தூக்குக் கயிறு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 27, 2014
பார்வையிட்டோர்: 10,784 
 
 

நான் சொல்லுவதனைக் கொஞ்சம் நுணுக்கமாகவும் அவதானமாகவும் கேட்டுக் கொள்ளுங்கள். நான் கேட்கும் இந்தக் கேள்விக்கு உங்களில் யாருக்காவது பதில் சொல்ல முடியுமா…என்று எனக்குத் தோணவில்லை…உங்களால் இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா என்று எனக்குத் தெரியவுமில்லை.

உங்களில் யாருக்காவது உங்களது மரணம் அல்லது சாவு நிச்சயிக்கப்பட்டுள்ள நேரம் எதுவென்று தெரியுமா அல்லது உங்களால் உறுதிப் படுத்திச் சொல்லத்தான் முடியுமா… குணப்படுத்தவே முடியாத எயிட்ஸ் லியூக்கேமியா நோய்க்காரர்களுக்குக் கூட குறிப்பிட்ட காலத்தில் இவர்கள் செத்து விடுவார்கள் என வைத்தியர்கள் சொன்னாலும் அவர்களது சாவு சர்வ நிச்சயமாக இன்ன நேரத்தில்தான் நிகழும் என்று எவராலும் நிச்சயித்துக் கூற முடிவதில்லை.

ஏனெனில் உயிர் பிரியும் நேரத்தைப் படைத்தவன் தவிர வேறெவரால் உறுதிப்படுத்த முடியும். யாருக்கும் அவங்கவங்க சாவு நேரம் தெரியாதுல்ல… ஆனால் முஸ்தபாவுக்கு தனது மரணத்தின் நேரம் தனது உயிர் பிரிக்கப்படும் நேரம் உலக வாழ்விலிருந்து நிரந்தரமாகப் பிரிக்கப்படும் நேரம் தனது வாழ்வு பறிக்கப்படும் நேரம் உலக வாழ்விலிருந்து நிரந்தரமாகப் பிரியாவிடை நிகழும் நேரம் கடந்த வாரமே தெரிய வந்து விட்டது.

சரியாக நாளை காலை எட்டுமணி இலங்கை நேரப்படி அவனது உயிர் அப்புறப்படுத்தும் நேரமாகக் குறிக்கப்பட்டிருக்கிறது. அவனது சாவு நிகழும் அந்த நாளும் நேரமும் ஆறு நாட்களுக்கு முன்பாகவே அவனுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

சாவுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஆரோக்கியமான ஆளிப்போ முஸ்தபா. சாவின் காலம் தெரிந்திருந்தால் வாழும் காலம் நரகமாகி விடும் என்பார்களே…

ஒரு மிகப் பெரும் பயங்கரத்தினை மீளத் திருத்தி அமைக்க முடியாத மீள்பரிகாரம் செய்ய முடியாத இழப்பினை நாளை காலை எட்டு மணிக்கு சந்திக்கப் போகின்றோம் என்ற பேருண்மையின் விஸ்வரூபம் அவனுள் எந்தளவு தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கும் என அடையாளம் காண முடியாதளவு எவ்வித சலனங்களுமற்ற இறுகிப் போன சற்று வெளிறிப் போன முகத்தோடு இருட்டு காலா காலமாய் முடியாட்சி செய்யும் இரும்புக் கதவு தாழிடப்பட்ட அந்தத் தனி ஷெல்லில் அமைதியாகக் குந்திக் கொண்டிரந்தான் முஸ்தபா.

போகம்பர சிறைச்சாலை.

இலங்கை தண்டனைச் சட்டக் கோவையில் பிரிவு பிரிவாக நானூற்றுத் தொன்னூறு பிரிவுகளிலும் விபரிக்கப்பட்டுள்ள அணைத்துக் குற்றங்களுக்காகவும் அங்கு கைதிகள் வெள்ளைத் துணிகளை அணைத்தவாறு இருந்தனர். விளக்க மறியல் கைதிகளை விட நாட்டின் பெரும்பாலான நீதிமன்றங்களில் பெரும் குற்றங்களுக்காக குற்றச்சாட்டுப் பத்திரம் தயாரிக்கப்பட்டு அதன் பின்னர் குற்றஞ் சாட்டப் பட்டவர்களால் சுற்றவாளி எனக் கூறப்பட்டு அதன் பேரில் வழக்கு விளக்கம் நடாத்தி இறுதியில் குற்றவாளிகள் என குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் போகம்பர சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தனர்.

இரண்டு வருடங்களுக்கு மேற் பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்கள்தான் பெரும் பாலும் அங்கு உலாவிக் கொண்டிருந்தனர்.

அநேகமாக கொலை வழக்குகளிலும் போதைப் பொருள் கடத்தல் வழக்குகளிலும் குற்றவாளிகளென குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் போகம்பர சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்பட்டு தண்டனை நிறைவேற்றத்துக்காக தனித்தனி ஷெல்களில் ஒவ்வொரு நாளும் கம்பிகளை மட்டுமே எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

புரிய முடியாத ஆயிரக்கணக்கான துயரக்கரைகளை போகம்பர சிறைச்சாலை இப்போது வரை தன்னுள் புதைத்தே வைத்திருக்கிறது.

பெரும்பாலான மரண தண்டனைக் கைதிகளின் வழக்குகள் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அல்லது சுப்ரீம் கோர்ட்டில் மேன்முறையீட்டுக்காக இருப்பதால் மேன்முறையீடு செய்த கைதிகள் தனி வேறாக விளக்க மறியல்காரர்களுடன் வைக்கப்பட்டிருந்தார்கள்.

மேன்முறையீட்டிலும் தண்டனைத் தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டவர்கள் மாத்திரம் மரண தண்டனை நிறைவேற்றத்துக்காக தனித்தனி ஷெல்களில் அதிதீவிர கண்காணிப்பிலும் பாதுகாப்பிலும் வைக்கப்பட்டிருந்தார்கள்.

வெள்ளைச் சீருடையோடு குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் அந்த போகம்பர சிறைச்சாலை பூமிக்குள் சுற்றிக் கொண்டிருப்பதில் ஏதோ ஓர் பயங்கரமானதொரு அமானுஷ்யம் அடங்கியிருப்பதாகவும் மனித மனோ நிலையில் எக்கச்சக்கமான இரசாயன மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய சர்வ வல்லமையும் இந்த சிறைச்சாலைக்கு உண்டு எனவும் அடிக்கடி நினைத்துக் கொண்டும் தனக்குள்ளே சிந்தித்துக் கொண்டுமிருந்த முஸ்தபாவினது தூக்குத்தண்டனை நிறைவேற்றம் பற்றி அறிவித்த கணத்திலிருந்து முழுமையான மௌனியாகி விட்டான் அவன்.

அதற்கப்புறம் அவன் அந்த சிறைச்சாலையில் யாருடனும் பேசவில்லை.

தனத மரணத்துக்காக தன்னை அவன் தயார்படுத்திக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. நாளை காலை எட்டு மணிக்கு அவனது கடைசி மூச்சுக்கான உலக அங்கீகாரம். கழுத்திலே தூக்குக் கயிறை மாட்டி அப்புறம்… மூச்சுக் குழாய் கடுக்கென்று உடைய… எஸ்ஃபிக்ஸியா…..மூச்சுத்திணறலாகி சுவாசப்பைகள் ஒக்சிஜன் விநியோகத்துக்காக போராடி… அது அசாத்தியமானதாக… அப்பறம்… அப்புறம்… அப்புறம்… அப்புறம்…

இருண்ட குகைக்கள்ளே முஸ்தபாவை ஓடவிட்டு ரத்தக்காட்டேறி அவனது குரல்வளையில் தனது கடைவாய்ப்பற்களை புதையவிட்டு மெல்ல மெல்ல அவனைச் சுவைக்க ஆரம்பித்தது.

‘ஆ… அல்லாஹ்…’

உள்ளுக்குள் மைக்ரோ துண்டுகளாய் வெடித்து கன்னங்களினூடாக வழிந்த கண்ணீரினூடாகச் சிதறி முஸ்தபா சிதைந்து போனான். அவனது இரண்டு விழிகளின் கரு மணிகளுக்குள் தனது மூத்த மகன் அம்ஸாலும் இளைய மகள் ஸரீனாவும் புன்னகைத்தபடி விரிந்து கொண்டிருந்தார்கள். கண்களிரண்டும் கரைந்துருகும் அளவுக்கு தலைவிரி கோலமாய் வெப்பம் நிரம்பிய கண்ணீரை உற்பத்தி செய்தபடி அவனோடு பதினைந்து வருடம் தாம்பத்யம் நடத்திய வீட்டுக்காரி ரம்ஸியா கதறிக் கொண்டு திசை தெறிக்க ஓடும் அந்த ரௌத்திரம் அவனுக்குள் மணிரத்னம் சினிமாவாய் பாதி இருட்டிலும் பாதி வெளிச்சத்திலும் குழப்பகரமாகத் தெரிந்தது.

இன்று மாலை டொக்டர் வந்து அவனை அழைத்து அவனது இரத்தம் மற்றும் சிறு நீரெடுத்ததோடு வித விதமான பரிசோதனைகளுக்கும் உற்படுத்தி மரண தண்டனை நிறைவேற்றத்தக்கு அவன் உடற்தகுதி பெற்றுள்ளான் என ஃபிட்னஸ் செட்டிபிகேட் வழங்கியிருந்தார்.

வாழத் தகுதியற்றவனுக்கு சாவதற்கு உடற் தகுதி தேவைப்படும் மரண தண்டனைச் சம்பிரதாயங்கள்.

இது கடைசி இரவு…

இன்னும் சரியாக பத்து மணித்தியாலங்கள் மாத்திரமே எஞ்சியிருக்கின்றன. வழமையாகக் கனவுகளில் மாத்திரம் ஒவ்வொரு இரவும் சந்தோஷிக்கும் முஸ்தபாவுக்கு இன்று நிச்சயம் கனவுகள் வரப்போவதில்லை.

இன்று இரவு அவனது தூக்கமில்லாத இரவாக தூக்கமற்றவனின் நீண்ட நெடி துயர்ந்த திகில்கள் மாத்திரம் தீர்த்தக் கரைதனிலே பாடலை அபசுரத்தில் வாசிக்கின்ற ஒரு அரக்கனாக இருக்கப் போகின்றது.

சுமார் இருபது வருடங்களுக்கு முன்னால் தனது அலுவலகத்தில் ஒன்றாகப் பணி புரிந்த சமது என்பவரை கத்தியால் குத்திக் கொலை செய்தார் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சுமார் எட்டு மாதங்கள் அதற்காக சந்தேக நபராக விளக்க மறியலில் இருந்து அதன் பின் மாகாண மேல் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டு அதன் பிறகு சுமார் ஐந்து வருட்ங்கள் முஸ்தபாவுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் சுருக்க முறையற்ற விசாரணைகள் இடம் பெற்றன.

முஸ்தபா குறித்த கொலை வழக்கில் பொலிஸாரால் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பின்னர் அவர் வேளை பார்த்த கம்பனி அவரை பணி நீக்கம் செய்திருந்தது. அதன் பிறகு அவரைப் பிடித்த சனி நீக்கமின்றி இதோ நாளை இவரைத் தூக்குக் கயிற்றில் ஏற்றி அவரைத் துவம்சம் செய்யப் போகிறது.

நீதவான் நீதிமன்றத்தில் சுருக்க முறையற்ற விசாரணையில் நடை பெற்றுக் கொண்டிருந்த அவரது கொலை வழக்கு பின்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட குற்றப்பகர்வின் படி மாகாண மேல் நீதிமன்றத்தில் ஜூரர்கள் இல்லாத ட்ரையல் விதவுட் ஜூரர்ஸ் அடிப்படையில் சரியாகப் பத்து வருட காலம் போய்க் கொண்டிருந்தது. மனைவியின் நகைகள் அவருக்கென சொந்தமாயிருந்த வீடு வாசல்கள் நிலபுலன்கள் அத்தணையும் இவரது வழக்குக்காக அடமானமாக ஆக்கப்பட்டு பின்னர் விற்பனைக்காக விடப்பட்டு அத்தனையும் வழக்கின் பெயரால் கபளீகரம் செய்யப்பட்டன.

அத்தனை சொத்துக்களும் விற்கப்பட்ட நிலையில் கடன் மாத்திரமே முஸ்தபாவுக்கு பிந்திய காலங்களில் கை கொடுத்தது. கழுத்தை இறுக்கும் அளவுக்கு கடன் சுமை ஏறி அந்தக் கேசுக்குப் பிந்திய காலங்களை கொழுத்திப் போட்டது.

மாகாண மேல் நீதிமன்றத்தில் அரச தரப்பில் முஸதபாவுக்கு எதிரான சாட்சிகள் அவருக்கெதிராக இருந்தன. அந்தக் கொலை வழக்கில் சம்பவத்தை நேரடியாகக் கண்ட கண் கண்ட சாட்சியங்கள் இல்லாத போதும் அவருக்கெதிராக வழக்கு முழுக்க முழுக்க சூழ்நிலைச் சான்றுகளின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது.

போதாததற்கு அரச சட்டத்தரணி தரப்பில் முஸ்தபா பொலிஸூக்கு வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் கொலை செய்ய பயனபடுத்தப்பட்டதாகச் சொல்லப்படும் கத்தியைப் பொலிஸார் கண்டெடுத்ததாகவும் அந்தக் கத்தியை சான்றுப் பொருளாக சான்றியல் சட்டத்தின் பிரிவு இருபத்தேழின் கீழ் அடையாளப்படுத்தும் விதமாகவும் நீதிமன்றத்துக்கு எடுத்துக்காட்டியதனை நீதிமன்றம் ஏற்று அங்கீகரித்திருந்தது.

அரச தரப்பு தமது வழக்கினை முடித்துக் கொண்ட பிறகு டிஃபன்ஸ் ட்ரையல் ஆரம்பிக்கப்பட்டு முஸ்தபா தரப்பு விளக்கம் எடுக்கப்பட்டது. முஸ்தபா சார்பில் அவர் எந்த சாட்சிகளையும் அழைக்க வில்லை. அவர் மட்டும் தன் சார்பாக சாட்சிக்கூண்டிலிருந்து சாட்சியமளித்திருந்தார். அவரை குறுக்கு விசாரணையின் போது அரச சட்டத்தரணி குறுக்கு மறுக்காக கேள்வியைக் கேட்டு குடைந்ததோடல்லாமல் ஆரம்பத்தில் கொலை சம்மந்தமான பொலிஸாரின் புலன் விசாரணையின் போது பொலிஸாருக்கு முஸ்தபா வழங்கிய வாக்கு மூலத்தின் சில விடயங்களுக்கு எதிராளி முற்று முழுதாக சாட்சி சொல்லுகின்றார் எனக் கூறி ஏலவே முஸ்தபாவால் பொலிஸூக்கு வழங்கப்பட்டிருந்த வாக்கு மூலத்தின் முரண்பாடான பகுதிகளை அடையாளமிட்டு நீதிபதிக்கு வழங்கியிருந்தது.

எது எப்படியிருப்பினும் தான் இந்த வழக்கிலிருந்து விடுதலையாகி விடுவேன் குற்றமற்றவன் எனத் தீர்ப்பு வரும் என முஸ்தபாவின் நம்பிக்கை வளர்ந்து கொண்டேயிருந்தது. அவர் சார்பாக பேசிய லோயர் ‘பயப்பட வேண்டாம். நிச்சயம் நீங்கள் விடுதலையாகி விடுவீர்கள்’ என்ற நம்பிக்கையை அவருக்குள் பதியம் செய்திருந்தார்.

சுற்றவாளி எனச் சொல்லி வழக்காடுகின்ற அத்தணை பேரும் தாம் விடுதலையாகி விடுவோம் என்ற நம்பிக்கையில்தானே கோர்ட்டுக்குப் பொய் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இறுதியாக அந்த நாள் முஸ்தபாவின் கொலை வழக்கில் தீர்ப்புக்காக நியமிக்கப்பட்ட அந்த நாள்… மேல் நீதிமன்ற நீதிபதியின் வார்த்தைகள்… தீர்ப்பை எழுதி வாசித்த அந்த நீதிபதியின் வார்த்தைகள் தனது தலை விதியை மாற்றியமைத்த அவரது அந்த சாதாரண பேனாவினால் எழுதப்பட்டு திறந்த நீதிமன்றத்தில் பரவ உச்சரித்த அந்த சிவப்பு வார்த்தைகள்.

இட் ஈ எ நைட்மெயார்… டிலிம்மா…

‘எனவே வழக்கின் அரச தரப்பில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் சான்றுகள் சான்றுப் பொருட்கள் மற்றும் எதிரியின் சாட்சியம் அணைத்தையும் ஒரு சேரப் பார்க்கின்ற போது வழக்கின் சம்பந்தப்பட்ட கொலை தொடர்பாக அக் கொலையைக் கண்டதாக கண்கண்ட சாட்சியங்கள் எவரும் இல்லையெனினும்… குறித்த வழக்கானது முழுக்க முழுக்க சூழ்நிலைச் சான்றுகளையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. எனவே சூழ்நிலைச் சான்றுகளின் அடிப்படையில் இலங்கையில் எண்ணற்ற வழக்குகள் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன. இதனை மேன்முறையீட்டு மற்றும் உயர் நீதிமன்றமானது பல வழக்குகளில் ஏற்று அங்கீகரித்துள்ளது. எனவே அதனடிப்படையில் பார்த்தால் அரச தரப்பானது எதிராளிக்கெதிரான வழக்கினை நியாயமான சந்தேகத்துக்கப்பால் எண்;பித்துள்ளது. அதே வேளை எதிரி தரப்பில் சாட்சி வழங்கிய எதிராளியின் சாட்சியத்தில் ஏகப்பட்ட முரண்பாடுகளும் குழப்பங்களும் காணப்படுவதோடு அரச தரப்பினால் முன்னளிக்கப்பட்ட சாடசியங்களின் சாட்சிகளினை தகர்த்து குறித்த வழக்கில் எதிராளிக் கெதிராக முன்வைக்கப்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலைகள் தொடர்பில் எதிராளி சட்டம் கோருவது போல போதிய விளக்கம் தரத் தவறியுள்ளார்…. எனவே இந்த நீதிமன்றமானது இதனடிப்படையில்……….’

ஃபேன் காற்றிலும் வியர்த்து கால்களிரண்டும் பூமிக்குள் இழுக்கப்படும் நிலையிலிருந்த முஸதபாவைப் பார்த்து மிக நீண்டதாகக் காணப்பட்ட அந்தத் தீர்ப்பினை வாசித்து முடிக்க நாற்பத்தெட்டு நிமிஷத்துக்கு மேல் நேரம் எடுத்த நீதிபதி கடைசிப்பந்தியை வாசித்த போது அவரது குரலில் கவலை தோய்ந்து போயிருந்தது.

‘எனவே இதனடிப்படையில் எதிரியை இந்த மன்று அவருக்கெதிராகவுள்ள குற்றப் பகர்வில் காணப்படுகின்ற இலங்கை தண்டனைச் சட்டக் கோவைப் பிரிவு இருனூற்றி தொன்னூற்றாரின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு குற்றவாளியெனக் கண்டு எதிராளிக்குத் தூக்குத்தண்டனை விதிக்கிறேன். எதிராளியை சாகும் வரை அவரது கழுத்தில் தூக்கிலிடுமாறு இந்த மன்று கட்டளையிடுகின்றது. அதே வேளை எதிராளியின் குடும்ப நிலை மற்றும் ஏனைய விடயங்களைக்கருத்திற் கொண்டு அவரின் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதிக்கு இந்த மன்று சிபாரிசு செய்கின்றது….’

என தனது தீர்ப்பினை வாசித்து முடித்த கையோடு தீர்ப்பெழுதிய பேனாவை நீதிபதி உடைத்த போது முஸ்தபா உடைந்து நொறுங்கி முதற்தடவை மனசளவில் தூக்கில் போடப்பட்டிருந்தான். தீர்ப்புச் சொல்லப்பட்ட அன்றைய தினமே முஸ்தபா இதோ இந்த போகம்பர சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தான்.

போகம்பர சிறைச்சாலையில் சரியாக ஐந்து வருடங்கள் முடிந்து Nhபயிருந்தன. மாகாண மேல் நீதிமன்றம் தனக்கு எதிராக வழங்கிய தீர்ப்புக்கெதிராக முஸ்தபா கடன்பட்டு காசெடுத்து கொழும்பு அப்பீல் கோர்ட்டில் அப்பீல் செய்திருந்தான். அந்த அப்பீல் நிராகரிக்கப்பட்டதையடுத்து இறுதியாக சுப்ரீம் கோர்ட்டுக்கு அப்பீல் பண்ணியிருந்தான். சுப்ரீம் கோர்ட் ‘ வி ஃபைன்ட் நோ மெரிட் டு இன்டர்பியர் வித் த ஃபைன்டிங்ஸ் ஒப் த லேனர்ட் ஜட்ஜ் ஒஃப் த ஹை கோர்ட்’ எனக் கூறி

‘ஜட்ஜ்மன்ட் ஒஃப் த லேர்னட் ஹை கோர்ட் ஜட்ஜ் ஈஸ் எஃப்ஃபர்ம்ட்…’ என எழுதி கற்றறிந்த மேல் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு உறுதிப்படுத்தப்படுகின்றது எனக் கூறி முஸ்தபாவின் அப்பீலை டிஸ்மிஸ் பண்ணி வழக்கினை மூன்று ஜட்ஜ் அடங்கிய அந்த சுப்ரீம் கோர்ட் பெனல் முடித்துக் கொண்டது.

அப்பீல் கோர்ட்டிலும் சுப்ரீம் கோர்ட்டிலும் அப்பீல் வழக்கு முடியும் வரை முஸ்தபாவை விளக்க மறியலில் ரிமான்ட் கைதிகளுடனேயே வெள்ளைச் சீருடை எதுவும் வழங்காது போகம்பர சிறைச்சாலையில் வைத்திருந்தார்கள்.

அவனது அப்பீலானது இரண்டு நீதிமன்றங்களிலும் நிராகரிக்கப்பட்ட பின்னரே முஸ்தபா தனி ஷெல்லுக்கு மாற்றப்பட்டான். கடந்த ஆறு மாத காலமாகத்தான் ஒற்றை ஷெல்லுக்கள் முஸ்தபா தனிமைப்படுத்தப்பட்டு ஒண்டியாக மங்கலான வெளிச்சத்தில் மரணித்து மரணித்து வாழ்வதாக நடித்துக் கொண்டிருந்தான்.

இதோ மொத்தமாக அவனுக்கெதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு அந்த வழக்கில் இருபது வருடங்கள் காலத்தின் தீராப்பசிக்கு இரையாகி விட்டிருக்கின்றன.

திரும்பிப் பார்க்க முஸ்தபாவுக்குப் பெருந் திகிலாக இருந்தது.

கடைசியாக இருக்கும் ஒரே தன்னம்பிக்கை முனையான ஜனாதிபதிக்கான கருணை விண்ணப்பமொன்றினை முஸ்தபா அவனது அப்பீல் சுப்ரீம் கோர்ட்டினால் நிராகரிக்கப்பட்ட பிறகு தனது மனைவியூடாக செய்திருந்தான். கடந்த வாரம் ஜனாதிபதிக்கு செய்யப்பட்ட கருணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டதாகவும் முஸ்தபாவுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை நிறைவேற்றம் செய்யுமாறும் ஜனாதிபதி செயலகத்திலிருந்து போகம்பர ஜெயில் சுப்ரின்டெனுக்கு கடிதம் வந்திருந்தது.

அத்தனை கதவுகளும் இரும்புத்தாழ் கொண்டு இழுந்து மூடப்பட்ட நிலையில் முற்றிலும் நம்பிக்கைகளைத் தொலைத்து விட்ட முஸ்தபாவுக்கு நாளை காலை எட்டு மணிக்கு மரண தண்டனை நிறை வேற்றம.; முஸதபாவை இறுதியாக அவனது மனைவியும் பிள்ளைகளும் முந்தா நாள் பார்த்துப் பேச பத்து நிமிட நேரம் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.

நிரந்தரமாக தனது மனைவி பிள்ளைகளை பிரியப் போகிறோம். இனி அவர்களைப் பார்க்கவே போவதில்லை என்ற யதார்த்தத்தில் முஸ்தபாவும் இனி தனது உயிர் திரும்பி வரப் போவதில்லை தமது அன்புத் தந்தை ஆயுளுக்கும் தங்களுக்கு இல்லை என்ற தவிப்பில் பிள்ளைகளும் ஒரு சேர சப்தமிட்டுக் கதறிய அந்தக்காட்சி போகம்பர சிறைச்சாலையினுள்ளே புதைந்து போயுள்ள ஆயிரக்கணக்கான பெருந்துயரவியலின் இன்னோர் மறக்க முடியாத அத்தியாயமாக இனிமேல் தொடர்ந்தும் இருக்கத்தான் போகின்றது.

தூக்கமில்லாதவனின் இரவு மிகத் துயரமானது என்ற தலைப்பில் விரிவுரை செய்த அந்தக்கடைசி இரவு முஸ்தபாவைப் பொறுத்தளவில் கறுப்பாகவே விடிந்தது. அவனைப் பொறுத்தளவில் இன்று காலை எட்டு மணி என்பது உலகம் அழியும் தினம். ஆன்மா அஸதமிக்கப் போகும் அந்தக் கணம் உலகின் ஒப்பற்ற சாபம் ஊர்வலம் செய்யும் தருணமாக அவனுக்குத் தெரிந்தது.

காலை ஏழு முப்பது மணி…

அவனுக்காக காலை ஏழு முப்பது மணிக்கே வழங்கப்பட்டிருந்த தேநீர் காலை ஆகாரம் அத்தணையும் ருசி பார்க்கப்படாமல் தரையில் மௌனவிரதம் செய்து கொண்டன. தனது இறப்பின் பின் போஸ்ட் மோர்ட்டத்துக்கு உட்படப் போகும் எனது இறந்த உடல ;பற்றி ரிப்போர்ட் தரப் போகும் டொக்டர் காலை உணவு பாதி ஜீரணமாகாத நிலையில் காணப்பட்டது என அறிக்கையிடுவதனைத் தவிர்க்கும் முகமாக முஸ்தபா காலை ஆகாரத்தைத் தொடவே இல்லை.

சாகப் போகிறவனுக்கு நாவின் ருசி பார்க்கும் அத்தனை சுரப்பிகளிலும் கசப்பு மட்டுமே ருசியாக எஞ்சிய இருக்கும் என்பதனை அருகில் யாராவது இருந்தால் கடைசி வார்த்தையாக சொல்லி வைக்கலாம்….?

‘முஸ்தபா கெட் ரெடி’

என்ற வார்த்தையோடு அவனிருந்த ஷெல் திறக்கப்பட்டது. வெளியே ஜெயில் சுப்ரீன்டன்ட் மூன்று ஜெயில் கார்ட்டுகள் வைத்தியர் ஒருவர் என குருதி அருந்தும் குறிக்கோளோடு அணைவரும் நின்று கொண்டிருந்தனர். அவனிருந்த ஷெல் திறக்கப்பட்டு பாதுகாப்பாக மரண தண்டனை நிறைவேற்றம் செய்யப்படும் கல்லோவுக்கு கொண்டு செல்லப்பட்டான்.

இந்நேரம் எனது மனைவி பிள்ளைகள் நெருக்கமான உறவுகள் அணைவரும் இந்த துயரமிக்க சிறைச்சாலைக்கு வெளியே எனது மரணித்த மரத்துப் போன வெற்றுடலைப் பெற்றுச் செல்வதற்காக கண்ணீரோடும் கதறலோடும் நின்று கொண்டிருப்பார்கள்.

மரண தண்டனை நிறைவேற்றும் அந்த இடத்தில் பிரகாசமான வெளிச்சமொன்றும் கிடையாது. சற்று மங்களாகத் தெரிந்தது. வெளிச்சத்தோடு வேண்டுமென்று சன்னமான திருட்டு சண்டை போட்டுக் கொண்டிருந்தது. ஒரு வித விநோதமான வாசைன காற்றில் பரவி சுவாசத்துளைகளை விசித்திரப்படுத்திக் கொண்டிருந்தது. பாடையில் போக வேண்டிய உடலை முதலில் மேடையில் வைத்து மரண ஒத்திகை பார்க்கின்ற மகத்தான தருணம்.

முஸதபா மேடையில் நிறுத்தப்பட்டான். மரணம் கழுத்தைக் கவ்விக் கொண்டு உயிர் பருகும் வெறியில் தனது தலைக்கு மேல் தொங்கிய கயிற்றை முஸ்தபா பார்த்த போது அமேசன் காட்டினது அனக்கொண்டாவாய் அவனுக்கு அது தெரிந்தது.

மரணதண்டனை நிறைவேற்றுவதற்காய் கனகாலமாய் காத்திருந்த தோரணையில் எவ்வித சலனங்களமற்று ஒரு வார்த்தை கூட பேசாது முஸதபாவின் முகத்தில் கருப்பு நிறத்திலான முகமூடியை அணிவதற்காக அந்த ஆஜாகுபாகுவான ஆறடி

அலுகோஸ்…

எந்தவிதமான சலனங்களுமன்றி முஸ்தபாவை பார்த்த பார்வையில் இரக்கமோ கருணையோ விரதமோ பகைமையோ புன்னகையோ கழிவிரக்கமோ சோகமோ…. எந்தவிதமான உணர்வுகளும் அவனிடத்தில் தென் படவில்லை.

ஜெயில் சுப்ரின்டென்ட் தனது வலக்கையில் கட்டியிருந்த டைட்டன் மணிக்கூட்டில் கண்களைப்பதிவு செய்தார்.

மணி ஏழு அம்பத்தி நாலு…

‘ரைட்… இப்ப இவன்ட முகத்தை மூடலாம்…’ என அலுக்கோசுக்கு கட்டளையிட அந்த கறுப்பு நிறத்திலான முகமூடியை எடுத்துக் கொண்டு முஸ்தபாவின் முகத்தருகே வந்த போது அவனை சுட்டு விரலால் தடுத்து நிறுத்திய ஜெயில் சுப்ரீன்டென்ட்…

‘இன்னும் அஞ்சு நிமிஷம்தான் இருக்கு… முஸ்தபா… நீ ஏதாவது கடைசியா சொல்ல விரும்புறியா… அப்படி ஏதாவது இருந்தா நீ இப்ப சொல்லலாம்…’

சாவின் வாசலில் நின்று கொண்டிருப்பவனிடம் கடைசி வார்த்தைகளுக்கான கட்டளை. அல்லது மரபார்ந்து வருகின்ற வேண்டுகோள். ஐந்து நிமிஷத்தின் பின் ஒரேயடியாய் தனது துடிப்பினையும் தொழிற்பாட்டினையும் துண்டித்துக் கொள்ளப் போகின்ற இதயத்தின் ஆழத்திலிருந்து எந்த வார்தi;தகளை இறக்குமதி செய்வது.

மௌனமாக இறுகிய முகத்தோடு பனியில் உறைந்த பாறையாய் பேசாது நின்று கொண்டிருந்தான் முஸ்தபா.

‘கம் அன் மஸ்தபா… நீ ஏதாவது சொல்ல விரும்பினா இப்ப சொல்லிடு… பிறகு அதற்குக் கூட அவகாசமே இல்லாமல் போயிடும். கம் ஆன்… ஏதாவது ஆசை இருந்தாக் கூட சொல்லலாம்…’

எட்டு மணிக்கு இன்னம் மூன்று நிமிடங்கள். அந்த இடத்தில் அப்போது நிலவிய நிசப்தம் அங்கிருந்த எவருக்கும் நிச்சயம் சந்தோசத்தைத் தந்திருக்காது. பயங்கர அமைதி அந்த இடத்தைப் பாழாக்கிக் கொண்டிருந்தது.

முஸ்தபா ஏதாவது சொல்லப் போகின்றானா என்ற குறைந்த பட்ச ஆர்வம் ஜெயில் சுப்ரீன்டென்ட் டொக்டர் ஜெயில் கார்ட்டுகள் மற்றும் அந்த அலுகோஸின் கண்களில் ஒரு மின்மினிப் பூச்சியாய் பறந்து திரிந்தது.

‘சேர் ஒரே ஒரு விடயத்த இந்த இடத்துல நான் ஒங்ககிட்ட சொல்ல விரும்புறேன்…’ என முதன் முதலாக வாய் திறந்த முஸ்தபாவின் தலையில் அலுக்கோஸ் முகமூடியைப் பொறுத்திக் கொண்டிருந்தான்.

எட்டு மணிக்கு இன்னும் இரண்டு நிமிஷங்கள்தான் இருந்தன.

‘ கம் ஆன் முஸ்தபா… டைம் அப்…’

‘ஆமா… சேர்… என்னப் படச்சவன் மிது சத்தியமா சொல்றேன்… என்ன குற்றத்துக்காக எனக்கு இந்த மரண தண்டணையை சட்டத்தாலே விதிச்சாங்களோ… அந்தக் கொலையை நான் பண்ணவேயில்லை சேர்…’

நேரம் இப்போது சரியாக எட்டு மணி.

– ஏப்ரல் 2013

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *