துவாதச ஆதித்யர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 13, 2024
பார்வையிட்டோர்: 186 
 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

புதுக் கவிஞரும் நானும் கடற்கரை மணலில் மயங்கிக் கிடந்தோம். செத்த நாய்போல சீண்டுவாரற்று தேய்பிறை நெற்றிக்கு எதிரே நீலமாய்க் கிடந்தது. கீழத்தொடுவான விளும்பில் நெருப்புத் துண்டம் கனன்று கொண்டிருந்தது. புதுக் கவிஞர் சடைநாய் சிலிர்ப்பதைப்போல் இருளை உதறி எறிய முயன்றுகொண்டு ஒரு வாழ்த்தை ஆரம்பித்தார். 

புது ரவியே! போர் முரசே!
முது இருளை முறிக்கும்
மூர்க்கமே – 

”புதுக் கவிஞரே! நாவின் அலக்கு நுனி சூரியனை எட்டாது. வாய் வணக்கம் வழி தவறும் கையால் மலரெடுத்துப் போடுவதென்றால் அதற்குமுன் கால் அங்கு போய் இருந்தாலன்றி முடியாது -நான் சொல்லுகிறேன்.’ 

என்று எழுந்து நெருப்புத் துண்டத்தை எதிர் வணங்கச் சென்றேன். கடல் குறுக்கிட்டது. 

“புது ரவி உள்ளாரா?”

“அந்த மாதிரி யாரும் இல்லையே.’ 

“பின் யார்தான் உள்ளார்?” 

”பன்னிரு ரவிகளில் முதல்வர்.” 

“ஆனால் பன்னிரு ரவிகள் உண்டா?” 

“எனக்கு ஆராய்ச்சி இல்லை, அவரையே கேட்டுப் பாருங்கள்.” 

கடலைத்தாண்டி முதல்வரைப் பாத்தேன். ஆட்டுக் கிடா ஒன்றைத் தோளில் சுமந்திருந்தார். 

“வணக்கம் புது ரவியே.” 

“யாரது பைத்தியம்? நான் புதுரவி அல்ல. மேஷ ரவி.” 

“மேஷ ரவியாரே வணக்கம்.”

“அப்படியே நண்பா.” 

“நீங்கள் ஆனால் பன்னிருவரா?” 

“அங்கிருப்பவர்கள் என்ன சொல்கிறார்களோ நானறி யேன். ரிஷப ரவியாரைக் கேட்டால் தெரியும். அடுத்த மாதம் ஒன்றாம் தேதிக்கு முன்னிரவில் இங்கு வந்தால் உண்மை புலப்படும்.” 

ரிஷபம் முதல் மீனம்வரை மாதம் ஒவ்வொருவராக புது ரவிகள் பன்னிருவரையும் பார்த்துவிட்டேன். ஆனால் மீள ரவியை மறுமுறை பார்க்க வேண்டும் போல இருந்தது. 

வருஷப் பிறப்புக்கு முதல் தினம் கோழிகூவ ஒரு ஜாமம் இருக்கும். மீன ரவியின் கதவைப் போய்த் தட்டினேன். 

கதவு திறந்தது. மீன் உருவம் மின்னிய சட்டை போட்ட ரவி உடுப்பைக் களைந்து கீழே போட்டுக் கொண் டிருந்தார். பக்கத்தில் ஆட்டுக்கிடா நின்று கொண்டிருந்தது. பார்த்தேன், 

“ரவியாரே!”

“மறுபடியுமா?” 

‘நீர் இப்பொழுது யார்?” 

“நான் வெறும் ரவி.” 

“அப்படி என்றால் உங்கள் பட்டங்கள்?” 

ரவி பதில் சொல்லவில்லை. ஆட்டுக்கிடாவைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு வெளியேற அழுத்தமாக அடி எடுத்து வைத்தார். 

எனக்கு சிரிப்பு வந்துவிட்டது ‘ஒன்றோடிப் பன்னி ரெண்டு, உடுப்பணிந்தால் புதுமை’ என்று பாடிக்கொண்டே துணை நடந்தேன்.

– மனநிழல் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: மார்ச் 1977, எழுத்து பிரசுரம், சென்னை.

வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *