடன் தான் மிஞ்சுகிறது. இந்த அழகில் மாதாமாதம் கிடைக்கும் வருமானமும் அடுத்த மே மாதத்துடன் நின்றுவிட்டால்…….

சுந்தரத்தால் அந்த நினைவைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. நமது கந்தோர் என்ன நாம் ஓய்வுபெற்ற அடுத்த மாதமே உபகாரச் சம்பளத்தைத் தந்துவிடப் போகிறதா? அதற்குப் பலமாதங்கள் -ஏன் வருடங்கள் கூட ஆகலாம்…… உபகாரச் சம்பளத்தைப் பெறுமட்டும் எப்படித்தான் காலந்தள்ளுவது? சில்லென்றடிக்கும் ஐப்பசி மாதத்து வாடைக் கடுவலிற்கூட அவருக்கு வியர்த்த து.

நேற்றிரவு தன் சகதர்மினியிடம் நடத்திய சம் பாஷணை அவர் ஞாபகத்திற்து வந்தது. அவள் கேட்டாள்.

இப்பவே பென்ஷனுக்குப் போய் என்ன செய்யப் போறீங்க? அரசாங்கம் அறுபது வயசுவரை சேவை நீடிப்புத் தருகுதாமே…”

“இன்னமும் ஐஞ்சு வருஷமா? என்ர ஐம்பத்தைஞ்சு வருஷ வாழ்க்கையில் நாற்பத்தெட்டு வருஷம் பள்ளிக்குப் போய் அலுத்துப் போச்சு…” என்று சொல்லிச் சிரித்தார் – அவர்.

அவரது நகைச்சுவையை விளங்கிக்கொள்ளாமல் அவர் மனைவி அலமருகையில் சுந்தரம் அதற்கு விளக்கம் சொன்னார்.

“பிறந்ததிலிருந்து ஐஞ்சு வருஷம் பள்ளிக்குப் போகல்ல. பிறகு எஸ்.எஸ்.சியைப் பாஸ் பண்ணிற்று ரெயினிங் கொலிஜ் போறவரைக்கும் இரண்டு வருஷம் பள்ளிக்குப் போகல்ல. மற்றக் காலமெல்லாம் – சரியா நாப்பத்தெட்டு வருஷம் பள்ளிக்குப் போய்ப் போய் அலுத்துப் போச்சு…”

“என்ன செய்றது, இன்னமும் இரண்டு வருஷமாவது போகத்தான் வேணும். அதுக்குள்ள மூத்த மகளுக்கு ஒரு வழி பிறந்…”

“அந்த வழி நான் உத்தியோகம் பாத்தாத்தான் பிறக்குமாக்கும்…? எனக்கென்னவோ இந்த உத்தி யோகமே அலுத்துப் போச்சு. அதிலயும் இப்ப படிப்பிக் கிற பாடசாலையில் படிப்பிக்கிறதே பெரிய வேதனையா இருக்கு. என்ர தரத்துக்கு நான் ஒரு பெரிய பாடசாலை யிலே அதிபராக இருக்க வேண்டியவன்.”

“இந்தக் கெறுவாலதானே ஏற்கனவே, உங்களுக்கு மூணாந்தர அதிபர் பதவி கிடைக்கல்ல. போய்வந்த இன்ரெ வியுக்கு அது கிடைக்கிற வரைக்கும் நீங்க கொஞ்சம் அமைதியாயிருங்க. அது கெடைச்சாக் கெடைக்கிற பென்ஷன்லயாவது பத்துப் பதினைஞ்சு வரக் கூடாதா?”

இன்ரெவியூக்குப் போய் மூணு வருஷமாக்சு. அந்தப் பைல் எல்லாம் எந்தக் குப்பையில கிடக்குதோ! அதுவாற தாயிருந்தாக்கூட நான் இன்னமும் சேவையில் இருக்க விரும்பல்ல. எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பகடைக் காயாத் தள்ளப்பட்டு மாற்றம் பெறுபவன் வாத்தியார் மட்டுந்தான். வேற எந்தக் கந்தோர் பியோனைக்கூட மாத்த ஏலாது. ஐம்பத்தைஞ்சுக்குமேல ஒரு நிமிஷமும் தான் வேலை பார்க்கவே மாட்டேன்…” ‘வேலையில்லாம என்ன செய்யப் போறீங்க”

“செய்யிறதா? நம்மூர் மகாவித்தியாலயத்திற்கு முன் னால கடலைத்தட்டி வைச்சி யாவாரம் பண்ணுவன். அப்பவாச்சும் தொறக்க வேண்டியவன்கள்ர கண் தொறக் கட்டும்……”

அவர் மனைவி நாடியைத் தோள்பட்டையில் இடித் துக் கொண்டு வேகமாக அடுக்களைக்குள் சென்று விடுகிறாள்.

தனது தீவிரத்தின் மன உளைச்சல்களோடு சுந்தரம் சாய்கதிரையில் படுத்திருக்கையில் அடுத்த தெருச் செல்லையா அவரைத் தேடிக் கொண்டு வருகிறார். “மாஸ்டர், உங்களிட்டைத்தான் வந்தன்……” ”எனக்கிட்டவா? என்ன சங்கதி அண்ண ன்…..?”

வேறொன்றுமில்ல மாஸ்டர். என்ர மூத்தமகன்ர வியாதிய இங்க ஒருத்தரும் கண்டுபிடிக்கிறாங்க இல்ல.., திருகோணமலைப் பெரியாஸ்பத்திரிக்குப் போய் எக்ஸ்ரே – எடுக்கட்டாம். அங்க இருக்கிற டாக்குத்தர் ராமலிங்கம் உங்கட மாணவன் என்று சொல்வீங்களே, அவருக்கு ஒரு. கடிதம் தந்தீங்க என்றா வசதியா இருக்கும்…”

சுந்தரத்தின் மன உளைவுகள் சீழ் வெளியேறிவிட்ட. புண்ணாகச் சற்று இதமடைந்தன.. – “இருபது இருபத்திரண்டு வருஷத்துக்கு முன்னால் திருகோணமலைப் பட்டினத்தில் அவனுக்குப் படிப்பிச் சன். ஆனாலும் இப்பவும் அவன் என்னை மறக்க மாட்டான்” என்று சொல்லிக் கொண்டே கடிதத்தை எழுதிச் செல்லையாவிடம் கொடுத்தார். அவரது சிறுமைகள், அவரது வீழ்ச்சிகள், அவரது மன உளைவு.. கள், அவரது வேதனைகள் எல்லாமே அவரை விட்டு அகல, மலையாய் உயர்ந்து நின்ற சுவானுபூதத் தெம், புடன் ஆசிரியர் படுக்கைக்குப் போனார்!

பாடசாலையில் சலசலப்பு அதிகமாயிற்று. ஊதற் காற்றோடு துமித்துக் கொண்டிருந்த மழை நின்று விட்டதும், பாடசாலைக்குப் பிள்ளைகள் வரத்தொடங்கி விட்டார்கள். நேரமும் எட்டரைக்கு மேலாகிவிட்டது.

உதவி ஆசிரியர் வருவாரோ வரமாட்டாரோ! லீவுக் கடிதம் வந்தாலும் வரலாம். அவர் மந்திரியின் ஆள்!

ஆசிரியர் மணியை அடித்துப் பாடசாலையைத் தொடங்குகிறார். பிள்ளைகள் நிரைத்து நிற்க மூன்றாம் வகுப்பு மாணவன் ஒருவன் தேவாரம் பாடுகிறான்.

“சலம்பூவோடு தூபம் மறந்தறியேன்” மற்றவர்கள் அவனைத் தொடர்கிறார்கள்,

பிரார்த்தனை முடிந்து மாணவர்கள் வகுப்புக்குச் சென்றதும் ஆசிரியர் பம்பரமாகிறார்.

நான்காம் ஐந்தாம் வகுப்புகளுக்குக் கரும்பலகையில் கணக்குகளை எழுதிவிட்டு மூன்றாம் வகுப்புக்கு மொழிப் பயிற்சியாக எழுத்து வேலை கொடுத்து முதலாம் இரண்டாம் வகுப்புகளை ஒன்றாகச் சேர்த்துக் கதை சொல்ல முனைகையில் அவர் மனம் மீண்டும் எங்கோ தாவுகிறது.

அரசாங்கத்தின் சுற்று நிருபப்படி இந்தப் பாட சாலையில் ஐந்து ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் இருப்பதோ இரண்டே இரண்டு ஆசிரியர்கள் தான். இந்த நிலைதான் இந்த வட்டாரத்தின் எல்லாப் பாடசாலைகளிலும். ஆனால் நாட்டிலே தேவைக்கு அதிகமாக ஆசிரியர்கள் இருப்பதாக அரசாங்கம் நாளாந்தம் சொல்லிக் கொள்கிறது என்ன கணக்கோ? என்ன புள்ளி விபரமோ?

இந்த லட்சணத்தில் தன்னைப் போன்றவர்களும் ஐம் பத்தைந்து வயதிலேயே பென்ஷனுக்குப் போய்விட்டால் இந்தக் குழந்தைகளின கதி?

அவரது கணநேரச் சிந்தனைக்குள் மாணவரிடையே சலசலப்பு.

“சேப்பிரம் அடிக்கிறான் ஐயா.”

“சேப்பிரமா? அப்படிச் சொல்லக்கூடாது: சிவப்பிர காசம்…” என்று திருத்துகிறார் சுந்தரம்.

தந்திச் சேவகன் வேர்த்துக் களைத்துச் சைக்கிளில் வருகிறான்.

அவன் நீட்டிய அட்டையில் கையெழுத்திட்டு அந்த “எக்ஸ்பிரஸ்” கடிதத்தை வாங்கி உடைத்து…

அடியிலே எழுதினவரின் கையெழுத்தைப் பார்க்கிறார் பால-சுகுமார்! அவர் மனம் மீண்டும் எங்கோ தாவுகிறது.

அவர் இங்கு வர முன்னர் படிப்பித்த மகா வித்தியா லயத்தில் அந்த ஆண்டுதான் சர்வகலாசாலைப் புகுமுக வகுப்புகளைத் தொடங்கினார். அவ் வகுப்புகளில் கற் பிக்கப் போதுமான பட்டதாரி ஆசிரியர்கள் இல்லை. ஆனாலும் மாதாமாதம் பணத்தைக் கொட்டிப் பட்டினம் சென்று படிக்க முடியாதவர்களின் வசதி ஒன்றை மட்டும் கருத்திற்கொண்டு வகுப்புக்கள் தொடங்கப்பட்டு விட்டன.

அவ்வகுப்புக்களில் ஒன்றிற்குத் தமிழ் கற்பிக்க வேண்டிய கடமை ‘கண்டது கற்றுப் பண்டிதரான” சுந்தரத்தின் தலையில் விடிந்தது!

இரவு இரவாக கம்பனையும், வீரமாமுனிவரையும். மாணிக்கவாசகரையும் கற்று, பலணந்தியையும் செல்வ நாயகத்தையும் படித்துப் பகலி லே தம் மாணவர்களுக்குத் தமிழ் செய்தார் சுந்தரம்.

இரண்டு வருடங்களின் பின்னால் அந்தக் கிராமத்து மாணவர்கள், இந்த வட்டாரத்திற்கே பெருமை பெற்றுத் தந்தவர்களாகச் சர்வகலாசாலையில் காலடி எடுத்து வைத்தார்கள். ‘

அவர்களில் தமிழை விசேட பாடமாக வரித்துக் கொண்ட அவரது மாணவன் தான் கடிதம் எழுதியிருக் கிறான்! தமிழ் “ஒணர்ஸ்’ செய்து முதுமானியாகி, கலா நிதியாகித் தன் பெயரைச் சர்வகலாசாலை மட்டும் நிலை நாட்டுவான் என்று தான் கனவு காணும் அந்தக் கிராமத்து மாணவன்….. சுந்தரம் அவன் கடிதத்தைப் படிக்கிறார். அன்புள்ள ஆசானுக்கு,

அந்த விளியை வாசித்ததுமே ஆசிரியர் தம் மனதுள் சிரித்துக் கொள்கிறார். வெளி வேலை ஒன்றும் இல்லா விட்டால் தன் கிராமத்து மாரியம்மன் கும்பத்துக் குடிசை களில் உடுக்கடிக்காவது சென்றுவிடும் அந்தத் துடிப்புள்ள மாணவன் தன்னை ஆசான் என்று விளிக்காமல் வேறு எப்படித்தான் விளிப்பான்…?

ஆசிரியர் கடிதத்தைத் தொடர்ந்து படிக்கிறார். “ஜப்பான் முதலான கிழக்கு நாடுகளுக்குச் செல்வதற்கு எனக்கு ஸ்கொலர்ஷிப் கிடைத்திருக்கிறது. நாளை மறுதினமே கொழும்பிலிருந்து புறப்பட வேண்டும். செய்தி எனக்கு இப்போதுதான் கிடைத்தது. ஆகவே தான் கடுகதித் தபால் எழுதித் தங்கள் ஆசியை விழைகிறேன்.”

மெய்சிலிர்த்து ஆனந்தக் கண்ணீர் விட்டார் சுந்தரம் தன் ஐம்பத்தைந்தாவது வயதிலேயே உபகாரச் சம்பளம் பெறும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டாரோ என்னவோ

ஆனால் அவரது சிறுமைகள், அவரது வீழ்ச்சிகள், அவரது மளஉளைவுகள், வேதனைகள், எல்லாமே அவரை விட்டு அந்தக் கணத்திலே அகன்றுவிட அவர் மனம் மட்டும் சேறும் சகதியும் நிறைந்த வயல் வெளிகள் என்ற பசுமைக் காட்சியிடையே கம்பீர்யமாக உயர்ந்து நிற்கும் தம்பலகாமத்துக் கோணேசர் கோயில் விமானம் போல உயர்ந்து புனிதமாய் மிளிர்ந்தது!

நெஞ்சை நிமிர்த்தியபடி காரியாலய அறைக்குள் சென்ற சுந்தரலிங்கம் ஆசிரியர், அலுமாரியைத் திறந்து இலவசப் புகையிரதச் சீட்டுப் புத்தகத்தை எடுத்து, தன் மாணவனுக்கு ஆசிகூறி வழி அனுப்புவதற்காகக் கொழும் புக்குச் செல்வதற்கு “வாரன்ற்” எழுதத் தொடங்கினார்.

– வீரகேசரி 1980

– ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது (ஐம்பது சிறுகதைகள்), முதற் பதிப்பு ஒக்டோபர் 1996, மித்ர வெளியீடு, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *