துவக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 185 
 
 

(2015ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கோமதி அன்று மிகவும் சந்தோஷமாக இருந்தாள் அவனுக்கு அது புதிதான விஷயமில்லை. எல்லா விடுமுறை நாட்களிலும் அவள் இப்படித்தான் இருப்பாள். வீக் எண்ட் ஜாய் என்று அதற்கு பெயரும் சொல்வாள்.

‘எல்லா விடுமுறை நாட்களும் நம்ம பேட்டரியை ரீசார்ஜ் செய்துக்கற நாளுங்க. அத எல்லாரும் செஞ்சு கிட்டா சோர்வே வராது’

இது கிட்டத்தட்ட மேற்கத்திய மனோபாவம் என்று நினைத்துக் கொள்வான் அவன். ஆனால் வெளியில் சொல்வதில்லை. அவள் சந்தோஷத்தைக் கெடுப்பானேன். தவிரவும் மீதமுள்ள ஐந்து நாட்களும் என்ன ஓட்டமாக ஓடுகிறாள். அதற்கு இந்த ரீசார்ஜ் அவசியம் தான் என்று நினைத்துக் கொள்வான். சனி ஞாயிறு சோம்பல் கோமதிக்கு இல்லை. எல்லா நாளும் போலத்தான். இவன் எழுந்திருப்பதற்குள் அவள் குளித்து முடித்து ‘குப்’பென்று மலர்ந்திருப்பாள். எங்கிருந்து வருகிறது இவளுக்கு இந்த எனர்ஜி ? சில அபூர்வ நாட்களில் பனிமலர்களைப் போல் அவள் முகத்திலும் ஈரத்திவலைகள் இருக்கும் . அது அவன் சில நாட்களில் சீக்கிரம் எழுந்துவிட்டதனால் கிடைத்த தரிசனம். அதற்காகவே ஒவ்வொரு இரவும், காலை சீக்கிரம் எழுந்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொள்வான். ஆனால் அவனால் முடிவதில்லை. அது சரி தினமும் கிடைத்துவிட்டால் அது ரசிக்கக் கூடியதாக இல்லாமல் போய் சராசரியாக, சாதாரணமாக ஆகிவிடுமோ என்ற அச்சமும் அவனுக்கு உண்டு.

பிரபா இன்னும் எழுந்திருக்கவில்லை. பிரபாவிற்கு மூன்று வயது. ப்ளே ஸ்கூல் போகிறான். ரொம்ப துருதுரு.

கோமதி அலுவலகம் செல்லும்போது, அவனைக் கொண்டு விட்டு, சாயந்தரம் அழைத்துக்கொண்டு வருவாள். வரும் போதே, ஏதாவது பேசிக்கொண்டே வருவான் பிரபா. அவன் பாஷை கோமதிக்கு மட்டும்தான் புரியும். அவனுக்கு புரிந்ததேயில்லை.

கோமதி இன்று பிரபாவுடன், எங்கோ வெளியே செல்ல ஆயத்தம் செய்துகொண்டிருக்கிறாள் என்பது அவனுக்கு புரிந்தது. வேலைகள் ஜெட் வேகத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தன. கோமதி எப்பவும் வேகம்தான். இன்று கொஞ்சம் கூடுதல் வேகம்.

‘என்னங்க… காபி வச்சிருக்கேன்.. எடுத்துக்கங்க. டிபன் காஸரோல்ல இருக்கு. மதிய சாப்பாடு “அவன்” ல வச்சிட்டுப் போறேன். சூடு பண்ணிக்குங்க.. என்ன சரியா? ‘

எங்கே போகிறார்கள் என்று தெரிந்து கொள்ள அவனுக்கு ஆர்வம்தான். ஆனாலும் கேட்கவில்லை. போகும்போது எப்படியும் தகவல் வரும். எங்கு போகிறார்கள்? எப்போது வருவார்கள் ? என்று. பிரபாவிற்கு இன்று விடுமுறை நாள் என்று எப்படித் தெரிகிறதோ? எழுந்தவுடன் பாத்ரூம் வாசலில் போய்தான் நிற்கிறான். கோமதி, ஐந்து நிமிடத்தில் அவனுக்கு பல் தேய்த்து, குளிப்பாட்டி, பாலிஷ் செய்யப்பட்ட பட்டாக, அவனைக் துவாலைப் பல்லக்கில் தூக்கி வருகிறாள். ஒரு அழுகை இல்லை; சிணுங்கல் இல்லை; இதுவும் அவனுக்கு தினசரி ஆச்சரியம். கோமதிக்கு எல்லோரும் எப்படி வசப்படுக்கிறார்கள்?

பவுடர் அடித்து, புதுத் துணி போட்டு, பிரபாவும், மடிப்பு கலையாத காட்டன் சேலையில் கோமதியும், ரெடியாகி விட்டனர். கழுத்தில் நாப்கினோடு பிரபா, ஸ்ட்ரா டம்ளரில், பால் குடித்துக் கொண்டிருக்கிறான். இட்லியைப் பிய்த்து வாயில் போட்டுக்கொண்டே, பருப்பு சாதம் கலந்து கொண்டிருக்கிறாள் கோமதி. ஏற்கனவே நிரைக்கப்பட்ட கூல் கெக் அருகில். அட்டவணை போட்ட போல் எல்லாம் நடக்கிறது. கோமதி ஆணாக பிறந்திருந்தால் ஒரு ராணுவ அதிகாரியாக ஆகியிருக்கக் கூடும். பெண்ணாக இருந்தால்மட்டும் என்ன. கோமதிக்கு அந்த தகுதிகள் நிறையவே இருக்கிறது. ‘பீரோவிலேர்ந்து ஐநூறு ரூபா எடுத்திருக்கேன். சின்னவரை வெளியே கூட்டிட்டு போறேன். வர்ர சாயங்காலமாயிரும் நேரத்துக்கு சாப்டுட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க ‘

‘கோமதி உனக்கு ரெஸ்டே வேண்டாமா?’ என்று கேட்க வேண்டும் போலிருந்தது. கேட்கவில்லை. சில மனிதர்கள் ஓடுவதில்தான் உற்சாகமே அடைகிறார்கள். அவர்களுக்கு ரெஸ்ட் என்பது ரெஸ்ட் இன் பீஸ்தான். கோமதி அந்த ரகம்.

கோமதியும் பிரபாவும் கிளம்பிப் போய்விட்டிருந்தார்கள். ஷோபா சக்தி எழுதிய ” கொரில்லா ” நாவலை, புத்தகக் கண்காட்சியில் கோமதி வாங்கித் தந்தது, அவனுக்கு நினைவுக்கு வந்தது. ஈழப் போராளிகளைப் பற்றிய நாவல். அதை கையில் எடுத்துக்கொண்டான். படிக்க படிக்க, காஸரோல் இட்லியும் கோப்பைக் காபியும் அவனுக்கு மறந்து போனது.

ஓரே மூச்சில் முடித்துவிட்ட போது மணி பார்த்தால் இரண்டு.

கோமதி மனது சங்கடப்படுமேயென்று இட்லியையும், உணவையும், ”அவனில்” சூடு பண்ணிக் கொண்டு சேர்த்து சாப்பிட்டான். திரும்பவும் நாற்காலியில் சாய்ந்தபோது, தூக்கம் வருவதற்கு பதிலாக துக்கம் வந்தது. படித்த பக்கங்கள் அவனை புரட்டி எடுத்தன.

என்னமாய் எழுதி இருக்கிறார் ஷோபா சக்தி!

‘அது ஒரு நீள் சதுர அறை! அளவு? ஒரு 22 சவப்பெட்டிகளை நீள வாட்டில் அடுக்கும் அளவிற்கு இருந்தது!’

போரும் மரணமும் வேறு எந்த நினைப்பையோ கற்பனையையோ தராது போலிருக்கிறது.

வாய் விட்டு சிரித்த ஒரு நிகழ்வைப் பற்றி சிலாகித்தான் அவன்.

அது ஒரு பேருந்து. ஒரு பெரியவர் நின்று கொண்டிருக்கிறார். அவனருகில் நெருக்கமாக ஒரு இளைஞன். பெரியவர் அவனைப் பார்த்து கேட்கிறார்:

“நீ ராணுவ வீரனா?”

“இல்லை “

“விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவனா?”

“இல்லை அய்யா”

“ஆளுங்கட்சிக்காரனா?”

“இல்லை பெரியவரே”

“தனித் தமிழ் கட்சியா?”

“இல்லை இல்லை இல்லை”

“இல்லை தானே! அப்புறம் ஏன் என் காலை மிதித்துக் கொண்டிருக்கிறாய். காலை எடுடா நாய் பெற்ற மகனே!”

கண்களை மூடிய போது புத்தகக் காட்சிகள் ஒரு திரைப்படம் போல் அவனுள் விரிந்தன. உடல் தூக்கிவாரிப்போட்டது காட்சிகளின் வன்முறையால்.

கதவு மெல்லத் திறக்கப்படும் ஓசை கேட்கிறது. ”உஷ்” என்று ஒரு சத்தம். கோமதியாக இருக்கவேண்டும். கூடவே கீச்சுக்குரலில் ‘ஜோ ஜோவா?

பூனை நடை நடந்து அவனைக் கடந்து போகிறார்கள். கொண்டுவந்த பொருட்களையெல்லாம்

மேசையின் மேல் வைக்கிறார்கள். கோமதி படுக்கை அறைக் கதவைத் திறந்து உள்ளே போகும் சத்தம் தெளிவாக கேட்கிறது.

மெல்ல கண்களைத் திறக்கிறான் அவன்.

‘அத்தாக்’

பிரபா ஒரு கையில் ஏ கே 47 பொம்மைத் துப்பாக்கியும், இன்னொரு கையில் ராணுவ பீரங்கி வண்டி பொம்மையும் வைத்துக்கொண்டு நிற்கிறான்.

‘கோமதி இந்த சனியன்களை மொதல்ல வெளியே தூக்கி எறி’

அதுவரை ஒரு வார்த்தை கூடப் பேசாத அவன் கத்துகிறான்.

அவன் .. சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருக்கும், கண்ணிவெடியில் கால்களை இழந்த இந்திய அமைதிப்படை வீரன் மருதநாயகம்.

பி.கு. தமிழ் ஈழத்தில் ”துவக்கு” துப்பாக்கியைக் குறிக்கும் சொல்.

– மே 2015

– திண்ணைக் கதைகள் – சிறுகதைகள், முதற் பதிப்பு: மார்ச் 2015, வெளியிடு: FreeTamilEbooks.com.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *