தெனாலிராமன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 4, 2020
பார்வையிட்டோர்: 4,916 
 

தெனாலிராமன் (கி.பி. 1509 – 1530) என்று தமிழ் நகைச்சுவை உலகில் மிகவும் புகழ் பெற்ற தெனாலி ராமகிருஷ்ணா என்பவர் விஜய நகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயரின் அவையை அலங்கரித்த எட்டு அரசவைப் புலவர்களுள் (அஷ்டதிக் கஜங்கள்) ஒருவர்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் கார்லபதி என்கிற கிராமத்தில் ஏழை பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். தெனாலியில் உள்ள இராமலிங்க சுவாமியின் நினைவாக இராமலிங்கன் என்றே பெயரிடப் பட்டார்.

உரிய பருவத்தில் பள்ளியில் சேர்ந்தாலும் படிப்பில் கவனம் செல்லவில்லை. மற்றவர்களைச் சிரிக்க வைக்கும் ஆற்றல் அவரிடம் இயற்கையாகவே இருந்தது. அதனால் அகடவிகட கோமாளித் தனங்களில்தான் அவருடைய அறிவும் ஆற்றலும் ஜொலித்தன. அவரது நகைச்சுவை உணர்வும், புத்திசாலித்தனமும் மிகப் பிரசித்தம்.

இவர் அரசவை விகடகவியாக உயர்ந்தது குறித்து பல கதைகள் நிலவுகின்றன.

இவருடைய ஊருக்கு வந்த துறவி ஒருவர், இவருடைய தைரியம் மற்றும் நகைச்சுவை உணர்வில் கவரப்பட்டு காளிதேவியிடம் வரம் பெறத்தக்க மந்திரம் ஒன்றை சொல்லித் தந்ததாகவும், அதன் அருளால் காளிதேவியின் தரிசனம் பெற்ற இராமலிங்கன், அவளையும் தன் நகைச்சுவை அறிவால் சிரிக்க வைத்து அவளாலேயே விகடகவி என்று வாழ்த்தப் பட்டதாகவும் வரலாறு.

அதில் நம்பிக்கை வரப்பெற்ற இராமலிங்கன் விஜயநகரம் சென்று தன்னுடைய சாமர்த்தியத்தால் அரசரின் தரிசனம் பெற்று தன் அறிவுக் கூர்மை மற்றும் நகைச்சுவையால் அரசரின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாகி அரசவையில் முக்கிய இடம் பெற்று பத்து வருடங்கள் விகடகவியாக நல்வாழ்வு வாழ்ந்தார். அரசரே இராமலிங்கன் என்கிற பெயரை ஊர் பெயரைச் சேர்த்து ‘தெனாலிராமன்’ என்கிற புதிய பெயரைச் சூட்டினார்.

தான் உயிருடன் இருக்கும்போதே இறந்து விட்டதாகச் செய்தி பரப்ப வைத்து, தான் இறந்து விட்டால் அரசர் தன் குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள மாட்டார் என்பதை அரசரே உணரும்படி செய்து அவரையே தர்ம சங்கடப்படுத்தி இருக்கிறார் தெனாலிராமன். அதனாலேயே ஒருமுறை நிஜமாகவே பாம்பு கடித்து இறக்கும் தருவாயில் இருந்த தெனாலிராமன், கடைசியாக அரசரைப் பார்த்துவிட எண்ணி அவருக்குத் தகவல் அனுப்பியபோது அரசர் அதனை நம்ப மறுத்து விட்டார். அரசரைப் பாக்காமலேயே உயிர் இழந்தார் தெனாலிராமன் என்பது வரலாறு.

இந்திய மொழிகளில் இவரைப் பற்றிய பாடக் குறிப்புகள் இல்லாத மொழியே கிடையாது எனும் அளவுக்குப் பிரபலமானவர்.

தமிழ் சினிமாவும் இவரது பெயரில் 1938; 1956; 2014 வருடங்களில் மூன்று படங்களை வெளியிட்டுள்ளது. இவரது கதையை ‘தி அட்வென்சர்ஸ் ஆப் தெனாலிராமன்’ என்கிற பெயரில் கார்ட்டூன் நெட்ஒர்க் தொலைக்காட்சி நிறுவனம் 2001ல் பிரபலமான தொடராக வெளியிட்டது.

தெனாலிராமன் கிருஷ்ணதேவராயரின் அரசவையில் மந்திரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அந்த அரசன் ஒருவர் மீது கோபம் வந்தால் அவரை வேட்டை நாய்களுக்கு மத்தியில் தள்ளிவிட்டு வேடிக்கை பார்த்து ரசிப்பவன். அவனுக்கு திடீரென ஒரு சந்தேகம் வந்தது…

தெனாலிராமனைக் கூப்பிட்டு அனுப்பி, “விதூகரே, எனக்கு ஒரு சந்தேகம். சற்று அருகில் வாரும்…” என்று காதில் எதையோ கிசு கிசுத்தான்.

“ஐயையோ அது பற்றியெல்லாம் எனக்கு எப்படித் தெரியும் அரசே? எனக்கு இன்னமும் கல்யாணமே ஆகவில்லை…”

“அதனால் என்ன ? உமக்கு இதில் அனுபவம் இருக்குமே?”

“நான் ரொம்ப ஒழுக்கமானவன் அரசே… அதுபற்றி எனக்குக் கண்டிப்பாக எதுவுமே தெரியாது.”

கிருஷ்ணதேவராயர் மிகவும் கோபமடைந்தார்.

மறுநாளே அரசவையைக் கூட்டினார்.

“தெனாலிராமனை நாளையே பொதுமக்கள் முன்னிலையில், எனது பத்து வேட்டை நாய்களுடன் போரிட்டு ஜெயிக்க நாய்களுக்கு மத்தியில் மைதானத்தில் அவரைத் தள்ளிவிட முடிவு செய்துவிட்டேன். இன்றைக்கே அது குறித்து உடனே பொதுமக்களுக்கு தண்டோரா போட்டு அறிவிக்க ஏற்பாடு செய்யுங்கள்…”

உடனே தெனாலிராமன் அரசரிடம் கெஞ்சும் பாவனையில், “சரி அரசே, நீங்கள் எது செய்தாலும் அது நாட்டின் நன்மைக்காகத்தான் இருக்கும். ஆனால் எனக்கு பத்து நாட்கள் மட்டும் அனுமதி கொடுங்கள். அதற்குள் நான் உங்களுக்குத் திருப்தியளிக்கும் வகையில் சரியான விடை சொல்லுகிறேன். அப்படி இல்லையென்றால் என்னை பதினோராவது நாள் வேட்டை நாய்களுக்கு மத்தியில் அவிழ்த்து விடுங்கள்..” என்றார்.

பத்து நாட்கள்தானே… சரி என்று அரசரும் அதற்கு ஒப்புக் கொண்டார்.

அடுத்த பத்து நாட்களும் தெனாலிராமன் அரசரைக் கண்டு கொள்ளவேயில்லை. அவரது கோபத்தைத் தணிக்க எதுவும் முயற்சி செய்யவில்லை. இது அரசரை மேலும் கோபம் கொள்ளச் செய்தது. . பதினோராவது நாள் தண்டோரா போடச்செய்தார்.

மறுநாள் மைதானத்தில் பயங்கரக் கூட்டம். அரசரும் மந்திரிகளும் மேடையில் அமர்ந்து இருந்தனர். பல மந்திரிகள் ‘நாளைக்கு இதுமாதிரி தனக்கும் நடக்கலாம்’ என்று பயந்தபடி மைதானத்திற்கு வந்திருந்தார்கள்.

அரச ஏவலாள் ஒருவன் “இப்போது தெனாலிராமன் வேட்டை நாய்களின் மத்தியில் தள்ளப் படுவார்… அவைகளிடமிருந்து மீண்டு வருவது அவரின் சாமர்த்தியம்” என்று அறிவிப்புச் செய்தார்.

உடனே மைதானமே மூச்சைப் பிடித்துக்கொண்டு சோகத்தில் அமைதியானது.

அடுத்த நிமிடம் தெனாலிராமன் மைதானத்திற்கு மத்தியில் தள்ளப்பட்டார். உடனே பத்து வேட்டை நாய்கள் அவிழ்த்து விடப்பட்டன.

அவைகள் தெனாலிராமனை நோக்கிப் பாய்ந்து வந்தன.

என்ன ஆச்சர்யம்..!?. அவ்வளவு நாய்களும் தெனாலிராமனிடம் கொஞ்சிக் கொஞ்சி விளையாட ஆரம்பித்து விட்டன. அவருக்கு மாறி மாறி உடம்பில் முத்தமிட்டன.

இதைப் பார்த்த அரசர் அதிர்ந்து போனார். மந்திரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பொதுமக்கள் “தெனாலிராமன் வாழ்க…” என்று சந்தோஷத்தில் வான் அதிர முழக்கமிட்டனர்.

அரசர் தன் இருக்கையை விட்டு எழுந்து நின்று தெனாலிராமனை மேடைக்கு அழைத்தார். அவரைக் கட்டிப் பிடித்து அரவணைத்து, “இது எப்படி நடந்தது தெனாலி?” என்று வியந்து கேட்டார்.

“ஆம் அரசே, தங்களின் கோபத்தை என் புத்திசாலித்தனத்தால் வென்றேன்… தாங்கள் எனக்குத் தண்டனை கொடுத்த இரவே நான் வேட்டை நாய்களை வளர்க்கும் காசியின் வீட்டிற்குச் சென்றேன். அவனுக்கு நம் அரசவையில் நடந்த விஷயங்கள் எதுவுமே தெரியாது. அவன் என்னை மிகுந்த மரியாதையுடன் வரவேற்றான்….”

“…………………………..”

“அடுத்த பத்து நாட்களுக்கு நான்தான் நம் வேட்டை நாய்களை வளர்ப்பேன்; அவைகளை குளிப்பாட்டி விடுவதிலிருந்து உணவு வழங்குவதுவரை நான் மட்டுமே அவைகளிடம் கூட தங்கியிருந்து கவனித்துக் கொள்வேன்… இது அரசரின் உத்திரவு என்று ஒரு பொய்யைச் சொன்னேன் அரசே.”

“அப்புறம்?”

“அப்புறம் என்ன? பத்து நாட்கள் நான் வேட்டை நாய்களுடன் வாழ்ந்தேன். அவைகளுக்கு உணவளித்துக் கொஞ்சி மகிழ்ந்தேன்…. அவைகளும் என்னிடம் அதிகமாக வாஞ்சை காட்டின… அதைத்தான் தாங்கள் இன்று நேரிலேயே பார்த்தீர்கள்… பத்து வருடங்கள் நான் தங்களிடம் உழைத்து ஒரு நல்ல மந்திரியாகப் பெயர் பெற்றேன்; அதை உதாசீனப் படுத்திவிட்டு கேவலம் எனக்குத் தெரியாத ‘பெண்கள்’ விஷயத்தைப் பெரிது படுத்தி எனக்குத் தண்டனை அளித்தீர்கள்… ஆனால் ஒரு பத்து நாட்களில் அந்த வேட்டை நாய்கள் என்னை நன்றியுடன் ஏற்றுக்கொண்டன. இன்று நான் உயிருடன் இருப்பதற்கு அந்த நன்றியுள்ள நாய்கள்தான் காரணம்…”

“என்னை மன்னித்துவிடு தெனாலி… நாளையிலிருந்து நம்முடைய அரசவைக்கு எப்போதும் போல் வந்து விடுங்கள்…”

“வேண்டாம் அரசே…. வேண்டவே வேண்டாம். என்னை அந்த வேட்டை நாய்களுடன் நிம்மதியாக வாழவே அனுமதியுங்கள்… அது போதும் எனக்கு…” கைகளைக் கூப்பி அரசரை வணங்கினார்.

“ஏன் தெனாலி இப்படி ஒரு முடிவு?”

“அடுத்ததாக என்னை நல்ல பாம்புகள் மத்தியில் தள்ளி விடுவீர்கள்…ஆளை விடுங்கள்…”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *