தூக்கணாங்குருவிக்கூடு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மறுமலர்ச்சி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 29, 2024
பார்வையிட்டோர்: 843 
 
 

(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சூரியன் உதித்துச் சுமார் ஐந்து நாழிகைப் பொழுதாகவும். கண்விழித்து. மறுபக்கம் திரும்பிப் படுத்தேன். ஆனால், அருகில் அந்தக் குட்டிமேசை யில் வைக்கப்பட்டிருந்த காப்பியையும், அதில் பகலவனையும் கண்டு, முகம் தாமரையாக, எழுந்து உட்கார்ந்து. சாவகாசமாகக் குடித்தேன். உஷார் ஏறியபடியால் வெளியில் வந்தேன். தலைவாசலில் புள்ளியிட்டுப் பாம்புக்கோலம் போட்டிருந்தது- ஓஹோ – இன்று மார்கழி மாசமா? நேற்றெல்லாம் கார்த்திகையாயிருந்ததே ஆமாம் சும்மாவா சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள் ‘பெரியவர்கள்’ இன்றைக்கிருந்ததை நாளைக்கு… 

வெளிமுற்றத்தில் வந்து பார்த்தால். இலைகளின் நுனிகளிலெல்லாம் மழைத்துளிகள் வந்து நின்றுகொண்டிருந்தன. அவற்றில் சூரியன் பளிச்சிட்டது. வீட்டு வாசல்களில் வந்து நின்று கொண்டு சிரிக்கும் வேசிகளைப் போலிருந்தது காட்சி. இரவு நல்ல மழைபோல் இருக்கிறது. அதுதான் முற்றத்தில் விளங்க வேண்டிய கோலமும் தலைவாசலுக்குப் பின்வாங்கிய தாக்கும்… என்னவோ படுக்கையறையிற் கிடந்தால் மழை பெய்கிறதைப் பற்றித் தெரியாது. 

யாழ்ப்பாணத்து மரபையொட்டிக் கால் கட்டைகளில் இவர்ந்து. முற்றத்தில் இறங்கினேன். தெருவுக்கு வந்தேன். சுத்தமான காற்று அடித்தது. அந்தச் சுகத்திலே தெருவோடு சற்றுத்தூரம் நடந்தேன். 

தெருவோடு அருகில் சென்று கொண்டிருந்தது வெள்ள வாய்க்கால். அதில் வெள்ளத்தைக் காணவில்லை. 

காணவில்லை. அது அவ்வழி பாய்ந்த மாதிரியும் தெரியவில்லை. -இரவு மழை சும்மா சிணுக்கம்போல்தான் இருக்கிறது. 

நூறு யார் வந்தேன். வயல் வெளியும் வந்துவிட்டது. அதன் இக்கரையிலே ஒரு குடிசை. அதில் புகை போயக்கொண்டிருந்தது. சரியாகச் சொன்னால் அதற்கு முன்னாலிருந்த அடுப்பில்தான் போய்க்கொண்டிருந்தது புகை. 

குடிசையின் வாசலிலே ஒரு புளியமரம். மரத்தடியில் நிலத்துக்கு மேல் எழுந்திருந்த இரண்டு வேர்கள். அவைகள் இரண்டும் ஆக்கிய மூலையில் மூன்று கற்கள் அடுப்பு -அந்த அடுப்பிலே ஒரு முட்டி. உள்ளே எரிந்து கொண்டிருந்த சுள்ளிகளிலிருந்துதான் புகை வந்தது. முட்டிக்குள் என்னவோ?- வெறும் தண்ணீர், அல்லது வென்னீராய்த்தானிருக்க வேண்டும். 

பனையோலையால் வேய்ந்த குடிசை அது. முகடு ஆறடி உயரம். பக்கத்துக்குச் சுவர் இல்லை. எப்படியிருக்கும்? ஆனால் ‘தட்டி கூட இல்லையே!- கூரையின் சரிவே நிலத்தை அடைந்து பக்கத்தையும் அடைத்துக் கொள்கிறது! அந்தக் கூரை மூடிய பத்துச்சதுர முழத்தைச் சுற்றி வெள்ளம் உட்புகாமல் வரம்பு கட்டியிருந்தது. 

ஆமாம், இரவு மழை சும்மா சிணுக்கம் போற்றான் இருக்கிறது. அல்லாவிடில் இப்படி நிற்குமா இந்தக் குடிசை? 

குடிசைக்குள்ளே இருட்டிருந்தது. அதற்குள்ளே ஒரு குழந்தை அழுது கொண்டிருந்தது. நிலத்தில் ஒரு சாக்கு; அதற்கு மேல் ஒரு பனையோலைத் தடுக்கு; அதற்குமேலே குழந்தை. 

வெளியிலே சற்றுத்தள்ளி. ஒரு பள்ளத்தில் தேங்கி நின்ற கொஞ்ச’ வெள்ளத்தில் இந்தக் குழந்தையின் ‘சகோதரங்கள்’ இரண்டு விளையாடிக் கொண்டிருந்தன. ஒன்றுக்கொன்று மாறிமாறிச், சேற்றைக் காலால் எற்றிக் கொண்டிருந்தன. 

தாய் நாற்று நடப்போய்விட்டாள். தந்தை மண்வெட்டி கொண்டு கொத்தப் போய்விட்டான். 

‘டேய்’ என்று ஒரு அதட்டல் போட்டுக்கொண்டு ஒரு பத்து வயதுச் சிறுவன் குடிசைக்கு வந்தான். அவர்களின் தமையன் அவன். வயலிற் பிடுங்கிய பச்சைமிளகாய்களும் கடையில் வாங்கிய ஒரு ‘பாணு’ம் அவன் கைகளில் கிடந்தன. அவர்களின் சாப்பாட்டிற்காகத் தாய் கொடுத்துவிட்டுப் போன காசுக்குப் ‘பாண்’ வாங்கி. அவள் கட்டளையை நிறைவேற்ற வந்தான். ‘டேய்’ என்று அதட்டினான். மறுபடியும் அதுகள்’ பள்ளத்தில் வெள்ளம் ஏற்றி விளையாடிக் கொண்டிருந்தன. இப்போது அது இதுக்கும். இது அதுக்குமாக மாறிமாறிக் கிள்ளியும் கொண்டன. 

இரண்டுக்கும் நாலு குத்துப் போட்டு இழுத்துக்கொண்டு வந்து ‘பா’ணையும் . பச்சைமிளகாயையும் காட்டிவிட்டு அவன் சிட்டாய்ப் பறந்தான். 

வழியில் பனையில் தொங்கிக் கொண்டிருந்த தூக்கணாங்குருவிக் கூடு ஒன்று அவன் பார்வையில் விழுந்தது. தெருத் திருத்துவதற்காகப் பக்கத்தில் ஒரு கல்லுக் குவியலும் போட்டிருந்தபடியால். ஒவ்வொரு கல்லாயெடுத்து அதற்கு வீசத் தொடங்கினான். கற்கள் தோல்வியுற்றுத் திரும்பி ஒரு வயற்காணிக்குள் வந்து விழந்தன. 

தூக்கணாங்குருவி ஒன்று பறந்து வந்தது ‘பளிச்’சென்று உட்புகுந்தது. ள்ளே சுகமாயிருந்த மூன்று குஞ்சுகளும் கலகலத்தன. சந்தோஷத்தினால். அவைகளுக்கென்ன தெரியும். இவன் கல்லால் எறிந்துகொண்டிருப்பது? ஒன்றின் இறகை ஒன்று கோதிக்கொண்டிருந்தது. 

அவன் சிறிதுநேரம் எறிந்து கொண்டிருந்தான். வயலுக்குள் விழுகிறதேயென்று. அவ்வழி சென்ற ஒரு உழவன் அதட்டினான். பிறகு ‘ஆளை’க் காணவில்லை! எங்கேயோ போய்விட்டான். 

இரவு தாயும், தகப்பனும், எல்லோரும் வீடு திரும்பிவிடுவார்கள் அல்லவா? மொத்தம் ஆறு பேர்கள் -எங்கே படுத்துக் கொள்வார்களோ? 

மழையில்லாவிட்டால் புளியமர வேரில் தலையை வைத்து நிலத்தில் படுத்துக் கொள்ளலாம். மழையென்றால்..? குடிசைக்குள் ஒருமாதிரி அடைந்து கொள்ள வேண்டியதுதான். பின் பெரிதாய் மண்டபம் மண்டபமாய்க் கட்டிவிட்டிருக்கும் கோயில்களிலா இடம் கொடுக்கப் போகிறார்கள்? அங்கே தனிமையும், நிசப்தமும் நிலவும். அதாவது, பக்தி பெருக்கெடுப்பதற்கு வாய்க்கால் தோண்டிவிடும் மாதிரியில் இருக்கும்! 

குளிர்காற்று வீசிக் கொண்டேயிருந்தது. அதில் பனையோலை யொன்றின் இரண்டு இதழ்கள் அடித்துக் கொண்டேயிருந்தன. அண்ணாந்து மேல் வானத்தைப் பார்த்ததில், கார்முகில்கள் சிந்துண்டு கிடப்பது தெரிந்தது.. 

“ராவைக்கு நல்ல மழைபோல இருக்கு” என்று தோளில் நுகங் கொண்டு கையில் இரண்டு மாடுகளின் கயிறு பிடித்துக்கொண்டு போனவன். மாடுகளைத் தட்டிவிட்டுக்கொண்டே சொல்லிக் கொண்டு போனான். 

“சும்மாவோ கொடும்பாவி கட்டினது?’ என்று கேள்வியில் மறு மொழியிளுத்துக்கொண்டு ஏர் கொண்டு போனவன் போனான். 

ஆமாம். மழை வரத்தான் போகிறது. ஆனால் சாதாரண மழையாயிருக்காது; மழையுடன் பெரும் காற்றும் சேரும்; வெள்ளம் போடும்போலிருக்கிறது. 

மரங்களும் முறிந்து விழும்; கொட்டில்கள் குடில்களும் சரியலாம். 

அந்தக் குடிசையும் ஒருவேளை விழலாம்! 

ஒருவேளையென்ன; கட்டாயம்! 

அப்படியானால், அவர்கள் என்ன செய்வார்கள்? எங்கே போவார்கள்? 

தெரியாது! 

ஆனால் தூக்கணாங்குருவிகள் மட்டும், சுகமாக ஒன்றின் இறகை ஒன்று சொண்டினால் கோதிக்கொண்டிருக்கும்.

– மறுமலர்ச்சிக்கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 1997, ஈழத்து இலக்கியப் புனைகதைத் துறையின் மறுமலர்ச்சிக் காலகட்டத்துச் சிறுகதைகள் இருபத்தியைந்து 1946 – 1948, தொகுப்பாசிரியர்: செங்கை ஆழியான் சு. குணராசா, வெளியீடு: கல்வி, பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டுத்துறை அனமச்சு, திருகோணமலை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *